Wednesday, July 01, 2020

கொரோனா காலம், நியூஸியில் ! (மினித்தொடர் . பாகம் 1 )

ஒருவேளை புதுவருஷம் 2020 பொறந்த நேரம் சரியில்லையோன்னு....  தோணுது.....  என்றாலும் அப்படி ஒன்னும்  சொல்ல முடியாதுதான்.......  ஏற்கெனவே ஒருமாசம் முந்தி,   ச்சீனாவில் ஆரம்பிச்சதை,  ஓசைப்படாம  அதன் வாயை மூடிவச்சு,  மத்த உலகநாடுகளையெல்லாம்  கழுத்தறுத்துட்டாங்கன்னுதான்  சொல்லணும்.
போனவருஷம் டிஸம்பர் மாசமே  அங்கே  ஆரம்பிச்சு ஒரு ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்துருக்கு. அதுவும் ஒரே ஒரு பகுதிக்குள்ளே மட்டுமேன்னு அவுங்க சொல்றாங்க.  அங்கெல்லாம் அவுங்க சொல்றதைத்தான் நாம் நம்பணும்.  மத்த நாடுகளில்  இன்வெஸ்டிகேட் பண்ணறோமுன்னு சொல்லி உள்விவகாரங்களில் போய்ப் பார்க்கிறதைப்போல்,   சீனத்தில்  அவுங்க சனம் உட்பட யாருமே மூக்கை நுழைக்க முடியாது,  எத்தனை பேர்  மரணம்னு கூட அவுங்க சொல்லும் எண்ணிக்கைதான்.    (டியனமன் சதுக்கத்தில்  1989 இல் மாணவப்புரட்சி நடந்தப்ப , உண்மையில் எத்தனை  மரணமுன்னு இதுவரை சொல்லலை , பாருங்க..... ) இதுக்கிடையில் உலக சுகாதார நிறுவனம், முழுப்பூசணிக்காயைச் சோற்றில்   மறைக்கவும்  செய்தது. 'இந்த புது வைரஸ், அப்படியெல்லாம்  தொட்டால் ஒட்டிக்கிட்டுப் பரவாதாக்கும் 'னு !

இனி   மூணாம் உலகப்போர் வருமுன்னால்..... பழைய இரண்டு போர்கள் மாதிரி ஆயுதம் எல்லாம் எடுக்காமல் கெமிக்கல் வாராக  (Chemical War ) மட்டுமே வருமுன்னு,  யூகங்கள் கிளம்பினது யாருக்காவது ஞாபகம் இருக்கோ ? இப்ப என்னன்னா....  வந்தது வைரஸ் வார் ஆகிப்போச்சு !


சீனப்பொருட்களைத் தடை செய்யணுமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாலும், அதெல்லாம்  கையை விட்டுப்போன கேஸ்.  அங்கே மலிவு விலையில்  தயாரிச்சுத் தர்றாங்கன்ற   பேராசையில் ,  'என்ன செய்யணும், எப்படிச் செய்யணும்' என்ற  டெக்னாலஜியைத் தூக்கி லட்டு மாதிரி அவுங்க கையில் கொடுத்துருச்சு பல உலக நாடுகள்.  இங்கே எங்க நியூஸியில் கூட,  நல்லா இருந்த பல தொழிற்சாலைகளை மூடிட்டு,  அங்கே இருந்து வாங்கி வித்தால் போதுமுன்னு  ஆரம்பிச்சுப் பல வருஷங்கள் ஆகிப்போச்சு.  உள்ளூர் தொழில்களை அபிவிருத்தி செஞ்சால்தானே உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், இல்லையோ !


இப்படிச் சீனச்சாமான்கள்   உலகெல்லாம், அந்தந்த நாடுகளுக்கேற்பக் கிடைப்பது   இப்போ ஒன்னும் புதுசில்லே.....  நாங்க முதல்முறையா 1996 இல்  அமெரிக்கா போனபோது (மகளுக்கு டிஸ்னி லேண்ட் சுத்திக்காமிக்கும் பயணம்) அங்கே  ஒவ்வொரு  ரைடு முடிச்சதும்  விற்பனைக்கு வச்சுருக்கும் நினைவுப் பொருட்கள் எல்லாமே சீனாவில் செஞ்சவைகள்தான்.


போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு ஒரு சிலநாடுகள் முட்டாள்த்தனமான நடவடிக்கையை வேற நடத்துச்சு. சீனர்கள் மேல், மக்களுக்கு  ஒரு வித மனவெறுப்பு இருக்குன்னும், அதைப்போக்கக் கட்டிப்பிடி வைத்தியம் செய்யணுமுன்னு ஒரு  நகர மேயர் ஆரம்பிச்சு வைக்கப்போய்.....   வைத்தியம் செய்யறதுக்குப் பதிலா வம்பை வாங்குன கதையாச்சே!


நாங்க இந்தியப் பயணம் ஒன்னு போன நவம்பர் கடைசி வாரம் கிளம்பிப்போய், வருஷம்  முடியும் நாளான டிசம்பர் 31 க்கு நியூஸிக்குத் திரும்ப வந்தோம். நமக்குப் பின்னால் கொரோனா துரத்திக்கிட்டு ஓசைப்படாம வந்துருக்கு !   ஜனவரி, ஃபிப்ரவரி  மாதங்கள்,  கொரோனா  மற்ற நாடுகளில் தன் வேலையைக் காட்டத்தொடங்குனது அப்போதான்.  'அடடா, ஐயோ, ஐய்யய்யோ' ன்னு பலவிதமா துக்கப்பட்டுக்கிட்டு இருந்தோமா..... 


ஈரானுக்கு லீவுலே போய் வந்த ஒருவர்,  இந்த வருஷம்  ஃபிப்ரவரி  மாசம் 28 ஆம் தேதி இங்கேயும்  கொரோனாவைக் கொண்டுவந்து துவக்கி வச்சாங்க, ஏதோ ஒலிம்பிக் டார்ச் கொண்டு வந்து ஏத்தி வைக்கறதைப்போல !  இவுங்க கொண்டு வந்ததைக்கூட ஒரு நாலைஞ்சு நாட்களுக்கப்புறம்தான்  கண்டு பிடிச்சாங்க. அறிகுறி  ஆரம்பிச்சதும், டாக்டரைப் பார்க்கப்போனப்பதான் ' இது  அது' ன்னு  தெரிய வந்துருக்கு. அதுக்குள்ளே இவுங்க வீட்டாரோடும், நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு, கடைகண்ணிக்குப்போய் சாமான்கள் வாங்கி வந்தது இப்படின்னு பல மக்களுக்குப் பரப்பியும் விட்டுருந்தாங்க.


தீ பிடிச்சதைப்போல் பரவ ஆரம்பிச்சது. இதுக்கிடையில் மற்ற நாடுகளில் இருந்து  திரும்பி வந்த மக்களும், பரப்பி விடுற ஜோதியில் கலந்தாச்சு.  தீவிரத்தைப் பார்த்த அரசு  முதலில் அலர்ட் லெவல்  2 ன்னு ஆரம்பிச்சு,  அடுத்த ரெண்டாம் நாளே   லெவல் 3 ன்னு  சொல்லி, அதுக்கடுத்த  ரெண்டாம் நாள் கொரோனா  நோயாளிகள் எண்ணிக்கை முப்பத்தியாறு ஆனதும்,  நாடே ஆடிப்போச்சு. சகலரும் ஒழுங்கு மரியாதையா  'வீடடங்குங்க'ன்னு சொல்லி அலர்ட் லெவல் 4  அறிவிச்சது. நாலு வாரத்துக்கு நாடு மொத்தமும் லாக்டௌன்.  அவசரகால நிலை அறிவிப்பும் ஆச்சு. நேஷனல் எமர்ஜன்ஸி . ராணுவம் ஊருக்குள் வந்துரும்.  அன்றைக்கு நம்ம யுகாதிப் பண்டிகை.
வருஷ ஆரம்பம். வீட்டோடு கிட.   Stay home, Be kind என்பதே தாரக மந்திரம் !




ஏகப்பட்ட  அறிக்கைகள். என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாதுன்னு  பிரதமரும், ஹெல்த  டைரக்டரும்,  நியூஸி போலீஸ் கமிஷணரும்  டிவியில் வந்து நாட்டு மக்களுக்கு செய்தி அறிக்கைகள் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  தினமும் பகல் ஒரு மணிக்கு 'டான் 'னு  கொரோனா  செய்தி வரும்.  நம்ம கொரோனாவுக்கு  ஒரு செல்லப்பெயரும் கிடைச்சுருச்சு. கோவிட் -19   (COVID-19 )  கோவிந்த்னு வச்சுருந்தால் போறவழிக்குப் புண்ணியமாவது கிடைச்சுருக்கும் !
'எல்லோரும்'   டிவி முன்னால் தவம் கிடக்க ஆரம்பிச்சோம். நாட்டு மக்கள் அனைவரையும்  ஒரே சமயம் எச்சரிக்க ஒரு சாதனமா மொபைல் ஃபோன் மூலம்  ஒரு அலர்ட் சிக்னல் கொடுக்கப்போறோமுன்னு சொல்லி அதையும் செஞ்சாங்க.  அதான் ஆளாளுக்கு ஒன்னு கையில் இருக்கே!
இத்தனை பேரை பரிசோதனை செஞ்சாங்க, இத்தனை பேருக்கு வந்துருக்கு. அதுலே இத்தனை பேர் ஆஸ்பத்ரியில் கிடக்கறாங்க. இத்தனைபேர் குணமாகி வீட்டுக்குப் போயிட்டாங்க, இத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டு  இருக்காங்கன்னு சேதி சொல்றதும்..... கூடவே வீட்டுலே அடங்கி ஒடுங்கிக் கிடங்க. ஊர் சுத்தற வேலையெல்லாம் வேணாம். ஸ்டே ஹோம், ஸ்டே ஹோம். மனுசனுக்கு  விதிக்கப்பட்டது !

லாக்டௌன் ஆரம்பிச்ச மூணாம் நாள் கொரொனாவுக்கு  முதல் பலி, இங்கே நம் தெற்குத்தீவின் மேற்குக்கரையில் 70+ களில் இருந்த ஒரு பெண்மணி.  இன்ஃப்ளூயன்ஸா மாதிரி இருக்குன்னு ஆஸ்பத்ரிக்குப் போயிருந்தாங்க.  மற்ற நாடுகளின்  மரணச் செய்திகளை டிவியில்  சொல்லக் கேட்டுக்கிட்டு இருந்தோமா... இப்ப நம்ம நாட்டுலேயே....   ப்ச்....


நியூஸியில் கொரோனாவால் மரணமுன்னு பார்த்தீங்கன்னா இன்று இதுவரை 22 நபர்கள்.  எங்க ஊரில் மட்டும் 12 பேர்.  ஒரே சீனியர் சிட்டிஸன் ஹோமில் இருந்தவுங்க ...   அங்கேயும் வெளிநாட்டுக்கு லீவில் போய் வந்த  ஒரு நர்ஸம்மாவால்  பரவினதாகச் சொன்னாங்க.  உள்ளூர் ஆஸ்ப்த்ரியில் கொரோனாவுக்கான தனி இடத்தில்   இந்த முதியோர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒவ்வொருத்தரா...........   பலி ஆனது ரொம்பவே துக்கம்தான். மற்ற மரணங்களைப்போல் இல்லாமல்  உறவு நட்பு இப்படி யாரையும் கடைசி நேரத்தில் கூடப் பார்க்கமுடியாமல் தன்னந்தனியே  'போறது'  எவ்ளோ துயரம் பாருங்க.....


சவ அடக்கம் கூட ஒரு பிரச்சனையாப் போயிருச்சு. கொரோனா மரணமுன்னு இல்லை.... பொதுவா  இயல்பா நடந்த வேறவகை மரணங்களுக்கும்தான். லாக்டௌன் அறிவிச்சபின்  நடந்த வேறவகை முதல் மரணம். ஃப்யூனரல் பார்லரில்  கொண்டு போய் வச்ச தன் தாயை, கடைசி முறை ஒரு மூணே மூணு நிமிட்டுக்குப் போய்ப் பார்த்துவரக்கூட  அனுமதி இல்லைன்னுட்டாங்க.  தாய் புற்றுநோயால் மரணம்.

இந்த முழு லாக்டௌன் என்றது எல்லோருக்கும் புது சமாச்சாரம் இல்லையோ !  அதுவும்  பிரச்சனைகள் இல்லாமல் அமைதியா இருக்கும் எங்க நாட்டுக்கு ?  அந்தந்த பேட்டை மக்கள்  'எங்க ரோடு இப்படி இருக்கு, அப்படி இருக்கு'ன்னு படங்கள் அனுப்பறதைப் பார்த்துக்கிட்டு இருந்தோம்.


அத்தியாவசியமான துறைகளில் வேலை செய்பவர்கள் போலிஸ், ராணுவம், ஆஸ்பத்ரி, போக்குவரத்துக்கான  பேருந்து,  துப்புரவு (ரப்பிஷ் கலெக்‌ஷன்) போன்றவைகளில்  பணி செய்வோர்  மட்டும் வழக்கம் போல் வேலை செய்யலாம்.  இதுலே பேருந்து ஓட்டுநர்தான் பரிதாபம். நல்ல நாளிலேயே பஸ்ஸில் பத்துப்பேர் இருந்தால் பயங்கரக்கூட்டம்! இந்த அழகில் ஊரடங்கு சமயத்தில்  ஓட்டுநர்கள் 'மட்டும்'  தனியா ஊரைச் சுத்தி வந்துக்கிட்டு இருந்தார்கள்.

மற்ற  நிறுவனங்கள் , கம்பெனிகள் எல்லாம்  அடைப்புதான். இன்னும் சிலபல  அவசிய சேவைகளில் இருக்கறவங்க,   அவரவர் வீட்டில்   இருந்தே  வேலை செய்யணும்.  முழுசா அடைச்சு இருக்கும் இடங்களில்  வேலைசெய்பவர்களுக்கு  சம்பளம் எல்லாம் நிறுத்தலை.  அரசு,  அவர்களுக்குண்டான சம்பளத்தை  அவுங்கவுங்கக் கம்பெனி மூலமாகக் கொடுக்கும். கவலைப்படாதேன்னுட்டாங்க. சம்பளத்தோடு கூடிய விடுமுறை.  மகள் தன்   வீட்டிலிருந்து வேலை.  ஆஃபீஸ் செட்டப் வீட்டில் செஞ்சுக்கணும்.  ஆச்சு. மருமகன் நிறுவனம்  மூடிட்டதால்  லீவு கிடைச்சுருச்சு.  இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம் சமாச்சாரத்தில் ரொம்பவே சந்தோஷப்பட்ட ஜீவன், அவுங்க வீட்டுப் பூனைதான்  :-)

கடைகண்ணிகளில்கூட  சூப்பர் மார்கெட், மருந்துக்கடை மட்டுமே  திறந்து வைப்பாங்க.   வீட்டுக்கு  ஒரு ஆள் மட்டும் கடைக்குள் போய் வாங்கிக்கிட்டு வாங்கன்னாங்க.  ( அப்ப  மனுஷன் உயிர்வாழ இந்த ரெண்டு கடைகள் மட்டும் போதும்தானே ? என்னத்துக்கு ஊர்ப்பட்ட கடைகள், பொருட்கள்னு  காசை விரயம் பண்ணிக்கிட்டு இருக்கோம் ? )



பேங்க், பெட் ரோல் ஸ்டேஷன்  கூடத் திறந்து வச்சுருக்காங்கதான்.  காசைக் கையால் தொடப்டாதுன்னா....   பேங்க் எதுக்கு ?  கார்டு இருந்தால் போதும்தானே ?  இல்லைன்னா   ஆன்லைன் பேங்க் போதுமே !   அப்புறம்....    அந்த பெட் ரோல் பங்க் ? வீடடங்கு,  ஊரடங்குன்னா  அது காருக்கும்தானே ?
வண்டியை வெளியே எடுக்காமல் போட்டு வச்சு, பேட்டரி ஃப்ளாட் ஆகிப்போய்,  நம்ம இன்ஷூரன்ஸ் கம்பெனி மூலம் ரோட்சைட்  ரெஸ்க்யூ அஸிட்டண்ட் வந்து வண்டியை ஸ்ட்டார்ட் பண்ணிக்கொடுத்துட்டு, அரை மணி நேரம் வண்டியை ஓட்டிக்கிட்டு இருங்கன்னு சொல்லிட்டுப் போனார். நம்ம பேட்டைக்குள்ளேயே  வட்டம் போட்டுக்கிட்டு  இருந்தோம். நைஸா மகள் வீட்டாண்டை போய் வீட்டு வாசலையும் பார்த்துத்துட்டு வந்தோம். இதே பேட்டைதான்.

இதுலே ஒரு கெட்டது (என்னைப் பொறுத்தவரை) கடைக்குள் ஒரு ஆள் மட்டும் போகலாம் என்பதே.....   நாம் ஒன்னு சொன்னால் நம்மவர் வேறொன்னு வாங்கி வருவார்.  ரெண்டு பேராப் போய் வாங்கும்போதே  நாம் கண்ணயர்ந்த நேரத்தில் வேண்டாத ஒன்னு ட்ராலிக்குள் வந்துருக்கும்.  முக்கியமா நம்ம ரஜ்ஜூவுக்கு சாப்பாடு வகைகள் வாங்குவதில் எப்பவும் ஒரு குழப்பம்தான்.  சரி போகட்டும். வகைவகையாத் தின்னட்டுமே 'அவன் ' என்று இருக்க முடியாது.  குறிப்பிட்ட ஒரு வகையில், குறிப்பிட்ட ஒரு ருசியைத்தவிர  வேறொன்னையும்  நாக்கால் நக்கிப் பார்க்கக்கூட மாட்டான். அப்படி  ஒரு ருசி கண்ட பூனை :-)  'நீயே போய்  உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோடா'ன்னா .........  அதுவும் முடியாதாம் :-)
தனியான ப்ரெட் கடை, காய்கறிக்கடை, பழக்கடைகள், ரெஸ்ட்டாரண்டுகள்,  டேக் அவே  வாங்கும்  சின்ன உணவுக்கடைகள், பள்ளிக்கூடங்கள், முக்கியமா மால்கள், சினிமா தியேட்டர்கள் எல்லாம் குளோஸ்.

