Wednesday, June 20, 2012

மம்மி மம்மி நீ எங்கே? ((ப்ரிஸ்பேன் பயணம் 5)

வண்டி முழுசும் வடை வாசனை! சுடச்சுட ஒன்னே ஒன்னு எடுத்துத் தின்னுட்டு மகளுக்காக மற்றவைகளை எடுத்துவச்சேன். கார்பார்க் முழுசும் நிறைஞ்சு போயிருக்கு. ஞாயிறானதால் வந்து இங்கேயே சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுக் கோவில் வேலைக்கும் ஒரு கை கொடுக்க வந்துருக்கு சனம். ஸ்தபதி குழுவினரும் சாப்பிட வந்தாங்க. ஞாயிறு மட்டும் இங்கே காலை உணவு. மற்ற நாட்களில் அந்த ஐவர் குழுவே சமைச்சுக்கிறாங்களாம்.


ஊர்கூடிக் கோவில் கட்டணும். தனி மனுசராலே ஆகும் காரியமா? பாலம் கட்ட உதவுன அணில் போல நாமும் ஒரு தொகை கட்டுமானப்பணிக்குக் கொடுத்துட்டு ரசீது வாங்கிக்கிட்டோம். பக்கத்துலே தானே இருக்கீங்க. கும்பாபிஷேகத்துக்கு வந்துருங்கன்னு சொன்னார் குருக்கள். ஒரு வருசம் இருக்கே..... அவன் கூப்பிட்டால் வரணும்தான்.

திரும்பி ப்ரிஸ்பேன் போகும் வழியில் மகளைப்போய் பிக்கப் பண்ணிக்கணும். தோழிகளுடன் பேசி முடிச்சிருப்பாள். காலம்வேல் ஷாப்பிங் செண்டர் கண்ணில் பட்டது. பழைய வாசனையில் எட்டிப்பார்த்தோம். பழக்கடையில் நோட்டம் விட்டால் சீத்தாப்பழம் இருந்தது. மகளுக்குப் பிடிக்குமே! நியூஸியில் விலை கூடிய பப்பாளி, தர்பூசணிப் பழங்களையும் வாங்கினோம். ரெண்டா, நாலா அறுத்து வச்சுருந்தாங்க. முழுப்பழமும் வாங்குனா நம்மாலே தின்னு தீர்க்க முடியாது. ஒவ்வொன்னும் அம்மாம் பெருசு.


 சொல்லி வச்ச மாதிரி பதினோரு மணிக்கு மகளின் தோழி வீட்டு வாசலுக்குப் போயாச்சு. தூக்கக்கலக்கத்தோடு மகள் வந்து வண்டியில் ஏறினாள். வடையை எடுத்துத் தந்தால்...... இப்பதான் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டோம். இப்பப் பசி இல்லை. வேணாம். ராத்திரி பேச்சு. படங்கள் ன்னு நேரம் போக்கி காலையில் நாலரைக்குத்தான் கொஞ்சம் தூங்குனோம்.

அதுக்காக.... கையில் எடுத்த வடையை திரும்ப வைக்க முடியாது. ஸ்வாஹா .......

அறைக்கு வந்து சேர்ந்தப்பவே பகல் பனிரெண்டரை இருக்கும். கொஞ்ச நேரம் தூங்கும்மான்னா..... வேணாம். குளிச்சு ரெடியாகறேன்னுட்டாள். லஞ்சு தான் கைவசம் இருக்கேன்னு வலை மேய்ஞ்சுக்கிட்டு இருந்தேன்.

சாப்பிட உக்கார்ந்தப்ப.... மகளுக்குப் பூரிக்கிழங்கைக் கொடுத்துட்டு மசால் தோசையை வாயில் வச்சா..... யக்:( உள்ளே திறந்து பார்த்தால் அந்த மசாலா...... உருளைக்கிழங்கு காரக்கறி. பூரிக்குள்ளும் இதே:( சரி மசாலாவை விட்டுட்டு சட்னி தொட்டுக்கலாமுன்னா... அதுவும் சரி இல்லை. சாம்பாரோ..... ஐயோ.... சொல்லவே வேணாம்.

