நீள நீள நடை பாதைகளுடன் செடியும் கொடியுமா வளைஞ்சு நெளிஞ்சு, குடிசை போல மேற் கூரையுடன் அங்கங்கே பெர்ண் மரச்சிற்பங்களுடன் ஸ்பூக்கியா இருக்கு ஃபர்ஸ்ட் லேண்டிங்.
சுமார் 3500 வருசங்களுக்கு முன்பு ஒரு சிறு படகில் மேலினீசிய( Melanesian) இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்த படகு ஒரு பவளப்பாறையில் கரைதட்டி நின்ன இடம் இது(வாம்). கோபமாப் படகில் இருந்து இடது காலை வச்சு இறங்கியவர்தான் இந்தத் தீவின் முதல் மனிதர்.
('வலது காலை எடுத்து வச்சு வா வா'ன்னு யாரும் பாடலையோ?)
('வலது காலை எடுத்து வச்சு வா வா'ன்னு யாரும் பாடலையோ?)
இந்த இடத்தைச் சரியாக் கண்டுபிடிச்சு(???)பத்து வருசத்துக்கு முன்னாலே ஃபர்ஸ்ட் லேண்டிங் என்ற பெயரில் ரிஸார்ட் கட்டி, இப்ப வியாபாரம் கொழிக்குது. பெயரை நியாயப்படுத்தணுமுன்னு ஒரு மனுசனின் இடது பாதம் போல செயற்கையா ஒரு தீவு உண்டாக்கி ( இருக்கும் தீவுகள் காணாதுன்னு இதுவேறயா?) அலங்கரிச்சு அதுக்குப்போக ஒரு பாலம் போட்டு வச்சுருக்கு. இதுகூட இப்ப வந்ததுதான்.
இந்த இடத்துக்கு வூடா பாய்ண்ட்ன்னு பெயர். பெரிய பெரிய ராட்சத அளவில் டேங்க் கட்டி, வெளியே இருந்து வரும் எண்ணெய்க் கப்பல்களில் இருந்து பெட்ரோல் & டீஸல்களை ஸ்டோர் செஞ்சுக்கும் இடம். இங்கே சுத்திகரிப்புக்கு ஏற்பாடு இல்லாததால் ரெடி டு யூஸ் என்ற சுத்திகரிச்ச எண்ணெய்கள். வூடா பாயிண்டில்(Vuda point) அஞ்சாறு ராணுவ வீரர்கள் இங்கிட்டும் அங்கிட்டுமா நடக்கறாங்க. நாட்டுக்கே எண்ணெய் இருக்கும் இடமாச்சே...யாராவது எதாவது செஞ்சுட்டா?எல்லா இடத்திலும் காவல்துறையில் வேலையில் இருப்பவர்கள் ஃபிஜியன்கள் மட்டுமே.
வீடுகளுக்கும் செக்யூரிட்டி, அலாரம் சர்வீஸ் கம்பெனிகள் பாதுகாப்பு. நாங்க தங்கி இருந்த வீடு புத்தம் புதுசு. கட்டி ஒரு மாசம்கூட ஆகலை. இன்னும் சாமான்கள் எல்லாம் எடுத்துக்கூட வைக்காமல் பொட்டிகளிலேயே கிடக்கு. அதுக்குள்ளே கல்யாணம் வந்துட்டதால் உறவினர்களை எல்லா இடத்திலும் போட்டுவச்சுட்டாங்க.
வெள்ளை மணற்பரப்பில் இருக்கைகள், சன் பாத் எடுக்கும் சாய்வு நாற்காலிகள் எல்லாம் அங்கங்கே இருக்கு. கடலில் டைடு குறைவா இருக்கும்போது இந்தப் பவளப்பாறைகள் வரை நடந்து போய்ப் பார்க்கலாம். அங்கங்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் நீல நிற மீன்களும், நீல நிற நட்சத்திர மீன்களும் உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டு இருக்குதுங்க.
படம்......
ட்ராப்பிக்கல் மரங்களும் பூச்செடிகளுமா ஜிலுஜிலுன்னு வெய்யிலே தெரியாமல் இருக்கு.
இங்கேயே ரெஸிடன்ஷியல் ப்ராப்பர்ட்டி விக்கறாங்களாம். வேணுமான்னு கேட்டு விளம்பரம் வச்சுருக்காங்க. ரிட்டயர் ஆன வெள்ளைக்காரர்களுக்கு ஏற்ற இடம். நமக்குச் சரிப்படாது:-)))) மகள் & கோவைக் கூப்பிட்டுக்கிட்டு நா(ன்)டி டவுனுக்குக் கிளம்பினோம். 25/30 நிமிச ட்ரைவ்.
மகளைப் பார்த்துத் தோழிக்கு ஆனந்தம். முந்தி அங்கிருந்தப்ப வாராவாரம் ஞாயிறு அவுங்க வீட்டிலேதான். அப்போ மகள் மலையாளம்கூடக் கொஞ்சம் பேசுவாள். நான் கறாராச் சொன்னேன்....காசு வாங்கிக்கிட்டாத்தான் துணி எடுப்பாள்ன்னு:-)
பிடிச்சமாதிரி கிடைச்சது ரெண்டு பேருக்கும். இளசுகளை மத்த ஷாப்பிங் செஞ்சுச்சுத்திப் பார்க்க அனுப்பிட்டு நாங்கள் பழங்கதையில் மூழ்கினோம். தோழியின் கணவர் இங்கே வாத்தியார் வேலைக்கு வந்தவர், 35 வருசங்களுக்கு முன்னே. பள்ளிக்கூடங்கள் ஆரம்பிச்சு உயர்நிலைப்பள்ளி லெவலுக்கு வந்தவுடன், இந்தியாவில் விளம்பரம் கொடுத்துப் பட்டதாரி ஆசிரியர்கள் வர ஆரம்பிச்சு இருந்த காலக்கட்டம். ஒப்பந்த முறையில் 3 வருசம் வந்துட்டு அப்புறம் வேணுமுன்னா ஒவ்வொரு மூணு வருசமா ஒர்க்கிங் விஸா வாங்கிக்கலாம். நாங்க இங்கே 6 வருசம் இருந்தது இந்தக் கணக்குதான்:-) என்ன ஒன்னு மறுபாதிக்கு ஒர்க்கிங் விஸா கிடையாது. சிட்டிஸன்ஷிப் கிடைச்சால் (9 வருசத்துக்குப்பிறகு) ரெண்டுபேரும் வேலைக்குப் போகலாம். வியாபாரம் தொடங்கலாம்.....
தோழி ஒரு கடையை ஆரம்பிச்சு நடத்துனது இப்படித்தான். கால் நூற்றாண்டு ஆகிருச்சு. இந்தியாவில் மட்டுமே இருந்து ரெடிமேட் உடைகள் வரவழைச்சு விக்கறாங்க. ஒரே மகள். கல்யாணம் முடிச்சு இப்பக் கானடாவில் இருக்காள்.என் மகளைத் தூக்கிவச்சுக் கொஞ்சும் அன்பான அக்கா:-)

தோழிக்கு ஊரோடு போயிறலாமுன்னு சிலவருஷமா எண்ணம். ஊரில் ஒரு வீடு கட்டி முடிச்சு, அதை வாடகைக்கு விட்டுட்டு வந்து நாலு மாசமாச்சாம். திரும்பிப்போனால் வசிக்க ஒரு இடம் வேணுமே..... அடுத்தவருசக் கடைசியில் போகும்விதமா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பிசினஸை விக்கணும். முழுக்க முழுக்க குஜராத்திகள் நடத்தும் சாம்ராஜ்யத்தில் 25 வருசம் தாக்குப்பிடிச்ச தோழிக்கு உண்மையில் ஒரு சபாஷ் போட்டே ஆகணும். வருசாவருசம் வெள்ளம் வரும் நாடாக இருக்குல்லையா அதனால் வெள்ளத்துக்கான காப்பீடு கிடையாது. ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டும் வெள்ளக் காப்பீடு தரும். அதுக்குப் பிரிமியம் ரொம்ப அதிகம். எல்லோராலும் கொடுத்துக் கட்டுப்படி ஆகாது.
என்னதான் கவனிச்சுக் கடையில் துணிகளை அடுக்கி வச்சாலும் புயல் எச்சரிக்கை வானொலியில் வந்தால் வயித்துக் கலக்கம்தான். இடுப்புவரை நிற்கும் தண்ணீரில் மெதுவா நடந்து வந்து கடையைத் திறந்து(??) ஒதுக்க முடிஞ்சதை ஒதுக்குவாங்களாம். நல்லவேளையா வீடு கொஞ்சம் பக்கத்தில் (அடுத்த தெருவில்) இருப்பதால் சமாளிக்க முடியுது.
இதுக்காகவே பலர் அந்தக் காலத்திலேயே கடைகளின் மாடியிலே வீடு ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மழை ஆரம்பிச்சவுடன், அப்பப்போய்ப் பார்த்து சாமான்களை ஒவ்வொரு ஷெல்ஃபாக மேலே ஏத்திக்கிட்டே இருப்பாங்களாம்.
இவ்வளவுதூரம் வந்தமே...மகளுக்கும் நண்பருக்கும் கோயிலைக் காட்டிட்டுப் போகலாமுன்னு கிளம்பினோம். மகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.அவள் ஒரு Atheist. நண்பருக்கு? சின்னப்பையனா இருந்தப்ப எப்பவாவது அப்பா அம்மாவோடு சர்ச்சுக்குப் போவாராம். மத்தபடி அவரோட கடவுள் நம்பிக்கையைப் பத்தி நான் ஒன்னும் கேட்டுக்கலை.
கோவிலில் படியேறும் சமயம், கோயில் அலுவலில் இருக்கும் ஒருவர், மகளிடம் 'உள்ளே போக அனுமதி இல்லை'ன்னு சொன்னார். சரியான உடை இல்லையாம்.( பின்னே? ஹாலிடேவாசியா சின்ன ஷார்ட்ஸ் போட்டுருந்தாள். அந்தந்த இடங்களுக்கான மரியாதை தரணுமா இல்லையா?
நமக்குத்தான் துப்பட்டா இருக்கே.... அதை இடுப்பில் சுலு (ஃபிஜியன் உடை. சராங், லுங்கி மாதிரிக் கட்டுவது) போல இடுப்பில் கட்டிக்கோன்னேன். வேணாமாம். 'நான் வெளியே இருக்கும் இருக்கையில் உக்கார்ந்துக்கறேன். நீங்களே போங்க'ன்னுட்டாள்.
ஒவ்வொரு சந்நிதியாக் காமிச்சு சுருக்கமா இது எலிஃபெண்ட் காட், இது அவரோட அம்மா, இது அப்பா, இது மாமின்னு சொல்லி மூலவரை மட்டும் யங்கஸ்ட் சன் ஆஃப் த ஃபேமிலின்னு சொன்னேன்:-) எல்லாமே ஒரு ஃபேமிலி அஃபேர் ன்னு நினைச்சுக்கிட்டாரோ என்னவோ? நிமிஷத்துலே புரியும் புராணமா நம்மது?
நண்பருக்கு இளநீர், கரும்பு எல்லாம் ருசி பார்க்கணுமாம். நம்ம மகள் நம்மூரில், சிங்கையில்ன்னு இதையெல்லாம் ருசிச்சதைச் சொல்லி ஆசையைக் கிளப்பி விட்டுருக்காள்போல. மார்கெட்டில் இருக்கான்னு போய்ப் பார்த்தோம். பலாப்பழம் மாதிரி கண்ணுலே ஆப்ட்டது. ஓடுனேன். நம்ம அதிருஷ்டம் பாருங்க. சமைக்கும் பலாப்பிஞ்சுகளாம். இன்னும் பழம் சீசன் வரலையாம். தேங்காய்கள் மட்டும் வழக்கம்போல ஏழுஎட்டு வச்சுக் கூறுகட்டி இருந்துச்சு. ரெண்டு டாலர். விலைவாசி ஏறுதுதான். நியாயம்தானே? டாரோ கிழங்குகள் நாலைஞ்சு வச்சுக் கூறு கட்டி விக்கிறாங்க. இதையெல்லாம் விற்பவர்கள் நேட்டிவ் ஃபிஜியன்கள்தான்.
ஆமாம். இவ்வளோத் தென்னைமரங்கள் இருக்கு. வெய்யிலும் பிச்சு வாங்குது. இளநீர் வியாபாரம் நடந்தா எல்லோருக்கும் எவ்வளோ நல்லது. ஏன் யாருமே இதைப்பத்தி யோசிக்கலை. தாய்லாந்து இளநீர் எப்படி சிங்கையில் சக்கைப்போடு போடுது பார்த்தீங்கதானே? எங்கியாவது ஃபிஜியன் கோரோ ( குடியிருப்பு கிராமம்)வில் கேட்டுப் பார்க்கணும்.
ரோட்டோரமா ரெண்டு பலகையைப்போட்டு இப்படி கோரோ அருகில்,அப்படியே போய்க்கடலில் பிடிச்சாந்து மீன், நண்டு எல்லாம் வித்துக்கிட்டு இருப்பாங்க. நண்டுகளைக் கைகால் நீட்டவிடாமத் தென்ன ஓலையில் கட்டி வச்சுருப்பாங்க. மக்கள் வண்டியை நிறுத்தி பேரம் பேசி வாங்குவாங்க. யாரும் வாங்கலைன்னா? அன்னிக்கு அவுங்க அடுப்புலே வேகும், ராச்சாப்பாடுக்கு.
இதே போலத்தான் ஏராளமாக் கரும்பு விளையும் நாட்டிலேத் திங்க ஒரு கரும்பு கிடைக்கறதில்லை. விளையும் கரும்புகள் எல்லாம் ஒப்பந்தப்படி ஆலைக்குத்தான் போகணும். மார்கெட்டில் விற்பனை செய்யத் தடா. நாங்கள் அங்கிருந்தப்பவும் பொங்கல் பண்டிகைக்கு கரும்பெல்லாம் பூஜையில் வைப்பதில்லை. வீட்டு எதிரில் இருக்கும் கரும்புத்தோட்டத்தைப் பார்த்துக்கிட்டே தீபாராதனை செய்வதுதான்.
அவுங்களை ஃபர்ஸ்ட் லேண்டிங்கில் விட்டுட்டு நாங்க கலியாண வீட்டுக்குப் போனோம்.
பதிவின் நீளம் கருதி இனிமேல் வரும் ஒவ்வொரு பகுதியும் சுற்றுலா & கல்யாண வீடுன்னு பிரிச்சுப் போடப்போறேன்:-)
அடுத்தடுத்த நாட்களில் வெளிவரலாம்!
