Wednesday, December 14, 2016

யாத்திரைக்காரர்களுக்கு ஒரு வரப்ரசாதம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 106)

ரொம்பப் பக்கத்துலேதான்... கோவிலுக்குப் பின்னாடி...  ரெண்டே கிமீன்னு சொல்லிக்கிட்டாலும்....  பெரியதிருவடி போல பறந்து போனால்தான்....  கிட்டக்க....  இருக்கும் ஒருவழிப்பாதை மூலம் மேலூர் ரோடு வழியாப்போய் வலதுபக்கம் ரைட் (!)எடுத்து  கொள்ளிடக்கரைக்கு ஒட்டியே போகும் ரயில்பாதைக்குப் பக்கமாப் போனால்....  புதுக்கருக்கோடு நிக்குது யாத்ரி நிவாஸ்!  பக்தர்களுக்கான விடுதி!
ரெங்கனின் நிர்வாகத்தின் கீழ்  நடக்கும் தங்குமிடம். போனவருசமே  கோவிலாண்டை ஹொட்டேல்ஸ் ஏதும் நல்லதா இருக்கான்னு  நண்பர் வெங்கட் நாகராஜிடம் விசாரிச்சப்ப,  இதைப் பற்றிச் சொல்லி, கட்டி முடிச்சுட்டாங்கன்னு  நினைக்கிறேன். இன்னும் திறக்கலைன்னு சொல்லி இருந்தார். அதுக்கப்புறம்தான் நாம் ஹயக்ரீவாவைப் பிடிச்சுக்கிட்டோம்:-)

நேத்தைக்கு  அண்ணனிடம் செல்லில் பேசி கமலவல்லி சமாச்சாரம் சொல்லிக்கிட்டு இருந்தப்ப, 'புதுசா யாத்ரி நிவாஸ் இருக்கே அங்கே போய் தங்கி இருக்கக்கூடாதா'ன்னு  கேட்டாங்க. ரொம்ப மலிவு. நல்லாவே இருக்குன்னதும், விவரம் வாங்கிக்கிட்டேன். ஜஸ்ட் போய்த்தான்  எப்படி இருக்குன்னு பார்க்கலாமே.............

ஹயக்ரீவாவில் இருந்து சுமார் மூணரை கிமீ தூரம். கால்மணியில்  போய்ச் சேர்ந்தோம். முதல் பார்வைக்கு அட்டகாசமா இருக்கு! பார்க்கிங் இடம் கூடப் பெருசுதான்.

வரவேற்பில் போய் விசாரிச்சதுக்கு  இடம் இருக்குன்னாங்க. அறையைப் பார்க்கலாமான்னு  கேட்டதும், உடனே ஒருத்தரைக் கூப்பிட்டு, நம்மை அழைச்சுக்கிட்டுப்போய்க் காட்டச் சொன்னாங்க.
புது டவுன்ஷிப் மாதிரி தெருக்கள் பெயர், கட்டடங்களுக்குப் பெயர் எல்லாம்  வச்சுருக்காங்க. எல்லாமே ரங்கன் சம்பந்தப்பட்டப் பெயர்கள்! வரவேற்புக் கூடத்துக்கே ராமானுஜர் பெயர்தான்!

வாடகை கூட ரொம்பவே மலிவு!   அதுவும் ஒரு குழுவாப் போனா  ஆளுக்கு நூறு ரூபாயில் தங்க இடம் கிடைச்சுருது!   என்ன ஒன்னு  குழுவில்  எட்டுப்பேர் இருக்கணும்:-)

8, 10 ன்னு கட்டில்கள் போட்ட  கூடங்கள் குளியலறைகளுடன் இருக்கு.  சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட் ரூம், ஏஸி வசதியுடனோ, இல்லை ஏஸி இல்லாமலோகூட இருக்கு. நாலு படுக்கை (ரெண்டு அறைகள்)உள்ள காட்டேஜ் கூட இருக்கு. அதுக்கான வாடகை 1750 ரூதான்! ரொம்பவே மலிவு !!!

2011 ஆம் ஆண்டு  ஜூன் மாசம்,  மறைந்த முதல்வர் 'அம்மா' அடிக்கல் நாட்டி இருக்காங்க. 2014  ஜூன் மாசம்  திறந்துருக்காங்க.  செலவு 47 கோடி ரூ. தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுனதாம்.

