Friday, November 28, 2025

அதுலே பணம் வச்சுருக்கேன்................

காலை ஏழே முக்காலுக்கெல்லாம் செக்கின் ஆச்சு. எனக்கான வீல்சேரும்  தயாராக இருந்தது.   சம்ப்ரதாயங்கள் எல்லாம் முடிச்சு நேரா நம்ம கேட்டுக்குக் கொண்டுபோய் உக்கார்த்தி வச்சுட்டாங்க. 


ட்யூட்டி ஃப்ரீ கடைகளில் எதாவது தேவைன்னா இப்பவே வாங்கி வச்சுட்டுப்போகலாம். நாம் திரும்பி வரும்போது கொடுத்துருவாங்க.  அதேபோல ஊருக்குள் இருக்கும் ட்யூட்டி ஃப்ரீ கடைகளில் ஏதாவது வாங்கினாலும், நாம் திரும்பி வரும்போது ஏர்ப்போர்ட்டில் கொண்டுவந்து கொடுத்துருவாங்க. பயணம் போகும் இடங்களில் தூக்கிக்கிட்டு அலைய வேணாம்.  முந்தியெல்லாம்  பெர்ஃப்யூம் வாங்கி வச்சுட்டுப்போவேன்.  இப்பெல்லாம்  நம்மூர் காதிபண்டாரில் வாங்கும் ஜவ்வாதுஅத்தர்தான் நம்ம சிக்னேச்சர் பெர்ஃப்யூம் :-) வீட்டுலே ஸ்டாக் இருக்கு.
கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் போர்டில் நம்ம 'ரூ' பார்த்ததும் 'அட'ன்னு ஆச்சு !  

எட்டே முக்காலுக்கு நமக்கான போர்டிங். வீல்சேர் முன்னுரிமை.  எனக்கு ஜன்னல் இல்லை என்ற ஏமாற்றம். மூணரை மணி நேரம்தானே..... போட்டும் போன்னு இருந்தேன்.  கடைசியில் ஏறிவந்த பெண்மணி, 'எனக்கு ஜன்னல் வேணாம். உங்க கடைசி இருக்கை'யைத் தர்றீங்களான்னு கேட்டாங்க. வெல்லம் தின்னேன்.

"தண்ணீர் பாட்டில்" ஸ்டேண்ட்லே செல்லைச் சாய்ச்சு வச்சு ஏதோ படம் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. டௌன்லோடி வச்சுருக்காங்க போல.  ஃப்ரீ வைஃபை வேலையே செய்யலை.  எனக்கு ஃப்ளைட் என்டர்டெய்ன்மென்ட் வழக்கம்போல்  ஃப்ளைட்பாத் &  நம்ம செல்ஃபோன் கெமெரா.   நிலம் முடிஞ்சு போச்சுன்னா .... மேகமும் கடலும்தான். நம்ம  சதர்ன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இன்னும் பனி கிடக்கு.  குளிர்காலம் முடிஞ்சே ரெண்டுமாசம் ஆகப்போகுது.....  ஆனால் குளிர்விட்ட பாடில்லை.

  
ஆரோக்கி மலை உச்சி  தென்பட்டது.  இது மௌண்ட் குக் என்ற மலையின் மவொரிப் பெயர். இப்பெல்லாம் பரவலா மவொரிபெயர்கள் புழக்கம்  அதிகரிச்சு இருக்கு.   

ஆரோக்கி எனும் மவொரிப்பெயருக்கு 'மேகத்தை துளைக்கும்' (Cloud Piercer) என்று பொருள். இது உண்மைன்னு சொல்றதுபோல் மேகத்துக்குள் புகுந்து நிக்குது மலை உச்சி.  நியூஸியில் மிக உயரமான மலை   இது.   3724 மீட்டர் !  1991 டிசம்பரில்  மலையுச்சி இடிஞ்சு விழுந்து பத்து மீட்டர் உயரம் குறைஞ்சு போச்சு.  கூம்பா இருந்த உச்சி,   ஹேர்கட் பண்ணதுபோல்  ஆச்சு. ஆனாலும்  இப்பவும் இதுதான் நாட்டின் உயரமான மலை.கேப்டன் குக் பெயரை இதுக்குச் சூட்டியவர்கள்  ஆரம்பகால வெள்ளையர்களே . 

இந்த  ஜெட் ஸ்டார்களில் இன்டர்நேஷனல் ஃப்ளைட்டா  இருந்தாலும் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கூட கொடுக்கமாட்டாங்க. அவ்ளோ தாராளம் !  தீனி வேணுமுன்னா டிக்கெட் புக் பண்ணும்போதே கேட்டுருக்கணும்.

  பதினொரு மணிக்கு விமானம் மெல்பர்னில் தரை தொட்டது . எங்களுக்கும் அவுங்களுக்கும் ரெண்டுமணி நேர வித்தியாசம் இருக்கு. வீல்சேர் மக்கள் விமானத்துலே  ஏறும்போது முதலிலும், இறங்கும்போது கட்டக்கடைசியாகவும் இறங்கணும்.  நாங்களும் கடைசியில் இறங்கிட்டுப் பார்த்தால் வீல்சேர் நஹி.  எங்கேன்னு கேட்டதுக்குக் கொஞ்சம் முழிச்சுட்டு, இன்னொரு உதவியாளர் மூலம்  ஒரு வீல்சேர் கொண்டுவரச் சொல்லிட்டு, 'தள்ளிக்கிட்டுப்போக ஆள் இல்லை. நீங்கதான் தள்ளணும்'னு நம்மவராண்டை சொன்னாங்க.  நான் 'ஐயோ'ன்றேன். இவர் 'ஓக்கே'ன்றார்,  ப்ச்............
 
அடராமா.....

பொதுவா ப்ளேன்லே இருந்து வெளியே ஏர்ப்ரிட்ஜ்லே இறங்கும்போது அது ஒரு சின்ன ஏத்தமாத்தான் கட்டடம் வரை போகும். இதுலே என்னையும் உக்கார்த்தி, என்னோட கேபின் ஸூட்கேஸையும் வச்சு ஒருத்தர் தன் பேக் பேக்கையும் சுமந்துக்கிட்டு வீல்சேரோடு  மேலேறி போகணுமுன்னா முடியும் சமாச்சாரமா என்ன ?  'பரவாயில்லை நான்  மெதுவா நடந்துவரேன்'னு சொன்னால் கேட்டால்தானே ? முன்னே பின்னே தள்ளுவண்டி தள்ளின அனுபவம் இருக்கா என்ன? இதுக்குண்டான பணியாட்கள் இதுக்கான பயிற்சி எடுத்தவங்க இல்லையோ......

மெதுவாக 'மலையேற்றம்' முடிஞ்சு  மேலே வந்ததும்.... ட்ரான்ஸிட்  வழியிலே போறோம். அங்கே செக்யூரிட்டி செக் பண்ணறாங்க. நம்ம பைகள் கேபின் பேக் எல்லாம் எக்ஸ்ரே மெஷினுள்ளே போய் வந்தும், என்னோட கைப்பையை  இன்னொருக்கா ஸ்கேன் செய்யன்னு வாங்கிப்போனவர், அதை என்ன செய்யறார்னு தெரியலை. ஒரு காமணி போலக் காத்திருந்தும் பை வரலை.

 நானோ...மை ம கா ராஜன்லே வெண்ணிறஆடை மூர்த்தி போல..... 'என் பை , அதுலே பணம் இருக்கு'ன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன். ட்ரைவிங் லைஸன்ஸ், ஏடிஎம் , க்ரெடிட் கார்டுகள், கொஞ்சம்  கூடுதலாகவே சிங்கப்பூர், அஸ்ட்ராலியா,  யூ எஸ் டாலர்கள்னு இருக்கு.  நம்மவர் பையைத் தேடிக்கிட்டுப்போனா.... அநாதையா ஒரு மேஜை மேலே உக்கார்ந்துருக்கு. கொண்டுபோன ஆளைக் காணோம். இவர் எடுத்துக்கிட்டு வந்தார். அப்படியே வாங்கி மடியில் வச்சுக்கிட்டேன்.  திரும்பத் தள்ளல்.  அங்கிருந்து அடுத்த வாசலுக்குள் போனா எஸ்கலேட்டர்.  அடராமா.... லிஃப்ட் இருக்கான்னு தேடிக் கொஞ்சம் அலைஞ்சு,  இடம் கண்டுபிடிச்சு அதுலே கீழே போறோம். நாம் போக வேண்டிய கேட் எங்கேன்ற ஸைன் போர்டுகூட காணோம். ஒரு இடத்துலே சுவத்துக்குள் இருக்கும் மானிட்டரில் விவரம் கிடைச்சது.  

நம்மவர் ஒவ்வொரு கண்ணாடிக்கதவுகளைக் கடக்கும்போதும்  நேராப்போய்க் கண்ணாடியிலே முட்டிக்குவோமோன்னு  திகிலடிச்சுக் கிடக்கேன். வண்டிச்சக்கரம் , சூப்பர் மார்கெட் ட்ராலிபோல கண்டபடி சுத்துது.  இனியும் சும்மா இருந்தால் ஹார்ட் அட்டாக் கேரண்டீ ! 'போதும் நிறுத்துங்க'ன்னு இறங்கிட்டேன்.  மெல்ல மெல்ல நொண்டி நடக்கறதே தேவலை. 'இனிமே  பயணத்தில் வீல்ச்சேர் புக் பண்ணுங்க....  தெரியும் சேதி' ன்னு கருவினேன்........

ஒரு வழியா கேட்டாண்டை வந்து சேர்ந்தப்ப, ப்ளேனை விட்டு இறங்கி ஒரு மணி நேரம் ஆகி இருக்கு.  போர்டிங் இன்னும் ஒரு மணிநேரத்தில்.    நம்ம ஊர் மணி இப்போ ரெண்டு.  நம்மவர் பசி தாங்க மாட்டார்.  நான் போய் ஏதாவது வாங்கிவரேன்னு கிளம்பறார். இங்கே  கேட்டாண்டை ஏது  ஃபுட்கோர்ட்?  கடைகள் எல்லாம் வேறு ஏரியாவில்தானே ! அதெல்லாம் சரிப்படாதுன்னு  கைப்பையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை வெளியே எடுத்தேன்.  அப்பத்தான் கவனிக்கிறேன்.... பை திறந்தே கிடக்குன்னு !  ஸ்கேன் பண்ணப் பையைக் கொண்டுபோன ஆள்,  பணத்தை எடுத்துக்கிட்டுப் பையை வச்சுட்டுப்போயிட்டாரோ (னோ)  ?  அவசரமா உள்ளே இருக்கும் ரகசிய கம்பார்ட்மென்டைப் பார்த்தால் ஸிப் போட்டுத்தான் இருக்கு. உள்ளே நம்ம புதையல் ! அப்பாடா....

பிஸ்கெட்டைத் தின்னுட்டுத் தண்ணி குடிக்கலாமுன்னா.... செக்யூரிட்டி செக்கில் தண்ணிபாட்டிலைக் கடாசிட்டாங்களாம்.  போர்டிங் லேட்டுன்னு  இன்னும் அரைமணிக் கூறு  காத்திருக்கவேண்டியதாப் போச்சு. ' இந்த மெல்பர்னுக்கு வந்தே இருக்க வேணாம்' னு முகத்தை  மகிழ்ச்சியாக இருக்கும்படி வச்சுக்கிட்டு, மெல்ல சண்டையை ஆரம்பிச்சேன்.  "நீ பார்க்காத ஊராச்சேன்னு..........."    நம்மவர் இங்கே இருக்கும் அவுங்க கிளை  தொழிற்சாலைக்கு அடிக்கடி  போய் வருவார். தான் பெற்ற துன்பம், இவளும் பெறட்டுமுன்னு தோணியிருக்கு போல. 

இந்த மெல்பர்ன், எங்க கிறைஸ்ட்சர்ச்சின் ஏழு சகோதரிகளில் ஒன்னு. எங்க அக்கா. எல்லாம்  ஏறக்கொறைய ஒரே மாதிரி டிஸைன், காலநிலை, செடிகொடிகள்னு தோட்ட நகரம்!    ஏர்போர்ட் சமீபிக்கும் சமயம்  கீழே பார்க்கும்போது  எங்கூர் போலத்தான் நிலமே  தெரிஞ்சது. என்ன ஒன்னு.... இந்த நகரம் ரொம்பப் பெரூசு.  நம்மூரு ஜனத்தொகை கிட்டத்தட்ட  ஆறு  லக்ஷம். மெல்பர்னில்  அம்பத்திநாலு லக்ஷம். 



போர்டிங் நேரம் வந்துருச்சுன்னு கேட்டாண்டை போனால்.... நம்ம விவரம் ஒன்னும் இந்த க்வான்டாஸ் ஃப்ளைட் லிஸ்ட்டில் இல்லையாம்.  அடராமா.....  அங்கே இருந்த பணியாளரிடம்  வாக்குவாதம் பண்ணிக் கடைசியில் அவுங்க ஜெட் ஸ்டாரோடு பேசி (! ) நமக்கு இடம் தருவோம். ஆனால் மெல்பர்னில் இருந்து சிங்கை போக, ஏற்கெனவே  க்வாண்டாஸில் புக் பண்ணி இருக்கும் மக்களை நிரப்பிட்டுத்தான் நமக்குன்னு....... அடப்பாவிகளா..... ஜெட் ஸ்டாரில் பிஸினஸ் க்ளாஸ் கொடுத்துட்டு, இப்போ இதில் இடமே இல்லைன்னா என்ன அர்த்தம் ?  இதுலே வீல்சேர் பாஸஞ்ஜர்னு இவர் சொல்ல, வீல்சேர் எங்கேன்னு கேக்குது அந்தம்மா!  இடிக்குப்  பயந்து அதான் வழியிலே கடாசிட்டேனே!
ஒரு வழியா உள்ளே போனால்..... என் விண்டோ ஸீட் போயிந்தி.  லிஸ்ட்லே நம்ம பெயரே இல்லைன்னா.... நம்ம ஸீட் மட்டும் எப்படி அலாட் ஆகியிருக்கும் ?  ஐய்ல் ஸீட்தான்.  'இதுவாவது கிடைச்சதே,.....  எட்டு மணி நேரம்தான்.... பல்லைக்கடிச்சுக்குகோ' ன்றார் இவர். 

ஒரு மணி நேரத்தில்  சாப்பாட்டு வண்டி வருது. நம்மூர் மணி நாலு. கொலைப்பசி வேற....  காலை ஆறுமணிக்கு ரஸ்க்கும் டீயும்  ,சாப்பிட்ட  வயிறு சோத்தைக் கொண்டான்னுது.  எல்லோருக்கும் சாப்பாடு வந்துருச்சு. நமக்கு ?  அதான்  ப்ளேன் பாஸஞ்சர் லிஸ்ட்லே பெயரே இல்லையே.... அப்ப சாப்பாட்டு லிஸ்ட்லே  இருக்குமா ?  கொஞ்சம் தகராறு ஆனதும்,  வெஜிடேரியனான்னு முணுமுணுத்துக்கிட்டே போன  ஏர்ஹோஸ்டஸ், இருவது நிமிட் கழிச்சுக் கொண்டுவந்தது   மண்ணாட்டம் ரெண்டு ஸ்லைஸ் ப்ரெட்டும் கொஞ்சம் பட்டரும், தயிரும். எனக்கிருந்த எரிச்சலில் க்ளிக்கக்கூட இல்லை.  சீன்னு போச்சு.

கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் குடிச்சுட்டு உண்மையாவே பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்தேன்.  ஒருவழியா சிங்கையில் இறங்கும்போது  சிங்கை நேரம்  ஏழு.  இங்கே வீல்சேர் உதவியாளர்  ப்ளேன் வாசலுக்கு வந்து 'நடத்தி'க் கூப்ட்டுப்போனார். ஆள் இருக்காம், சேர் இல்லையாம்.  இனிமேல் இந்த அஸ்ட்ராலியன் ப்ளேன்லே போவே ? நெவர்.

லிஃப்ட்லே கீழே இமிக்ரேஷன் பகுதிக்குப்போய் ,  கடவுச்சீட்டில் முத்திரை குத்துதல் எல்லாம் ஆச்சு. உதவியாளர் கூடவே இருந்ததால் எல்லாம் நொடியில். செக்கின் பெட்டிக்காக நாம் பெல்ட்டாண்டை நிக்கறோம். 
  எல்லாப்பெட்டிகளும் போயிருச்சு. நம்ம பொட்டியைக் காணோம் !
 
தொடரும்........:-)

0 comments: