Friday, June 26, 2009

கன்யாகுமரியில் கடைசிநாள்.....(2009 பயணம்: பகுதி 36)

இன்றைக்கும் ஏமாத்தத்தான் போறானா இல்லை ஒழுங்கா வருவானா என்ற 'கவலை'யோடுதான் கண்ணைத் திறந்தேன். அதே கவலையோடு ஒரு ஒற்றைப் பறவையின் தேடலும் இருந்துச்சோ? வந்தே வந்துட்டான்! சுற்றுப்புறம் அத்தனையும் க்ளிக்கி முடிச்சுக் காலை உணவுக்குப் பின் அம்மனை நோக்கிப்போனோம். தரிசனம் ஆச்சு. கோவில்மண்டபத்துக் கடையொன்றில் கம்பீரமாய் நிற்கும் கேசவன், நிலவிளக்கை ஏந்திவரும் ஷோபனா(அந்தப் பொண்ணைப் பார்த்ததும் எனெக்கென்னவோ ஷோபனாவின் சாயல்தான் முகத்தில் தென்பட்டுச்சு)வைக் கவனிச்சு, கேசவனைமட்டும் வாங்கினேன். இந்தமாதிரி சமயங்களில் கோபாலின் கண்களைமட்டும் கவனமாத் தவிர்த்துருவேன். நோ ஐ காண்டாக்ட்:-))))

இன்னும் ரயில் டிக்கெட் எந்த கதியில் இருக்குன்னே தெரியலை. ஹொட்டேலில் கணினி இணைப்பைக் கேட்டுவாங்கி அதுலே தேடிக்கிட்டு இருந்தார் கோபால். நானோ வரவேற்புப் பகுதியில் இருந்த புள்ளையார் கலெக்ஷன்களை நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தேன். எல்லாம் அங்கே வேலைசெய்யும் பசங்களோடதாம். அருமையா இருந்துச்சு.




வெளியே பாறைகளுக்குப் படகுப் போக்குவரத்து ஜரூரா நடந்துக்கிட்டு இருந்தது. வெள்ளை அன்னம்போல் இருக்கும் தேவாலயத்தைப் பார்க்கக் கிளம்பினோம். சென்னை போல அடாவடியாக இல்லாமல் ஆட்டோக்காரர் இருபது ரூபாய்தான் கேட்டார். எங்களை இறக்கிவிட்ட பிறகுத் திரும்பிப்போகாமல் காத்திருப்பதாகவும் சொன்னார். வெயிட்டிங் காசு வேணாமாம். எங்களுக்கு அங்கிருந்து திரும்பிவர அந்த இடத்தில் ஆட்டோ கிடைக்காதாம். அட! இவ்வளோ கரிசனமா? பேஷ் பேஷ்.
ரெண்டுபக்கமும் சின்னக் கூம்புக் கோபுரமும் நடுவில் ரொம்ப உயரமான கோபுரமுமாய் கம்பீரமா நிற்கும் கோவிலைப் பார்ப்பதே ஒரு பரவசம், நடுக்கோபுரம் 153 அடி உயரமாம். அதன்மேலே இருக்கும் சிலுவை, சொக்கத் தங்கமாம். கோதிக் ஸ்டைலில் கட்டி இருக்காங்க. கத்தோலிக்கர்கள் கையில் வச்சு ஜெபிக்கும் ஜெபமாலையில் இருக்கும் மணிகள் எண்ணிக்கையில் இந்த ஆலய கோபுரங்களையும் நிர்மாணிச்சு இருக்காங்களாம். இது எனக்குப் புதுச் செய்தியா இருந்துச்சு. கோவிலுக்கு வயசு நூறு.

மாதாகோவிலில் உள்ளெ நுழைஞ்சால் வித்தியாசமா 'ஹோ'ன்னு இருக்கேன்னு கவனிச்சதில் புரிபட்டுருச்சு, அங்கே பெஞ்சு வரிசைகள் ஒன்னும் இல்லை. கிறிஸ்துவமதக் கோவில்களில் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயமே இந்த பெஞ்சுதான். இந்துக் கோவில்களில் தரையில் உக்காந்து பூஜை பார்ப்பது கஷ்டம். அதுவும் என்னைப்போல முழங்கால் வலி பிரச்சனை இருப்பவர்களுக்கு ரொம்பநேரம் கால்மடக்கி இருக்க முடியாது. நேரம் ஆக ஆக கடவுள் மேல் உள்ள பக்தி போய், எப்படா இந்தப் பூஜை முடியுமுன்னு ஆகிரும். மனம் லயிச்சு வழிபாடு நடத்தணுமுன்னா உடல் நோகக்கூடாது. இதுதானே நோகாமல் நோம்பு கும்புடறது? பேசாம நானே ஒரு கல்ட் ஆரம்பிச்சு பெஞ்சுலே உக்கார்ந்து பூஜை செய்யலாம் என்ற வகையை அறிமுகப்படுத்திறலாமா? இங்கேதான் வகைவகையான சாமியார் & சாமியாரிணிகள் இருக்காங்களே, நம்மதும் 'க்ளிக்' ஆயிருச்சுன்னா எங்கியோ போயிறலாம்!!! வாரப்பத்திரிக்கைகள் குமுதம் வகையறாக்களை ஒருதரம் புரட்டினாலே விதவிதமான 'கடவுள்கள்' விளம்பரம் கொடுத்திருப்பது தெரியும். நம்ம விளம்பரமும் வரணுமுன்னு எல்லாரும் சாமியை வேண்டிக்குங்கப்பா. பதிவர்களுக்கு முன்னுரிமையும் கூடவே இலவச தரிசனமும்:-))))

அப்புறம் விசாரிச்சதுலே இங்கே இருக்கும் மீனவர் குப்பத்து மக்கள்தான் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வர்றவங்களாம். அதான் பெஞ்சுகிஞ்சு ஒன்னும் வேணாமுன்னு இருந்துட்டாங்களாம். (ஆனாலும் இது அநியாயம்)
ஆல்டரில் மேரியம்மா புடவை கட்டிக்கிட்டு குழந்தை ஏசுவைக் கையில் தூக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் கீழே அடுத்த படியில் சிலுவையில் தொங்கும் ஏசுபிரான். ஆல்டர் அருமையா இருக்கு. ரெண்டுநிமிஷம் நம்ம எல்லாருக்காகவும் பிரார்த்தனை செஞ்சேன். ( சாமியைப் பார்த்ததும் அது கொடு, இது கொடுன்னு யாசிக்கும் வழக்கத்தை நிறுத்தமுடியலை. குழந்தையைலிருந்தே வளர்ப்பு அப்படி. 'நல்ல புத்தியைக் கொடு'ன்னு சொல்ல ஆரம்பிச்சுவச்ச பாட்டியைத்தான் சொல்லணும்)
கர்ப்பக்கிரகத்தின் ரெண்டுபக்கமும் இருக்கும் சந்நிதிகளில் ஒன்றில் ஏசுநாதரும், அடுத்ததில் குழந்தை ஏசுவைத் தூக்கி வச்சுருக்கும் ஜோஸஃப் (அப்படித்தான் நினைக்கிறேன், கிறிஸ்டோஃபராவும் இருக்கலாமோ? ஆனா அவர் குழந்தையைத் தோளில் தூக்கிச் சுமப்பாரில்லையா?) சிலைகளும்.
ஆலயத்தில் பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்குது.


வெளியே ஆலயமுகப்புக்கு முன்னால் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உசரமான தூண்கள்போல ஒரு ஸ்தம்பம். கொடிமரமுன்னு வச்சுக்கலாமா?
இடதுபக்கம் ஒரு திறந்தவெளி அரங்கம்.அலங்கார அன்னை கலை அரங்கம். அடடா...சர்ச்சோட பெயர் சொல்லலையே...Church of Our Lady of Ransom.

உள்ளேயும் சரி, வெளியே மைதானத்திலும் சரி அழகான அமைதியான மனநிறைவான கட்டிட அமைப்புகள். கோவில் இருக்கும் தெருவும் ரெண்டுபக்கமும் மண்தரையாக இருந்தாலும் படு சுத்தமா இருக்கு. நமக்காகக் காத்து நின்ன ஆட்டோவில் ஏறினோம். மெயின் ரோடுக்கு வந்தோம். அங்கேயே ஒரு சிவன் கோயில் இருக்கு. குகநாதர் கோவில்.
அஞ்சு நிமிசம் பிந்திப்போச்சு(-: கோவிலை மூடிட்டாங்க.



