Friday, June 21, 2024

தீவுத் திடல் மாதிரி இருக்குல்லே ? (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 5 )

இங்கெ இருக்கும்  லோகல் டூர் கம்பெனிகள் ஒன்னுவிடாமக் கூட்டிப்போய்க் காமிக்கும் குட்டித்தீவு இந்த  க்ரான்வில் தீவு.  எப்படிப் பார்த்தாலும்  கூடிவந்தால் நாப்பது ஏக்கர் பரப்பு. சரியான அளவைத் தெரிஞ்சுக்க வலை வீசுனால் ஆளாளுக்கு 35, 37, 38, 39 னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.  
முந்தி தொழிற்பேட்டையா இருந்த இடத்தை,  நகரின் வீட்டுவசதி வாரியம் வாங்கிப்போட்டுருச்சு.  இப்போ பெரிய மார்கெட், தியேட்டர், சின்னச் சின்ன கொல்லன் பட்டறைகள், தொழில்கள்.....   துடைப்பக்கட்டை கம்பெனி கூட இருக்குன்னா பாருங்க !

'ஒரு நாள் முழுக்க வேணுமுன்னாலும் சுத்திப்பார்க்க  ஏராளமான சமாச்சாரம் இருக்கு இங்கே !  ஆனால் உங்களுக்கு ஒரு  ஒன்னேகால் மணி நேரம் தர்றேன். சுத்திப்பார்த்துட்டு, சாப்டவேணுமுன்னாலும்  சாப்ட்டுவாங்க. எக்கச்சக்கமா ரெஸ்ட்டாரண்டுகள் இருக்கு'ன்னு சொல்லி நம்மை இறக்கிவிட்டார் கைடு. 
வண்டியை இங்கே நிறுத்த முடியாது. வெளியில்  போய் நிறுத்திட்டு அப்பாலிக்கா வரேன்னார். பார்க்கிங் சார்ஜ் ரொம்ப அதிகமோ என்னவோ.....  
இறக்கிவிட்ட இடத்தை அடையாளம் வச்சுக்கணும் இல்லே ? க்ளிக் க்ளிக்....



பழைய ஃபேக்டரி  ஷெட்களையே  கடைகளா மாத்திட்டாங்க போல.....   அதுபாட்டுக்கு நீள நீளமா  கிடக்கு.

ட்ரங்கு பொட்டிமேலே உக்கார்ந்துருக்கும் சூனியக்காரியும் அவள் பூனையும் சூப்பர், விலையைத்தவிர !


கண்ணாடிப்பொருட்கள் அழகோ அழகு. க்ளிக்  க்ளிக் போதும்.

ஓசைப்படாமல் ரகசிய சேதி சொல்லும் கற்கள் ! டக்னு பார்த்தால்  சிவலிங்கம்னு தோணுச்சே..... எனக்கு மட்டும்தானா ? 








வேடிக்கை பார்த்துக்கிட்டே நடந்து போறோம்.  பப்ளிக் மார்கெட்னு ஒன்னு.
சட்னு உள்ளே நுழைஞ்சால்....மீன்களாக் கொட்டி  வச்சுருக்காங்க. சால்மன் மீன்கள்தான் இந்தப் பக்கம் ஸ்பெஷலாம் ! இருக்கட்டும். 

அடுத்த பகுதியில் பழங்கள் !  கண் முதலில் போனது மாம்பழத்தாண்டைதான் ! ஹைய்யோ.... எத்தனை வகை!!!!  ஆனாலும் நம்மூர் சக்கரைக்கட்டி பார்த்துட்டு விடமுடியுதா ?  விலைதான் கொஞ்சம் பயங்கரம் ! ஷுகர்  மேங்கோ ! பவுண்டு (வெறும் 454 கிராம். அரைக்கிலோகூட இல்லை ) பனிரெண்டு டாலர் !  இதுக்குமேல் வரிகள் தனியாகச் சேர்க்கிறாங்க.

