Wednesday, June 13, 2012

ஜோ............ ஜோ (ப்ரிஸ்பேன் பயணம் 2)

நீலவானம் முழுக்க ஒளி வீசும் நட்சத்திரங்கள், ஒரே பளிச்ன்னு இருக்கு. ராச்சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு யோசிச்சுக்கிட்டே க்வீன்ஸ்ட்ரீட் மாலில் நடக்கறோம். தினமும் என்ன சமைப்பதுன்னு யோசிச்சு மண்டையை உடைச்சுக்கவேண்டிய அவசியம் இன்னும் ஒன்பது நாட்களுக்கு இல்லைன்னாலும்...... எங்கே போய் என்னத்தை சாப்பிடுவதுன்னு குடைச்சல். தலைவலி போய் திருகுவலி வந்த கதைதான்.

நவநாகரீகக் கட்டிடங்களுக்கிடையில் மாடி வெராந்தா கைப்பிடிச்சுவர்களில் க்ளாஸிக் லுக்கோடு ஒரு தெருமூலைக்கட்டிடம் கண்ணில் பட்டது. மாடியில் ஒரே ஜனத்திரள். ஜோஜோஸ் ரெஸ்ட்டாரன்ட். முதல் மாடியில் இருக்கும் உணவகத்துக்கு எஸ்கலேட்டரில் ஏறிப்போகலாம். தொட்டடுத்து ஒரு மாடிப்படிக்கட்டும் உண்டு. படிகள் நகர நகர கண்ணில் விழுந்ததுதான் மேலே நீங்கள் வாசிச்ச முதல் வரி. பயங்கரக்கூட்டமும் எல்லோரும் ஒரே சமயத்துலே பேசும் குரல்களுமா ஏதோ கடலோசையைப்போல ரகளை!

வரவேற்பு மேசையில் மூணு நபர்களுக்கு இடம் வேணுமுன்னதும் (ஹௌ மெனி இன் த பார்ட்டி? ஜஸ்ட் த்ரீ) கையிலே ஒரு நம்பரைத் தூக்கிக்கொடுத்து, காமணி காத்திருக்கணுமுன்னு பதில் வந்துச்சு. அதுக்கென்ன? வேடிக்கை பார்த்தால் ஆச்சுன்னு..... சமையலறைகள் எல்லாம் ஓப்பன் ஸ்டைல். ஒரு அடுக்களைச் சுவரை எக்கி நின்னு பார்க்கும் நாய். அதன் கண்களில் ஏகத்தும் பசி.....அய்யொடா....... இன்னும் கொஞ்ச தூரத்தில் சுவரருகில் வயிறு ஒட்டி ஓரமா உக்கார்ந்திருக்கும் ரெண்டு சிறுத்தைகள். அச்சச்சோ..... அடப்பாவமே!










ஸ்டெஃபென் ஸலூன், ஆரம்பத்தில் அவுங்களோட வாடிக்கையாளர்களுக்கும், தங்கள் அலுவலர்களுக்குமா ஆர்ம்பிச்ச சின்ன சாப்பாட்டுக்கடை இது. வருசம் 1980. தரமான உணவுன்னு பெயர் வாங்கினதும் கடை அப்படியே விரிவடைஞ்சு போய், ஸலூன் கீழ் தளத்துக்கு இடம் பெயர வேண்டியதாப் போச்சு:-)))) இப்ப கேக் & காஃபி இருக்கும் பகுதிதான் முந்தைய ஸலூன்! வெளியே கட்டிடத்தின் வெளிப்புறங்களில் வெராந்தாவை நீட்டிக் கட்டி அந்த பால்கனியில் இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. இதுக்காக விசேஷ அனுமதி வாங்கி இருக்காங்க. ஓரமா மூலையில் இருப்பதால் ரெண்டு பக்கங்களிலும் கூடுதல் இடவசதி செஞ்சுக்க முடிஞ்சுருக்கு. மொத்தம் 410 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து உணவருந்தலாம்.

 கோர்மே பீட்ஸா வகைகள், மெடிட்டரேனியன் உணவு வகைகள், ஸால்ட் பார், க்ரில் செக்‌ஷன் தாய் மெனு, டிஸ்ஸர்ட் மெனுன்னு ஏகப்பட்ட வகைகள். ரொம்பவே அழகா அலங்கரிச்சு பரிமாறுவதால் மனசுக்குத் திருப்தியா இருக்கு! ப்ரஸண்டேஷன் ரொம்பவே முக்கியமுன்னு தெரிஞ்சு வச்சுருக்காங்க. இங்கே நாலு அடுக்களைகள்.

பொதுவா வீடுகளில் நமக்கு அருமையான ருசியோடு  சமைக்கத் தெரிஞ்சாலும் அதை அழகா அலங்கரிச்சுப் பரிமாறத் தெரியலை என்பது முக்கிய குறையாத் தோணும். சாம்பார் ரசத்துலே என்ன அலங்காரம் வேண்டிக்கிடக்குன்னு இருக்கமோ?


மெனு கார்டு கொண்டுவந்து கையிலே தந்தவுடன் அதுலே இருந்து நமக்கு வேணும் என்பதை எதாவது ஒரு அடுக்களையில் கணினியும் கையுமா இருக்கும் நபரிடம் சொல்லி நம்ம எண்ணையும் சொல்லி , உணவுக்கான காசையும் கட்டிடணும். அதுக்குப்பிறகுதான் ஸர்வியட்டில் சுற்றி வைத்துள்ள முள்கரன்டி கத்தி ஸ்பூன் செட் உங்கள் கையில் கிடைக்கும். கையிலே காசு வாயிலே தோசை. அப்புறமா மாவாட்ட ச்சான்ஸே இல்லை:-)





நம்ம 'எண்'ணை மேசையில் வச்சுட்டுக் காத்திருந்தால் கொஞ்ச நேரத்தில் கிடைக்கும் நீங்க ஆர்டர் செய்த உணவு வகைகள். நம்ம மேசைக்குக் கொண்டுவந்து வைக்கிறார் பரிமாறுபவர். உணவுக்கட்டுப்பாடு எதாவது இருந்தால் அதுக்குத் தகுந்த மாதிரி சமைச்சுக் கொடுக்கறாங்க(ளாம்)

க்ரில் பகுதியில் அடுப்புலே விழத் தயாரா வெட்டி வச்சுருக்கும் இறைச்சிகளை நீங்களே தேர்ந்தெடுத்துக்கலாம். ரேர், மீடியம், வெல்டன் என்று உங்களுடைய விருப்பத்தின்படி சுட்டுக் கொடுக்கறாங்க. இங்கேதான் நாய் நின்னுக்கிட்டு இருக்கு!
நீங்க ஆர்டர் செஞ்சதும்தான் சமைக்கவோ, கலக்கவோ ஆரம்பிக்கறாங்க. அதனால் காத்திருக்கும் நேரம் கொஞ்சம் அதிகமே. அதுவரை இருக்கவே இருக்கே பார்! எதையாவது வாங்கிக் குடிச்சே..... பாதி வயிறு ரொம்பிடாதா? நம்மைப்போல முன் ஜாக்கிரதைக்காரர்கள் வெறும் தண்ணி மதின்னு இருந்தனர். வெள்ளிக்கிழமை மாலை என்பதால் குறைவில்லாத கூட்டம். மாலும் இரவு 9 வரை திறந்திருக்கும்.

உள்ளே நுழைஞ்ச ஒன்னே முக்கால் மணி நேரத்தில் சாப்பாடு முடிச்சு வெளியே வந்தோம். நல்ல ஜெனரஸ் போர்ஷன். முழுசும் நம்மாலே சாப்பிட முடியலை என்பது குறை:( ருசி அருமைன்னு மகளும் கோபாலும் மெச்சினாங்க. எனக்கு..... ? 'பரவாயில்லாமல் நல்லாவே இருந்துச்சு'ன்னதும் உன்னைத் திருப்திப்படுத்தவே முடியாதுன்னு ரெண்டு பேரும் சலிச்சுக்கிட்டாங்க:-))))

 உண்ட மயக்கத்தில் இருப்பவர்கள், மாடிப்படியில்தான் இறங்கி வரணும். மயக்கம் தீர இது ஒரு ஏற்பாடோ என்னவோ?

 மால் திறந்திருக்கும் வரை நேரத்தை வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு மகள் ஷாப்பிங் செய்யப் போய்விட்டாள். நாங்களும் மால் சூப்பர்மார்கெட் போய் மறுநாள் காலை உணவுக்கு இருக்கட்டுமுன்னு பாலும் , க்ராய்ஸண்ட்டும் இன்னும் சில தீனிகளும் வாங்கிக்கிட்டோம். அறைக்குத் திரும்பி வரும்போதுதான் கண்டம் ஆரம்பிச்சது எனக்கு.நல்ல ஏற்றமான தெரு. மூணு ப்ளாக்தான் என்றாலும் ஊர்ந்துவரணுமே!

 இங்கே பார்க்கிங் ரொம்பவே பிரச்சனை. அதிலும் நெடுகிலும் குறுக்கிலும் ஒரு தெரு விட்டு ஒரு தெரு ஒரே திசையில் போகும் ஒருவழிப் பாதைகளாகவும் அமைச்சு இருக்காங்க. பழக்கமில்லாதவர்களுக்கு படு குழப்பம். தெருக்களின் பெயர்கள் எல்லாம் இக்கினியூண்டு போர்டில் எழுதி ட்ராஃபிக் லைட் உள்ள சிக்னல் கம்பங்களில் எங்கியோ ஒளிஞ்சுருக்கு. எங்கே இருக்குன்னு பார்க்கவே கண்ணு பழகணும். கூட்டத்தோடு கூட்டமா தெருக்களைக் கடந்து போறதுதான் பெஸ்ட். பச்சை மனுசன் வந்ததும் துப்பாக்கியால் சுட ஆரம்பிச்சுடுவான். பட் பட் தட் தட் ன்னு சத்தம் வரவர மக்கள்ஸ் கடந்து போய்க்கிட்டே இருக்காங்க. அஞ்சரைக்கெல்லாம் இருட்டிப்போவதால்...... அது ஒரு கஷ்டம். நாற்சந்திகளில் துப்பாக்கி சப்தம் எந்தப் பகுதிக்குன்னு கவனிக்கணும்.

 வண்டியை மோட்டலிலேயே விட்டுட்டுத்தான் நகர மையத்துக்குப் போகணும். ஒவ்வொரு இடத்துலேயும் கடைக்கு சமீபம் பாதாளத்துலே இருக்கும் பார்க்கிங் தப்பித்தவறிக் கிடைச்சுட்டாலும்.... சார்ஜ் 28 டாலர் என்பதால் தலை சுத்தல்தான். இது மணிக்கு இல்லை. ஒரு முறைக்கு:( நம்ம மோட்டலில் பார்க்கிங் இடம் சொந்தமா அங்கேயே இருக்குன்றதில் படு சௌகரியமான இடம் என்று பேராம். சந்துக்குள் சிந்து பாடிக்கணும். ஒவ்வொருமுறையும் பார்க்கிங் செய்யவும் எடுக்கவும் ஒரு பணியாளர் உதவி செய்யறார். நினைச்சா...வண்டியைக் கிளப்பிக்கிட்டுப் போயிற முடியாது:(

மழையோ விடாமப் பெய்ஞ்சுக்கிட்டே இருக்கு. நாம் மாலையில் அறையை விட்டுக் கிளம்பும்போதும் இதேதான். மகள் மட்டும் குடை கொண்டு வந்துருந்தாள். நம்மாளோ? கட்டிடங்களின் முன்பகுதியில் நடைபாதை ஓரமாப்போட்டுருக்கும் ஷேட் வழியா என்னை நனையாமக் கூட்டிப்போறேன்னு சொல்லி அவர்பாட்டுக்கு (ரொம்பத் தெரிஞ்சமாதிரி) அங்கே இங்கேன்னு திரும்பி எங்கியோ கொண்டு போய் விட்டுட்டு முழிச்சார். வேணுமா இது?

