Friday, May 03, 2024

புள்ளையார் பிடிச்சும்கூட அவர் அனுமாரானது எப்படி ?

நமக்கு  நம்ம ஆஞ்சி பொறந்தநாள்  என்னிக்கு பார்த்தால் மார்கழி மாசத்தில் வரும் மூலம் நக்ஷத்திரநாள்.  வடக்கர்களுக்கும், கர்நாடகாவிலும்  சைத்ரமாசம் வரும்  பௌர்ணமிநாள்தானாம் ! அட !  நம்ம சித்ரா பௌர்ணமி !!!!   போகட்டும் ரெண்டு முறை கொண்டாடினால் ஆச்சு, இல்லை ?


இந்தவருஷம் நமக்கு ஜனவரி 11 ஆம் தேதியில் கொண்டாட்டம். அதை முன்னிட்டு ஒரு ஆஞ்சி செய்யலாமுன்னு தோணுச்சு . ஓடிப்போய் ஃப்ரிட்ஜைத் திறந்தேன் !!!  மேல்தட்டில் ஒரு மூலையில் இருக்கார் விபத்தைச் சந்திக்க நேர்ந்த புள்ளையார் !!!


நம்ம ஊரில்  ஒரு அஞ்சாறு வருஷமா 'ஹிந்து ஸ்வயம் ஸேவக் ' ( HSS ) சங்கம் கிளை ஆரம்பிச்சு நடந்துவருதுன்னு சொல்லியிருக்கேனில்லையா ?   அங்கே வருஷாவருஷம், புள்ளையார் சதுர்த்திக்கு முன் வரும் ஞாயிறில் 'கணேஷ் மேக்கிங் வொர்க்‌ஷாப் ' ஒன்னு நடத்தறோம். முக்கியமாப் பிள்ளைகளுக்கும் கூடவே பெரியவங்களுக்கும் சேர்த்துதான் !
களிமண் வாங்கி ஆளுக்கொரு உருண்டை கொடுப்போம். அவரவர்கள் விரும்பும் வண்ணம்  புள்ளையார் செஞ்சுக்கலாம்.  கடைசியில் எல்லோரும் செஞ்ச , புள்ளையாரைக் காட்சிப்படுத்திட்டு அவரவர் கொண்டு போகலாம்.  இந்தவருஷம் அபூர்வமா, நம்மவரும் புள்ளையார் செஞ்சார்!!!    க்ரூப் ஃபோட்டோ எடுத்துட்டுத் திரும்பும்போது 'சொத்' னு ஒரு சப்தம். ஐயோ... புள்ளையார் தரையில், நம்மவர்  கையில் காலித்தட்டு !
அடப்பாவமேன்னு 'அவரை' அள்ளியெடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தேன். அடுத்த ரென்டாம்நாள் புள்ளையார் சதுர்த்தி. அதுக்குமுன்னால் திருப்பிச் செஞ்சுறலாமுன்னு நினைச்சால்..... எங்கே..... :-( வெளியில் வச்சால் உலர்ந்து போகுமேன்னு நல்ல ப்ளாஸ்டிக் பையில் பொதிஞ்சு யாரும் தொடாத இடத்தில் ஃப்ரிட்ஜில் வச்சேனா................  என்னவோ வேளை வரலை. 

நாலுமாசம் பொறுமையாக் காத்திருந்தார்.  அப்பதான் ஆஞ்சி எண்ணம் வந்தது!
நம்ம ஆஞ்சி யோகத்தில் நிஷ்டையில் இருக்கார் ! முதல்முறை செஞ்சதுக்குப் பரவாயில்லாமல் வந்துருக்கார். பொறந்தநாளுக்கு கொலு ஒன்னு ஏற்பாடு செஞ்சு புதியவரையும்  கொலுவில் வச்சாச் !


அவருக்கான ஸ்பெஷல் இன்றைக்கு பால்பேணியும், மொளகுவடையும் !  இந்தியன் கடையில் 'பேணி' ரெடிமேட் வந்துருக்கு. பாலும் சக்கரையும், நட்ஸும்  நாம் போட்டுக்கணும். அதான்.... நோகாம......

வடை மட்டும் சோம்பல் இல்லாமல்  வீட்டில் செஞ்சேன் !

  அடுத்த சிலநாட்கள் , வீட்டில் புதுசா மாட்டுக்கொட்டாய் கட்டும்வேலையில் இருந்தேன்.  இதுக்கெல்லாம் 'யாரையும்' கூட்டுச் சேர்க்கமாட்டேன். ஆனாலும் 'ஒருவன்' விடாகண்டனாக  வந்து எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டுத்தான் போவான் !   
பொங்கல் பண்டிகை வருது. அதற்கான டிஸ்ப்ளேதான் !  வழக்கமான இடம், இப்ப இல்லை. அதையும் ஒரு புள்ளையார்தான் புடிச்சுக்கிட்டார்.  அதனால் ஸ்வாமி அறையிலேயே ஒரு பக்கம் வைக்கணும்.



'மார்கழி முடிஞ்சதும்மா,  ஆண்டாளே'ன்னு சொல்லி, நம்ம ஜன்னு & அன்னுவுக்குப் புது உடைகள் மாத்தியாச். 

பாலும் பொங்கியது !
சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் , பழம், இஞ்சி & மஞ்சளோடு பூஜை ஆச்சு. பேரன் , தலைப்பொங்கலுக்கு வந்து , புதுச்சட்டை வேஷ்டியுமாக் கொண்டாடிட்டுப்போனான் .



சாயங்காலம் நம்ம புள்ளையார் கோவிலில் பொங்கல் விழா. வேலைநாள் என்றபடியால் மாலைப்பொங்கல்தான் ! பொங்கல் செஞ்சு கும்மியடிச்சுக் கொண்டாடினோம்.  சுமாரான நல்ல கூட்டம்தான் கோவிலில் ! 









கோடையில் வானம் காட்டும் வண்ணஜாலங்களை மறக்காமல் கவனிக்கணும் என்பதும் தினசரி கடமைகளில் சேர்ந்துருக்கு !


6 comments:

said...

இவ்வளவு வருஷமா தொடர்ந்து நம்ம பாரம்பர்யத்தை விடாம தொடர்ந்துகொண்டு வருவது ஆச்சர்யமாக இருக்கிறது.

பேரன் புகைப்படமும் அருமை.

நியூசிலாந்தில் நீங்க ரொம்பவே சீனியர்.

said...

ஆஞ்சி உருவம் நன்றாய் வந்திருக்கிறது.  ஸூப்பர்.  நெய் கொப்பளிக்கும் பொங்கலும் டாப்!

said...

ஆஞ்சி அழகாக இருக்கிறார்.

வீட்டுப் பொங்கல் , பேரன் வரவு என சிறப்பான கொண்டாட்டம்.

பொங்கல் விழா படங்கள் நன்றாக இருக்கின்றன.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

எதை விட்டுவந்தோமோ.... அதுமேல்தானே மனசெல்லாம் ?


நாம் இங்கே வந்து இது 37 வது வருஷம். இந்த தெற்குத்தீவில் முதல் தமிழ்க்குடும்பம் !
உண்மையில் சீனியர்கள்தான் !

பேரன் அழகன்தான்! நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

புள்ளையார் பிடிச்சு, ஆஞ்சியாக வந்ததும் கூட அழகுதான்:-)

பொங்கலில் மூட நெய் பெய்தாச் :-)

said...

வாங்க மாதேவி,

ரசித்தமைக்கு நன்றிப்பா !