அடுத்துப்போனது பரமார்த் நிகேதன் ஆஸ்ரமம். அட்டகாசமான அலங்கார வளைவுகளும், கம்பிக் கூண்டுகளுக்குள்ளில் ராமாயண மகாபாரத இதிகாச சம்பவங்களின், சுதைச் சிற்பங்களுமா பெரிய தோட்டத்தில் அப்படியே கண்ணைக் கட்டி இழுக்குது. அங்கங்கே உக்கார பளிங்கு மேடைகள், பெஞ்சுகள், ஆஸ்ரமவாசிகள், யாத்ரீகர்கள் தங்கும் அறைகள், கோவில்கள், சந்நிதிகள் இப்படி எதைச்சொல்ல எதைவிட! படு சுத்தமான பராமரிப்பு. நின்னு நிதானமாப் பார்த்தால் ஒரு அஞ்சாறு மணி நேரம் போயிரும்.
தோட்டத்தில் ரொம்ப பாதுகாப்பான கம்பிவேலிக்குள்ளில் கற்பக மரம் இருக்கு. இதைக் கண்டாலே எல்லா நலன்களும் கிடைச்சுருமாம். நல்லா பார்த்துக்குங்க. படம் பதிவர் ஸ்பெஷல்.
ததிசி முனிவர் இந்திரனுக்கு எலும்பு கொடுத்த கதை அங்கே சிற்பமா இருக்கு. கதை தெரியாதவர்களுக்கு இங்கே 'சுருக்'. தேவலோகத்துலே பாற்கடல் கடையும் ஸீன். தேவர்களும் சாமிகளும் கைகள் நிறைய ஆயுதம் தாங்கி நிற்பாங்க இல்லையா? ஞாபகம் வருதா? எத்தனை படத்துலே பார்த்துருக்கீங்க! கையிலே பொருட்களை வச்சுக்கிட்டுக் கயிறை இழுக்க முடியுமா? அதுவும் அது வாசுகி. பாம்பு வழவழன்னு வழுக்காதா?
யார்கிட்டேயாவது பத்திரமாப் பார்த்துக்கச் சொல்லிக் கொடுக்கலாமுன்னா அனைத்து தேவர்களும் கயிறு இழுத்தாகவேண்டிய நிலமை. சுத்துமுத்தும் பார்க்கறாங்க.கண்ணுலே பட்டார் ததீசி முனிவர். நல்ல குணநலன்கள் கொண்டவர். அவர்கிட்டே போய், நாங்க 'வரும்வரை' இதையெல்லாம் பார்த்துக்குங்கன்னு சொல்லிக் கொடுத்து வச்சுட்டுக் கடையப்போனாங்க.
அமுதம் வந்தது. அசுரர்களுக்கு, அவர்கள் பங்கைக் கொடுக்காமல் 'ஏமாத்திட்டு' மோகினி தேவர்கள் எல்லோருக்கும் விளம்பினாள். ஒரே கொண்டாட்டம். இனி அழிவே இல்லை. போதாததுக்கு உண்ட மயக்கம். எல்லோரும் கிளம்பிப்போயிட்டாங்க. கைகள் காலியா இருக்கேன்னு எப்பவாவது நினைவு வந்தாலும், எதுக்கு வீணா சுமக்கணும். அமிர்தம் தின்ன நமக்கு இனி யாராலும் ஆபத்து இல்லையேன்னு ஒரு தோணல்.
ததீசி இங்கே தேவுடு காத்துக்கிட்டு இருக்கார். யாரும் வந்து வாங்கிக்கும் வழியைக் காணோம். தன்னுடைய கடமைகளான தவம், யாகம் இதையெல்லாம் செய்யாமல் முனிவர்ன்னு பெயர் வச்சுக்கிட்டு எத்தனைநாள்தான் காவல்காரனாக் காத்துக்கிட்டு இருப்பார்? அங்கேயே போட்டுட்டுப் போகவும் மனசு வரலை. அசுரர்கள் கையில் ஆப்ட்டுக்கிட்டா? உக்கார்ந்து யோசிச்சார். எல்லாத்தையும் பொடி செஞ்சு மாத்திரைகளா மாற்றி மூணு வேளைக்கு முழுங்கிட்டார். அது எல்லாம் அவர் எலும்புக்குள்ளே போய் ஸ்ட்ராங்கா உக்காந்துக்கிச்சு. முதுகெலும்புக்கு எக்ஸ்ட்ரா ஸ்ட்ரெந்த்!!!
