Monday, November 24, 2025

நாமொன்று நினைக்க............( பயணத்தொடரில் இதையும் சேர்க்கத்தான் வேணும்..... )

எனக்கும் உடம்பு படுத்தல் அதிகமாக இருக்கு. பகலெல்லாம் சுமாராக இருந்தாலும்,  ராத்ரி நேரத்துலே மட்டும் பயங்கர இருமலும், அப்பப்போ சிறு காய்ச்சலும், உடல் சோர்வுமாக , நம்ம கால்வலிக்குக் கூட்டுச் சேர்ந்துருக்காங்க. தூக்கம் என்பதே இல்லாமல் போயிருக்கு. 
நான் ஏற்கெனவே நினைச்சபடி எதுவும்  சரியா அமையலை. கொலுவுக்குக் கூப்பிட  நினைச்ச தோழிகள் பலருக்கு அழைப்பு அனுப்பவேயில்லை. வர்ற சனிக்கிழமை நடத்த நினைச்சுருந்த  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயண நிகழ்ச்சியைக்கூட தாற்காலிகமாத் தள்ளி வைக்கவேண்டியதா ஆச்சு. ப்ச்.... 

'மெனு எல்லாம் அப்படியே இருக்கட்டும்.  கொஞ்சம் உடம்பு சரியானதும் ஒரு சனிக்கிழமை வச்சுக்கலாமு'ன்னு நம்ம செந்திலிடம் சொல்லியாச்சு.  மார்கழி சரியாக இருக்கும்தானே ? 

விஜயதசமியன்னிக்குக் காலையில் எழுந்துக்க முடியாம  ஒரே உடல்வலி.  நாளும் கிழமையுமா இப்படிக்கிடக்க மனசு ஒப்புதா ?  சட்னு கடமைகளை முடிச்சு, பாலும் பழங்களுமே நிவேத்யம் என்று நம்ம பெருமாளிடம் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு,  சூர்யகாயத்ரியின் 'ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒலிக்க விட்டேன். நம்மவரே ஸ்வாமி விளக்கேற்றி ஆரத்தியெடுத்தார்.  பெரிய எழுத்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை வச்சு வாசிக்கவும் செய்தார். 

நம்ம டாக்டரின் க்ளினிக்கில்  அன்றைக்கு அப்பாய்ன்ட்மென்ட் இல்லைன்னுட்டு ,  மூணு நாள் கழிச்சுத் திங்கள் கிழமைக்குக் கொடுத்தாங்க. நடுவிலே வீகெண்ட் வேற வந்துருதே!

இங்கெல்லாம் நினைச்சா உடனே டாக்டரைப் பார்க்க முடியாது. அவசரமுன்னா  After hour  surgeryன்னு  24 மணிநேர ஹாஸ்பிடல் ஒன்னு இருக்கு. அங்கே போகணும்.  அங்கேயும் போய் உக்கார்ந்து தேவுடு காக்கணும்.  இல்லைன்னா நம்ம ஊர் ஆஸ்பத்ரி ( இங்கே தனியார் மருத்துவனைகள் கிடையாது) அவசர சிகிச்சைப்பிரிவுக்குப் போகணும். அங்கேயும் தேவுடேதான். சில சமயம்  மூணு மணிநேரம் கூட ஆகலாம். என்ன ஒன்னு..... ஆம்புலன்ஸ்லே போனால்.... உடனே பார்த்து சிகிச்சை ஆரம்பிச்சுருவாங்க.  அதுக்காக...... இருமல், உடம்பு வலி, காய்ச்சலுக்கு ஆம்புலன்ஸைக் கூப்பிடறது நல்லாவா இருக்கு ?  ஒரு நியாயம் வேணாம் ?