கனடியன் காசு எங்க காசைவிட கொஞ்சூண்டு பலமா இருக்கு.  ஒரு டாலருக்கு, நாங்க 1.20 $ கொடுக்கணும். இன்னொன்ணு.... இவுங்க டாலர் நோட்டுகளும், எங்க டாலர் நோட்டுகளும் ஒரே மாதிரி கலரில்தான்.  எங்களைப்போலவே அவுங்களும்  மாட்சிமைதாங்கிய ப்ரிட்டிஷ் அரசாட்சியைச் சேர்ந்தவர்களே !  (ஆஸியிலும் எல்லாம் இப்படியே! நாங்க மூவரும் ஒரு வகையில் ஒன்னு ! நாட்டின் தலைமை கவர்னர் ஜெனெரல்தான் ! )

அடுத்த ஜன்மம் இல்லை என்பதால் துணிஞ்சு ரெண்டே ரெண்டு குட்டி மாம்பழம் வாங்கினோம். மற்றபடி பழங்கள் வகை எல்லாம் தனித்தனியாகவும், கலந்துகட்டியுமா   டப்பாக்களில்  கூறு கட்டி வச்சுருக்காங்க.  நம்ம ஊரில் இருப்பவைகள்தானேன்னு அலட்சியமாக் கடந்து போனோம்.

பூக்களும் செடிகளும் விற்பனைக்கு ! நம்ம சக்கூலண்ட்,  கல் குடைஞ்ச கிண்ணத்தில் ! விலையைப் பார்த்தீங்களோ !!!  நம்மாண்டை இருக்கு,  அந்தக் குழிச்ச கல்லைத்தவிர ! 

சந்தடிசாக்குலே.... 'நம் வீட்டு சக்கூலண்டுகளுக்கு எல்லாம் என்ன விலை வருமுன்னு கணக்குப்போட்டுப் பாருங்க. அப்பதான் நம்ம செடிகளின் அருமை உங்களுக்குத் தெரியும்' நம்மவராண்டை சொன்னேன். பொழுதன்னிக்கும் எதுக்குமா செடிம்பார்.

புளியம்பழம்............ ச்ச்ச்ச்.....
பாம்புத்தோல் பழம்...... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... (பாலிப் பயணத்துலே தின்னு பார்த்தாச் !)
சொடக்குத்தக்காளி...........  நம்ம வீட்டுலே செடி இருக்கு:-)
மளிகைசாமான்.............
இவ்ளோ கடைகள் இருக்கே.... நமக்கொரு சின்னக் கத்தி வாங்கிக்கலாமுன்னு பார்த்தா..... அதைத்தவிர வேறென்னன்னவோ இருக்கு.






மற்ற கட்டடங்களில்  வழக்கமான கடைகள்தான்.  நேரம் ஆகிருச்சுன்னு நம்மை இறக்குன இடத்துக்குப் போனால் பஸ் இன்னும் வரலை. 

 கொஞ்சதூரத்துலே   ஒரு ரெஸ்ட்டாரண்ட். 'Dockside' னு பெயர்.  ஃபயர்பிட்டில் தீ !  அங்கெபோய் உக்கார்ந்தோம். குளிருக்கு இதம்!
நம்ம பஸ் மக்களும் திரும்பி வந்துக்கிட்டு இருந்தாங்க. பஸ்ஸும் வந்துருச்சு. ச்சலோ !    

தொடரும்........... :-)



Wednesday, June 19, 2024

வான்கூவரைக் கொஞ்சம் சுத்திப்பார்க்கலாமா........ (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 4 )

சீக்கிரமா எழுந்து சூர்யோதயம் பார்க்கக் காத்திருந்தேன். ஒரே மேகமூட்டம்..... நம்ம பால்கனி வேற எதிர்த்திசையில் இருக்கு போல....  போக்குவரத்து இல்லாத தெருக்கள் அமைதி காத்து இருந்ததும் அழகு!  அக்கம்பக்கத்துக் கட்டடங்கள் ஆரவாரமில்லாமல் கப்சுப். எதிர்க் கட்டடத்தில் ஒரு ஜன்னலில் மட்டும் விளக்கொளி. ராத்திரியே கவனிச்சேன்.  இருட்டில் ஒத்தைக் கண்ணன் !

குளிச்சுமுடிச்சுத் தயாராகி, அந்தக் காஃபியைப் போட்டு,  க்ராய்சென்டை எடுத்தால்.... பிறைநிலா முழுநிலாவா இருக்கு :-) இருபத்தியஞ்சு வருஷங்களுக்கு முன், நாம்  உலகை இடம் வந்தபோது,  யூரோப்பில் எல்லா இடங்களிலும் இந்த க்ராய்சென்டையே தின்னு தின்னு போரடிச்சு நின்னது நினைவுக்கு வந்தது.  ஹிஸ்டரி  மட்டுமா ரிப்பீட்ஸ்.....?.

ப்ளாஸ்டிக் கத்தியால் தர்பூசனியைத் துண்டு போட்டேன். கில்லாடி ஹிஹி.... பாதிப்பழத்தை மீண்டும்  ஃப்ரிஜ்ஜில்  வச்சேன். சரியா  ஒன்பதரைக்கு கீழே போயாச்சு. லிஃப்ட்க்குப் பக்கம் இருக்கும் பெரிய கண்ணாடியில் வெதர் ரிப்போர்ட்! எனக்குப் பிடிச்சது.  Cloudy !

லாபியில் இருந்த பெண், நம்மைக் கண்டுபிடிச்சுக் கூட்டிப்போனாங்க.  Landsea Tours Driver !  ஏற்கெனவே  வண்டியில் இருந்த  சிலருக்கு  ' ஹை'  சொல்லிட்டு உக்கார்ந்தோம்.  ஒரு அஞ்சாறு நிமிட் பயணத்தில்  வேறொரு பஸ்ஸுக்கு மாறினோம்.  இப்ப அநேகமா  பஸ் நிறைஞ்சுருக்கு ! எங்கூர் கணக்கில் நல்ல கூட்டம் ! ட்ரைவர் & கைடு , வேறொரு நபர்.


வான்கூவர்  நகரத்துக்கும் எங்க ஊருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, ரெண்டும் கார்டன் ஸிட்டிஸ் என்பதும், எப்பவும்  இருக்கும் டூரிஸ்ட்டுகள் கூட்டமும் தான்.  மத்தபடி நிலப்பரப்பும், ஜனத்தொகையும் எங்கூரைப்போல் அஞ்சு மடங்கு! 
நகரத்துக்குள் ஒரு சின்ன சுத்து சுத்திட்டு,  ஸ்டேன்லி பார்க் பக்கமாக் கூட்டிப்போறாங்க. இந்தப் பார்க் நகரத்தைவிட்டுத்தள்ளி , கடலுக்குள் ஒரு தீவு போல, கொஞ்சமா  நிலத்தோடு ஒட்டிகிட்டு இருக்கு.  405 ஹெக்டேர் பரப்பு. 
நம்மூர் ஹேக்ளி பார்க் ஊருக்கு நடுவிலே 200 ஹெக்டேர். இதுலே க்ரிக்கெட்  விளையாட ஒரு பகுதியைப் பத்து வருஷத்தில் திருப்பித்தர்றோமுன்னு சொல்லிக் கடன்வாங்கி  ஹேக்ளி ஓவல்னு  பெயர் வச்சுட்டாங்க. ஒண்டவந்த பிடாரி..... பழமொழி நினைவுக்கு வருதா ? 


இந்த ஸ்டேன்லி பார்க்கின்  இன்னொரு ஓரமா  ஒரு பகுதியில் ஆதிகுடிகள் செஞ்சு வச்சக் 'கதைசொல்லும் கம்பங்கள்' நிறைய இருக்கு. Stanley Park Totem Poles. கம்பங்களா இவை? எல்லாம்  பெருசுபெருசாத் தூண்கள்  சைஸில்தான் ! முதல் நிறுத்தம் அங்கே.  காமணி நேரம் கொடுத்தாங்க, சுத்திப்பார்த்துட்டு வர.  




உள்ளெயே ஒரு கடையும் இருக்கு,  நினைவுப் பரிசுகள் வாங்கிக்க.  ஆனால் வாங்கற விலையிலா  இருக்கு எல்லாம் ?  நாம் எடுக்கும் படங்களே நம் நினைவுக்குன்னு இருந்துட்டேன்.

இதே போலத் தூண்கள் நம்ம ஊரிலும் இருக்கே ! மவொரியர்களின்  சமூகக்கூடமான மராயிலும் இருக்குதான்.  என்ன ஒன்னு... இங்கே நல்லாவே  கலர்ஃபுல்லா இருக்கு.  எண்ணிக்கையிலும் இங்கே ஒரே இடத்தில் நிறையதான் !  (என்னடா இது? நம்மூரைப்போலவே இருக்கே.... இதுக்கா இவ்ளோ காசு செலவு பண்ணி வந்துருக்கோம்னு தோணுச்சுதான்.  ஆனால் இதுக்காக வரலைதானே ? நம் இலக்கு வேறு இல்லையோ?) 

கடலில் தீவு போல இருப்பதால் சுத்திவரத் தண்ணீர்தானே.... இங்கிருந்து பார்த்தால் வான்கூவர்  ஹார்பர் தெரியுது. படத்துலே பாருங்க ...வெள்ளைப் பாய்மரங்களா இருக்கே... அதுதான் ஹார்பர் ! அங்கெ இருந்து ரொம்பப் பக்கம் நாம் இருக்கும் ஹொட்டேல்.

(  ஒன்னு சொல்லிக்கறேன். இந்த ஊரைச் சுத்திப்பார்க்கும்போது, எங்கூரோடு  ஒப்பீடு செஞ்சுக்கிட்டே போறதைத் தடுக்க முடியலை.   பாழும் மனசு, சொன்ன பேச்சைக் கேக்கறதில்லைப்பா ! மன்னிச்சூ.... )

எல்லாக் கம்பெனி டூர் பஸ்களும் இதே இடத்துக்கு வந்துருது. நம்மாட்கள் இன்னும் திரும்பலைன்னு ..  வாங்கறாங்க போல    .  எதிர்ப்புறம் போனோம். 
சின்னச் சின்ன பீச்சுகள், பொழுதுபோக்கு சமாச்சாரங்கள், சிலைகள்னு  தண்ணீரை ஒட்டியே.... இருப்பதும் நல்லாத்தான் இருக்கு!  Totem Poles  வாசலுக்கு எதிர்ப்புறம்  கடல் பார்க்க வந்தால் அங்கே ஒரு சிலை,  ஓடும் போஸில் !  Harry Jerome (the fastest man of Earth ) நூறு கஜம், நூறு மீட்டர் இப்படி ஓடியவர். வேகமா ஓடியவர்களில்,  வயசானவர், இளைஞர்னு மூணுமுறை மூணு வகையில் ஜெயிச்சுருக்கார். 

 He won a bronze medal at the 1964 Olympics in Tokyo and set a total of seven world records over the course of his career. In 1971, Jerome was awarded the Order of Canada - one of Canada's highest symbols of national recognition. In that same year, he was named Athlete of the Century by the province of British Columbia. In 1975, he founded the Premier's Sports Awards Program, which is still being used by school districts in the province.

 அப்ப நம்ம உஸைன் போல்ட் வேக ஓட்ட வீரர் இல்லையான்னு பார்த்தால்....  ஹேரி ஜெரோமி காலத்தில்  உஸைன் போல்ட் பிறக்கவே இல்லை !!!

இந்தாண்டை பார்த்தால் ஒரு கம்பிப்பாலம்  கண்ணில் பட்டது. லயன்ஸ் கேட் ப்ரிட்ஜ். இது சினிமாவில் நடிச்சுருக்காம். கைடு புகழாரம் சூட்டினார்.
போற வழியில்  கடலோரத்தில் இருக்கும் பாறையில் ஒரு பொண்ணு உக்கார்ந்துருக்கு !  கடல்கன்னியோன்னு பார்த்தால் வால் இல்லை.  ஈர உடைப்பெண் என்று பெயராம்.  Girl in Wetsuit .  1972 இல்  இங்கே வந்து உக்கார்ந்தவளுக்கு, இத்தனை வருஷத்தில் ஈரம் காய்ஞ்சுருக்காதோ ? 

இன்னொரு இடத்தில் ஒரு பத்துப்பேர் நின்னு சிரிச்சுக்கிட்டே இருக்காங்க.  (பத்துன்றேனே  ...உண்மையில் பதிநாலு பேராம் ! ) A-maze-ing Laughter Sculpture என்று பெயர். Yue Minjun என்ற சீனச் சிற்பி 2009 இல் வடித்த சிலைகள். தாற்காலிகமாக இங்கே வச்சுருந்தாராம்.  உள்ளூர் செல்வந்தர்களின் நன்கொடையால்,  சிலைகளை வாங்கி நிரந்தரமா அங்கே வச்சுருக்காங்க.  
கொஞ்சதூரத்துலேயே இப்படி ஒரு சிற்பம் !   ஆர்க்டிக் பகுதியில்  வாழும் Inuit மக்கள், அவர்கள் இன மக்களுக்குச்  'சேதி சொல்லும்' வகையாம். இங்கே உணவு  கிடைக்கும், இது ஆபத்து இருக்கும் வழி  இப்படி.....    சொல்லுக்குப் பதிலாகக் கல்லில்.... .  எஸ்கிமோன்னு நாம் கேள்விப்பட்டிருக்கோம் பாருங்க. அந்த இன மக்கள்தானாம். இப்பெல்லாம் எஸ்கிமோ என்ற சொல் அருகிப்போய், Inuit  என்று குறிப்பிடுவதைத்தான் விரும்பறாங்களாம் ! 

வண்டியில் போகும்போதே க்ளிக்கின படங்கள்தான் மேலே இருக்கும் மூன்றும்  .

இங்கிருந்து கிளம்பிக் கடலையொட்டிய பாதையிலேயே போய், இந்த 'லயன்ஸ் ப்ரிட்ஜில்' போறோம். சிங்கப்பாலம் என்ற பெயர் வச்சதாலோ என்னமோ பாலத்தின் ரெண்டு பக்கமும் ஒரு சிங்கச்சிலை வச்சுருக்காங்க.    உண்மையில் அவுங்க சிங்கமுன்னு குறிப்பிட்டது  பாலத்திலிருந்து   தூரத்தில் தெரியும்  உயரமான மலைச்சிகரத்தைத்தான் !  இந்தப் பாலத்துக்கும் ஒரு சரித்திரம் இருக்கு !



படங்கள்:  கூகுளாண்டவர்

1927 ஆம் ஆண்டு,  குறுகலாப் போகும் கடலுக்குக் குறுக்கே ஒரு பாலம் கட்டும் எண்ணம் வந்து அதை அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கறாங்க. அப்படியெல்லாம் சட்னு அனுமதி கிடைச்சுருமா.....  வேணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணவே நேரமிலாமல் போச்சு போல.  வோட்டுக்கு விட்டுப் பொதுமக்களிடம்   கேக்கறதுதான்..... கிடப்புலே போட்டுட்டாங்க....
Alfred James Towle Taylor  என்ற எஞ்சிநீயர் இதுலே ரொம்ப ஆர்வம் காட்டறார். திரும்ப 1933 ஆண்டு  பாலத்தைப்பத்தி பேச்செழும்புது. இந்தமுறை 70 % மக்கள் ஆதரவு காமிச்சாங்க.  அப்ப கொஞ்சம் பொருளாதார நிலை சரியில்லாததால்... வான்கூவரில் மக்களை இந்த வேலையில் பயன்படுத்திக்கணும், உள்ளூர் பொருட்களையே அதிகமாக உபயோகிக்கணுமுன்னு  நிபந்தனை போட்டாங்க.  இது மட்டுமில்லாமல் ஆசியர்களை இந்த வேலைக்கு எடுக்கக்கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. (அடராமா...... அடுத்த அம்பதறுபது வருஷங்களில் நடக்கப்போவது அவுங்களுக்கு எப்படித் தெரியும் ? )
எஞ்சிநீயர் உடனே பரபரன்னு திட்டம் தயார் செஞ்சார். மான்ட்ரியல் கம்பெனி ஒன்னு டிஸைன் செஞ்சு கொடுத்துச்சு.  1937 இல் வேலை ஆரம்பிச்சு ஒன்னரை வருஷத்தில் பாலம் கட்டி முடிச்சுப் போக்குவரத்தும் 1938 இல் ஆரம்பிச்சது.  ஆனால்  திறப்பு விழாவை அடுத்த வருஷம்தான் வைக்கமுடிஞ்சது.  (குடிபோனபிறகு க்ரஹப்ரவேசம் ? ) மாட்சிமைதாங்கிய மன்னர் ஆறாம் ஜார்ஜும், அவர் மனைவி மஹாராணி (முதல்) எலிஸபெத்  அவர்களும், கனடாவுக்கு  வருகை தந்தது 1939 மே மாசத்தில்தான்.  ராஜாவும் ராணியுமாப் பாலத்தைத் திறந்து வச்சாங்க.  பாலங்கட்டுன செலவை சமாளிக்க டோல் சார்ஜ் வாங்கியிருக்காங்க.  கார், குதிரைவண்டிக்கு 25 சென்ட், சைக்கிள், பாதசாரிகளுக்கு 5 சென்ட் ! 1963 ஏப்ரல் முதல்தேதி,  டோல் வாங்குவது முடிவுக்கு வந்தது.... இனி எல்லாம் இலவசமே !

பாலத்தின் ஆரம்பகாலத்தில் ரெண்டு லேன் தான்.  போக்குவரத்து அதிகமானதும்  1952 இல் மூணாவது லேன் தயாராச்சு. ஏற்கெனவே இருந்த ரெண்டு லேனுக்கும் நடுவிலேதான். (ரெண்டு லேன்களிலும் கொஞ்சம்கொஞ்சம்  இடம் எடுத்தாங்கன்னு நினைக்கிறேன் !)போக்குவரத்து அதிகமா இருக்கும்போது  இந்த நடுலேன்,  கொஞ்ச நேரம் ஒரு பக்கம், கொஞ்ச நேரம் மறுபக்கமுன்னு மாறிமாறிப் பயனாகும் வகையில் ரிவர்ஸிபிள் லேன் !

தொடரும்.......... :-)