அசுரர்கள் கூட்டத்தில் விருத்திகாசுரன் என்பவன் பயங்கர பலத்தோடு விருத்தியடைஞ்சுக்கிட்டு இருக்கான். இவன் அசுர குருவான துவஷ்டாவின் ஏவல் சக்தி. இவன் இந்திரன் மீது படையெடுத்து வந்துட்டான். ஆயுதம் ஒன்னும் கையில் இல்லாத நிலையில் அரக்கனை எதிர்கொள்ள முடியாமல் தேவர்களின் அரசன் இந்திரன் ஓடி ஒளிஞ்சுக்கிட்டான். வழக்கம்போல் தேவர்கள் விஷ்ணுவிடம் போய் குய்யோ முறையோன்னு கூவி அழ, மகாவிஷ்ணு சொல்றார், எல்லோரும் ஆயுதத்தை முனிவர் கிட்டே கொடுத்துட்டு ஜாலியா இத்தனைநாள் இருந்தீங்களே...... ஆபத்து காலத்துலே இதெல்லாம் வேணுமேன்னு யாருக்காவது தோணுச்சா?
வருமுன் காக்கத்தெரியாதவங்களுக்கு இப்படித்தான் ஆகுமுன்னு ரெண்டு வார்த்தை திட்டிட்டு, போங்க...போயி அந்த ததீசி முனிவரைப்போய்ப் பாருங்க. ஆனால் அவரும்தான் எம்மாநாள் காத்துருப்பார்? எல்லாத்தையும் பொடிபண்ணி முழுங்கிட்டார்'னார்.
தேவர்கள் எல்லோரும் பயந்து நடுங்கி 'ஓ'ன்னு விம்மி அழறாங்க. விஷ்ணுவுக்குப் பாவமாப்போச்சு. முனிவரின் முதுகெலும்பு கிடைச்சால் அதுலே ஒரு வஜ்ராயுதம் செஞ்சு அதை வச்சுச் சண்டை போட்டால் விருத்திகாசுரனை ஜெயிக்கலாமுன்னு ஐடியாக் கொடுத்தார். ஒளிஞ்சுக்கிட்டு இருந்த இந்திரனுக்கு சேதி போச்சு. முனிவரைப் பார்க்கக் கிளம்பிப் போனான்.முனிவர் குணக்குன்று. மறு பேச்சில்லாமல் 'முதுகெலும்பை எடுத்துக்கோ'ன்னுட்டார். பசு ரூபத்தில் இந்திரன் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக நக்கி தசைகளைக் கரைச்சு உள்ளே இருந்து எலும்பை எடுத்துக்கிட்டான். தேவதச்சன் அதை வஜ்ராயுதமாச் செஞ்சு கொடுத்ததும் அதை வச்சு விருத்திகாசுரனைக் கொன்னு போட்டதாக புராணக் கதை.
ஆமாம்.....கர்ணன் தன் தங்கப்பல்லை கிருஷ்ணனுக்குக் கொடுத்தாராமே! அது எப்போ? தங்கப்பல் கட்டுனதைப்பத்தி நம்மகிட்டே ஒரு வார்த்தை சொல்லலை! சம்பவம் எனக்குப் புதுசு கதை தெரிஞ்சவுங்க சொல்லுங்க.
ஆயுர்வேத மருத்துவமனைக்கான நுழைவு வளைவில் சுவர்களில் புடைப்புச்சித்திரங்களா ஒரு மனிதன் வாழ்க்கை பிறந்தது முதல் மரணம் வரை! அவனுக்கு உடம்பு சரி இல்லைன்னு டாக்டர் வந்து பார்க்கிறார்!போகும்போது மூடி இருந்த கடைகள் எல்லாம் திறந்து இப்போ கரையை ஒட்டிய கடைத்தெரு ஜேஜேன்னு இருக்கு. அங்கே ஒரு கடையின் வாசலில் நம்மைக்கொண்டு நிறுத்தினார். உள்ளே ஒருமுகம் பார்க்கலாமாம். எதுவும் வாங்க வேண்டியதில்லை. கொக்கி நம்பர் 2 :-)
ஒரு நகைப்பெட்டிக்குள்ளில் பூமெத்தையில் ஒரு வெள்ளிப்பூண் போட்ட ருத்திராட்சம்.இது விற்பனைக்கு இல்லை! கையில் எடுத்துப் பார்க்கவும் படம் எடுக்கவும் அனுமதிச்சாங்க. அத்தோடு போகுமா...ச்சும்மா இதையெல்லாம் பாருங்கன்னு காமிச்ச வகைகளில் குடும்ப நலம் முன்னிட்டு(???) ஒரு ஸ்படிக ஸ்ரீமேரு ஒன்னும் ஸ்படிக மாலை ஒன்னும் வாங்கும்படியா ஆச்சு 'என்னை அறியாமல்'. உண்மையான ஸ்படிகமான்னு நமக்கு வந்த சதேகத்தைப் புரிஞ்சுக்கிட்டு சட்னு கடை விளக்கை அணைச்சுட்டு ஸ்படிக மணிகளை ஒன்னோடொன்னு உரசிக் காமிச்சார். தீப்பொறி பறந்துச்சு. (இதுதான் 'அந்த' சிக்கிமுக்கிக் கல்லோ?)இன்று முதல் அஞ்சு வருசங்களுக்குள்ளில் எப்பத் திருப்பிக் கொடுத்தாலும் 75% திருப்பிக் கொடுத்துருவாங்களாம் கொக்கி நம்பர் 3:-)
மிளகு சைஸில் தங்கத்துலே கட்டுன ருத்திராட்ச மாலை ஒன்னு ரொம்ப நல்லாவே இருக்கு. ரொம்பப் 'புளிப்பு' வேணாமுன்னு கோபால் மனசில் பால் வார்த்தேன். முப்பதாயிரம் ஸேவிங்க்ஸ்.
