Wednesday, November 26, 2025

இந்தப் பயணத்தொடரில் 'பயணம்' இப்பதான் ஆரம்பிச்சுருக்கு !


நல்லா ரெஸ்ட் எடுக்கணும் என்றதால் மறுநாள் எங்கள் யோகா வகுப்புக்குப் போகலை. போனவாரமும் போகலை. நம்மவரையாவது போயிட்டு வாங்கன்னா...... வேணாமுன்னுட்டார்.  வரலைன்னு சேதி அனுப்பினோம்.
மகளும் பேரனும் வந்தாங்க. வாரம் ஒருநாள்  செவ்வாய்களில் தாத்தா வீடு. நேத்து ஆஸ்பத்ரி வாஸம் என்பதால்         செவ்வாய்க்குப் பதிலாக புதன். குழந்தை வந்தவுடன் வீடு  கலகலப்பா மாறிடுது இல்லே !
ரெஸ்ட் எடுக்கணுமுன்னு சொல்லிக்கிட்டே நாட்கள்  பறந்து போச்சு.  ச்சும்மாவே இருக்க முடியுதா என்ன ?   ' சும்மா இரு, சொல் அற' இது ரெண்டும் நமக்கில்லை.

ஏற்கெனவே புக் செஞ்சு வச்ச பயணத்துக்கு நாள் சமீபிக்குது. போகலாமா வேணாமான்னு புது யோசனை.  பயணத்தைத் தள்ளிப்போடலாமான்னு விசாரிச்சால்..... முடியாதாம். சரி. போகட்டும்  கட்டுன தொகையையாவது கொஞ்சம் கழிச்சுட்டுத் திருப்பிக் கொடுப்பானான்னா.... அதும் இல்லையாம்.  

அடராமா........... நஷ்டப்பட இஷ்டமில்லை. இன்னும் எட்டு நாள் இருக்கே பார்க்கலாம்......  கடைசி நாளில் முடிவெடுத்தால் ஆச்சு.  இப்படி உடம்புக்கு வந்துபடுத்திருச்சே.....

டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து நல்லாவே வேலை செஞ்சிருக்கு.  மொத்தம் முப்பத்தியாறு மாத்திரைகள். நாளுக்கு ஆறுன்னு  ஆறு நாளில் முடிஞ்சது. இந்த மருந்து இந்தியத் தயாரிப்பு !  மருத்துவ நண்பர் சொல்றார்.... "இப்பெல்லாம் நிறைய மருந்துகள் இந்தியாவிலே இருந்துதான் இறக்குமதி. Cheap & Best !"  அட!!!!

இதுக்கு நடுவில் தீபாவளி வந்துக்கிட்டு இருக்கு . கொஞ்சம் அலங்காரப்பொருட்கள் வாங்கிச் சின்னதா ஒரு அலங்காரம்.  சீனர்கள் நமக்காகச் செஞ்சு அனுப்பறாங்க.  வீட்டுக் கண்ணாடி ஜன்னலில் அங்கங்கே ஒட்டினால் போதாதா ? என்ன ஒன்னு...... UV Safetyன்னு    கண்ணாடிகளையெல்லாம்  Tinted Glass ஆகப் போட்டுருப்பதால் பளிச்னு தெரியலை. அதனால் வெளிச்சுவர்களிலும்  சில !

