Wednesday, December 21, 2016

உன்னைத் தாலி கட்ட விடமாட்டேன்....(இந்தியப் பயணத்தொடர். பகுதி 108)

திருக்கோவிலூரில் இருந்து கிளம்பி போனவழியிலேயே  இருபத்தியஞ்சு கிமீ தூரம் போய்  திருவெண்ணெய்நல்லூர் 600 மீட்டர் என்ற போர்டு பார்த்ததும் ரைட் எடுத்து, ஊருக்குள் போனோம்.  வர்றவழியில்  மினிப் பாலைவனம் மாதிரி மணல் இருக்கும் பகுதியில் கொஞ்சூண்டு தண்ணீர் சின்ன வாய்க்காலாட்டம் தெரிஞ்சது. இந்தப் பாலைவனம்தான்  பெண்ணை ஆறாம்!  தென்பெண்ணை !

காவிரி, தென்பெண்ணை பாலாறு, தமிழ்கண்டதோர் வைகை பொருநை நதி....  மேவிய ஆறு பல ஓடுன காலம் எல்லாம் போச்சு. வறண்டு போய்க்கிடக்கும் ஆற்றைப் பார்த்தால் நமக்குத்தான் கண்ணில் கங்கை....
அஞ்சு நிலை இருக்கும் ராஜகோபுரம் பார்த்தவுடன் வண்டியை நிறுத்திட்டுக் கோவிலுக்குள் போறோம். வெளிப்பிரகாரம் ஹோன்னு கிடக்கு. மொத்தக் கோவிலும் பத்து ஏக்கர் நிலத்தில் கட்டி இருக்காங்க. நமக்கு வலது பக்கம் நிறையத் தூண்களோடு   ஒரு பெரிய மண்டபம். ஓரத்தில் கம்பித்தடுப்பு போட்டு சின்ன கேட். முகப்பில் சின்ன மாடம். அதுலே நடுவாந்தரமா மூணு பேர் உக்கார்ந்திருக்க பக்கத்துக்கொன்னா ரெண்டு பேர் நிக்கறாங்க. ஒருத்தர் கிழவர் இன்னொருத்தர் குமரர்!  ரெண்டுபக்கமும் ஊர்சனம் கொஞ்சம் பேர்!


அது ஒன்னுமில்லை.... பஞ்சாயத்து நடக்குது.  வாதியும் பிரதிவாதியுமா முன்னால் நிக்கறாங்க.  கிழவனார்  முகத்தில் தாடியும் கையில் தடியும், கழுத்து நிறைய ருத்ராட்சமாலையுமா நிக்க,  குமரன் மாலையும் கழுத்துமா நிக்கறார்.  கல்யாணமணவறையில் இருந்து எழுப்பிக் கூட்டிட்டு வந்தால்.....  மாலையைக் கழட்ட ஏது நேரம்?
இவர் பேர் நம்பியாரூரன். செல்லமா ஆரூரன்னு கூப்புடுவாங்க. பொடியன் பார்க்க ரொம்ப அழகாவும்,  புத்திசாலியாவும் இருந்ததால்,  அந்த ஊர் ராஜா பார்த்துட்டு, அரண்மனைக்குக் கூட்டிப்போய்  எல்லாக் கலைகளையும் கத்துக்கொடுக்க ஏற்பாடு செஞ்சுருக்கார்.  ராஜா வூட்டுப்பிள்ளை மாதிரி இருந்த  ஆரூரனுக்குக் கல்யாண வயசு வந்துச்சு. பெத்த தகப்பன் ஒரு பொண்ணு பார்த்து, கல்யாண ஏற்பாடு செஞ்சு  அன்றைக்குத்தான் கல்யாணம்.   சாஸ்த்திரப்படி மாப்பிள்ளை செய்ய வேண்டிய பூஜைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்கும்போது  அந்த ருத்ராட்சமாலைக் கிழவனார் விடுவிடுன்னு கல்யாண மண்டபத்துக்குள் வந்தார். கையில் ஒரு ஓலை!
புதுசா வந்தவர் கிட்டே என்ன ஏதுன்னு விசாரிச்சால்.....  இந்தக் கல்யாணப்பையனுக்கும் எனக்கும் ஒரு வழக்கு இருக்கு.  அதைத் தீர்த்தபிறகுதான்  தாலி கட்ட விடுவேன்னு  சொல்ல,  'ஐயோ... இந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது. முன்னேபின்னே பார்த்ததே இல்லைன்னு மாப்பிள்ளை அலற .... அங்கேயே ஒரு  குழப்பம். நல்லவேளை... கல்யாணப்பொண்ணு இன்னும் மணவறைக்கு வரலை.
சட்டுப்புட்டுன்னு  விசாரிச்சுட்டுக் கிழவரை வெளியே அனுப்பலாமுன்னு பார்த்தால் எங்கே?  'என்ன வழக்குன்னு சொல்லும்'னு கேக்க,  'நீ எனக்கு அடிமை.  எஜமானரின் அனுமதி இல்லாம அடிமைகள் கல்யாணம் காட்சி சொத்து சுகம்னு ஒன்னையும் அனுபவிக்க முடியாது.  வந்து எனக்கு சேவகம் செய்.  கல்யாணமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்'னு  சொல்றார் கிழவர்.

"வயசான கிழவருன்னு மரியாதை கொடுத்தா... இப்படி அடிமை கிடிமைன்னு  ஒளறுனா எப்படி? பைத்தியமா உமக்கு?  என்ன அத்தாட்சி இருக்கு?"

'இருக்கே!  உன் முப்பாட்டன் எழுதிக்கொடுத்த அடிமைசாஸனம். தானும் தன் பரம்பரையும் என் அடிமைகள் னு எழுதி இருக்கு பாரு' ன்னு ஓலைக் கையை நீட்டுனதும், சட்னு அதைப் பிடுங்கி அங்கே ஹோமம் செய்ய வளர்த்துக்கிட்டு  இருந்த தீயில் போட்டுட்டார் மாப்பிள்ளை.

"இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க?"

"யோவ் மாப்பிள்ளை....  நான் என்ன அவ்வளவுக்கு அறிவில்லாதவனா என்ன?  இப்படிநடக்குமுன்னு தெரிஞ்சுதான் ஒரிஜினல் ஓலையைக்  கொண்டு வராம அதோட ஜெராக்ஸ் காபியைக் கொண்டுவந்தேன்!  இப்ப என்ன செய்யப்போறே? இப்ப என்ன செய்யப்போறே?"

'எனக்கு நியாயம் கிடைக்காமத் தாலி கட்ட விடமாட்டேன்'னு  அங்கே தர்ணா செய்ய ஆரம்பிச்ச கிழவர்கிட்டே, 'பஞ்சாயத்துலே தீர்த்துக்கலாம். அதுக்கு ஒரிஜினல் ஓலை வேணுமே' ன்னதுக்கு, ' அதை வீட்டுலே வச்சுருக்கேன். வாங்க எங்க ஊருக்கு' ன்னு மாப்பிள்ளை கழுத்துலே துண்டைப்  போட்டு  இழுத்துக்கிட்டுப் போறார்.   லபோ திபோன்னு ஊர்சனம் பின்னாலேயே ஓடுது.
எனக்கு அந்தக் கல்யாணப்பொண்ணை நினைச்சால்தான் ஐயோன்னு இருக்கு. தாலி கட்டும் நேரம் கல்யாணம் நின்னு போச்சுன்னா..... எப்படி இருக்கும்? ப்ச்.... பாவம்....

திருவெண்ணைநல்லூர் கோவிலுக்கு எல்லோரும் வந்து சேர்ந்தாங்க. அங்கே இருக்கும் மண்டபத்துலே பஞ்சாயத்தார்கள் வந்து உக்கார்ந்ததும் விசாரணை ஆரம்பிக்குது. ஒரிஜினல் டாக்குமென்ட் எங்கேன்னு கேட்டதும் இதோ கொண்டு வரேன்னு  கிழவர் கோவிலுக்குள் போறார். சனம் பின்னாலேயே போகுது.
கருவறைவரை போனவர், அங்கே வாசலில் செருப்பைக் கழட்டிட்டு உள்ளே நுழையறார். அம்புட்டுதான்........  காணாமப் போயிட்டார்! ஐயோ இதென்ன மாயமுன்னு  எல்லோரும் திகைச்சுப்போய் நிக்கும்போது   மேலே விமானத்தில் ரிஷப வாகனத்தில் சிவனும் பார்வதியுமா காட்சி கொடுக்கறாங்க.  கிழவனா வந்து, தன்னுடைய கல்யாணத்தை தடை செஞ்சது  சிவன்னு தெரிஞ்சுபோய் அதிர்ச்சியில் நிற்கும் ஆரூரனைப்  பார்த்து, 'நீ அழகாக இருக்கிறாய். எனக்கு பயமாக இல்லை'ன்னு சொல்லாம, 'சுந்தரரே.... என்னைப் பற்றிப் பாடும்' என்றாராம்!

(அப்ப இருந்துதான் நம்பியாரூரனுக்கு சுந்தரர் என்ற பெயர் அமைஞ்சது!)

நான் என்னன்னு பாடுவேன்னு  சுந்தரர் தயங்க, அதான் என்னை பைத்தியமுன்னு சொல்லிட்டயே!  பித்தனாட்டமா இருக்கேன்? 'பித்தா' ன்னே ஆரம்பிச்சுப் பாடுன்னதும்.......

'பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா 
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர்அருள்துறையுள் 
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே'   
என்று முதல் பாட்டை எடுத்துவிட்டார்!


வைத்தாய் பெண்ணைத் தென்பால் என்ற வரிக்கு............  பெண்ணை ஏன்  தெற்குப் பக்கம் வைக்கணும்னு மக்குப்போல நினைச்சுருக்கேன். அதான் ஏற்கெனவே  உமையவளுக்கு  இடப்பக்கம் கொடுத்தாச்சே....

அப்புறம்தான் இந்தப் பயணத்தில் புரிஞ்சது... அந்தப் பெண்ணை.... இந்தப் பெண்ணை ஆறுன்னு!  ஆத்துக்குத் தென்பக்கம் இருக்கு திருவெண்ணை நல்லூர்! 
அசுரனோடு  போர் செஞ்சு அவனை வதம் செஞ்சதும், சக்தியின் முகம் கோபத்தால் விகாரமாகி இருந்துச்சாம். அப்போ.... திரும்ப சாந்த  குணமும் முகமும் கிடைக்கணுமுன்னு  வெண்ணையாலேயே கோட்டை ஒன்னு கட்டி அதுக்குள்ளே இருந்து தவம் செஞ்சு அருள் உருவைத் திரும்ப அடைஞ்ச இடமாம் இது. அதுதான் வெண்ணெய்நல்லூருக்கான பெயர்க் காரணம்!
இதுக்கு இன்னொரு வெர்ஷனும் இருக்கு! பாற்கடலைக் கடைஞ்சப்ப வந்த ஆலகாலவிஷத்தை சிவன் விழுங்கிட்டது நினைவிருக்கோ? அப்ப அந்த நஞ்சு ரொம்பவும் படுத்தாமல் இருக்க பசுவெண்ணையால் கோட்டை கட்டி, அதில் பஞ்சாக்னி வளர்த்து  தவம் செஞ்சாங்களாம் பார்வதி!  அந்த இடம் இதுதான். அதான் இந்தப்பெயர்ன்னு............  கோவில்களில் கதைக்கா பஞ்சம்?

இப்படி  நடக்கவிருந்தக் கல்யாணத்தை நிறுத்தி  சுந்தரரை ஆட்கொண்ட சிவன், அப்புறம் எப்படி  சுந்தரரின் காதலுக்காகத் தூது போனார்?  வேணுமா எனக்கு இந்த மண்டைக் குடைச்சல்? எல்லாத்துக்கும் கதை ஒன்னு இருக்கே!  வாங்க ஃப்ளாஷ்பேக் இதோ:-)

இந்த ஆரூரன் என்னும் சுந்தரர்,  கையிலாயத்துலே சிவனுக்கு அணுக்கத் தொண்டனா இருந்தவர். அப்ப இவர் பெயர் ஆலாலசுந்தரர்.  தினமும்  நந்தவனத்தில் போய் பூக்களைப் பறித்துவந்து  சிவபூஜைக்கு எல்லாம் ரெடியாக்க வேண்டியது இவருடைய ட்யூட்டி.
ஒருநாள் நந்தவனத்துக்குப் பூப்பறிக்கப் போறார். அன்றைக்குன்னு பார்த்து அங்கே பார்வதியின் சேடிகள் ரெண்டுபேர் (கமலினி,  அநிந்திதை என்ற பெயர்)அதே நந்தவனத்துக்கு  வர்றாங்க. தினமும் வெவ்வேற  நேரத்துலே வந்துக்கிட்டு இருந்தவங்களுக்கு அன்றைக்கு டைமிங் தவறிப்போயிருச்சு போல !

ரெண்டு சைடுலேயும் கண்டதும் காதல் ஆகி இருக்கு! காதல் வந்தவுடன் முகத்தில் ஜொலிப்பு வந்துருக்குமோ  என்னவோ....   சிவன் கண்டுபிடிச்சுட்டார்!  பூலோகத்தில் போய் பிறந்து காதல் நிறைவேறட்டுமுன்னு நேரா பாரதநாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வச்சுட்டார். திருநாவலூரில் பிறந்து நம்பியாரூரன் என்ற பெயர் கிடைச்சது அப்பதான்! குறிப்பிட்ட காலத்துக்குப் பின் திரும்பவும் கைலாயத்துக்குக் கூப்பிட்டுக்கற மாதிரி  ஒரு அக்ரீமெண்ட் போட்டாச்சு.


அவருக்குக் கல்யாணம் பண்ணும் சமயத்தில் நடந்த கலாட்டாதான்  மேலே நீங்க வாசிச்ச வழக்காடுமன்ற சம்பவங்கள். அதுக்குப்பின்?


திருவாரூரில்  இருக்கும் பரவையார் என்ற பெண்ணைப் பார்த்ததும் சுந்தரருக்குக் காதல் வந்துருச்சு. ஆசையில் ஓடிப்போய்  நண்பர் மொதக்கொண்டு தன்னுடைய எல்லாமுமாக இருக்கும் சிவபெருமானிடம் போய்ச் சொல்லி அவர் உதவியால் அந்தப் பரவையைக் கல்யாணம் முடிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கும் சமயம் இன்னொரு ஊரில் இன்னொரு பொண்ணைப் பார்த்ததும் இன்னொருமுறை காதல் வந்துருச்சு.

 அந்தப்பொண் பெயர் சங்கிலியார்.  அந்தக் கல்யாணமும்  நடந்தது.  விவரம் முதல் மனையாளுக்குத் தெரிஞ்சதும்..... அந்தம்மா மனம் நொந்துட்டாங்க. அவுங்களை சமாதானப்படுத்த  மீண்டும் நண்பரின் உதவி கேட்க, சிவனும் தூது போய் சமாதானம் செஞ்சு வைக்கிறார்.

மொதல்மொதலில் நிச்சயமான கல்யாணத்தை நடக்கவிடாமல் தடுத்தவர் இப்படி  வேற ரெண்டு கல்யாணத்துக்கு எப்படித் துணை போயிருக்கார் பாருங்க!  ஏன்னா  இந்த பரவையும் சங்கிலியும்தான் கைலாயத்தில் பார்வதியின் சேடிகளா இருந்த  கமலினியும், அநிந்தையுமாம்!  எல்லாம் முன் ஜென்ம வாசனை.....


இவ்வளவும் நடந்து ரெண்டு மனைவியருடன் வாழ்ந்து இறைவனைப் பாடி ஊர் ஊராப் போய்க்கிட்டு இருந்த சுந்தரமூர்த்தி நாயனார்,  தன்னுடைய  பதினெட்டாவது  வயசுலேயே.... இறைவனால் திரும்பக் கைலாயத்துக்கே போயிட்டார். வெள்ளையானையை அனுப்பி,  கூட்டிட்டு  வரச்சொல்லிட்டாராம்!  எல்லாம் சிவனின் திருவிளையாடல்! He was just  18  !!!     :-(  

 
இன்னும்  இவர் ரொம்பநாள் பூலோகத்தில் இருந்தால்....   காதல்தூது போயே தன்னுடைய கால்கள் தேய்ஞ்சுருமுன்னு நினைச்சுக்கிட்டாரோ நண்பர் சிவன்? சட்னு கூப்புட்டுக்கிட்டார், பாருங்களேன்!  மனைவியரும் கர்ம வினை முடிஞ்சு  பார்வதி தேவிகிட்டேயே போய்ச் சேர்ந்துட்டாங்களாம்!
சுந்தரர், இறைவனை நினைச்சு முப்பத்தியொன்னாயிரம் பாடல்கள் பாடி இருக்காராம். அதுலே செல் அரிச்சது போக மீதிதான் நமக்குக் கிடைச்சுருக்கு.  இது ஒரு தனிக்கதை. அப்பாலிக்காப் பார்க்கலாம்.

இப்பவும் எனக்கு அந்த  மொதப்பொண்ணை நினைச்சால் மனவருத்தம்தான். அவுங்க,  தன் கல்யாணம் நின்னுபோன பிறகும் கூட இவரையே நினைச்சு வேற யாரையும் கட்டாம துறவிபோல வாழ்ந்து..........  போயே போயிட்டாங்க. ப்ச்.... 

கோவிலுக்குள்ளே நுழைஞ்சவ, மண்டபத்துக்கிட்டேயே நின்னு  கதை சொல்லப்போய் ரொம்பவே நீண்டு போயிருச்சு. .............  வாங்க கோவிலுக்குள்ளே போகலாம்.

பலிபீடம், கொடிமரம் சேவிக்கறோம். தொட்டடுத்தாப்லே புள்ளையார்! (பெருமாள் கோவிலில் இங்கே பெரிய திருவடி இருப்பார் பாருங்க அதே போல!) கலிதீர்த்த கணபதி இவர்.
கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் மூலவர் லிங்க வடிவில்! அருட்துறைன்னு  இந்த ஊருக்கு ஒரு பெயர் இருந்துருக்கு. அந்தப்படி  அருள் செய்யும் ஈஸ்வரர்! கிருபை புரிகின்றவர்!

மங்களாம்பிகை என்ற பெயரில் அம்மன் தனிச்சந்நிதியில் தனிக் கோபுரவாசலுடன்! சங்கநிதி, பதுமநிதி, ஸ்ரீசக்கரம் அம்மனுக்கருகில்! நந்தி வாகனத்துக்கு பதில் சிம்மவாஹனம் சந்நிதிக்கு முன்னால் இருக்கு!


பெரிய மண்டபங்களும், பிள்ளையார் முருகன் சந்நிதிகளுடனும்  பெரிய கோவிலாத்தான்  இருக்கு. பத்து ஏக்கர் விஸ்தீரணம் ஆச்சே! சுந்தரருக்கும்  ஒரு தனிச்சந்நிதி. கையில் ஒரு ஓலையை பிடிச்சபடி இருக்கார்:-)
இந்தத் தனிச்சந்நிதிப் பிள்ளையார், பொல்லாப்பிள்ளையார் என்று கேள்வி. கோவிலில் பொள்ளாப்பிள்ளையார்னு எழுதி வச்சுருக்காங்க.  சுயம்புவோ? உளியினால் பொள்ளாத.....  
பொல்லாப்பிள்ளையாருக்குத் தனிக்  கதை இருக்கு. பொல்லாத குறும்பு குணம் கொண்டவருக்கான செல்லப்பெயர். அர்ச்சகர், தனக்கு உடம்பு சரி இல்லைன்னு  நைவேத்யத்துடன் தன் மகனை புள்ளையார் பூஜை முடிச்சுவர அனுப்பறார். சின்னக்குழந்தை, சாமி உண்மையாவே சாப்பிடுமுன்னு நினைச்சு  நைவேத்யத்தை சாமிகிட்டே வச்சுட்டு, தின்னு தின்னுன்னு வற்புறுத்துனதும்  குழந்தைமனம் நோகக்கூடாதேன்னு  புள்ளையார் சாப்பிட்டார். பொல்லாத பிள்ளையார்:-)

