Monday, May 03, 2010

ட்யூப் லெஸ்ஸுக்குள்ளே ஒரு ட்யூப் வந்த மாயம்!!!!

எந்தத் தொழில் செஞ்சாலும் அதுலே ஒரு நேர்மை, நியாயம் இருக்கணுமா வேண்டாமான்னு எனக்கு குழப்பம். அதுவும் அது மனித உயிர்களோடு நேரடியாச் சம்பந்தப்பட்டதா இருக்கும்போது மனசாட்சியை அப்படியே அமுக்கிக் குழிதோண்டிப் புதைச்சுட்டு பணம் மட்டுமே ஒரே நோக்கமா இருக்காங்க:(

இது ஒரு புலம்பல் பதிவுன்னு ஒரு டிஸ்கி கொடுத்துக்கறேன்.

இப்பெல்லாம் ட்யூப்லெஸ் டயர்கள்தான். பங்ச்சர் ஒட்டிக்கலாமுன்னு போனோமா....... அங்கேபோனா.....டயருக்குள்ளே ட்யூப் இருக்குன்னு தெரிஞ்சது. ஏற்கெனவே பங்ச்சர் ஆன இடத்தை ஒட்டி, (ஒரு சின்ன துண்டு டயர் பீஸ் வெட்டிவச்சு ) அடைச்சுட்டு ஒரு ட்யூபைக் காத்தடிச்சு உள்ளெ வச்சு ஒரு சமாளிப்பு நடத்தி இருக்காங்க ட்ராவல்ஸ் கம்பெனியில். அந்தச் சின்னத்துண்டு இடம் விட்டு விலகி, அதே ஓட்டையில் ஏதோ குத்தி அந்த ட்யூபைக் கிழிச்சுருக்கு.

கஸ்டமர்களை ஒழுங்காக் கொண்டு போய்ச் சேர்க்கும் எந்த உத்திரவாதமும் இவுங்களுக்கு இல்லையா? அட்லீஸ்ட் ஒரு AA இல் சேர்ந்துருந்தா உதவி வந்துருக்காதா? அதுக்குப்போய் யார் ப்ரிமியம் கட்டுறதுன்னு இருக்காங்க போல. விதிப்படி நடக்கட்டுமே என்ற பெருந்தன்மை!

ட்ராவல் கம்பெனி ஓனர் தினேஷ் ராவுக்கு 'செல்'லடிச்சு விஷயத்தைச் சொல்லுன்னு ப்ரஷாந்த்கிட்டே சொன்னால்........ தேவை இல்லையாம். ஏன்னா.............. இது அவுங்க கம்பெனி வண்டி இல்லை! போச்சுரா...... அப்ப? நாம் இன்னோவாதான் வேணுமுன்னு கண்டிப்பாச் சொன்னதாலே இன்னொரு இடத்துலே அவர் புக் பண்ணி நமக்குக் கொடுத்துட்டு சார்ஜ் வாங்கிக்கிறார். இப்ப நாம் கொடுக்கும் பணத்தில் இவருக்கும் ஒரு பங்கு கிடைக்குமுல்லே? ட்ரைவரையும் வேறெங்கோ இருந்து புடிச்சுப் போட்டுருக்கு.

பங்ச்சர் ஒட்டும் இடத்துலே ரொம்பக்கஷ்டப்பட்டு வேலை நடக்குது. நம்ம இவர் 'நியூஸி'யைக் கம்பேர் பண்ணி, பத்து நிமிச வேலையை எவ்வளோ நேரம் ரெண்டு பேர் சேர்ந்து செய்யறாங்க பார்'ன்னு சொல்றார். 'அங்கே இருக்கும் தொழிலுக்கான சாமான்கள் வசதிகள் எல்லாம் ஒன்னுமே இங்கே இல்லை. பழைய டயர்கள் மட்டுமே குவிஞ்சு கிடக்கு. எல்லாமே உடலுழைப்பாலே நடக்குது. அப்படி ஒரு கராஜ் வைக்க அஞ்சாறு மில்லியன் டாலர் இங்கே யார் முதலீடு செய்வாங்க? ரெண்டு ஆட்களைக் குறைஞ்ச சம்பளத்துக்கு வேலைக்கு வச்சுக்கிட்டு தொழில் நடத்தும் 'தொழிலதிபர்கள்'தான் இங்கே கூடுதல்'னு நான் வக்காலத்து வாங்கறேன்.
இதுக்கிடையில் நகர்ந்துபோன சின்னத் துண்டை'' எடுத்துட்டு ஒரு முழு 'வேட்டி'யை உள்ளெ வச்சு அடைச்சார். நான் டயரைச் சொல்றேன்::(
அப்புறம் ட்யூப்லே பங்ச்சர் ஒட்டி, அதை உள்ளெ தள்ளிக் காத்தடைச்சு.....இவ்வளவு வேலையும் செஞ்சு முடிச்சுட்டு அவுங்க கேட்ட கூலியைக் கேட்டு அப்படியே வாயைப்பிளந்து நின்னேன் முப்பது ரூபாய்.
எங்கூர் காசுலே ஒரு டாலர். மனசு கேக்காம அவுங்க ரெண்டு பேருக்கும் நன்றிக்கடனா கொஞ்சம் காசு கொடுத்துட்டுக் கிளம்பினோம்.

ஒன்பது மணிக்குக் கோவில் மூடிருவாங்க. போயிட்டுப்போகுது போன்னு மனசைச் சமாதானப்படுத்திக்கிட்டு ஊருக்குள் வந்து சேரும்போது சரியா எட்டரை மணி. நேராக் கோவிலுக்குப் போயிறலாம். அறை தேடுவது அப்புறம்னு நானும் கோபாலும் ஒரே சமயம் ஒரே மாதிரி நினைச்சோம். (நான் பேச நினைப்பதெல்லாம்..............நீ பேச வேண்டும்..... ஊம்ம்ம்ம்ம்...உ உம்ம்ம்........அது! )

என்னமோ காலங்காலமா இங்கே குடி இருக்காப்லெ.... மடத்துக்குள்ளெ நுழைஞ்சு திடுதிடுன்னு இவர்பாட்டுக்குப் போறார். நான் குடுகுடுன்னு பின்னாலேயே ஓடுறேன்.... கோவிலுக்குள் நுழைஞ்சு ஜன்னலை நோக்கிப் பாய்ச்சல். அட! ராமா! யாருமே இல்லை! ஏகாந்த சேவை! யாராவது வரும்வரை இடம் பிடிச்சுக்கலாமுன்னு நான் ஜன்னலோடு பசைபோட்டு ஒட்டிக்கிட்டேன். முந்தாநாள் பூக்களால் மூடி வச்சுருந்த அலங்காரம் இல்லாமல் தங்கத்துலே ட்ரெஸ் போட்டுக்கிட்டு மின்னறான் திருடன். 'திரை போட்டுத் திடீர்ன்னு மறைச்சது எவண்டா'ன்னு கத்த வாயைத் திறந்தவ . நல்ல காலம் கப்சுப் ஆனேன். என் கண்ணில்தான் நயாக்ரா. கர்ச்சீஃப் எடுத்துக் கொடுத்துட்டு கோபால் போய் மண்டபத்தில் உட்காந்தார்.

இன்னும் பார்த்துக்கிட்டே இருக்கேன். யாரும் வரலை. கொஞ்சநேரத்துலே ஒரு மூணுநாலு பேர் வந்து நின்னாங்க. இடம் விட்டு விலகிப்போய் அவுங்களுக்கு பின்னால் வரிசையில் நின்னேன். அவுங்க போனதும் மறுபடி ஜன்னலில் ஒட்டுன பல்லியாக (சரி.... பெருச்சாளியாக) நான். இப்படியே நாலுமுறை. போதும் போதும் என்ற அளவுக்குப் பார்த்தாச்சு. கோவிலை அடைக்கும் நேரம் ஆகுதுன்னு கிளம்பினோம். அர்த்தஜாமப்பூஜை இருக்கான்னு தெரியலை. இன்னும் ஹொட்டேலை வேறத் தேடணும்.........
"உன் ப்ளான்படி சாயந்திரம் வந்துருந்தா.....கூட்டத்துலே சரியாப் பார்த்திருக்க முடிஞ்சுருக்காது. அதான் இப்படியெல்லாம் ஆட்டம் காமிச்சுருக்கான். இப்ப நல்லா அழுது அழுது பார்த்தியே. கண்ணைத் தொடைச்சுக்கோ முதல்லே "
ஸ்ரீமாத்வ ஸரோவர்




ஸ்ரீ மாத்வ ஸரோவர்க்குப் பக்கம் வெளியில் வந்தோம். (இந்தக் குளத்தில்தான் கெட்டிமண்ணுக்குள் இருந்த கிருஷ்ணனைக் கழுவி வெளியே எடுத்தாராம் மாத்வர்) மடத்துக்குழந்தைகள் (ஐயோ..... எல்லாம் பால்வடியும் முகங்களோடு பிஞ்சுகள்) வரிசையா வந்துக்கிட்டு இருக்காங்க. கோவில் முன்னால் ஆரவாரம், கூட்டம் ஒன்னுமில்லாமல் ரெண்டு தேர்கள் அமைதியா நிக்குது.

பூனை தூங்கும் அடுப்பு? ஊஹூம்.... பெரிய நாயே தூங்கலாம்!!!!


திரும்ப உள்ளே போனோம். ரெண்டுநாளைக்குமுன்னே ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமைச்சுப்போட்ட அடுப்புகளும் பாத்திரங்களும் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில். கழுவிக் கமர்த்திட்டாங்க.

மடத்துக்குள்ளே ஒருசிலர் மட்டுமே அங்கங்கே உக்கார்ந்துருக்காங்க. யாத்ரீகர்கள்.

யானைக் கொட்டடியை முதல்முறை வந்தப்பக் கவனிக்கலை. அதான் எங்கே பார்த்தாலும் மனிதவெள்ளமா இருந்ததே! அரை இருட்டில் நிற்கும் க்ருஷ்ணனைப் பார்த்தேன். மறுபடி கண்ணுலே தண்ணீர். ஒரு எட்டுக்கூட எடுத்து வைக்க முடியாமல் வெறும் ஒன்னரை அடிச் சங்கிலி. பாவம். குழந்தை. துதிக்கையை ஆட்டிக் கூப்பிட்டது.
அஞ்சாறு நிமிஷ ட்ரைவில் ஸ்வதேஷ் ஹெரிட்டேஜ் ஹொட்டேல் வந்தோம். ப்ரஷாந்தின் ரெகமெண்டேஷன். 500 ரூபாயில் இருந்து அறைகள் இருக்காம். இருப்பதில் த வெரி பெஸ்ட் ஸ்யூட் கூட ரொம்ப மலிவு. எதுக்கும் கண்ணால் பார்த்து முடிவு செய்யணுமே. ஸிட்டிங் ரூம், பெட் ரூம்ன்னு ரெண்டு அறைகள். நல்ல அருமையான பாத்ரூம். யாரும் அதிகம் புழங்காத அறை. எல்லாமே பளிச்சுன்னு புதுசா இருக்கு. ட்ரைவர்களுக்காக ஒரு டார்மிட்டரி கூட இருக்காம். நல்லதாப் போச்சு. இன்னிக்காவது காலைக் கையை நீட்டித் தூங்கட்டும் ப்ரஷாந்த்.

சாப்பாட்டைத் தேடுதல் அடுத்த வேலை. இங்கேயே கீழே பேஸ்மெண்டில் ஒரு உடுப்பி ரெஸ்டாரண்ட் இருக்காம். 'தாலி' மீல்ஸ். வெறும் முப்பதே ரூபாய்

Thursday, April 29, 2010

கூப்பிட்ட குரலுக்கு.............

இன்னிக்கு 'ராத் தங்கல்' எங்கேன்னு (சீட்டுக் குலுக்கிப்)பார்த்ததில் உடுப்பிக்கு சான்ஸ் அடிச்சது. நெட்லே தேடுனா ஒன்னும் சரியா வரலை. நேரில் போனால் ஆச்சு. யாத்ரக்கார்க்கு சௌகர்யங்கள் கிருஷ்ணன் செஞ்சு தரட்டுமே.
கொல்லூர் டு உடுப்பி மலைப்பாதையா இருக்கு. இருவது நிமிசப் பயணத்துலே வலது பக்கம் அழகா ஒரு தோரண வாசல். புள்ளையார், விஷ்ணு, சிவான்னு இல்லாம நடுநாயகமா ஒரு மாடு! 'அச்சச்சோ..... என்னன்னு தெரியலையே'ன்னு அதுக்குள்ளே நுழைஞ்சோம். புத்தம் புதுசாப் போட்ட சிமெண்டுப் பாதை, மெல்ல மலை ஏறுது. பள்ளிக்கூடம் விட்டு வரும் பசங்க சின்னச்சின்னக் குழுவாப் பேசிக்கிட்டே மலைப்பாதையில் நடந்து போறாங்க. ஒரு ரெண்டு கிலோமீட்டர்வரை போயிட்டு, இன்னும் எவ்வளவு தூரமுன்னே தெரியலையே..... வந்து மாட்டிக்கிட்டோமோன்னு பசங்களைக் கேட்டால் கோவில் ரொம்ப தூரத்துலே இருக்காம். பத்து நிமிசம் ஆகுமாம்! அச்சச்சோ.......
ரெண்டே நிமிசத்துலே கோவில் முன் நின்னோம். gகாயினகுடி. பசுக்களுக்கான கோவில். புதுசாப் பெயிண்ட் அடிச்சு சூப்பரா இருக்கு. விசாரிக்கலாமுன்னா யாரையும் காணோம். போயிட்டுப்போகுது..ம்ம்ம்ம்ம்மா........
ஒரு அரைமணிக்கூறில் இன்னொரு பெருமாள் கோவில் கண்ணில் பட்டது, என்ன ஊர், என்ன இடமுன்னு தெரியலை. எங்கெயாவது பெயரை ஆங்கிலத்திலோ இல்லை ஹிந்தியிலோ எழுதி வைக்கக்கூடாதா? வழிநெடுக பெட்ரோல் பங்குகளைப் பார்த்தாலும், போர்டில், கம்பெனி பெயர் இருக்கே தவிர அது இருக்கும் இடத்தோட பெயரை எழுதிவச்சால் குறைஞ்சா போயிரும்.? தப்பித்தவறி பெயர் எழுதி இருக்கும் கோவில்களில் எல்லாமே ஜிலேபி:( யாத்ரக்காருக்கு பயங்கர புத்திமுட்டு:(

லக்ஷ்மி வெங்கடரமண ஸ்வாமி. கோவில் பண்டிட்டுக்கு என்னமோ நம்மைப் பார்த்தவுடன் அதீத மகிழ்ச்சி. உள்ளே கூட்டிட்டுப்போய் தீபாராதனை காமிச்சுப் பிரஸாதம் கொடுத்தார். கோவிலையும் சுத்திக் காமிச்சார். ஒரு ஆயிரம் வருசமாச்சாம் கோவிலுக்கு வயசு. மூடிவச்சுருக்கும் தேர் ஷெட்டைத் திறந்து தேரைக் காமிச்சார். அவர் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். புத்தம் புதுசா ஜொலிக்குது. அட்டகாசமான மரவேலைப்பாடு. ரொம்ப நுணுக்கமாச் செதுக்கி இருக்காங்க.

கோவிலுக்கு மூணு குளம் இருக்கு. நல்ல சுத்தமானவைகள். அதுலே ஒன்னு வித்தியாசமான டிஸைனில் படிக்கட்டுகளோடு. அதுக்குப் பக்கத்துலே நாகர்களுக்கு ஒரு சந்நிதி. இது தனிக் கட்டிடமா இருக்கு. உள்ளே நிறைய கல்நாகங்கள். அதுக்குப் பின்னே பெரியபெரிய புத்துகள். இங்கேயும் அபிஷேகத்துக்குன்னு தண்ணீர் சொட்டும் அமைப்பு. புற்றுகளில் 'பெரியவங்க ' இருக்காங்களாம். சில சமயம் ச்சும்மாக் காத்தாட வெளியே வந்து உக்காருவாங்களாம். இந்தப் பக்கம் பிள்ளைகுட்டிகளோடு பண்டிட்டின் குடும்பம் வசிக்குது..... என்னதான் கோவில் நாகமுன்னாலும்..... குலை நடுங்கத்தான் செய்யுது! ( வீடுகளில் மனைப்பாம்புன்னுகூட புத்துகளைப் பார்த்துருக்கேன். ஒரு சமயம், ஒரு வீட்டுலே நடு ஹாலில் கூரைவரை உயரமான புத்து இருந்துச்சு.நாகத்தோடு சம்பந்தப்பட்ட நம்ம குடும்பக் கதை ஒன்னு இருக்கு. அதை அந்த 1500லே போடத்தான் வேணும்)


நாகரஹாவு

தாகத்துக்கு எதாவது குடிச்சுட்டுப் போங்க. சாயா இல்லே காஃபி தயாரிக்கச் சொல்றேன்னு விருந்தோம்பல் வேற! பரவாயில்லையே. கோவில் பண்டிட்கள் அதிதி சல்காரம் கூடச் செய்யறாங்களே!!!!! அதெல்லாம் ஒன்னும்வேணாம். கோவில் நல்லா சுத்தமா இருக்குன்னு சொல்லிப் பாராட்டிட்டு வந்தேன். நாலைஞ்சு சிறுவர்களும் சிறுமிகளும் கோவில் வெளிப்புறத்தில் குப்பைகள் இல்லாமல் பொறுக்கிப் போட்டுக்கிட்டும், அங்கங்கே தரையில் முளைச்சுருக்கும் புல்பூண்டுகளை எடுத்துச் சுத்தம் பண்ணிக்கிட்டும் இருந்தாங்க. உண்மையான சேவை.

யாராவது காஃபின்னு சொன்னதும் நமக்கும் காஃபித் தாகம் வந்துருமே. இதுக்குள்ளெ மலைப்பாதையிலிருந்து ஹைவே 17 இல் வந்து கலந்துருந்தோம். ஒரு இடத்துலே நிறுத்தி காஃபி ஆச்சு. ப்ரஷாந்துக்கு மட்டும் செட் தோசை. அது என்ன செட் தோசைன்னு நம்ம இவருக்கு ஒரு ஆர்வம். ஆனால்.....பசி இல்லை இப்போ வேணாமுன்னுட்டார். இனி நேரா உடுப்பிதான்.

வண்டி ஓடும்போது என்னவோ விசித்திரமா ஒரு சத்தம். நிறுத்திப் பார்க்கணுமுன்னு கோபால் கண்டிப்பாச் சொன்னார். பார்த்தா...... சந்தேகம் சரி. பின் சக்கரத்தில் பங்ச்சர். அதுவும் என் பக்கம்:( மெயின்ரோடைவிட்டுக் கீழிறங்கி நிறுத்துன்னு சொன்னதைக் கேக்காம நல்லா பிஸியா இருக்கும் ஹைவேயில் நிறுத்துனதும் நல்லதாத்தான் போச்சுன்னு சொல்லணும். ஸ்டெப்னி இருக்கு. மாத்திக்கலாமுன்னு ஜாக்கை எடுத்து தப்பான இடத்தில் வைக்கும் ப்ரஷாந்தைப் பார்த்துக் குலை நடுங்குனதென்னவோ நிஜம். வண்டி பேலன்ஸ் இல்லாமத் தரையில் உக்காரப்போகுது. சும்மா அப்படியே வண்டியை நிறுத்துனா ஆச்சா? ஹஸார்டு லேம்ப் போடணும் போடணுமுன்னு அதுவும் ஆச்சு. வண்டிக்குப் பக்கத்தில் நின்னாதான் 2 விபத்துகள் பலதும் நடக்கும். கீழே இறங்கி அந்தப் பக்கம் போய் நில்லுன்னு நம்ம இவர்வேற என்னிடம் உறுமுறார்.
ஸ்டெப்னி டயரை எடுக்க முயற்சித்தால் முடியலை. இந்த இன்னோவா வண்டிகளில் அது டிக்கியில் இல்லை. வண்டிக்கு அடியில் ஒரு சங்கிலி ஊஞ்சலுடன் இருக்காம். மேலே இருக்கும் ஒரு துளையில் நீண்ட கம்பிபோல ஒன்னு போட்டுச் சுத்துனா அது அப்படியே ஊஞ்சலாடி கீழே வருமாம். கனவு சீன்களில் மேலே இருந்து நாயகி & நாயகன் ஊஞ்சலில் வந்து இறங்குவது சமயாசந்தர்ப்பம் இல்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்குது.
ஒரு முறை சுத்துனவுடன் அந்தக்கம்பி ரெண்டாய் பிட்டுக்கிச்சு:(

சாலையில் கொஞ்ச தூரம் தள்ளி ஒரு (100 மீட்டர்தூரம்) கொஞ்சம் கீழே இறங்கிப்போகும் மண்பாதையில் இருக்கும் கடைகளில் வாசலில் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தவர் வந்தார். அசப்பில் நம்ம ஜெய்கணேஷ் மாதிரி இருந்தார். மனிதர் பாவம், அந்த ஸ்டெப்னியை எடுக்கச் சாலையில் வண்டிக்கடியில் படுத்தெல்லாம் முயற்சி செஞ்சார். பொழுது சாயும் முன்னே அடுத்த ஊருக்குப் போயிறணும் என்ற திட்டம் அம்பேல்.

சாலையில் போய்க்கிட்டே இருந்த ஒரு மோட்டர்பைக் தடதடன்னு உறுமிக்கிட்டே வட்டமடிச்சு நம்ம வண்டிக்குப் பக்கம் வந்து நின்னுச்சு. ஹெல்மெட்டைக் கழட்டினார் ஒரு இளைஞர். அவர் பங்குக்கு அவரும் சாலையில் உருண்டு அங்கப்ரதக்ஷணம் செஞ்சும் ஒன்னும் நடக்கலை. எப்படியும் ரெண்டா உடைஞ்ச கம்பியை எங்கியாவது வெல்ட் செஞ்சால் வேலை நடக்கும்னு ஒரு தியரி. அதோ அங்கே ஒரு கடை இருக்குன்னு நம்ம ஜெய்கணேஷ் கை காட்ட , வெல்டிங் கடையைத் தேடி தன்னுடைய பைக்கிலே ப்ரஷாந்தைக் கூப்பிட்டுப் போனார். ஜெய்கணேஷும் தன்னுடைய கடைக்குப் போயிட்டார்.
உடுப்பிக்குப் போய் கிருஷ்ணனை இன்னொரு முறை பார்க்கணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவளை இப்படி நட்டாத்துலே விட்டுட்டாயேடா..........
சூரியன் மலைவாயில் விழுந்தான். இருட்டு வரப்போகுது. எங்கேதான் இருக்கோமுன்னும் தெரியலை.சுத்துமுத்தும் கண்ணை ஓட்டினேன். கோபாலடி ரோடு! தேவுடு காக்க வச்சுட்டான்ய்யா........

நாங்க ரெண்டு பேரும் பேய் முழியோடு நிக்கிறோம். ஒரு கால்மணி நேரத்துலே வெல்டு பண்ணக் கம்பி வந்தாச்சு. பார்த்துக்கிட்டே இருந்தார் போல நம்ம ஜெய் கணேஷ். அவரும் எழுந்து வந்தார். நல்லா டைட்டா வச்சுத் திருப்புன்னு கோபால் லெக்சர் கொடுத்துக்கிட்டு நிக்க..... ஆளாளுக்குக் கம்பியைத் திருப்ப ஒரு அனக்கமும் இல்லை. இதுக்கு நடுவில் போற வர்ற ஆட்கள் நின்னு பார்த்துட்டு, எங்கமேல் ஒரு (பரிதாப) லுக் விட்டுட்டுப் போறாங்க. போகட்டும், சக்கரத்தைக் கழட்டிப் பஞ்சர் ஒட்டிக்கலாமுன்னா..... அதையும் கழட்ட முடியலை ப்ரஷாந்துக்கு. மும்மூர்த்திகள் உதவலாமுன்னு போனா....

பைக் வாலிபர் சர்னு கிளம்பிப்போயிட்டார். பக்கத்துலே யாரையாவது கராஜ்லே இருந்து கொண்டுவரேன்னு போயிருக்கார் புண்ணியவான். நல்லா இருக்கணும். பத்தே நிமிசத்துலே ஒரு பையனோடு திரும்பி வந்தார். சின்னப் பையன். ஆனா எண்ணிப் பத்தே நிமிசத்தில் ஸ்டெப்னியை இறக்கி, டயர் மாத்தியாச்சு!!!! எல்லார் முகத்திலும் நிம்மதியான சிரிப்பு.

கம்பியை விட்டு முடுக்கறார். க்ருஷ்ணான்னு நான் மனசுலே கூப்புடவும், டடக் னு ஒரு சத்தத்தோடு ஸ்டெப்னி கீழே இறங்கவும் சரியா இருந்துச்சு. அடப்பாவி. எவ்வளோ அரற்றினேன். அப்பெல்லாம் பேசாம இருந்துட்டு இப்போ.....உதவும் பாவனையா?

எதுக்கும் அந்த டயருக்குப் பங்ச்சர் ஒட்டிக்கிட்டுப் போயிருங்க. இந்த பையன் ஒட்டித் தருவார்ன்னு சொன்னார் பைக் வாலிபர். ஆமாம் இவர் யார்? எதுக்கு வேலை மெனெக்கெட நம்மோடு ஒன்னரை மணிநேரம் மாரடிச்சு இருக்கார்?

இன்னோவா வண்டி ஏன் இப்படி ரோடோரத்தில் வாயைப் பிளந்துக்கிட்டு நிக்குது? கூடாதேன்னு பார்க்க வந்தாராம். இங்கே காபு (Kaup) ஏரியாவில் டொயோட்டாவுக்கான சேல்ஸ் மேனேஜராம். உடுப்பியிலிருந்து திரும்பி வந்துக்கிட்டு இருந்துருக்கார். அப்பத்தான் அவர் பெயரைக் கேக்கணுமுன்னு தோணி இருக்கு எனக்கு. அஷ்வத்.

நம்ம ஜெய்கணேஷ்க்கு நன்றி சொல்லிப் பெயரைக் கேட்டால்..... நாராயணா!!!!

வாய்(ஸை) கட்டிட்டாப்பா.....

கோலமகரிஷி என்றவர் சிவனைக் கும்பிட்டு தவம் செஞ்சுக்கிட்டு இருந்தார். அதே சமயம் கௌமாசுரன் என்ற ஒரு அசுரனும் சிவனை நோக்கித் தவம் செய்யறான். சிவன்தான் யாரு தவம் செஞ்சாலும், மனம் மகிழ்ந்துபோய் 'என்ன வரம் வேண்டுமானாலும் கேள்'ன்னு சொல்றவராச்சே! மற்ற தேவர்கள் அசுரன் ஏதாவது கேட்டு. நமக்கு ஆபத்து விளைவிச்சுருவானோன்னு பயந்துக்கிட்டே போய் அன்னை பார்வதியிடம் முறையிடுறாங்க.

'அஞ்சேல்' ன்னு சொல்லி, அசுரனின் பேசும் சக்தியைப் பறிச்சுட்டாங்க 'வாக்கு' தேவி. இனி 'பே பே' தான் என்ன வரம் வேண்டுமுன்னு கேக்கமுடியாதாம்! அதனால் அந்த அசுரனுக்கு மூகாசுரன்னு பெயர் வந்துருச்சு. ஆனாலும் அவன் விடாமல் தவம் செய்யறான். அப்போ அவனிடம், சண்டைக்குப் போனாங்க, அம்மா. போரில் அசுரனால் ஜெயிக்க முடியலை. பராசக்தி நீயே கதின்னு அன்னையைச் சரணடைஞ்சான். அவன்மேல் இரக்கம் கொண்டு அவனுக்குப் பேசும் சக்தியைத் திருப்பித் தந்தாள் பார்வதி. அப்போ அவன் வணங்கிக் கேட்டுக்கிட்டானாம். 'அம்மா. நீ இந்த இடத்துலே கோவில் கொண்டு எல்லாரையும் காப்பாற்றணும்'னு. 'விஷ் க்ராண்டட்.' மூகாசுரன் வேண்டுதலுக்காகத் தங்கிய அன்னைக்கு மூகாம்பிகை என்ற பெயரும், கோல மகரிஷி தவம் செய்யததால் இந்த ஊருக்குக் கொல்லூர் என்ற பெயரும் வந்துச்சுன்னு ஒரு புராணக் கதை இருக்கு. மூகாசுரனை தேவி இங்கே வதம் செஞ்சதாவும் சொல்றாங்க. 'மரண கட்டே'ன்னு ஒரு இடம் இருக்காம்.

சரணமடைஞ்சவனை வதம் செய்வதா? சீச்சீ.... நல்லா இல்லே:(

சக்தி பீடமுன்னு இந்தக் கோவிலைச் சொல்றாங்க. பரசுராமர் ஏழு கோவில்களை உண்டாக்கினார். அதுலே பார்வதிக்கான கோவில் இது ஒன்னுதான்னு சொல்றதும் உண்டு.

தாய் மூகாம்பிகை படம் எல்லோரும் பார்த்துருப்பீங்கதானே?

நம்ம ஆதிசங்கரர், அன்னையை நோக்கித் தவமிருந்து 'சௌந்தர்ய லஹரி'யை எழுதுனது இங்கே தானாம். கைலாசத்தில் இருந்து அன்னையை, தன் தேசத்துக்குக் (பரசுராமரால் கிடைச்ச தேசமான இப்போதைய கேரளா) கூட்டிப்போகணுமுன்னு ஆதிசங்கரர் வேண்டினாராம். அன்னையும் அவர் சொல்லுக்கு இணங்கி ஒரே ஒரு கண்டிஷனோடு புறப்பட்டு வர்றாங்க. சங்கரர் தம்பாட்டுக்குத் திரும்பிப் பார்க்காமல் முன்னால் நடக்கணும். தேவி பின்னாலே நடந்து வருவாங்க. அப்போ சங்கரர் கேட்டுக்கிட்டார், அம்மா, நீ என்னைத் தொடர்வது எனக்கு எப்படித் தெரியும்? உன் கால்கொலுசுச் சலங்கைச் சப்தம் கேட்டுக்கிட்டே வந்தால் நீ வர்றேன்னு நானும் நிம்மதியாத் திரும்பிப் பார்க்காம முன்னால் போறேன்னு மறு கண்டிஷன் போட்டார்.

(வெளிப்ரகாரச் சந்நிதிகள் வரிசை )

அப்படி நடந்து வரும்போது இந்த ஊரில் இந்த இடத்துக்கு வரும்போது , அதுவரை கேட்டுக்கிட்டு இருந்த கொலுசுச்சத்தம் நின்னு போச்சாம். என்ன ஆச்சுன்னு தன்னையறியாமல் திரும்பிப் பார்த்துட்டார் சங்கரர். உடனே அங்கே ஒருசிவலிங்கமா உருமாறித் தங்கிட்டாங்களாம் தேவி. அந்த சிவலிங்கத்தில் தேவியின் இருப்பைக் காமிக்க ஒரு தங்கரேகை பளபளன்னு தங்கிருச்சாம். ஆஹா............................ரொம்ப சிம்பிள்! பெண் = பொன்!!!! அப்ப இருந்துதான் பெண்களுக்கு நகை ஆசை வந்துருக்கும்.இல்லே?

ஆதி சங்கரர், ஒரு சமயம் தேவியின் முன்னால் தியானம் செஞ்சு முடிச்சதும் இடத்தைவிட்டு எழுந்திரிக்க முடியாமல் தடுமாறினாராம். அவருக்கு உடல்நலமில்லைன்னு உணர்ந்த அன்னை பராசக்தி, தானே 'கஷாயம்' செஞ்சு அந்த 'காஷாயத்துக்கு'க் கொடுத்துருக்காங்க. அந்த நிகழ்ச்சியை நினைவு கூறும்விதமா தினமும் ராத்திரி கடைசி பூஜைக்குக் கஷாயம் நைவேத்தியம் இங்கே உண்டாம். (பலி உத்ஸவ கஷாயா)

இங்கே மூகாம்பிகை சிலை ப்ரதிஷ்டை செஞ்சு 1200 வருசங்களாகி இருக்காம். சங்கு சக்கரம் தரிச்சு, காளி, சரஸ்வதி, மஹாலக்ஷ்மின்னு முப்பெரும்தேவியரா இங்கே இருந்து அருள்பாலிக்கிறாள்.ஆதிசங்கரர், 'கலாரோஹணம்' பாடுனதும், இந்த சரஸ்வதியை தியானிச்சுத்தானாம். நவராத்ரி காலங்களில் அப்படி ஒரு கூட்டம் வந்து அலைமோதுமாம். மூலவருக்கு ரெண்டு பக்கமும், காளிக்கும் கலைவாணிக்கும் ஐம்பொன்சிலை செஞ்சு வச்சுருக்காங்க.இந்தக் கோவில் அரசியல்வாதிகளுக்கும் சினிமா உலகத்தின் முக்கிய புள்ளிகளுக்கும் ஃபேவரிட்டா ஆகிருச்சு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் நடிகர் எம் ஜி.ஆர், இந்தக் கோவில் அம்மனுக்கு ஒரு கிலோ எடையில் ரெண்டரை அடி நீளமான ஒரு தங்க வாளைக் காணிக்கையா அளிச்சுருக்கார். அதே சைஸ்லே ஒரு வெள்ளி வாளை , அப்போதிருந்த கர்நாடகா அரசின் முதலமைச்சர் குண்டு ராவ் காணிக்கையாத் தந்தாராம். ( Y வாள்? எதிரிகளைப் போரிட்டு அழிக்கவா?) அன்னைக்குச் சார்த்தும் முகக்கவசம், விஜயநகரப்பேரரசு காலத்தில் அம்மன்னர்களின் காணிக்கை. இப்போ இருக்கும் கோவிலும் 1200 வருசப் பழசுன்னு சொல்றாங்க. ராணி சென்னம்மாஜி கட்டுனதாம். நம்ம இளையராஜாவும் அம்மனுக்கு வைரக்கைகள் கொடுத்துருக்கார். அடுத்து வைரக்ரீடம் கொடுக்கப்போவதாச் சொல்லி இருக்காராம்.

கோவிலில் அஞ்சு காலப்பூஜை தினமும் நடக்குது. காலையில் தேவிக்குப் பல்விளக்கும் சம்பிரதாயம் கூட இருக்கு. தந்தாடவன் பலி பூஜா..... ! சந்தியாக்காலப்பூஜைக்கு சலாம் மங்களாரத்தின்னு ஒரு பெயர். திப்பு சுல்தான் ஒரு சமயம் இங்கே வந்தப்பக் கோவிலில் சந்தியாகாலப் பூஜையைப் பார்த்துட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, தேவிக்கு, ஒரு' சலாம்' வச்சாராம். இப்பவும் வருசத்துக்கொரு முறை சிறப்பு நிகழ்ச்சியா இங்கே பூஜை சமயம் இசுலாமிய அன்பர்கள் வந்து தேவி தரிசனம் செய்யறாங்களாம்.
கோவில் கொடிமரத்துக்குப் பக்கத்துலே 21 அடுக்குள்ள தீபஸ்தம்பம் இருக்கு. விசேஷம் என்னன்னா..... அந்த தீபஸ்தம்பத்தைத் தாங்குவது நம்ம கஜராஜன். நேரா மூலவரைப் பார்த்துக்கிட்டு இருக்கார். அவரைத் தாங்குவது ஒரு கூர்ம பீடம். அட்டகாசமா இருக்கு. கிட்டப்போய்ப் படம் எடுக்க முடியலை. அதான் அங்கே ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சே!

கேரளப்பாணியில் திண்ணைகள் ஓடும் கோவில்தான் இது. கருவறையை ஒட்டி இருக்கும் உள்ப்ரகாரத்துலே, வெள்ளையைப் பளிங்குலே ஒரு புள்ளையார் இருக்கார். பலமுரி விநாயகர். தும்பிக்கை வலது பக்கம் சுழிச்சிருக்கும் வலம்புரி விநாயகர்தான் இவர்! இந்தப் ப்ரகாரத்துலே நாலுவித கணபதிகள் இருக்காங்க. ஒருத்தருக்கு தசபுஜம் இருக்கு.
வெளிப்பிரகாரம் வலம் வரும்போது மூலவருக்குப் பின்பக்கச் சுவர் வரும் இடத்தில் வரிசையா சுப்ரமண்யர், சரஸ்வதி, ப்ராணலிங்கேஸ்வரர், பார்த்தீஸ்வரர், வாலில் மணி கட்டி இருக்கும் நேயடு(வாதிராஜர் ப்ரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் இவர்), விஷ்ணு ப்ருந்தாவனத்தின் நடுவில் நிற்கும் கோபாலகிருஷ்ணன்னு சந்நிதிகளை தரிசனம் செஞ்சுக்கிட்டே வந்தால் பெரிய துளசி மாடம் ஒன்னு அருகம்புல்லா நிறைஞ்சு கிடக்கு. அடுத்த சந்நிதி வீரபத்திரருக்கு.

ஒரு க்ரிக்கெட் மட்டையும், பந்தும் வச்சு விசேஷப்பூஜை நடந்துக்கிட்டு இருந்துச்சு. நாலு சிதறுதேங்காய் உடைச்சாங்க. தேங்காய் ஓடைவிட்டு ஜம்முன்னு எகிறித் துண்டா நம்மகிட்டே வந்து விழுந்துச்சு. அங்கே நாங்க ரெண்டு பேர் மட்டுமே இருந்ததால் அதை எடுத்துத் தின்னோம். பேச்சுக் கொடுத்தப்பத் தெரிஞ்சது, அது அனில் கும்ப்ளேவின் மட்டையாம். நாம் சென்னைவாசிகள்னு தெரிஞ்சதும் அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம். 'இன்னிக்கு இப்போ கொஞ்ச நேரத்துலே உங்க ஊர்லேதான் கேம் ஆரம்பிக்கப்போகுது. அனில் கும்ப்ளே வெற்றிக்காகத்தான் இந்த பூஜை'ன்னு சொன்னாங்க. ( வீரபத்திரர் வேண்டுதலை நிறைவேற்றலைன்னு அன்னிக்கு ராத்திரியே தொலைக்காட்சியில் தெரிஞ்சது.

முதல் வேண்டுதல் ஒருவேளை, எதிரணி செஞ்சுருக்கலாம்.:- ) ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் செர்வ்டு!
கோவில் தேர் அட்டகாசமான மரவேலைப்பாடுகளுடன் கம்பீரமா இருக்கு. சக்கரங்களைச் சுலபமாத் திருப்ப ஒரு ஸ்டியரிங் வீல் கூட இருக்கு. கோவில் ப்ரஸாதமா இங்கே லட்டு விக்கறாங்க. 'ஒந்து, ஹத்து ருப்யா'


கோவில் யானையும் கோவில் பூனையும்,கோவில் குருவியும் கூட இங்கே இருக்கு. ( இப்பத்தானே குருவிகள் இனம் அழிஞ்சு வருதுன்னு ஒரு பதிவு போட்டார் செந்தழல் ரவி)
ஒரு ஹால் சுவற்றுக்கு மேல் மொஸைக் டிஸைனில், பாம்பணைமேல் பள்ளிகொண்ட பரந்தாமன், இன்னும் சில கடவுளர்களின் சித்திரங்களுடன் ஒரு கும்பினிக்காரனும், ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியும் இருக்காங்க.

படப்பிடிப்புக் குழுவில் ஒருத்தர் வந்து நம்மைக் கண்டுக்கிட்டார். தேங்காயை அரைச்சுக்கிட்டே மேல்விவரம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டோம். நாயகி, கேரளத்துலே ரொம்ப ஃபேமஸாம். டிவி சீரியலில் வர்றாங்களாம். அவுங்களைப் பத்தித் தெரிஞ்சுக்காத ஜென்ம(மும் உண்டோன்னு அவருக்கு அதிசயம்:-)