Monday, November 17, 2025

பூர்வாங்கம்............ ( சிங்கை வரை..... பயணத்தொடர் பகுதி 1 )

பயணம்  என்றால்  எப்படி ஆரம்பிக்கும் ? வண்டியில் ஏறி உக்கார்ந்து கிளம்பிப்போனோம் என்றா ?  என்னைப்பொறுத்தவரை  பயணம் போகலாமென்ற நினைப்பு வரும்போதே பயணமும் ஆரம்பிச்சுருது ! 

 அப்படித்தான்...... கடந்த  ஜூலை மாதத்தில் ஓர்நாள்.....

" ஏம்மா.... சிங்கப்பூர் போயிட்டு வரலாமா ? "

ஆஹா..... பெருமாள் கூப்டுட்டார்.... "எப்போப் போறோம் ?"  

" செப்டம்பர் 24 !"

" அட.... உங்க பர்த்டே ஆச்சே.... புரட்டாசி எட்டு ! "

" அதுதான்...... போகலாமுன்னு நினைக்கிறேன்."

" கொஞ்சம் பொறுங்க. அப்போ எதாவது பண்டிகை வருதான்னு பார்த்துட்டுச் சொல்றேன்.

அட ராமா.....   செப்டம்பர் 22 நவராத்ரி ஆரம்பம். அப்போ கிளம்ப முடியாது..... பேசாம  அக்டோபர் 24ன்னு மாத்திக்கலாமா ?  தீபாவளியும்  வந்துரும். அதைக் கொண்டாடிட்டுக் கிளம்பிடலாம். ஓக்கேவா ? ஆமா.... எவ்ளோ நாள் ? "

" அதுவுஞ்சரி.  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்   ரெண்டு வாரம். "

" சிங்கப்பூர் போயே நிறைய நாளாயிருச்சு. கடந்த ரெண்டு மூணு பயணத்தில்  சிங்கைத் தங்கல் இல்லாமல்  நேராப் போய்க்கிட்டு இருக்கோம்.... ப்ச்....."

"  ஆங்..... சொல்ல மறந்துட்டேனே.... ஜெட் ஸ்டாரில் போறோம். "

"  ஐயோ..... ஜெட் ஸ்டாரா ? இங்கேயிருந்து சிங்கப்பூர் போறானா என்ன ?  புது ஸர்வீஸா ? "

" இல்லை. இங்கிருந்து மெல்பர்ன், அங்கிருந்து சிங்கப்பூர். "

" டைரக்டா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இருக்கே. எதுக்கு சுத்திக்கிட்டுப் போகணும் ? "
" கொஞ்சம் சீப்பா போட்டுருக்கான்.  மெல்பர்னில் இருந்து பிஸினஸ் கிளாஸ். " 

" ஏன் இங்கிருந்து பிஸினஸ் க்ளாஸில் போனால் என்ன ? "

" இங்கிருந்து அஸ்ட்ராலியா போகும் ஜெட்ஸ்டார் எதிலும்  பிஸினஸ் கிளாஸே கிடையாதுன்றதை மறந்துட்டேயா ? "

" அட ! ஆமாம்லே....   ஜனதா வண்டின்னு பெயர் கூட வச்சேனே..... சிட்னி போனப்ப....." 

" திரும்பி வரும்போது,  மெல்பர்ன் வரை ஜெட்ஸ்டார். பிஸினஸ் க்ளாஸ்.  மெல்பர்னில் இருந்து ஏர் நியூஸிலேண்ட்.    என்ன ஒன்னு இங்கிருந்து போகும்போது காலையில் சீக்கிரமாக் கிளம்பணும். ஒன்பதே காலுக்கு ஃப்ளைட். "

" அப்புறம் முக்கியமான ஒன்னு.... சிங்கப்பூரில் இருந்து ஒரு அஞ்சுநாள் மலேசியாவுக்கு க்ரூஸில் போயிட்டு வருவோம். "

மனசில்லா மனசோடு சரின்னு தலையாட்டிவச்சேன். ரெண்டு வாரம் பாத்திரம் தேய்க்கவேணாமுன்னு கோபால் நினைக்க, நான் ரெண்டு வாரம் என்ன சமைக்கலாமுன்னு மண்டையைக் குழப்பிக்க வேணாமுன்னு நினைச்சேன்.அவரவருக்கு அவரவர் பிரச்சனை !

நவராத்ரியும்  வந்தது. இந்த நவராத்ரி ஸ்பெஷல் நவராத்ரியா இருக்கப்போகுது.   பேரன், சின்னக்கொலு வைக்கப்போறான்.   நானும் சுமாராக் கொலு அலங்காரத்தை முடிச்சேன். யார்யாரை என்றைக்குக் கூப்பிட்டால் அவர்களுக்கு வசதி, யார்யார் வீட்டுலே சின்னப்பிள்ளைகள் இருக்காங்கன்னு  கணக்குப்போட்டு,   சின்னப்பசங்க எல்லாருக்கும்  சின்னச் சின்னப் பரிசுப்பொருட்கள் வாங்கி வச்சாச்.  சுண்டலுக்குத் தேவையான  பயறு வகைகள் , இதர  ஏற்பாடுகள் எல்லாமும் ஆச்சு. 