ஒரே சமயத்துலே ஆயிரம் நபர்கள் தங்கும் வசதி!  செக்கவுட் கூட 24 மணி நேரக் கணக்கு.  ஒரு முழுநாள்!  இந்தியாவில் பல ஊர்களில் இப்படி 24 மணி நேரம் முழுசாக் கிடைக்கறதைப் பார்த்துட்டு,  மற்ற நாடுகளில்  நாளுக்கு 20  மணிதான் கணக்கு என்னும்போது கொஞ்சம் கோவம் வரத்தான் செய்யுது.

இங்கே நியூஸியில் செக்கின் சமயம் எப்படும் பகல் 2 மணி. செக்கவுட்  மறுநாள் காலை 10.  பயணத்தில் இருக்கும்போது  எப்பவும் காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு ஊர் சுத்திக்கிட்டே அடுத்த இடத்துக்குப் போறாதாலே  அவ்வளவா ப்ரச்சனை இல்லை. ஆனால்... நாட்டை விட்டுக் கிளம்பும் கடைசி நாள் என்றால்  கஷ்டம்தான்..... இன்னொரு புலம்பல் இருக்கு....   பதிவில் அப்புறம் அந்த இடத்துக்கு வரும்போது புலம்பி வைப்பேன்:-)

ஒரு டபுள் பெட்ரூமுக்குக் கூட்டிப்போய் காமிச்சார் நிவாஸின் பணியாளர்.  எனெக்கென்னமோ சுமாராத்தான் தோணுச்சு. சுவர்களில் விரிசல் விட்டுருக்கு. சரியா காங்ரீட் பூசலை போல. ஒரு  ஒன்னேகால் வருசத்துலேயே இப்படி இருந்தால் எப்படி?  அவரிடம் சுட்டிக் காமிச்சுக் கேட்டதுக்கு  சனம் பாழ் பண்ணிருதுன்னு சொன்னார். சுவரில் ஏறிக்குதிச்சா?   'பார்த்துச் சரி பண்ணுங்க.  கட்டடம் கட்டுறது பெருசுல்லெ.... மெயின்டெய்ன் பண்ணி நல்லா வச்சுக்கணுமு'ன்னு  ரெண்டு வரி சொல்லிட்டுத்தான் வந்தேன்.

ஆனால் சும்மாச் சொல்லக்கூடாது.... வெளியே  இருக்கும் தோட்டங்கள், புல்தரைகள், பூச்செடிகள் எல்லாம் அருமையா இருக்கு. நல்ல பராமரிப்புதான். இதுலே ஆட்டையைப் போட்டாச் சட்னு தெரிஞ்சுருமே :-)


பயணிகள் வசதிக்காக ஒரு கடையும் இருக்குன்னு விளம்பரம் சொல்லுது, சூப்பர் மார்கெட்டாம்!  கடை வாசலில் ஜெனரல் ஸ்டோர்னு போட்டுருந்தாங்க.

இங்கே இருக்கும் ரெஸ்ட்டாரண்டுக்கு ரெங்கவிலாஸ்னு பெயர்!  பேஷ் பேஷ்!  இதுக்கான மஞ்சள் விளம்பரம்தான் கண்ணைக் கடிச்சது:-(
கோவிலிலே இருந்து ரொம்பத் தள்ளி இருக்கோன்னு  தோணுச்சு. அப்படிப் பார்த்தால்....  திருமலையில்  எங்கெங்கெயோ  கட்டி வுட்டுட்டு,  இடம் கிடைச்சால் போதுமுன்னு  நாம் போறதை  நினைச்சுக்கிட்டேன்.  வாசலில் ஆட்டோ எப்பவும் கிடைக்குமாம். மினி பஸ் கூட இருக்குன்னாங்க. நமக்கு வாகன வசதி இருந்தால் பிரச்சனை இல்லை.  ஆனாலும்....  பொடிநடையில் கோவிலுக்கு  விடிகாலையில் போகமுடியாது. இடையில்  அப்பப்ப  அறைக்கு வந்துட்டு, உடனே திரும்பப் போகணுமுன்னு நினைக்காமல் இருந்தால் சரி.

எதுக்கும் இருக்கட்டும், தேவைப்பட்டால் பயன்படுத்திக்கலாம்.  மற்ற நண்பர்களுக்கு ஒரு தகவலாக இருக்கட்டுமேன்னுதான் எழுதி வச்சேன்.  ஆன்லைனில் அறை  புக் பண்ணிக்கலாம்.  www.srirangam.org என்ற சுட்டியில் போய் பாருங்க.
குழுவா நண்பர்கள் போனால் இதைவிடச் சிறந்த இடம் கிடைக்காது, ஆமாம்:-)

நம்மிடம் வாகனம் இருந்தால் அவ்வளவாகப் பிரச்சனை இல்லை. ஆனால்....  வாகனமில்லாதவர்களுக்கு...   இன்னும் கொஞ்சம் வசதி செஞ்சு கொடுக்கலாம். ஆட்டோ கிடைக்குதுன்னாலும் கொள்ளைக்கூட்டம் அந்த ரூபத்தில் இருக்கு. கூசாமல் 60, 70 கேக்கறாங்களாம்.  தேவஸ்தானமே ஆட்டோக்கள் வாங்கி மீட்டர் போட்டு ஓட்டலாம். இல்லைன்னா இருக்கும் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டாயம்  போட்டு ஓட்டச் சொல்லலாம்.

மினிபஸ் எண்ணிக்கைகளையும் கூட்டலாம்.  கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்களைக் கஷ்டப்படுத்தணுமான்னு ..... என்னென்னவோ  தோணல்...

இவ்ளோ சொல்றயே.... அடுத்தமுறை  நீ  இங்கே தங்குவாயான்னு  கேட்ட மனசாட்சியிடம்.... மாட்டேன்னு உண்மையைச் சொன்னேன்:-)  அவரவருக்கு ஒரு தனிப்பட்ட விருப்பம் , தேர்வு இருக்கே.........  

அடுத்த காமணியில் பெரிய கோவிலுக்கே திரும்ப வந்தோம்.  இன்னும் கொஞ்சம் சுத்திப் பார்க்கலாம். எனக்கு மூணு மணி நேரம் கெடு வச்சுட்டார் நம்மவர்:-)

தொடரும்...........:-)


Monday, December 12, 2016

சாது மிரண்டால்.............. (இந்தியப் பயணத்தொடர். பகுதி 105)

எப்பவுமே ரொம்பப் பக்கத்துலே இருக்கும் சமாச்சாரங்களுக்கு அவ்வளவா மதிப்பு கொடுப்பதில்லை நாம் என்பது(ம்) உண்மைதானே?  அதிலும் கண்ணுக்கு முன்னால் கனகம்பீரமா ஓங்கி உயர்ந்து நிற்கும் ராஜகோபுரத்துக்கு முன்னால் இதெல்லாம் எம்மாத்ரம்?
அம்மா மண்டபம் ரோடில் நம்ம ஹயக்ரீவாவில் இருந்து நாலெட்டில் ஸ்ரீநிவாசப்பெருமாள் இருக்கார். ஒவ்வொருமுறை   அந்தப் பக்கமாப் போகும்போதும் வரும்போதும்  ஒருக்காப் போய்ப் பார்க்கணுமுன்னு  தோணிக்கிட்டேதான் இருந்துச்சு.  வண்டியில் உக்கார்ந்தவுடன்,  அடுத்த நிமிட்டே  விர்னு இந்த இடத்தைத் தாண்டிப் போகும்படியா ஆகுதேன்னு...  காலையில் ஒருமுடிவுக்கு வந்தேன்.
'இட்ஸ் கோயிங் டுபீ அ லாங் டே' ன்னு என் காதுலே ஓதிக்கிட்டே இருந்தார் நம்மவர்.

சீனிவாசன் நிதானமாகக் கிளம்பட்டும்.  வண்டி ஓட்டிக்கிட்டு வரப்போறவர் இல்லையா?  நாம் அதுக்குள்ளே ரெண்டு எட்டு  இந்த ஸ்ரீநிவாசனை  தரிசனம் பண்ணிக்கிட்டு வந்துடலாமுன்னு கீழே  வந்ததும், பாலாஜி பவன் கூப்பிட்டமாதிரி இருந்துச்சு :-)  ஒரு காஃபி  இப்போதைக்குன்னு போனால் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கலாம் என்றார் நம்மவர்.  ஒருத்தர் பொங்கல் வடை, இன்னொருத்தர் தோசை வடைன்னு  காஃபியோடு முடிச்சோம்.


அடுத்த ரெண்டாவது நிமிட்டில் கோவிலுக்குள் நுழைஞ்சாச்சு. 'தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ' ஏற்று நடத்தும் கோவிலாம்!  என்னத்தை ஏற்று நடத்துறது?  உண்டியல் வசூலில் பாகம் கேட்டு வாங்கிக்கறதுதான்  பொதுவா இந்த  ஏற்று  நடத்துதல், இல்லையோ? ஒரு அசட்டையோடு எப்படின்னு விசாரிச்சால்.........


இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் வந்ததுக்குக்கூட ஒரு 'கதை' இருக்கு!

உண்மையில் இது ஒரு தனியார் மடமும் அதைச் சார்ந்த கோவிலுமாகத்தான் கடந்த 100 வருசங்களா இருந்துருக்கு.  பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம். இந்த மடத்தின் நாலாவது பட்டம்  லக்ஷ்மண  ராமானுஜ ஜீயர் ஒரு ஏழு வருசத்துக்கு முன்னே (2009) காணாமப் போயிட்டார்.


அவரைக் காணோமுன்னு போலிஸில் புகார் கொடுத்துருக்காங்க. மடத்துக்கு சொத்து வேற ஒரு அம்பது கோடிக்கு இருக்கு என்பதால்....  யாரோ என்னமோ பண்ணிட்டாங்கன்னு  ஒரு பயம்.  ஆளைக் காணோமுன்னதும்  சிபிசிஐடிக்கு  இவரைத்  தேடிக் கொண்டுவரச்சொல்லி கோர்ட்டில் உத்தரவாகி  இருக்கு.
தேடோதேடோன்னு தேடி  ஒரு மூணு மாசம் கழிச்சு  இவர் கொல்கத்தாவில் இருப்பதைக் கண்டுபிடிச்சுக் கூட்டி வந்து கோர்ட்டில் ஒப்படைச்சுருக்காங்க.
என்ன ஆச்சுன்னு இவராண்டை விசாரிச்சால்....  'எனக்கு  வரவரத் தள்ளலை. வயசு 87 ஆகுது. மடமும் வேணாம் ஒன்னும் வேணாம்.... நான் சொந்த ஊருக்குப் போயி அங்கேயே இருக்கப்போறேன்'னு சொல்லிட்டார்.

 போறவங்களை இழுத்து நிறுத்தவா முடியும்?

இப்படித்தான் தனியார் மடங்கள்  ஏகப்பட்டவை  இந்தியா முழுக்க இருக்கு. நானும் சிலபல மடங்களுக்கு ஐ மீன் மடங்கள் நடத்தும் கோவில்களுக்குப் போயிருக்கேன். சிலது  ஏகப்பட்ட சொத்துக்களோடு பெரிய அளவில் நடக்குதுன்னாலும்.... பல மடங்கள் கொஞ்சம் ஏழ்மை நிலையில் இருப்பதையும் பார்த்துருக்கேன்.  சொத்து இருக்கும்  மடங்களில் வாரிசுகள்தான் அடுத்த தலைமை!   வாரிசு அரசியல் மாதிரி     வாரிசு மடங்கள்........   ஒன்னும் சொல்றதுக்கில்லை போங்க :-(
  
ஜீயர் புறப்பட்டுப் போனதும் சிஷ்யர்களே மடத்தைத் தொடர்ந்து நடத்திக்கிட்டு இருந்துருக்காங்க. ஆனா....   நிர்வகிக்க முடியலையோ.... இல்லை நடத்தத்    தெரியலையோ...    ஒன்னும் சரியா நடக்காம...  கோவில் பூஜைகள் எல்லாம் முடங்கி இருந்துருக்கு.
எல்லாக்  கோவில்களுக்கும் அததுக்குரிய பக்தர்கள்  இருப்பாங்கதானே....   அவுங்க புகார் கொடுத்துருக்காங்க. பக்தர்களுக்காகக் கோவிலைத் திறக்கச் சொல்லிருச்சு கோர்ட்.  அப்புறம் சரியாச்சோ  என்னமோ.......  அடுத்த மூணவது வருசம்  தமிழ் நாடு அரசின் அறநிலையத்துறை கோவிலைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கிட்டு, மடத்தை நிர்வாகம் பண்ண  ஒரு அதிகாரியையும் நியமிச்சுருக்காங்க.
மடத்துலே சமையல் பொறுப்பில் இருந்தவருக்கு இதெல்லாம் பிடிக்கலை. அவர் பெயர் பத்ரி நாராயணன் என்று செய்தியில் தெரிந்தது. அதிகாரியோடு தகராறு செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். கொலை மிரட்டல் விட்டாருன்னு ஜெயிலிலும் பிடிச்சுப் போட்டாங்களாம்.

ஒரு மூணுநாலு மாசம் கழிச்சு ஒரு நாள்  ஒரு ஆம்புலன்ஸ்லே  ஜீயருடைய உடலோடு மடத்துக்கு வந்து,  இங்கே  உடலை பக்தர்கள் பார்வைக்கு வைக்கணுமுன்னு  சொல்ல, அதிகாரி அதை மறுத்துருக்கார்.  கோவிலுக்குள் வைக்கப்டாதுன்னதும்,  இது   இப்ப மடம் என்றாலும்கூட, ஜீயருடைய சொந்த வீடுதான். இங்கேதான்  வைக்கணுமுன்னு  இவர்    சொல்ல...     முடியாதுன்னு பழையபடி தகராறு......


கொல்கத்தாவில் இறந்த ஜீயரை,  திருச்சிவரை விமானத்தில் கொண்டு வந்துருந்தாராம் பத்ரி நாராயணன். அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன்!   அனுமதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன்னு பத்ரி தன் வீட்டுக்கு    எதிரில்   நடுத்தெருவில்  ஆம்புலன்ஸை நிறுத்தி வச்சு போராட்டம். போலிஸ் கமிஷனர், கலெக்டர் வரை விவகாரம் போய் பேச்சு வார்த்தை நடத்தி,  மடத்து வாசலில் ஆம்புலன்ஸிலேயே ஜீயர்  உடலை வச்சு  அஞ்சு நிமிசம் மரியாதை செஞ்சுக்கலாமுன்னு சொல்லி அதுபோல ஆச்சாம்.  பாவம்.... அந்த ஜீயர்....  இந்தப் போராட்டங்களால் முப்பது மணி நேரம் நடுத்தெருவில் இருக்கும்படியா  அவருக்கு  விதி.....  கர்மா விடறதில்லை..........

அப்புறம் கொள்ளிடக் கரையில் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் சமாதி ஆச்சு.
ச்சும்மா தரிசனத்துக்குப் போனவளுக்கு  த்ரில்லர் கதை  கிடைச்சது பாருங்க.......
பெருமாளைக் கும்பிட்டுக்கிட்டுக் கோவிலை வலம் வந்தோம்.  வீடு போலத்தான் இருக்கு ....   ஒரு இடத்தில் விளக்குகள் வச்சுருக்காங்க.  நெய்விளக்குகள். வாங்கி ஏத்திக்கலாம். விளக்குப் போடுவதன் பயன்கள், என்றைக்கு,  எதுக்குன்னெல்லாம்  விவரிக்கும் தகவல்கள்  வேற!  விளக்கு எண்ணிக்கையும் பலனும்தான் இதுவரை வேற கோவில்களில் பார்த்துருக்கேன். இப்பப் புதுசா இது!
தினம்  சாயங்காலம்  அஞ்சே காலுக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் இருக்காம். தெரியாமப்போச்சு. ஒருநாளாவது  வந்து  கலந்துக்கிட்டு இருக்கலாம்........  போகட்டும்... அடுத்த முறைக்கு நினைவில் வச்சுக்கணும்.
காலை 6 முதல் 12, மாலை 4 முதல் எட்டு வரை கோவில் திறந்துருக்கும். இப்படி ஒரு இடத்திலும்  காலை 10.30க்கு நடை அடைப்புன்னு இன்னொரு இடத்திலும் இருக்கு. மடத்தின் பொறுப்பில் இருந்தப்ப  சீக்கிரம் நடை அடைப்பாக இருந்திருக்கலாம்.

தினந்தோறும் நடக்கும் ஸேவைகள்ன்னு  கரும்பலகையில் எழுதிப்போட்டுருந்தாங்க. வெள்ளிக்கவசம்   , முத்தங்கி, ஸ்ரீநிவாச அலங்காரம், நேத்ர ஸேவா, நிஜபாத தரிசன ஸேவான்னு.....    திருப்பதியின் தள்ளு முள்ளு இல்லாம நிம்மதியா ஸேவிக்க முடியும் இங்கே!
ஆகட்டும்.... அடுத்த முறை கிடைக்கணும் பெருமாளே!

சரி வாங்க கொள்ளிடக்கரை  போகலாம்.......

தொடரும்......  :-)


Friday, December 09, 2016

அம்மா சொன்னதுதான் சட்டம் இங்கே..... இந்தியப் பயணத்தொடர். பகுதி 104)

"அந்த வீட்டுலே நடக்கறது  ஒன்னுவிடாம இந்த வீட்டுலேயும் நடந்தாகணும். இங்கே நான் வச்சதுதான் சட்டம்....... "

வீட்டு மாப்பிள்ளையா வந்தவர் வாயைத் திறந்து   மென்னு முழுங்கி .........

 "அப்படியேவா?"

"ஆமாம்....."

ஐயோ....  ஊரு உலகம் என்னா சொல்லும்... (மைண்ட் வாய்ஸ்)

"ஏம்மா  என்னதான் இது உன் வீடுன்னாலும்  பெரிய வீட்டுலே நடப்பதைப்போல இங்கேயும் நடத்த முடியுமா?  கொஞ்சம் யோசிச்சுப் பாரேன்......."

"ம்ம்ம்   சரி. போனாப்போட்டும் அதுலே பாதிக்குப் பாதியாவது இங்கே நடந்தாகணும். ஆமா..."  நியாயஸ்த்தி இல்லையோ!!!

"ஆகட்டும்... அப்படியே பண்ணினால் ஆச்சு.  கோச்சுக்காதே என் கமலவல்லி...."

 பெரிய வீட்டில் பகல்பத்து, ராப்பத்துன்னு  ஜேஜேன்னு இருக்கும்போது....  இங்கே பகல் அஞ்சு ரா அஞ்சுன்னு ஆச்சு. ஆனால் ஒன்னு... அங்கே நடக்கும் சமயம் இங்கேயுமுன்னு கூட்டத்தில் 'கோவிந்தா' போட மாட்டேன். என் வழி தனி வழின்னாங்க தாயார் :-)

வைகுண்ட ஏகாதசிக்குப் பெரிய கோவிலில் விழா!  சொர்கவாசல் திறந்து பெருமாள் வருவார்!  வரட்டுமே.....  இங்கே?

மார்கழிக்கு அங்கேன்னா மாசிக்கு இங்கே!  அதே ஏகாதசிக்கு...

சொர்கவாசல் திறந்து  கமலவல்லித்தாயார்  அதன் வழியா வெளியே வர்றாங்க!  அடடா....  கூடவே பெருமாளும் வரப்டாதோ?  ஊஹூம்....  பெருமாளின் உற்சவர்கூட  இங்கே கிடையாதாக்கும்!   திருமஞ்சனம் மொதக்கொண்டு அங்கே பெரிய பெருமாளுக்கு நடக்கும் எல்லா விசேஷமும் இங்கே தாயாருக்குத்தான் என்பது இன்னுமொரு விசேஷம்!

அங்கெல்லாம்  வருசம் ஒருநாள் சொர்கவாசல் திறப்புன்னா... இங்கே ஏகாதசிக்குத் திறந்ததோடு  அடுத்த நாலுநாளைக்கும் சொர்கமே சொர்கம்தான்!

மாசி மாசம் விழான்னு  ஏற்பாடுகள் இருந்தாலும் சில சமயம் தை மாசமே கொண்டாடுவதும் உண்டு. நமக்குக்கிடைச்ச அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன்....   இந்த வருசத்து விழா  தை யில்!  இன்றைக்கு தை மாசம் 25 ஆம்தேதி.  விழா இன்றோடு கடைசி(யாம்!)
இந்த விவரம் ஒன்னுமே தெரியாமல் இதோ தாயார் வீட்டுக்குன்னு கிளம்பி வந்துருக்கோம்! வாசலில் வாழை மரம் கட்டி, மாவிலை தோரணம்! அடன்னு கண்ணைத் திருப்பினால்..........  விழா விவரம்!
'அடிச்சேன் ப்ரைஸ்'ன்னு  உள்ளே காலடி எடுத்து வைக்கிறேன்....  கோபுர வாசலிலேயே   கூட்டம்!   அரையர்கள் முன்செல்ல இதோ  ஆழ்வார்கள்  கண்ணெதிரில் வந்துக்கிட்டு இருக்காங்க. ஹைய்யோ!!!!





பிரகாரம் வலம் வந்து  அவுங்களுக்குன்னு போட்டு வச்சுருக்கும் இடத்தில் உக்கார்ந்தாங்க. நேரெதிரா  மண்டபத்துத் திண்ணை!  ஓடிப்போய் அங்கே உக்கார்ந்தேன்:-)
 உள்ளூர் மக்கள்ஸிடம் விழாவைப் பத்திக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது மகிழ்ச்சிதான்!
மங்கள இசையா தவிலும் நாதஸ்வரமும் இழைய  நமக்கு இடப்பக்கம் இருக்கும்  திருவாய்மொழி மண்டபம் கடந்து தாயார் கமலவல்லி நாச்சியார் தங்கக்குடையின் கீழ் உக்கார்ந்து  ஜாம்ஜாமுன்னு  கிளம்பி வர்றாங்க.  பரமபதவாசல் வழியா வர்றாங்களாம்! ஹைய்யோ....  என்ன கம்பீரம்!

அடடா!  நமக்குத் தெரியாமப் போச்சேன்ற ஆதங்கம்தான்....

ஆழ்வார்களை சந்திச்சு, அவுங்களுக்கு அனுக்ரகம் செஞ்சுட்டு, பிரகாரத்துக்குள்ளேயே கோபுரவாசல் வரை போய் திரும்பி வந்தாங்க. ஒருமாதிரி மேளம் ஒன்னு இடைக்கா இசைபோல டுகு டுகுன்னு  லேசா இசைக்க  சிலவிதமான நடைகள் போட்டாங்க ஸ்ரீபாதம் தாங்கும் இளைஞர்கள்!

முதல்முறையா இதெல்லாம் நமக்கு(ம்) லபிச்சுருக்கே !  திருவாய்மொழி மண்டபத்துக்குத் தாயார் திரும்பி  தமக்கான ஆசனத்தில் போய் உக்கார்ந்தாங்க. திரைபோட்டுட்டு மற்ற ஏற்பாடுகள் நடக்குது. அதுவரை ச்சும்மா அங்கே ஏன் நிக்கணுமுன்னு நாங்க மூலவரை தரிசனம் செய்யப்போனோம்.
அழகியமணவாளப்பெருமாள், முத்தங்கியில் ரொம்ப கம்பீரமாகவும் அதே  சமயம் கொஞ்சூண்டு பவ்யமாகவும் நிக்கறாரோ!!!! அவருக்கு வலப்பக்கம் அதே கம்பீரத்துக்குக் கொஞ்சமும் குறையாமல் தன் சொந்தவீட்டுலே உக்கார்ந்திருக்கும் மதிப்போடு தாயார்!
மேலே : சுட்ட படம்.

சந்நிதியில் கூட்டமே இல்லை. நாலைஞ்சு பேர்தான். மொத்தக் கூட்டமும் விழா நடக்கும் பிரகாரத்தில்!

மொத்தக் கோவிலுமே தாயாருக்கானது என்பதால்  வழக்கமாப் பெருமாள் கோவில்களில் இருக்கும் தாயார் சந்நிதி இங்கே கிடையாது!  அதானே....  கோவிலேகூட தாயார் பெயரில்தானே இருக்கு, இல்லையோ!  கமலவல்லி நாச்சியார் திருக்கோவில்!
நிம்மதியா தரிசனம் முடிச்சுக்கிட்டு,  கோவிலை வலம் வர்றோம்.  பிரகாரத்தில் நடக்கும்போது இடதுபக்க வெளியில் கோவில் திருக்குளம்.  நிறையப் படிகள் இறங்கிப்போக வேணும். இருக்கட்டுமுன்னு மேலே இருந்தே க்ளிக்ஸ்.
விழாக்கால சந்தடி எதுவும் காதுக்கெட்டாத இடம்! நிம்மதியா ஒருவர்  வாசிப்பில் இருந்தார்!  கேமெரா க்ளிக் சப்தம் அவர் கவனத்தைக் கலைச்சுருச்சே.....   :-(
 இங்கேருந்து, விமான தரிசனம் கிடைக்கும். ஆச்சு நமக்கும்.  திரும்பப் பிரகாரத்துக்குள் வந்து வலம் தொடர்கிறோம்.  சேர்த்தி மண்டபம்  பிரகாரங்கள் சேரும் ஒரு  மூலையில். ஸ்ரீரங்கத்துலே நம்ம ரங்கநாயகித் தாயாரின் சேர்த்தி சேவைக்கு முந்தினநாள் (முந்தினநாளே!) நம்பெருமாள்  இங்கே  எழுந்தருளி இங்கத்து சேர்த்தி சேவையை முடிச்சுக்கிட்டு,  நடுநிசிக்கு முன்னே அரக்கப்பரக்க சீரங்கம் போய்ச் சேர்ந்துருவாராம்:-)

இந்தக் கோவிலைப்பற்றி முந்தி  எழுதியது  இங்கே. நேரம் இருந்தால் பாருங்கள்.


 திடீர்னு கண்முன்னே திறந்து கிடக்கும் சொர்கவாசல்!  ஹைய்யோன்னு பாய்ஞ்சு போனேன்.  இதைத் தொட்டடுத்து இருக்கும் யாகசாலையில்  யாகம் நடந்துக்கிட்டு இருந்தது.  எனக்கு அதுவா முக்கியம்?

'அதென்னடீயம்மா கமலவல்லி,  நீ மாத்திரம்  சொர்கவாசல் கடந்து போறது?  நான் அப்படி இல்லேம்மா....   கோபாலோடு சேர்ந்தேதான் கடப்பேன்'னு பூலோகத்துக்கும் வைகுண்டத்துக்குமா  அஞ்சாறுமுறை போய் வந்தேன்.  போய்வந்ததுக்கு சாட்சி? இதோ இந்த க்ளிக்ஸ்தான்:-)



முதலில் கூட்டம்போட்டு நின்ன சனம்  அந்தாண்டை திருவாய்மொழி மண்டபத்தாண்டை போனதும் இங்கே  மூவரும் ஏகாந்தமா விஸ்ராந்தியா இருந்தாங்க.

நம்மாழ்வார் திருப்பாணாழ்வார் திருமங்கை ஆழ்வார்

அங்கே போட்டுருந்த திரை விலகி, நம்ம தாயாருக்குத் திருமஞ்சனம் ஆரம்பிச்சது!  அதென்னவோ   வாட்டர்ப்ரூஃப் போல ஒரு சமாச்சாரம் போர்த்திட்டு ஆரம்பிச்சாங்க. அண்டா அண்டாவா   குண்டா குண்டாவா.....
 சாம்பிராணிப் புகை, தேவலோக ஸீன் காட்ட........ வரிசையா   சீர்வரிசைகள் தாயாருக்குச் சமர்ப்பிச்சு..... தாம்பாளம் தாம்பாளமா இந்தப் பக்கம்  வர.......  எல்லாமே எனக்குப் புதுமை!

பார்க்கக் கிடைச்சதே பாக்கியம்! சின்னச் சின்னதா ஒரு நாலு வீடியோ க்ளிப்ஸ் எடுத்தேன். அவைகளை ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுருக்கேன்.
 இங்கேயும்  சேர்த்தாச்சு.  பார்க்கமுடியுதான்னு  பார்த்துச் சொல்லுங்க.

மணி எட்டானதும் நம்மவர் ஆரம்பிச்சுட்டார்.

  "எல்லாம் முடிய பத்துமணி ஆகிருமாம். அதுவரைக்குமா இருக்கப்போறே?"

"காலையில் இருந்து சுத்திக்கிட்டே இருக்கோம்.  இப்படி அலைஞ்சால் உடம்புக்கு ஆகாது."

"  ரொம்ப டயர்டா இருக்கு. போய் சாப்பிடணும். நேரமானா  அங்கே ஒன்னும் கிடைக்காது  "

அஸ்திரத்துக்கு மேலே அஸ்திரம் போட்டுக்கிட்டே இருந்தால்  எப்படி?

சரின்னு முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டுக் கிளம்பினதைப் பார்த்ததும்....  'வா. மூலவரை இன்னொருமுறை போய் கும்பிட்டுக்கலாம்' என்றார்.  அங்கே போனால் அழகு சொட்டச் சொட்ட ரெண்டுபேரும்!  என் கோபமெல்லாம் போயே போச்சு. :-)

'மாசிமாசத் திருவிழாவைத் தை மாசம் நடத்தி என் கண்ணுலே காமிச்சதுக்கு  எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியாமத் தவிக்கிறேண்டா.....   போயிட்டு வரேன்' னு கும்பிட்டு முடிச்சு வெளியே வந்தால்  புதுசா ஒரு  முழுப் பலாப்பழத்தை நறுக்கிக்கிட்டு இருக்கார் ஒருத்தர்.  முதல் துண்டு எனக்குன்னு  கொஞ்சம் வாங்கிக்கிட்டேன்.  இப்படி ஃப்ரெஷா தின்னுதான் எவ்ளோ வருஷம் ஆச்சு!
வாசலில் வச்சுருந்த  கோவில் விழா நிகழ்ச்சியை இன்னொருக்கா க்ளிக்கலாமுன்னு போய்ப் பார்த்தால்  அறிவிப்பின்படி  நேத்து  ஏழாம்தேதியோட சொர்கவாசல் திறப்பு முடியுது. அப்புறம் இன்றைக்கு (எட்டாம் தேதி) எப்படி?  நமக்கான ஸ்பெஷலோ!
பெருமாளே.... பெருமாளே....

ஹயக்ரீவா வந்து சேர்ந்தப்ப மணி எட்டே முக்கால். ரூம் சர்வீஸா  அதே ரெண்டு இட்லி.

தொடரும்............  :-)