புரட்டாசி முடியப்போகுதே, முக்கியமான ஒன்னு விட்டுப்போச்சேன்னு நினைவுக்கு வந்துச்சு.  மாமியார் ஞாபகம்தான். சனிக்கிழமையாத்தான் இருக்கணுமா? பெருமாளுக்கு எல்லா நாளும் நல்லநாள்தானேன்னு அந்த திங்கக்கிழமை கொஞ்சமா மாவிளக்குப் போட்டேன். உடம்புக்கு ஆகாதுன்னு  பச்சை மாவில் எப்போதும் செய்யறதில்லை. வறுத்த மாவுதான்.
நம்ம  ஃபிஜி க்ளப்பில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா ஹவன் நடக்கப்போகுது.  சநாதன தர்ம சபையில், பொதுவா எல்லா முக்கிய பண்டிகைகளிலும்  முதலில் ஹோமம் செய்வதுதான் வழக்கம். அந்த பூஜைக்குப் போய் வந்தோம். எல்லோரும் நான் ரொம்ப இளைச்சுப்போனதாச் சொன்னாங்களேன்னு வீட்டுக்கு வந்து எடை பார்த்தால்..... ஏழு கிலோ எடை குறைஞ்சுருக்கேன்! கெட்டதில் நல்லது நடந்துருக்கு !
தீபாவளி தினத்தில்  நம்ம வீட்டில் சுமாராக ஒரு கொண்டாட்டம்.   முதல்நாளே நம்ம பசங்க ஜன்னு & அன்னுவுக்கு புது உடுப்புகளைப் போட்டுவிட்டாச்சு.  அழகிகள் !   மகனாகிய நண்பரும் மருமகளுமா இந்த வருஷ ஆரம்பத்தில் நாம்  போன இந்தியப்பயணத்தில்  எனக்கொரு புடவை எடுத்துக் கொடுத்தாங்க. அதுதான் எனக்கு இந்த வருஷத் தீபாவளிக்கு. அசல் காஞ்சிபுரம் !  வைர ஊசி!  என்னுடைய  பதிவுகளில் போடும் படங்களில் தேடி, என்னிடம் இல்லாத நிறம் எதுன்னு பார்த்து எடுத்தாங்களாம்.  இந்த ஸ்ரத்தை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு ! 

குழந்தைக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடநாள்.  வாரம் ரெண்டு நாட்கள் பள்ளிக்கூடம் போறான்.  காலை பத்துமுதல்  மாலை அஞ்சு மணிவரை.  ஆறு மணிக்கு மகள் குடும்பம் வந்தவுடன்  ஆரத்தியெடுத்துட்டு, மருமகனுக்கு  ரொம்பவும் பிடிச்ச  தஹிபுச்காவ் செய்ய  எல்லாம் தயாராக வச்சுருந்தேன்.  கூடவே பூஜையில் வச்சுருந்த  இனிப்புகளும்.   ஏற்கெனவே வீட்டில் இருந்த கொஞ்சம் பட்டாஸுகள்.  போனவருஷத்துச் சரக்கு !


குழந்தைக்கு ஒரு புத்தகமும், ஒரு  கூடாரமும், கொஞ்சம் கைநீட்டமும்!   கம்பிமத்தாப்புக் கொளுத்தியதில் கடைசிப் பகுதியில் இருக்கும் வெறுங்கம்பியில் கையைச் சுட்டுக்கிட்டான். லேசான சூடுதான். ஆனால் அழுகை பலம்!  ப்ளாஸ்டர் போட்டதும் அழுகை சட்னு நின்னது. குடும்ப வழக்கம் இல்லையோ ? இதெல்லாம் இல்லாம என்ன தீபாவளி ?
அவுங்க கிளம்பிப்போனதும் நாங்கள் நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போனோம்.  தீபாவளி ஸ்பெஷல் பூஜை. அருமை ! நல்ல கூட்டம்!!!!

மறுநாள் தாத்தா வீட்டு தினம் என்பதால்  காலையிலேயே வந்து மிச்சம் மீதிக் கொண்டாட்டத்தை முடிச்சான்.  கைவிரலில் புது ப்ளாஸ்டராம். பெருமையாக் காமிச்சான். 
பக்கத்துத் தெருவில் வசிக்கும்  ஃபிஜித் தோழி வீட்டிலிருந்து பலகாரங்கள்  வந்தது.  ஃபிஜி மக்கள்  ரொம்பப்பெரிய அளவில் 'திவாலி' கொண்டாடுவாங்க. ஒரு வாரத்துக்கு முன்னாலேயே  அடுப்புலே எண்ணெய்ச்சட்டி ஏறிடும்.  வீடு முழுசும்  அலங்கார விளக்குகள் வேற ! இது க்றிஸ்மஸ் சீஸன் என்பதால்  கடைகளில் சரம் சரமா, கலர்க்கலரா விளக்குகள் கிடைக்கும்.  அழைப்பு இருந்தாலும் இந்த வருஷம் என்னால் போக முடியலை.  

இந்த  திவாலிப் பண்டிகையை மட்டும் நியூஸியின் எல்லாப்பகுதிகளிலும் கொண்டாடறாங்க. நம்ம பார்லிமென்ட்டில் கூட !  பிரதமர், மேயர்கள் எல்லாம் வாழ்த்துச் செய்தி அனுப்பறாங்க. பெரிய வியாபார நிறுவனங்களும் வங்கிகளும் கூட ! இதில்லாம தீபாவளிக்கு ஒரு மாசம் இருக்கும்போதே இங்கிருக்கும் ஏராளமான சங்கங்களில் / க்ளப்புகளிலும் கொண்டாட்டம் ஆரம்பிச்சுருது. எதுவாக இருந்தாலும் வீக் எண்ட் வேணுமே.... அதனால் சனிதோறும் திவாலிதான். தீபாவளி முடிஞ்சபிறகும் அடுத்துவரும் மாசம் முழுசுமே கொண்டாட்டம்தான். எத்தனை க்ளப் இருக்கு!  ஒரு முறை பதிமூணு முறை தீபாவளி விழாவில் கலந்துகொண்டோம். இதோ இப்ப எங்க நகருக்கு அடுத்த நகரில் (வேற மாவட்டம்)  தீபாவளி, நவம்பர் ஒன்னாம் தேதி வச்சுருக்காங்க.  நாம் பயணம் போவது உறுதியானால்....   தீபாவளி விழாவில் கலந்துக்க முடியாது. நம்ம கோபால் ஆரம்பிச்சு வச்ச இண்டியன் ஸோஷியல் & கல்ச்சுரல் க்ளப்பில் அக்டோபர்  கடைசி  வாரம்  சனிக்கிழமைதான் தீபாவளி டே !  உண்மை தீபாவளி  அக்டோபர்/ நவம்பரில் எப்போ வந்தாலும்  இந்த  நாளில் மாற்றமே இருக்காது !   ஏன் ? எப்படி ?


நியூஸியில் தொழிலாளர் தினம் னு கொண்டாட ஆரம்பிச்சது 1890 ஆண்டில்தான். வேலைநேரம்னு இல்லாம ஒவ்வொரு முதலாளிகளும் கண்டபடி வேலை வாங்கிக்கிட்டு இருந்த காலத்தில் தினமும் எட்டுமணி நேரம்தான் வேலை வாங்கணும்னு சட்டம் கொண்டு வந்தது அப்போதான். மேலதிகமா வேலை செய்தால் ஓவர்டைம்  சார்ஜ் தரணுமுன்னும்  முடிவெடுத்தாங்க. பத்து வருஷம் கழிச்சு,  இந்த தினத்துக்கு அரசு விடுமுறை கொடுக்கலாமுன்னு முடிவு செஞ்சப்ப அக்டோபர் மாசம் நாலாம் வாரத்தின் திங்கள்னு ஆச்சு. எப்படியும்  சனி ஞாயிறு விடுமுறை என்பதால் திங்களோடு சேர்த்து லாங் வீக்கெண்ட்!!  குளிர்காலம் முடிஞ்சு கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆகியிருக்கும் என்பதால் எல்லோரும் உற்சாகமாகத்தான் கலந்துக்குவாங்க.   வேறெங்கேயும் பயணம் போகாமல் இருந்தால் நிறுவனர் என்ற வகையில் தவறாமல் நாமும் கலந்துக்குவோம். இந்தமுறை  பயணம் வாய்த்துள்ளது.

இந்த வார புதன் கிழமை நம்ம யோகா வகுப்பில் திவாலி விழா!   வழக்கம்போல எல்லோரும் பலகாரங்கள் கொண்டு போயிருந்தோம். வழக்கம்போல அலங்காரப்பொருட்கள் என் வகையில் ! விளக்கேற்றி வச்சு விழாவை ஆரம்பிச்சு வச்சேன். 

மறுநாள் வியாழனன்று, பேரன் பள்ளிக்கூடத்தில் திவாலி கொண்டாட்டம்.  பண்டிகையைப்பற்றி ஒரு சின்ன ஸ்பீச் கொடுக்கணும் நான்.  ராமன் மனைவியை ராவணன் தூக்கிப் போயிட்டான்.  அவளைத் திரும்பக் கூட்டிவர  ராமன் போய் ராவணனுடன் போர் செய்து, அவனைக்கொன்னுட்டு, மனைவியுடன் நாடு திரும்பும் தினம், அமாவாசை என்பதால்  வழியெல்லாம் இருட்டாக இருக்கு. அதனால் தீபங்களை ஏற்றி வச்சு ராமனை வரவேற்கிறாங்கன்னு சொல்லமுடியுமா ? குழந்தைகள் எல்லாம்  மூணு மாசத்திலிருந்து  நாலுவயசு வரையாச்சே !  Wife was stolen !!!  ஹாஹா...  இப்பெல்லாம் வைஃப் என்றுகூடச் சொல்றதில்லை. பார்ட்னர் !  நிறைய சீனியர்ஸ்க்கு இந்த சொல் பிடிக்கலைன்னு சொல்றாங்க.  நாங்கெல்லாம் முறைப்படி சர்ச்சில் கல்யாணம் செஞ்சுகிட்டவங்க. இந்த பார்ட்னர் என்ற சொல் என்னவோ போல இருக்குன்றது அவுங்க எண்ணம்.

தீபாவளி அலங்காரம், தீபாவளி வாழ்த்து அட்டை செய்யறது, இந்திய உடையான  வெரி லாங் பீஸ் ஆஃப் க்ளாத், எப்படிக் கட்டிக்குவாங்கன்னு சின்ன சின்ன ஆக்டிவிட்டியாக பிள்ளைகளுக்குக் காண்பிக்கலாமுன்னு மகளுடன் சேர்ந்து முடிவு செஞ்சேன்.  கடைசியில் ஏதாவது இனிப்பு கொடுக்கலாமான்னு  மகளைக்கேட்டால் கூடாதுன்னாள். சில பிள்ளைகளுக்கு ஏதேனும் அலர்ஜி இருக்கலாம்.  அதனால் நோ மிட்டாய், சாக்லெட், & இண்டியன் ஸ்வீட்ஸ்.  நல்லது. சரி. ஆனால்  வேறேதாவது சின்னப்பரிசுப்பொருட்கள் கொடுக்கலாமுன்னு நினைச்சேன்.  கடைக்குப்போய்த் தேடினால், எல்லாம் ஸான்ட்டா, ரெயின்டீர்னு போட்ட சின்னச் சின்னப் பரிசுகள்தான்.  கொஞ்சம் யோசிச்சதில் ஸ்டிக்கர் மாதிரி ஒன்னு கொடுக்கலாமுன்னு.... தேங்க் யூ ன்னு ஒன்னு கிடைச்சது.  

கடைசியில்  வியாழனன்று கால நிலை சரியில்லாமல்  கொடுங்காற்றும் பயங்கர மழையுமா இருக்கப்போகுதுன்னு வெதர் ரிப்போர்ட் வந்ததால்..... பள்ளிக்கூடங்களுக்கெல்லாம்  விடுமுறைன்னு அறிவிச்சுட்டாங்க.

பயணம் போகலாமா வேண்டாமான்னு  இருந்த குழப்பம்  முடிவுக்கு வந்தது. . பெருமாள் வா வான்னு கூப்பிடறார்.  வெள்ளிக்கிழமை காலை ஒரு நாலரைக்கு எழுந்து கடமைகளை முடிச்சுட்டு,  ஏழரைக்கெல்லாம் கிளம்பிடணும். வியாழன் ராத்ரி, பொட்டிகட்டி வச்சாச். 

வியாழன் ராத்ரி பனிரெண்டரை மணிக்கு, ஜெட் ஸ்டார்காரன் , ஃபோன் பண்ணறான். மெல்பர்ன்லெ இருந்து சிங்கை போகும் விமானத்தில்  எஞ்சின் கோளாறாம்.  பழுது பார்த்துக்கிட்டு இருக்காங்களாம்.  ஆனாலும் சரியாகும்னு சொல்ல முடியாது. ரிஸ்க்  வேணாமுன்னு, நம்மை க்வான்டாஸ் விமானத்துலே அனுப்புவாங்களாம்.  அதே நேரத்தில்தான் போய்ச் சேரும் என்பதால் ப்ரச்சனை இல்லையாம். பாதித்தூக்கத்தில் எழுப்புனதில் நல்ல தூக்கம் போச். ப்ச்.... 


காலையில்   காஃபி & ரஸ்க்னு  ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு,  சரியான நேரத்துக்கு வந்த டாக்ஸியில்  கிளம்பிப் போயாச்சு.  கிளம்பறதுக்கு முன்னால் சின்னச்சின்னதா எத்தனை வேலைகள்.....  செடிகளை மகள் பார்த்துக்கறேன்னு சொன்னது நிம்மதி. 

இந்தப் பயணத்தொடரில் 'பயணம்' இப்பதான் ஆரம்பிச்சுருக்கு !


0 comments: