Monday, December 12, 2016

சாது மிரண்டால்.............. (இந்தியப் பயணத்தொடர். பகுதி 105)

எப்பவுமே ரொம்பப் பக்கத்துலே இருக்கும் சமாச்சாரங்களுக்கு அவ்வளவா மதிப்பு கொடுப்பதில்லை நாம் என்பது(ம்) உண்மைதானே?  அதிலும் கண்ணுக்கு முன்னால் கனகம்பீரமா ஓங்கி உயர்ந்து நிற்கும் ராஜகோபுரத்துக்கு முன்னால் இதெல்லாம் எம்மாத்ரம்?
அம்மா மண்டபம் ரோடில் நம்ம ஹயக்ரீவாவில் இருந்து நாலெட்டில் ஸ்ரீநிவாசப்பெருமாள் இருக்கார். ஒவ்வொருமுறை   அந்தப் பக்கமாப் போகும்போதும் வரும்போதும்  ஒருக்காப் போய்ப் பார்க்கணுமுன்னு  தோணிக்கிட்டேதான் இருந்துச்சு.  வண்டியில் உக்கார்ந்தவுடன்,  அடுத்த நிமிட்டே  விர்னு இந்த இடத்தைத் தாண்டிப் போகும்படியா ஆகுதேன்னு...  காலையில் ஒருமுடிவுக்கு வந்தேன்.
'இட்ஸ் கோயிங் டுபீ அ லாங் டே' ன்னு என் காதுலே ஓதிக்கிட்டே இருந்தார் நம்மவர்.

சீனிவாசன் நிதானமாகக் கிளம்பட்டும்.  வண்டி ஓட்டிக்கிட்டு வரப்போறவர் இல்லையா?  நாம் அதுக்குள்ளே ரெண்டு எட்டு  இந்த ஸ்ரீநிவாசனை  தரிசனம் பண்ணிக்கிட்டு வந்துடலாமுன்னு கீழே  வந்ததும், பாலாஜி பவன் கூப்பிட்டமாதிரி இருந்துச்சு :-)  ஒரு காஃபி  இப்போதைக்குன்னு போனால் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கலாம் என்றார் நம்மவர்.  ஒருத்தர் பொங்கல் வடை, இன்னொருத்தர் தோசை வடைன்னு  காஃபியோடு முடிச்சோம்.


அடுத்த ரெண்டாவது நிமிட்டில் கோவிலுக்குள் நுழைஞ்சாச்சு. 'தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ' ஏற்று நடத்தும் கோவிலாம்!  என்னத்தை ஏற்று நடத்துறது?  உண்டியல் வசூலில் பாகம் கேட்டு வாங்கிக்கறதுதான்  பொதுவா இந்த  ஏற்று  நடத்துதல், இல்லையோ? ஒரு அசட்டையோடு எப்படின்னு விசாரிச்சால்.........


இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் வந்ததுக்குக்கூட ஒரு 'கதை' இருக்கு!

உண்மையில் இது ஒரு தனியார் மடமும் அதைச் சார்ந்த கோவிலுமாகத்தான் கடந்த 100 வருசங்களா இருந்துருக்கு.  பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம். இந்த மடத்தின் நாலாவது பட்டம்  லக்ஷ்மண  ராமானுஜ ஜீயர் ஒரு ஏழு வருசத்துக்கு முன்னே (2009) காணாமப் போயிட்டார்.


அவரைக் காணோமுன்னு போலிஸில் புகார் கொடுத்துருக்காங்க. மடத்துக்கு சொத்து வேற ஒரு அம்பது கோடிக்கு இருக்கு என்பதால்....  யாரோ என்னமோ பண்ணிட்டாங்கன்னு  ஒரு பயம்.  ஆளைக் காணோமுன்னதும்  சிபிசிஐடிக்கு  இவரைத்  தேடிக் கொண்டுவரச்சொல்லி கோர்ட்டில் உத்தரவாகி  இருக்கு.
தேடோதேடோன்னு தேடி  ஒரு மூணு மாசம் கழிச்சு  இவர் கொல்கத்தாவில் இருப்பதைக் கண்டுபிடிச்சுக் கூட்டி வந்து கோர்ட்டில் ஒப்படைச்சுருக்காங்க.
என்ன ஆச்சுன்னு இவராண்டை விசாரிச்சால்....  'எனக்கு  வரவரத் தள்ளலை. வயசு 87 ஆகுது. மடமும் வேணாம் ஒன்னும் வேணாம்.... நான் சொந்த ஊருக்குப் போயி அங்கேயே இருக்கப்போறேன்'னு சொல்லிட்டார்.