எள்ளுதான் எண்ணெய்க்கு வெயிலில்  காயணும். எலிப்புழுக்கை ஏன்  காயணும்?  என்ற பழஞ்சொல்லுக்கு  ஏத்தாப்ல,  வீடுகளில் வளர்க்கும் செல்லங்களை வெளியே நடக்கக் கொண்டு போகலாம்.  நாய்ப்பசங்க எப்படி  இருபத்தினாலு மணி நேரமும் வீட்டுலேயே இருக்கும்? பாவம் இல்லையோ.....   'எல்லா' சமாச்சாரமும் அதுகளுக்கு வீட்டுக்கு வெளியில்தானே ?  நல்லவேளை பூனைகளுக்கு  பிரச்சனையே இல்லை.  சுதந்திர ஜீவிகள் !


செல்லம் இல்லாத மக்கள், உடற்பயிற்சிக்காக  வெளியே நடக்கப் போகலாம். ஆனால்  உங்க பேட்டைக்குள்ளே  மட்டுமே  போகணும்.  சமூக இடைவெளின்னு ரெண்டு மீட்டர் தூரம் நமக்கிடையில் கட்டாயம்  இருக்கணும்.  கெட்டதில் ஒரு நல்லது என்னன்னா....  ஒரே கூரையின் கீழ் இருக்கும் குடும்பத்தைக் குமிழி (பப்புள்)  என்று குறிப்பிட்டு  உங்க குமிழிக்குள் இடைவெளி வேண்டாம்.  குமிழிகள் சேர்ந்தே  நடக்கப்போகலாம் என்பதே....
நம்ம குடும்பத்து மக்கள் என்றாலும் கூட  யாரும் யார் வீட்டுக்கும்  போகக்கூடாது.  அதுதான் கொஞ்சம் கஷ்டமாப் போச்சு. மகளைப் பார்க்கவே முடியலை.


நமக்கு உடம்பு சரி இல்லைன்னாக்கூட டாக்குட்டரைப் போய்ப் பார்க்கப்டாது.  ஃபோன் செஞ்சு சமாச்சாரம் சொன்னால், அவுங்களும் ஃபோன் மூலமே வைத்தியம் பார்த்துருவாங்க. காசை மட்டும்  அவுங்க சொல்லும் அக்கௌண்டுக்கு   நெட் மூலம் அனுப்பிவிட்டுறணும்.   எங்களைப்போல  உடம்பைக் கண்டிஷனில் வைக்காத மக்கள், மூணு மாசத்துக்கொருக்கா டாக்டரைப் பார்த்து, உடம்பைப் பரிசோதிச்சுக்கிட்டு, மூணு மாசத்துக்கான மருந்தை எழுதி வாங்கிக்கறதுதான் இங்கத்து வழக்கம்.  அதுலேயும் சின்ன மாற்றம் வந்துச்சு.   வெளியே இருந்து வரும் மருந்துகள்   தடை இல்லாமக் கிடைக்குமோ, கிடைக்காதோ  என்ற  பயத்தில்,  ஒவ்வொரு மாசத்துக்குண்டானது மட்டும் கொடுக்கச் சொல்லி  மருந்துக்கடைக்கு ஆர்டர்.   அதான்  பார்டரை  மூடிட்டாங்க இல்லையா?   விமானப் போக்குவரத்தே இல்லைன்னா மருந்து சப்ளை ?  எனக்கொரு சின்ன சம்ஸயம்.....    ஒருவேளை  மூணு மாசத்துக்குள் நாம் மண்டையைப் போட்டுட்டால், அரசுக்கு   மருந்து மிச்சம்னு......   இல்லையோ ?


இந்த சமயம் இன்னொன்னும் சொல்லணும்....    ஜூன் மாசம்  இங்கே  அஃபிஸியல் குளிர்காலம்  ஆரம்பிக்கறதால்  மக்கள்   ஃப்ளூ தடுப்பு ஊசி போட்டுக்கணும். சீனியர் சிட்டிஸன்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள்   இந்த வகையில் இருப்பவர்களுக்கு மட்டும்  இது இலவசம்தான்.  நாம் மறந்துட்டாலும்  நம்ம டாக்டர் க்ளினிக்லே இருந்து  கூப்பிட்டுச் சொல்வாங்க...'வந்து ஊசி குத்திக்கிட்டுப் போ'ன்னு .  இப்போ லாக்டௌனில்  டாக்டரைப்  பார்க்கமுடியாதுன்னா ஊசி எப்படி ? அதுக்கும் ஒரு வழி சொன்னாங்க. மருந்துச்சீட்டு வாங்கிக்க வரும்போது அப்படியே ஊசியும் குத்திக்கோ.  க்ளினிக் உள்ளே நாம் போகப்டாது.  கார்பார்க்கில் வண்டியை நிறுத்திட்டு, க்ளினிக்கை ஃபோனில் கூப்பிட்டு 'வந்துட்டேன். என் கார் கலர் *** '.   வண்டியை விட்டு இறங்கப்டாது.  டாக்டரோ, நர்ஸம்மாவோ  வந்ததும்  கார் ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு, மேற்கையைக் காட்டுனா போதும். நறுக் !