அறைக்குத் திரும்புனதும் அயினிச் சக்க கூப்புட்டது. லேசா அமுக்குனதும் அப்படியே பிளந்து சுளைகள் தெரிஞ்சது. ஹைய்யோ.... அப்படியே மினியிலும் மினிப் பலாச்சுளை. சதைப்பற்றெல்லாம் இல்லை. இத்துனூண்டு சுளையிலே முக்கால்வாசி கொட்டை! பகல் சாப்பாட்டுக்குக் கீழே ரெஸ்டாரண்டுக்குப் போனோம். தைரியமா எனக்கும் ஒரு சாப்பாட்டுத் தட்டை வாங்கிக்கிட்டேன். அங்கேயே ராத்திரி சாப்பாடு வாங்கிக் கொண்டுபோக ஏற்பாடு இருக்கான்ன்னு விசாரிச்சதில் நாம் கிளம்பும்போது சாப்பாட்டைத் தயாரிச்சுத் தரேன்னு சொல்லிட்டாங்க. ரயில் பயணத்துலே கண்ட இடத்தில் வாங்க வேணாமுன்னுதான்.
அஞ்சரைக்கு வண்டி. நாலுமணிக்குச் சாப்பாடு வந்துச்சு. ரொம்ப அழகாப் பார்ஸல் செஞ்சக் கட்டுச்சோறு மூட்டை. இப்போதைக்குக் கடைசியா அய்யனைக் க்ளிக்கி, போய்வரோமுன்னு சொல்லிக் கீழே வரவேற்புக்கு வந்தால் அரவிந்தன் அன்றைய மலர் அலங்காரத்தைச் செஞ்சுக்கிட்டு இருந்தார்.அவரோட கலை உணர்வைப் பாராட்டுனதும் சின்ன வெட்கம் முகத்தில் வந்துச்சு. நல்ல பையர். நல்லா இருக்கட்டும்.
அம்பது ரூபா கொடுத்து ஒரு டாக்ஸி பிடிச்சு ரயில் நிலையம் போனோம். இந்தக் கட்டிடமே ரொம்ப அழகா இருக்கு. நாட்டின் கடைசிக்கோடி என்றதால் நெடுக்காக நிக்கும் ரயில் பாதை. இன்னும் நமக்கு இடம் இருக்கா இல்லையான்னே தெரியலை. விசாரிச்சதில் ' ரயில் பெட்டியில் ஒட்டிட்டோம். போய்ப் பாருங்க'ன்னாங்க.

என்னங்க, இவ்வளோ நீளமான ரயில்? நாம் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கோம். சென்னையே வந்துருமோ? எஞ்சினுக்கு ரெண்டாவது பெட்டியில் நமக்கு இடம். பதினைஞ்சு வருசம் கழிச்சு முதல்முறையா ரயிலில் தூங்கப் போறோம். உள்ளே இருட்டா, அழுக்கு நீலக்கலரில் ஒரு உள் அமைப்பு. மேலேயும் கீழேயுமா ரெண்டடுக்கு. ஜன்னல்வழியா ஒன்னுமே தெரியக்கூடாதுன்னே அழுக்கை அப்படியே விட்டுவச்சுருக்காங்க. குறையே சொல்றேனேன்னு யாரும் வருத்தப் படாதீங்க. இருக்கும் லக்ஷணத்தைச் சொல்லியாகணும் இல்லையா?

கோவில்பட்டி வந்தால் கடலைமிட்டாய் வாங்கிக்கணுமுன்னு காத்திருந்தேன். ஆனால் கோயில்பட்டியெல்லாம் கடந்துபோய் ரொம்ப நேரமாச்சாமே!!! அக்கம்பக்கம் ஆட்கள் சாப்பிடும்போது நாங்களும் சாப்பிட்டு முடிச்சோம். ஆச்சரியமா அதுவரைக்கும் இளம்சூடாவே இருந்துச்சு சாப்பாடு. எண்ணெயில்லாச் சப்பாத்தி, வெஜிடபிள் கறி, ஃப்ரைடு ரைஸ். ஹொட்டேல் ஸீ வ்யூ கவனிப்பு நல்லாவே இருக்கு. இங்கே நம்மூரில் இருந்து போகும் வெள்ளைக்கார நண்பர்களுக்குத் தாராளமாப் பரிந்துரைக்கலாம்.

கருநீலக் கர்ட்டனுக்குள் எல்லாரும் முடங்கியாச்சு. தனித்தனிக் கூடுகளும் விதவிதமான குறட்டை ஒலிகளும். ஒரு சத்தம் அடங்குனா இன்னொண்ணு ஆரம்பிக்குது. ஏதோ டைம்டேபிள் போட்டுவச்ச மாதிரி:-) எழும்பூர் வருமுன் எழுந்துட்டோம். கூட்டிட்டுப்போக யாரும் வரவேணாம். நாங்களே வீட்டுக்கு வந்துருவோமுன்னு வீராப்பாச் சொல்லிவச்சுருந்தோம். டாக்சியைத் தேடுனா கிடைக்கலை. ஆட்டோகளின் அணிவகுப்புதான். பயணிகள் கவனத்துக்கு: எக்மோர் ஸ்டேஷனில் ப்ரீபெய்ட் டாக்சிகள் சர்வீஸ் கிடையாது.

வழிநெடுக எக்கச்சக்கமான தோரணங்களும் அலங்காரங்களும். போஸ்டர்களும் போலீஸுமா..... நமக்கு எதுக்கு இப்படியெல்லாம் வரவேற்பு? ஓசைப்படாம இருக்கலாமுன்னா விடமாட்டாங்களே......ஒருவேளை, யாரோ ஆட்டோ அனுப்பறாங்கன்னு.......கத்திப்பாரா தாண்டிப் போரூர் சாலையில் கூடுதல் அமர்க்களம். ஞாயித்துக்கிழமையிலே வேலைக்கு வந்த சடைவு காவல்துறையினர் முகங்களில். கொத்துக்கொத்தாக் கரைவேட்டிகள் அடையாள பேனரைப் பிடிச்சுக்கிட்டுச் சாலையோரமா நிக்கறாங்க. கண்ணுலேத் தட்டுப்பட்டாகணும். இல்லேன்னா வம்பு. நாளைக்கு எவனாவது போட்டுக் கொடுத்துட்டா? ராட்சஸ டெய்ஸிப்பூ போல டிஸைனில் கொடிகளால் அலங்காரம், நடுவிலே சம்பந்தப்பட்ட முக்கியஸ்தரின் முகம். இந்த டிசைனையும் இப்போதான் முதல்முறையாப் பார்க்கிறேன். சமீபத்திய வரவோ? இதுலெல்லாம் மட்டும் நம்மது அசுர வளர்ச்சி. என்ன விஷயமாம்? பிரமாதமா ஒன்னுமில்லே.... முதல்வர் ஆசுபத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு(??) போறாராம். ஹூம்.....உண்மையிலே 'நாம் போகவேண்டிய தூரம் ரொம்ப' என்று புரிஞ்சது(-:

"பனிரெண்டுநாள் காக்காபோல் சுத்தியாச்சு. இனி ரெண்டுவாரம் கம்ப்ளீட் ரெஸ்ட்" கோபால் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பா வந்துச்சு. அதான் கன்யாகுமரியில் நாலுநாள் ரெஸ்ட் எடுத்தீங்களே, அதே மாதிரிதானே?

தொடரும்.....:-))))

Wednesday, June 24, 2009

அரவணையில் துயிலும் ஆதிகேசவன்.........(2009 பயணம் : பகுதி 35)

இருபத்தியிரண்டடி நீளமா அறிதுயில் கொண்டிருக்கும் ஆதிகேசவன் முன்னே நிக்கிறோம். 'அனந்தபுரம் பப்பநாபனைப் பார்க்கலை'ன்னு நான் அப்பப்பப் புலம்புனதைக் கேட்டுக்கேட்டு காது புளிச்சுப்போச்சு போல இருக்கு நம்ம ரமேஷுக்கு. நிம்மதியாச் சாமியைப் பாருன்னு திருவட்டாறு கோயிலுக்குக் கொண்டுபோயிட்டார்.

'பதினாறாயிரத்துயெட்டுச் சாளக்கிராமம் உள்ளடக்கிய கடுசக்கரை திருப்படிமம் ' இப்படித்தான் விளக்கம் போட்டுருந்தாங்க. விவரம் தெரிஞ்சவுங்க சொல்லுங்க. வெளியே இருந்து பார்க்க ரொம்பவே சாதாரணமா இருக்கும் உயரமான மதில் சுவரும் பத்துப் படிகளேறிப் போகவேண்டிய வாசலுமா இருந்துச்சு. கேரள பாணியில் அமைஞ்ச கூரைகள். கோபுரமுன்னு ஒன்னும் இல்லை. கோயிலைப் புதுப்பிக்கும் பணி நடக்கப்போகுதாம், அதுக்குக் கொஞ்சம் நன்கொடை கொடுத்தோம். ஊர்கூடித்தானே தேர் இழுக்கணும்.

அர்ச்சனைச் சீட்டு, மொத்தக் குடும்பத்துக்கும் பெயர் நட்சத்திரம் எல்லாம் கேட்டு வரிசையா எழுதிக் கொடுத்தார் அங்கே இருந்த இளைஞர். நாமும் குடும்ப நபர்களை ஒருத்தர் விடாமச் சொன்னோம்:-)))) அம்பது ரூபாய்தான். நம்மைக் கூட்டிக்கிட்டுப்போய் முன்மண்டபத்தில் விட்டார் மற்றொரு கோவில் ஊழியர். இதோ கேசவன் முன்னே நிக்கிறோம். மேற்குப் பார்த்த திருமேனி. அதனால் பப்பநாபன் கோலத்துக்கு நேர் எதிரா இருக்கார். தாமரைக் கண்ணனின் தாழ் முதலிலும், இடை இடையிலும் சிரம் கடைசியிலுமாய் மூணு வாசல்களில் தரிசனம். சின்னதாச் சுடர்விட்ட வாழைப்பூ விளக்கின் ஒளியில் அர்ச்சனைச் சீட்டுலே இருந்த பெயர்களையெல்லாம் ஒவ்வொன்னாய்ப் படிச்சு நிதானமான அர்ச்சனை செய்தப் போத்தியைத் தவிர்த்தால் நாங்களும் கேசவனுமாய் ஏகாந்த சேவை. ஒருவினாடியாவது முகம் காமிக்காமல் இருந்த பப்பநாபனை நினைத்துக்கொண்டேன். இருபது நிமிஷம் அந்த முக அழகை ஆராதிக்க அனுகிரகம் செய்தார் ஆதிகேசவர்.
இந்தக் கோயில்தான் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வமாக முன்னே இருந்ததாம். இங்கே பூஜை முடிஞ்சபிறகுதான் மன்னர் சாப்புடுவாராம். இங்கே பூஜை முடிஞ்சு சாமி சாப்பிட்டானதும் அரண்மனை வரை உள்ள இடைவெளிதூரத்தில் அங்கங்கே அரண்மனை சிப்பாய்கள் தொடர்வெடிகள் வெடிச்சு அந்த வெடிச்சத்தம் மூலம் சேதி அரண்மனைக்குப் போகுமாம். இதேபோல் ஒரு கதை நம்ம கட்டபொம்மன் சரித்திரத்திலும் எங்கோ படிச்ச ஞாபகம். இங்கே வெடின்னா அங்கே மணி ஓசை. அங்கங்கே பெரிய காண்டாமணிகள் ஒலிக்கச் செய்து ஜக்கம்மா கோவில் பூசை முடிஞ்ச விவரம் மன்னருக்குப் போகுமாம்.
இந்த அரண்மனையைவிட்டுத் திருவனந்தபுரத்துக்கு மன்னர் குடும்பம் இடம்பெயந்தப்ப, மன்னரும் தினசரி வழிபட ஏதுவா அரவணைமேல் பள்ளிகொண்டானை அங்கே அனந்தபுரத்தில் பிரதிஷ்டை செஞ்சு உண்டான கோவில்தான் திருவனந்தபுரம், அனந்த பத்மநாப ஆலயம்.
திருவட்டாறு கோவிலின் உட்பிரகாரம் ரொம்ப அழகா விஸ்தீரணமா இருக்கு. முக்கியமாச் சொல்லவேண்டியது சுத்தம். படு சுத்தம். வெளிப்பிரகாரம் சுற்றிவர மூன்று பகுதிகளிலும் தமிழ்நாட்டுக்கோவில்கள் போலவே கல் தூண்களும் அதுலே வரிசையா அணிவகுத்து நிற்கும் பாவை விளக்குகளும் அருமை. அதுவும் ஒரு கோணத்துலே இருந்து பார்க்கும்போது..... ஆஹா...அடடா...ன்னு இருக்கு. அந்தக் காலத்துலே எண்ணெய் விளக்குக் கொளுத்திவச்சுருப்பாங்கல்லே? இருட்டில் எப்படி ஜெகஜ்ஜோதியா இருந்துருக்குமுன்னு கற்பனை செஞ்சு பார்த்தேன்.

(கோயிலையொட்டி இருக்கும் எளிமையான தெரு)
ஊரைச் சுத்தி ஆறு வட்டமாப் போவதால் இந்தப் பெயர் வந்ததுன்னு சொல்றாங்க. கேசவனைப் பார்த்த கையோடு இன்னும் அங்கே இருக்கும் ரெண்டு சந்நிதிகளைப் பார்க்கலாமுன்னு கோவிலை வலம் வந்தோம். அம்பாடி கிருஷ்ணன், கையில் வேய்ங்குழலோடு ஸ்ரீ வேணுகோபாலனாக் காட்சி தர்றார். மனசுக்கு நிறைவான தரிசனம். இந்தச் சந்நிதியை இப்போ பராமரிச்சுப் பார்த்துக்கறது ஹரே கிருஷ்ணா இயக்கமாம். அடுத்த பகுதியில் ஐயப்பன் இருக்காராம். எனக்கென்னவோ அங்கே போகணுமுன்னு தோணவே இல்லை. மனசு முழுக்க ஒரு திருப்தியா ஒரு உணர்வு.

இந்தக் கோயிலுக்கு வயசு? பலநூற்றாண்டுகள் ஆனது, ரெண்டாயிரம் வருசங்கள் இருக்கும் என்று சொல்றாங்க.மூலவர் சந்நிதிக்கு முன்னே இருக்கும் கல்மண்டபம் அபூர்வமானதுன்னு விளக்கம் போட்டுருக்கு. ஆனா 'பொறியல்' பண்ணிட்டாங்க. ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட கோவில். இதுவும் அந்த நூற்றுயெட்டில் ஒன்னு.



பெருமாளுடைய முகம் சொல்லமுடியாத அழகு. கிட்டப்போய்த் தொட்டுக் கொஞ்சலாமான்னு இருந்துச்சு. திருத்தல மகிமைகள் ஒரே ஃப்ரேமில் அடங்காததால் நாலு படமா எடுத்தேன். ஓவர்லேப் ஆகி இருக்கும்.

நம்ம சென்னையிலும் அடையாறில் அனந்தபத்மநாப சுவாமி கோவில் ஒன்னு இருக்கு. போனமுறை பார்த்ததைவிட இன்னும் செல்வச் செழிப்புக் கூடி இருக்கு. வெள்ளிக்கவசங்கள் எல்லாம் தங்கக் கவசமா ஆகி இருக்கு. மழமழன்னு பெருமாள் முகம் ரொம்பவே அழகு. முக்கியமா சொல்லவந்தது என்னன்னா மூலவருக்குப் பூஜை நடக்கும்போது அதை CCTV யில் வெளியே ரெண்டு பக்கமும் மானீட்டர்களை வச்சு ஒளி பரப்பறாங்க. கூட்டம் இருந்தாலும் பிரச்சனை இல்லை. நடக்கறதையெல்லாம் நின்ன இடத்தில் இருந்தே நாமும் பார்க்கலாம் சாமியைப்போல. இதுவும் ஒருவகையில் நாம்தான் கடவுள்:-))))


இன்றையக் கணக்கில் இதுதான் கடைசி இடம். நேரா கன்யாகுமரிதான். இந்த ஒரு நாளில் மட்டும் வட்டக்கோட்டை, சுசீந்திரம், நாகர்கோவில், உதயகிரிக் கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், பேச்சிப்பாறை அணை, திற்பரப்பு அருவி, திருவட்டாறு இப்படி ஒன்பது இடம் ஓடி இருக்கோம். எல்லாம் ஒரு சாம்பிள் பார்த்தமாதிரிதான். இனி ஒரு பயணத்தில் நின்னு நிதானமாப் பார்க்கணும்.

மறுநாள் கார் வேணுமான்னு யோசிச்சதில் மாலை ரயிலைப் பிடிக்கணும் என்றதால் உள்ளுரில் விட்ட இடங்களைப் பார்த்துக்கலாமுன்னு ரமேஷுக்கு பைபை சொன்னோம். நல்ல மனுஷர். அடுத்தமுறை இவரை நம்பிப் பயணிக்கலாம். மறுநாள் ரயிலடிக்கு கூட்டிப்போக வரேன்னார். 'நல்லா இருக்கே...... போய்ப் பிழைப்பைப் பாருங்க. முழுநாளுக்கு பயணிகள் கிடைச்சா நாலு காசு வருமே'ன்னு சொன்னதும் அவருக்கு மனசெல்லாம் இளகிருச்சு. அறைக்குப்போய், நியூஸியிலிருந்து கொண்டுபோயிருந்த சாக்லேட்டை (கடைசிப் பெட்டி) ப்ளைட்டனுக்குக் கொடுத்து அனுப்பினோம்.
களைத்துப்போன கால்களுடன் ஹொட்டேலுக்குள் நுழைஞ்சால் அரவிந்தனின் அன்றைய மலர் அலங்காரம் வரவேற்றது.

தொடரும்....:-)

Monday, June 22, 2009

திற்பரப்பும் மகாதேவரும்.........(2009 பயணம் : பகுதி 34)

ரப்பர் எஸ்டேட்டுகள் அடர்த்தியாக் காடா இருக்குது. டிஐ குரூப்க்குச் சொந்தமானதுன்னு கேள்வி. அன்னாசிப் பழப்புதர்களை வழிநெடுகிலும் பார்த்தேன். சுமார் ஒருமணி நேரத்தில் திற்பரப்பு என்னும் இடத்துக்கு வந்தோம். இங்கே இருக்கும் நீர்வீழ்ச்சிபற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும் இன்னிக்கு இங்கே வருவோமுன்னு எதிர்பார்க்கலை. தெரிஞ்சுருந்தா கோபாலுக்காவது ஒரு மாற்றுடை கொண்டுவந்துருக்கலாம். இனிமேல் பயணங்களில் தினப்படி வெளியே போகும்போதும் எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு செட் உடைகளை எடுத்துக் கையோடு கொண்டு போகணும். நாமா சுமக்கிறோம், கார்தானே?
நீர்வீழ்ச்சிக்குப் போக ஒரு சின்னக் கட்டணம். ரெண்டே ரூபாய். கெமெராவுக்கும் அஞ்சு ரூபாய்தான். வீடியோ கெமெரான்னா எழுபத்தியஞ்சு. பூந்தோட்டமா இருக்குமிடத்தில் படிகள் இறங்கிக் கீழே போனால் வலது பக்கம் நீர்வீழ்ச்சி. ரொம்ப ஜோரா இல்லாமச் சுமாராத் தண்ணி விழுந்துக்கிட்டு இருக்கு. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனிப் பகுதிகள். அதுக்காகக் கம்பித்தடுப்பு எல்லாம் போட்டு அராஜகமாப் பிரிச்சு வைக்கலை:-) கீழே விழும் தண்ணீர் சின்னதாத் தேங்கி, வழிஞ்சு போகுமிடத்தில் குழந்தைகளுக்கான சிறுவர் பூங்காவும் நீச்சல் குளமும் கட்டி வச்சுருக்காங்க. பசங்க விளையாடும் பார்க் பகுதியில் 'ஆ'வென்று வாய்பிளந்து நிற்கும் யானை. வயிறு வழியாகச் சறுக்கி வரக் குட்டியா ஒரு சறுக்கு மரம்.
புல்வெளியும் பூச்செடிகளுமா நல்லா இருக்கு அந்த இடம். பூங்காவில் உணவு அருந்தாதீர்கள் என்ற அறிவிப்புப் பலகையை 'மதிச்சு', நம்ம சனம் அந்தப் பலகையைச் சுத்தி உக்கார்ந்து சோத்துமூட்டைகளைப் பிரிச்சுச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. மாலை நாலரை மணிக்கு என்ன சோறு வேண்டி இருக்குன்னு நினைச்சாலும் கட்டுச் சோறைப் பார்க்கும்போது கூடப் போய் உக்கார்ந்துக்கலாமான்னு இருந்ததென்னவோ நிஜம்:-)

இளவயதுப் பெண்கள் ஏராளமா வந்து அருவியில் நனைஞ்சபடி இருந்தாங்க.
நாங்க அஞ்சு நிமிஷம் தண்ணீரில் கால் நனைச்சுட்டு படிகளில் ஏறி வெளியே வருமிடத்தில் நிறையக் கடைகள். குளியலுக்குப் பிறகு வவுறு பசிக்குமேன்னு சுடச்சுட பஜ்ஜி போண்டா எல்லாம் போட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க. நம்மாளுக்கு கொஞ்சம் எச்சில் ஊறுது. போனாப்போகட்டுமுன்னு மனசு வந்து ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து அங்கே போனால்........ நம்ம விடியா மூஞ்சிக்கேத்தமாதிரி எல்லாம் வித்துப்போய் இருந்துச்சு. ஆனால் புதுசா மாவைக் கலக்கிப் போட்டுத்தரேன்னு சொன்னதை நம்பி எண்ணி மூணு சொன்னோம். இந்த 'மூணு' கோபாலுக்கு ஆகிவந்த எண். கால் டஜன் ! இதைபத்தி ஒரு 'கதை' இருக்கு. அதை 'அப்புறம் கதைகளில்' சொன்னால் ஆச்சு. காத்திருக்கும் நேரத்தில் வீடியோ எடுத்துத் தரும் ஒரு வியாபாரத்தின் ஏஜெண்ட் ஒருத்தரைப் பார்த்துப் பேசிக்கிட்டு இருந்தேன். எல்லா விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் சகாயவிலையில் படம் புடிச்சுத் தந்துருவாங்களாம்.
பேப்பரில் மடிச்சுக் கிடைச்ச சூடான பஜ்ஜியைச் சுமந்துக்கிட்டு மகாதேவரைப் பார்க்கப் போனோம். திற்பரப்பு மகாதேவர் ஆலயம் ரொம்பப் பழமை மட்டுமில்லாமல் பெருமையும் வாய்ந்தது. குமரி மாவட்டத்தில் இருக்கும் பனிரெண்டு சிவாலயங்களில் ஒன்னு. தட்சனை வதம் செஞ்சபிறகும் கோபம் அடங்காமல் உக்கிரமா இருந்த சிவன் இங்கே வந்து இந்த ஆற்றங்கரையோரம் கோயில் கொண்டார். எப்பவும் சிவன் முகம் நோக்கி உட்கார்ந்துருக்கும் நந்தி தேவர், கோப முகத்தைப் பார்க்கப் பயந்து வேறு திசை நோக்கி உக்கார்ந்துருக்கார் இங்கே. அதானே? சாமியா இருந்தாக்கூடக் கோவமா இருக்கும் மூஞ்சியில் யார் முழிப்பாங்க?

