Sunday, November 23, 2025

சுடுகாட்டைச் சுத்திப்பார்க்கப் போனோம்

நம்மூரில் முதல்முறையா இப்படி ஒரு சேவை ஆரம்பிச்சுருக்காங்க. அது ஆச்சு ஒரு அஞ்சு மாசம்.  மூணு மாசத்துக்கு முன்னால் 'எந்தமாதிரி நடத்தறோம்முன்னு வந்து பாரு'ன்னு ஒரு அழைப்பு வந்தும்  வேறேதோ சில காரணங்களால் போக முடியலை.
இப்போ மறுபடியும் ஒன்னு வந்தது.  தண்ணீரில் ஈமச் சடங்கு !  நம்மூர்களில்  மரணித்தவர்களுக்கு  ஆத்தங்கரைப் பக்கம் தான் பொதுவாக எரியூட்டும் சடங்கு நடத்துவார்கள் ஒரு காலத்துலே . அப்ப அதுபோல ஒன்னுன்னு நினைச்சேன். ஏவான் நதி, இங்கே நம்மூருக்குள் சுத்திச்சுத்தி ஓடித்தான் கடலில் கலக்கிறது.  எந்தப்பகுதியில் இது நடக்குமாம்?     ஙே............

இன்றைக்கு 'ஓப்பன் டே' பகல் ஒன்னு முதல் நாலுவரை. அதுவும் நகரத்துக்குள் !!!!!

ஒரு ஒன்னரைபோலக் கிளம்பிப்போனோம்.    சாஸ்திர சம்ப்ரதாயங்கள் முடிஞ்சதும் சவப்பெட்டியைக் கடைசியாகக் கல்லறை கொண்டுபோகன்னே தனிப்பட்ட முறையில் வடிவமைச்ச காரும், அதுக்குப் பக்கத்திலேயே ஒரு 'மோட்டார் ஸைக்கிளில் சவப்பெட்டியை வச்சுக் கொண்டுபோகும் வசதியுள்ள ஒன்னும் முன்வாசலிலேயே வச்சுருந்தாங்க.
பள பளன்னு மின்னும் மோட்டர் ஸைக்கிள் மனசை இழுத்தது உண்மை.  எனக்கு இதுலேதான் போகணும் என்றதும், நம்மவர் சொன்னார், அது அன்றைய காலநிலையைப் பொறுத்ததுன்னு.....  'மழையோ, குளிரோ என்னை ஒன்னும் செய்யாது' ன்னு சொன்னேன்.

அங்கே இருந்தவரிடம், படம் எடுக்கலாமான்னதுக்கு, நான் நல்ல ப்ரிண்ட் தரேன்னு 'அந்தக் காருக்குள்' இருந்து எடுத்துக்  கொடுத்தார்.

வளாகத்தில் ஒரு கூடாரம் போட்டு, நாற்காலிகள்  போட்டு வச்சுருக்காங்க. ஒரு பக்கம் குடிதண்ணீர். அடுத்த பக்கம் குடைகள். ரெண்டுமே  தண்ணீருக்கு !
உள்ளே ஒரு வீடியோ காட்சி நடக்குதாம். அது முடிஞ்சதும்,  பார்வையாளர்கள் நகர்ந்ததும் நாம் போகலாமாம்.

நம்ம முறை வந்ததும் நாம் உள்ளே போனோம். சின்ன ஹாலாக இருக்கு.  திரைக்கு உயிர்வந்ததும் வாட்டர் க்ரிமேஷன் மெஷீன் எப்படி வேலை செய்யுதுன்னு...... வீட்டுக்கு வந்தவுடன் யூ ட்யூபில் தேடினால் இதேதான் இருக்கு. ஆனால் அவுங்க காமிச்சதில்,  இந்த கேர் டேக்கர்ஸ் கம்பெனி, முதலாளிகளும், மற்ற உயர் பதவி வகிப்பவர்களுமா இடைக்கிடையே  விவரங்கள் பேசியதில்  நாலு நிமிட் வீடியோவை காமணி நேரத்துக்கு நீட்டிட்டாங்க.


https://youtu.be/tecbXKsNJPs?si=gLBkHMcOHBgYM7-R


அப்புறம் கேள்வி- பதில். பலரும்  பலகேள்விகள் கேட்டாங்க. நம்மவர், எலும்புகளை என்ன செய்வீங்கன்னார்.  அதை ஒரு மெஷீனில் பவுடராக அரைச்சு, அதை அப்படியே அஸ்தியாகக் கேக்கறவங்களுக்கு அழகான ஜாடிகளிலும். நகையாகவோ, பொருளாகவோ செஞ்சு தரச்சொன்னால் அப்படியும் செய்து தருவாங்களாம்.(இதுக்கெல்லாம் தனிக் காசு) மகளுடைய செல்லம் சாமிகிட்டே போயிருச்சுன்னால்.... நாங்க பெட் க்ரிமெடேரியத்துக்குத்தான் அனுப்பறோம்.  மகள் விருப்பப்படி அந்த அஸ்தியை ஒரு மணியாகச் செஞ்சு கொடுக்கறாங்க.  அதை ஒரு ப்ரேஸ்லெட்டில் கோர்த்துப் போட்டுக்கறாள். இப்படி நாலு மணிகள்,  அவள் ககையில். எனக்குச் சங்கடமா இருக்குதான். என்ன செய்ய ? ஒரு செல்லமும் வேணாமுன்னால் கேட்டால்தானே ? ப்ச்....

அடுத்த அறைக்குக் கூட்டிப்போனாங்க. மெஷீன் அங்கெதான் இருக்கு !  ஒரு குறிப்பிட்ட உல்லன் துணி கொண்டு  பொதி போல  மூடி மெஷினுக்குள் அனுப்பறாங்க.  மெஷீனைத் திறந்து பார்த்தால் ஃப்ரன்ட் லோட் வாஷிங் மெஷீன் போல, ஆனால் நீளமா இருக்கு.  அங்கே சில க்ளிக்ஸ் ஆச்சு. எல்லாம் மூணரை முதல் அஞ்சு மணி நேரத்தில் முடிஞ்சுருமாம். இயற்கைக்குக் கேடு விளைவிக்காத வகையாம்.




அந்தத் தண்ணீரை என்ன செய்வீங்கன்னு நான் கேட்டேன்.  கழிவு நீருக்கான Drain வழியாகப் போயிருமாம்.  இதனால் மண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம்.  

அப்போ நாம்  வழி அனுப்பும் சவப்பெட்டி என்ன ஆகுமுன்னு இன்னொரு கேள்வி என்னாண்டை.  இங்கே சவப்பெட்டி பயங்கர விலை ! ஆறாயிரம் வரை போகுது.  ஆனால் இந்த முறையில் அடக்கம் என்றால் சவப்பெட்டியே தேவை இல்லையாம்.  இவுங்களே ஒரு சவபெட்டியை வாடகைக்குத் தர்றாங்களாம்.
என்ன ஒன்னு.....  அடக்கத்துக்கு முன் நடக்கும்  நிகழ்ச்சிக்கு உறவினர், நண்பர், தெரிஞ்சவங்கன்னு பலரும் கலந்துகொள்ள அமைத்த ஹால் அளவு ரொம்பச் சின்னதுன்னு சொன்னதற்கு, பெரிய கட்டடம் ஒன்னு கட்டிக்கிட்டு இருக்காங்களாம்.  எப்படி இருக்குமாம்?  இப்படி ! (கீழே: படம்)
தீ, தண்ணீர்  இவைகளில் எதெதுக்கு என்ன செலவுன்னு ஒரு பட்டியலும் அச்சடிச்சு வச்சுருந்தாங்க. நாலு வகை சடங்கு. அஞ்சுலே இருந்து பதினாலு வரை இருக்கு. அப்படியொன்னும் பெரிய வித்தியாசம் இருக்கறாப்போல இல்லை. ஒவ்வொன்னிலும் நானூறு, ஐநூறுன்னு தான் வித்தியாசம்.  இதுக்கு மெனெக்கெடுவானேன்னு எனக்குத் தோணுச்சு.

போகட்டும், புது வியாபாரம். எல்லா மக்களுக்கும் ஒருநாளில்லாட்டா ஒருநாள் தேவைப்படும் சமாச்சாரம் ! மார்கெட்டிங் செய்யறாங்க ! நடக்கட்டும் ! 

                                                  



0 comments: