பகல் சாப்பாடு 12.15 மணியில் இருந்து 2.30 வரை. ராத்திரின்னா 7.15 முதல் 8.30 வரை. பரவாயில்லையே...இந்த அரேஞ்ச்மெண்ட் நல்லா இருக்கே! சோறு கண்ட இடம் சொர்க்கம்ன்னு இருந்துறலாமா!!! இருட்டப்போகுது. கொஞ்சமாவது வெளிச்சம் இருக்கும்போதே பார்த்துட்டு அப்புறம் ஹொட்டேலைத் தேடிப்போகலாமுன்னு முடிவு ஆச்சு. மங்களுரில் நமக்கு ட்ராவல் வண்டி ஏற்பாடுசெஞ்ச ராவ் சொன்ன இடத்துக்குத்தான் போகலாமுன்னு இருக்கோம். மொதல்லே இதைப் பார்க்கலாம்.
பெரிய நுழைவு வாசல். காலணிகளை அங்கே விட்டுட்டுக் கோட்டை மாதிரி இருக்கும் வளாகத்துக்குள்ளே நுழைஞ்சோம். தோட்டம் பிரமாதம். ஷாரதாம்பா கோவிலுக்கு இப்படிப்போன்னு இடதுபக்கம் அம்புக்குறியும் சாப்புடணுமுன்னா இன்ன நேரத்துக்கு இப்படிப்போன்னு வலதுபக்கம் காமிக்கும் அம்புக்குறியுமா நம்மை வரவேற்பது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ருங்கேரி மடம். நேர் எதிரா தோரணவாயில் பிள்ளையார் சந்நிதி. விக்கினம் வராமலிருக்க அந்த விக்னேஸ்வரனை முதலில் கும்பிட்டுக்கலாமுன்னு உள்ளே நுழைஞ்சோம். வெள்ளியில் செய்த வேலைப்பாடுகளுடன் உள்ள கதவு மூடி இருக்கு. கதவின் நிலையில் மேலே நடுவா புள்ளையார் உருவம் மாலை அலங்காரத்துடன். ஒரு ஏழெட்டுப்பேர் நின்னுருந்தாங்க. சரி. அநேகமா இப்பத் திறந்துருவாங்கன்னு நாங்க(ளும்) நினைச்சோம்.நின்ன சனம் கதவைக் கும்பிட்டுட்டு போகுது. அங்கே இருந்த அர்ச்சகரிடம்(?) சந்நிதி எப்போ திறப்பாங்கன்னு பவ்யமா கேட்டேன். அதான் இதுன்னு கதவைக் காமிச்சார். அட ராமா!!! நிலையில் இருக்கும் பிள்ளையார்தான் இந்த சந்நிதிக்கான ஸ்வாமி.
நமக்கிடது பக்கம் இருக்கும் வழியில் போகலாம். மாதா சரஸ்வதி, ஷாரதேன்னு மனசுக்குள் பாடிக்கிட்டே போய் வலப்பக்கம் திரும்பினால்...... அட போங்கப்பா. எத்தனைதரம்தான் இப்படி மூச்சடைச்சு நிக்கிறது!!!! நமக்கு வலப்பக்கம் புதுக்கோவிலும் கண்ணுக்கு நேரா பழைய ஆனால் பார்க்க அம்சமா வித்தியாசமா ஒரு கோவிலும் இருக்கு. ஆஹா.....இப்படி ஒன்னை ஹளபேடு, பேலூர் பயணத்தில் (அப்போ நான் பதிவர் இல்லை! அது ஆச்சு 16 வருசம் முந்தி) பார்த்தமே!வித்யாசங்கரர் கோவிலுன்னு பழைய கோவிலுக்குப் பெயராம். நல்ல உசரமான படிக்கட்டுகளுடன் மூணு பக்கமும் வாசல்களுமா நிக்குது. வெளிப்புறம் முழுசும் விதவிதமான சிற்பங்கள். எதைச் சொல்ல எதைவிடன்னு தெரியலை. முடிஞ்சவரை க்ளிக்கோ க்ளிக்தான். புத்தர், தீர்த்தங்கரர், கிருஷ்ணர், ராமர்ன்னு விஷ்ணுவின் அவதாரங்கள், 1 சிவப்புராணங்களில் வரும் கதைநாயகர்கள்ன்னு ஏராளம், ஏராளம்.
விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆரம்பிச்சு வச்ச ஹரிஹரர், புக்கர் உடன்பிறப்புகள் கட்டிய கோவில். காலக்கணக்கு சொல்லுது 1338ன்னு. சரித்திர ஆராய்ச்சிகளில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் சொல்றாங்க இந்தக் கோவில் சாளுக்கியர்கள் (ஹொய்சாலா பேரரசு) கட்டுனது. அதைத்தான் விஜயநகர மன்னர்கள் பராமரிச்சு மேம்படுத்தி இருக்காங்கன்னு. (இதுதான் உண்மையாக இருக்கணும். இதே மாதிரிக் கோவில்களை 16 வருசம் முந்தி பார்த்தேனே) எப்படியானாலும் அருமையான சிற்ப வேலைப்பாடுகளுடன் துங்கா நதிக்கரையில் கம்பீரமா நிக்குது இது!
துங்கா நதித்தண்ணீர் ரொம்ப சுவையா இருக்குமாம். 'துங்கா நீர் குடிக்க, கங்கா நீர் குளிக்க'ன்னு ஒரு பழமொழிகூட இருக்குன்னா பாருங்க,
படியேறி உள்ளே போனால் அற்புதமான வேலைப்பாடுகளுடன் 12 தூண்கள். இதை ராசித்தூண்கள்ன்னு சொல்றாங்க. 12 ராசிகளைக் குறிக்குதாம். ரொம்ப விசேஷமான கோவிலின் அமைப்பு காரணம் சூரியன் அந்தந்த ராசிகளில் ப்ரவேசிக்கும்போது அந்த ராசிக்குண்டான தூணின் மீது காலைச்சூரியன் விழு(மா)ம். நம்மைப்போல ராத்திரியில் போய் நின்னா..... சொல்றதைக் கேட்டுக்கிட்டுத்தான் வரணும். தூண்களுக்கு நடுவிலே தரை லெவலில் இருந்துசின்னஇறக்கமா ஒரு ரெண்டு இஞ்ச் பள்ளத்திலே வட்டமான ஒரு டிஸைன். கவனிக்காம குறுக்கே நுழைஞ்சால் கால்தட்டிப்போகும். அங்கங்கே சிலர் தூண்களுக்குப் பக்கத்தில் உக்கார்ந்து கண்மூடித் தியானம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க., சின்னதா ஒரு ஒன்னரை அடி உயரமான மேடைபோன்ற இடத்தில் வெள்ளைப்பட்டுடுத்தி அலங்காரமா ஒரு அம்மன் சிலை ஒரு பக்கமாவும், லிங்கரூபத்தில் முகமூடி போட்ட சிவனும் புள்ளையாரும் இருந்துததா நினைவு. என் கவனம் எல்லாம் அந்த அம்பாள் மேலேயே நின்னு போச்சு. யார்ன்னு கேட்டேன்(மடத்தனமா) ஷாரதான்னு பதில் கிடைச்சது. சரஸ்வதி. வெள்ளைக் கலையுடுத்தி வீற்றிருக்கிறாள். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய விசேஷ இடமாம். ஒரு பெரிய தாம்பாளத்திலே சனங்க காணிக்கையை போட்டுட்டுப் போறாங்க. சில்லறை இல்லையேன்னு முழிக்க வேணாம். நாம் பெரிய நோட்டைப் போட்டுட்டு தட்சிணை போக மீதிச் சில்லரையை எடுத்துக்கலாம். யாரும் யாரையும் ஒன்னும் சொல்றதில்லை. முன்னேரு போனவழியைப் பின்னேர் தொடர்ந்தது:-)
' மாலிக் காஃபூர்' படையெடுப்பின்போது ரொம்ப அடிபட்ட கோவில்களில் இதுவும் ஒன்னாம். நல்லவேளையா அப்படியே விட்டுடாமல் சீர்படுத்திப் பராமரிச்சு வச்சுருக்காங்க. கோவில் நல்ல உயர மேடையில் இருப்பதால் கதவருகில் நின்னாலே சுத்துப்புறம் எல்லாம் நல்லாத் தெரியுது. நதிக்கரையிலே பார்க் ஒன்னு இருக்காம். அங்கே போக ஒரு பாலமும் போட்டுருக்காங்க. மசமசன்னு இருட்டுலே என்னத்தைப்போய் பார்க்கன்னு விட்டுட்டேன். இந்தப் பக்கம் கொஞ்ச தூரத்துலே கொஞ்சம் உசரமான இடத்துலே மேற்குத் தொடர்ச்சி மலையை ' பேக் ட்ராப்' பா வச்சு ஒரு புதுக்கோவில் தெரிஞ்சது. எந்த வழின்னு தெரியலை:(
ஸ்ரீ ஷாரதாம்பாள் கோவிலுக்கு போகலாம். ஆதிசங்கரர் ஆரம்பிச்சு வச்சது. இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்? அவர் இந்தப் பக்கம் போன சமயம், பயங்கரமான வெய்யில் காலம். கர்ப்பிணித் தவளை ஒன்னு மூச்சு வாங்க வலியில் துடிக்குது. சுள்ளுன்னு வெய்யில்வேற அதன் தலையில்:( இதைச் சகிக்கமாட்டாத நாகம் ஒன்னு தன் படத்தை விரித்து அந்தத் தவளைக்குக் குடை பிடிச்சுக்கிட்டு இருந்துச்சாம். ஜென்ம விரோதிகள் இப்படி பகைமை பாராட்டாமல் இருந்ததைப் பார்த்த அவர் இது புண்ணிய பூமின்னு இங்கேயே அன்னைக்குக் கோவில் கட்டினாராம். ஷாரதா தேவியைப் பாதுகாக்க, கிழக்குலே காலபைரவர், மேற்கிலே ஆஞ்சநேயர், வடக்குலே காளி, தெற்கில் துர்க்கான்னு நாற்புறமும் சில கோவில்களையும் கட்டுனாராம். இவருக்கு இந்த நாலு என்ற எண் மேல் ஏகப்பட்ட வாஞ்சை போல இருக்கு.
ஆதிசங்கரர் பாரதத்தின் நான்கு புறமும் தர்மத்தைப் பரப்பவும் அத்வைதக் கொள்கையைப் பரப்பவும் நாலு மடங்களையும் ஸ்தாபிச்சார். ஜ்யோதீர் மடம் வடக்கே பத்ரிநாத் அதர்வணம், கிழக்கே பூரி (ஒடிஸ்ஸா) கோவர்தன மடம் ரிக், மேற்கே காளிகா மடம் த்வாரகை சாமவேதம், தெற்கே ஷாரதா மடம் யஜூர் ன்னு நாலு பீடங்கள். நான்கு வேதத்துக்கும் ஒவ்வொன்னுன்னு இருக்கு.
கோபுரம்தான் சின்னதே தவிர கோவில் உள்ளே பெருசாத்தான் இருக்கு. இங்கேயும் தங்க விக்கிரஹம். ஆனால் இன்னிக்கு முத்துக்களால் ஒரு அலங்காரம். ரொம்ப அழகா இருந்தாள். படம் எடுக்க அனுமதி இல்லைன்னு போர்டு சொல்லியது. நவராத்ரிப் பண்டிகை இங்கே அமர்க்களப்படுமாம். பத்து நாளும் அம்மன் ஊர்வலம் விதவிதமான அலங்காரத்தில் இருக்குமாம்.

இந்த்ரி அலங்காரத்தில் உள்ள படம் இது. வேறு வழி இல்லாததால் இவை
ரெண்டும் 'சுட்ட படம்'வளாகத்துலே விசேஷங்களுக்காக ஒரு ஹால், ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி சபா பவன் இருக்கு. மைசூர் அரண்மனை தர்பார் மண்டபத் தூண்கள் போலவே இங்கேயும் கலர்ஃபுல்லான தூண்கள். அம்பாளின் உருவச்சிலைகளும் வச்சுருக்காங்க. போதிய வெளிச்சம் இல்லாததால் படம் சுமாராத்தான் வந்துச்சு. வளாகத்தின் ஓர் அறையில் கோவிலுக்கு வெள்ளி & தங்கத்தகடுகள் செய்யும் வேலைகள் நடக்குது. நல்ல மெல்லிசாத் தகடுகளைத் தட்டி வடிவமைக்கிறாங்க.
அத்வைதா ஹொட்டேல் புத்தம் புதிது. இன்னும் லிஃப்ட் போடலை. 3 . ரெஸ்டாரண்ட் கிடையாது. எல்லா அறைகளும் ரெடியாகவுமில்லை. 'ரூம் வித் துங்கா நதி வியூ' எடுத்துக்கிட்டோம். இருட்டில் ஒன்னும் தெரியலை. பொழுது விடியட்டும் பார்க்கலாம்.
சாப்பாட்டுக்காக மறுபடிக் கிளம்பி ஊருக்குள் வரவேண்டி இருந்துச்சு. விசாரிச்சப்ப பாதி வழியில் ஒரு ரெஸ்டாரண்ட் இருக்காம். ஆனால் மடத்துக்கிட்டே போயிட்டால் அட்டகாசமான ஒன்னு இருக்குன்னாங்க. ஹொட்டல் குருன்னு சொன்னதா நினைவு.
அங்கே போனால் இடமே ரொம்ப சுமார். மனசுக்குப் பிடிக்கலைன்னு வெளியே வந்துட்டோம். வேற எதாவது இருக்கான்னு தேடுனதில் ஒரு மெஸ் மாதிரி கண்ணுலே பட்டுச்சு. வாசலில்' டிஃபன் ரெடி'ன்னு போர்டு.
வீடுதான். தெருவிலிருந்து பார்த்தால் ஆளோடியில் எதிரும் புதிருமா ரெண்டு வரிசையா இலை போட்டுப் பரிமாறிக்கிட்டு இருக்காங்க. நல்ல சுவையா இருக்கும் போல. பயங்கரக்கூட்டம். ரெண்டு இலைக்கும் நடுவில் இருக்கும் சாண் அகல இடத்தில் எவர்சில்வர் பக்கெட்டுகளுடன் சட்னி, சாம்பார் வகையறாக்களை ஓடி ஓடி இலையில் ஊத்தறதைப் பார்த்தேன். எங்கே இலையை மிதிச்சுருவாங்களோன்னு எனக்கு ஒரே திக்திக். ஐயோ இப்படிப் பதறிக்கிட்டு என்னால் சாப்பிட முடியாது. மேலும் கீழே உக்காரணும். விஷப்பரிட்சை தேவையா?
மரியாதையாக் கிளம்பி பாதி வழியில் இருக்கும் ரெஸ்டாரண்டுக்கு வந்தோம். மாடி ஏறனும். கோபால் 'ஆசைப்பட்ட செட் தோசை' அவருக்கு. எனக்கு ஒரு ப்ளெயின் தோசை. ப்ரஷாந்துக்கு வேணுங்கறதைக் கொடுக்கச் சொல்லியாச்சு. ஏதோ மீல்ஸ் வாங்கிக்கிட்டார்.அறைக்குத் திரும்பிக் கட்டையைக் கிடத்தினோம்.
Friday, May 14, 2010
வித்யாஷங்கரும் ஷாரதையும்
Posted by
துளசி கோபால்
at
5/14/2010 01:33:00 PM
23
comments
Thursday, May 13, 2010
கரண்டி எங்கே போச்சு? சொல்லேம்மா, அன்னபூரணேஸ்வரி!
குதிரேமூக்கிலிருந்து 22 கி.மீ. தூரத்திலே இருக்கும் ஹொரநாடுக்குப் போறோம் இப்ப. கிளம்பி இன்னொரு மலைப்பாதை வழியா கிழக்கு நோக்கிப் போறோம். திடீர்னு தளதளன்னு டீ எஸ்டேட்டுகள். ஒரு எஸ்டேட்டில் புது இலையில் டீ போட்டுத்தரோம் வாங்கன்னு போர்டு இருக்கு. ஆஹா.... திரும்பி வரும்போது இங்கே டீ குடிக்கணுமுன்னு மனசுலே குறிச்சு வச்சேன். சாலை ரொம்பச் சுமார் ரகம். தனியார்களின் எஸ்டேட்டின் வசதிகளைப் பொறுத்து அவுங்கவுங்க ஏரியாவில் சுமாராவும், ரொம்ப மோசமாவும் இருக்கு. இருவது நிமிசப் பயணமுன்னு இருப்பது நமக்கு முக்கால்மணி நேரம் எடுத்துச்சு. ரொம்ப வளைஞ்சும் நெளிஞ்சும் போகும் சாலை:(ஸ்ரீ ஆதிஷக்தியாத்மகா அன்னபூர்ணேஸ்வரி சிக்மகளூர் வட்டத்தைச்சேர்ந்த ஹொரநாடு என்ற ஊரில் கோவில் கொண்டு பக்தர்களுக்குச் சோறு போட்டுக்கிட்டு இருக்காள். வரும்வழியிலேயே ஸ்ரீ ஈஸ்வரகாஷி அம்ருதேஸ்வரா ஸ்வாமி திருக்கோவில் ஒன்னு கண்ணுலே பட்டாலும், வண்டியில் இருந்தே ஒரு கும்பிடு போட்டுட்டு அம்மா'ன்னு இங்கே ஓடி வந்தோம். மலைத்தொடர்களுக்கிடையில் பள்ளத்தாக்கு அட்டகாசமான வயல்வெளிகளோடு சும்மா சிலுசிலுன்னு ஜொலிக்குது. நெல் போட்டுருக்காங்க.
ஊருக்குள்ளே நுழையும்போதே ஸ்ரீ துர்காம்பா லாட்ஜ், அரண்மனை செட்டிங் போட்டாப்பலே கம்பீரமா நிக்குது. இவ்வளோ பெரிய ஊரா இதுன்னு பிரமிப்புதான் எனக்கு. பேசாம இங்கேயே தங்கிடலாமான்னு நப்பாசையா இருந்ததென்னவோ உண்மை. கோவில் இருக்கும் தெருவுக்குள் நுழையுமுன்பு பளீர் வெள்ளையில் ஒரு அழகான சின்ன கோவில். நம்ம நேயுடு பல இசைக்கருவிகளை வாசிக்கும் ஸ்டைல்களில் வரிசையா மண்டபத்துமேலே உக்கார்ந்துக்கிட்டு கச்சேரியை அமர்க்களப் படுத்துறார். இப்போ மூடி இருக்கு. வரும்போது பார்த்துட்டுப் போகணும்.
சுத்திவர மலைகளும் மரங்களும் தெங்கும் கமுகுமா விளைஞ்சு நிற்க கோவில் கொஞ்சம் உயரமான இடத்தில். அலங்கார தோரணவாயிலில் இருந்து படிக்கட்டுகள் தொடங்குது. மேலே ஏறிப்போனோம். நம்ம வீடுகளில் மொட்டை மாடியில் பாய்களை விரிச்சுப்போட்டு வெய்யிலில் பலசரக்கைக் காயவைப்பதுபோல என்னென்னமோ காயவச்சு இருக்காங்க. அதெல்லாம் 'பாக்கு'ன்னார். பாக்கலாமுன்னு கிட்டே போனால் வெல்லக் கட்டிகள், புளிகள்.
இன்னொரு பக்கம் தலையணைகளும்,. ஜமுக்காளங்களும், போர்வைகளுமா வெய்யில் காயுது. ஆஹா.....பக்தர்களுக்குச் சாப்பாடும் போட்டுத் தங்க இடமும் கொடுக்கறாங்க. 'அன்னபூரணி, நல்லா இரும்மா'ன்னு சொல்லிக்கிட்டே கோவிலுக்குள் நுழைஞ்சேன். இங்கே ஆண்கள் மேல்சட்டையைக் கழட்டிறணும். பெண்களுக்குப் பிரச்சனை ஒன்னும் இல்லை. பக்தர்கள் வயிறு வாடாமப் பார்த்துக்கவே அவளுக்கு நேரம் சரியா இருக்கு. இதுலே புடவை கட்டு, சுடிதார் போடாதேன்னெல்லாம் சொல்லணுமா?
இதுவும் திண்ணைகள் ஓடும் கேரள டிசைன் கோவில்தான். நடுவிலே கருவறை. பக்கவாட்டு வழியாக சந்நிதிக்குள் நுழையணும். கூட்டம் வரிசையா வரணுமுன்னு கம்பித்தடுப்புகள் போட்டு வச்சுருக்காங்க. நாம் போனபோது சொன்னால் நம்புங்கோ..... நாங்கள் ரெண்டே பேர்தான். நல்லா கிட்டக்கப்போய் சேவிக்க முடிஞ்சது. நெடுநெடுன்னு ஆறடிக்குமேலே உசரம். ஒரு பீடத்துலே வேற ஏறி நிக்கிறாள். கையில் சங்கு சக்கரம் தாங்கிய கோலம். புடவையும் பூக்கள் அலங்காரமும் அட்டகாசம். இப்படி மின்னறாளேன்னு பார்த்தால் தங்க விக்ரஹமாம்! சமீபத்துலே கோவிலைப் புதுப்பிச்சுருக்காங்க. இந்த விக்கிரஹமும் புதுசுதானாம். எல்லாம் புதுசுன்றதால் புதுப்பெயரும் கொடுத்துருக்காங்க. நம்ம அன்னபூரணி இப்போ ஸ்ரீ ஆதிஷக்தியாத்மக அன்னபூர்ணேஸ்வரி. மனசாரக் கும்பிட்டுட்டு பிரகாரம் சுத்த வெளியே வந்தோம். கோவிலின் தலவரலாறு கிடைக்குமான்னு விசாரிக்கப்போனால் அரிசி கிலோ 15 ரூபாய்ன்னு போட்டுருக்கு வழிபாடுகள் பட்டியலில்.வர்றவங்களுக்கெல்லாம் மூணு நேரமும் சோறு போடறாளே, நாமும் . இவளுக்கு எதாவது கொடுக்கணுமுன்னு மனசுலே தோணுச்சு. (ரொம்ப அல்ப்பமா!) ரெண்டு கிலோவுக்குப் பணம் கட்டி ரசீது வாங்கினோம். அதை எடுத்துக்கிட்டுப்போய் வெளிப்பிரகாரம் சுத்தும்போது ஒரு மூலையில் இருக்கும் கோவில் அர்ச்சகரிடம் கொடுக்கச் சொன்னாங்க. அவர் ரசீதை வாங்கிக்கிட்டு எங்க ரெண்டு பேருக்கும் 'அம்மா கொடுத்த வகை'யில் பிடி அரிசி வழங்குனார். வீட்டுலே அரிசிப்பானையில் கொண்டு போய் வச்சுக்குங்கன்னார். என்றைக்கும் நமக்கு சாப்பாட்டுக்குக் குறைவே வராதுன்றது ஐதீகம். நம்ம வீட்டுலே அரிசிப்பானை ஏது? எப்போ கிளம்பறோமுன்னு தெரியாததால் ஒரு கிலோ ரெண்டு கிலோவுக்கு மேலே வாங்கறதே இல்லை இப்பெல்லாம்.இந்த அரிசி ரொம்பவே சாதாரணத் தரத்தில் இருக்கு. ஈர அரிசி வேற. இது ஒரு சிம்பாலிக்காக் கொடுக்கறாங்கன்னு நினைச்சுக்கணுமே தவிர , இதைக் கொண்டுபோய் அரிசிப்பானை/ட்ரம்மில் போட்டுறாதீங்க. இருக்கும் மற்ற அரிசியும் கெட்டுப்போக ச்சான்ஸ் இருக்கு. கோவில் சாமானாச்சேன்னு உணர்ச்சிவசப்படுபவர்கள் ஒரு சின்ன டப்பாவில் போட்டு பூஜை அறையிலே வச்சுக்கலாம் என்னைமாதிரி. ஐதீகங்களை நம்புங்க. பிரச்சனை இல்லை. நம்புனாத்தான் கடவுள்.
அப்பதான் ஞாபகம் வருது, அன்னபூரணி கையில் கரண்டியைப் பார்க்கலையே! இருந்துச்சா, இல்லையா? இன்னொரு முறை பார்க்கலாமுன்னு சொன்னால் இவர் அதுக்குள்ளே சட்டையைத் திரும்பப் போட்டுக்கிட்டார். நான் மட்டும் சந்நிதிக்குள் பாய்ஞ்சேன். தனி ஒருவளா அவள் முன்னே நிக்கிறேன். மேலே ரெண்டு கையில் சங்கு & சக்கரம். கீழே ரெண்டு கைகளும் அபய ஹஸ்தமா இருக்காள்,
சந்நிதியில் ஒரு ஓரமா பண்டிட் ஒருத்தர் ஏதோ புத்தகத்தைப் படிச்சு உருப் போட்டுக்கிட்டு இருந்தார். 'கரண்டி எங்கேன்னு கேட்டேன். இல்லையாம்! அப்பச் சோறு விளம்ப? "தேவி கி ஹாத் மே(ய்)ன் சமச் நஹி க்யா?" தலையைத் தூக்கிப் பார்த்துட்டு தலையை இடமும் வலமுமா ஆட்டறார். அச்சச்சோ......கரண்டியைத் தொலைச்சுப்பிட்டள்!!!!
பொதுவா அன்னபூரணின்னு நினைச்சாலே ஒரு கையில் பாத்திரமும் மறுகையில் கரண்டியுடனும் உயிர்களுக்கு அன்னம் விளம்பும் உருவம்தானே மனக்கண்ணில் வருது! இப்படித்தான் காசியில் இருக்கும் அன்னபூரணியைப் 'படத்தில்' பார்த்த நினைவு.
வெளியே வந்து நுழைவாசலில் இருக்கும் படத்தைக் கூர்ந்து கவனிச்சேன். 'நோ சம்ச்சா!!!!' மொட்டைமாடியில் சுத்திவர நிறைய கடைகள் பக்திப்பொருட்கள் விற்பனையில். கோவிலுக்கும் வருமானம் வரணுமே...... செலவு கொஞ்சமாவா ஆகும்?கீழே இறங்கி வந்தவுடன் அங்கேயும் கோவில் வளாகத்துலே கடைகள் இருக்கு. கஷ்டப்பட்டு எதுக்கு நிலத்தில் குழி வெட்டி, பந்தல் போட மூங்கில் நடணும்? இதோ ஒரு 'சுருக்' வழி! ஹனுமன் கோவில் இன்னும் திறந்த பாடில்லை. நமக்கோ இன்னும் ஒரு மணி நேரப் பயணம் இருக்கு. பொழுது சாயுமுன்னே போய்ச்சேரணும், இன்னிக்கு ராத் தங்கலுக்கான இடத்துக்கு.
ப்ரஷாந்துக்கு என்னமோ ஆயிருச்சு! வயசுப்பையனை டீ எஸ்டேட் மோகினி ஏதாவது வர்ற வழியில் பிடிச்சுருச்சோ! வந்தவழியே குதிரேமுக் வரை போகப்போறோமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தவளுக்கு அந்தப்பக்கம் போய் புது 'டீ' குடிக்கும் அதிர்ஷ்டம் இல்லாமப்போச்சு. மலைப்பாதையிலேதான் போறோமுன்னாலும் வேற ஒரு புதுவழியா இருக்கு. இதுலே தப்பான ஒரு வழியில் போயிட்டு மறுபடித் திரும்பி வந்தோம். 'வாயிலே இருக்கு வழி'ன்னு வாயைத் திறந்து கேட்டால்தானே? என்னவோ எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி 'சர் சர்'ன் னு திருப்பிக்கிட்டே போனால் எப்படி? வளைவுகளோ இந்தப் பாதையில் கொஞ்சம் அபாயமா இருக்கு. 'மெதுவாப் போ'ன்னாலும் சாதாரண இடத்துலே மெள்ளப் போறதும், கரெக்ட்டா ஹேர்ப்பின் பெண்ட் இருக்கும் இடத்தில் சர்னு வேகமாத் திருப்புறதுமா இருந்ததுலே எனக்கு பேஜாராப் போயிருச்சு. நீங்களே பாருங்க படம் எடுக்கலாமுன்னா எப்படி விழுந்துருக்குன்னு:( .வேகம் வேகம் வேகம். 'ஸ்பீடு கில்ஸ்'ன்னு எங்க நாட்டுலே எல்லா இடத்துலேயும் போட்டுருப்பாங்க. இங்கே? போனா போகட்டும். விதி முடிஞ்சது. அம்புட்டுதான் இல்லையா?இந்தப் பாதையில் ஏற்கெனவே வந்துருக்காரான்னு கேட்டால் இல்லையாம்! இந்தப் பாதையில் ஒன்னுரெண்டு டீ எஸ்டேட்டுகள் இருந்தாலும் காப்பிச் செடிகள் ஏராளமா நிக்குது! கோபாலுக்குப் பயங்கர மகிழ்ச்சி. அவருக்குக் கொசுவத்தி ஏத்தியிருக்கு இந்தச் செடிகள்! 'இங்கே பாரு, அங்கே பாரு'ன்னு ரொம்ப உற்சாகமா வர்றார்.
'ஏம்ப்பா ப்ரஷாந்து, இப்போ போகப்போகும் இடத்துக்கு நீர் போனதுண்டா?' ன்னு கேட்டால், பதில் வருது 'ஆமாம்'ன்னு. எப்போ போனாராம்? குழந்தையா இருந்தப்ப அப்பா அம்மாகூட! விடிஞ்சது வெள்ளாமை!சின்னச்சின்ன கிராமங்கள் கடந்து போறோம். நாலைஞ்சு வீடுகள் அவ்ளோதான். ஆனால் குற்றங்கள் இல்லாத சமூகம். சின்னப் பிள்ளைகள் கூட பள்ளிக்கூடப் பையைத் தோளில் போட்டுக்கிட்டு தன்னந்தனியா ரோடோரமா விளையாடிக்கிட்டே போகுதுகள்! நகரத்துலே யாரையாவது நம்ப முடியுதா? எங்க நாட்டுலே ஸ்ட்ரேஞ்சர் டேஞ்சர்ன்னு சொல்லி வளர்க்கிறோம். நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப ரொம்ப கேர்ஃப்ரீ லைஃப்தான். அப்ப சொஸைட்டி கொஞ்சம் ஒழுங்கா இருந்துச்சுன்னுதான் நினைக்கிறேன். இல்லேன்னா நான் போட்ட ஆட்டத்துக்கு...... என்னென்னமோ நடந்துருக்கணும்!
ஒரு மூணு சின்ன மண்சாலை பிரியும் சந்திப்பில் சில கடைகள் கண்ணில் பட்டது. அதுலே ஒன்னு டீக்கடை. ப்ரஷாந்துக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்துச் சரிப்படுத்தலாமுன்னு வண்டியை நிறுத்தி இறங்கினால், ஆ ச்சாயா பீடிகை ஒரு சேட்டண்டே! ஆயிக்கோட்டே! நமக்கு ஒரு விரோதமும் இல்லா.! கொறச்சு சம்சாரிச்ச சேஷம் ப்ரஷாந்தும் கோபாலும் சாய குடிச்சு. எனிக்கு ஒரு கருக்கு. பின்னேயாணு போத்யப்பட்டது ப்ரஷாந்த் செல்லுன்ன வழி தெற்றா:( சரிக்குள்ள வழி ஈ ச்சாயாப் பீfடிகையிண்டே இடத்து வசம் திரிச்சு மறிச்சுப் போகேணும்.ஈ ப்ரஷாந்த் சக்கன், காரை தெற்றாய வழியிலே திரிச்சு நிறுத்தி இருந்நு. எண்டே ஈச்வரா.... ரக்ஷிச்சோ...... க்ஷமிக்கணும் கேட்டோ..... எந்தாணு அறியாத்தே மலையாளம் வந்நு...... போகட்டே...மனசிலாயிக்காணும் அல்லே?
சில டீ எஸ்டேட்டுகளைக் கடந்தப்ப டீ இலை சேகரிக்கும் தொழிலாளிகள் ரெண்டு பேர் வேலையை முடிச்சுக்கிட்டு பையைத் தலையில் தொங்கவிட்டுக்கிட்டுப் போனாங்க. ஒரு சின்ன ஊரை அடுத்து சாலை ஓரமா ஒரு கோவில் படிக்கட்டுகல். பார்க்க அம்சமா இருக்கு. ஆனால் இனி அங்கெல்லாம் போய்வர நேரம் இல்லை. ரெண்டு க்ளிக்கோடு முடிச்சுக்கிட்டேன். இன்னும் 21 கி.மீ போகணும்.
'தீரே ச்சலோ..... ஹஸ்தே ஹஸ்தே'ன்னு ஜெபம் பண்ணுவதுபோலச் சொல்லிக்கிட்டே ஒன்னரை மணி நேரம் கடந்து ஊருக்குள் நுழைஞ்சோம். பட்ட கஷ்டம் எல்லாம் பாழாப்போகட்டுமுன்னு நம்மளை வரவேற்க ரெண்டு பேர் ரெடியா நிக்கறாங்க.
அவுங்களைப் பார்த்த இன்ப அதிர்ச்சியில் வண்டியை நிறுத்தச் சொன்னேன். அதுக்குள்ளே கோபால் ஜன்னலைத் திறந்து கை நீட்டுனவருக்குக் காசு கொடுத்தார். அப்போ இன்னொருத்தர் தனக்கும் வேணுமுன்னு காருக்குள்ளே ஜன்னல் வழியா 'கை'யை உள்ளேயே விட்டுட்டார். இருடா.... எடுத்துத்தரேன்னு கைப்பையைத் திறந்து எடுக்கும்வரை பொறுமையா நீட்டுன கை நீட்டியபடி! அடடா....என் செல்லமே!மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு.
Posted by
துளசி கோபால்
at
5/13/2010 04:59:00 AM
26
comments
Labels: Annapoorani, Horanadu, அனுபவம்
Wednesday, May 12, 2010
முன்னுரிமை 'அது'க்காம்!!!!!
அலங்கார வளைவு வச்சு வரவேற்கும் தேசிய நெடுஞ்சாலையில் கண்குத்திப் பாம்பு போல கண்ணை நட்டுக்கிட்டே இருந்தேன். பாம்பு வந்தவுடன் அதுக்கு ரைட் ஆஃப் த வே கொடுக்கணுமே! முதல்லே பாம்புக்கு வழி விடு! இவ்வளவு வெயிலுக்கு 'அது' வராது. ஒருவேளை இரவிலும், அதிகாலையிலும் நடமாட்டம் இருக்கலாம்னு சொன்னார் கோபால்(உள்ளூர நடுங்கிக்கிட்டே!)
அருமையான ரோடு! நெளிவு சுழிவுகள் இருந்தாலும் குடலைப்பிரட்டும் கொண்டை ஊசி வளைவுகள் கிடையாது.
பாம்பு இல்லைன்னா என்ன? புலி இருக்கேன்னேன், இன்னொரு போர்டைப் பார்த்து:-)) குதிரேமுக் தேசியப்பூங்காவிலூடே போய்க்கிட்டு இருக்கோம். இந்த மலையின் ஒரு ஓரம் 'சட்'னு பார்த்தால் குதிரையின் மூக்கு போல நீண்டு இருக்கு(தாம்) அதான் குதிரை மூக்குன்றதை 'குதிரேமுக்' ன்னு பெயர்க்காரணமாகிருச்சு. நாமோ அதே மலைமேல் இருக்கும் நேஷனல் ஹைவேயில் பயணம் செஞ்சுக்கிட்டு இருக்கோம் இப்போ. எங்கேருந்து ஓரமா இருக்கும் மூக்கைப் பார்க்க?
காடு, அசல் காடா இருக்கு. நம்ம ஜெ.மோவும் லதானந்தும் மனசுலே வந்து போனாங்க.ப்ரிட்டிஷ்காரர்கள் ஆட்சியிலேயே இந்தப் பகுதியை ரிஸர்வா ஆக்கிருந்தாங்க. அப்புறம் இங்கே மலையின் ஒரு பக்கத்துலே இரும்புத்தாது கிடைக்குதுன்னு மலையைத் தோண்டிச்சுரங்கம் அமைச்சது மத்திய அரசு. ஒப்பந்தப்படி 25 வருசம் தோண்டிக்கோன்னு சொன்னதுதான். 2001 வது வருசம் ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு. அதுக்குப்பிறகு, இன்னும் கொஞ்சம் தோண்டிக்கட்டான்னு கேட்டு மறு ஒப்பந்தம் போட நினைச்சப்ப சுற்றுப்புறச்சூழல் கெட்டுப்போகுது. காட்டுலே இருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கு நல்லதுல்லை, மேலும் சுரங்கத்தில் இருந்து வரும் கழிவு நீர் பத்ரா நதியில் கலந்து மாசு ஏற்படுத்துதுன்னு போராட ஆரம்பிச்சாங்க. இந்தப் போராட்டத்துலே ஊர் மக்களும் கலந்துக்கிட்டு நெருக்கடி கொடுத்ததால் தோண்டும் வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சது 2005 வது வருசம்.
மலையின் அடுத்த பக்கம் அனுமதிச்சீட்டைக் கொடுத்துட்டு ஊருக்குள்ளே நுழைஞ்சோம். முதலில் அனுமதி வாங்குனதில் இருந்து ரெண்டு மணி நேரத்துக்குள்ளே நாம் அடுத்த பக்கம் போய்ச்சேர்ந்துறனுமுன்னு விதி இருக்கு. அதுக்கு மேற்பட்டால் ஒரு மணிக்கு 100 ரூபாய் வீதம் தண்டம் கட்டணும். தேசீய நெடுஞ்சாலையில் இருந்து விலகிக் காட்டுக்குள்ளே போகணுமுன்னா அதுக்குத் தனியா அனுமதி வாங்கிக்கணும். இந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் போது வழியில் வண்டியை நிறுத்தறது, வண்டியை விட்டிறங்கி வேடிக்கை பார்க்கிறேன்னு காட்டுக்குள்ளே 1 போறது, தீ வைக்கிறது, ஊர்ப்பட்டச் சத்தம் போடறது, வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்கறது(???!!!) இதெல்லாம் சட்டப்படி குற்றம்.
எங்கேயும் நிறுத்தாமப்போனா 50 நிமிசம் போதும். நமக்கு? சின்னச்சின்ன வேடிக்கை காரணம் ஒன்னரை மணி ஆச்சு. கொஞ்சதூரத்துலே ரெண்டாப் பிரியும் வழியிலே பொட்டிக்கடை ஒன்னும், 'நீர்வீழ்ச்சிக்குப் போகும் வழி' ன்னு அம்பு போட்டுத் தகவல் சொல்லும் பலகை ஒன்னும் இருக்கு. போற போக்குலே அதையும் கண்டுக்கலாமுன்னு போய்க்கிட்டே காட்டுமரங்களைக் கவனிச்சேன். உசரமா இருக்கும் சாலைக்கு ரெண்டு பக்கமும், கீழே இருந்து கிளம்பி வந்து ஹலோ சொல்லுதுங்க.இன்னும் 'மூணு கி,மீ. நேராப் போ'ன்னு விளக்கம் கிடைச்சது. ஹனுமனgகுண்டி என்ற இடம். சூதனாப்பி வாட்டர் ஃபால்ஸ்(Soothanabbi water falls). காட்டிலாக்கா போலீஸ்(?) தண்ணிகிட்டே போக கட்டணம் வசூலிக்கிறாங்க. 300 படிகள் கீழே இறங்கிப்போகணுமாம். ஐயோ:( ஏற்கெனவே சாப்பாட்டு வேளை தாண்டி, கோபாலுக்கு முகத்தில் சுரத்தே இல்லை...... அன்னாசிப்பழம் அறுத்து ஸ்லைஸ் போட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க. நான் பயணத்துலே வாயை நல்லா இறுக்கக் கட்டிக்கும் வழக்கம் இருந்ததால் வாயையேத் திறக்கலை. கோபாலுக்கும் ப்ரஷாந்துக்கும் மட்டும் ஸ்நாக்ஸ்.
அடப்பாவிகளா! ஒன்னுவிடாமத் தின்னுட்டீங்களா?
எனக்கு ஆறுதல் பரிசாக , நம்ம மக்கள்ஸ் கண்ணுக்குக் காட்சி கொடுத்தாங்க. குட்டிப்பாப்பா கூட இருந்துச்சு. ஸோ க்யூட்......... க்ளிக்கிட்டுக் கிளம்பினோம். காதம்பரி நீர் வீழ்ச்சி..... ரொம்ப மெலிசாத் தண்ணி.
புலிகள் நடமாடும் ஏரியான்னு ஒரு போர்டு வேற! எங்கே கவனிக்காம இருந்துருவோமோன்னு படம் போட்டு வச்சுருக்காங்க.. பாம்பை விடு, புலியைப் பார்க்கலாமுன்னு போனால் சாலையில் ஒரு நாலைஞ்சு........
பசங்க. கையில் ஒரு தட்டுலே ஏழெட்டு பழம். என்னவா இருக்குமுன்னு பார்க்கலாமுன்னா...எலுமிச்சம்பழமுன்னு கோபால் பளிச்னு ஒரு பதில்.
நான் ஒரு இவ..... சிலசமயம் இப்படித்தான் 'கண்ணை மூடிக்கிட்டு' இவரை நம்பிருவேன்:(
ஆரஞ்சுச் சட்டைதான் நம்ம ராஜா
இன்னும் கொஞ்சதூரம் போனால் எந்த நடமாட்டமும் இல்லாத சாலையில் இன்னும் ஒரு குழுவாப் பசங்க. வண்டியை நிறுத்திப் பார்த்தால் கொய்யாப் பழம்! ஒரு தட்டு 10 ரூபாய். ஒன்னு போதுமுன்னு நாங்க 'பேசு'னதைக் கேட்ட ஒரு சிறுவன், ஆண்ட்டி, எங்கிட்டே வாங்குங்கன்னு தமிழில் சொன்னான். பெயர் ராஜா. தமிழுக்கே முன்னுரிமைன்னு வாங்கினேன். அதான் மூணு பேர் இருக்கீங்களே, ஆளுக்கு ஒரு தட்டு 2 வாங்கினா என்னன்னு இன்னொரு பொடிசு கன்னடத்துலே நியாயம் பேசுச்சு.
பத்ரா நதிப்பாலத்தைக் கடந்தோம். இந்த பத்ரா, நம்ம துங்கபத்ராவில் பாதி. உண்மையில் துங்கா & பத்ரான்னு ரெண்டு நதிகள் தனித்தனியாப் பிறந்து ரொம்ப தூரம் ஓடுனபிறகு அப்புறமா இணைஞ்சுருது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் நேத்ராவதி ஆறும் குறுக்கா ஒரு இடத்துலே போச்சு.
மலையை வீட்டிறங்கி குதிரேமுக் டவுன் போய் சாப்பாடு தேடுனால்..... இங்கே இருக்கும் ஆஃபீஸர்ஸ் கெஸ்ட் ஹவுஸில் கிடைக்குமுன்னு சொன்னாங்க. சாப்பாடு சுமார் ரகம். ஆனா ரெஸ்ட் ரூம் வசதி பரவாயில்லை. இங்கேயே தங்கவும் வசதிகள் இருக்கு.மத்திய அரசு பொறுப்பேத்து நடத்தும் இடம். ஊரில் கேந்திரிய வித்யாலயா இருக்கு. ஜனநடமாட்டம் அவ்வளவா இல்லாம ஏதோ 'கோஸ்ட் டவுன்' மாதிரி இருக்கேன்னேன். இங்கே சுரங்கத்தைத் தோண்டுவதை நிறுத்திட்டாங்களே. அதனால் தான் இப்படி ஆகிருச்சாம். மத்திய அரசு நடத்தும் நிறுவனங்களில் வேலை நின்னு போனாலும்கூட வேலைக்கு வச்சுருந்த ஆட்களை வேலையில் இருந்து எடுக்க முடியாதாம். எல்லோருமா தாமாய் சம்மதிச்சுக் கையெழுத்துப் போட்டால்தான் நிறுவனத்தை மூடுவது சாத்தியமாம். அப்படி இல்லைன்னா? கடைசி மனிதர் ஓய்வு பெறும் வயதுவரை வேலை நடந்தாலும் நடக்கலைன்னாலும் மாதச் சம்பளம் கொடுத்தே ஆகணுமுன்னு ஏதோ விதி இருக்காம்.
நஷ்டஈடுன்னு ஒரு நல்ல தொகை கொடுத்து அனுப்பினால் கூட அரசுக்கு நஷ்டம் வராமல் இருக்குமே! ஆளில்லாத கடையில் டீ கட்டாயமா ஆத்தணுமா?
ஏர் இண்டியாகூட இப்படித்தானே நட்டத்துலே போய்க்கிட்டே இருக்கு. மினிமம் இத்தனை நபர்தான் இருக்காங்கன்னு ஒரு எண்ணிக்கை வரும்வரை இப்படித்தான் போகும். பாதிப்பேர் இளவயதுக்காரர்கள் வேற வேலையைத் தேடிப் போயிருப்பாங்க. பலருக்கு வேற சுரங்கத்துக்கு மாற்றம் கிடைச்சும் இருக்கலாம். ஆனா...... ரெண்டுங்கெட்டான் வயசு ஆட்களுக்குக் கஷ்டம்தான். இந்த வயசுலே வேறெங்கே வேலை கிடைக்கப்போகுது? அதான் மீதம் இருக்கும் வேலையாட்களும் யூனிஃபாரம் போட்டுக்கிட்டு டைமுன்னு வேலைக்கு (??)வந்து கையெழுத்துப் போட்டுட்டு லஞ்சு டைமுக்கு வீட்டுக்குப் போய்வந்து மாலை வேலைநேரம் முடியும்வரை இருந்துட்டுப் போறாங்க.கோபால் சொன்னது சரிதான் என்றது போல நாலைஞ்சு பேர் க்வாட்டர்ஸ் கேட்டைத் திறந்து வேலைக்கு(?) போய்க்கிட்டு இருந்தாங்க. பேசாம ஆளுக்கு ஒரு லேப்டாப்பும், இணையத் தொடர்பும் இருந்தால்..... நேரம் சுலபமாப் போயிருமுன்னு நினைச்சுக்கிட்டேன்.
Posted by
துளசி கோபால்
at
5/12/2010 03:27:00 PM
15
comments
Labels: Kuduremukh, அனுபவம்