நம்ம மருந்துச் சீட்டையும்  வாங்கிக்கிட்டு நேரா நம்ம மெடிக்கல் ஷாப்.  அங்கேயும்  ஒருத்தர் மட்டும் உள்ளே போய் மருந்துச் சீட்டைக் கொடுக்கணும்.  நாம் எவ்ளோ தூரத்தில் நிற்கணும், நமக்குப் பின்னாலோ முன்னாலோ இருக்கறவங்க  எங்கே நிக்கணும் என்றதுக்கெல்லாம் தரையில்  அடையாளம்  போட்டு வச்சுருக்காங்க.  மருந்துச் சீட்டை கடை வாசலுக்கு வந்து வாங்கிப்பாங்க. கடையே ஒரு ஷாப்பிங் செண்டருக்குள்ளேதான் இருக்கு.  இதைத்தவிர வேற ஒரு கடையும் திறந்து வைக்கலை.  காமணி நேரம் கழிச்சு நாம் திரும்ப உள்ளே போய் வாசலில்  நின்னால் மருந்து நம்ம கைக்கு வந்துரும். அதுக்குண்டான காசை மட்டும் கார்டுலே அடைக்கணும். கேஷ்லெஸ்.   ஆமாம்ப்பா..... காசைக் கையாலே கூடத் தொடமாட்டோம்....

இந்தக் கொரோனா இருக்கு பாருங்க.... அது  யார் என்னன்னு பார்க்காம எல்லோரையும் புடிச்சுக்குமுன்னு இருந்தாலும்,  முதியோர்,  உயர் ரத்த அழுத்தம்,  சக்கரை, ஆஸ்த்மா இதையெல்லாம் சொத்தாக வச்சுருக்கறவங்களை அளவுக்கு மீறி ரொம்பப் பிடிக்கும் என்பதால்..... இந்த வகை மக்கள் ரொம்பவே கவனமாக இருக்கணுமுன்னு அரசு  கதறிக்கிட்டு இருக்கு.  நமக்கு  மேற்படி சொத்து அளவுக்கு அதிகமா இருப்பதால்  , ஊர் சுத்தும் கால்களை மடக்கி வச்சுக்கிட்டு வூட்டுக்குள்ளேயே இருப்பது உத்தமம்.

பொதுவா இங்கத்து சனம், அரசாங்கம் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கும் மக்கள்தான், என்றாலும் இதுலேயும்  கிறுக்கனுங்க  இருப்பாங்க இல்லையா ?  அந்த வகையில்  'வீடடங்கு'ன்னு சொன்னதைக் கேக்காமல் ஊர் சுத்தப் போனதுகள் ஒரு 105 பேர். காவல்துறை மடக்கிப் பிடிச்சுருச்சு.  இனிமேப்பட்டு இப்படிச் சுத்துனா ஒரு மாசம் ஜெயில்னு சொன்னதும்   இந்த எண்ணிக்கை  உயராமல் அப்படியே நின்னுருச்சு.
இதுலேகூடப் பாருங்க.... இப்படி அவுங்க பேட்டையை விட்டு, பக்கத்தூர் பீச் வரைக்கும் குடும்பத்தைக் கூட்டிப்போனது யார் தெரியுமோ? சுகாதார அமைச்சர்.  கிழிஞ்சது போங்க....   விவரம் தெரிஞ்சதும், சட்னு ராஜினாமாக் கடிதம்   கொடுத்துட்டார்.  பிரதமர், அதை வாங்கி வச்சுக்கிட்டு,  நீவிர் செய்த குற்றம், குற்றமே!  ஆனால்  இப்போ இருக்கும்  நாட்டுநிலைமை கொஞ்சம் சரியாகட்டும். அப்புறம் நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்லி இருக்காங்க.
இந்த அமைச்சரைத் தூக்கணுமுன்னு சனம் சொல்லுது. அதுக்கான கோரிக்கையில்  கையெழுத்துப் போடுன்னு நம்மைக் கேட்டுக்கிட்டு  இருக்காங்க. இவரை உள்ளூர் மக்கள் , ஃபேஸ்புக்கில் கிழி கிழின்னு கிழிச்சுக்கிட்டு இருக்காங்க.

சரி, நாம் கொரோனாக் கதையைப் பார்க்கலாம்.


அது ஒருபக்கம் ஆட.... நாங்க இன்னொருபக்கம் ஆடிக்கிட்டு இருந்தோம். யுகாதிப் பண்டிகையே ச்சும்மா பேருக்குத்தான்  வீட்டுலே கொண்டாடினோம். ஒரு பத்து நாளுக்கு முன்னால்தான் நம்ம 'சனாதன் தரம்' ஹாலில்  ஆஞ்சி ப்ரதிஷ்டை நடந்துச்சு. பாவம் அவரும் இங்கே வந்து சுமார் நாலுமாசம்  இடமில்லாமல் இருந்தார். புது சந்நிதி கட்ட அனுமதி வாங்கி, வேலை முடிய இவ்ளோ நாளாகிப் போச்சு. இதுக்கிடையில் நம்ம பண்டிட் வேற இந்தியப் பயணம் போயிருந்தார்.  அவர் வந்ததும் நல்ல நாள் பார்த்து, ஸ்ரீ ராமநவமிக்கு முன்னால் பிரதிஷ்டை  செஞ்சுடலாமுன்னு சொல்லி  மார்ச் பதினேழு, மூல நக்ஷத்திரத்தில் நல்லபடியா  எல்லாம் ஆச்சு.

இப்பப் பாருங்க...இந்த லாக்டௌன் காரணம் எந்த ஒரு கோவிலும் திறக்கறதோ, கூட்டம் கூடுறதோ கூடாதுன்னு ஆகிருச்சுல்லே.....  பாவம்... நம்ம ஆஞ்சி.  நமக்கும் சனிக்கிழமை கோவில்னு நம்ம இஸ்கான் ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கும் போக முடியலை.  ஆனால் நல்லவேளையா, அங்கே கோவிலிலேயே தங்கி இருக்கும் பண்டிட்கள் தினப்படி அலங்காரம், பூஜை எல்லாம் தவறாமல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க .  கோவிலே தினமும்  காலை பூஜை முடிஞ்சதும் அன்றைய அலங்காரத்தோடு படங்களை  அனுப்பிவச்சுக்கிட்டு இருக்கு.   இப்பவும் படங்கள் வருது !


நம்ம  ஃபிஜி இண்டியன் குழுவில்  முக்கியமான பண்டிகைகளான  ஸ்ரீராம நவமி, ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்திகளை ஒன்பது, எட்டு  நாள்னு ப்ரதமை முதல் கொண்டாடும் வழக்கம். அதை அனுசரிச்சு யுகாதிக்கு மறுநாள் ஸ்ரீராம்நவ்மி  விழா ஆரம்பம்.  ஆனால்  இந்தக் கொரோனாவால் எல்லாமே ரத்து ஆனது.  கம்ப்ளீட் லாக்டௌன் !  நாங்களும் நவமியன்றைக்கு வீட்டுலெயே  பண்டிகையைச் சின்ன அளவில்  கொண்டாடினோம். நம்ம ஹிந்துப் பண்டிகைகளில் ரொம்பவே எளிமையான பண்டிகை இதுதான். மூணே மூணு ப்ரஸாதவகைகள்தான்.  எப்பவும் ரொம்ப மெனெக்கெடாம செஞ்சுருவேன். இந்த முறையும் ஆச்சு.


தொடரும்........  :-)



15 comments:

said...

கொரானா காலம் இங்கு வேகமெடுத்து செல்கிறது ....

ம்ம் ...

said...

பேரன் கொஞ்ச நாள் போனவுடன் "அது ஒரு கொரோனா காலம் " என்று சொல்வான். ஆன்லைன் வகுப்புகள் இருந்தாலும் 3 மாதம் நல்ல விடுமுறை.

 Jayakumar

said...

நியூசில எப்படி ஹேண்டில் பண்றாங்க, நீங்க எப்படி cope up பண்றீங்கன்னு தெரிந்துகொள்ள நினைத்தேன். இடுகைல தெளிவா கொடுத்திருக்கீங்க.

மருந்துலாம் இன்ஷ்யூரன்சா இல்லை அரசே கொடுப்குதா? க்வாரன்டைன் முகாமா வீட்டிலேயே தனிமைப்படுத்தலா?

பொருட்கள் கிடைப்பதில் சிரம்ம் இருக்கா?

said...

கோவிட் -19 (COVID-19 ) கோவிந்த்னு வச்சுருந்தால் போறவழிக்குப் புண்ணியமாவது கிடைச்சுருக்கும் !///

ha ha ha

said...

லாக் டவுன் காலம் தலைநகரில். இப்பொழுது கிராமத்துக்கு வந்துவிட்டோம்.

said...

நியூஸி கண்ட்ரோலுக்கு கொன்டு வந்துடுச்சி ஆனா எங்கூர் செகண்ட் வேவ் வருமோன்னு பயப்படறாங்க .எங்க வீட்லயும் மகள் யூனிலருந்து மார்ச் முதல்வாரமே வந்துட்டா ஆன்லைனில்  முடிச்சு செகண்ட் இயருக்கு போயாச்சு .கணவர் 3 மாசம் furlough முடிஞ்சு வேலை மீண்டும்  ஆரம்பிக்குது. நான் மட்டும் சாவி :) WORKER என்பதால் தொடர்ந்து வேலைக்கு போனேன் மார்ச்சலருந்து என்  பர்சில் பணமில்லை :)  ATM பக்கமே கால்வைக்கல . விசா கார்ட்  SWIPE செய்யும்போது முந்தி 30 பவுண்ட்ஸ் தான் இருந்தது இப்போ 45 பவுண்ட்ஸ் வரை லிமிட் . ரஜ்ஜு ஸ்வீட் பையன் அழகா டிவி பார்க்கிறான் :) எங்க பொண்ணு ஜெஸி குறுக்கே கையால்  மறைப்பா :) செல்லமும் சோஷியல் டிஸ்டன்ஸ் FOLLOW செய்யுதே :) இங்கே நீங்க சொன்னமாதிரி பைரவ செல்லங்களுக்கு குஷியாம் ஓனர்ஸ் லாக்டவ்னில் வீட்டில் இருப்பது .நியூஸில் சொன்னாங்க .ஒரு செல்லத்தின் வால் எதோ உடைந்தாற்போலிருக்கவும் VET கிட்ட கொண்டு போனார்களாம் அவர் சொன்னாராம் உங்க செல்லம் நீங்க வீட்டிலிருக்கிற சந்தோசம் தாங்காமா வாலாட்டியே வாலை உடைச்சினு :)))))its known as happy tail syndrome .extreme wagging of tail in happiness causes .. ஹாப்பி டெயில் சின்ரோம் ஆம் :)) 

said...

நல்ல தகவல்கள். கட்டுக்குள் கொண்டு வந்தது சிறப்பு. இங்கே இருக்கும் மக்கள் தொகைக்கு கட்டுக்குள் கொண்டு வருவது சிரமமாக இருக்கிறது. சொல் பேச்சு கேட்பவர்கள் இங்கே குறைவு! தானாகவும் கட்டுப்பாடுடன் இருக்க மாட்டார்கள்! மருத்துவர்கள் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். அனைவருமே மருத்துவராகி பல விஷயங்களை சோசியல் மீடியா வழி அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். இங்கே சூழல் சரியாக சில மாதங்கள் ஆகலாம் என்றே தோன்றுகிறது.

said...

வாங்க அனுப்ரேம்.

இதுதான் கவலையாக இருக்குப்பா.... :-(

said...

வாங்க ஜயகுமார்,

சின்னப்பிஞ்சுகளுக்குக்கூட ஆன்லைன் வகுப்புன்னா கொஞ்சம் பேஜார்தான், இல்லையோ ?

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

எல்லாப் பொறுப்பும் அரசாங்கம் எடுத்துச் செய்யுது. கொரோனா க்வாரன்டைன், ஐஸொலேஷன் செலவெல்லாம் கூட அரசே ! இன்சூரன்ஸ் தேவை இல்லை.

வீடுகளில் வசதி இருந்தால் நாமே நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

In New Zealand, publicly funded COVID-19 related care – including diagnosis, testing and treatment – is provided to anyone who requires it, who has symptoms. This is irrespective of citizenship, visa status, nationality or level of medical insurance coverage.

said...

வாங்க திருப்பதி மஹேஷ்,

கொஞ்சம் புண்ணியமும் சேர்த்துக்கறது நல்லதுதானே !

said...

வாங்க மாதேவி,


கவனமாக இருங்கப்பா..... எல்லாம் உலகத்துக்குப் போதாத காலம்..ப்ச்...

said...

வாங்க ஏஞ்சலீன்,

வாலே உடையும் அளவுன்னா எப்படி ஆட்டி இருக்கும்...பாவம் செல்லம்....

செகண்ட் வேவ் என்றால் சனம் அலட்சியமா இருக்கவும் வாய்ப்புண்டு. இனிஷியல் ஷாக் போயிருக்குமே! கவனமாக இருங்க எல்லோரும்.

ஜெஸ்ஸி நலம்தானே ? போரடிக்குதுன்னு புகார் உண்டா ? இங்கே பயங்கர போரடியாம். பொழுதன்னிக்கும் விளையாடு விளையாடுன்னு பிடுங்கி எடுக்கறான் ரஜ்ஜூ.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நீங்க சொல்றது ரொம்பச் சரி. சனம் கேட்டு நடந்தால்தானே ஒரு கட்டுக்குள் கொண்டுவரமுடியும் ? எது எதுலேதான் சுதந்திரமா செயல்படலாம் என்ற கணக்கே இல்லை... :-(

said...

அருமையா எழுதி இருக்கிங்க சார்


அந்த அமைச்சர் மேட்டர்தான் அதிகம் கவர்ந்தது.