உங்களுக்கு ஒரு நல்ல பரிசு தர்றோமுன்னு ஒரு ஆறுமுகம் ருத்திராட்சம் காமிச்சார். இன்னொரு கிண்ணத்தில் நாலு முகமும் வச்சுருக்காங்க. கடைசியில் இது ஒன்னு அது ஒன்னுன்னு டீல் ஓக்கே:-) ஏற்கெனவே கோகர்ணத்தில் ஒரு அஞ்சு முகம் கிடைச்சது. கலெக்ஷன் ஆரம்பிக்கத்தான் வேணும். அர்த்தசந்திர ருத்திராட்சம் பார்த்தேன். உத்தரகண்ட் மாநில அரசு பரிந்துரைக்கும் கடைகளில் இதுவும் ஒன்னு.
இதுக்குப்பிறகு நிறைய கடைகளில் ஒரு முக ருத்திராட்சம் பார்வைக்கு இருக்கு என்ற விளம்பர போர்டுகள் வச்சுருப்பதைப் பார்த்தேன். ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்திராட்ச வகைகள் இங்கெல்லாம் கிடைக்குது.
'எதாவது வாங்குனீங்களா?'ன்னார் கௌஷலேந்த்ர சிங். எத்தனை பெர்ஸண்ட் உங்களுக்குன்னு கேட்டேன்:-) வெறும் ரெண்டு தானாம். சரி. ரெண்டுன்னா ரெண்டு. 'அறுபத்தியாறு ரூபாயை விட்டுடாதீங்க'ன்னேன்:-)
கங்கைப் படித்துறைகளில் கங்கையைத் தெளிச்சுக் கோதுமைமாவைப் பிசைஞ்சு சின்ன உருண்டைகளா உருட்டி ஒரு தொன்னையில் போட்டு அஞ்சு ரூபான்னு விக்கறாங்க. பசுமாட்டுக் கன்றுகள் அங்கங்கே நம்மை எதிர்பார்த்து நிக்குதுகள். இவை விற்பவர்களின் சொந்தக் கன்றுகளாத்தான் இருக்கணும். கன்றையும் மேய்ச்சு வியாபாரமும் நடத்தி. கன்றுக்குத் தீனியும் போட்டு, நமக்கும் புண்ணியம் தேடித்தந்துன்னு ஃபோர் இன் ஒன்.இக்கரையில் இருந்து கங்கையைக் கடந்து அக்கரைக்குப் போக படகுகள் தயாரா இருக்கு. பத்தே ரூபாய்.
திரும்பி ராமர் பாலம் வரும்போது கருப்புக் கம்ப்ளி மஹராஜ் கோவிலுக்குள் போனோம். ஸ்வாமிஜிக்கும் மாதாஜிக்கும் கம்பளி போர்த்திக் கண்ணாடி மாடத்தில் வச்சுருக்காங்க. சந்நிதி ஹாலின் ஒரு பக்கம் கீதோபதேசம் சிற்பம் ஒன்னு. நாலு வெள்ளைக் குதிரைகளோடுள்ள தேரில் கிருஷ்ணனும் அர்ஜுனனும். தேரின் உச்சியில் நம்ம நேயுடு கொடியில் மறைஞ்சு இருக்காம, 'என்னைப்பார்'ன்றார்:-) . ராமர் பாலத்தில் நடந்து வரும்போது எதிரில் வானளாவ நிற்கும் மலையில் நீல்கண்ட் கோவில் இருப்பதாகவும் போய் வரணுமுன்னா சுமார் நாலு மணி நேரமாவது ஆகும் என்றதால் 'எஸ்' ஆவதற்காக 'நோ' சொல்லும்படி ஆச்சு.
பாலத்தில் நடந்து வரும்போது ஒரு இடத்தில் 'கீழே பாருங்க'ன்னார் கைடு. மீன்கள் கூட்டங்கூட்டமா நிக்குதுங்க. அந்த இடத்தில் மீனுக்கு பொரி போடுவாங்க போல!
மறுபடி சிவானந்தா ஆஸ்ரமத்துக்குள்ளே நுழைஞ்சு பத்ரிநாத் சாலைக்கு வந்தோம். நவீனக் கருவிகள் எல்லாம் உள்ள மருத்துவமனையை நடத்துறாங்க. எக்ஸ்ரே ரூம் எல்லாம் இருக்கு. ஆன்மீகப்பயணமா இல்லாம சும்மா மலை ஏறுவது, கங்கையின் வேகத்தோடு போகும் படகுச்சவாரி (ராஃப்டிங்) இப்படி பொழுதுபோக்கு விஷயங்களுக்காகவும் ஏராளமான மக்கள் வந்து கூடும் இடம் இந்த ரிஷிகேஷ். பல வெளிநாட்டுக்காரர்களின் நடமாட்டங்களையும் பார்க்கலாம்.
இப்போ ராமர் பாலம்தான் பார்த்திருக்கோம். இன்னும் லக்ஷ்மணன்பாலம், த்ரிவேணி காட், பரத் மந்திர் எல்லாம் போகணும். வண்டி இருந்து என்ன பயன்? எதெது எங்கேன்னு சொல்ல உள்ளூர் ஆள் வேணாமா? வழிகாட்டுன வேலையை முடிச்சுக்கிட்டுக் கிளம்ப இருந்த கைடையே 'இந்த இடங்கள் எல்லாம் வந்து காமிக்க முடியுமா'ன்னதுக்கு சம்மதிச்சுட்டார்.
தொடரும்.................:)
Monday, February 28, 2011
பார்க்கவேண்டிய இடம்தான், இந்த பரமார்த் நிகேதன்.
Posted by
துளசி கோபால்
at
2/28/2011 12:27:00 AM
24
comments
Labels: Rishikesh, அனுபவம் Parmarth niketan
Friday, February 25, 2011
எங்கூரின் இன்றைய நிலை:(
இன்னும் 260 பேரைக் காணவில்லை. நிலநடுக்கம் மனநடுக்கத்தைக் கொண்டாந்து போட்டுருக்கு. செவ்வாய்க் கிழமை பகல் 12.54 ( நியூஸி டைம்) ஏற்பட்ட நிலநடுக்கம் 6.3 MAGNITUDE. வேலைநாள்.
நகரமையத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம். இப்போ கோடைகாலம் என்றபடியால் பயணிகள் எண்ணிக்கை வழக்கம்போல் கூடுதல். சம்பவம் நடந்தநாள் மகள், தன்னுடைய நெருங்கிய தோழியின் தாத்தாவின் சவ அடக்கத்துக்குப் போயிருக்கிறாள். ஃப்யூனரல் பார்லரில் இருந்து வெளியேறி வீட்டுக்குள் நுழைந்த போது நிலம் நடுங்கி இருக்கு.
உடனே அப்பா அம்மாவுக்கு டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பி இருக்காள். அது என்னவோ நமக்குக் கிடைக்கலை. நாங்க சிங்கப்பூரில் இருந்தோம் அந்த சமயம். எழுத்தாளர் தோழி ஜெயந்தி சங்கர் நம்மைப் பார்க்க அறைக்கு வந்துருந்தாங்க. மடிக்கணினியை மூடி எடுத்து வைக்கப் போகுமுன் வழக்கம் போல் நியூஸி நியூஸ் ஒரு வினாடி பார்க்கும் பழக்கம் உண்டு. அதிர்ச்சியான சேதி! உடனே மகளுக்குத் தொலைபேசினால்...... அவள் நலம். குடும்ப நலன் தெரிஞ்சதும் நண்பர்கள் நலனைப் பற்றிய கவலை.
யாரையும் தொடர்பு கொள்ள முடியலை. ஃபேஸ்புக்லே போய்ப் பார்க்கலாமுன்னா..... உன் பெயரில் யாரோ லாகின் செய்ய முயற்சிக்கிறாங்கன்னு எங்கிட்டேயே சொல்லுது. 'அது நாந்தாய்யா'ன்னு விளக்கி நண்பர்களுக்கு சேதி விட்டேன்.பஸ் பயணிகள் யாரும் பிழைக்கலை:(
ஆஸ்ட்ராலியன் தொலைக்காட்சியில் விஸ்தாரமான தகவல் கிடைச்சது. அதுக்குள்ளே 65 மரணம். 300 மிஸ்ஸிங்:(
நிறைய நட்புகள் நம்ம வீட்டுக்கு தொலைபேச முயன்று, பதில் இல்லைன்னு கவலைப்பட்டாங்களாம். நாம்தான் ஊரில் இல்லையே!
கிறைஸ்ட்சர்ச் கதீட்ரல் மணிக்கூண்டு இடிஞ்சு 22 பேர் மரணம். பொதுவாக மேலே ஏறிப்போய்ப் பார்க்கப் பயணிகள் விரும்புவாங்க. பார்த்துவிட்டுத் திரும்பினால் இத்தனை படிகள் ஏறிப்போய்ப் பார்த்தோமுன்னு ஒரு சான்றிதழ் கொடுப்பாங்க. ரொம்ப குறுகலான சுழற்படிகள். நல்ல கருங்கல் கட்டிடம்.உள்ளூர் தொலைகாட்சி CTV கட்டிடம் முழுசுமா விழுந்து நொறுங்கிப் போயிருச்சு. இன்னொரு நாலுமாடிக் கட்டிடம் நொறுங்கியாச்சு. நியூஸிக்கு ஆங்கிலம் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் முக்கியமாக ஜப்பான் நாட்டு மாணவர்களின் பள்ளிக்கூடம் இந்தக் கட்டிடத்தில் செயல்படுது. இது இல்லாமல் நாலைஞ்சு வெவ்வேறு அலுவலகங்கள் இதில் உண்டு.
அடைமழை வேறு வந்துருச்சுன்னு மீட்புப்பணிகள் தாமதமாகி இருக்கு. நகரில் முக்கால் வாசிக்கு மேல் மின்சாரமோ, தண்ணீரோ, இல்லை. கடற்கரைக்கு அருகில் இருக்கும் குன்றுகளின் மேல் உள்ள வீடுகள் பலவும் இடிந்து விழுந்துவிட்டன. அந்த ஏரியாவில் மட்டும் 12 தெருக்களைக் காலி செய்யச்சொல்லி மக்களை வேறு இடத்தில் பாதுகாப்பாக வச்சுருக்காங்க. பல இடங்களில் சாலைகள் எல்லாம் பழுதாகிப் போச்சு. பல சாலைகளில் நிலத்தடி நீர் நிறைஞ்சுப் போய்க்கிடக்காம்.
சாலையின் நிலை
ஸ்டேட் எமர்ஜென்ஸி டிக்ளேர் செஞ்சுருக்காங்க. பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடியாச்சு. காயம் அடைஞ்சவர்கள் பொது மருத்துவர்களை அணுகி மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம். இந்த GP சர்வீஸுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று அறிவிச்சுருக்கு அரசு.
சேதி தெரிஞ்சதும் ஆஸ்ட்ராலியாவில் இருந்து மீட்புப் பணிகளுக்கான நிபுணர்கள் வந்து சேர்ந்துட்டாங்க.
அஞ்சு மாசத்துக்கு முன்னேதான் (செப்டம்பர் 4)ஒரு நிலநடுக்கம் 7.1 Magnitude ஏற்பட்டது. அது பின்னிரவு என்றதால் உயிர்ச்சேதம் ஒன்னுமில்லை. ஒரே ஒருத்தருக்குத்தான் அடிபட்டது. அதுவும் அவர் வீட்டு புகைபோக்கியின் மூடி கழண்டு விழுந்ததால்.
தேவாலயத்தின் மணிக்கூண்டுக்குள் புதையுண்டவர்கள் உடல்களை மீட்கும் பணி இப்போ கொஞ்சநேரமுன்புதான் தொடங்கி இருக்காங்க.தேவாலயம் அன்றும் இன்றும்
செவ்வாய் பகல் முதல் கிடைத்த உடல்களை தாற்காலிகமாக ஒரு இடத்தில் வச்சுருக்காங்க. உடல்களை அடையாளம் காணும் பணியும் ஆரம்பிச்சு இருக்கு. இதுவரை 113 சடலங்கள்.
ஒவ்வொருமுறையும் புதுச்சேதிகளைத் தெரிஞ்சுக்கும்போது பகீர்னு இருக்கு. ஒரு சில செய்தித்தளங்கள் ஒவ்வொரு பத்து நிமிசத்துக்கும் புதுச்செய்திகளைச் சேர்த்துக்கிட்டே இருக்காங்க.
நகரத்தைச் சீரமைக்கும் பணி நெடுநாட்களுக்கு நடக்கும். அதற்கான திட்டங்கள் ஒரு பக்கம் தயாராகுது.
ஊரைவிட்டுப் போய்விட விரும்பும் மக்கள் ஒரு பக்கம் கிளம்பிக்கொண்டே இருக்கிறார்களாம். விமானநிலையம் படு நெரிசலா இருக்காம்.டைம்பால் ஸ்டேஷன்
தகவல் தெரிந்தவுடன் தனி மடலிலும் பின்னூட்டங்களின் மூலமும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மனசளவில் நொறுங்கிப் போயிருக்கும் எங்கூர் மக்களுக்கு உங்கள் பிரார்த்தனைகளின் தேவை அதிகமா இருக்கு. உங்கள் அன்பையும் ஆதரவையும் எங்களுக்கான பிரார்த்தனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.
என்றும் அன்புடன்
துளசி ( கிறைஸ்சர்ச் நகர மக்கள் சார்பில்)
Posted by
துளசி கோபால்
at
2/25/2011 06:38:00 PM
44
comments
Friday, February 18, 2011
வாங்க, ரிஷிகேஷ் போயிட்டு வந்துறலாம்!
