Wednesday, November 19, 2025

எதை விடுவது ? எதைச் சேர்ப்பது ? ( பயணத்தொடரில் இதுவுமா!!! )

அமாவாசை தினத்திலிருந்தே எனக்குக் கூடுதலாக இருமலும்,  அப்பப்பச் சின்னக் காய்ச்சலுமாக படுத்தல் ஆரம்பிச்சுருந்தது.....  நவராத்ரி முடிஞ்சதும், டாக்டரைப் போய்ப் பார்க்கணும்தான்.
நாலாம்நாள், இன்னொரு தோழி, பத்துவயசு மகனுடன் காலையில் வந்தாங்க.  சாயங்காலம் கொலுபார்க்கப்போகும் வழக்கம் எல்லாம் மாறிப்போச்சு, வெளிநாடு வந்தது முதல். அவரவருக்கு வசதியான நேரம், நமக்கும் பொருந்திவந்தால் போதும் என்ற அளவில்தான்  எல்லாமே !  இப்போ இங்கே ரெண்டுவாரம் பள்ளிக்கூட  விடுமுறை!  

இங்கே நாற்பது வாரம்தான் ஒரு கல்வி ஆண்டுக்கு ! ஜனவரி கடைசியிலோ, ஃபெப்ரவரி முதல் வாரமோ கல்வி ஆண்டு ஆரம்பிக்கும். பத்துவாரம் ஆனதும்  ரெண்டு வாரம் விடுமுறை, இப்படியே மூன்றுமுறை, நாலாம் முறை பத்துவாரம் ஆனதும்  கோடைவிடுமுறைன்னு ஆறு வாரங்கள்  நீண்ட விடுமுறை !

அன்றைக்கு சாயங்காலம், இன்னொரு தோழி வீட்டுக் கொலுவுக்குப் போயிருந்தோம்.  இவர்கள் கொடுத்த விவரத்தால்தான் நம்ம வீட்டுக்குக்  கொலுப்படிகள்  போனவருஷம் வந்தது.
அங்கிருந்து நம்ம புள்ளையார் கோவில்.  கோவிலிலும் சின்ன அளவில் கொலு வச்சுருக்கோம்.  அவரவர் ஒரு பொம்மை கொண்டு வந்தால் போதும்.  விழா முடிஞ்சதும் திருப்பி எடுத்துக்கலாம்.  நான் இந்த வருஷம் ஒன்னும் கொண்டு போகலை. ப்ச்.... நம்ம கோவில் பண்டிட்டுகளை நம்ம வீட்டுக்கொலுவுக்கு வரச் சொல்லி அழைச்சுட்டு வந்தோம். 
கோவில் எட்டரை வரை திறந்து வைக்கறதால்  ஒன்பது மணிக்குத்தான் அவர்கள் வரமுடியும்.  என்றைக்கு வர்றாங்கன்னு சேதி அனுப்புவாங்க.   

ஐந்தாம் நாள் , சின்ன அளவில் வீட்டுப்பூஜை.  ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்குப் போகணும்.  நம்ம சம்பந்தியம்மாவின்  தகப்பன், சாமிகிட்டே போயிட்டார். குடும்பத்தில் பெரியவர்.  அவர் போய் ரெண்டு வாரங்கள் ஆச்சுதான். வெளிநாடுகளில் இருந்து குடும்ப அங்கங்கள் வர்றாங்க என்பதால்  இன்றைக்குத்தான்  அடக்கம் செய்கிறார்கள்.  ரொம்பவே நல்லவர்.  நம்மிடம் ரொம்பப்பிரியமாக இருப்பார். 
இப்பதான் ஒரு நாலு மாசம் முன்பு அவருடைய பிறந்தநாள் விழாவுக்குப்போய் வந்தோம்.  ரொம்ப நல்ல மரணம். தூக்கத்தில் போயிட்டார் ! கொடுப்பினைதான்,  இல்லையோ !!!! 

  அன்று  மாலை  இன்னொரு தோழி வீட்டுக்கு....   மஞ்சள் குங்குமம்னு ஒரு அழைப்பு. கூடவே டின்னரும்.  நவராத்ரி சமயம் ஒருநாள் இப்படி! நமக்கு 30+ வருஷ நட்பு. அவுங்க வீட்டில் கொலு வைப்பதில்லை.