மகாசிவராத்திரியன்னிக்கு இந்த பனிரெண்டு கோயில்களையும் ஒரே நாளில் ஓடி ஓடிப் பார்ப்பாங்களாம். இதுக்கு சிவாலய ஓட்டமுன்னு பெயர். மாரத்தான் ஓட்டமுன்னு வச்சுக்கலாம். எப்படி இந்த வழிபாடு ஆரம்பிச்சதுன்னு தெரியலை. ஆனால் வருசாவருசம் ஓடும் மக்கள் தொகை கூடிக்கிட்டே போய் இந்த வருசம் இருபதாயிரம் பேர் ஓடுனாங்கன்னு ஜெ.மோ.வின் பதிவில் பார்த்த நினைவு.. கோயிலுக்குப் போகும் வழியில் தரையில் ஒரு பாம்பு. தாண்டிப்போனோம்.
இடதுபக்கம் நீர்வீழ்ச்சியின் மேற்பகுதி தெரியுது. இது இயற்கையான நீர்வீழ்ச்சி இல்லையோன்னு ஒரு சம்சயம் ஆரம்பிச்சது அப்போதான். சின்ன ஆறாக வரும் தண்ணீர் பாறைகளின் மேல்பரவி நேராகப் போகாமல் ஓவர்ஃப்ளோ ஆகி தண்ணீர் வெளியே விழுவது போல அமைப்பு. நேராப் போகவிடாமல் கற்களால் தடுத்துவிட்டதுபோலத் தெரியுது. படத்தைப் பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க. மழைக்காலங்களில் ஆற்றில் அதிகத் தண்ணீர் வரும்போது கல்படியைத் தாண்டி அந்தப் பக்கம் போகுமோ?

வலது பக்கம் இருக்கும் கோவிலுக்குப் போனால் கோவிலின் முன் வாசலுக்கு முன்னால் நதிக்கரையில் இருந்து நதியின் நடுவே இருக்கும் நீராழிமண்டபத்துக்கு நடைபாதை போட்டுருக்கு. விழா நாட்களில் ஸ்வாமியை அலங்கரிச்சு அந்த மண்டபத்தில் கொண்டு வைக்க அமைச்சிருப்பாங்களோ?

ஆனால் இப்போ அதுக்கு வேற உபயோகம் கண்டுபிடிச்சாச்சு. புதுமணத் தம்பதிகள் கலியாணம் முடிஞ்ச கையோடு குலதெய்வம் கோவில்களுக்கோ , இல்லை அந்த ஊரில் இருக்கும் கோவிலுக்கோ போய்க் கும்பிட்டு வருவாங்க இல்லையா? இப்போ அதுங்கூடவே ஒரு வீடியோ ஷூட்டிங் வச்சுக்கறாங்க. கலியாணத்தைப் புரோகிதர் நடத்துன காலம் மாறி இப்போவெல்லாம் வீடியோக்காரர் சொற்படிக்குத்தான் எல்லாமே நடக்குது. அதன்படி மணமக்கள் உல்லாசமா இயற்கை அழகை ரசிச்சு கைத்தலம் பற்றிக் கனாக்கண்டு நடப்பதையெல்லாம் வீடியோ எடுக்கறாங்க. டைரக்டர் 'ஸ்டார்ட், ஆக்ஷன், கட் ' எல்லாம் சொல்வாரோ என்னவோ தெரியலை. பட்டுப்புடவை பளபளக்க ஒரு ஜோடி நடைபயிலுவதைப் பார்த்தோம்.
கோயில் திறக்கும் நேரம் ஆகலை என்றதால் உள்ளே போகலை. எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கிட்டாச்சு:-) வெளியே மண்டபத்தில் டெர்ரகோட்டா பாவைவிளக்குச் சிலைகள் தூணில் இருந்தன. கோவில் மதிலுக்குப் பட்டைப்போடும் சமயம் இதுக்கும் அடிச்சுவிட்டுருப்பாங்க.

அடுத்த இடம் பார்க்கப்போகலாமுன்னு வெளியே வந்தோம். கடயல் பஞ்சாயத்தைச் சேர்ந்த பகுதி இந்த திற்பரப்பு. அருமையா நடைபாதை, டூ வீலர் பார்க்கிங் ஏரியா, அங்கே இருக்கும் பொழுதுபோக்கும் வசதிகளின் விளம்பரங்கள் எல்லாம் அட்டகாசமா இருந்துச்சு. பஞ்சாயத்துப் போர்டு தலைவரைப் பாராட்டத்தான் வேணும்.. தரையில் அதே பாம்பு இன்னும் இருக்கு. இப்பத்தான் கவனிச்சேன் அது ஒரு தவளையைப் பிடிக்க அங்கே ஊர்ந்து வருது. காலங்காலமாய்க் காத்திருக்கும் பாம்பு. ஆளில்லாத டீக்கடையில் டீ ஆத்தும் ஒருத்தரைக் கவனிச்சபடியே ரமேஷைத் தேடினோம். கேஸ் அடுப்பு வந்தபிறகு டீக்கடை பாய்லர் எல்லாம் போயே போச்.

சின்னச் சின்ன வேன்களில் வந்த பள்ளிக்கூடப் பிள்ளைகளும், ஜோடிகளா வந்த இளைஞர் கூட்டமுமா கலகலன்னு இருக்கு. நமக்குத்தான் நேரப் பற்றாக்குறை.

தொடரும்....:-)