Wednesday, May 08, 2024

வருஷாந்திர விசேஷத்தில் இனி இதுவும் ஒன்னு !

நம்ம பக்கங்களில்  கருங்கல் ஜல்லிகளில் ஒட்டிக்கிட்டு இருக்கும்  காக்காப்பொன்னை  ஞாபகம் இருக்கோ ?  ஏறக்கொறைய , ஊதினால் பறக்கும் அந்த கனத்தில் தான் இருக்கு விதைகள் !




பத்திரமா நட்டுவச்சுட்டு மறந்துடலாம்.  முளைச்சு  வெளியில் வந்து தலை காமிக்கவே ஒரு ரெண்டு மாசங்களுக்கு மேல் ஆகிருது ! அப்படி மெதுவா வளந்து செடியாக நின்னாலும், பூவைக் கண்ணில் காமிக்க இன்னொரு மூணு வருஷம். சிலவகைகளுக்கு ஏழு வருஷம் கூட ஆகுது !

இந்த வம்புக்குத்தான் விதைக்குப் பதிலாகப் பூண்டு ( பல்ப் ) வாங்கி நட்டுவைக்கறேன்.  விலை ரொம்பவே அதிகம்தான். வேற வழி ?  ஏழு வருஷம் காத்து நிக்கப் பொறுமை கிடையாத் ! 

ஆனால்... பல்பா நட்டுவச்சுட்டால் அதுபாட்டுக்கு வருஷாவருஷம் அதுக்கான  காலம் வந்தவுடன்  மொட்டுவிட ஆரம்பிச்சுரும்.  மொட்டுவிட்டது முதல் எண்ணி நூறுநாட்களில்  பூ !  நல்ல குளிர்காலத்தில் (ஜூன் ஜூலையில் )   பூண்டுகளை நட்டு ,   செப்டம்பர் 17 ஆம்தேதி , மொட்டு வந்து.........    டிசம்பர் 25க்கு பூ ! 

நான் லில்லிச்செடியைப் பற்றிச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.  க்றிஸ்மஸ் பண்டிகைக்கு லில்லிப் பூங்கொத்தால்  அலங்கரிப்பது ஒரு சம்ப்ரதாயம் இங்கே ! க்றிஸ்மஸ் லில்லின்னே பெயர் ! நிறம் , வெளியே ஒருவித ப்ரௌன், உள்ளே  வெள்ளை ! மணம் ? அபாரம் !!!!  
லில்லிகளில் ஏகப்பட்ட வகைகள்  உண்டு ! மணம் உள்ளது, அறவே இல்லாததுன்னு..... 
நம் ஆசைக்காக  லில்லிச்செடி கிடைக்கும் காலங்களில்  ஒன்னு வாங்கிக்குவேன்.  சேகரம்எல்லாம் விதவிதமான நிறங்களில்தான். லில்லிப்பூண்டு சில சமயம்  ஸேலில் வந்து, நம் கண்ணில்பட்டாலும்  விலையைப் பார்த்து வாங்கறதும் உண்டு. நாப்பது டாலர் ஒரு செடிக்குக் கொடுக்க மனசாறதில்லை.....

இப்படிப்போகும் காலத்தில்தான் முந்தின வருஷம்,  லில்லி ஷோ நம்மூரில்னு கண்ணில்பட்டது.   அதுவும் நம்ம பேட்டையில் !  எல்லா வருஷமும் ஜனவரி  ரெண்டாம் வீக்கெண்டில் நடத்தறாங்களாம் !  அட ! இதுவரை தெரிஞ்சுக்கலையே..... கிளம்பிப்போனோம்.  அஞ்சு டாலர் டிக்கெட்.  முன்புறம் டிக்கெட் வாங்கும் பகுதியிலேயே   லில்லிச்செடிகளை விற்பனைக்கு வச்சுருந்தாங்க. மொட்டுகளோடு இருக்கும் செடிகள் மூணன்னம்  வாங்கினோம்.  ஒன்றின் விலை  பத்தே டாலர்தான் ! 
அங்கேயே ஒரு பக்கமா எடுத்துவச்சுட்டு, அவுங்க பார்த்துக்கறோமுன்னு சொன்னாங்க. நாங்க ஷோ நடக்கும் ஹாலுக்குள் போனால்..... மயக்கம் வர்றதுபோல்  அழகழகான லில்லிகள் கூட்டங்கூட்டமா !  



நிதானமாச் சுத்திப்பார்த்துட்டு,  வளர்ப்பு பற்றி விசாரிச்சதுக்கு, பக்கத்து ஹாலுக்குக் கூட்டிப்போய்க் காமிச்சு விளக்கம் சொன்னார் ஒருவர். 


அதுவரை, லில்லிக்கு விதை இருக்குமென்பதே எனக்குத் தெரியாது.  பூக்களுக்கு நடுவில் இருக்கும் தண்டு போல் உள்ள பகுதிக்கும் விதைகள் இருக்குமாம். எப்படி ? அதான் ஆரம்பத்துலே சொன்ன மைக்கா போல லேசா !  முளைச்சு வரும் ரெண்டு பிள்ளைகளை நமக்குக் கொடுத்து, வளர்த்துப் பார்க்கச் சொன்னார் !    தொட்டிகளில் நிதானமா வளர்ந்துகிட்டு இருக்குதுகள்!  டெக்னிக் தெரிஞ்சு போச்சேன்னு  அந்த சீஸனில் எடுத்த விதைகளையெல்லாம் நட்டு வச்சுருக்கேன்.  இப்பதானே ஒரு வருஷம் ஆகி இருக்கு. இன்னும் ஆறுவருஷம் பாக்கி :-) 

இதோ இந்த வருஷமும் ருசி கண்ட பூனையாக 'ஷோ' வுக்குப் போனோம்.   கிளம்புமுன்  நம் வீட்டில் பூத்து நிற்கும் லில்லிகளைக் க்ளிக்கி வச்சேன்.  அதில் இல்லாத  நிறங்களை வாங்கிக்கணும்.  ஆனால்  முக்கால்வாசிச் செடிகள் வித்துப்போய், பாக்கி கொஞ்சம்தான் இருக்கு. நேத்தே வந்துருக்கணும்.  ஷோவே ஒன்னரைநாள்தான்.  சனிக்கிழமை பகல் 2 முதல் 5, ஞாயிறு  காலை 9 முதல்  4 மணி வரை மட்டுமே. நியூஸி லில்லி சொஸைட்டி  மக்களே நடத்தறாங்க.  நமக்கு விருப்பம் என்றால் நம்ம வீட்டுப்பூவையும் ஷோவில் வைக்க அனுமதி உண்டு.  வெள்ளியன்றே பூக்களைக் கொண்டுபோய்க் கொடுக்கணும். சிறந்த பூக்களுக்குப் பரிசும் உண்டு.  (இருக்கட்டும், இருக்கட்டும்)

ஹாலில் போய் பூக்களையெல்லாம் பார்த்து ரசிச்சுட்டு. க்ளிக்ஸ் ஆச்சு. 
 இந்த முறை ஒரே ஒரு செடி மட்டும்தான் வாங்கினோம்.  ஒரு அஞ்சாறு மொட்டுகள் !  வீட்டுக்கு வந்த சிலநாட்களிலேயே மொட்டுகள் விரிய ஆரம்பிச்சு,  அழகோ அழகு !

நம்ம வருஷாந்திர விசேஷத்தில் லில்லியைச் சேர்த்தாச் !

கீழே படங்கள் : நம்வீட்டில் லில்லிகள் 









4 comments:

said...

அப்பா... எவ்ளோ செடி... எவ்ளோ பூ...!

said...

பல வர்ணங்களில் அழகிய லில்லி மலர்கள்.

said...

வாங்க ஸ்ரீராம்,

தோட்டநகர வாழ்க்கைன்னா அநேகமா இப்படித்தான் இருக்கணும் இல்லையா !

said...

வாங்க மாதேவி,

வருஷாவருஷம் புதுப்புது வண்ணங்கள் வருது ! இது லில்லியில் மட்டுமில்லைப்பா.... காய்கறிகளிலும் கூட !