எல்லாத்துக்கும் உருளைக்கிழங்குன்னாலும், மசால் தோசைக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் விதம் வேற மாதிரியாச்சே! இவுங்க செஞ்சு வச்சுருப்பது சாதத்துக்குத் தொட்டுக்கும் வகை! அங்கேயே விஷயத்தைக் கவனிச்சு இருந்தால் செய்முறையைச் சொல்லிக்குடுத்துத்துட்டு வந்திருப்பேன்.

இட்லியை சாப்பிட்டுக்கலாமுன்னு பார்த்தால் காணோம்! ரெண்டு செட் சொன்னமேன்னு .... காக்கா.....ஊஷ்...........


கூட்டமா தள்ளுமுள்ளா இருந்ததிலே கவனிக்கலைன்றார் கோபால். கூட்டம்? ஓ... அங்கே ஆறுபேர் வரிசையில் இருந்தாங்களே! (எங்க கணக்குலே நாலு பேர் இருந்தால் கூட்டமே!) பொதிஞ்சு தர சரியான பாக்கிங் சாமான்கள் இல்லாம கடைசியிலே க்ளாட் ராப் ((Glad Wrap) போட்டு மூடிக்கொண்டாந்தோம். அதைத் தேடிக்கிட்டு இருந்த கலாட்டாவில் இட்லிகளை வாங்கிக்க விட்டுப்போயிருக்கு. புள்ளையாருக்குத்தானே போயிட்டுப் போகுதுன்றார். ஆனால்.... பசிச்ச வயித்துக்கு என்ன பதில் சொல்வது?

கைவசம் ஒரு பிஸ்கட் பாக்கெட் இருக்கு. பழங்களை வெட்டி விழுங்கிட்டு மம்மி பார்க்கக் கிளம்புனோம். க்வீன்ஸ்லேண்ட் ம்யூஸியம். நேத்து சௌத் பேங்க் வந்தப்பப் பார்த்து வச்சது. பார்க்கிங் காசு அழுதுட்டு மாடி ஏறிப்போனால், தலைக்கு மேலே வாசலில் பெரிய ப்ளூ வேல்ஸ் ஆடிக்கிட்டு இருக்கு! காயமே அது பொய்யடா.... காற்றடைச்ச....

 ப்ரிட்டிஷ் ம்யூஸியத்தில் இருந்து வந்த ஸ்பெஷல் ஐட்டமா இங்கே மம்மி ஷோ நடக்குது. டிக்கெட் ரெண்டரை மணிக்குள்ளது எல்லாம் வித்துப்போச்சுன்னு சொல்றாங்க. நாலு மணிக்கு ஒன்னு இருக்கு வேணுமா? இன்னும் கொஞ்சம் விவரம் சொல்லுங்கன்னா..... அரைமணி நேரம் இந்த ஷோ (ஒரு டாக்குமென்ட்ரி வகைதான்) பார்த்த பிறகுதான் காட்சிக்கு வச்சுருக்கும் பொருட்களைப் பார்க்க விடுவோம்.

 நமக்கு அவ்வளவா புரிபடாத விஷயங்களில் இந்த பிரமிட், மம்மி எல்லாம் கொஞ்சம் கவர்ந்து இழுக்கும் டைப். ஒரு சமயம் லண்டனில் ப்ரிட்டிஷ் ம்யூஸியம் வித்துக்கிட்டு இருந்த மம்மி டிஸைன் லெட்டர்பேட், என்வலப் இப்படியான சமாச்சாரங்களை ரெண்டு செட் வாங்கி ஒன்னு மகளுக்கும் இன்னொன்னு மாமியின் பேரனுக்கும் (மகள் வயசுதான்) கொடுத்தால்... ஐய்யோ.... இதெல்லாம் வீட்டுலே வச்சுக்கப்டாது. அச்சான்யம் என்று மாமியின் மகள் சொல்ல கப்சுப்ன்னு திருப்பிக் கொண்டுவந்துட்டேன்.

