காற்றிலே பறந்து வந்த ஒரு பூ திரௌபதியின் பக்கத்துலே வந்து விழுந்தது. எடுத்து மோந்து பார்த்தால்....... ஹைய்யோ...மனத்தை மயக்கும் வாசனை. இப்பவே இந்தப் பூ பூத்து நிற்கும் செடியைப் பார்க்கனுமுன்னு மனசு துடிக்குது. அக்கம்பக்கம் தேடிப்பார்க்கிறாள். கண்ணுக்கு இந்தப் பூ இருக்கும் செடி ஒன்னுமே தெரியலை. தடித் தடியா அஞ்சுபேர் அன்பைக் காமிக்க இருக்கும்போது யாரையாவது ஏவினால் ஆச்சு. ஓ.... அஞ்சுன்னு சொல்லிட்டேன் இல்லை.. இப்போதைக்கு நாலு. அர்ஜுனன் தவம் செய்யப்போயிருக்கான்.
அந்த சமயம் பீமன் பக்கத்துலே வந்து நிக்கிறான். இவ்வளவுநாள் கொஞ்சம் வாடிய முகத்துடன் சோகமா இருந்தவள், இப்ப என்னடா ஒரு பூவை கையில் வச்சுக்கிட்டு முகர்ந்து முகர்ந்து பார்த்து பூரிச்சுப் போயிருக்காளேன்னு......
ஏ புள்ளெ.... என்னா இம்பூட்டு சிரிப்பு?
இந்தப் பூவைப் பாருங்க. எப்புடி மணக்கு? மனசை எல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது
ஆஹா...அரோமாதெரப்பி.
"இந்தப் பூவு இன்னும் கொஞ்சம் வேணும். இந்தச் செடியை இங்கே வச்சு வளர்த்தால் எப்பவுமே பூ சப்ளை குறையாம இருக்கும்னு மனசுலே ஒரு எண்ணம். இந்தச் செடி ஏது எங்கேன்னு பார்த்து ஒன்னு கொண்டுவாங்க."
இதோன்னு கிளம்புனவன், மணம் புடிச்சுக்கிட்டே போறான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பூச்செடிகள் ஒன்னையும் காணோம். நடந்து நடந்து வந்தவன் ஒரு மலை அடிவாரம் வந்துட்டான். சரி வந்தது வந்தோம்..........மலைமேல் ஏறிப் பார்த்துடலாம். ஒருவேளை இந்தச் செடி அங்கே இருந்தால்....
முள்ளுச்செடியைத் தள்ளிக்கிட்டு ஒரு மலைப்பாதையில் வரும்போது அங்கே ஒரு கிழக்குரங்கு பாதையின் நடுசெண்டர்லே கிடக்குது. எங்கே போறேன்னு பீமனைக் கேட்க (குரங்கு பேசுமான்னு குறுக்குக் கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது. எங்க கோகி, கப்பு எல்லாம் பேசுவாங்க எனக்கு அது புரியும்) இந்தப் பூ பூக்கும் செடியைத் தேடிக்கிட்டு வந்தேன். மலைமேலே இருக்குமோன்னு ஒரு சம்சயம். நீ வழியை விடு...... நான் மேலே ஏறிப் பார்த்துட்டு வரேன்னான்.
'இங்கே நரன்களுக்கு தடா. நீ போகப்பிடாது'ன்னு சொல்லுச்சு வாநரன்.. 'நீ என்ன இங்கே நாட்டாமை? நான் அப்படித்தான் போவேன். என்னை யார் என்ன செய்யரான்னு பார்க்கலாமு'ன்னு தன் 'சிக்ஸ் பேக்கை' ஸ்டைலாக் காமிச்சு வீரம் பேசறான் பீமன். 'வல்லவனுக்கு வல்லவன்' உண்டுன்னுச்சு குரங்கு. 'சரி,சரி வீண் பேச்சுப் பேசாதே..... மிருகத்தைத் தாண்டிப் போனால் பாவமுன்னு பாட்டி சொல்லி இருக்கு. ஓரமாத் தள்ளிப்படு. நான் போகணு'முன்னான்.
"எனக்கோ உடம்பு ரொம்ப பலவீனமாக் கிடக்கு. நகர முடியலை. நீயே என்னைத் தூக்கி அந்தப் பக்கம் ஓரமா விட்டுட்டுப் போயேன். இந்தப் பேச்சு பேசறே?"
"நீ படு கிழமா இருக்கே. என் பலமான கையாலே தொட்டுத் தூக்கினாலே நீ கூழாயிருவே. என் இரும்புப்பிடி எனக்கே பயமா இருக்கு, நான் தொட்டால் சங்குதான். "
"சரி. அப்ப ஒன்னு செய். என் வாலை மட்டும் நகத்தி வச்சுட்டுப் போ. பாட்டி சொல்லைத் தட்டாதே. சாஸ்திரம் மீறாம இருக்கும்"
சுண்டுவிரலால் லேசா வாலைத் தூக்கலாமுன்னா என்னவோ ஆணி அடிச்சு வச்ச மாதிரி அசைக்க முடியலை. என்னடா இது வம்பா இருக்கேன்னு அசைச்சுப் பார்க்கிறான். ஊஹூம். தன் பலத்தையெல்லாம் சேர்த்து அந்த சின்ன வாலைத் தூக்குனாலும் போதுமுன்னு பார்த்தால்...... ஒன்னும் நடக்கலை.
ஆஹா..... இதுதான் அந்த வல்லவனுக்கு வல்லவன். நம்ம கணக்கு எங்கியோ மிஸ்டேக் ஆகிப்போச்சு......
"ஐயா, கிழ வாநரரே..... நீங்க யார்? என்னாலே உங்க வாலை ஒரு மில்லிகூட (இது மீட்டர்) அசைக்க முடியலை. மன்னிக்கணும். தயவு செஞ்சு நீங்க யார்ன்னு சொல்லுங்க. தயவாக் கேக்கறேன்."
"நாந்தாய்யா உன் அண்ணன்."
"ஐயோ! எப்படி? நீ குரங்காச்சே?"
"எதுக்குய்யா இப்படி பதட்டப் படறே? நான் உன் ஹாஃப் ப்ரதர். நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அப்பா.
எங்க அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. அவுங்க ஒரு நாள் மலையில் உலாத்தும்போது நம்ம அப்பா, (அப்ப அவர் நம்ம அப்பா இல்லேப்பா) அவர்தான் வாயு பகவான் அம்மாவைப் பார்த்தார். (அப்ப அது அம்மா இல்லை. ஒரு பொண்ணு.) கண்டேன் காதலை ன்னு ஆகிப்போச்சு. அதுக்கப்புறம்தான் நான் பொறந்தேன்."
"அட தேவுடா..... எனக்கு வேற கதை இருக்கு. அதை அப்புறம் ஒரு நாள் விலாவரியாச் சொல்றென். ஆனா எனக்கும் அப்பா அதே வாயுதான். ஆமா உம்பேரு என்ன?"
"அனுமான்"
"அடக் கடவுளே.....அண்ணாத்தே, ராமாயண காலத்துலே பகவான் ஸ்ரீ ராமருக்கு எல்லா வகையிலும் உதவுன ஹனுமான் நீர்தானா?"
"ஆமாம். தம்பி. அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார் எனக்கு ஒரு(?) தம்பி இருக்கான்னு. அது நீதான்னும் எனக்குத் தெரியும். எப்படித் தெரியுமுன்னு கேக்காதே. நான் இப்ப சாமி. எனக்கு எல்லாம் தெரியும்."
"அருமை அண்ணா...."
"ஆசைத் தம்பி.................."
'பாய் பாய்'ன்னு கட்டித் தழுவினாங்க ரெண்டு பேரும். பீமனுக்கு உடம்பில் இன்னும் பலமும் தேஜஸும் கூடுச்சு. ஹனுமனின் ஆசியோடு மலை உச்சிக்குப் போன பீமன், அங்கே பூத்துக் குலுங்கும் செடியில் இருந்து பூக்களைப் பறிச்சுக்கிட்டு, கையோடு ஒரு இளம்செடியையும் தோண்டி எடுத்துக்கிட்டு கீழே இறங்கினான்.
அண்ணாத்தே...இனி யாரும் வரமாட்டாங்க. நீ நல்லா ஆர அமரப் படுத்துத் தூங்குன்னு சொல்லி, கையோடு கொண்டுவந்த பூக்களைப் பாதி எடுத்து மெத்தையா அடுக்கிவச்சான். இன்னும் கொஞ்சம் பூக்களை எடுத்து ஒரு தலையணையும் செஞ்சு கொடுத்துட்டு வந்தான்.
நிம்மதியா ஒரு தூக்கம் போடணுமுன்னு ஒய்யாரமாப் படுத்து, வாலைத் தன் தொடைகளுக்கிடையில் கொடுத்துவாங்கி, ஒருகையால் முகத்துக்கு அண்டை கொடுத்து, மறுகையால் தன் கதாயுதத்தைப் பிடிச்சுக்கிட்டு, உள்ளங்கால் தெரியப் பாதத்தைத் திருப்பிப்போட்டு அசந்து தூங்கிட்டார் வாநர சிரேஷ்டர் ஹனுமான்.
எப்படி இருந்துருக்கும் அந்தக் காட்சி?
இப்படித்தான்.
சொல்ல மறந்துட்டேனே.... இந்தப் பூவின் பெயர் சௌகந்தி(யாம்)
அனைவருக்கும் ஹனுமத் ஜெயந்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
Showing posts with label பீமன்.. Show all posts
Showing posts with label பீமன்.. Show all posts
Wednesday, December 16, 2009
ஹேப்பி பர்த் டே டு யூ.
Posted by
துளசி கோபால்
at
12/16/2009 06:41:00 AM
42
comments
Labels: சௌகந்திப்பூ, பீமன்., ஹனுமான்
Subscribe to:
Posts (Atom)