ஏழே முக்காலுக்கு கிளம்பிட்டோம். என்ன அருமையான சாலை!!!! தேசிய நெடுஞ்சாலை எண் 58. ரெண்டு பக்கங்களிலும் மரங்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் காடு. மசமசன்னு மஞ்ஞு. தேசி ஷராப் கி தூகான் பெயர்ப்பலகை மட்டும் பளிச்சுன்னு தெரியுது. ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷ் வெறும் 16 கி,மீட்டர்கள்தான். ரெண்டுக்கும் இடையில் வேற ஊர்கள் ஒன்னும் இல்லாததால் வண்டிகள் நடமாட்டம்கூட அவ்வளவா இல்லை.
புராணகாலத்தில் கங்கைக்கரையில் அநேக ரிஷிகள் வந்து கங்கையில் முங்கி எழுந்து தவமும் தியானமுமா இருப்பாங்களாம். நாளில் பலமுறை கங்கையில் குளிச்சுக்கிட்டே இருப்பதால் இவர்களின் ஜடாமுடியில் இருந்து எப்போதும் கங்கைநீர் சொட்டிக்கிட்டே இருக்குமாம். அதான் ரிஷி கேசம் என்று பெயர் வந்துருக்குன்னு 'மிஸ்டர் சிங்' சொன்னார்.
இன்னும் ஒன்னு புதுசா வரப்போகுதுன்னு போன மாசம் ஒரு சேதி அடிபட்டுச்சே!
சாலை கொஞ்சம் கொஞ்சமா உயருது. ஒரு இடத்தில் சரேல்னு கீழே இறங்கும் பாதை பிரிஞ்சு போகுது. நாமோ மேல் நோக்கியே போறோம். பத்ரிநாத் செல்லும்வழின்னு தகவல் பலகை பார்த்ததும்தான்.............எங்கியாவது யூ டர்ன் அடிச்சுத் திரும்பலாமுன்னா....வாகான இடம் தென்படலை. வலப்பக்கம் கிடுகிடு பாதாளத்துலே அகலமா கங்கை வேகம்பிடிச்சு ஓடுறாள். இன்னும் கொஞ்சம்தூரம் போனதும் கிடைச்ச இடத்துலே வண்டியை வலதுபக்கம் திருப்பி நிறுத்தினோம். கண்ணெதிரில் நீண்ட கம்பிப் பாலம் கங்கையின் குறுக்கே.
'இது லக்ஷ்மண ஜூலாவா?ன்னேன். இல்லை.. இது ராம்ஜூலா. இங்கேயே வண்டியை நிறுத்திட்டு அங்கெல்லாம் போய்ப் பார்க்கலாம். நானே இங்கே அஃபீஸியல் கைடுதான்னு சொல்லி கழுத்தில் போட்டுருந்த நேம் டேகைக் காமிச்சார். முன்னூறு சார்ஜ். ஆனா காலையிலே முதல்பயணி (போணி) என்றதால் அம்பது சதம் டிஸ்கவுண்டுன்னார். கௌஷலேந்த்ர சிங் சௌஹான். பத்துவருச சர்வீஸ். சொந்த ஊர் ராஜஸ்தான்.
அவரையும் வண்டியில் ஏத்திக்கிட்டு வந்தவழியாவே ஒரு 300 மீட்டர் போனோம். சிவானந்தா ஆஸ்ரமம். கார்பார்க்கில் வண்டியை விட்டுட்டு ஆஸ்ரமத்துக்குள்ளே நுழைஞ்சோம். இலவச மருத்துவமனை, வேதம் சொல்லித்தரும் வகுப்புகள் எல்லாம் கடந்து கங்கையை ஒட்டிப்போகும் பாதைக்குப் போய்ச் சேர்ந்தோம். சரிவான இடம் என்பதால் அங்கங்கே படிக்கட்டுகள் வச்சு ஆஸ்ரமத்தைக் கட்டி இருக்காங்க.
ராமேஷ்வர் கோவில்
அந்தக் காலத்துலே பத்ரிகாஷ்ரம், கேதார்நாத் எல்லாம் போக ஒழுங்கான சாலைகள் கிடையாது. நடந்துதான் போகணுமாம். இங்கே வரும் யாத்திரீகர்களுக்கு சுடச்சுடச் சாப்பாடும் போட்டு, போர்த்திக்க ஒரு கம்பளியும், மலைப்பாதையில் கால் வழுக்காமல் ஊன்றி நடக்க நல்ல கைத்தடி ஒன்னும் தருவாராம் இந்த ஆஸ்ரமத்தை உருவாக்கின ஸ்வாமிஜி. அதனால் இவரைக் கம்(ப்)ளிவாலா ஸ்வாமிஜின்னு சொல்லியிருக்காங்க. கொடுப்பது கருப்பு நிறக் கம்பளமானதால் காலி கம்ப்ளி வாலா! (காலி = கருப்பு)
(கடைசியில் ஹரித்வாரில் காணக்கிடைச்சது. அது இனி வரும் பதிவுகளில்)
நம்ம ருத்திராட்ச இண்ட்ரஸ்ட்டை புரிஞ்சுக்கிட்ட கைடு, ஒரு முக ருத்திராட்சம் கூட இருக்கு. உங்களுக்குக் காமிக்கிறேன்னார். கொக்கி நம்பர் ஒன்னு:-)
ஆஸ்ரமக் கோவில்களில் ஒன்னில் ஒரு மரத்தைச் சுத்தி நவகிரகங்கள் வச்சுருந்தாங்க. நல்ல ஐடியா! எல்லா இடங்களும் சுத்தமா பராமரிச்சு வச்சுருக்காங்க.