 இங்கே எங்கூர்லே மம்மிக்கு ஸ்கேன் கூட எடுத்துப் பார்த்துட்டோம். மம்மிக்கான தனிப்பிரிவு எங்க ம்யூஸியத்துலே இருக்கு பாருங்க....அங்கே எப்பவும் சிலர் ஆர்வமான கண்களுடன் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. சி டி ஸ்கேன் எடுத்த விவரம் இங்கே! 

 ம்யூஸியம் அஞ்சு மணிக்கு அடைக்கறாங்க. ஷோ முடிஞ்ச பின் 25 நிமிஷம்தான் பார்க்கவோ, விளக்கம் கேட்டுத் தெரிஞ்சுக்கவோ முடியும். அது ரொம்பக் குறைவான நேரம்தான். மேலோட்டமாப் பார்க்க முடியும். அவ்ளோதான்.

வேணாம். இதுக்குப்போய் அறுபது டாலர்கள் அதிகமுன்னு மகள் பிடிவாதமா சொல்லிட்டதால், நாளைமற்ற நாளுக்குக் கேட்டால் காலை நேர டிக்கெட்ஸ் எல்லாம் வித்தே போச்சுன்னு சொல்லிட்டாங்க. ஒரு நாலைஞ்சு பொருட்களை மட்டும் நுழைவு வாசலில் காட்சிக்கு வச்சுருந்ததைப் பார்த்துட்டு, பொதுப்பகுதிக்குள் நுழைந்தோம்.



டைனோஸார் எலும்புக்கூடு ஒன்னு நடுநாயகமா இருக்க, அவைகளைப் பற்றிய தகவல்களும் கறையான் புற்று ஒன்னும், சில உலோகம், தாதுக்கள் பற்றிய குறிப்புகளுமா காட்சிக்கு உண்டு. முக்கியமா சின்னக்குழந்தைகளைக் கவரும் பகுதியாகத்தான் இருந்துச்சு.



ராக்ஷஸ சைஸ் உள்ள கடல் ஆமைகள் தண்ணி இல்லாத அக்வேரியத்துக்குள்:-)

ஆட்டுவண்டி ஒன்னு பார்த்து அதிசயிச்சுப்போனேன்! விறகு கொண்டு வர, தண்ணிக்குடம் தூக்கியாரன்னு வீட்டுலே சின்ன ச்சின்ன வேலைகளுக்கும் புள்ளைங்களை இஸ்கோல் கொண்டு போய் விட்டுக் கூட்டியாரதுக்கும் இந்த வண்டிகளை அந்தக் காலத்துலே ஓடியிருக்கு ஆடுகள்! 18, 19 நூற்றாண்டுகளில். ரேக்ளா ரேஸ் போல இந்த வண்டிகளைவச்சும் ரேஸ் நடந்துருக்கு. இந்த கோட் கார்ட்தான் பிற்காலத்துலே கோகார்ட்ன்னு மருவி இருக்கு. புள்ளைங்க விளையாடும் கோகார்ட் பார்த்துருக்கீங்கதானே?



ம்யூஸியம் ஷாப்பில் எகிப்து பிரமிட் சம்பந்தமுள்ள சமாச்சாரங்களை காற்றுள்ளபோதே தூற்றி / விற்றுக்கொண்டு இருந்தாங்க. இதே வளாகத்தில் நூலகம் ஒன்னும் இயங்குது. க்வீன்ஸ்லேண்ட் ஃப்ளட் லைன்ஸ்ன்னு வெள்ளம் வந்து பாழாக்கிட்டுப் போனவைகளை விளம்பரப்படுத்தி இருந்தாங்க.


பலூன்களை வச்சு இருக்கை விரிப்பு செஞ்சு வச்சுருக்கு.மாடர்ன் டிஸைனாம்!

திரும்ப மோட்டலுக்கு வந்து வண்டியை வச்சுட்டு சிட்டி மாலுக்கு நடையைப் போட்டோம். மோட்டலுக்கு எதிரே இருக்கும் கிங் எட்வர்ட் பார்க்கில் நுழைஞ்சு படிகளூடாக இறங்கலாம். வெறும் தொன்னுத்தியேழே படிகள்தானாக்கும்!