கால்வலி அதிகமா இருக்கறதால்  ரொம்பக் கஷ்டப்படுத்திக்காமத்தான் கொண்டாடணும்.

இப்படி நிகழ்ச்சிகள் வரிசைகட்டி நிக்கும்போது,  'நானும் வந்துட்டேன்' னு நம்மூர் செர்ரி ப்ளொஸம்  சீஸன்! மிஞ்சிப்போனால் ஒன்னரை வாரம்தான் பூக்கள் நிற்கும்.  அதுக்குள்ளே போய் வந்தால்தான் உண்டு. நம்ம யோகா குழு நண்பர்களுடன் போகலாம் என்றதால்  வீக்கெண்ட் இருந்தால்தான் சரிப்படும். கூடவே வெயிலும் இருக்கும் நாளாகவும் இருக்கவேணும். சனிக்கிழமை நம்ம ஹரே க்ருஷ்ணா கோவில் போய் வரும்போது, பார்த்தால் செர்ரிப்பூக்கள் 'கும்முன்னு'  பூத்து நிக்குது.  

பகல் ரெண்டரைக்கு மரத்தாண்டைன்னு மூணு நாட்களுக்கு முன்னேயே முடிவாச்  சொல்லி இருந்ததால்.... எல்லோரும் வந்ததும்  சின்ன உலாவும், படங்களாகவும் எடுத்துத் தள்ளினோம். அதான் ஆளாளுக்குக் கையில்  'செல்' இருக்குல்லே !  செர்ரிப்பூக்கள் விழாவுக்கு என் 'ட்ரெஸ் கோட்' எப்பவும் புடவைதான்....   இந்த வருஷம்.... பொன்னியின் செல்வன் .ஹிஹி.... 


இந்த முறை நவராத்ரி ஆரம்பத்தேதி, கொஞ்சம் குழப்பத்தில் இருக்கு. அமாவாசை திதி, சாயங்காலம் ஆரம்பிச்சு மறுநாள் வரை இருப்பதால் அதுக்கு அடுத்தநாள்தான்  கொலுவின் முதல்நாள்னு சொன்னாங்க.  இடும்பி வீட்டில்  ஞாயிறு, மஹாளைய அமாவாசைப் படையல் போட்டதால்,  மறுநாள் கொலுன்னு ஆரம்பிச்சாச்சு.  அமாவாசையன்னிக்கே நம்ம மரப்பாச்சிகளுக்குப் புது உடை போட்டுவிட்டு, அலங்காரமும் ஆச்சுதான்.  
பேரனின் கொலு! கோலமும் அவனே போட்டதுதான் ! 

முதல் நாள் ஓரளவு நல்லாத்தான் போச்சு. காலையில் பூஜையை முடிச்சுட்டு, டாக்டர் க்ளினிக் விஸிட்.  மருந்து மாத்திரைகளால் ஓடும் வாழ்க்கையில்,  மருந்துகள் எல்லாம் தீர்ந்து போச்சு. கட்டாயம் டாக்டர் செக்கப் போய், மருந்துச் சீட்டு வாங்கிக்கணும். ஒரு  மூணு மாசத்துக்குண்டானவைகளை எழுதி, நேரடியா நம்ம மருந்துக்கடைக்கு அனுப்பிருவாங்க.  கடைக்காரரும்  நமக்கான மருந்துகளை எடுத்து வச்சுட்டு, நமக்கு செல்லில் ஒரு  செய்தி அனுப்புவாங்க.  நாம் போய் வாங்கிக்கணும். ஒரு மாசத்துக்குண்டானவைகள் இருக்கும் பொதி தயாராக  இருக்கும்.  அதுக்கப்புறம் ஒவ்வொரு மாசமும் முடிய சிலநாட்கள் இருக்கும்போது, அடுத்த பொதி ரெடியா இருக்குன்னு சேதி வரும் . நாம் எங்கேயாவது பயணம் போறதா இருந்தால்...  விவரத்தைச் சொல்லி, மூணு மாச சப்ளையை மொத்தமாக  வாங்கிக்கலாம்.

அன்றைக்கு மாலையில், நெருங்கிய தோழி, இந்தியாவில் இருந்து வந்திருக்கும் தன் தங்கையுடன்  கொலு விஸிட் வர்றாங்க.  அடுத்த ரெண்டாம் நாள்  ஊர் திரும்பும் இந்தியப்பயணம் இருக்கு அவுங்களுக்கு !  

நவராத்திரி விழா, நம்ம புள்ளையார் கோவில்களிலும், சநாதன தர்ம சபாவிலும் உண்டு என்பதால், கூடுமானவரை நேரம் ஒதுக்கி, அங்கேயும் ஒரு நாளாவது போய் வரணும்.

தோழி வந்துட்டுப்போனதும், நம்ம வீட்டாண்டை இருக்கும் அன்பு விநாயகர் கோவிலுக்குப் போனோம்.  கலசத்தில் தேவியை ஆவாஹனம் செஞ்சு பூஜை. சுத்திவர நவசக்திகள்  சின்ன அளவில் மண் பொம்மைகள் அருமை ! 22 195308  22 191144 கோவில் உடைமையாளரை, நம்ம கொலுவுக்கு, வரச் சொல்லி  அழைப்புக் கொடுத்தேன்.   

ரெண்டாம் நாள், வீட்டுப்பூஜைகள் முடிச்சு, சாயங்காலமா நம்ம சநாதன் தரம் ப்ரதிநிதி சபா போய்வந்தோம்.  ஒன்பதுநாள் விழா. தேவி மஹாத்மியம் ப்ரவசனம். 

மூன்றாம் நாள், நம்மவரின் பிறந்தநாள் & உங்கள் துளசிதளத்தின்  பிறந்தநாள்.  தளத்தின் வயசு  21.

காலையில் பேரன் வந்தான்.  இன்று மகளுக்குக் கையில் ஒரு சிறு அறுவை சிகிச்சை.  மருமகன்,  மருத்துவமனைக்குக் கூப்பிட்டுப்போவார்.  குழந்தையை நாங்க பார்த்துக்கறதா ஏற்பாடு.  தாத்தாவின் பிறந்த நாளுக்கு, நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குப்போய் தரிசனம் செஞ்சுட்டு, அப்படியே  29 ஸ்வீட்ஸ் என்னும் இண்டியன் ரெஸ்ட்டாரண்டில் போய் சாப்பிட்டோம்.  அங்கேயே கொஞ்சம் இனிப்பும் காரமும் வாங்கினோம்.  
வருஷத்துக்கு ஒரு முறை  நம்ம வீட்டு முன்னறையில் சில  விநாடிகளே நடக்கும் அதிசயம் எதிர்பாராதவிதமாக இன்று நடந்தது !  சரவிளக்கில்  மாலைச்சூரியனின்  ரேகை பட்டு, ஒரு ஒளிச்சிதறல் ! 
சாயங்காலம், குழந்தையை மகள் வீட்டில்  கொண்டுபோய் விட்டதும், நாம் நம்ம யோகா வகுப்புக்குப் போனோம்.  வகுப்பு முடிஞ்சதும்,  மதியம் வாங்கிவந்த இனிப்பு, காரங்கள் விந்யோகம். இந்த வாரம், நம்ம குழுவில் இன்னும் சிலருக்குப் பிறந்தநாள் வந்துபோனதால் அவர்களும் பலகாரங்களைக் கொண்டு வந்திருந்தனர்.  வாரம் ஒருமுறைதான் வகுப்பு என்பதால்,  சொந்த விழாக்கள் எதுவாக இருந்தாலும், வகுப்பு நாளில் ஏதாவது கொண்டுவந்து பகிர்ந்துண்ணுவது வழக்கம். இதுக்கு நான்  Food Yoga ன்னு பெயர் வச்சுருக்கேன். 
படம் :  Birthday Babies :-)
வகுப்பு முடிஞ்சதும்  இன்றைக்கும் சநாதன் சபாவுக்குப் போனோம்.  நேற்றே நம்ம பண்டிட் கட்டாயம் வரணுமுன்னு  சொல்லி இருந்தார்.  வகுப்பு இருக்குன்னு சொன்னாலும், அது  முடிஞ்சதும் வாங்கன்னுட்டார். அங்கே போனால்....  நம்மவரின் பிறந்தநாளுக்கான விசேஷ அறிவிப்பும் வாழ்த்துகளும் !   சபாவின் அஃபிஸியல் பொட்டோக்ராஃபராக  என் தலையில் மகுடம் :-)

நம்ம சநாதன் தர்ம சபையில் எந்த விசேஷம் என்றாலும்  இரவு டின்னர் உண்டு.
நம்ம ஃபிஜி இந்தியர்கள்   எல்லோரும் வாலண்டியர்ஸ் தான். உடலுழைப்புக்கு அஞ்சாத வர்கள்.  சில சமயங்களில் பண்டிட் கூட வந்து விருந்து சமையல் செய்வார்.  வாரத்தில் செவ்வாய் & வெள்ளிகளில் ராமாயண வாசிப்பு & பூஜை.  ஆஞ்சுவுக்கு ஒரு தனிச் சந்நிதி.  மாஸ்டர்னு நாங்க கூப்பிடும்  அன்பர்,  ஆஞ்சுவின்  நித்ய பூஜைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.  தினமும் காலை பத்துமணிக்கு ஆஞ்சுவுக்குப் பூஜை !
தொடரும்............ :)

0 comments: