Thursday, May 02, 2024

ஊருக்குள்ளே ஒரு காடு ! காட்டுக்குள்ளே ஒரு வீடு !

நியூஸிக்கு வெள்ளையர் குடியேறுன காலத்தில் முதலில் வந்த கூட்டத்தில் இருந்த மக்களில் இருவர் காட்டுக்குள்ளே வந்து வீட்டைக் கட்டிக்கிட்டாங்க.  சின்னதா ரெண்டே அறைகள். 
மரங்கள் அடர்த்தியா வளர்ந்துருந்த சின்ன காட்டுப்பகுதி இது. வெறும் 12 ஹெக்டேர்தான்.  இதுலே  ஒரு ஏழரை ஹெக்டேர் இடத்தை, ஸ்காட்லேண்ட் மக்களான  அண்ணன் தம்பி வாங்கினாங்க. அவுங்க பெயர்கள்   வில்லியம் & ஜான் டீன்ஸ்.  (William and John Deans)  கொஞ்சம் மரங்களை வெட்டி எடுத்துட்டு  அந்த  இடத்தில் ஒரு வீட்டைக் கட்டிக்கிட்டாங்க வில்லியமும் ஜானும். காலம் 1843 !   சுத்திவரக் காடு.  மரங்களெல்லாத்துக்கும் வயசு அறுநூறுக்குப் பக்கம் ! 
புது இடத்துக்கு வருமுன்,   இங்கிலாந்துலே ஆரம்பிச்ச  நியூஸிலேண்ட் கம்பெனிக்கு குறிப்பிட்ட தொகை காசைக் கட்டுனால், அவுங்களே கப்பலில் ஏத்தி அனுப்பிருவாங்க.  இங்கே வந்து இறங்குனதும், உள்ளூரில் இருக்கும்  அதே கம்பெனியின் லேண்ட் ஆஃபீஸ்,  ரெண்டரை ஹெக்டேர் நிலம் ஒதுக்கிக் கொடுக்கும். மக்களே இல்லாத நிலப்பகுதியாக் கிடந்த இடத்தையெல்லாம்  மவொரிக்குழுத் தலைவரிடம் இருந்து சொற்பத்தொகைக்கு வாங்கி, அதை வித்து கம்பேனி லாபம் பார்த்துக்கிட்டு இருந்த காலக்கட்டம். 
இப்ப ஸிட்டி சென்டர்னு சொல்லும் இடத்திலிருந்து  மூணரை கிமீதான் இந்தக் காடு ! நம்ம வீட்டில் இருந்து ஒரு நாலு கிமீ தூரம். நம்ம பழைய வீட்டில் இருந்து வெறும் ரெண்டே கிமீ தூரம்தான். 


உள்ளுர் ஆறு இந்த இடத்துலே புகுந்து ஓடுது !  இந்த ஆத்துக்கும் ஏவான் ஆறு   ( Avon River ) என்று பெயர் வச்சவங்களும்  இவுங்கதான்.  ஒருவேளை அவுங்க விட்டுவந்த ஊர்லே இந்தப்பெயரில் ஆறு ஒன்னு இருந்துருக்குமோ என்னவோ !  இந்த எண்ணம் வந்ததும் கொஞ்சம் வலையை வீசுனதில் உண்மையிலேயே இந்தப்பெயரில்  ஒரு ஆறு ஸ்காட்லாந்தில் ஓடுது ! River Avon !!!

நம்மூர்லே இந்தப்பகுதிக்கு ரிக்கார்டன் என்ற பெயரையும் சூட்டுனவுங்க இவுங்கதான்.  ஸ்காட்லாந்தில் இவுங்க  கிராமத்தோட பெயர் இதேதான் !   Deans renamed their area of settlement ' Riccarton'  after their home village in Ayrshire, Scotland.  மவொரி மக்கள்  இந்தக் காட்டுக்கு ஏற்கெனவே வச்ச பெயர்  புடாரிங்கமோட்டு ( Pūtaringamotu )ஆனால் இப்போ  Deans Bush னு சொன்னால்தான் நமக்குப் புரியும் !

வெள்ளையர் இங்கே குடியேறி நகரத்தை நிர்மாணிச்ச சமயம், எல்லா ஏரியாக்களுக்கும் தெருக்களுக்கும் அவுங்களுக்கு இங்கிலாந்தில் இருக்கும் ரொம்பப் பரிச்சயமான இடங்களின் பெயர்களையே வச்சுக்கிட்டாங்க. ஒரு ஏரியா  தெருக்களுக்கு,  ஷேக்ஸ்பியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த் , பைரன், மில்டன், ஆஸ்டின் இப்படி எழுத்தாளர்கள் பெயர்தான் ! 

மூத்தவர்  வில்லியம் ,  1851 இல் ஒரு விபத்துலே சிக்கி, சாமிகிட்டே போயிட்டார்.  இளையவர்  ஜான் 1852 லே கிளம்பி  ஸ்காட்லாந்துக்குப்போய்  ஜேன் என்ற பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்டு, 1853  ஃபிப்ரவரியில் திரும்பி வந்தார். இளம் மனைவியுடன்   அப்படியே நிம்மதியா வாழ்க்கை போயிருக்கக்கூடாதா ?  ஊஹூம்.....  1854 ஜூன் லே  ஜானும் சாமியாண்டை போகும்படியாச்சு.  காரணம் டி பி ! காசநோய். அப்பெல்லாம் அதுக்கேது மருந்து ?  கைக்குழந்தையுடன் ஜேன் இங்கே  தனியா இந்த வீட்டில் இருந்தாங்க. ப்ச்... பாவம்...  ஊர்லே இருந்து சொந்தக்காரங்க வந்துருக்கலாமுன்னு நினைக்கிறேன்.  சரியான விவரம் கிடைக்கலை. 
அடுத்த ரெண்டாம் வருஷம்...... வீட்டுக்குமுன்னால் கொஞ்சம் நிலத்தைச் சரிப்படுத்திக் கொஞ்சம் பெரிய வீடாகக் கட்டி அங்கே குடிபோனாங்க  ஜேன். அந்த வீடுதான் ரிக்கார்ட்டன் ஹௌஸ்.  இவுங்க முதலில்  இருந்த வீடுதான்  டீன்ஸ் காட்டேஜ். இந்த வருசம் இதுக்கு வயசு 181.  நம்ம கேன்டர்பரி பகுதியிலேயே ரொம்பப் பழைய வீடு ! (முந்தி ஒரு சமயம் உள்ளே போய் பார்த்திருக்கோம்.  ஒரு அடுக்களை, ஒரு படுக்கையறை. அம்புட்டுதான்.  படங்களைத் தேடணும். கிடைச்சால் போட்டு, அப்டேட் பண்ணிறலாம்) 


பெரிய வீட்டை,  அடுத்த  பதினெட்டு வருஷம் கழிச்சு 1874 இல்  கொஞ்சம் விரிவாக் கட்டியிருக்காங்க. அப்புறம் 1900 த்லே இன்னும் கொஞ்சம் பெருசாக!  குடும்பம் வளர்ந்துருக்கலாம்.  சமீபத்துலே 1947 வரை  இவுங்க குடும்பம் இங்கேதான் இருந்துருக்காங்க.  அதுக்கப்புறம்  நம்ம ஊர் சிட்டிக்கவுன்ஸில் இந்த இடத்தை விலைக்கு வாங்கி சரித்திர முக்கியமுள்ள இடங்களின் பட்டியலில் சேர்த்துருச்சு. 
இப்ப இந்த ரிக்கார்டன் ஹௌஸ் (பெரிய வீடு )  ஒரு ரெஸ்ட்டாரண்ட் &  தனிப்பட்ட விழாக்களுக்கான இடம் !   வீடு என்பதால்   சின்ன அளவில்தான்  விழா நடத்திக்கணும்.  என்ன இருந்தாலும் சரித்திரத்தில் இடம்பெற்ற இடம் இல்லையோ !  (நம்ம பக்கத்து வீட்டுக்காரங்களின் கல்யாணம் இங்கேதான் நடந்தது.  நாங்களும் போயிருந்தோம் ) 



இப்ப ஊர் ரொம்பவே வளர்ந்து விரிஞ்சு போனதால் சின்னக்காடு அதுபாட்டுக்கு ஊருக்கு நடுவில் ஓசைப்படாமல் ஒளிஞ்சுருக்கு ! நமக்கு விருப்பமானால் காட்டுக்குள்ளே போய் சுத்திட்டு வரலாம். 
நாங்க ஒரு யோகா வகுப்பில் சேர்ந்துருக்கோமுன்னு சொல்லியிருக்கேனே... யாருக்காவது நினைவிருக்கோ ?  கோடை விடுமுறை காலம்  ஒரு ரெண்டு மாசம் வகுப்புக்கும் விடுமுறை.  குழுவில் பலரும்  இந்தியாவுக்குக் கிளம்பிருவாங்க.  எங்கேயும் போகாமல் உள்ளூரில் இருக்கும்  சிலர் சேர்ந்து  விடுமுறை நாட்களில்  பார்க், பீச்ன்னு கிளம்பிப்போய் வருவோம்.  அப்படித்தான்  இந்தக் காட்டுக்கும் போய் வந்தோம். காட்டாலோசனை யார் சொல்லி இருப்பாங்க ?  ஹாஹா.....
காட்டுக்குள்ளே நடந்து போய் சுத்திப்பார்க்க நல்ல வாக்கிங் ட்ராக் எல்லாம் ஸிட்டிக்கவுன்ஸில் போட்டு வச்சுருக்கு ! நிதானமா நடந்துபோய், அங்கங்கே போட்டு வச்சுருக்கும்  இருக்கைகளில்  உக்கார்ந்து அமைதியையும், பறவைகளின்  பேச்சரவங்களையும்  கேட்கலாம்.  சாந்தி ! சாந்தி !  




எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம் என்பதால், ஊரில் இருந்து நம்ம வீட்டுக்கு வரும் நம்  உறவுகளை அங்கே கூட்டிப்போவது ஒரு வழக்கம் !  இன்றைக்கு உங்களையும் அங்கே கூட்டிக்கிட்டுப்போறேன். கூடவே வாங்க !









PINகுறிப்பு :   டீன்ஸ் புஷ் & ரிக்கார்டன் ஹௌஸ் போனபோது எடுத்த படங்களை அங்கங்கே போட்டுருக்கேன்.  பார்த்துக்குங்க. 



4 comments:

said...

வீட்டைப்பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.  துணை இல்லாமல் ஜென் எப்படி அவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி இருப்பார்?  துட்டு?  படங்கள் அபாரம்.

said...

காடு காட்டுக்குள்ளே நூற்றாண்டுகளுக்கு மேலான ஒரு பிரபலமான வீடு கண்டோம்.
அழகாக இருக்கிறது.

said...

வாங்க ஸ்ரீராம்,

காட்டுலே இருக்கும் மரங்களையே வெட்டினால் போதாதா வீடுகட்ட ! டீன் சகோதரர்கள் ஒரு விவசாயநிலமும் வைத்து இருந்ததால் அதிலிருந்து வருமானம் வந்துருக்கலாம்.

அப்போதெல்லாம் மக்கள் ஒருவருக்கொருவர் ரொம்பவே உதவியாக இருந்துருக்காங்க. இங்கே நம்ம நண்பர் ஒருவர், நாம் உதவி கேக்கலைன்னா கோச்சுவார் !

said...

வாங்க மாதேவி,

பழமை மாறாமல் புதுப்பிச்சு இருக்காங்க இப்போ ! (நிலநடுக்கத்திற்குப்பின் )