எனக்குத் தெரிஞ்சு நம்மூர் கடற்கரையிலே பட்டம் பறக்கவிடும் விழா ஒரு ஒன்பது வருஷமாத்தான் நடக்குது. ஆனால் உள்நாட்டு சரித்திரம் என்ன சொல்லுதுன்னா.... 1990 ஆம் ஆண்டு, நியூஸி என்னும் நாடு 'பிறந்து' நூற்றியம்பது வருஷங்கள்ஆச்சு. இதைக் கொண்டாடும் வகையில் சர்வதேச பட்டத்திருவிழா நியூஸியில் தொடங்கியது !!!!
நியூஸி நாளான வைட்டாங்கி தினம் ஃபிப்ரவரி ஆறாம் தேதி என்பதால் அதையொட்டி வரும் சனிக்கிழமையில் கொண்டாட்டம் நடத்திக்கலாம் என்ற எண்ணத்தோடு ஆரம்பிச்சதுதான், ஆனால் இந்த வருஷம்...... இதை ஜனவரி 13க்கு மாத்திட்டாங்க.
இது ஒரு வகையில் நமக்கும் நல்லதாப் போச்சு ! இந்தியாவில் மகரசங்கராந்தி தினம் (நம்ம பொங்கல் பண்டிகைநாள்தான் ) பட்டம் பறக்கவிடுவது ஒரு சம்ப்ரதாயமா பலமாநிலங்களில் நடக்குது ! நமக்கும் பொங்கல் பண்டிகை வரும் காலமாச்சே !
நம்ம ஊர் ஸிட்டிக்கவுன்ஸில் நடத்தும் விழாதான். எப்போ இதுக்கும் ஆப்பு வைக்கப்போறாங்களோ தெரியலை. இருக்கும்போது கொண்டாடிக்கலாம்னு நம்ம நினைப்பு !
காலை 11 மணிமுதல், பிற்பகல் 3 வரை விழாவுக்கான நேரம் ! நம்மூரில் ரெண்டு கடற்கரைகள் உண்டு. ஒன்னு இயற்கைச்சூழலில், மற்றது.... கொஞ்சம் செயற்கைச் சூழலில்.
செயற்கையில் தான் விழா ! நியூப்ரைட்டன் பீச் என்று பெயர். இங்கே கடற்கரையிலேயே நூலகம், நீச்சல்குளம், கடல் தண்ணீருக்கு மேல் நடந்து போகும் Pier பாலம் னு கட்டிவிட்டுருக்காங்க. உள்ளூருக்கான போர்கால நினைவுச்சின்னம்(வார் மெமோரியல்)கூட உண்டு.
மேலே படம்: நம்ம நியூப்ரைட்டன் பீச்சில் இருக்கும் லைப்ரரிக் கட்டிடம். இடப்பக்கம் நூலகமாகவும், வலப்பக்கம் உணவு விடுதியாகவும் அமைஞ்சுருக்கு ! அங்கிருந்தே Pier க்கு நடந்து போகலாம் !
வழக்கம்போல பகல் சாப்பாட்டுக்குப்பின் கிளம்பினோம். நம்ம யோகா குடும்பத்தினரும் வந்து கலந்துக்கறதா ஒரு ஏற்பாடு ! மகளும் வர்றதாக சேதி ! நம்ம வீட்டில் இருந்து ஒரு 17 கிமி தூரம்தான்.
கடற்கரையை நெருங்கும்போதே தூரத்தில் இருந்து பட்டங்கள் கண்ணில் பட்டன. பார்க்கிங் கிடைப்பதுதான் கொஞ்சம் கஷ்டம். பொதுவா ஊரே திரண்டுவந்தால் இப்படித்தான், இல்லையோ ! இந்தப் பட்டம் எல்லாம் நம்ம பக்கங்களில் இருக்கும் காத்தாடி போல இல்லாமல், காற்று நிறைச்ச பலூன் வகைகளைப்போலத்தான் பெரும்பாலும் இருக்கும் !
நியூஸியில் மவொரி மக்களுக்கும் இந்தப் பட்டங்கள் முக்கியமானவைகள்தான். வானத்துக்கும் பூமிக்குமான தொடர்புன்னு சொல்றாங்க. மவொரி நம்பிக்கைகளில் ஒன்னு, வானம் தான் தந்தை, பூமி தான் தாய்.
இது நம்ம கோடைகாலமும் என்பதால் சூரியனும் இருந்தான் :-)
திமிங்கிலங்களும் டைனோஸார்களுமா வானத்தில் ! எல்லாம் சீனத்தயாரிப்புகள்தான்! சீனர்களும் மூவாயிரம் ஆண்டுகளாக பட்டங்கள் பறக்க விடுகிறார்களாமே ! (எதையும் விட்டுவைக்கறதில்லை !)
பெரிய பெரிய பட்டங்களைப் பிடித்துக்கொண்டு யாரும் நிக்கறதில்லை. ஒரு மணல் மூட்டையில் கட்டிவிட்டால் அதுபாட்டுக்குப் பறந்து கொண்டு இருக்காதா என்ன ?
ஒரே கயிற்றில் நாலைஞ்சு திமிங்கிலங்கள் , ஒரு காரோடு கட்டியிருக்கு. அப்படிப் பறந்து போகணுமுன்னா காரோடு போய்க்கோ !
திருவிழா என்றால் தீனிக்கடைகள் இல்லாமலா ? ஒரு ஐஸ்க்ரீம் வண்டியும், பட்டம் விற்கும் ஒரு வண்டியுமா களைகட்டியாச் ! எல்லாம் சின்னச்சின்ன பட்டங்கள்தான். சிறு பிள்ளைகளுக்கானது !