 பொதுவா மணி ஆறுக்குக் கடைகள் எல்லாம் மூடிருவாங்க என்பதால் எங்கே இருக்கோமுன்னும் தெரியலை. ஏத்தமான இடமா இருப்பதால் நாம் போகவேண்டிய இடத்துக்கு எதிர்ப்பக்கம் எங்கியோ இருக்கோமுன்னு புரியுது. தப்பித்தவறி யாராவது அந்தப்பக்கம் நடந்துவந்தால் வழி விசாரிக்கணும் என்று (திருதிருன்னு முழிச்சுக்கிட்டு) இருந்தபோது, தற்செயலா கண்ணில் பட்ட ஒருத்தரிடம் கேட்டதும் நான் சரியா ஊகிச்சேன்னு புரிஞ்சது. மழை அதிகமா இருக்கே.... டாக்ஸியில் போயிருங்கன்னார். சொல்லிவச்சமாதிரி நம்மாண்டை வந்து நின்ன டாக்ஸியில் ஏறிப்போனால்.... நாலே ப்ளாக் தள்ளி க்வீன்ஸ் தெரு மால் வந்துருச்சு:) ஒரு பத்தடி நடந்துருந்தா..... நம்ம மோட்டல் இருக்கும் தெருவுக்கே வந்துருப்போம். ஆனால் டாக்ஸிக்காரருக்கு போன ஜென்மக் கடன் அடைச்சிருக்க முடியாதே:-)))))

 வேகமா குடையுடன் நடக்கும் மகளை முன்னால் போகச் சொல்லிட்டு நான் ஊர்ந்துவர (அப்பப்ப கையில் உள்ள இன்ஹேலரை உறிஞ்சுக்கணும்) சரியான வழியில்தான் போறோமா என்ற கவலையுடன் கோபால் கூடவே வர்றார். நம்ம தெருமுனையில் இருக்கும் சர்ச்சைக் காமிச்சு, 'லேண்ட் மார்க் பாருங்க'ன்னாலும்......
வரவேற்பு வழியாப் போகும்போது வலை விலை விசாரிச்சால் ஒரு நாளுக்கு ஒன்பது டாலர்களாம். அய்யய்யோ என்றபடி வாங்கிக்கிட்டோம். ரொம்ப மலிவுன்னு என்னிடம் ரகசிய மொழியில் (??!!) கோபால் சொன்னார்:-) இங்கே கார் பார்க்கிங் சார்ஜும் நாளுக்கு ஒன்பதே. அதென்னவோ ஒன்பது பிடிச்சுப்போச்சு போல!

 தொடரும்...............:-))

21 comments:

said...

"எந்த ஹோட்டல்லய்யா கிச்சன் வரைக்கும் நாயை விடுவாங்க?" - 'கலகலப்பு' அஞ்சலிதான் உங்க பதிவைப் பார்த்ததுமே நினைவுக்கு வந்தாங்க டீச்சர்..முழுசாப் பார்த்ததுக்கப்றம்தான் சிலைன்னு புரிஞ்சுக்கிட்டேன். :-)

உங்களுக்கும் கோபால் அண்ணாவுக்கும் எனது பிந்திய திருமண நாள் வாழ்த்துக்கள் டீச்சர். கொஞ்சம் பிஸியாய்ட்டதால உடனே வாழ்த்த முடியாமப் போச்சு..அதான் இன்னிக்கு முதல் ஆளாவே வந்துட்டேன்.. :-)

said...

/அடுக்களைச் சுவரை எக்கி நின்னு பார்க்கும் நாய்.../

நல்ல யோசிக்கறாங்க.

/நினைச்சா...வண்டியைக் கிளப்பிக்கிட்டுப் போயிற முடியாது:(/

பெங்களூர் மால்களிலும் இப்படியாகி விட்டது இப்போ.

said...

ரொம்பவே அழகா அலங்கரிச்சு பரிமாறுவதால் மனசுக்குத் திருப்தியா இருக்கு! ப்ரஸண்டேஷன் ரொம்பவே முக்கியமுன்னு தெரிஞ்சு வச்சுருக்காங்க

அருமையாய் துளசிகோபாலின் பதிவுப் பிரசண்டேஷன் மாதிரி நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் !

said...

பார்த்ததுமே பசிக்குது துளசிம்மா. என்ன அழகா டிஸ்ப்ளே பண்ணியிருக்கிறாங்க.

