Wednesday, July 08, 2020

வேலிதாண்டிய வெள்ளாடுகள்..... கொரோனா காலத்தில்...( மினித்தொடர் பாகம் 4 )

பேசாம  சிறைச்சாலைக்குள் இருக்கும் கூடங்களில் கொண்டுபோய் தங்கவச்சுருக்கணும். அதை விட்டுட்டு, நக்ஷத்திர ஹொட்டேல்களில் வச்சு அம்மா, ஐயான்னு தாங்கு தாங்குன்னு தாங்கிக்கிட்டு இருந்தால் (அதுவும்  நம்ம  வரிப்பணத்தில் )  தலைக்குமேல் ஏறாமல் இருப்பாங்களா ?
இங்கே நியூஸியில்  ஒரு இருபத்திநாலு நாட்களுக்கு, கொரோனா தொற்று உள்ளவர் யாருமே இல்லைன்னு விவரம் கிடைச்சதால்   உள்நாட்டுலே லெவல் 1 போகலாமுன்னு அரசு முடிவு செஞ்சது.  மற்ற நாடுகளில்  கொரோனா தீவிரமாப் பரவிக்கிட்டு இருப்பதால்தான்  நியூஸி பார்டர் மட்டும் மூடியே இருக்கு.  நாங்க யாரும் வெளிநாடுகளுக்குப் போய் வர அனுமதி இல்லை.

ஆனால் அங்கிருந்து வருபவர் யாராக இருந்தாலும்  ரெண்டு வாரங்கள்  கட்டாயம் ஊருக்குள் வராமல், அரசு ஏற்பாடு செஞ்சுருக்கும் இடங்களில் போய் தங்கிக்கணும்.  கொரோனா நோய் அறிகுறி இருக்கறவங்களை க்வாரன்டைனுக்கும்,  தற்சமயம் அறிகுறி ஒன்னும்  தெம்படாதவங்களை மேனேஜ்டு ஐஸொலேஷன் என்று  தனிமைப்படுத்திக்கும்  இடங்களும் அனுப்பறாங்க.  ஒரு குடும்பமா வர்றவங்களைத்  தனிமைப்படுத்தும்போது குடும்பமாத்தான் தங்க விடறாங்க.  க்வாரன்டைனில்  இருப்பவர்களில் அதிகம் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆஸ்பத்ரியில் சிகிச்சை.  மத்தவங்களுக்கு  உடலில் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் விதம்  கவனிப்பு.   எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு.

நம்ம ஸ்ரீராமர், தகப்பன் சொல்லச் சொன்னாருன்னு  சின்னம்மா சொன்னதுக்காகப் பதினாலு வருஷம் வீட்டை விட்டுக் காட்டுக்குப் போனார். நாம் பதினாலு நாட்கள்  அரசு சொன்னதுக்காக , அவுங்க ஏற்பாடு செய்த இடங்களில்  தங்கிட்டு வீட்டுக்குப்   போனால் என்ன?

 ஐஸொலேஷனில் இருப்பவர்களுக்கு முதல் மூணாம் நாள் கோவிட் டெஸ்ட். ஒன்னும் இல்லைன்னா.... திரும்ப பனிரெண்டாம் நாள் இன்னொரு டெஸ்ட்.  இந்தக் கோவிட் சனியன் இருக்கே.... டெஸ்ட் பண்ணால்  சட்புட்டுன்னு 'இருக்கு,  இல்லை'ன்னு சொல்லிடாது. ஆற அமர ரெண்டுநாள் டைம் எடுத்துக்கிட்டுத்தான் ரிஸல்ட் காமிக்கும்.

அண்டைநாடான அஸ்ட்ராலியாவிலிருந்து வந்த  ஆறுபேர் அடங்கிய (தனிமைப்படுத்தப்பட்ட ) குடும்பம் ஒன்னு , சொந்தக்காரங்க சாவுச் சடங்குலே கலந்துக்கணும், இரக்கம் காட்டுங்கன்னு  சொன்னதும்..... சரி போயிட்டு வாங்கன்னு அரசு ஏற்பாடு செஞ்சுருக்கு.  ஒரு ஒன்னரை மணிநேரப் பயணம்தான்.  மவொரி இனத்தில் இந்தச் சவச்சடங்குகளில் Tangihanga (சுருக்கமாச் சொன்னால்  Tangi )ன்றது அவுங்க கலாச்சாரம் சார்ந்த ஒரு சமாச்சாரம்.  இதுக்கு ரொம்பவே முக்கியத்வம் இருக்கு.  இந்த ஆறுபேரையும்  மூணாம் நாள் பரிசோதிச்சதில் நோய் இல்லைன்னு ரிஸல்ட்.  Tangi போக அனுமதிகேட்ட அன்னிக்கு ஒன்பதாம் நாள். இனி பனிரெண்டாம் நாள் பரிசோதனைக்கு  இன்னும் மூணுநாள் இருக்கேன்னுதான்  போயிட்டு வர அனுமதி கொடுத்தாங்க. ஆனாலும் போற இடத்துலே கவனமா  சமூக இடைவெளி விடறது, ஸானிடைஸர் வச்சுக் கைகளில் தடவிக்கறது, சோப்பு போட்டுக் கை கழுவறதுன்னு எல்லாத்துலேயும் கவனமா இருங்கன்னும்  சொல்லித்தான்  அனுப்பி இருக்காங்க.