குளிர்நாடுகளில் பொதுவாகக் கோடையைக் கொண்டாட வேணும்தான். அதுக்காக ஸம்மர்டைம்ஸ் என்ற பெயரில் ஒரு ஆறுவாரங்களுக்கு பலவிதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நம்ம ஸிட்டிக்கவுன்ஸில் ஏற்பாடு செய்யும் . கோடைகாலத்தில் பள்ளிக்கூடங்களுக்கு வருஷாந்திர விடுமுறை என்பதால் வீட்டில் போரடிச்சுக்கிடக்கும் பிள்ளைகளுக்காக கிட்ஸ் ஃபெஸ்டிவல்( Kids Fes) என்ற பெயரில் சிலபல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதும் ஸம்மர்டைம்ஸில் (Summertimes )அடக்கம். நிகழ்ச்சிநிரலை ஒரு சின்னப்புத்தகமா வெளியிடுவாங்க. இலவசம்தான். அனைத்து நூலகங்களிலும், பெரிய மால்களிலும் போட்டு வச்சுருப்பாங்க. இந்தக் கலிகாலத்தில் எல்லோரும் கைப்பேசி மக்களா ஆகியதால் வலையிலும் தகவல்கள் போட்டு வைப்பதுதான். இந்த வருஷம் இப்படி எந்தக்கையேடுகளையும் எங்கேயுமே பார்க்கலை. சிக்கன நடவடிக்கையோ என்னவோ.... வலையில் மட்டுமே விவரம்.
மகள் கடற்கரைக்கு வந்துட்டதா சேதி அனுப்பினதும் நாங்க குறிப்பிட்ட இடத்துக்குப் போனோம். குழந்தை மட்டும் தாயுடன் வந்துருக்கான். தந்தை வேறொரு வேலையாகப் போயிருக்காராம். பார்க்கிங் பிரச்சனை என்பதால் கொஞ்சம் தூரத்துலே வண்டியை நிறுத்திட்டுக் குழந்தையை ஸ்ட்ரோலரில் கொண்டு வந்துருக்காள். மணலில் சக்கரங்கள் புதைந்துவிடும் என்பதால் நாங்கள் குழந்தையை மட்டும் தூக்கிக்கிட்டு நம்மாட்கள் இருக்கும் இடத்துக்கு வந்தோம்.
அவனைத்தூக்கி வச்சுக்க எல்லோருக்கும் ஆசை. முதல் பட்டத்திருவிழா அவனுக்கு ! வயசு, கிட்டத்தட்ட பத்து மாசம் ! கொஞ்சநேரம் வேடிக்கை காமிச்சுட்டு மூணரைக்கு எல்லோருமாப்போய் இன்னொரு தோழியின் ரெஸ்ட்டாரண்ட்டில் இருக்கும் ஐஸ்க்ரீம் கடையில் குளுகுளுன்னு கொண்டாடிட்டு அவரவர் வீட்டுக்குக் கிளம்பியாச்!
விட்டாரைய்யா பறக்க விட்டாரைய்யா ! எட்டாத உயரத்துலே.........
PINகுறிப்பு : பட்டத்திருவிழாக் காட்சிகளைப் பதிவில் அங்கங்கே போட்டு வச்சுருக்கேன் !
6 comments:
சுவாரஸ்யம்தான். ஆனாலும் பட்டங்களை கையில் பிடித்துக் கொண்டு மாஞ்சா நூல் போட்டு பக்கத்து பட்டங்களுடன் டீல் போட்டு அறுப்பது போலாகுமா இது? பேரன் படா ஸ்டைலு...! கையில் இருந்தது ரஜ்ஜு என்றே ஒருகணம் ஏமாந்தேன்!
புகைப்படங்கள் அருமை. போட்டோ பிடித்தவர் குழந்தையின் கண்ணாடியைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் தெரிகிறார்
"இந்த வருடம் ஜனவரி பதின்மூன்றுக்கு மாத்திட்டாங்க"
நமது நாட்டின் காலநிலை காற்று என்பவற்றை அனுசரித்து இந்தப் பட்டம் ஏற்றும் போட்டி வடமாகாணத்தின் கடற்கரைகளில் தைப்பொங்கல் அன்றே நடாத்தப்படுகிறது.
உங்கள் பட்டத்திருவிழாக் காட்சிகள் அழகாக இருக்கின்றன.
பேரன் செம ஸ்டைலாக பட்டத்திருவிழாகாண வந்துள்ளார். படங்கள் அழகு.
வாங்க ஸ்ரீராம்,
டீலுக்கு இங்கே நோ டீல். பாதுகாப்புதான் முதலில் !
பேரன்..... ஸ்டைல் மன்னன் :-)
ரஜ்ஜு வீட்டுச்செல்லம். வெளியே கொண்டுபோக முடியாது. அதுக்கெல்லாம் நாய்கள்தான் லாயக்கு.
வாங்க நெல்லைத் தமிழன்,
ரசித்தமைக்கு நன்றி !
வாங்க மாதேவி,
ஆஹா.... அங்கே தைமாதமா !!!! எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டுலே ஆடி மாசம்தான். காற்று பிய்ச்சுக்கிட்டுப்போகும் காலம் அதுதான்!
ஸ்டைல் மன்னன் வருகிறார்...பராக்...பராக்...... ஹாஹா
Post a Comment