Tuesday, August 12, 2008

ஜொலிம்பிக் ஜோக்ஸ்.:-))))))))

நிறையச் சொல்லணுமுன்னு இருக்கு. ஆனா எல்லாம் இப்ப மறந்து போச்சு.....

===============

ஆமாம்..... ஒலிம்பிக் முதல்நாள் விழாவுக்கு ஏன் நம்ம பிரதமர் போகலை?

ஐயோ.... அங்கே புஷ் வராரே. எதுலேயாவது கையெழுத்து வாங்கிட்டா??


====================

அதென்னங்க அந்த அமெரிக்கப் பையன் ஆறு மெடல், எட்டு மெடலுன்னு கணக்கு சொல்லிக்கிட்டு இருக்கார்?

வேற வழி? பின்னாலே நின்னுக்கிட்டு புஷ் புஷ்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காராம் புஷ்.

==============================

இந்தமுறை எப்படியாவது நாம மெடல் வாங்கிறணுமுன்னு தலைவர் புலம்புறாரே......

அவருக்கு ஒன்னும் தெரியலை..... நம்ம டாக்டர் விஜய்யை அனுப்பி இருந்துருக்கணும். எல்லா மெடல்களையும் வாரிக் குவிச்சுக் கொண்டுவந்துருப்பாருல்லே!

==================

ஆமாம் அது என்ன ஒரே நாடு, ஒரே கனவு?

சிம்பிள். உலகமெல்லாம் சீனா. அங்கே முழுசுமாய் சீனமக்கள்

============

தாலி கட்ட மாட்டேன்னு மாப்பிள்ளை ஏன் கடைசி நிமிசத்தில் தகராறு செய்யறாராம்?

எல்லாம் வரதட்சிணைத் தகராறுதான்.

ரெண்டு ஒலிம்பிக் தங்கமெடலாவது சீர்வரிசையில் வைக்கணுமாம்.....


========================

எதுக்கு ஆதரவு வாபஸ்ன்னு தலைவர் கத்திக்கிட்டு இருக்கார்?

அவர் பேரனை ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அனுப்பலையாம்.

வேடிக்கை பார்க்கத்தானே? அனுப்பி இருக்கலாம்லெ.

அடப் போப்பா. எதுலேயாவது கலந்து வெளையாடணுமாம்.

=============================

டாக்டர் விஜய் எங்ண்ணா இருக்காரு?

ஷூட்டிங் லே பிஸிங்ணா.

அட! ரைஃபிள் ஷூட்டிங்கா? தங்கப்பதக்கம் உறுதிதாங்ணா....

அடப்போங்ணா .... இவர் சினிமா ஷூட்டிங்லே இருக்காருங்ணா.

=====================

200 மீட்டர் ஓட்டப் பந்தயம்.

கடைசியில் மெதுவா நடந்துவரும் 'வீரரிடம்' (அரசியல்வாதியின் மகன்)

அண்ணே இது ஓட்டப்பந்தயம்.................

ஏய்ய்ய்ய்ய்ய்ய் .........நான் யாருன்னு தெரியும்லே.............


====================

தலைவர் ஏன் சோகமா இருக்கார்?

பீச் வாலிபால் பார்க்கத் தடா போட்டுட்டாங்களாம் சின்னம்மா.


====================
எங்கேய்யா சூட்கேஸோட கிளம்பிட்டீர்?

மெடல் 'வாங்க'த்தான்.

===================

Sunday, August 10, 2008

கலாக்கார் கே ஸாத் ஏக் முலாகாத்

என்னதான் டேட்லைனில் உக்கார்ந்திருந்தாலும், இப்படியா ஆறுநாளைக்கு முன்னாலே சுதந்திர தின விழாக் கொண்டாடுவது? முந்திரிக் கொட்டை!!!!


மூணே மூணு நடனம். கதக். கடைசி மட்டும் ஒரு 11 நிமிசத்துக்குப் போச்சு. முதல் இரண்டு நடனத்துக்கும் மூணாவதுக்கும் தேவைப்பட்ட இடைவெளியில் 'உள்ளூர் மணிகள்' ஒலிக்கணும்தானே? ராஜஸ்தானி நடனம். எஷா ( Esha) சின்னப் பொண்ணுதான். வயசு 9. என்னா ஆட்டம், என்னா ஆட்டம். இதுவும் ஒரு ஏகலைவி. பாட்டு பால்குணி பதக். ரெண்டு பதின்மவயதுப் பொண்கள், தில் ஹை ஹிந்துஸ்தானி பாட்டுக்கு ஆடுனாங்க. பஞ்சாப் சிங்கம் ஒருத்தர் வந்து பாங்ரா ஆடுனார். கேரளா க்ளப்பின் கோல்டன் வாய்ஸ் ஆலன் ஒரு மலையாளப் பாட்டு.


முதலில் வந்தே மாதரம் பாட்டுக்கு அபிநயம், ரெண்டாவது ந்ருத்யா, மூணாவது தரானா. ஆடுனது பூஜா பட்நாகர். சொந்த ஊர் டில்லியாம். இவுங்க இந்தோனேஷியா, ஜகர்த்தா நகரில் இண்டியன் கல்ச்சுரல் செண்டரில் கதக் நடனம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர். அப்படியே தேவைப்பட்டால் மேடை நிகழ்ச்சிகளும் அப்பப்ப நடத்துறாங்களாம்.




(வந்தே மாதரம்.....)

நம்ம இந்தியத் தூதரகம், சுதந்திர தின விழாக்களுக்காக பூஜாவை இங்கே நியூஸிக்கு வரவழைச்சுருக்காங்க. நம்மூர் விழாவுக்கு நம்ம ஹைகமிஷனரைக் கூப்பிட்டு இருந்தோம். வெலிங்க்டன், ஆக்லாந்து நகரில் எல்லாம் நடக்கப்போகும் விழாக்களுக்கும் அவர் போகணும் என்றபடியால் நாங்க ஒரு ஆறு நாளைக்கு முன்னாலேயே விழாவை வச்சுக்கிட்டோம். நமக்கு சனிக்கிழமையாவும் இருக்கணும் என்ற நிர்ப்பந்தம் ஒன்னு இருக்கே.


இந்திய ஹைகமிஷனரும் அவர் மனைவியும்.

ஏழுமணிக்குன்னு (ச்சும்மாச்) சொல்லிவச்சு மக்களை இழுத்துவந்து சரியா எட்டுமணிக்கு விழா ஆரம்பமாச்சு. முதலில் இந்திய நாட்டு தேசியகீதம், அதைத் தொடர்ந்து நியூஸியின் தேசீய கீதமுன்னு ரெட்டை நாயனம். இந்திய ஹைகமிஷனர் மனைவியுடன் வந்துருந்தார். இந்த இந்தியன் க்ளப்பின் பிதா(??)வுடன் சில நிமிட உரையாடல். க்ளப் ஆரம்பிச்சுச் சரியா 11 வருசம் ஆகுது.


இப்போதைய தலைவர் மேடை ஏறுனதும் 'சட்'னு ஒரு காந்திக் குல்லாய் எடுத்துத் தலையில் அணிஞ்சுக்கிட்டார். குஜராத்தியா இருந்துக்கிட்டுக் குல்லாய் இல்லேன்னா எப்படி? பேச்சை முடிக்கும்போது 'ஜெய் ஹிந்த்'ன்னு சொல்லி கெத்தாய் முடிச்சுருக்கக்கூடாதோ? மறந்துட்டார் போல!




'காந்தி பார்த்த கதக்'ன்னு கூடத் தலைப்பு வச்சுருந்துருக்கலாம் இல்லே? கெமெராவுக்கு முன்னாலே குறுக்கும் நெடுக்குமாப் போய்க்கிட்டு இருந்தார்(-:


மேடையில் நம்ம இந்திய ஹை கமிஷனர் சின்னதா, அருமையா பேசுனார். இவருக்கு ஒரு கோயிலே கட்டிறலாம்.எங்களையெல்லாம் இதுவரை நாலைஞ்சுமுறை சந்திச்சிருக்கார். கேரள நாட்டுக்காரர். சந்தடி சாக்குலே அடுத்த மாசம் நடக்கப்போகும் ஓணம் விழாவுக்கு வரமுடியுமான்னு கேட்டேன். 'நியூஸி அமைச்சர்கள் இந்தியா போகும் திட்டம் இருக்கு, நானும் கூடப்போகணும். அதனால் விழாவுக்கு வந்து கலந்துக்க முடியாது. நல்லபடியாக் கொண்டாடுங்க'ன்னு சொன்னார். . இதுக்கு முன்னாலே இருந்த ஹைகமிஷனர் எப்படியெல்லாம் நம்ம நாட்டை அசிங்கப்படுத்திட்டு போனார் என்ற நினைவு வேணாமுன்னாலும் மனசில் வந்து போச்சு.

பூஜா முதல்முறையா நியூஸிக்கு வந்துருக்காங்க. வெள்ளிக்கிழமை சிட்னி வழியா இங்கே கிறைஸ்ட்சர்ச் வந்து இறங்குனாங்க. குவாண்டாஸ் ஏர்வேஸ் வழக்கப்படிப் பொட்டி தொலைஞ்சு போச்சு. நாட்டியத்துக்கான உடைகள் எல்லாம் அந்தப் பொட்டியில். நல்லவேளையா சனிக்கிழமைக் காலையில் பொட்டியைக் கொண்டுவந்து கொடுத்தாங்களாம். 'இந்த கிறைஸ்ட்சர்க் நகரம் ரொம்ப அழகா இருக்கு, சப்தமே இல்லை. இந்தியாவைப்போலவே விருந்தினரை உபசரிப்பதில் நீங்கள் முன்னணியில் இருக்கீங்க'ன்னெல்லாம் வானளாவப் புகழ்ந்தார். எனக்குக் கொஞ்சம் வெக்கமாப் போச்சு. பாட்லக் டின்னருக்கு நான் புளிசாதம்தான் கொண்டுபோயிருந்தேன்:-)




ஞாயிறு காலை வெலிங்க்டனுக்கு நம்ம ஹைகமிஷணர் கூடவே போயிருவாங்க. ஒரு வாரம் வடக்குத்தீவில் அங்கங்கே நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு அடுத்த ஞாயிறு ஜகர்த்தாப் பயணம். கணவர் அங்கே ஒரு கம்பெனியில் வேலையாம். ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டும் நடத்துறாங்களாம்.

கதக் நடனம் ஆடத் தெரிஞ்ச உள்ளூர்த் தோழியிடம், பூஜாவின் நடனம் பற்றிய செகண்ட் ஒப்பினியன் கேட்டேன். நமக்குத்தான் எப்படி ஆடுனாலும் நல்லா இருக்கே. காய்ஞ்ச மாடுகள் இல்லையோ? :-)

'ரொம்ப நல்லா ஆடுனாங்க. எல்லாம் அதுக்கேத்த பத்ததி பிரகாரம் இருந்துச்சு' ன்னாங்க. இவுங்க நடனம் ஒன்னு மிட்விண்டர் விழாவுலே இருந்துச்சாம். ஏன் வரலைன்னு கோச்சுக்கிட்டாங்க. 'நீங்க ஆடறேன்னு தெரிஞ்சதாலே வரலை'ன்னேன்:-))))




சரி, பூஜாவின் நடனத்தைச் சொல்றேன். ந்ருத்யாவில் முக்கியமானது கால்களில் தாளமிட்டு ஆடுவதுதானாம். ஃபுட் வொர்க். கடைசியாக ஆடுன தரானாவில் அந்தப் பாட்டு பதிமூணாம் நூற்றாண்டில் ஒரு ஒரு சூஃபி எழுதுனதாம். கவாலி இசையும் சேர்ந்துருக்குன்னு சொன்னாங்க. ஓ...அப்படியா?

நான் பெற்ற இன்பம் (தமிழ்கூறும்) நல்லுலகமும் பெறட்டுமேன்னு யூட்யுபில் போட்டுவச்சேன். எல்லாம் ரெண்டு, மூணு நிமிசப் படங்கள்தான்.
'ஆடமாட்டாதவனுக்கு அறுபத்தெட்டு அரிவாள்'னு சொல்றாப்போல ஆளுக்கு ஒரு கேமரான்னு தூக்கிக்கிட்டுப் போனோம். யார் கை நடுங்காம இருக்குன்னு பார்த்தே ஆகணும்:-))))




படங்கள் வீடியோ எல்லாம் சுமாராத்தான் வந்துருக்கு. கேமெரா சரியில்லைப்பா. அதுக்கு நாமென்ன செய்ய முடியும், இல்லே?




தலைப்பைத் தமிழில் வைக்காத காரணத்தை யாராவது ஊகிச்சுச் சொல்லுங்க:-)


பங்குபெற்ற கலைஞர்களுடன் நம் இந்தியத் தூதர்.


அனைவருக்கும் இந்திய சுதந்திரத்தின் 61 வருசத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.



ஜெய்ஹிந்த்!!


பி.கு: வெலிங்டன் பதிவர் கவனத்துக்கு:

தவறாமல் விழாவுக்குப் போய் வாங்க.

Thursday, August 07, 2008

கல்யாண வீட்டு விஷயங்கள்: ஆறாம் நாள்.

மெயின் டே டுடே!!!!

சாயங்காலம் கல்யாணம். இவரும் எல்லார்கிட்டேயும் எத்தனை மணிக்குக் கல்யாணமுன்னு கேட்டுக்கிட்டே இருக்கார். வர்ர பதில்தான் வெவ்வெற மாதிரி.

"மூண்ரை மணிக்குப் 'பராத்'கிளம்பிரும்."


"எப்ப பராத் போய்ச் சேருதோ அப்ப."


"சாயங்காலம்....."


சிரிப்பு.

"வக்த் பர் ஹோ ஜாயேகா."

கல்யாணப் பத்திரிக்கையில் இருந்ததைப் படிச்சுட்டு 5 மணிக்குக் கல்யாணமுன்னு சொல்லி இருந்தேன். 7 ஐத் தலைகீழாப் போட்டா அது 5 தானே? பத்திரிக்கை குஜராத்தி மொழியில் அடிச்சுருந்துச்சு. தட்டுத்தடுமாறிப் படிச்சுருவேன். பாதி எழுத்து ஹிந்தி எழுத்துத்தானே? நான் சொன்னதை நம்பாம எல்லாரையும் கேட்டீங்கல்லே? நல்லா வேணும்:-)

அஞ்சரைக்கு அடிச்சுப்பிடிச்சுக் கல்யாணமண்டபம் போய்ச் சேர்ந்தால் வாசலில் கார் நிறுத்த இடம் லட்டாட்டம் கிடைச்சது. அப்பவே ஒரு சந்தேகம்தான். வெளியே நின்னுக்கிட்டு இருந்தவரிடம் ' பராத் 'வந்துருச்சான்னு கேட்டால் 'இன்னும் இல்லை'ன்னார்.


உள்ளே நுழைஞ்சதும் நம்ம வரவேற்க ரெண்டு யானைகள். தும்பிக்கையை உயர்த்தி வாங்க வாங்கன்னு கூப்பிடும் போஸில், மேடைக்குக்கீழே ரெண்டு பக்கமும். இதுகளுக்கு நடுவில் ஒரு புள்ளையார். மேடையில் குழந்தைகள் கைகளைச் சேர்த்துப்பிடிச்ச மாதிரி ( நம்ம பாவைவிளக்கு ஸ்டைலில்) ரெண்டு சிலைகள். ஹாலில் ஒரு இருவது, இருவத்தஞ்சு பேர் இருப்பாங்க. நாங்களும் போய் உக்கார்ந்து கொஞ்ச நேரத்தில் இவர் மெதுவா காதருகில் சொல்றார் 'என்னம்மா ஒரே பொம்பளைங்க கூட்டம்? ஆம்புளைகள் யாரையும் காணோமே'ன்னு.

"அதான் நீங்க ரெண்டுபேர் இருக்கீங்கல்லே?"

அப்பதான் மேடையில் சிலர் வந்து அலங்காரம் ஆரம்பிச்சாங்க. போச்சுரா...... இனிமேத்தானா? பரபரன்னு வேலை ஆச்சு. நடுவில் அலங்கார இருக்கைகள். வலது இடது ரெண்டு பக்கமும் நிறைய நாற்காலிகள் கொண்டுவந்து போட்டுக்கிட்டு இருந்தாங்க. மேடைக்குக் கீழே இருக்கும் இருக்கையைவிட மேலே அதிக அளவு எண்ணிக்கையோ?

கூட்டம் சேர ஆரம்பிச்சது. அப்படியும் பெண்களாவே உள்ளே வந்துக்கிட்டிருக்காங்க. மணி ஆறரை ஆச்சே..... இன்னுமா பராத் வரலை?
கோபால், மாப்பிள்ளைவீட்டாரை செல்லில் கூப்புட்டார். வந்துக்கிட்டு இருக்காங்களாம். பா வில் இருந்து புறப்படும்போதே நாலரை ஆயிருச்சாம். நடுவில் லௌடொகாவில் ஒருத்தரை பிக் பண்ணிக்கணுமுன்னு போனப்ப அங்கேயும் கொஞ்சம் லேட் ஆயிருச்சாம். இன்னும் 15 நிமிசத்துலே மண்டபத்துக்கு வந்துருவாங்களாம். ஏழடிக்க அஞ்சு நிமிசமானப்ப 'படபட'ன்னு பட்டாஸ் வெடிக்கும் சப்தம். ஆஹா...மாப்பிள்ளை வந்துட்டார். ரெண்டு பஸ் நிறைய கூட்டம் வந்துருக்கு மாப்பிள்ளையோடு.

பொண்ணு வீட்டுக்காரங்க போய் மாப்பிள்ளையை எதிர்கொண்டு, அங்கே கூட்டமா நின்னு பாடி ஆடி அழைச்சு வந்தாங்க. என்ன ஏதுன்னு சரியாப் பார்க்கவிடாம வீடியோக்காரங்க சுத்தி நின்னுக்கிட்டாங்க. அதுக்கப்புறமும் மேடையில் இவுங்க அட்டகாசம்தான். மேடையில் ரெண்டுபக்கமும் உக்கார்ந்திருந்த பொண்ணு, பையன் வீட்டு ஆளுகள்தான் கண்ணுக்குப் புலப்பட்டாங்க. ஹாலில் இருந்த அனைவருக்கும் வீடியோக்காரர்களின் 'பின்' தரிசனம்தான். அங்கே என்னவோ நடக்குது.


அப்ப திடீர்ன்னு 'மைக் 'லே ஒரு அறிவிப்பு, குஜராத்தியில்தான். ரிஃப்ரெஷ்மெண்ட் தயாரா இருக்குன்னு சொன்னதுதான் தாமதம் கூட்டம் மொத்தமும் அம்பேல்:-) குருவிக் கூட்டத்தில் கல் எறிஞ்சமாதிரிச் சிட்டாப் பறந்துட்டாங்கப்பா. 'களபுளா' சத்தம் 'கப் 'ன்னு நின்னு ஹாலே நிசப்தமா ஆகிருச்சு. மாப்பிள்ளைவீட்டு வகையறாக்கள் மட்டுமே இருக்கோம். சரி இனியாவது கல்யாணத்தில் என்ன நடக்குதுன்னு பார்க்கலாமுன்னா......ஊஹூம். எப்படியும் நமக்கு ஒரு காப்பி டிவிடி அனுப்புவாங்க. அதைப் பார்த்துட்டுத்தான் எழுதணும்:-)



பொண்ணும் பையனும் அக்னியைச் சுத்தி வலம்வருவது வீடியோக்காரர்களின் கால்களின் இடையில் தெரிஞ்சது. அப்புறம் சப்தபதி. ஸாத் ஃபேரே. மேடையின் முன்புறம் நோக்கி ஏழு அடி. ஆலன் நல்ல உயரம். கேமெராவைக் கொடுத்து ஒரு படம் எடுக்கச் சொன்னேன்.





அர்விந்த் ' பையா' அப்ப வந்து, இங்கே ஏன் உக்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க? மாடிக்குப் போங்கன்னு கோபாலையும் ஆலனையும் கூட்டிட்டுப்போனார். கல்யாணப்பந்தலில் ஆண்கள் யாருமே இல்லாத காரணம் அப்பத்தான் தெரியவந்தது. மண்டபத்துக்குள்ளே வருமுன்னேயே இடதுபக்கம் போகும் மாடிப்படியை நோக்கி ஆண்களும், கல்யாணம் நடக்கும் ஹாலின் உள்ளே பெண்களுமாப் பிரிஞ்சு போயிருக்காங்க ஆரம்பத்துலேயே!

மாடியில் என்ன? இன்னுமா விளங்கலை. தீர்த்தத் திருவிழா:-)))) இதுக்குத் தகுந்த வகையில் மண்டபம் டிஸைன் செய்த புண்ணீயவான் யாரோ? இது தெரியாம 'தேமே'ன்னு எங்ககூட இவ்வளோ நேரம் இருந்து டயம் வேஸ்ட் பண்ணிட்டாங்க.... த்ச் த்ச் த்ச்.......





கல்யாண விருந்தை ரிஃப்ரெஷ்மெண்ட்ன்னா சொல்றது? என்னவோ போங்க. பந்தி விறுவிறுப்பா நடந்துக்கிட்டு இருக்கு. முதல் ரெண்டு பந்தி முடிஞ்சு மீண்டுவந்த மக்கள் ஆரம்பிச்சுட்டாங்க கலகலா.......களபுளான்னு .... இரைச்சலான இரைச்சல். இதுக்கிடையில் சாப்பிடப் போங்கன்னு விரட்டாத குறையா ஒவ்வொருத்தரும் வந்து என்னையும் மகளையும் விசாரிக்கிறாங்க. இனிமேலும் பொறுத்தால் எங்கே தூக்கிக்கிட்டுப்போய் டைனிங் ஏரியாவில் விட்டுறுவாங்களோன்னு நாங்க போனோம். நாலாவது பந்தி. மின்னலா எங்க பக்கத்தில் வந்து உக்கார்ந்தாங்க கோபாலும் ஆலனும். இப்பத்தான் நிம்மதியாச்சு எனக்கு.

மொத்த ஆம்புளைங்க கூட்டமும் மேலே இருக்காம். சுவா (தலைநகர்)நகரில் இருந்து இன்னிக்குக் கிளம்பிவந்த எல்லாருக்கும் கோபாலைப் பார்த்ததும் ஆச்சரியமாம். என்னையும், மகளையும் ரொம்ப விசாரிச்சாங்களாம். சாப்பிட்டுட்டுப்போய் அவுங்களைச் சந்திக்கலாமுன்னு சொன்னார்.

முழுசா வெஜிடேரியன் சாப்பாடு. அப்பாடா..... இன்னிக்கு மீனுக்கு லீவு:-))))
கல்யாணத்துக்குன்னு ஒரு ஸ்பெஷல் பூரி இருக்காமே!. தடியா பிஸ்கெட்டு போல இருந்துச்சு. தால், மூணு வகை காய் கறிகள், பஜ்ஜியா, பர்ஃபி, ஜிலேபி, பப்படம், மிருதுவான காராசேவ் மாதிரி ஒன்னு, குழம்பு போல ஏதோ ஒன்னு...........அவ்ளோதான். பாயசம், கேஸரின்னு ஒன்னையும் காணோம். சாப்பாடு ருசியும் ரொம்பச் சுமாராத்தான் இருந்துச்சு. இவுங்ககிட்டே கிச்சன் ஸ்கேல் இல்லை போல இருக்கு:-))))

பாதி சாப்பாட்டுக்கு நடுவிலேயே நம்மைத்தேடி ஆட்கள் வந்து மெஸேஜ் சொல்லிட்டுப் போறாங்க. மேடைக்குப் போகணுமாம். எதுக்கு? கல்யாணம் முடிஞ்சு ஃபோட்டோ செஷன் நடந்துக்கிட்டு இருக்காம். நம்ம அட்டெண்டன்ஸ் பதிவு பண்ணணுமுல்லே?

நாங்க போனப்ப மாப்பிள்ளை வீடு முடிஞ்சு பொண்ணுவீட்டு ஆட்கள் போட்டோவுக்கு நிக்கிறாங்க. அஞ்சு நிமிசம் காத்துருக்க வேண்டியதாப் போச்சு. மணமக்களுக்கு ரெண்டு பக்கமும் பொண்ணோட அப்பா அம்மா.
மாப்பிள்ளையின் தாய்தகப்பன் பின்னால் நிக்கறாங்க. சம்பந்திச் சண்டைக்கு ஏற்ற நிகழ்ச்சி. ஆனால் எல்லாரும் சிரிச்சுப் பேசறாங்களே தவிர ............

ஆங்...... சொல்ல மறந்துட்டேன் இல்லை? வரதட்சணை, சீர் செனத்தி லிஸ்ட், இத்தனை பவுன், இவ்வளோ வெள்ளி இப்படி ஒன்னும் கிடையாது. சுருக்கமாச் சொன்னா ஒரு பையனுக்கும் ஒரு பொண்ணுக்கும் புது உறவு
ஏற்படுத்திக் கொடுக்கும் மகிழ்ச்சியான குடும்ப நிகழ்ச்சி. இந்த மகிழ்ச்சியைப் பங்குபோட்டுக்க நம்மையெல்லாம் அழைச்சு ஒரு கொண்டாட்டம்.

நம்ம நாட்டிலும் இப்படி இருந்தா எதுக்கு கேஸ் சிலிண்டர் வெடிக்கப் போகுது? கோர்ட் எல்லாம் காலி ஆகிறாதா? வக்கீலுங்கதான் கஷ்டப்படுவாங்க........... காவல்துறைக்கும் வருமானம் கொறைஞ்சுருமோ?

பழைய நண்பர்களையெல்லாம் சந்திச்சுப்பேசி மகிழ்ந்தோம். எல்லார் கண்களிலும் உண்மையான மகிழ்ச்சி தெரிஞ்சது. இன்னும் ரெண்டு பந்தி நடக்கணுமாம். இப்பவே ஒம்போதரை ஆச்சு. வந்த பராத் வீடு திரும்ப நடுராத்திரி ஆகிருமாம். மகளையும் நண்பரையும் கொண்டுவிட்டுட்டு நாங்க பா திரும்பணும். செக்யூரிட்டி கெடுபிடி இருக்கே. அதனால் 'கவலைப்படாதீங்க. நாங்க வீட்டுவாசலில் வெயிட் பண்ணுவோமுன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம்.


பத்துமணி இருக்கும் ஃபர்ஸ்ட் லேண்டிங் வந்தப்ப. ராத்திரி டின்னர் முடிஞ்சு பாரில், டைனிங் ஏரியாவில் கூட்டம் கலைஞ்சு போயிருந்துச்சு. பார் மியா(வ்) மட்டும் உலாத்திக்கிட்டு இருந்துச்சு. மகளைப் பார்த்ததும் ஓடிவந்து காலுக்கருகில் நின்னுச்சு. அஞ்சாறுநாளில் நல்லாவே ஃப்ரெண்ட்புடிச்சு வச்சுருக்கு. தினம் டின்னர் நேரத்தில் ஆலன் மடியில் வந்து உக்கார்ந்துக்குமாம்:-) நானும் கொஞ்சம் தடவிக்கொடுத்துட்டு, மகளின் அறையில் போய் புடவையை மாத்திப் பழைய வேசத்துக்கு வந்தேன்.




ரெண்டு புடவைகளையும் மடிக்கவே 15 நிமிசமாச்சு. நியூஸியில் புடவைகளுக்கான ட்ரைக்ளீனிங் கடைகள் இல்லை. அதனால் ரொம்பக் கசக்காம ஒழுங்கா உடனுக்குடன் காப்பாத்துனால்தான் கொஞ்சநாள் தாக்குப்பிடிக்க முடியும்.



'அவசரமில்லாம மெதுவாவே ஓட்டுங்க. இப்ப என்ன கல்யாணத்துக்காப் போறோம்?' னு கோபால்கிட்டே சொல்லி வச்சேன்:-)) வழியெல்லாம் மை இருட்டு. கார் விளக்கு வெளிச்சத்தில் ரோடுக்கருகில் அங்கங்கே ஒன்னு ரெண்டுன்னு ஆட்கள் நடந்து போறாங்க. கையில் ஒரு டார்ச் லைட் கூட இல்லாம எங்கேதான் இப்படி இருட்டில் போறாங்களோ? 'சரேல்'ன்னு காருக்கு முன்னால் கடந்து போகும் உருவங்களில் பெண்களும் உண்டு.
எல்லோரும் ஃபிஜியன்கள்தான்.

'அவுங்க ஊர். அதனாலே பயமில்லாமப் போறாங்க'ன்னு இவர் சொன்னார். போகட்டும். ஆனா கையில் ஒரு விளக்கு வச்சுக்கலாமுல்லே? வண்டி எதாவது தெரியாமல் இடிச்சுட்டா?

கிட்டத்தட்ட 12 மணிக்கு வீட்டுமுன்னால் வந்து சேர்ந்தோம். இன்னும் யாரும் வரலை. காருக்குள்ளேயே ஸீட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நல்ல தூக்கம். திடீர்ன்னு வண்டி ஸ்டார்ட் ஆச்சு. வந்துட்டாங்களாம். காரை வீட்டுக்குள்ளே விட்டப்ப மணி ஒன்னரை. ரெண்டு பஸ்ஸும் வந்துருச்சாம்.

நாளைக்கு மாலை தானே ரிஸப்ஷென். காலையில் லேட்டா எழுந்திருக்கணுமுன்னு திட்டம் போட்டுக்கிட்டேன்.

நாம் ஒன்னு நினைச்சால்.....கல்யாண வீட்டுக்காரங்க வேறொன்னு நினைப்பாங்க போல!!!!!

தொடரும்.................:-)