Showing posts with label கேரளசங்கம். Show all posts
Showing posts with label கேரளசங்கம். Show all posts

Tuesday, April 14, 2015

மன்மதன் வந்தானடி.........


இந்த வருசத் தமிழ்ப் புத்தாண்டுக்கு மன்மதன் வந்துருக்கான்.  ஒரு வருச ராஜாங்கம்!  நம்ம கேரளா அசோஸியேஷனில்  மூணு நாளைக்குமுன்னே  சனிக்கிழமை  கடந்துபோன ஈஸ்ட்டருக்கும், வரப்போகும் விஷுவுக்கும் சேர்த்து விழா கொண்டாடினோம்.



எப்பவும் இது ரெண்டையும் சேர்த்தே கொண்டாடும் வகைதான். அடுத்தடுத்து  வரும் பண்டிகைகளுக்குத் தனித்தனிக் கொண்டாட்டம் செஞ்சுக்க முடியாது, பாருங்க. அதனால் கூடி இருந்து கொண்டாட வீக்கெண்டா வரும்  ஒரு நாளும்,  அவரவர் வீட்டுச் சொந்தக் கொண்டாட்டங்களுக்கு  பண்டிகை வரும் அதே நாளுமா வச்சுக்கிட்டோம். இதுவும் சௌகரியமாத்தான் இருக்கு!




 ஐஸ்வரியம் உள்ள விஷுக்கணி ஒருக்கி வச்சுருந்தாங்க. எல்லாப் பொறுப்புகளையும்  சிறுப்பக்கார் வசம் கொடுத்தாச்சு.  அவுங்களும் நல்லாவே செய்யறாங்க. நாங்க முதியோர்  வழிகாட்டுனாப் போதும்!

சங்கத்துக்குப் பெயர் சூட்டி  ரெஜிஸ்ட்டர் செஞ்சு ஆச்சு  வருசம் பத்து! அதற்கான  விழாவையும் இதுலே சேர்த்துக்கிட்டோம். சங்கம் நிறுவனர்  என்ற கணக்கில் ஒரு பதினைஞ்சு பேருக்கு  மரியாதை செய்யணும். அதுலே  எண்மர் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் போயாச்சு. பாக்கி இருக்கும் எழுவருக்குப் பூங்கொத்தும்,  சேவை பிழிஞ்சதுக்கான பாராட்டுப் பத்திரமும் கிடைச்சது. நமக்கும்தான்னு  தனியாச் சொல்லணுமாக்கும்:-))))


புதுசா இங்கே ஆரம்பிச்சுருக்கும் இண்டியன்  ரெஸ்ட்டாரண்டில் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தாச்சு.  வெஜிட்டேரியன்களை காயப்போடாதீங்க மக்களேன்னு  உரப்பிச்சுச் சொன்னேன். எப்பவும் எனக்கு ஒரு ச்சன்னா கறிதான்  கிடைக்கும்  வேறே ஏற்பாடு செய்யறேன்ன  இளைஞர் ஜஸ்ட்டின். வீட்டுக்கு வந்து மெனு சொல்லிட்டுப் போனார்,






வெஜிட்டபிள் ப்ரைடு ரைஸ்,  சிக்கன் கறி, மலாய் பனீர்,  பப்படம், ஊறுகாய்  இவைகளோடு விஷூ என்பதால் ஒரு பாயஸம்.

பிங்க் சட்டை செயலாளர், நீலம் தலைவர் (இந்த ஆண்டுக்கு)

ஹாலில் குடி இருக்கும்  Fan Tail பறவை ஒன்னு பயந்து போயிருக்குக் கூட்டத்தைப் பார்த்து:(  படபடன்னு பயத்துடன்  மேலேசுத்தி சுத்தி வந்ததைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். கதவைத் திறந்து வச்சாலும் வெளியே போகலை. பாவமா இருந்துச்சு.



கலைநிகழ்ச்சிகள்  அதிகம் இல்லாமல்  இருந்தது  அருமை. ஜஸ்ட் ஒரு டான்ஸ், ரெண்டு பாட்டு. போதும் யதேஷ்டம்!

ஆச்சு.... இன்றைக்கு மன்மதன்  வந்தே வந்துட்டான். ச்சும்மா வரப்டாதா? ஏகத்துக்கும்  ஜில்லுன்னு குளிரைக் கூடவே கூட்டி வந்துருக்கான். வெறும் 10 டிகிரி. கூடவே மழை!   சாமிப் பாட்டுகள் ஒலிக்க  குளிருக்கு இதமா  ஹீட்டர் போட்டுக்கிட்டு,  வலையில்  மேயோ மேய்ன்னு மேய்ஞ்சுக்கிட்டு   சித்திரை திருநாளைக் கொண்டாடிக்கிட்டு இருக்கேன்!

வருசப்பிறப்பு ஸ்பெஷலா நம்ம வீட்டுக்கு  ஃபைபர்  ஆப்டிக் அல்ட்ரா ப்ராட்பேண்ட் வந்தாச்! வந்த விவரம் இன்னொரு பதிவில்:-))))

இதுதான் நமக்குப் புதுவருசப் பரிசு.

டௌன்லோட் ஸ்பீடு 31.40 Mbps
அப்லோட் ஸ்பீடு  11.06 Mbps.

நம்ம வீட்டு வருசப்பிறப்பு மெனு:  கேஸரி,  வடை,  நம்மாத்து மாங்காய்ப் பச்சடி,  சுரைக்காய் கூட்டு, பருப்பு  ரஸம், தயிர்.



சாயங்காலம் கோவிலுக்குப் போய் வரணும்.

நண்பர்கள் அனைவருக்கும்  தமிழ்ப்புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.  நல்லா இருங்க!

விஷூ ஆசம்ஸகள்.  பகவானோடு ப்ரார்த்திக்குந்நு.  ஈ கொல்லம் நன்னாயி வரட்டே!  மங்கலம்  அனுக்ரஹிக்குனே!