இருபத்தியிரண்டடி நீளமா அறிதுயில் கொண்டிருக்கும் ஆதிகேசவன் முன்னே நிக்கிறோம். 'அனந்தபுரம் பப்பநாபனைப் பார்க்கலை'ன்னு நான் அப்பப்பப் புலம்புனதைக் கேட்டுக்கேட்டு காது புளிச்சுப்போச்சு போல இருக்கு நம்ம ரமேஷுக்கு. நிம்மதியாச் சாமியைப் பாருன்னு திருவட்டாறு கோயிலுக்குக் கொண்டுபோயிட்டார்.
'பதினாறாயிரத்துயெட்டுச் சாளக்கிராமம் உள்ளடக்கிய கடுசக்கரை திருப்படிமம் ' இப்படித்தான் விளக்கம் போட்டுருந்தாங்க. விவரம் தெரிஞ்சவுங்க சொல்லுங்க. வெளியே இருந்து பார்க்க ரொம்பவே சாதாரணமா இருக்கும் உயரமான மதில் சுவரும் பத்துப் படிகளேறிப் போகவேண்டிய வாசலுமா இருந்துச்சு. கேரள பாணியில் அமைஞ்ச கூரைகள். கோபுரமுன்னு ஒன்னும் இல்லை. கோயிலைப் புதுப்பிக்கும் பணி நடக்கப்போகுதாம், அதுக்குக் கொஞ்சம் நன்கொடை கொடுத்தோம். ஊர்கூடித்தானே தேர் இழுக்கணும்.
அர்ச்சனைச் சீட்டு, மொத்தக் குடும்பத்துக்கும் பெயர் நட்சத்திரம் எல்லாம் கேட்டு வரிசையா எழுதிக் கொடுத்தார் அங்கே இருந்த இளைஞர். நாமும் குடும்ப நபர்களை ஒருத்தர் விடாமச் சொன்னோம்:-)))) அம்பது ரூபாய்தான். நம்மைக் கூட்டிக்கிட்டுப்போய் முன்மண்டபத்தில் விட்டார் மற்றொரு கோவில் ஊழியர். இதோ கேசவன் முன்னே நிக்கிறோம். மேற்குப் பார்த்த திருமேனி. அதனால் பப்பநாபன் கோலத்துக்கு நேர் எதிரா இருக்கார். தாமரைக் கண்ணனின் தாழ் முதலிலும், இடை இடையிலும் சிரம் கடைசியிலுமாய் மூணு வாசல்களில் தரிசனம். சின்னதாச் சுடர்விட்ட வாழைப்பூ விளக்கின் ஒளியில் அர்ச்சனைச் சீட்டுலே இருந்த பெயர்களையெல்லாம் ஒவ்வொன்னாய்ப் படிச்சு நிதானமான அர்ச்சனை செய்தப் போத்தியைத் தவிர்த்தால் நாங்களும் கேசவனுமாய் ஏகாந்த சேவை. ஒருவினாடியாவது முகம் காமிக்காமல் இருந்த பப்பநாபனை நினைத்துக்கொண்டேன். இருபது நிமிஷம் அந்த முக அழகை ஆராதிக்க அனுகிரகம் செய்தார் ஆதிகேசவர்.
இந்தக் கோயில்தான் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வமாக முன்னே இருந்ததாம். இங்கே பூஜை முடிஞ்சபிறகுதான் மன்னர் சாப்புடுவாராம். இங்கே பூஜை முடிஞ்சு சாமி சாப்பிட்டானதும் அரண்மனை வரை உள்ள இடைவெளிதூரத்தில் அங்கங்கே அரண்மனை சிப்பாய்கள் தொடர்வெடிகள் வெடிச்சு அந்த வெடிச்சத்தம் மூலம் சேதி அரண்மனைக்குப் போகுமாம். இதேபோல் ஒரு கதை நம்ம கட்டபொம்மன் சரித்திரத்திலும் எங்கோ படிச்ச ஞாபகம். இங்கே வெடின்னா அங்கே மணி ஓசை. அங்கங்கே பெரிய காண்டாமணிகள் ஒலிக்கச் செய்து ஜக்கம்மா கோவில் பூசை முடிஞ்ச விவரம் மன்னருக்குப் போகுமாம்.
இந்த அரண்மனையைவிட்டுத் திருவனந்தபுரத்துக்கு மன்னர் குடும்பம் இடம்பெயந்தப்ப, மன்னரும் தினசரி வழிபட ஏதுவா அரவணைமேல் பள்ளிகொண்டானை அங்கே அனந்தபுரத்தில் பிரதிஷ்டை செஞ்சு உண்டான கோவில்தான் திருவனந்தபுரம், அனந்த பத்மநாப ஆலயம்.
திருவட்டாறு கோவிலின் உட்பிரகாரம் ரொம்ப அழகா விஸ்தீரணமா இருக்கு. முக்கியமாச் சொல்லவேண்டியது சுத்தம். படு சுத்தம். வெளிப்பிரகாரம் சுற்றிவர மூன்று பகுதிகளிலும் தமிழ்நாட்டுக்கோவில்கள் போலவே கல் தூண்களும் அதுலே வரிசையா அணிவகுத்து நிற்கும் பாவை விளக்குகளும் அருமை. அதுவும் ஒரு கோணத்துலே இருந்து பார்க்கும்போது..... ஆஹா...அடடா...ன்னு இருக்கு. அந்தக் காலத்துலே எண்ணெய் விளக்குக் கொளுத்திவச்சுருப்பாங்கல்லே? இருட்டில் எப்படி ஜெகஜ்ஜோதியா இருந்துருக்குமுன்னு கற்பனை செஞ்சு பார்த்தேன்.
(கோயிலையொட்டி இருக்கும் எளிமையான தெரு)
ஊரைச் சுத்தி ஆறு வட்டமாப் போவதால் இந்தப் பெயர் வந்ததுன்னு சொல்றாங்க. கேசவனைப் பார்த்த கையோடு இன்னும் அங்கே இருக்கும் ரெண்டு சந்நிதிகளைப் பார்க்கலாமுன்னு கோவிலை வலம் வந்தோம். அம்பாடி கிருஷ்ணன், கையில் வேய்ங்குழலோடு ஸ்ரீ வேணுகோபாலனாக் காட்சி தர்றார். மனசுக்கு நிறைவான தரிசனம். இந்தச் சந்நிதியை இப்போ பராமரிச்சுப் பார்த்துக்கறது ஹரே கிருஷ்ணா இயக்கமாம். அடுத்த பகுதியில் ஐயப்பன் இருக்காராம். எனக்கென்னவோ அங்கே போகணுமுன்னு தோணவே இல்லை. மனசு முழுக்க ஒரு திருப்தியா ஒரு உணர்வு.
இந்தக் கோயிலுக்கு வயசு? பலநூற்றாண்டுகள் ஆனது, ரெண்டாயிரம் வருசங்கள் இருக்கும் என்று சொல்றாங்க.மூலவர் சந்நிதிக்கு முன்னே இருக்கும் கல்மண்டபம் அபூர்வமானதுன்னு விளக்கம் போட்டுருக்கு. ஆனா 'பொறியல்' பண்ணிட்டாங்க. ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட கோவில். இதுவும் அந்த நூற்றுயெட்டில் ஒன்னு.
பெருமாளுடைய முகம் சொல்லமுடியாத அழகு. கிட்டப்போய்த் தொட்டுக் கொஞ்சலாமான்னு இருந்துச்சு. திருத்தல மகிமைகள் ஒரே ஃப்ரேமில் அடங்காததால் நாலு படமா எடுத்தேன். ஓவர்லேப் ஆகி இருக்கும்.
நம்ம சென்னையிலும் அடையாறில் அனந்தபத்மநாப சுவாமி கோவில் ஒன்னு இருக்கு. போனமுறை பார்த்ததைவிட இன்னும் செல்வச் செழிப்புக் கூடி இருக்கு. வெள்ளிக்கவசங்கள் எல்லாம் தங்கக் கவசமா ஆகி இருக்கு. மழமழன்னு பெருமாள் முகம் ரொம்பவே அழகு. முக்கியமா சொல்லவந்தது என்னன்னா மூலவருக்குப் பூஜை நடக்கும்போது அதை CCTV யில் வெளியே ரெண்டு பக்கமும் மானீட்டர்களை வச்சு ஒளி பரப்பறாங்க. கூட்டம் இருந்தாலும் பிரச்சனை இல்லை. நடக்கறதையெல்லாம் நின்ன இடத்தில் இருந்தே நாமும் பார்க்கலாம் சாமியைப்போல. இதுவும் ஒருவகையில் நாம்தான் கடவுள்:-))))
இன்றையக் கணக்கில் இதுதான் கடைசி இடம். நேரா கன்யாகுமரிதான். இந்த ஒரு நாளில் மட்டும் வட்டக்கோட்டை, சுசீந்திரம், நாகர்கோவில், உதயகிரிக் கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், பேச்சிப்பாறை அணை, திற்பரப்பு அருவி, திருவட்டாறு இப்படி ஒன்பது இடம் ஓடி இருக்கோம். எல்லாம் ஒரு சாம்பிள் பார்த்தமாதிரிதான். இனி ஒரு பயணத்தில் நின்னு நிதானமாப் பார்க்கணும்.
மறுநாள் கார் வேணுமான்னு யோசிச்சதில் மாலை ரயிலைப் பிடிக்கணும் என்றதால் உள்ளுரில் விட்ட இடங்களைப் பார்த்துக்கலாமுன்னு ரமேஷுக்கு பைபை சொன்னோம். நல்ல மனுஷர். அடுத்தமுறை இவரை நம்பிப் பயணிக்கலாம். மறுநாள் ரயிலடிக்கு கூட்டிப்போக வரேன்னார். 'நல்லா இருக்கே...... போய்ப் பிழைப்பைப் பாருங்க. முழுநாளுக்கு பயணிகள் கிடைச்சா நாலு காசு வருமே'ன்னு சொன்னதும் அவருக்கு மனசெல்லாம் இளகிருச்சு. அறைக்குப்போய், நியூஸியிலிருந்து கொண்டுபோயிருந்த சாக்லேட்டை (கடைசிப் பெட்டி) ப்ளைட்டனுக்குக் கொடுத்து அனுப்பினோம்.
களைத்துப்போன கால்களுடன் ஹொட்டேலுக்குள் நுழைஞ்சால் அரவிந்தனின் அன்றைய மலர் அலங்காரம் வரவேற்றது.
தொடரும்....:-)
Wednesday, June 24, 2009
அரவணையில் துயிலும் ஆதிகேசவன்.........(2009 பயணம் : பகுதி 35)
Posted by துளசி கோபால் at 6/24/2009 04:26:00 AM
Labels: அனுபவம் திருவட்டாறு ஆதிகேசவன்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
திருவட்டார் கோயில் உங்க எழுத்தைபோலவே அழகா இருக்கு.சும்மா சாமி முன்னால நின்னாலே மனசுக்கு நிம்மதியா நிறைவா இருக்கும்போல இருக்கு!.வழக்கமா போற இடங்களோட பட்டியலில் இதையும் சேர்த்தாச்சு. கோயிலைப்பத்தி கேள்விப்பட்டதுண்டு,இதுவரை போனதில்லை.
பாவை விளக்கு மண்டபம் நல்ல விருத்தியா இருக்கு.இப்பவும் வருஷத்தில் ஒரு நாள் விளக்கு ஏத்தி வைக்கிறாங்களாம்.
//மூலவர் சந்நிதிக்கு முன்னே இருக்கும் கல்மண்டபம் அபூர்வமானதுன்னு விளக்கம் போட்டுருக்கு. ஆனா 'பொறியல்' பண்ணிட்டாங்க//.
பசி நேரத்துல எழுதுன விளக்கமா இருக்கும்:-))
//'பதினாறாயிரத்துயெட்டுச் சாளக்கிராமம் உள்ளடக்கிய கடுசக்கரை திருப்படிமம்//
கடுகு, வெல்லம்( நாஞ்சில் நாட்டில் இதைத்தான் சர்க்கரை என்போம்),மற்றும் சில மூலிகைகள்,இதை சேர்த்து அரைத்த கலவையை கடுசர்க்கரை என்பார்கள்.இதைக்கொண்டுதான் சில கோயில்களில் மூலவரை வடித்து வைத்திருப்பார்கள்.இப்படி செய்வதை கடுசர்க்கரை யோகம் என்பார்கள். இதனால் இந்த கோயில்களில் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது, உற்சவ மூர்த்திக்குதான் எல்லாம் நடக்கும். (உதாரணமாக ,திருப்பதிசாரம் ).
ஆதிகேசவன் இந்த கடுசர்க்கரையுடன் சாளக்கிரமத்தையும் சேர்த்து அரைத்த பாஷாணத்தால் செய்யப்பட்டவர்.
பாவை விளக்கு மண்டபம் அற்புதம்
வாங்க ஐம்கூல்.
கடுசர்க்கரை விளக்கத்துக்கு நன்றி.
நாட்டுச் சக்கரைன்னு சொல்லும் ப்ரவுன் ஷுகரைக் கேரளாவில் சர்க்கரைன்னும், வெள்ளைச் சக்கரையை 'பஞ்சசாரா'ன்னும் சொல்றாங்க.
பெருமாளின் அழகுக்கே இன்னொருக்காப் போகணுமுன்னு இருக்கேன்.
அது அந்த தீபங்கள் ஏற்றும் நாளா அமைஞ்சால்...... பாக்கியம்.
வாங்க சின்ன அம்மிணி.
அழகை, அழகுன்னுதானே சொல்லணும்:-))))
ம்ம்ம்..என்னமா உழைச்சிகிறாங்க அப்போ!! ;)
புகைப்படங்கள் கலக்கல் ;)
// நாங்களும் கேசவனுமாய் ஏகாந்த சேவை. //
உங்க பதிவுக்கு வரும் எல்லோருமே உங்களுடன் தானே இருந்தோம்.
நீங்க கவனிக்கலயா ?
மீனாட்சி பாட்டி.
வாங்க கோபி.
எனக்கும் அதுதான் வியப்பு. இத்தனைக்கும் இப்போ இருப்பதுபோல் இயந்திரங்கள் ஒன்னுமில்லாத காலம்.
கனமான கல்லைத் தூக்கி எடுத்து.....
ஒன்னுபோல ஒரே மாதிரி சிற்பங்களைச் செதுக்கி......
என்ன மாதிரியான கட்டிடக் கலை ஆஹா.....
வாங்க மீனாட்சி அக்கா.
நீங்கெல்லாம் மனசுக்குள்ளே இருந்தீங்க. 'ஸ்தூல சரீரமா நின்னது'ன்ற சொல் விட்டுப்போச்சு எழுதும்போது:-)
கூடவே வர்றது எனக்கு மகிழ்ச்சியா இருக்குதுங்க அக்கா.
கோவில் சுத்தம் ஆச்சரியப்படவைக்கிறது.
வாங்க குமார்.
இயல்பா இருக்கவேண்டிய சுத்தம் என்ற உணர்வு சென்னை மக்களுக்கு ஏன் இல்லை என்பதுதான் என்னுடைய இப்போதைய ஆச்சரியம்!!!
Post a Comment