தொடரும்.................:-)
PIN குறிப்பு. ஒரு வாரம் வகுப்புக்கு விடுமுறை. சின்னப் பயணம் . சிங்கை அழைக்கிறது! . மற்றவை திரும்பி வந்தபின்.

Posted by
துளசி கோபால்
at
2/18/2011 04:55:00 AM
37
comments
Labels: 108 திவ்யதேசம், அனுபவம் Rishikesh
Wednesday, February 16, 2011
அடி ஆத்'தீ'........... இது ஆரத்'தீ' !!!
இந்த நான்கு இடங்களில்தான் மூணு வருசத்துக்கு ஒரு முறை கும்பமேளா நடக்குது. அரைக்கும்ப மேளான்னு ஆறு வருசத்துக்கு ஒரு முறை அலஹாபாத் & ஹரித்வார் நகரங்களில் நடக்கும். அப்புறம் 12 வருசங்களுக்கு ஒருமுறை பூர்ண கும்பமேளா அலஹாபாத் த்ரிவேணி சங்கமத்தில். நடக்குது. அப்புறம் 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு ஒரு முறை (144 வருசம்) அலஹாபாத்தில் மகா கும்பமேளா நடக்குமாம். என்னமா கணக்கு வச்சுருக்காங்க பாருங்க!!!!

அடுக்கு விளக்குகளுக்குத் திரி போட்டு நெய்யை கட்டிகட்டியா வழிச்சு வச்சுக்கிட்டு இருக்காங்க.
நாம் நிற்கும் மேற்படியில் இருந்து அடுக்கடுக்கா இறங்கும் படிவரிசைகளில் ஆம்ஃபி தியேட்டர் எஃபெக்ட்டில் ஷோ பார்க்கும் வகையில் மக்கள் வரிசைகட்டி உக்கார்ந்துருக்காங்க. இந்தப்பக்கம் சுவற்றில் கண்ணாடிக்கதவு போட்ட மாடங்களில் கங்கை பூமிக்கு வந்த கதைகளும் பாற்கடலில் விஷ்ணு, முதலை வாகனத்தில் கங்காதேவின்னு அணிவகுப்பு. கூம்புக் கோபுரங்களுடன் சுத்திவர ச்சின்னதும் பெருசுமா சந்நிதிகள் ஏராளம். விளக்கு வச்ச நேரமா இருப்பதால் வெளிச்சங்கள் நதியின் ஓடும் தண்ணீரில் ஆடிக்கிட்டே பிரதிபலிக்குது. தண்ணீரில் மிதந்து போகும் சிறு அகலின் முத்துப்போன்ற ஒளி ஒரு மாதிரியான மனோநிலையைக் கொடுத்துச்சு எனக்கு.
தண்ணீரில் இறங்கி கைநிறைய அள்ளி எடுத்துத் தலையில் தெளிச்சுக்கிட்டேன். செஞ்சபாவம் எல்லாம் போயே போச். (இனி புதுசாச் செய்யாம இருக்கணும்)
நம்ம பங்குக்கு நாமும் ஒரு விளக்கேத்தலாமுன்னு பூஜைபொருட்கள் அடங்கிய இலைக்கூடை வாங்கினோம். கார்பார்க்கிங் கடந்து வந்தப்ப அஞ்சு ரூபாய்க்கு கூவி வித்தது இங்கே பத்து. நம் கையில் வாங்கின அடுத்த கணம் ஒரு பண்டா நம்மைப் பிடிச்சுடறார். 'இங்கே கொடுங்க'ன்னதும் நாமும் நம்மையறியாமல் அவர்கிட்டே கொடுத்துடறோம். 'இந்தப் பக்கம் வாங்க'ன்னு நம்மை தண்ணீர்கிட்டே கூட்டிட்டுப்போய், தன் ஜிப்பா பையில் இருக்கும் தீப்பெட்டியை எடுத்து அந்த அகல்விளக்கை ஏத்திட்டு நம்ம பெயர் குடும்ப விவரங்கள் கேட்டுட்டு என்னமோ மந்திரங்கள் சொல்லிட்டு நம்ம கையில் திருப்பிக் கொடுத்து அதை தண்ணீரில் விடச் சொல்றார். நாமும் ஏதோ ட்ரான்ஸ்லே இருப்பதுபோல் அவர் சொன்ன பேச்சையெல்லாம் கேக்குறோம்...... தட்சிணைக்காக நம் பையில் இருந்து காசை வெளியே எடுக்கும் வரை. குடும்பத்தின் நலனுக்குன்னு என்ற கொக்கி இருப்பதால் ஒன்னும் சொல்லத்தோணலைன்னு நினைக்கிறேன்.