எங்க ஊரில்  வங்காள மக்கள் ரெண்டு சங்கங்கள் வச்சுருக்காங்க.  ஒன்னு..... இந்தியாவின் வங்காள மாநில  மக்கள்.  இன்னொரு பிரிவு.... கிழக்கு வங்காளம், ஈஸ்ட் பாகிஸ்தான், என்று இருந்தது போய்  இப்போ பங்களாதேஷ் மக்கள். (பங்களா தேஷ் இந்துக்கள் )  துர்க்கை வழிபாடு அவர்களுக்கு ரொம்பவே  விசேஷம் என்பதால்  நவராத்ரியில் துர்காஷ்டமியன்று பெரிய விழாவாக நடத்தறாங்க.  ரெண்டு சங்கங்களும் ஒரே நாளில், ஒரே நேரத்தில்  வெவ்வேறு இடங்களில் கொண்டாடறாங்க.  ரெண்டு சங்கங்களும் நமக்கு அழைப்பு அனுப்புவாங்க. அதுவும் பலமுறை நினைவூட்டல்கள் வேற !  நேரில் பார்க்கும்போதும்  'மறந்துறாதீங்க'ன்னு சொல்ல மறக்கமாட்டாங்க. துர்க்காஷ்டமி சனிக்கிழமைகளில் வந்தால் ரொம்ப மகிழ்ச்சிதான்.  எல்லா வருஷமும் இப்படி அமையாதே..... அதனால் நவராத்ரி நாட்களில்  வரும் சனிக்கிழமையே விழாநாள் ! இங்கே எந்த விழான்னாலும் வீக்கெண்ட்லேதான்.
இந்திய மக்கள் சங்கத்துக்கு இது பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டம். 

 இன்னொன்னு ஒரு நாலைஞ்சு வருஷமா நடக்குது.  காலை எட்டுமுதல் மாலை அஞ்சு வரை நடத்துவாங்க.  காலையில்  எட்டுமணிக்கு ஆரம்பிச்சு மதியம் ஒரு மணிவரை பலவிதமான பூஜைகள். அப்புறம் விருந்து.  விருந்துக்குப்பின் கலை நிகழ்ச்சிகள் நாலுமணி வரை. பிறகு மறுபடியும் பூஜை, ஆரத்தி இப்படி.  ரெண்டு சபாவிலும் எல்லாமே ஒரே மாதிரிதான். 

நாங்க பொதுவா காலை ஒரு பத்துமணிவாக்கில் இந்திய சங்கத்துலே கலந்துக்கிட்டு, விருந்து முடிஞ்சதும்,  பகல் ரெண்டு மணிக்கு பங்களா தேஷ் சங்கத்துக்குப் போயிட்டு, நாலு  மணிக்கு வீடு வந்து சேருவோம். இப்படித்தான் இதுவரை.  கலைநிகழ்ச்சிகளில்  நண்பர்களின் நடனங்கள், இங்கேயும் அங்கேயுமாத்தான் நடக்கும்.  ஒரு  பத்துப்பனிரெண்டு கிமீதூரம் இருக்கும் ரெண்டு இடங்களுக்கும்.  அன்று  நமக்கெல்லாம் ஒரே ஓட்டம்தான். யஹாங் ஸே  வஹாங். வஹாங் ஸே யஹாங். 
என்னுடைய உடல்நிலை காரணம்,   இந்த முறை இந்திய வங்காளிகள் சங்கத்துலே மட்டும் கலந்துகொண்டோம். பத்தாவது ஆண்டுக்காக,  தேவி உருவம் புதுசா வந்திறங்கியிருக்கு!  அஞ்சடி உயரம் .அட்டகாஸமான அழகு ! 

https://www.facebook.com/reel/817571154234662

பகல் விருந்தின்போதே, வெளியே திறந்த வெளி தோட்டத்துப் பகுதியில்  கலை நிகழ்ச்சிகள் இந்த முறை ! சீனர்களின்   ட்ரம்ஸ் , ஜப்பான் தேச மக்களின் ட்ரம்ஸ்,  எனக்குப் பிடிச்ச லயன் டான்ஸ் இப்படி அருமை !      

https://www.facebook.com/reel/809950651841139

துர்கை பூஜைக்கு சிங்கம் வந்தது ரொம்பப் பொருத்தம்தானே !!!!மற்ற நடனங்கள், பாடல்கள்  எல்லாம்  கட்டடத்தின் உள்ளேயே ! 


நவராத்ரி ஆறாம் நாள் , ஞாயிறு.  இன்று ஒரு தோழி வீட்டுக்குப் போயிருக்கணும்.  உடல்நிலை அவ்வளவாச் சரியில்லைன்னு..... ப்ச்.  மதியம் நம்ம யோகா குழுவினர் வர்றாங்க.  நம்ம நண்பர் செந்தில்தான் ( R S Foods ) உணவுப்பொறுப்பு.  இன்றைக்கு டிஃபன் ஐட்டங்களும்,  விஜயதசமி ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமப் பாராயணத்துக்கு டின்னரும் அவர்தான் சமையல்.  நம்ம வீட்டிலுமே, விஜயதசமி, சனிக்கிழமையாக அமைஞ்சால் அன்றே நடத்துவோம்.  இல்லைன்னா...... விஜயதசமியை  வீட்டுவரையில்  சில ப்ரஸாதங்களை செஞ்சு, நாங்க ரெண்டு பேருமாத்தான் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்  வாசிச்சுப் பூஜையை முடிப்போம்.   இந்த நாளைக் கடந்து  அடுத்துவரும் சனிக்கிழமை நண்பர்களோடு சேர்ந்து பாராயணம் செய்வதுதான் இதுவரை நடைமுறை !  மாலை நிகழ்ச்சி  என்பதால் விருந்துணவு ஏற்பாடு வெளியில் இருந்துதான்.  பிரஸாதங்கள் மட்டும் நானே செஞ்சுருவேன். அதென்ன கணக்கோ ஏழுவகை செஞ்சால்தான் எனக்குத் திருப்தி.  பெருமாளின் தயவால் கூடியவரை நல்லாவே அமைஞ்சுருது !  ஆரம்ப காலங்களில் முப்பது பேர் கூடும் நிகழ்ச்சியாக இருந்தது..... இப்பெல்லாம் ஒரு பதினைஞ்சு, இருபது  பேராகக் குறைஞ்சு போச்சு.  பலர் ஊரைவிட்டுப் போயிட்டாங்க.   எல்லோரும்  பழைய நண்பர்கள் குடும்பங்கள்தான். 


நம்ம யோகா குழுவில் எங்கள் இருவருடன், இன்னொரு தமிழர் ராகவன் (சென்னை) இருக்கார். எங்கள் மூவரைத்தவிர மற்றெல்லோரும் வட இந்திய  மக்கள்.  அவர்களுக்கெல்லாம் நம்ம இட்லி சாம்பார், வடை என்றால் உயிர் ! அதனால் இட்லி, வடை, சட்னி சாம்பார், நல்ல  மஸாலா டீ  ன்னு மெனு.  நண்பர்கள் பகல் ரெண்டு மணிக்கு வருகிறார்கள் என்பதால்,  செந்திலை மூணேகாலுக்குக் கொண்டு வரச் சொல்லியாச்சு.

நம்ம குழுவில் டோலக்  வாசிப்புடன் பஜனை பாடுகின்றவர் பலர் உண்டு என்பதால்....  அனைவரும் வந்தவுடன் கொலுவுக்கு ஆரத்தி எடுத்துட்டு, சில பஜனைப்பாடல்கள் பாடியதும்,  வெளியே குளிர் இல்லையென்றால் தோட்டத்தில் கர்பா ஆடுவதாக ஒரு சின்ன ஏற்பாடு. அன்றைக்குக் காலநிலை சரியில்லாததால்  கர்பாவை  விட்டுட்டோம்.



சிற்றுண்டிகளும்  சொன்ன நேரத்துக்கு வந்தாச்சு. குழுவினரும் சில பலகாரங்களைக் கொண்டு வந்துருந்தார்கள்.   எல்லோரும் சாப்பிடுவதில் பிஸியாக இருந்தப்பத்தான் கவனிக்கிறேன், நம்மவரைக் காணோம்.  தேடிப்போய்ப் பார்த்தால்  போர்வை போத்திக்கொண்டு படுக்கையில் இருக்கார். 

உடம்பு சரியில்லையோன்னு தொட்டுப்பார்த்தால்  காய்ச்சல்.  கைகால்கள் எல்லாம் நடுங்குது ! மருத்துவத்துறையினர்  மூவர் நம்ம குழுவில் இருப்பதால்  உடனே  சின்னதா செக்கப். என்னாண்டை தெர்மாமீட்டர், ஸ்டெத், பி பி   மானிட்டர், ஆக்ஸிமீட்டர், பீக் ஃப்ளோ ன்னு  கிராமப்புறத்தில்  ஒரு சின்ன க்ளினிக்  வச்சுக்கத் தேவையான  மருத்துவ உபகரணங்கள் இருப்பது நல்லதாப் போச்சு.(என் அம்மாவின் நினைவுக்காக வாங்கியவை)   ரெண்டு பனடால் மாத்திரைகளையும் சூடாக் கொஞ்சம் டீயும் குடிச்சதும்  கொஞ்சம்  பரவாயில்லை. தூங்கட்டும்னு விட்டுட்டு,  குழுவைக் கவனிக்க வந்தேன்.  குழு லேடீஸ் எல்லோரும்  சேர்ந்து,  ஒருவருக்கொருவர் மஞ்சள் குங்குமம் எல்லாம் கொடுத்துக் கவனிச்சுக்கிட்டாங்க. குழுன்னு சொல்றேனே தவிர, இது ஒரு குடும்பம்தான். யோகா ஃபேமிலி !

பாவம், நம்ம செந்திலே எல்லோருக்கும் விளம்பிட்டு, நமக்கும் கொஞ்சம் தனியா எடுத்துவச்சுட்டு, பாத்திரங்களைச் சுத்தப்படுத்தினார். 


எல்லோரும் கிளம்பிப்போகும்போது மணி ஆறரை !  நடனப்பள்ளி நடத்தும் இன்னொரு தோழியின் சலங்கைப்பூஜை நிகழ்ச்சிக்குப் போக வேண்டிய நாம்,  நம்மவரின் உடல்நிலை காரணம் போகலை.  தகவல் அனுப்பினேன்.

தொடரும்........... :-)

0 comments: