வந்துட்டேன்...........
எல்லாரும் எப்படி இருக்கீங்க? நலம்தானே? ரொம்பவே நிம்மதியா இருந்தமாதிரி உங்க முகமெல்லாம் ஒளிவீசுதே.... ம்ம்ம்ஹூம். இப்படியே உங்களைவிட்டா அது நல்லதுக்கில்லே:-)
எல்லாம் விவரமாச் சொல்லக் கொஞ்சம் நேரம் எடுக்கும். முதல்லே வயித்துப்பாட்டைப் பார்த்துட்டு அப்புறமா அறிவை விருத்திச் செய்யலாமா?
இதோ இன்றைய சமையல்:-))))
குட்டிக்குட்டியா முட்டைக்கோசு
இப்படி ஒரு ஈயடிச்சான் காப்பியா ஒரு காய் இருக்குமா? அச்சு அசல் முட்டைக்கோசு. ஆனால் அழகான மினியேச்சர். 'ஹனி ஐ ஷ்ரன்க் யுவர் காப்பிக்கேட்' ன்னு மந்திரம் போட்டுட்டாங்க போல.
இது ஒரு தண்டுச் செடியில் வளருது. ரெண்டு மூணடி உயரம் வருமாம். அந்தத் தண்டு முழுசும் குட்டிக்குட்டியாக் காய்ச்சுட்டு மேலே உச்சாணியில் குடை மாதிரி அஞ்சாறு இலைகள்.

பொதுவா சூப்பர் மார்கெட்டில் தண்டில் இருந்து பிச்சுப்போட்டதாத்தான் கிடைக்கும். சீஸன் சமயம் நகருக்கு வெளியில் இருக்கும் பண்ணைகளில் தண்டோடு விற்பனைக்கு இருக்கும். தண்டை ஒன்னும் செய்ய முடியாது. ஆனால் தண்டோடு பார்க்கும்போது அழகா இருக்கு. ஃபேன்ஸி! அதுக்காக ஒன்னு வாங்கிக்கறதுதான்.
முட்டைக்கோசுன்னு சொன்னாலும் அதுலே இருக்கும் ஒரு ' மணம்' இதுலே இல்லை. முட்டைக்கோசைக்கூட நிறைய நேரம் வேக வச்சாத்தான் பிரச்சனையே. நாலு நிமிசத்துக்கு மேலே வேகவைக்கலேன்னா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். வேகும்போது கூடவே ஒரு துண்டு இஞ்சியைத் தட்டிப்போட்டா 'போயே போச்'. இது சமையல் குறிப்பு:-)
இன்னிக்கு நாம் சமைக்கப்போவது ப்ரஸ்ஸல் ஸ்ப்ரௌட் .
தேவையான பொருட்கள்:
ஒரு ஃபுட் ப்ராசஸர். (ஹா..) நம்ம 'ஈஸிப் பீஸி இண்டியன் குக்கிங்' ( வெளியிடப்போகும் சமையல் புத்தகத்தின் பெயர். நல்லா இருக்கா? ) முறைக்கு அவசியமான சமையலறைச் சாதனம்.
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரௌட் : 200 கிராம்.
பயத்தம்பருப்பு ; 50 கிராம் (காலே அரைக்கால் கப். ) தண்ணீரில் ஊறவச்சுக்கணும்.
மிளகாய் வத்தல் ; 3 ( பிய்ச்சுச் சின்னதா துண்டுகள் செஞ்சது)
கடுகு ; அரைத் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் : கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி : கால் தேக்கரண்டி
உப்பு : அரைத் தேக்கரண்டி
எண்ணெய் : 3 தேக்கரண்டி
கருவேப்பிலை; ஒரு இணுக்கு
தேங்காய் துருவியது: ஒரு மேசைக் கரண்டி
(ஆகாதவங்க சேர்த்துக்கலேன்னா பரவாயில்லை.)
செய்முறை:
தண்டோடு ஒட்டியிருந்த பகுதியை லேசா கத்தியால் சீவி எடுத்துட்டுக் காய்களைத் தண்ணீரில் அலசிட்டு ஃபுட் ப்ராசஸரில் போட்டு( shredder blade) நறுக்கிக்கணும். இது பார்க்க அழகா ஒன்னுபோல மெலிசா நறுக்கித்தரும்.
பயத்தம் பருப்பைக் கழுவிட்டு அந்தத் தண்ணீரை வடிச்சுட்டு ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு ரெண்டு நிமிஷம் 50% பவரில் வேகவிடுங்க. அரை வேக்காடா இருக்கும் அது போதும்.
வாணலியை அடுப்பில் ஏத்தி அந்த எண்ணெயைச் சூடாக்குங்க. ஆச்சா? கடுகு, மொளகாய், கருவேப்பிலை போட்டு வெடிச்சதும் பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கிட்டு நறுக்குன ஸ்ப்ரௌட்டுகளையும் போட்டுச் சிறு தீயில் வதக்கணும். எண்ணி மூணே நிமிஷம். அரைவேக்காட்டுப் பருப்பு, துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிஷம் கூடுதலா வதக்குக.
ஆச்சு. ஸ்டவ் ஆஃப்.
சிம்பிளான ஹெல்தி ஸைட் டிஷ். (ரசம் சாதத்துக்கு நல்லா இருக்கு. காரக்குழம்புக்கும் சரிப்படும்)
எதுக்கு இப்படிப் ஃபுட் ப்ராசஸர்லே வெட்டணுமுன்னா எல்லாத்துண்டுகளும் ஒரே கனத்தில் ஒன்னுபோல வெட்டிரும். சமைக்கும்போது தண்ணீரே சேர்க்க வேணாம். 'சட்'னு அதுவே வெந்துரும்.
சாதனம் இல்லைன்னு இதைச் சமைக்காம இருந்துருறாதீங்க. கையாலேயும் நறுக்கிக்கலாம். வெங்காயம் நறுக்கிக்கற மாதிரி. சமைக்கும்போது ரெண்டு மேசைக்கரண்டித் தண்ணீயை வாணலியில் தெளிச்சுவிடுங்க.
இவ்வளவு மெனெக்கெடணுமா? ஊஹூம்...வேணவே வேணாம்.
நாலைஞ்சு குட்டிகளை(!) மைக்ரோவேவில் ஒன்னரை நிமிஷம் 100 பவரில் வச்சு எடுங்க. நல்லாவே இருக்கு.
அதான் பச்சைக்காய்கறிகளைச் சாப்பாட்டில் சேர்த்துக்கணுமுன்னு டாக்குட்டர்களும், ஹெல்த் ஃபுட் இண்டெக்ஸ்ம் சொல்வதைக் கேக்கலையா?
ஆங்... சொல்ல மறந்துட்டேனே... பருப்பு உசிலியாச் செஞ்சாலும் சூப்பரா இருக்கு.
ஆமாம்.... பெல்ஜியத்தில் இருக்கும் ப்ரஸ்ஸல்ஸ் நகருக்கும் இந்த ப்ரஸ்ஸல் ஸ்ப்ரௌட்டுக்கும் என்ன உறவு இருக்கலாம்?
அங்கேதான் பெல்ஜியத்தில் முதலில் பயிரிட்டாங்களாம், சமீபத்தில் ஒரு 800 வருசம் முன்னே:-)