 போறவங்களை இழுத்து நிறுத்தவா முடியும்?

இப்படித்தான் தனியார் மடங்கள்  ஏகப்பட்டவை  இந்தியா முழுக்க இருக்கு. நானும் சிலபல மடங்களுக்கு ஐ மீன் மடங்கள் நடத்தும் கோவில்களுக்குப் போயிருக்கேன். சிலது  ஏகப்பட்ட சொத்துக்களோடு பெரிய அளவில் நடக்குதுன்னாலும்.... பல மடங்கள் கொஞ்சம் ஏழ்மை நிலையில் இருப்பதையும் பார்த்துருக்கேன்.  சொத்து இருக்கும்  மடங்களில் வாரிசுகள்தான் அடுத்த தலைமை!   வாரிசு அரசியல் மாதிரி     வாரிசு மடங்கள்........   ஒன்னும் சொல்றதுக்கில்லை போங்க :-(
  
ஜீயர் புறப்பட்டுப் போனதும் சிஷ்யர்களே மடத்தைத் தொடர்ந்து நடத்திக்கிட்டு இருந்துருக்காங்க. ஆனா....   நிர்வகிக்க முடியலையோ.... இல்லை நடத்தத்    தெரியலையோ...    ஒன்னும் சரியா நடக்காம...  கோவில் பூஜைகள் எல்லாம் முடங்கி இருந்துருக்கு.
எல்லாக்  கோவில்களுக்கும் அததுக்குரிய பக்தர்கள்  இருப்பாங்கதானே....   அவுங்க புகார் கொடுத்துருக்காங்க. பக்தர்களுக்காகக் கோவிலைத் திறக்கச் சொல்லிருச்சு கோர்ட்.  அப்புறம் சரியாச்சோ  என்னமோ.......  அடுத்த மூணவது வருசம்  தமிழ் நாடு அரசின் அறநிலையத்துறை கோவிலைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கிட்டு, மடத்தை நிர்வாகம் பண்ண  ஒரு அதிகாரியையும் நியமிச்சுருக்காங்க.
மடத்துலே சமையல் பொறுப்பில் இருந்தவருக்கு இதெல்லாம் பிடிக்கலை. அவர் பெயர் பத்ரி நாராயணன் என்று செய்தியில் தெரிந்தது. அதிகாரியோடு தகராறு செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். கொலை மிரட்டல் விட்டாருன்னு ஜெயிலிலும் பிடிச்சுப் போட்டாங்களாம்.

ஒரு மூணுநாலு மாசம் கழிச்சு ஒரு நாள்  ஒரு ஆம்புலன்ஸ்லே  ஜீயருடைய உடலோடு மடத்துக்கு வந்து,  இங்கே  உடலை பக்தர்கள் பார்வைக்கு வைக்கணுமுன்னு  சொல்ல, அதிகாரி அதை மறுத்துருக்கார்.  கோவிலுக்குள் வைக்கப்டாதுன்னதும்,  இது   இப்ப மடம் என்றாலும்கூட, ஜீயருடைய சொந்த வீடுதான். இங்கேதான்  வைக்கணுமுன்னு  இவர்    சொல்ல...     முடியாதுன்னு பழையபடி தகராறு......


கொல்கத்தாவில் இறந்த ஜீயரை,  திருச்சிவரை விமானத்தில் கொண்டு வந்துருந்தாராம் பத்ரி நாராயணன். அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன்!   அனுமதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன்னு பத்ரி தன் வீட்டுக்கு    எதிரில்   நடுத்தெருவில்  ஆம்புலன்ஸை நிறுத்தி வச்சு போராட்டம். போலிஸ் கமிஷனர், கலெக்டர் வரை விவகாரம் போய் பேச்சு வார்த்தை நடத்தி,  மடத்து வாசலில் ஆம்புலன்ஸிலேயே ஜீயர்  உடலை வச்சு  அஞ்சு நிமிசம் மரியாதை செஞ்சுக்கலாமுன்னு சொல்லி அதுபோல ஆச்சாம்.  பாவம்.... அந்த ஜீயர்....  இந்தப் போராட்டங்களால் முப்பது மணி நேரம் நடுத்தெருவில் இருக்கும்படியா  அவருக்கு  விதி.....  கர்மா விடறதில்லை..........

அப்புறம் கொள்ளிடக் கரையில் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் சமாதி ஆச்சு.
ச்சும்மா தரிசனத்துக்குப் போனவளுக்கு  த்ரில்லர் கதை  கிடைச்சது பாருங்க.......
பெருமாளைக் கும்பிட்டுக்கிட்டுக் கோவிலை வலம் வந்தோம்.  வீடு போலத்தான் இருக்கு ....   ஒரு இடத்தில் விளக்குகள் வச்சுருக்காங்க.  நெய்விளக்குகள். வாங்கி ஏத்திக்கலாம். விளக்குப் போடுவதன் பயன்கள், என்றைக்கு,  எதுக்குன்னெல்லாம்  விவரிக்கும் தகவல்கள்  வேற!  விளக்கு எண்ணிக்கையும் பலனும்தான் இதுவரை வேற கோவில்களில் பார்த்துருக்கேன். இப்பப் புதுசா இது!
தினம்  சாயங்காலம்  அஞ்சே காலுக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் இருக்காம். தெரியாமப்போச்சு. ஒருநாளாவது  வந்து  கலந்துக்கிட்டு இருக்கலாம்........  போகட்டும்... அடுத்த முறைக்கு நினைவில் வச்சுக்கணும்.
காலை 6 முதல் 12, மாலை 4 முதல் எட்டு வரை கோவில் திறந்துருக்கும். இப்படி ஒரு இடத்திலும்  காலை 10.30க்கு நடை அடைப்புன்னு இன்னொரு இடத்திலும் இருக்கு. மடத்தின் பொறுப்பில் இருந்தப்ப  சீக்கிரம் நடை அடைப்பாக இருந்திருக்கலாம்.

தினந்தோறும் நடக்கும் ஸேவைகள்ன்னு  கரும்பலகையில் எழுதிப்போட்டுருந்தாங்க. வெள்ளிக்கவசம்   , முத்தங்கி, ஸ்ரீநிவாச அலங்காரம், நேத்ர ஸேவா, நிஜபாத தரிசன ஸேவான்னு.....    திருப்பதியின் தள்ளு முள்ளு இல்லாம நிம்மதியா ஸேவிக்க முடியும் இங்கே!
ஆகட்டும்.... அடுத்த முறை கிடைக்கணும் பெருமாளே!

சரி வாங்க கொள்ளிடக்கரை  போகலாம்.......

தொடரும்......  :-)


10 comments:

said...

இங்கே சென்றதில்லை. இப்படி நிறைய வீடுகள் கோவிலாக/மடங்களாக திருவரங்கத்தில் உண்டு.

அடுத்த முறை திருவரங்கம் வரும் போது இங்கேயும் செல்ல முயல்வேன்.

said...

இக்கோயிலுக்கு இதுவரை சென்றதில்லை. படங்களுடன் பதிவு அருமை. செல்ல முயற்சிக்கிறேன்.

said...

//எப்பவுமே ரொம்பப் பக்கத்துலே இருக்கும் சமாச்சாரங்களுக்கு அவ்வளவா மதிப்பு கொடுப்பதில்லை நாம் என்பது(ம்) உண்மைதானே?//

15 வருடம் தஞ்சாவூர் வாழ்க்கை. சரஸ்வதி மகால், சரபோஜி மன்னர் அரண்மனை இதுவரை பார்த்ததில்லை.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சின்னச்சின்ன மடங்கள் ஏராளம்தான். அவரவருக்குப்பிடித்த மாதிரி பண்ணின ஏற்பாடுதான். கண்டுபிடிச்சுப் போகணும் நாம்..... சில மடங்களில் கோவில்கள் அட்டகாசம்தான்! நம்ம உடுபி க்ருஷ்ணர் இருப்பதும் ஒரு மடத்துக்குள்ளே இருக்கும் கோவிலில்தான் இல்லையோ!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

சீக்கிரம் அதற்கான வாய்ப்பு வர எம்பெருமாள் அருள் செய்யட்டும்!

said...

வாங்க விஸ்வநாத்.

ரொம்பச் சரி!

உங்க மனக்குறையை இங்கே கொஞ்சூண்டு போக்க எண்ணம் :-)

http://thulasidhalam.blogspot.co.nz/2013/03/blog-post_22.html

said...

நன்றி டீச்சர்.
ஏற்கனவே பிடிச்சிருக்கு உங்க ப்லாக் ல, இப்போ இன்னொருக்க படிச்சிட்டே.

said...

I meant,
நன்றி டீச்சர்.
ஏற்கனவே படிச்சிருக்கே உங்க ப்லாக் ல, இப்போ இன்னொருக்க படிச்சிட்டே.

said...

அட...டா.....நிம்மதியான தர்சனம்

said...

வாங்க மாதேவி.

ஆஹா.... ப்ளாகில் தட்சணை போடுங்க :-)