அடுத்த வந்த நாட்கள் கொஞ்சம் பிரச்சனையாத்தான் போச்சு.  எதையும் சாப்பிடவே பிடிக்கலை.  கஷ்டப்பட்டுக் கொஞ்சம் சாப்பிட்டாலும் ஒரே டேஷ். காய்ச்சலும் விடலை. பயங்கரமான இருமலும்..... கூட.   இதுலே   கபம் வேற கட்டிகட்டியா.....   மகள் வந்து பார்த்துட்டு, இருமல் ஸிரப்பும், அப்படியே  டீஹைட்ரேஷன் ஆகிடபோகுதேன்னு Hydralyte (Electrolyte Powder )வாங்கி வந்து கொடுத்தாள்.   

விஷயம் தெரிஞ்சதும் நம்ம யோகா ஃபேமிலியினர் சாப்பாடு செஞ்சு கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாங்க.

திங்கக்கிழமைக் காலை பத்துமணிக்கு டாக்டரைப் பார்த்தோம். செக்கப் செஞ்சுட்டு, நம்மை பப்ளிக் ஹாஸ்பிடலுக்கு உடனே அனுப்ப ஏற்பாடு செஞ்சாங்க.  ஹாஸ்பிடலுக்கு ஃபோன் செஞ்சு நம்மை அனுப்பறதா விவரங்கள் எல்லாம் சொல்லிட்டாங்க.  மகளைக் கூப்பிட்டுச் சொன்னதும்.....  உடனே வந்து எங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போனாள்.

இங்கே ஹாஸ்பிடல் பார்க்கிங் இன்னொரு பிரச்சனை.    வளாகத்தின் வெளியே சாலையையொட்டி ஒரு பத்து வண்டிகள்வரை நிறுத்தக் கார்பார்க்கிங் இருக்கு. பார்க்கிங் மீட்டரில் அப்பப்பக் காசைக் கட்டிட்டு வரணும்.  ஆனாலும் அங்கெ இடம் கிடைப்பது அபூர்வம்தான்.   ஹாஸ்பிடலில் இருந்து ஒரு ரெண்டரைக்கிமீ தூரத்தில்  ஹாஸ்பிடல் பார்க்கிங் ஏரியா  தனியாக வச்சுருக்காங்க.  அங்கே நிறுத்திட்டு,  அங்கேயிருந்து ஒரு ஷட்டில் சர்வீஸில்  ஆஸ்பத்ரிக்கு வரலாம்.  அதே போல் ஆஸ்பத்ரியிலிருந்து  பார்க்கிங் ஏரியாவுக்கும் வரலாம்.  இலவச சேவைதான் இந்த ஷட்டில் சர்வீஸஸுக்கு மட்டும்.  நம்ம வண்டியைப் பார்க்கிங்கில் நிறுத்தச் சார்ஜ் உண்டு.   ஆஸ்பத்ரி  ஊழியர்களும் இங்கே வண்டியை நிறுத்திட்டு, ஷட்டிலில் தான் வேலைக்கு வர்றாங்க. 

நாங்களும்  சிட்டிக்கவுன்ஸிலிடம் ஹாஸ்பிடல் பார்க்கிங் , ஹாஸ்பிடலுக்குப் பக்கத்துலேயே இருக்கணுமுன்னு போராடிக்கிட்டு இருக்கோம். இப்போ புதுசா ஒரு அடுக்குமாடிப் பார்க்கிங் கட்டடம்  ஆஸ்பத்ரிக்குப் பக்கத்துத் தெருவில் கட்டிவிட்டுருக்காங்க. அங்கிருந்து போக்குவரத்து அதிகம் இருக்கும் மெயின்ரோடு வழியா  ஒரு அரைக்கிமீ நடந்துதான் ஆஸ்பத்ரிக்கு வரணும்.  நோயாளியை எப்படி அரைக் கிமீ நடத்திக்கூப்பிட்டுப்போக?  ப்ச்... ஸல்யம்.....
மேலே படம்:  சிகப்புக்குள் இருப்பது பார்க்கிங் கட்டடம். ஹாஸ்பிடல் மாடியில் இருந்து ஒரு க்ளிக்.

அவசர சிகிச்சைக்கு இப்பப் புதுசா தனிக்கட்டடம் கட்டியிருக்காங்க. அதிலிருந்து மெயின் ஆஸ்பத்திரியின் மற்ற பகுதிகளுக்கு போய் வர வழிகளும் பேஸ்மென்ட்டில் அமைச்சுருக்காங்க.  நாங்கள் போனதும்.... எங்களைத் தனியேக் கூட்டிப்போய் வேறொரு இடத்தில் வச்சு, ஒரு செக்கப் ஆச்சு.  எமெர்ஜென்ஸியில் இருக்கும் ஒரு வார்டில் பெட் அலாட் செஞ்சு என்னை அங்கே கொண்டு போயிட்டாங்க.  மகளும் கூடவே இருக்காள். நடுவில் ஒருமுறை பார்க்கிங் மீட்டருக்கு ஃபீட் பண்ண போயிட்டு வந்தாள்.

டாக்டர்ஸ் குழு வந்து விசாரிச்சு ஒவ்வொரு டெஸ்ட்டா எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.  பகல் ரெண்டுமணி போல ஆச்சேன்னு, நம்மவரையும் மகளையும் சாப்பிடப்போகச் சொன்னேன்.  தகப்பனும் மகளுமாத் திரும்பிப்போய்,  டாக்டர் க்ளினிக்கில் விட்டுட்டு வந்த நம்ம காரை எடுக்கத்  தகப்பனை இறக்கி விட்டுட்டுப்  போனாளாம் மகள்.

கொஞ்ச நேரத்தில் நம்மவர், திரும்ப வந்துட்டார். ஷட்டிலில் வந்தாராம். அதுக்குள்ளே எனக்கு ஈஸிஜி, ப்ளட் டெஸ்ட், எக்ஸ்ரே எல்லாமும் ஆச்சு.   என் வழக்கமான மருந்து மாத்திரைகளோடு,  இன்னும் ரெண்டு ஊசி மருந்தும் ஆச்சு. ஏற்கெனவே ட்ரிப் ஏத்தறதுக்கு புறங்கை நரம்பில்  குத்திவச்சுட்டதால்.... எல்லாம் அதுபாட்டுக்கு அது..... ரத்தம்  மட்டும் இன்னும் ரெண்டுமுறை எடுத்துக்கிட்டுப்போனாங்க.  ப்ளட் கல்ச்சர்க்கு வேணுமாம்.  ப்ளட் ஷுகர் டெஸ்ட்டும் ஆச்சு. BP செக்கப் அப்பப்ப.... அதுபாட்டுக்கு எகிறிக்கிடக்கு !    மணிக்கொருமுறை டாக்டர்ஸ் வந்து போறாங்க.  

நம்ம யோகா குடும்பத்துக்குச் சேதி  தெரிஞ்சதும்  விஸிட் வர ஆரம்பிச்சாங்க. ப்ளாக் கேட்ஸ் போல எனக்குக் காவல் இருக்கு  யோகா குடும்பம் . . கையில் ஏகே 47 மட்டும் மிஸ்ஸிங். அப்பப்பப் படங்கள் எடுத்து 'யோகா குடும்ப வாட்ஸப்'பில் பகிர்தல் வேற.... உடனே   வராதவர்கள் ஆறுதல் சொல்லி, விரைவில் நலம் வேண்டி பதில்.  இப்படி  ஜாலியாப் பொழுது போகுது ! 


இங்கே  ஹாஸ்பிடலில் சாயங்காலம் ஆறுமணிக்கெல்லாம் டின்னர்  கொடுத்துருவாங்க.  எனக்கு ஒன்னும் வேண்டியிருக்கலைன்னு திருப்பி அனுப்பினேன். 

ராத்ரி ஒன்பதுவரை இங்கேயே இருந்தாங்க, கோபாலும்  குடும்ப நண்பர்களும்.  திடீர்னு இங்கே வந்ததால்  எந்த முன்னேற்பாடும் செஞ்சுக்கலை.  மேலும்  என்னை, ஆஸ்பத்ரியில்  வேற வார்டுக்கு மாத்தறதாச் சொல்லி இருந்தாங்க. எங்கேன்னு தெரியாததால் அங்கே போனதும்தான் வீட்டுக்கு செய்தி அனுப்பணும். 

ராத்திரி பதினொருமணிக்கு மெயின் பில்டிங்க் கொண்டுபோய்  நம்ம உடல்நிலைக்கான வார்டில்( a medical ward specializing in respiratory conditions)இருக்கும் நர்ஸ் இன் சார்ஜிடம்  ஒப்படைச்சாங்க. ஸ்வந்தம் நாடு ஆலப்புழையாம்.  நன்னாயி.   படுக்கை ரெடியாக இருந்தது.  அடுத்த அஞ்சாவது நிமிட்,  டாக்டர் வந்து பார்த்தார்.  இன்னும் லேப் டெஸ்ட் ரிப்போர்ட் வரலை.  கொஞ்சநேரத்தில் வந்துரும்னு சொல்லிப்போனார். 

சரியான  தூக்கமே இல்லை.  ரெண்டு மணிக்கொருமுறை  Drip மாத்த,  BP  எடுக்க, ப்ளட் ஷுகர் பார்க்கன்னு நர்ஸுகள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்துக்கிட்டே இருக்காங்க. இதுக்கிடையில் டாக்டர் வந்து,  வேற மருந்துகளைக் கொடுக்கப்போறோம்.  நிமோனியான்னு ரிஸல்ட் வந்துருச்சுன்னார். 

காலை ஒரு நாலரை மணிபோல  வீட்டுக்கு செய்தி அனுப்பினேன்.  ஹாஸ்பிடல் வைஃபை நல்லாவே வேலை செய்யுது.  வார்டு நம்பர் விவரம் அனுப்புனதோடு  பல் விளக்கத் தேவையானவை, மாத்து உடுப்பு எல்லாம்  காலையில் கொண்டுவரச் சொன்னேன். 
 
காஃபி, டீ க்கு தனி ஊழியர்கள் ஒரு நாளைக்கு நாலைஞ்சு முறை  வந்து விசாரிச்சு நமக்கு வேண்டியதுபோல் கலந்து கொடுத்துட்டுப் போறாங்க. ஒரே ஒரு கஷ்டம்....  காய்ச்சாத பால்.  தனியாக ஒரு பெரிய அறையில் காஃபி, டீ நாமே கலந்து குடிக்கும் வகையில்  வச்சுருக்காங்க.  எப்ப வேணுமோ அப்போ அங்கே போய் குடிச்சுக்கலாம். அங்கே ஒரு  பெரிய டிவியும்  சோஃபாக்களும் இருக்கு.  படுக்கை போரடிச்சசால் கொஞ்சநேரம் அங்கே. இப்படி எல்லா வார்டுகளிலும் வச்சுருக்காங்க.   
காலை ப்ரேக்ஃபாஸ்ட் வந்துச்சு.  கூடவே டாக்டர்ஸ் குழுவும். கொஞ்ச நேரத்தில் நம்மவரும் வந்தார். காலைக்கடமைகளை முடிச்சுட்டுத் தயிர் மட்டும் சாப்பிட்டேன்.  நமக்கும் விஸிட்டர்ஸ் வர ஆரம்பிச்சாங்க.  நம்ம யோகா ஃபேமிலியில்  சிலர் இங்கே வெவ்வேற துறைகளில் இருக்காங்க. சின்னச்சின்ன ப்ரேக் எடுத்துக்கிட்டு வந்து பார்த்துட்டுப் போறாங்க.
இங்கே ஆஸ்பத்ரியிலும் நிறைய ஃபிஜி இந்தியர்கள்  வேலை செய்யறாங்க.  நமக்கு நல்ல பரிச்சயமுள்ள பலரும் கூட. வேறேதோ காரணத்துக்காக  வந்த  ஒருவர் நம்மைப்பார்த்துப் பேசிட்டுப்போனதும் இன்னும் சிலர் வந்துட்டுப்போனாங்க.  ட்ரிப் ஏறிக்கிட்டு இருப்பதால்  எங்கேயும் எழுந்து போக முடியாமல் படுக்கையே கதி.

நம்மவரை  லஞ்சுக்கு போகச் சொல்லி அனுப்பிய கொஞ்ச நேரத்தில் நமக்கும் லஞ்ச் வந்துருச்சு.  ஒன்னும் சரியில்லைன்னு  சூப் மட்டும் குடிச்சேன்.  கொஞ்ச நேரத்தில் ஒரு டீயும்.  ரெண்டுமூணு மணி நேரமா ஜூரம் இல்லை. 
சீனியர் டாக்டர் வந்து பார்த்துட்டு,  காலையில் மாற்றிக்கொடுத்த மருந்து வேலை செய்யுதுன்னார். நிமோனியா கன்ஃபர்ம்டு.  எப்போ வீட்டுக்குப் போகலாமுன்னு நான் கேட்டதுக்கு, இன்றைக்கே கூடப் போயிடலாம்.  மருந்துச் சீட்டை, உங்க மருந்துக்கடைக்கு அனுப்பறோம். நீங்க  அதை  ஆறுநாள் தொடர்ந்து எடுத்துக்கணும். வீட்டிலும் கம்ப்ளீட் ரெஸ்ட்லே இருக்கணும்.   எட்டு வாரத்தில் இன்னொரு எக்ஸ்ரே எடுக்கணும்.  அந்த விவரத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.  இதுக்கிடையில்  உடல்நிலை சீராகலைன்னா உடனே நாம் தகவல் அனுப்பணும்னார்.  
செல்ஃபோன் எதுக்கு இருக்கு ?  உடனே நம்மவருக்கு செய்தி அனுப்புனதோடு, யோகா குடும்பத்துக்கும், 'வீட்டுக்கு விட்டுட்டாங்க.  விஸிட்டர்ஸ் வீட்டுக்கு வந்தால் போதும்'னு  தகவல் கொடுத்தேன்.   அப்படியும் அங்கே வேலை செய்யும் இருவர்(யோகா குடும்பம்தான்)வந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.
நம்மவர் வந்ததும்  டிஸ்சார்ஜ் லெட்டர் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வர்ற வழியிலேயே ,   மருந்து ரெடியா இருக்குன்னு பார்மஸியிலிருந்து செய்தி.  அதையும் வாங்கிக்கிட்டு வீடு வந்தாச்சு.

  இங்கே நியூஸியில் நம்ம GP யோ, ஹாஸ்பிடல்  டாக்டர்ஸோ நமக்கு எழுதிக்கொடுக்கும் மருந்துக்கள் எல்லாமே  நமக்கான மருந்துக்கடைகளில் இப்பெல்லாம்  இலவசம்தான்.  சில வருஷங்களுக்கு முன்புவரை,  எவ்வளோ விலை இருக்கும் மருந்துன்னாலும் ஒரு மருந்துக்கு அஞ்சு டாலர்னு  நாம்  கட்டணும்.

குளிச்சுட்டு சாமி விளக்கேத்தி வச்சேன். நல்லவேளை இதெல்லாம் நவராத்ரி சமயம் நடத்தாமல் காப்பாத்திட்ட பெருமாளே................  ஒன்பதுநாளும் ரொம்பச் சின்ன அளவிலாவது கொண்டாட வச்சேயே அதுக்கே நன்றி ! 

நம்ம செந்திலும் அவர் மனைவியுமா  டின்னர் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாங்க. பீன்ஸ் பொரியலும், பருப்பும்.  ரொம்பப் பசின்னு நல்லாவே சாப்பிட்டேன்.   

0 comments: