Wednesday, December 14, 2016

யாத்திரைக்காரர்களுக்கு ஒரு வரப்ரசாதம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 106)

ரொம்பப் பக்கத்துலேதான்... கோவிலுக்குப் பின்னாடி...  ரெண்டே கிமீன்னு சொல்லிக்கிட்டாலும்....  பெரியதிருவடி போல பறந்து போனால்தான்....  கிட்டக்க....  இருக்கும் ஒருவழிப்பாதை மூலம் மேலூர் ரோடு வழியாப்போய் வலதுபக்கம் ரைட் (!)எடுத்து  கொள்ளிடக்கரைக்கு ஒட்டியே போகும் ரயில்பாதைக்குப் பக்கமாப் போனால்....  புதுக்கருக்கோடு நிக்குது யாத்ரி நிவாஸ்!  பக்தர்களுக்கான விடுதி!
ரெங்கனின் நிர்வாகத்தின் கீழ்  நடக்கும் தங்குமிடம். போனவருசமே  கோவிலாண்டை ஹொட்டேல்ஸ் ஏதும் நல்லதா இருக்கான்னு  நண்பர் வெங்கட் நாகராஜிடம் விசாரிச்சப்ப,  இதைப் பற்றிச் சொல்லி, கட்டி முடிச்சுட்டாங்கன்னு  நினைக்கிறேன். இன்னும் திறக்கலைன்னு சொல்லி இருந்தார். அதுக்கப்புறம்தான் நாம் ஹயக்ரீவாவைப் பிடிச்சுக்கிட்டோம்:-)

நேத்தைக்கு  அண்ணனிடம் செல்லில் பேசி கமலவல்லி சமாச்சாரம் சொல்லிக்கிட்டு இருந்தப்ப, 'புதுசா யாத்ரி நிவாஸ் இருக்கே அங்கே போய் தங்கி இருக்கக்கூடாதா'ன்னு  கேட்டாங்க. ரொம்ப மலிவு. நல்லாவே இருக்குன்னதும், விவரம் வாங்கிக்கிட்டேன். ஜஸ்ட் போய்த்தான்  எப்படி இருக்குன்னு பார்க்கலாமே.............

ஹயக்ரீவாவில் இருந்து சுமார் மூணரை கிமீ தூரம். கால்மணியில்  போய்ச் சேர்ந்தோம். முதல் பார்வைக்கு அட்டகாசமா இருக்கு! பார்க்கிங் இடம் கூடப் பெருசுதான்.

வரவேற்பில் போய் விசாரிச்சதுக்கு  இடம் இருக்குன்னாங்க. அறையைப் பார்க்கலாமான்னு  கேட்டதும், உடனே ஒருத்தரைக் கூப்பிட்டு, நம்மை அழைச்சுக்கிட்டுப்போய்க் காட்டச் சொன்னாங்க.
புது டவுன்ஷிப் மாதிரி தெருக்கள் பெயர், கட்டடங்களுக்குப் பெயர் எல்லாம்  வச்சுருக்காங்க. எல்லாமே ரங்கன் சம்பந்தப்பட்டப் பெயர்கள்! வரவேற்புக் கூடத்துக்கே ராமானுஜர் பெயர்தான்!

வாடகை கூட ரொம்பவே மலிவு!   அதுவும் ஒரு குழுவாப் போனா  ஆளுக்கு நூறு ரூபாயில் தங்க இடம் கிடைச்சுருது!   என்ன ஒன்னு  குழுவில்  எட்டுப்பேர் இருக்கணும்:-)

8, 10 ன்னு கட்டில்கள் போட்ட  கூடங்கள் குளியலறைகளுடன் இருக்கு.  சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட் ரூம், ஏஸி வசதியுடனோ, இல்லை ஏஸி இல்லாமலோகூட இருக்கு. நாலு படுக்கை (ரெண்டு அறைகள்)உள்ள காட்டேஜ் கூட இருக்கு. அதுக்கான வாடகை 1750 ரூதான்! ரொம்பவே மலிவு !!!

2011 ஆம் ஆண்டு  ஜூன் மாசம்,  மறைந்த முதல்வர் 'அம்மா' அடிக்கல் நாட்டி இருக்காங்க. 2014  ஜூன் மாசம்  திறந்துருக்காங்க.  செலவு 47 கோடி ரூ. தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுனதாம்.

ஒரே சமயத்துலே ஆயிரம் நபர்கள் தங்கும் வசதி!  செக்கவுட் கூட 24 மணி நேரக் கணக்கு.  ஒரு முழுநாள்!  இந்தியாவில் பல ஊர்களில் இப்படி 24 மணி நேரம் முழுசாக் கிடைக்கறதைப் பார்த்துட்டு,  மற்ற நாடுகளில்  நாளுக்கு 20  மணிதான் கணக்கு என்னும்போது கொஞ்சம் கோவம் வரத்தான் செய்யுது.

இங்கே நியூஸியில் செக்கின் சமயம் எப்படும் பகல் 2 மணி. செக்கவுட்  மறுநாள் காலை 10.  பயணத்தில் இருக்கும்போது  எப்பவும் காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு ஊர் சுத்திக்கிட்டே அடுத்த இடத்துக்குப் போறாதாலே  அவ்வளவா ப்ரச்சனை இல்லை. ஆனால்... நாட்டை விட்டுக் கிளம்பும் கடைசி நாள் என்றால்  கஷ்டம்தான்..... இன்னொரு புலம்பல் இருக்கு....   பதிவில் அப்புறம் அந்த இடத்துக்கு வரும்போது புலம்பி வைப்பேன்:-)

ஒரு டபுள் பெட்ரூமுக்குக் கூட்டிப்போய் காமிச்சார் நிவாஸின் பணியாளர்.  எனெக்கென்னமோ சுமாராத்தான் தோணுச்சு. சுவர்களில் விரிசல் விட்டுருக்கு. சரியா காங்ரீட் பூசலை போல. ஒரு  ஒன்னேகால் வருசத்துலேயே இப்படி இருந்தால் எப்படி?  அவரிடம் சுட்டிக் காமிச்சுக் கேட்டதுக்கு  சனம் பாழ் பண்ணிருதுன்னு சொன்னார். சுவரில் ஏறிக்குதிச்சா?   'பார்த்துச் சரி பண்ணுங்க.  கட்டடம் கட்டுறது பெருசுல்லெ.... மெயின்டெய்ன் பண்ணி நல்லா வச்சுக்கணுமு'ன்னு  ரெண்டு வரி சொல்லிட்டுத்தான் வந்தேன்.

ஆனால் சும்மாச் சொல்லக்கூடாது.... வெளியே  இருக்கும் தோட்டங்கள், புல்தரைகள், பூச்செடிகள் எல்லாம் அருமையா இருக்கு. நல்ல பராமரிப்புதான். இதுலே ஆட்டையைப் போட்டாச் சட்னு தெரிஞ்சுருமே :-)


பயணிகள் வசதிக்காக ஒரு கடையும் இருக்குன்னு விளம்பரம் சொல்லுது, சூப்பர் மார்கெட்டாம்!  கடை வாசலில் ஜெனரல் ஸ்டோர்னு போட்டுருந்தாங்க.

இங்கே இருக்கும் ரெஸ்ட்டாரண்டுக்கு ரெங்கவிலாஸ்னு பெயர்!  பேஷ் பேஷ்!  இதுக்கான மஞ்சள் விளம்பரம்தான் கண்ணைக் கடிச்சது:-(
கோவிலிலே இருந்து ரொம்பத் தள்ளி இருக்கோன்னு  தோணுச்சு. அப்படிப் பார்த்தால்....  திருமலையில்  எங்கெங்கெயோ  கட்டி வுட்டுட்டு,  இடம் கிடைச்சால் போதுமுன்னு  நாம் போறதை  நினைச்சுக்கிட்டேன்.  வாசலில் ஆட்டோ எப்பவும் கிடைக்குமாம். மினி பஸ் கூட இருக்குன்னாங்க. நமக்கு வாகன வசதி இருந்தால் பிரச்சனை இல்லை.  ஆனாலும்....  பொடிநடையில் கோவிலுக்கு  விடிகாலையில் போகமுடியாது. இடையில்  அப்பப்ப  அறைக்கு வந்துட்டு, உடனே திரும்பப் போகணுமுன்னு நினைக்காமல் இருந்தால் சரி.

எதுக்கும் இருக்கட்டும், தேவைப்பட்டால் பயன்படுத்திக்கலாம்.  மற்ற நண்பர்களுக்கு ஒரு தகவலாக இருக்கட்டுமேன்னுதான் எழுதி வச்சேன்.  ஆன்லைனில் அறை  புக் பண்ணிக்கலாம்.  www.srirangam.org என்ற சுட்டியில் போய் பாருங்க.
குழுவா நண்பர்கள் போனால் இதைவிடச் சிறந்த இடம் கிடைக்காது, ஆமாம்:-)

நம்மிடம் வாகனம் இருந்தால் அவ்வளவாகப் பிரச்சனை இல்லை. ஆனால்....  வாகனமில்லாதவர்களுக்கு...   இன்னும் கொஞ்சம் வசதி செஞ்சு கொடுக்கலாம். ஆட்டோ கிடைக்குதுன்னாலும் கொள்ளைக்கூட்டம் அந்த ரூபத்தில் இருக்கு. கூசாமல் 60, 70 கேக்கறாங்களாம்.  தேவஸ்தானமே ஆட்டோக்கள் வாங்கி மீட்டர் போட்டு ஓட்டலாம். இல்லைன்னா இருக்கும் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டாயம்  போட்டு ஓட்டச் சொல்லலாம்.

மினிபஸ் எண்ணிக்கைகளையும் கூட்டலாம்.  கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்களைக் கஷ்டப்படுத்தணுமான்னு ..... என்னென்னவோ  தோணல்...

இவ்ளோ சொல்றயே.... அடுத்தமுறை  நீ  இங்கே தங்குவாயான்னு  கேட்ட மனசாட்சியிடம்.... மாட்டேன்னு உண்மையைச் சொன்னேன்:-)  அவரவருக்கு ஒரு தனிப்பட்ட விருப்பம் , தேர்வு இருக்கே.........  

அடுத்த காமணியில் பெரிய கோவிலுக்கே திரும்ப வந்தோம்.  இன்னும் கொஞ்சம் சுத்திப் பார்க்கலாம். எனக்கு மூணு மணி நேரம் கெடு வச்சுட்டார் நம்மவர்:-)

தொடரும்...........:-)


10 comments:

said...

அரசின் தங்குமிடங்களில் பராமரிப்பு இருப்பதில்லை. பராமரிப்புக்கு என செலவு காண்பித்து அதை முழுங்க ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது. வெளிப் பார்வைக்கு நன்றாகத்தான் இருக்கிறது.

சில மாநிலங்களின் பிரதான அரசு தங்குமிடமான Circuit House கூட பராமரிப்பு இல்லாமல் தான் இருக்கிறது - மழை பெய்து உள்ளுக்குள் ஈரம் பரவி பூஞ்சையுடன் உள்ள சுவர்களோடு பல்லிளிக்கும்! இத்தனைக்கும் அங்கே முதல்வர்கள், அமைச்சர்கள் தங்குவதுண்டு. அவர்கள் வரும் நேரத்தில் சுண்ணாம்பு/White wash அடித்து மறைத்து விடுவார்கள்!

said...

குடில்களுக்கு வைக்கப்பட்டுள்ள பொருத்தமான பெயர்கள்.

said...

அருமை. நன்றி. தொடர்கிறேன்.

said...

"வாலைப் பிடித்துக்கிட்டோம்" :)

said...

சுவர்களில் விரிசல் விட்டுருக்கு. சரியா காங்ரீட் பூசலை போல சரியாக புரியவில்லையே! பிராப்பளம் வேறு எங்கோ.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அரசு சமாச்சாரம் அட்டகாசமா இருக்கணும். ஆனால்.... நம்ம நாட்டில் அரசுன்னாவே ஒரு மெத்தனம் வந்துருது.... சுதந்திரம் & ஜனநாயகத்தைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்ட மக்கள் :-(

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அழகு பெயரில் மட்டும்தான். இன்னும் சிறப்பாகப் பராமரிக்கலாம்.... ப்ச :-(

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றீஸ்.

said...

வாங்க மாதேவி.

அப்படியே பிடிச்சுக்குங்க.... மெள்ள மெள்ளத் தூக்கி விடுவோம்:-)

said...

வாங்க குமார்.

ஒருவேளை.. அஸ்திவாரத்துலே ஆட்டையைப் போட்டுட்டாங்களோ என்னவோ.......