Showing posts with label கன்யாகுமரி. Show all posts
Showing posts with label கன்யாகுமரி. Show all posts

Friday, June 26, 2009

கன்யாகுமரியில் கடைசிநாள்.....(2009 பயணம்: பகுதி 36)

இன்றைக்கும் ஏமாத்தத்தான் போறானா இல்லை ஒழுங்கா வருவானா என்ற 'கவலை'யோடுதான் கண்ணைத் திறந்தேன். அதே கவலையோடு ஒரு ஒற்றைப் பறவையின் தேடலும் இருந்துச்சோ? வந்தே வந்துட்டான்! சுற்றுப்புறம் அத்தனையும் க்ளிக்கி முடிச்சுக் காலை உணவுக்குப் பின் அம்மனை நோக்கிப்போனோம். தரிசனம் ஆச்சு. கோவில்மண்டபத்துக் கடையொன்றில் கம்பீரமாய் நிற்கும் கேசவன், நிலவிளக்கை ஏந்திவரும் ஷோபனா(அந்தப் பொண்ணைப் பார்த்ததும் எனெக்கென்னவோ ஷோபனாவின் சாயல்தான் முகத்தில் தென்பட்டுச்சு)வைக் கவனிச்சு, கேசவனைமட்டும் வாங்கினேன். இந்தமாதிரி சமயங்களில் கோபாலின் கண்களைமட்டும் கவனமாத் தவிர்த்துருவேன். நோ ஐ காண்டாக்ட்:-))))

இன்னும் ரயில் டிக்கெட் எந்த கதியில் இருக்குன்னே தெரியலை. ஹொட்டேலில் கணினி இணைப்பைக் கேட்டுவாங்கி அதுலே தேடிக்கிட்டு இருந்தார் கோபால். நானோ வரவேற்புப் பகுதியில் இருந்த புள்ளையார் கலெக்ஷன்களை நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தேன். எல்லாம் அங்கே வேலைசெய்யும் பசங்களோடதாம். அருமையா இருந்துச்சு.




வெளியே பாறைகளுக்குப் படகுப் போக்குவரத்து ஜரூரா நடந்துக்கிட்டு இருந்தது. வெள்ளை அன்னம்போல் இருக்கும் தேவாலயத்தைப் பார்க்கக் கிளம்பினோம். சென்னை போல அடாவடியாக இல்லாமல் ஆட்டோக்காரர் இருபது ரூபாய்தான் கேட்டார். எங்களை இறக்கிவிட்ட பிறகுத் திரும்பிப்போகாமல் காத்திருப்பதாகவும் சொன்னார். வெயிட்டிங் காசு வேணாமாம். எங்களுக்கு அங்கிருந்து திரும்பிவர அந்த இடத்தில் ஆட்டோ கிடைக்காதாம். அட! இவ்வளோ கரிசனமா? பேஷ் பேஷ்.
ரெண்டுபக்கமும் சின்னக் கூம்புக் கோபுரமும் நடுவில் ரொம்ப உயரமான கோபுரமுமாய் கம்பீரமா நிற்கும் கோவிலைப் பார்ப்பதே ஒரு பரவசம், நடுக்கோபுரம் 153 அடி உயரமாம். அதன்மேலே இருக்கும் சிலுவை, சொக்கத் தங்கமாம். கோதிக் ஸ்டைலில் கட்டி இருக்காங்க. கத்தோலிக்கர்கள் கையில் வச்சு ஜெபிக்கும் ஜெபமாலையில் இருக்கும் மணிகள் எண்ணிக்கையில் இந்த ஆலய கோபுரங்களையும் நிர்மாணிச்சு இருக்காங்களாம். இது எனக்குப் புதுச் செய்தியா இருந்துச்சு. கோவிலுக்கு வயசு நூறு.

மாதாகோவிலில் உள்ளெ நுழைஞ்சால் வித்தியாசமா 'ஹோ'ன்னு இருக்கேன்னு கவனிச்சதில் புரிபட்டுருச்சு, அங்கே பெஞ்சு வரிசைகள் ஒன்னும் இல்லை. கிறிஸ்துவமதக் கோவில்களில் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயமே இந்த பெஞ்சுதான். இந்துக் கோவில்களில் தரையில் உக்காந்து பூஜை பார்ப்பது கஷ்டம். அதுவும் என்னைப்போல முழங்கால் வலி பிரச்சனை இருப்பவர்களுக்கு ரொம்பநேரம் கால்மடக்கி இருக்க முடியாது. நேரம் ஆக ஆக கடவுள் மேல் உள்ள பக்தி போய், எப்படா இந்தப் பூஜை முடியுமுன்னு ஆகிரும். மனம் லயிச்சு வழிபாடு நடத்தணுமுன்னா உடல் நோகக்கூடாது. இதுதானே நோகாமல் நோம்பு கும்புடறது? பேசாம நானே ஒரு கல்ட் ஆரம்பிச்சு பெஞ்சுலே உக்கார்ந்து பூஜை செய்யலாம் என்ற வகையை அறிமுகப்படுத்திறலாமா? இங்கேதான் வகைவகையான சாமியார் & சாமியாரிணிகள் இருக்காங்களே, நம்மதும் 'க்ளிக்' ஆயிருச்சுன்னா எங்கியோ போயிறலாம்!!! வாரப்பத்திரிக்கைகள் குமுதம் வகையறாக்களை ஒருதரம் புரட்டினாலே விதவிதமான 'கடவுள்கள்' விளம்பரம் கொடுத்திருப்பது தெரியும். நம்ம விளம்பரமும் வரணுமுன்னு எல்லாரும் சாமியை வேண்டிக்குங்கப்பா. பதிவர்களுக்கு முன்னுரிமையும் கூடவே இலவச தரிசனமும்:-))))

அப்புறம் விசாரிச்சதுலே இங்கே இருக்கும் மீனவர் குப்பத்து மக்கள்தான் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வர்றவங்களாம். அதான் பெஞ்சுகிஞ்சு ஒன்னும் வேணாமுன்னு இருந்துட்டாங்களாம். (ஆனாலும் இது அநியாயம்)
ஆல்டரில் மேரியம்மா புடவை கட்டிக்கிட்டு குழந்தை ஏசுவைக் கையில் தூக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் கீழே அடுத்த படியில் சிலுவையில் தொங்கும் ஏசுபிரான். ஆல்டர் அருமையா இருக்கு. ரெண்டுநிமிஷம் நம்ம எல்லாருக்காகவும் பிரார்த்தனை செஞ்சேன். ( சாமியைப் பார்த்ததும் அது கொடு, இது கொடுன்னு யாசிக்கும் வழக்கத்தை நிறுத்தமுடியலை. குழந்தையைலிருந்தே வளர்ப்பு அப்படி. 'நல்ல புத்தியைக் கொடு'ன்னு சொல்ல ஆரம்பிச்சுவச்ச பாட்டியைத்தான் சொல்லணும்)
கர்ப்பக்கிரகத்தின் ரெண்டுபக்கமும் இருக்கும் சந்நிதிகளில் ஒன்றில் ஏசுநாதரும், அடுத்ததில் குழந்தை ஏசுவைத் தூக்கி வச்சுருக்கும் ஜோஸஃப் (அப்படித்தான் நினைக்கிறேன், கிறிஸ்டோஃபராவும் இருக்கலாமோ? ஆனா அவர் குழந்தையைத் தோளில் தூக்கிச் சுமப்பாரில்லையா?) சிலைகளும்.
ஆலயத்தில் பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்குது.


வெளியே ஆலயமுகப்புக்கு முன்னால் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உசரமான தூண்கள்போல ஒரு ஸ்தம்பம். கொடிமரமுன்னு வச்சுக்கலாமா?
இடதுபக்கம் ஒரு திறந்தவெளி அரங்கம்.அலங்கார அன்னை கலை அரங்கம். அடடா...சர்ச்சோட பெயர் சொல்லலையே...Church of Our Lady of Ransom.

உள்ளேயும் சரி, வெளியே மைதானத்திலும் சரி அழகான அமைதியான மனநிறைவான கட்டிட அமைப்புகள். கோவில் இருக்கும் தெருவும் ரெண்டுபக்கமும் மண்தரையாக இருந்தாலும் படு சுத்தமா இருக்கு. நமக்காகக் காத்து நின்ன ஆட்டோவில் ஏறினோம். மெயின் ரோடுக்கு வந்தோம். அங்கேயே ஒரு சிவன் கோயில் இருக்கு. குகநாதர் கோவில்.
அஞ்சு நிமிசம் பிந்திப்போச்சு(-: கோவிலை மூடிட்டாங்க.



அறைக்குத் திரும்புனதும் அயினிச் சக்க கூப்புட்டது. லேசா அமுக்குனதும் அப்படியே பிளந்து சுளைகள் தெரிஞ்சது. ஹைய்யோ.... அப்படியே மினியிலும் மினிப் பலாச்சுளை. சதைப்பற்றெல்லாம் இல்லை. இத்துனூண்டு சுளையிலே முக்கால்வாசி கொட்டை! பகல் சாப்பாட்டுக்குக் கீழே ரெஸ்டாரண்டுக்குப் போனோம். தைரியமா எனக்கும் ஒரு சாப்பாட்டுத் தட்டை வாங்கிக்கிட்டேன். அங்கேயே ராத்திரி சாப்பாடு வாங்கிக் கொண்டுபோக ஏற்பாடு இருக்கான்ன்னு விசாரிச்சதில் நாம் கிளம்பும்போது சாப்பாட்டைத் தயாரிச்சுத் தரேன்னு சொல்லிட்டாங்க. ரயில் பயணத்துலே கண்ட இடத்தில் வாங்க வேணாமுன்னுதான்.
அஞ்சரைக்கு வண்டி. நாலுமணிக்குச் சாப்பாடு வந்துச்சு. ரொம்ப அழகாப் பார்ஸல் செஞ்சக் கட்டுச்சோறு மூட்டை. இப்போதைக்குக் கடைசியா அய்யனைக் க்ளிக்கி, போய்வரோமுன்னு சொல்லிக் கீழே வரவேற்புக்கு வந்தால் அரவிந்தன் அன்றைய மலர் அலங்காரத்தைச் செஞ்சுக்கிட்டு இருந்தார்.அவரோட கலை உணர்வைப் பாராட்டுனதும் சின்ன வெட்கம் முகத்தில் வந்துச்சு. நல்ல பையர். நல்லா இருக்கட்டும்.
அம்பது ரூபா கொடுத்து ஒரு டாக்ஸி பிடிச்சு ரயில் நிலையம் போனோம். இந்தக் கட்டிடமே ரொம்ப அழகா இருக்கு. நாட்டின் கடைசிக்கோடி என்றதால் நெடுக்காக நிக்கும் ரயில் பாதை. இன்னும் நமக்கு இடம் இருக்கா இல்லையான்னே தெரியலை. விசாரிச்சதில் ' ரயில் பெட்டியில் ஒட்டிட்டோம். போய்ப் பாருங்க'ன்னாங்க.

என்னங்க, இவ்வளோ நீளமான ரயில்? நாம் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கோம். சென்னையே வந்துருமோ? எஞ்சினுக்கு ரெண்டாவது பெட்டியில் நமக்கு இடம். பதினைஞ்சு வருசம் கழிச்சு முதல்முறையா ரயிலில் தூங்கப் போறோம். உள்ளே இருட்டா, அழுக்கு நீலக்கலரில் ஒரு உள் அமைப்பு. மேலேயும் கீழேயுமா ரெண்டடுக்கு. ஜன்னல்வழியா ஒன்னுமே தெரியக்கூடாதுன்னே அழுக்கை அப்படியே விட்டுவச்சுருக்காங்க. குறையே சொல்றேனேன்னு யாரும் வருத்தப் படாதீங்க. இருக்கும் லக்ஷணத்தைச் சொல்லியாகணும் இல்லையா?

கோவில்பட்டி வந்தால் கடலைமிட்டாய் வாங்கிக்கணுமுன்னு காத்திருந்தேன். ஆனால் கோயில்பட்டியெல்லாம் கடந்துபோய் ரொம்ப நேரமாச்சாமே!!! அக்கம்பக்கம் ஆட்கள் சாப்பிடும்போது நாங்களும் சாப்பிட்டு முடிச்சோம். ஆச்சரியமா அதுவரைக்கும் இளம்சூடாவே இருந்துச்சு சாப்பாடு. எண்ணெயில்லாச் சப்பாத்தி, வெஜிடபிள் கறி, ஃப்ரைடு ரைஸ். ஹொட்டேல் ஸீ வ்யூ கவனிப்பு நல்லாவே இருக்கு. இங்கே நம்மூரில் இருந்து போகும் வெள்ளைக்கார நண்பர்களுக்குத் தாராளமாப் பரிந்துரைக்கலாம்.

கருநீலக் கர்ட்டனுக்குள் எல்லாரும் முடங்கியாச்சு. தனித்தனிக் கூடுகளும் விதவிதமான குறட்டை ஒலிகளும். ஒரு சத்தம் அடங்குனா இன்னொண்ணு ஆரம்பிக்குது. ஏதோ டைம்டேபிள் போட்டுவச்ச மாதிரி:-) எழும்பூர் வருமுன் எழுந்துட்டோம். கூட்டிட்டுப்போக யாரும் வரவேணாம். நாங்களே வீட்டுக்கு வந்துருவோமுன்னு வீராப்பாச் சொல்லிவச்சுருந்தோம். டாக்சியைத் தேடுனா கிடைக்கலை. ஆட்டோகளின் அணிவகுப்புதான். பயணிகள் கவனத்துக்கு: எக்மோர் ஸ்டேஷனில் ப்ரீபெய்ட் டாக்சிகள் சர்வீஸ் கிடையாது.

வழிநெடுக எக்கச்சக்கமான தோரணங்களும் அலங்காரங்களும். போஸ்டர்களும் போலீஸுமா..... நமக்கு எதுக்கு இப்படியெல்லாம் வரவேற்பு? ஓசைப்படாம இருக்கலாமுன்னா விடமாட்டாங்களே......ஒருவேளை, யாரோ ஆட்டோ அனுப்பறாங்கன்னு.......கத்திப்பாரா தாண்டிப் போரூர் சாலையில் கூடுதல் அமர்க்களம். ஞாயித்துக்கிழமையிலே வேலைக்கு வந்த சடைவு காவல்துறையினர் முகங்களில். கொத்துக்கொத்தாக் கரைவேட்டிகள் அடையாள பேனரைப் பிடிச்சுக்கிட்டுச் சாலையோரமா நிக்கறாங்க. கண்ணுலேத் தட்டுப்பட்டாகணும். இல்லேன்னா வம்பு. நாளைக்கு எவனாவது போட்டுக் கொடுத்துட்டா? ராட்சஸ டெய்ஸிப்பூ போல டிஸைனில் கொடிகளால் அலங்காரம், நடுவிலே சம்பந்தப்பட்ட முக்கியஸ்தரின் முகம். இந்த டிசைனையும் இப்போதான் முதல்முறையாப் பார்க்கிறேன். சமீபத்திய வரவோ? இதுலெல்லாம் மட்டும் நம்மது அசுர வளர்ச்சி. என்ன விஷயமாம்? பிரமாதமா ஒன்னுமில்லே.... முதல்வர் ஆசுபத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு(??) போறாராம். ஹூம்.....உண்மையிலே 'நாம் போகவேண்டிய தூரம் ரொம்ப' என்று புரிஞ்சது(-:

"பனிரெண்டுநாள் காக்காபோல் சுத்தியாச்சு. இனி ரெண்டுவாரம் கம்ப்ளீட் ரெஸ்ட்" கோபால் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பா வந்துச்சு. அதான் கன்யாகுமரியில் நாலுநாள் ரெஸ்ட் எடுத்தீங்களே, அதே மாதிரிதானே?

தொடரும்.....:-))))

Tuesday, May 12, 2009

கண்ணா மூச்சி ஏனடா..........(2009 பயணம் : பகுதி 23)

திருவருட்செல்வர் படத்தில் 'மன்னவன் வந்தானடி' பாட்டுலே சிவாஜி கணேசன் போட்டுருந்த உடை யாருக்காவது நினைவிருக்கா? அய்யன் போட்டுருக்கும் உடை(?) பின்பக்கத்தில் இருந்து பார்க்கும்போது ...... முன்பக்கமும் அப்படியேதான். ஒருவேளை அந்தக் கால மன்னர்களின் உடை இப்படித்தான் இருந்திருக்கும் போல!


படகை விட்டிறங்கிச் சிலையை நோக்கிப்போனோம். பத்து யானைகள் புடைசூழ ஒரே கம்பீரமான அலங்கார மண்டபம் ஒன்றில் நுழைவு வாயில். அறத்தின் மேல் பொருளும் இன்பமுமாக நிற்கிறார் அய்யன். 38 அடி உயரமான மேடை. அதன்மேல் 95 அடி உயரச் சிலை. ஆக மொத்தம் 133 அடிகள். திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைக் குறிப்பிடும்விதமாக இவ்விதம் வடிவமைத்துச் செய்தவர் கணபதி ஸ்தபதி அவர்கள். அலங்கார மண்டபத்தினுள்ளில் 140 படிகள் ஏறி அய்யன் திருவடிகளைக் காணலாம்.
மண்டபத்தில் திருக்குறள்கள் மொத்தமும் (1330) சலவைக்கற்களில் பதிக்கப்பட்டுள்ளன. ( ஒரு அதிகாரத்துக்குப் பத்து என்ற கணக்கில் அறத்துப்பால் 38, பொருட்பால் 70 காமத்துப்பால் 25 அதிகாரங்கள்)
ஸ்ரவணபெலகுலா மலையில் நிற்கும் கோமட்டீஸ்வரர் சிலை என்ற நினைப்பில் வட இந்தியப் பயணிகள் எல்லாரும் அய்யனின் பாதங்களில் தலைவைத்து வணங்குகிறார்கள். அச்சச்சோ...... தமிழ்க்காரன் காலில் விழுந்தாச்சே......... போகட்டும் எல்லா மங்களமும் உண்டாகுக. கொஞ்சம் குங்குமம் மட்டும் கொண்டு போயிருந்தால் ஏகப்பட்ட வசூல்வேட்டை நடத்தி இருக்கலாம்.
சாமியே இல்லைன்னு சொல்லும் கட்சியின் தலைவரின் முயற்சியால் உருவான 'சாமி' இவர். வருங்காலச் சந்ததிகளுக்கு விரிவான விவரம் தரணுமே என்ற ஆதங்கத்தில் சிலை வைக்கச் சட்டசபையில் முடிவு எடுத்தது முதல் திறப்புவிழாவரை கல்வெட்டில் தட்டிவச்சாச்சு. இந்த எழுத்துக்களைச் செதுக்கியவர் பெயர் கூட ஒரு மூலையில் (அங்கவஸ்த்திரத்தின் கோடியில் இருக்கும் சரிகை மாதிரி: சொற்கள் உபயம்.கிரேஸிக்கு நன்றி) இருக்கே தவிர ஏழாயிரம் டன் கருங்கல்லைப் பயன்படுத்தி, ஐந்நூறு சிற்பக்கலைஞர்களுடன் சேர்ந்து 7500 பகுதிகளாச் செஞ்சு அவைகளை இணைச்சு இந்த பிரமாண்டத்தை உருவாக்கின கணபதி ஸ்தபதியைப் பற்றி பேச்சுமூச்சு இல்லை. இதுக்குண்டான கருங்கல்லையெல்லாம் சிறுதாமூர், அம்பாசமுத்திரம், பட்டுமலைக்குப்பம் என்ற இடங்களில் இருந்து கொண்டுவந்தாங்களாம்.
(இந்த விவரங்களெல்லாம் ஏதோ எனக்காகவே சொல்றதுபோல ரெண்டு நாள் கழிச்சு வந்த தினசரியில் ( The Hindu 27/2/2009 Friday Review) வெளிவந்துச்சு.
ஹொட்டேல் அறைகளுக்கு வரும் தினசரி. இல்லேன்னா தவறவிட்டிருப்பேன்)

இவருக்கு பத்ம பூஷன் விருது இந்த ஆண்டு கிடைச்சிருக்கு. இப்போ இவருக்கு 81 வயசாகுது. 1961 முதல் 1988 வரை 27 ஆண்டுகள் மாமல்லபுரச் சிற்பக்கல்லூரி முதல்வரா இருந்துருக்கார். தெருவோரம் கூரைக்கொட்டாயில் சிற்பம் செதுக்கிக்கிட்டு இருந்த நிலை மாறி சிற்பக்கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் வாங்கலாம் என்ற அளவுக்கு இந்தக் கலைக்கு மாற்றங்கள் வந்துருக்கு.

சென்னையில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தின் ரதமும் இவர் வடிவமைச்சு உண்டாக்குனதுதான். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டிடமும், லைப்ரெரியும் இவர் கை வண்ணமே. புது டில்லி சுவாமிமலை முருகன் கோயில் உள்பட உலகம் முழுசும் அறுநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கோவில் நிர்மாணம்.

நாலாப்பக்கமும் காத்தடிக்கும் நிலையில் இவ்வளோ உயரச் சிலையில் தலை நிக்குமா?ன்னு அய்யன் தலையைப் பத்தி ஐயம் எழுப்புனவங்களுக்கு இவர் சொன்ன பதில் 'அலையும் மலையும் இருக்கும் வரையில் சிலையும் அதன் தலையும் நிற்கும். அப்படி இல்லேன்னா என் தலையை எடுத்துருங்க'ன்னாராம். இவருக்கும் அடுக்கு மொழி வந்துருச்சு:-)))))

இதுவரைச் சிற்பக்கலைகளைப் பற்றி நாற்பது புத்தகம் எழுதிட்டார். இப்போ நாப்பத்தியொன்னாவதா ஒரு புதுப் புத்தகம் எழுதிக்கிட்டு இருக்காராம். மேலும் சிற்பக்கலை மன்னனான 'மயன்' என்ற தேவதச்சனுக்கு ஒரு கோவிலும் மாமல்லபுரத்தில் கட்டிக்கிட்டு இருக்காராம். ஆடித்திரிஞ்ச கால் மட்டுமா சும்மா இருக்காது? கோவில்கள் கட்டுன கையும்தான் போல!!!

அய்யனின் பாதங்களுக்குப் பக்கத்தில் உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு விரலும் நகமும் ஹைய்யோ..... பளிச்சுன்னு எத்தனை வசீகரமா இருக்கு பாருங்க! பார்வை போகும் தூரத்தில் (கரைக்கு வெறும் 200 மீட்டர்தான்) குமரி அம்மன் கோவிலுக்குப்போக சின்னதா ஒரு படிக்கட்டுகளும், படித்துறையும் இருக்கு. திரிவேணி சங்கமத்தில் மக்கள் குளிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு காலத்தில் நான் கேள்விப்பட்டது அங்கே மூணு வெவ்வேறு நிறத்தில் தண்ணீர் இருக்குமாம். நெசமாவாச் சொல்றாங்க? இப்ப அப்படி ஒன்னும் தெரியலையே! ஊனக்கண்ணுக்குத் தெரியாதோ என்னவோ!

விவேகானந்தர் பாறைக்கும் , வள்ளுவர் பாறைக்கும் நடுவில் ஒரு குட்டிப்பாறை இருக்கே அதுவழியா ஒரு பாலம் கட்டிவிட்டால் இன்னும் எளிதா இருக்குமே!

நூற்றுநாற்பது படிகள் ஏறிவந்த களைப்பில் நம்ம மக்கள்ஸ் மொட்டைமாடியில் ஓய்வெடுக்கும் மாதிரி பிள்ளைகுட்டிகளோடு தரையில் உருண்டு புரண்டுக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் கொஞ்ச நேரத்துலே அங்கிருந்து கிளம்பிப் படகுக்கு வந்துசேர்ந்தோம். டவுன் பஸ் மாதிரி எக்கச் சக்கக்கூட்டம். கரைக்கு வந்ததும் அறைக்குப்போகுமுன் ஒரு இளநீர். கொதிக்கும் வெயிலில் அதுவுமே உள்ளே வெதவெதன்னுதான் இருக்கு. இன்னும் கோடை ஆரம்பிக்கலைன்னு இளநீர் வியாபாரி சொன்னார்!!!!
படகுத்துறைக் கட்டிடம்

இன்னிக்குக் காலையில் ஹொட்டேலைவிட்டு வெளியே வரும்போதே, ஒருத்தர் கார் வேணுமான்னு கேட்டார். திருவனந்தபுரம், கோவளம், நாகர்கோவில் எல்லாம் சுற்றிக்காட்டுவாராம். கோவளம் எல்லாம் வேணாமுன்னதுக்கு அது என்னங்க, இப்படிச் சொல்லிட்டீங்க? அது 'பார்க்க' வேண்டிய இடமுன்னு சொன்னார். எதுக்கும் இருக்கட்டுமுன்னு அவரோட பெயரையும் செல் நம்பரையும் வாங்கி வச்சுக்கிட்டோம். அவர் பெயர் ரமேஷ் பாஸ்கர். கார் - டாடா இண்டிகா. ஏஸிக்குத் தனியாக் கூடுதல் கட்டணம். நேத்து இரவு இன்னொருத்தர்கிட்டேயும் சொல்லிட்டு வந்துருக்கோமே..... பார்க்கலாம்

பகல் சாப்பாட்டுக்கு நம்ம ரெஸ்ட்டாரண்டிலேயே தென்னிந்திய உணவு முடிச்சுக்கிட்டுக் கொஞ்ச நேரம் ஓய்வுக்குப்பிறகு நிதானமாக் குமரிமுனைக் கிளம்பினோம். சந்நிதித் தெருவழியாப் போனோம். எல்லாத்துக்கும் கோயிலைக் கடந்துதான் போகணும். கூட்டம் நிரம்பி வழிஞ்சு கலகலன்னு இருக்கு. காசிக்குப்போனால் தென்னிந்தியச் சாப்பாட்டுக்குன்னே நமக்குச் சத்திரங்கள் வச்சுருக்காமே அதே போல வடக்கர்களுக்குன்னு இங்கேயும் ராஜஸ்தானி ஜைனமதக்காரர்களுக்குன்னு சாப்பாடு விற்கும் இடம் இருக்கு.

கிழக்குப்பார்த்தக் கோவில்வாசல் மூடி வச்சுருக்கு. வருசத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறப்பாங்களாம். கொஞ்சம் பெயிண்ட் அடிச்சு நல்லா வைக்கக்கூடாதோ? உப்புக்காற்றுப் பட்டு தோலுரிஞ்சு கிடந்துச்சு. அங்கிருந்து கோவிலைப் பார்த்தபடி நிற்கும் அய்யனைப் படம் எடுத்தோம். அவருக்கே அலுத்துப்போயிருக்குமோ என்னவோ:-))))கோவில் மதில் சுவர் முடிஞ்சுக் கொஞ்சம் வலப்பக்கம் திரும்பினா..... சோழிக் கடைகள் சோழிகளாட்டம் கொட்டிக்கிடக்கு. சின்னதா இருக்கும் வலம்புரிச் சங்கு விலை முன்னூறு ரூபாயாம். சங்குக் கடைக்காரர் சும்மா இருந்த சங்கை ஊதிக் காமிச்சார். எல்லாம் வால் முறிச்ச சங்குகளா இருக்கு. ஏற்கெனவே சில வருசங்களுக்கு முந்தி 'கிரி'யில் வாங்குனதும் இப்படித்தான். வெள்ளிப்பூண் போட வசதியா வெட்டி இருக்காம். யாரோ சொன்னாங்க..... இதுலேகூட போலிகள் வந்துருக்குன்னு. என்னத்தைன்னு கண்டோம்?


கடற்கரையில் ராஜகுமாரன், ராஜகுமாரிகள் வலம் வர்றதுக்குத் தோதா கம்பீரமான வெண் புரவி ஒன்னு கண்பட்டையுடன் காத்து நிக்குது. அடடா....குதிரையேற்றம் தெரியாதா? பக்கத்துலே ஸ்டேண்டு போட்டு வச்சுருக்காங்க.
மாங்காய் இல்லாத பீச் உண்டா? கிளிமூக்கு மாங்காய்கள், கீறிவச்சத் துண்டங்கள், குட்டிச்சாக்கில் மிளகாய்ப்பொடின்னு அனைத்து அம்சங்களுடன் பார்க்கும்போதே..... எச்சில் ஊறுது. இது நமக்கல்ல என்ற வைராக்கியத்துடன் கெமெராப் பார்வையில் புடிச்சு வச்சுக்கிட்டேன். கடலை வறுக்கும் அம்மா படுபிஸியாக இருந்தாங்க. பாப்கார்ன் பொதிகளும் விற்பனைக்கு இருக்கு. திரிவேணி சங்கம மண்டபத்திலும், தண்ணீரிலும் பயணிகள் கூட்டம்
விவேகானந்தர் நிஷ்டையில் இருக்கும் சிலையுடன் ஒரு சின்னக் கோவில் இருக்கு. ராமகிருஷ்ணா மிஷன் வச்சுருக்காங்க போல. குமரி அம்மன் கோவில் மதில் சுவரை ஒட்டி ஒரு சிறுவர் பூங்கா இருக்கு. அதென்னவோ தமிழ்நாட்டில் நான் பார்த்த பல இடங்களில் கங்காரு பொம்மையும் பெங்குவின் பொம்மையும் குப்பைக்கூடைகளாக் கிடக்கு. ஆஸியும் நியூஸியும் வெறும் குப்பைன்னு நினைப்போ?

காந்தி மண்டபம் வந்தோம். பள்ளிக்கூடப் பிள்ளைகள் நிறையப்பேர் வந்துருந்தாங்க. கடலில் கரைக்குமுன் அஸ்திக் கலசம் வச்சுருந்த இடத்தில் அக்டோபர் 2 (காந்தி பிறந்த நாள்) மட்டும் சூரியனின் ஒளி உள்ளே வரும் என்ற குறிப்புடன் கூரையில் ஒரு துவாரம் இருக்கு. மண்டபப் பராமரிப்பு நல்ல நிலையில் இருக்கு. காலணிகளை இலவசமாப் பாதுகாத்துக் கொடுக்கறாங்க. அஹிம்ஸாவாதியின் நினைவுக்குன்னு இருக்கும் இடம் என்றதால் ஆபத்து இருக்காதுன்னு ஒரு சிட்டுக்குருவி செக்யூரிட்டி விளக்கின் மேல் கூடுகட்டி வச்சுருக்கு.
அடுத்த கட்டிடம் காமராஜர் நினைவு மண்டபம். தங்கநிறமுள்ள வெண்கலச் சிலை. 'ஐயா..... நாட்டைக் கெடுத்துப் போட்டாங்கையா' ன்னு கொஞ்சம் புலம்பிவச்சேன் அவரிடம். வெளியே சுடச்சுட மிளகாய் பஜ்ஜிகள் கொதிக்கும் எண்ணெயில் குதிச்சுக்கிட்டு இருக்கு. உணவுப்பொருட்கள் விற்கும் இடங்களில் எல்லாம் வழக்கம்போல் குப்பையும் கூளமும். இன்னும் ஒரு பத்து மீட்டர் நடந்தால் ஒரு அக்வேரியம் கண்ணில் பட்டுச்சு.
நம்ம நாச்சியார் பதிவில், மீனாட்சியைப் பார்த்த நினைவில், அந்த வகை மீன்களை நேரில் பார்க்கணும் என்ற ஆவலால், 'அரவானா' இருக்கான்னு கேட்டேன். இருக்காம். வாஸ்து மீன். நல்ல காலம் பிறக்கட்டுமுன்னு ஆளுக்குப் பத்து ரூபாய் சீட்டு வாங்கிக்கிட்டு உள்ளே போய்ப் பார்த்தோம். நிறைய வகைகள் வச்சுருக்காங்க. வாஸ்தும் சரியா இருக்கு. வல்லி வீட்டு மீனாட்சியின் உடம்பிறப்புகள் இருந்தாங்க.

ஆமாம்..... அதென்ன நம்மூர் கடற்கரைங்க எல்லாம் சமாதியாவும் அஸ்தி வச்ச இடமாவுமே கிடக்கு. எங்கியாவது ஊருக்குள்ளே இதையெல்லாம் கட்டாம எதுக்கு மக்கள் புழங்கும் இடங்களில் கட்டிவிடுறாங்க? ஆனாலும் செண்ட்டியா இருக்கொமேப்பா...... இன்னும் வசதியான பாறைகள் சில பாக்கி இருக்கு இங்கே. அதையும் வருங்கால 'மன்னர்கள்' விட்டுவைக்க மாட்டாங்கன்றது நிச்சயம்.
சூரியன் மறையும் காட்சியையாவது பார்க்கணும். இன்னும் இருவது நிமிசம் இருக்கு. உதய அஸ்தமனம் பார்க்கன்னே ஒரு வியூயிங் டவர் கட்டி வச்சுருக்காங்க. கட்டணம் ஆளுக்கு மூணு ரூபாய். சுழல்பாதையில் ஏறி மேலே போகலாம். போனோம். நிறைய பாறைகள் உள்ள கடல் பகுதி. அலைகள் அப்படியே பாறைகளில் ஆவேசத்தோடு மோதி அடிச்சுத் திரும்புது. சலீர் சலீர்ன்னு இரைச்சலான இரைச்சல். இந்தக் கலாட்டாவுலே, ஒரு பாறையில் நின்னு தூண்டில் போட்டு மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தார் ஒருத்தர்.

மேற்கில் கண்ணு நட்டுக் காத்திருந்தோம். அடிவானத்தில் கருமேகமாப் புகை மூட்டம். எது தண்ணி எது வானம் எது மேகம், ஏது சூரியன்.......கண்ணாமூச்சி ஆட்டமாப் போச்சு. சூரியன் தண்ணீரில் இறங்காமல் மேகத்துக்குள்ளில் போயிட்டார். அப்புறம்? போனவன் போனாண்டீ......ன்னு பாடாததுதான் கொறைச்சல்(-: விளக்கு வைக்கும் நேரம். கலங்கரை விளக்கு சுத்த ஆரம்பிச்சது. இருட்டுக்கு முந்தி அறைக்குப் போகலாமுன்னு ஒரு ஆட்டோ பிடிச்சு(20 ரூபாய்)அறைக்கு வந்து சேர்ந்தோம்.

கிடைக்கும் பூக்களைவச்சுத் தினத்துக்கு ஒரு அலங்காரம் செய்யும் அரவிந்தன் இவர்தான்.

ரமேஷை செல்லில் கூப்பிட்டு மறுநாள் ஏழரைக்கு வரசொல்லியாச்சு. இட் 'ஸ் கோயிங் டுபீ அ லாங் டே டுமாரோ.
மீதிப் படங்கள் இங்கே ஆல்பத்தில்

தொடரும்.....:-)