வெறும் பாத்திரத்தோடு வீட்டுக்குப்போன குழந்தைப்பையன், புள்ளையார் சாப்பிட்டுட்டார்னு சொல்ல .........  ஊரெல்லாம்  புரளியாயிருச்சு. 

(கொஞ்ச வருசத்துக்குமுன்னே புள்ளையார் பால்குடிச்ச கலாட்டாவை நினைச்சுக்குங்க)

சமாச்சாரம் கேள்விப்பட்ட, உள்ளுர் அரசர்  புள்ளையார் சாப்பிடறதுக்காக  விதவிதமான பலகாரங்கள் செஞ்சு  பத்து காத தூரத்துக்கு  வரிசை வச்சுட்டார்!  குழந்தைப்பையனை, பொய்காரன் ஆக்க விரும்பாத புள்ளையார், அத்தனை சாப்பாட்டு வகைகளையும் நிமிஷத்துலே கபளீகரம் செஞ்சுட்டார்னு  ஒரு கதை!  பொல்லாத பிள்ளையார்  :-)
கோஷ்டத்தில் விஷ்ணு, பிட்சாண்டவர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, துர்கைன்னு  சிவன் கோவில்களின் வழக்கம்போல்  இருக்கு. சண்டிகேஸ்வரர் சந்நிதி அருமை!  வாகனமண்டபங்களில்  வரிசையா வாகனங்களை நிறுத்தி  பாதுகாப்பா வச்சுருக்காங்க.
கோவில் படு சுத்தம்!  உள்பிரகாரத்தில் துளிக் குப்பை இல்லாமல் பார்க்கவே அருமை!
கோவிலின் தலவிருட்சம் மூங்கில். அதனால்  மூலவருக்கு வேணுபுரீஸ்வரர் என்ற பெயரும் இருக்கு!

நம்ம அருணகிரி நாதருக்கு, மயில்வாகனத்தில் முருகன் தரிசனம் கொடுத்தது இங்கேதானாம்!  திருப்புகழில் இந்த சம்பவம் பற்றிப் பாடி இருக்காராம்.

இங்கே இருக்கும் நந்தீஸ்வரர் அதிக சக்தி உள்ளவர் என்பதால் பிரதோஷம் ரொம்பவே விசேஷமாம்!

இன்னும் கொஞ்சநேரம் இருக்கலாம் என்ற ஆசை இருந்தாலும்....  ரொம்ப இருட்டுமுன்   விழுப்புரம் போய் சென்னை ஹைவே பிடிச்சுடணும் என்பதால் கிளம்பிட்டோம்.

ராத்திரி ஒன்பதே காலுக்கு லோட்டஸ் வந்து சேர்ந்தாச். ரூம் சர்வீஸில் ஒரு தோசையுடன்  இந்த நாள் முடிஞ்சது!

தொடரும்..........  :-)

படங்களை இங்கே தனி ஆல்பத்தில் பார்க்கலாம் :-)


14 comments:

said...

திருவிளையாடல் படத்தில் பார்த்திருக்கும் அந்தக் காட்சிகள் நடைபெற்ற இடம் இதுதானா? அட! 18 வயசுக்குள்ளேயே இரண்டு திருமணம்! அவருக்கு வாரிசுகள் உண்டா?!! கோவில் மிக மிக அழகாக இருக்கிறது.

said...

அருமை. நன்றி. வணக்கம்.

said...

நமக்குக் கதைகளுக்கா பஞ்சம் அள்ள அள்ளக் குறையாமல் வருமே ஆன்மீகப் பதிவர்களின் வரம்

said...

//காவிரி, தென்பெண்ணை பாலாறு, தமிழ்கண்டதோர் வைகை பொருநை நதி.... மேவிய ஆறு பல ஓடுன காலம் எல்லாம் போச்சு. வறண்டு போய்க்கிடக்கும் ஆற்றைப் பார்த்தால் நமக்குத்தான் கண்ணில் கங்கை....//

உங்களின் பயணக்கதை போல இந்த வரிகளும் மிக அழகு, அருமை!

said...

திருவெண்ணெய்நல்லூர்... பேர் கேள்விப்பட்டதோட சரி.

உங்க பதிவைப் படிக்கிறப்போ திருவருட்செல்வர் படம் பாக்குற மாதிரியே இருக்கு.

நீங்க நெனச்ச மாதிரியே எனக்கும் அந்த மொதப் பெண் நிலையத்தான் நானும் ரொம்ப யோசிச்சிருக்கேன். மணவறைல உக்காந்து எழுந்த பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம்? அதுவும் அந்தக் காலத்துல? இவராவது ரெண்டோட மூனா வெச்சு வாழ்ந்திருக்கலாம். என்னவோ.. எனக்குப் பிடிக்கல.

பொள்ளாப் பிள்ளையார்தான் சரியான பேரு.

வாதாடீசுவர்னு சொல்லி வழக்குப் பரிகாரம் வேறையா? இது மாதிரி இன்னும் சில பரிகாரங்கள் நம்மளே உருவாக்கலாம் போல.

பெத்தவங்களுக்கும் பிள்ளைகளுக்கும் சண்டைன்னா பழனிக்குக் காவடி எடுத்தா சரியாப் போயிரும்.
எங்கயாவது போட்டிக்குப் போனா ஜெயிக்கிறதுக்கு திருச்செந்தூருக்கு போய் தங்கரதம் இழுக்கனும்.
கல்யாணம் நடக்கனும்னா ஆண்டாள் கோயில்ல மாலை கட்டிப் போடனும் (இது ஏற்கனவே இருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல).
இரத்தக் கொதிப்பு இருந்தா உ(ஒ)ப்பிலியப்பருக்கு நேர்ந்துக்கனும். நேர்த்திக்கடன் முடியுற வரையும் உப்பு சேக்கவே கூடாது.

இன்னும் நெறைய சொல்லலாம். இப்போதைக்கு இத்தோட நிறுத்திக்குவோம்.

said...

ஆஹா, புராண காலத்திய காதல் கதை.

said...

திருவெண்ணெய்நல்லூர் தரிசனம் கிடைக்கப்பெற்றோம்.

said...

வாங்க ஸ்ரீராம்.

வாரிசு இருந்துருக்காது.....வாரிசாகப் பிறக்க இன்னொரு தேவலோக சாபம் யாருக்குக் கிடைச்சதுன்னு தெரியலையே.... புள்ளகுட்டின்னு ஆனா கமிட்மென்ட் ஆகிப்போதுல்லே....

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அதே அதே.... கதைகளின் சுரங்கம்தான் !

said...

வாங்க மனோ.

ரசிப்புக்கு நன்றி.

ரொம்ப நாளாச்சே பார்த்து! நலம்தானே?

said...

வாங்க ஜிரா.

பாவம் அந்தப்பொண்ணு. ஒருவிதத்துலே தப்பிச்சதுன்னும் சொல்லலாம். இவருக்கு ஆயுசு வெறும் 18. இளம்விதவையாக் கஷ்டப்படாமத் தப்பிச்சாங்க. அந்தக் காலத்தில் கைம்மை நிலை அடைஞ்சவங்க வாழ்க்கை ரொம்பவேக் கொடுமையா இருந்துருக்கும், இல்லே?

கோவிலுக்கு வரும்படி வருதுன்னா..... பரிகார லிஸ்ட் வளர்ந்துக்கிட்டே போகும் என்பதே உண்மை !

said...

வாங்க கந்தசாமி ஐயா.

காதலே புராணம்தானே? :-)

said...

வாங்க மாதேவி.

ஓம் நமசிவாய !!!!