அங்கே  சடங்கு முடியும் நேரம், ரெண்டு பசங்க  (ஒன்னு 18, ஒன்னு 8 வயசு ) நைஸா  வெளியேறி எங்கேயோ ஓடிட்டாங்க. திரும்பிவரும் நேரம் பார்த்தால் இருவர் மிஸ்ஸிங்.  ஐய்யய்யோ..... என்னதான் நெகட்டிவ் ரிஸல்ட்டுன்னாலும்....  இன்னும் அஞ்சுநாள் தனி இடத்தில் இருக்க வேண்டியவங்க இல்லையோ ?  தேடு தேடுன்னு காவல்துறை அலைஞ்சு, அந்த எட்டுவயசைக் கண்டுபிடிச்சுக் கூட்டிவந்துட்டாங்க. பெரிய பையனைத்தான் கண்டுபிடிக்கமுடியலை அப்போதைக்கு.  இந்த ஐவரையும் திரும்ப அவுங்க ஐஸொலேஷனில் இருந்த இடத்துக்குக்   (அதே ஒன்னரை மணி நேர ட்ரைவ்)கொண்டுவந்து சேர்த்தாச்சு.   அப்புறமா அந்தப் பெரியவனையும் தேடிக்கண்டுபிடிச்சு அந்த ஊருலேயே தனிமைப்படுத்தி வச்சுருக்காங்கன்னு தகவல் வந்துச்சு.  அவனை பரிசோதிச்சதில் நெகட்டிவ்னு ரிஸல்ட்டாம். நல்ல வேளை! இல்லேன்னா அந்த ஊரில் நோய் பரவி இருக்கும்.   இந்த அஞ்சு பேரும்  'எங்களையும்  பெரியவன் இருக்குமிடத்துக்கு அனுப்புங்க'ன்னு ஆரம்பிச்சாங்க.  எல்லாம் இருக்குமிடத்துலேயே இருங்கன்னதும் கப்சுப்.  ச்சும்மா இருக்குதுங்களா ?


இந்த அழகுலே சுகாதார அமைச்சர் வேற , 'இதெல்லாம் நடந்ததே எனக்குத் தெரியாது. யாரும் என்னாண்டை சொல்லலை'ன்னு..... போதுண்டா சாமி...... தெற்குத்தீவில் இருக்கும் எங்களுக்கே இதெல்லாம் நேஷனல் டிவி மூலமும்,  கொரோனாவுக்கான  வெப்ஸைட் மூலமும் தெரிஞ்சுருக்கு. மந்திரியைக் கூப்பிட்டு  உக்காரவச்சுக் காதில் சொல்லணுமாக்கும் ?  அவனவன்  டென்ஷனில் இருக்கான்........    முக்கியமாக் காவல்துறை.....

இதெல்லாம் போதாதா எங்களுக்கு? திரும்ப சாமியாட ஆரம்பிச்சோம்......  'பயப்படாதீங்க..... கவனமாத்தான் பார்த்துக்கறோம்.  நோய் திரும்ப நாட்டுக்குள்  நடமாடாது'ன்னு........ திரும்பத்திரும்பச் சொல்லிக்கிட்டே இருக்கு அரசு.

இவ்ளோ நடந்துருக்கும் நிலையில்  வடக்குத்தீவில் தங்க வச்சுக்கிட்டு இருந்த ஹொட்டேல்ஸ் எல்லாம்,    திரும்பி வந்த கிவிக்களால் நிறைஞ்சு வழியுதுன்னும் இன்னும் ஹொட்டேல்கள் வேண்டி இருக்குன்னும்  சொல்லிக்கிட்டு இருந்த அரசு தெற்குத்தீவில் இருக்கும் பெரிய ஹொட்டேல்களுக்கு  நாடு திரும்பும் மக்களை அனுப்பப்போறதாகச் சொன்னதும் ....    ஐயோ, வேண்டாத வேலைன்னு ஆச்சு!  இதுக்கும் ஒரு சாமியாட்டம் நடத்தினோம்.  இவுங்க  சொல்லும்  பெரிய ஹொட்டேல்கள் இருக்கறது எங்க ஊர் ஆக்கும், கேட்டோ !


இங்கே சட்டம், மக்கள் உரிமை  எல்லாம் எல்லோருக்கும் ஒன்னுபோலன்னு அப்பப்பப் பெருமை பீத்திக்குவேனில்லையா....  அதே போலத்தான் நோய் பரவும் நிலை வந்தால் எல்லா ஊர்களுக்கும் சம அளவில் பரப்பும் எண்ணமோ என்னவோ !   விடலாமா ?