பாலை ஊத்துனது ஒரு பண்டிட்தான். கங்கைக்குப் பாலபிஷேகம்.
மேடையில் இருக்கும் ஒரு கங்கா மாதா விக்கிரகத்துக்கு ஆரத்தி காமிச்சாங்க.
தீபம் கொளுத்துமுன் திரியை எண்ணெயிலோ நெய்யிலோ நல்லா ஊறவச்சு விளக்குலே அடுக்கினால்....நின்னு நிதானமா எரியும். இங்கே வெறும் பஞ்சுத்திரியை கொத்துகொத்தா அள்ளிவச்சுட்டு அதுமேலே நெய்யைக் கட்டிகட்டியா வச்சா வேற எப்படி எரியுமாம்?
நம்நாட்டில் இருக்கும் முக்கியமான ஏழு மோட்சபுரிகளில் இதுவும் ஒன்னு. அவை காசி, காஞ்சி, துவார்க்கா, உஜ்ஜயினி, அயோத்தியா, மதுரா மாயாபுரி. ஹரிதுவார்தான் இந்த மாயாபுரி. இங்கிருந்து 'கிளம்பிட்டா' நேரா மோட்சம் என்பதால் பலர் தங்கள் கடைசி காலத்துலே இங்கே வந்து தங்கிடறாங்க.
இந்த முக்தி ஸ்தலங்களை தரிசிச்சாலும் இதே புண்ணியம் உண்டாம். நமக்கு ஃபோர் டௌன். த்ரீ டு கோ! ஒருமுறைக்கு நாலு முறையா மோட்சம் உறுதி ஆயிருச்சு.
ஆரத்தி நடந்த படித்துறை, சினிமா முடிஞ்ச தியேட்டர்போல காலியா இருக்கு. அங்கிருந்த மக்கள் வெ:ள்ளம் முழுசும் இப்போ இந்த சந்நிதிகளில் புகுந்து பொறப்பட்டுக்கிட்டு இருக்காங்க.
இந்த இடத்தை ஒரு பகல்பொழுதில் வந்து பார்க்கணும். அறைக்குத் திரும்பும் வழியில் அந்த ஷாந்தி குஞ்ஜ் ஆசிரமத்தைக் கண்டு பிடிச்சுட்டோம். கொஞ்சம் உள்ளடங்கி இருப்பதால் சட்னு கண்ணுக்குப் படலை.
வாசலிலேயே ஒரு சின்ன மேசை போட்டு ஒருத்தர் உக்கார்ந்துருக்கார். ஆசிரமம் பார்க்கணுமுன்னா ஒரு பாஸ் கொடுப்பாராம். . அதைக் கையில் வாங்குனதும்தான் ராத்திரியில் என்னன்னு பார்க்கறது. பகல் நேரத்தில் வரலாமேன்னு தோணுச்சு. ருத்ராட்ச மரம் இருக்கான்னு கேட்டதுக்கு இருக்கும் தோட்டத்திலேன்னார். விஸிட்டர்ஸ் பாஸைத் திருப்பிக் கொடுத்தால், ஒன்பது மணிக்கு பூஜை நடக்குமாம். நடக்கட்டுமேன்னு (மனசில் சொல்லிட்டு) சாலையைக் கடந்து ஹொட்டேலுக்குள் வந்தோம்.
அறைக்குத் திரும்பிவந்து ராச்சாப்பாட்டுக்கு கீழே உள்ள ரெஸ்ட்டாரண்ட்டுக்குப் போனோம். எனக்கு ஒரே ஒரு புதினா பரோட்டா. தொட்டுக்கக் கொஞ்சம் தயிர். கோபால் ஒரு வெஜிடபிள் பிரியாணி. அவர் முகம் போன போக்கிலேயே பிரியாணியின் லட்சணம் புரிஞ்சு போச்சு:(
தொடரும்......................:-)
PINகுறிப்பு: பதிவில் உள்ள சில படங்கள் கோபாலின் கைவண்ணம்.

Posted by
துளசி கோபால்
at
2/16/2011 04:58:00 AM
38
comments
Labels: 108 திவ்யதேசம், அனுபவம் Haridwar Hari ki Pauri Ganga Arti