Friday, December 23, 2016

கணக்கு எல்லாம் சரியா எழுதி வச்சுட்டுத்தான் அப்பல்லோ போயிருக்கார்......... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 109)

ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறோமுன்னு நாமே நினைச்சு, நாமே போட்டு வைக்கும் கணக்கு சிலசமயம் தப்பாப் போயிருதுல்லே! இந்தக் கோவில் பயணத்தில் இருந்து  ஃபிப்ரவரி 9 ஆம் தேதிக்கு சென்னை திரும்புவதாகத்தான் நம்ம திட்டம்.  அதேபோலத்தான் திரும்பினோம். ஆனால்..... இது எப்படி பேக்ஃபயர் ஆச்சுன்னா....
ஒரு சில நகைகள் செய்ய நம்ம சீனிவாச ஆசாரியிடம் (தி நகர் மங்கேஷ் தெரு. இவரைப்பற்றி ஏற்கெனவே பலமுறை எழுதி இருக்கேன் ) சொல்லி ஆர்டர், டிஸைன் எல்லாம் கொடுத்துட்டு,  தெற்கத்திப் பயணம் முடிஞ்சு வந்ததும் வாங்கிக்கலாம்னு பக்கா ப்ளான்.  என்ன ஒன்னுன்னால்....  சொன்னால் சொன்ன தேதிக்கு வேலையை முடிக்காம நாளைக்கு வாங்க, மறுநாளைக்கு வாங்கன்னு இழுத்தடிக்கும் தொழிலாளிகள் பட்டியலில் தையல்காரரும், நகை செய்யும் ஆசாரிமாரும் ஏற்கெனவே நம் முன்னோர்களால் சேர்க்கப்பட்டுருப்பதால்....  அதையே நானும்  ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தேன். 'மூத்தோர் சொல் கேட்காதவள்' என்ற அவப்பெயர் வந்துறக்கூடாது பாருங்க :-)

ஓ... அதனாலே.....

ஒருநாள் முன்னாலே வர்றதாச் சொல்லலாமேன்னு  8 ஆம் தேதி வந்துருவோம். வந்தவுடன் நேராக் கடைக்கு வந்து நகையை வாங்கிப்போமுன்னு சொல்லி வச்சேன்.  இன்றைக்குத் தேதி 10. காலையில் ஒரு ஒன்பது மணிக்கு  செல்லில் ஃபோன் செஞ்சு   கடை திறந்தாச்சான்னு கேட்டால்......  பதில் வருது ஆஸ்பத்திரியில் இருந்து!  அதே அப்பல்லோதான் !!!!
நம்ம சீனிவாச ஆசாரிக்கு ஆஞ்சியோ  நடந்துருக்கு மொதநாள்.   ஆர்கனைஸ்டு ஸர்ஜரிதான். நாம் எட்டாம்தேதி வர்றோமுன்னு சொல்லி இருந்ததால்.... இவர் ஒன்பதுக்கு அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி இருந்தாராம்.

இப்ப எப்படி இருக்கார்னு விசாரிச்சதுக்கு, பரவாயில்லை.  இன்னும்  ரெண்டு மூணு நாள் அங்கே வச்சுருந்து பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கன்னு சொன்ன பாபு,  ஒரு ரெண்டு மணிக்குக் கடையாண்டை வந்துருங்க. நான் வந்து  கணக்கு செட்டில் பண்றேன்னார்.  சரி. அப்படியே ஆகட்டும்.....

இன்றைக்கு நமக்கு வண்டி  இல்லை. நம்ம சீனிவாசனுக்கு லீவ் கொடுத்துருந்தோம்.  பத்துப்பனிரெண்டு நாளா அவரும்தானே வீட்டை விட்டுட்டு நம்மோடு சுத்திக்கிட்டு இருந்தார்.

இன்றைக்கு ஒரு நாள் ஆட்டோ வச்சுக்கிட்டால் ஆச்சுன்னு  கிளம்பினோம். கலெக்‌ஷன் டே!  டெய்லர் கடைக்குப்போய்  தைச்ச துணிகள் வாங்கறது,  நம்மவர்  கேரளா  ஹேர் ட்ரெஸ்ஸர்ஸ்லே போய் முடிவெட்டிக்கிறதுன்னு  சம்ப்ரதாயங்கள் இருக்கே!  ஆனால் மொதல்லே கோவிலுக்குப் போகணும். ஜிஎன் ரோடிலே இருக்கும் ஜெயின் கோவில்தான். தொட்டடுத்தாப்லே நம்ம பேங்க் இருக்கு என்பதால்  போகும்போதும் வரும்போதும்  காரில் இருந்தே ஒரு கும்பிடு.  சென்னைப் பயணத்தில் ஒரு முறையாவது  இங்கே   போய் வரணும் என்பதும் ஒரு சம்ப்ரதாயம்:-)
கோவிலில் பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்கு!  பெரிய வெள்ளை யானைகள் வரவேற்க, உள்ளே போய்  சாந்திநாதரைக் கும்பிட்டுக்கிட்டு, அப்படியே பத்மாவதி தாயாரையும் வலம் வந்தோம். எந்த ஆரவாரமும் இல்லாம அமைதியா உக்கார்ந்து தியானம் செய்ய இதைவிட அருமையான இடம் இருக்கான்னு  தெரியலை !
செய்ய வேண்டிய சடங்குகளை ஒவ்வொன்னாச் செஞ்சுக்கிட்டே பாண்டிபஸார் க்ளிக்ஸ் :-)  பாத்திரக்கடையில் அம்மி, நல்லாத்தான் இருக்கு.





நடந்துக்கிட்டே குமார் கடை வாசலுக்குப் போயிருந்தோம். எப்பக்கா வந்தீங்கன்னு ஆரவாரமான வரவேற்பு :-)  கடையை விரிவுபடுத்தி  இப்போ சொந்த வியாபாரம்!  நல்லா இருக்கட்டும்!   மகளுக்கு  சில அலங்கார நகைகள். ( எல்லாம் போதும். இந்த ஊருக்கு இதுவே அதிகம்! மேலும் இங்கத்துக் காலநிலைக்குக் கருக்கறதில்லை!)சும்மா சொல்லக்கூடாது....  சில நகைகள் எல்லாம் அட்டகாசமா இருக்கு!  முக்காலே மூணுவீசம் நார்த் இண்டியன் ஸ்டைல்ஸ் !!!  டீ குடிச்சுட்டுத்தான் போகணும்னு கண்டிப்பாச் சொல்லிட்டதால் ஒரு டீயும் ஆச்சு. குட்டியூண்டு கப்பில் டீ விளம்பல் கூட நல்லாத்தான் இருக்கு!

 அங்கிருந்தே   துணிகள் தைச்சாச்சான்னு  செல் விசாரிப்பு.
"இன்னும் ஒரு மணி நேரத்துலே   வாங்க மேடம். இப்போதான் அயர்ன் பண்ணிக்கிட்டு இருக்காங்க"

ஹாஹா.... நான் சொல்லலே....  ரெண்டு நாளைக்கு முன்னாலே ரெடியாகி இருக்கவேண்டியதுன்னு...........

அறைக்கு வந்துட்டோம். ச்சும்மாச்சும்மா என்ன சுத்தல் வேண்டிக்கிடக்கு? :-) அதானே.... இன்னும் கொஞ்சம் நேரம் கடைவீதியில் இருந்தால் என்னத்தையெல்லாம் வாங்கிருவாளோன்னு ஒரு பயம் மனுசருக்கு   உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யுது  :-)

பகல் சாப்பாட்டுக்கு  வெளியே எங்கேயும் போக வேணாம்.  அடுத்தாப்லே இருக்கும் சுஸ்வாதில் ஒரு எலுமிச்சம்பழ சேவையும்,  பழமுதிர்ச்சோலையில் பழங்களும், தயிரும்  வாங்கினால் ஆச்சு.

ரெண்டு மணி போல ஒரு ஆட்டோ பிடிச்சு முதலில் தையல் கடை கலெக்‌ஷன் முடிச்சுட்டு, அடுத்து  நகைக்கடைன்னு போனால்..... கடை மூடிக்கிடக்கு. நல்லவேளையா செல்ஃபோன்னு ஒரு சமாச்சாரம் கையிலே இருக்கே. ட்ராஃபிக்லே மாட்டிக்கிட்டாராம். வந்துக்கிட்டே இருக்கேன்னார் பாபு.
அதுக்குள்ளே அந்தக் கடையில் வேலைசெய்பவர் ஒருவர் (எல்லாம் சொந்தக் காரர்கள்தான்)வந்து, எதுத்த கடையில் இருந்து ரெண்டு ப்ளாஸ்டிக் ஸ்டூல் கொண்டுவந்து கடைக்கு எதுத்தாப்லே நிழல் இருக்கும் இடத்தில்  போட்டு உபசரிச்சார்.

ஒரு  இருபது நிமிட் போல காத்திருப்பு. நம்ம சீனிவாச ஆசாரி மகள், கடைச்சாவியோடு வந்து சேர்ந்தாங்க. அதே சமயம் பாபுவும் வந்து சேர்ந்தார். கடை திறந்து எல்லோருமா  அங்கே போனோம்.

ஆர்டர் செஞ்சவைகளை நல்லபடியாச் செஞ்சு வச்சு, அதுக்கான கணக்கெல்லாம்  கச்சிதமா எழுதி வச்சுட்டுத்தான் ஆசாரி, அப்பல்லோ போயிருந்தார்.  எல்லாம் சரிபார்த்தபின் நாம்தான் பாக்கி வச்சுருக்கோம். அதைத் தங்கமாகவோ இல்லை காசாகவோ திருப்பித் தரலாம்.  காசுன்னா இவ்ளோ, தங்கமுன்னா இவ்ளோன்னும் எழுதிவச்சுட்டுப் போயிருக்கார். கணக்கு சரியா இருந்தாக் குழப்பமே வராதில்லையா!

அப்பதான்  சட்னு நம்மவர்  நான் எதிர்பாராத காரியம் ஒன்னு செஞ்சார். நான் திகைச்சுப் போயிட்டேன். 'தங்கமாத் தரோம்'னுட்டுக் கையில் இருந்த ப்ரேஸ்லெட்டைக்  கழட்டி பாபு கிட்டே கொடுத்துட்டார். வேணாம் வேணாமுன்னு  நான் சொன்னதைக் கேக்கவே இல்லை. ப்ச்...   ஆம்புளைங்க 100 கிராம் தங்கத்துக்கு மேலே போடக்கூடாதுன்ற சட்டம் வரப்போகுதுன்னு இவருக்கு  எப்படித்தான் தெரிஞ்சதோ?

அதை எடை போட்டு, அவுங்களுக்குச் சேரவேண்டிய தங்கத்தை வெட்டி எடுத்துக்கிட்டு மீதியை  நம்மகிட்டே கொடுத்துட்டாங்க. சரி. இருக்கட்டும் அடுத்தமுறை  அதைக்கொண்டு எதாவது செய்யமுடியுமான்னு பார்க்கலாம்:-)
நான் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம் என்பதால் ஒரு பதக்கம் செய்யச் சொல்லி இருந்தேன்.  நல்லாவே செஞ்சுருக்காங்கன்னு தோணுது :-)


இப்பெல்லாம் அநேகமா எல்லோருமே  நகைக்கடையில்  ரெடிமேடா செஞ்சு வச்சுருக்கும் நகைகளை வாங்கிக்கறோம்.  இப்படியே போனால் இந்தக் கலை  என்ன ஆகுமோன்னு எனக்கு உள்ளுக்குள் ஒரு கவலை.

  'அப்படியெல்லாம் ஆகாது. கையால மட்டுமே செய்யப்பட வேண்டிய நகைகள் இருக்கே. முக்கியமா திருமாங்கல்யம்'னு நெருங்கிய தோழி சொன்னாங்க!   ஆனாலும்  அதுவுமே  ரெடிமேடாக் கிடைக்குதே..........  அவரவர் சடங்கு முறைகள் அனுசரிச்சு....... இல்லையோ! 

இன்னொரு ஆட்டோ பிடிச்சு அறைக்கு வந்துட்டு, கொஞ்சநேரம் ஓய்வு. பாக்கிங் கொஞ்சம் செஞ்சோம். அஞ்சு மணி ஆனதும் மச்சினர் வீட்டுக்குப் போகணும். கீழே  நம்ம லோடஸில் டாக்ஸி ஏற்பாடு செய்யறோமுன்னு NTL க்கு  சொல்லிட்டாங்க. ரெகுலரா அந்த சர்வீஸ்தான் பயன்படுத்தறாங்களாம். சொன்ன நேரத்துக்கு வராமல் அரைமணி நேரம் லேட்டா வந்து சேர்ந்தது வண்டி. இடம் தெரியாம சுத்துனாராம் ட்ரைவர். இதுவா ரெகுலர்  சர்வீஸ்?
அதுலே வேளச்சேரிக்குப் போறோம். ட்ரைவர் கொஞ்சம்  முறைச்சுக்கிட்டு ஓட்டுனார். பணிவு காட்டவேண்டியதில்லை. ஆனா... பயணிகளிடம்  முறைப்பு என்ன வேண்டிக்கிடக்கு? நம்ம சீனிவாசன் இல்லாதது  கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.  அட்ரெஸ் சொல்லி, கூடவே  லெஃப்ட், ரைட்டு வழியும் சொல்லிக்கிட்டே வந்தார் நம்மவர். கடைசிவரை முறைப்பு மாறவே இல்லை....  :-(

மச்சினர் குடும்பத்துடன்  பேசிச்சிரிச்சு அங்கேயே  ராச்சாப்பாட்டையும் (தோசை) முடிச்சுக்கிட்டு, அவுங்க பரிந்துரையின் பேரில் ஓலா டாக்ஸியில் அறைக்கு வந்தோம். சர்வீஸ் ஓக்கே! மறுநாளைக்கும் சீனிவாசனுக்கு லீவு கொடுத்தாச்.  ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கும் வேலை .............  காரணம்.
நாளைக்கும் டாக்ஸி எடுத்தால் ஆச்சு!

தொடரும்........  :-)

14 comments:

said...

நல்ல ஓட்டுனர்கள் கிடைப்பது ஒரு வரம்! :)

தொடர்கிறேன்.

said...

// இன்னும் கொஞ்சம் நேரம் கடைவீதியில் இருந்தால் என்னத்தையெல்லாம் வாங்கிருவாளோன்னு ஒரு பயம் மனுசருக்கு//

கோபால் சார், please take a note.

said...

பதக்கம் அழகா இருக்கு.

said...

பெண்களுடன் ஷாப்பிங் வந்தால் பொறுமை காக்க வேண்டும் என்பது கோபாலுக்குத் தெரியாதா என்ன

said...

சீனிவாச ஆசாரி இப்போ நலமாக இருப்பார்னு நம்புறேன்.

நீங்க சொல்ற சமணக் கோயிலைத் தாண்டி பலமுறை போயிருக்கேன். ஆனா உள்ள போனதில்ல. ஒருவாட்டியாவது போய்ப் பாக்கனும். பளிங்குக் கல்லுல கட்டியிருப்பாங்க. அதுனாலதானோ என்னவோ கோயிலுக்குப் போன மாதிரியே இருக்காது.

கேரளா சலூனுக்கு ஒவ்வொரு வாட்டி சென்னை வரும் போதும் கோபால் சார் போறாரு. அன்னைக்கு பாண்டிபஜார் போனப்போ சலூனைப் பாத்ததும் ஒங்க ரெண்டு பேர் ஞாபகமும் வந்தது.

அம்மியோட கொத்தலும் கொழவியோட கோடுகளும் வித்தியாசமா இருக்கு.

said...

ஓட்டுநர், நடத்துநர், ஆளுநர். நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். இம்போசிஷன் வேலைக்காக மாட்டேங்கு. ரீச்சர்ன்னு பார்க்காம பிரம்பை எடுக்க வேண்டியதுதான் போல..

said...

கோவிலுடன்நகைகடையும் சுற்றிவந்து விட்டோம்:)

said...

வாங்க வெங்கட்நாகராஜ்.

அதான்... கிடைச்சுருக்கும் வரத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு இருக்கோம்:-)

said...

வாங்க விஸ்வநாத்.

நீங்க வேற.........

கண்ணில் பயம் எட்டிப்பார்க்கும் அப்பப்ப :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

கவனித்தமைக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அதெல்லாம் பொறுமைத்திலகத்துக்குத் தெரியாதா என்ன? :-)))))

said...

வாங்க ஜிரா.

மயிலைக் கச்சேரி ரோடில் இருந்து கபாலி கோவிலுக்குத் திரும்பும் இடத்தில் கூட ஒரு சமணக்கோவில் இருக்கு. பலமுறை அதைக் கடந்து போயிருந்தாலும், கோவிலுக்குள் போக வாய்க்கலை எனக்கு:-( ஒருநாள் போயிடலாம்...... நீங்க அங்கே.... நான் இங்கே :-)

அம்மியைப் பார்த்ததே வியப்புதான் எனக்கு!

கேரளா சலூனுக்குச் சரித்திரத்தில் இடம் இருக்கு! சார்ஜும் அதிகம் இல்லை!

said...

வாங்க கொத்ஸ்.
நர் நர் நர் நர்...... இப்படி டீச்சரை ஆட்டுவிக்கும் ஆட்டுநர். இப்ப சரியா இருக்குமே!

said...

வாங்க மாதேவி.

ஆஹா.... டு இன் ஒன் :-)