(அதெல்லாம் எண்ணிருவேன். இந்த எண்ணுதல் என் சொந்தப் பழக்கங்களின் ஒரு பகுதி. சும்மாவா சொன்னாங்க எண்ணும் எழுத்துமுன்னு :-)))))))

 க்வீன்ஸ்ட்ரீட் மால் வழக்கம் போல் கலகலப்பா இருக்கு. மாலின் மையப்பகுதியில் சீருடை அணிஞ்ச ஒரு இசைக்குழு பேண்ட் வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க. காதாலே கேட்டுக்கிட்டே சனம் கடைகளுக்குள் நுழைஞ்சு வெளியே வந்துக்கிட்டு இருக்கு. ஆறுமணி வரை மால் திறந்திருக்கும் என்பதால் கூட்டத்துக்குக் குறைவில்லை. அந்த ஜோதியில் மகளும் கலந்து காணாமப் போனாள்.

18 comments:

said...

Beautifull pictures . Thanks 4 sharing

said...

ஹாஹா வெற்றிவேல் கந்தவேல் காலம்வேல் இந்த தடவையும் விட்ட பாடில்லைய்யா? ஹைய்யோ ஹைய்யோ.

said...

//எல்லாத்துக்கும் உருளைக்கிழங்குன்னாலும், மசால் தோசைக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் விதம் வேற மாதிரியாச்சே! இவுங்க செஞ்சு வச்சுருப்பது சாதத்துக்குத் தொட்டுக்கும் வகை! அங்கேயே விஷயத்தைக் கவனிச்சு இருந்தால் செய்முறையைச் சொல்லிக்குடுத்துத்துட்டு வந்திருப்பேன்.//

மைசூர் மசாலாத் தவிர்த்து மற்ற மசாலா தோசைக்கும் பூரிக்கும் பல உணவகங்களில் ஒரே மசாலா தான் போடுவாங்க.
:)


நீங்க மம்மி தொடர்பில் எதையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாதுன்னு சொன்னதைத் தான் பார்த்திருக்கிங்க, ஆமை பொம்மைகள் கூட ஆகாதுப்பாங்க சிலர்.

said...

காக்காவும் வேலையைக்காட்டி விடுகின்றது :((

பழக்கடை, மம்மி பொருட்கள், களைகட்டிய கடைத்தெரு எனசுற்றிவந்தோம்.

said...

எங்கூர்லயும் வடாபாவ்க்குன்னு செய்யும் மசாலாவைத்தான் தோசா, பூரிக்குத் தொட்டுக்க, அப்றம் மிசல் பாவ்ல கொஞ்சூண்டு கலக்கன்னு உபயோகப் படுத்தறாங்க. ஆல் இன் ஒன் ஈஸ் ஆல்வேஸ் வெல் :-)))))

//அதுக்காக.... கையில் எடுத்த வடையை திரும்ப வைக்க முடியாது. ஸ்வாஹா .......//

அதானே!!.. வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தையும், பாக்கெட்டிலிருந்து எடுத்த வடையும் திரும்ப வைக்கப்பட்டதா சரித்திரம் பூகோளம் எதுவுமே கிடையாது :-))

said...

//வடையை திரும்ப வைக்க முடியாது. ஸ்வாஹா//

ஆஆ...!! வாட் எ மம்மி!!!!

//அந்த மசாலா...... உருளைக்கிழங்கு காரக்கறி. பூரிக்குள்ளும் இதே:( //

இதெல்லாம் (என்னைப் போல) ஈஸிபீஸி சமையல் செய்றவங்களுக்கு இல்லாத பழக்கமாச்சே? நானெல்லாம், என்னைச் சமைக்கச் சொல்லாதவரை எதுகிடைத்தாலும் ஸ்வாஹாதான்... (என்னைச் சமைக்கச் சொன்னா, அதுகூட கிடைக்காது!!) :-)))))

பாவம், பாத்துப் பாத்து ஆசையா வாங்கிட்டு, கடைசீல பிஸ்கெட், பழம்தான் வாய்க்கெட்டுச்சுபோல!! நாங்கதான் போன பதிவுல கண்ணு வச்சுட்டமோ? :-)))

//இட்லிகளை வாங்கிக்க விட்டுப்போயிருக்கு//
வாங்கிட்டு வந்திருந்தாலும், அதே சட்னி, அதே சாம்பார்தானே... :-))))

said...

வாங்க ரைட்டர் நட்சத்திரா!

முதல் வருகைக்கு நன்றி.

மீண்டும் வருக.

said...

வாங்க கோவியாரே.

பொதுவா நம்ம பக்கங்களில் மசால்தோசைக்குள்ளே வைக்கும் உருளைக்கிழங்கு மசாலா பூரிக்கும் பொருத்தமே! அதுலே பெருசா வித்தியாசம் இல்லை.

குழலூதும் கிருஷ்ணர், ஆஞ்சநேயர், பழனி முருகன் கோவணத்தாண்டி படங்களோ சிலைகளோ கூட வைக்கக்கூடாது லிஸ்ட்டுலே இருக்கு!

இதுக்கெல்லாம் அசர முடியுமா? அவை எல்லாம் எக்ஸ்க்ளூஸிவ் ஐட்டம்ஸ்ன்னு நான் நம்புவேன்.

said...

வாங்க மாதேவி.

பாவம் காக்கா.....:-)))))) அது கிட்ட வரவே இல்லையாக்கும்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

இந்த நாக்கு இருக்கே............. சொன்ன பேச்சைக் கேட்டுட்டாலும்..... க்கும்.....

முந்தாநாள் பதிவு போட்ட கையோட மசால்தோசை வீட்டுலே செஞ்சு சாப்பிட்டபிறகுதான் மனசு அடங்குச்சு:-)

said...

வாங்க ஹுஸைனம்மா.

//வாங்கிட்டு வந்திருந்தாலும், அதே சட்னி, அதே சாம்பார்தானே... :-))))//

ஆஹா..... இப்படி ஒரு பாய்ண்ட்டை கோபாலுக்கு கொடுத்துட்டீங்களே!!!!!

அதென்ன அப்படி ஒரு கவனமின்மை? வயசாகிப்போச்சுன்னு கொஞ்சம் வாங்கிக்கிட்டார்.

இப்பதான் அவர்மனசு ஆறி இருக்கும்.:-)))

said...

வாங்க பொற்கொடி.

வேலை மறக்கும் வேலையெல்லாம் நமக்கில்லைப்பா:-)))))

யானை யானை!

said...

நம்மூர் தவிர எந்த ஊர்ல இந்த மசாலா தோசை சாப்பிட்டாலும் “உவ்வே” ரகம் தான்.

அதிலும் தில்லியில் கேட்கவே வேண்டாம். பஞ்சாபி ஹோட்டலில், உத்திராகண்ட்/நேபாளி செய்த மசால் தோசை வித் சீரகம் தாளித்த சாம்பார்! :(

படங்களும் பகிர்ந்த விஷயங்களும் அருமை.... தொடர்ந்து அசத்தறீங்க டீச்சர்...

said...

/கையில் எடுத்த வடையை /

நூற்றில் ஒரு வாக்கு:)!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பஞ்சாபி தட்கான்னாவே சீரகம்தான்.

கடுகெண்ணெய் சாப்பிடறவங்க தாளிக்கமட்டும் கடுகு வேணாங்கறாங்களே:-)))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இதுலே நான் கூர்க்கா மாதிரி:-)))))).

said...

உங்க பயணப்பட்டியலில் அண்டார்டிக்கா உண்டா?

said...

வாங்க ஜோதிஜி.

பட்டியலில் இருந்து என்ன பயன்?

பக்கத்துலேதான் இருக்கு. ஆனால், நினைச்சாக் கிளம்ப முடியுமா?

மெடிக்கல் செக்கப்லே தேறமாட்டேனே:(