நட்சத்திரங்கள் அழகு.

said...

தீராப்பசியோட நின்னுட்டிருக்குது அந்த நாய். அந்த அடுக்களைச் சுவரை மொதல்ல பார்த்துட்டு, மீன் தொட்டி ஏன் இவ்ளோ கலங்கலா இருக்குன்னு நினைச்சேன் :-))

said...

தலைவலிபோய் திருகுவலி:))
மாவாட்ட :))

ரசித்தேன்.

said...

சாப்பாடு ன்னு சொல்லி சாலட் சாப்பிட்டு வந்திங்களா ? அங்கெல்லாம் நான்வெஜ் தானே கிடைக்கும்.

said...

அடுக்களைச் சுவரை எக்கி நின்னு பார்க்கும் நாய்...//அருமையான காட்சிகளை புகைப்படமெடுத்து அசத்தி இருக்கின்றீரக்ள்.

said...

படங்களுடன் பதிவு மிக மிக அருமை
படத்திலேயே சாலட் அத்தனை பிரமாதம்
தொடர வாழ்த்துக்கள்

said...

வாங்க ரிஷான்.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

நாயும் சிறுத்தையுமால்லே நிக்குது அங்கே:-))))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இடப்பற்றாக்குறை அதிகமாகும்போது இன்னும் என்னெல்லாம் யோசிப்பாங்களோ!!!!!

ஸிரக்பூர் (பஞ்சாப்) மாலிலும் இப்படி ஒன்னு ரெண்டு பார்க்கிங் உண்டு. ஆனாலும் இங்கே மோட்டலில் எல்லாப் பார்க்கிங்கும் இப்படியே என்பதும், அதிலும் சந்துக்குள்ளே ரிவர்ஸில் வந்து நிறுத்தணும் என்பதும் தான் சல்லியமாப் போச்சு:(

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பாராட்டுகளுக்கு நன்றி. இதனால் இன்னும் பொறுப்பு கூடிருது:-)

இன்னிக்குப் பாருங்க புதுப்பதிவை வலையேத்தி படங்களைப்போடவே நேரம் அதிகம் செலவாகிருச்சு:-)))))

நறுவிசா வரணுமே!!!!!

said...

வாங்க மது.

அழகை அழகுன்னு சொன்னதே ஒரு அழகு!!!

நமக்கும் இனி கொஞ்சம் அலங்கரிக்கப் படிக்கணும்ப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நானும் ஸீ த்ரூ கண்ணாடி வச்சுருக்கப்டாதோன்னு நினைச்சேன். ஆனால் அந்தப்பக்கம் அடுப்பு எரியுது. இது சூடு தாங்கும் ஸேஃப்டி க்ளாஸ்.

பாவம் நாய், இல்லே?

said...

வாங்க மாதேவி.

ரசிப்புக்கு நன்றிப்பா.

said...

வாங்க கோவியாரே.

இப்பெல்லாம் வெஜிஸ் மெனு கிடைக்குதுன்னாலும் தேடிப்பார்த்து வாங்கிக்கணும்.

கொஞ்சம் விளக்கிச் சொன்னால் புரிஞ்சுக்கறாங்க:-))))

ரைஸ் ஸாலட் ன்னு இருக்கே அதுலே எலுமிச்சை சாதம் தேங்காய் சாதம் சேர்த்தி:-))))

said...

வாங்க ஸாதிகா.

இதென்ன....நீங்க உலக அதிசயங்களையே படம் எடுத்துத் தள்ளிட்டு இப்படிச் சொல்றீங்க:-)))))

said...

வாங்க ரமணி.

ஸாலட் உண்மையாவே கண்ணுக்கு விருந்துதான். அழகோ அழகு.

வருகைக்கு நன்றி.

said...

hi teacher??? ரொம்ப கடுப்பு ஏத்துறீங்க ...முடியல ....ஒன்னுமில்லை போறாமைதான் ....

said...

வாங்க பாபு நடராஜன்.

போறாய்மை எதுக்கு?

பொறுமை காக்கணும். உங்களுக்கும் காலம் வரும்.

said...

அழகான படங்கள். இனிமையான அனுபவங்கள்