"ஏம்ப்பா..... நாடு முழுக்க ஒரே மாதிரி நோயாளிகளை நிரப்பப்போறீங்களா ?  குறைஞ்சபட்சம் ஒரு ஊரையாவது கொரோனா இல்லாத ஊர் என்ற நிலையில் வச்சுக்கப்டாதா ? அதுவும் எங்க ஊரில் ஏன் ?  வேறெங்கியாவது கொண்டு போய்  வவச்சுக்குங்க "

"இல்லைங்க துல்ஸி.  போதிய வசதியுள்ள பெரிய ஹொட்டேல்ஸ்  தேவைப்படுது. அது இந்த ஊர்லேதான் இருக்கு, நாங்க ரொம்பக் கவனமா அவுங்களை சமூகத்துக்குள்ளே  விடாம பத்திரமா வச்சுக்குவோம். பதினாலு நாட்களுக்குப்பின்  நெகடிவ் ரிஸல்ட் வந்தவங்களைத்தான் அவுங்கவுங்க வீடுகளுக்கு அனுப்புவோம்.  அதனால்  ஊருக்கும் பரவும் என்ற அபாயம் இல்லை. "

அரசின் சார்பில் இதைப்பத்திப்பேச ஒரு ஸ்போக்ஸ்பெர்ஸன் இருப்பாரில்லையா....  அவர்தான் எங்க கேள்விகளுக்கெல்லாம் பொறுமையா பதில் சொல்லிக்கிட்டு இருக்கார்.

ஐயாயிரம் மக்களுக்கு மேல்  வந்தாச்சு. இன்னும் வந்துக்கிட்டே இருக்காங்களாமே!

ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுச்சுன்ற கதைதான்....  நாலு பெரிய ஹொட்டேல்களை எடுத்துக்கிட்ட அரசு இப்போ அஞ்சாவது  ஹொட்டேலைப் பிடிச்சுக்கிச்சு. ஆறு மாசத்துக்கு  மற்ற வெளியாட்களுக்கு இங்கே தங்க அனுமதி இல்லை.   ஒன்லி கோவிட்....  அந்த ஹொட்டேல்களும் , அரசுக்கு நாங்க உதவி செய்யறோமுன்னு ஒரு பெருமிதத்தோடு இருக்குதுகள்.  சுற்றுலாப்பயணிகள் வரத் தடா என்பதால் நஷ்டத்தில்  போகாமல் இருக்க ஒரு வாய்ப்புன்னு இருக்காங்க.  கோவிட் நாட்டை விட்டே ஒழிஞ்சதும்,  இந்த ஹொட்டேல்களைப் புடம் போட்டு எடுக்கணும்.

தங்கவைக்கப்படும் மக்களுக்கு என்னென்ன தர்றாங்கன்னு 'நம்மவர்' சொல்லிக்கிட்டு இருந்தாரா.... எனக்கு அப்படியே கண்ணெல்லாம்  விரிஞ்சே போச்சு. சாப்பாடு எல்லாம் சாய்ஸ் உண்டு. மூணு வேளை சாப்பாடு மட்டுமில்லை.... இடையிடையே  எதாவது தின்னணுமுன்னா ரூம் சர்வீஸிலே  சொன்னால் கொண்டுவந்து தருவாங்களாம். ஒருநாளைக்கு  ஆளுக்கொரு ஒயின் பாட்டில், ஆறு பியர் கேன் வேற ! துணி துவைச்சுக்க இலவச லாண்டரி சர்வீஸ்.  ஃப்ரீ வைஃபை !  மத்தபடி  டிவி, ரேடியோ இதெல்லாம்  ஏற்கெனவே அறையில் இருக்கு ! இன்னும் ஜிம், ஸ்விம்மிங் இப்படி  உடற்பயிற்சி செஞ்சுக்கும்  வசதிகள் !

அடடா.....  கொரோனா அறிகுறி லேசா வந்துருக்கக்கூடாதா.... நிம்மதியா ரெண்டு வாரம் ரெஸ்ட்  கிடைச்சுருக்குமேன்னு தோணுது எனக்கு !   ஒரு ஹொட்டேலில்  தங்கிய  மக்களில் யோகா டீச்சர் ஒருத்தர் இருந்தாங்கன்னு அவுங்க மூலம் யோகா சொல்லிக்கொடுக்கக்கூட அரசு அனுமதி கொடுத்துருக்கு. 


ஆரம்பத்துலே ஐஸொலேஷன் மக்களுக்குப் போரடிக்குமுன்னு பீச்சுக்குக் கூட்டிப்போய் வந்துருக்காங்க. அப்படியே ஊருக்குள் வாக்கிங் எல்லாம் கூட.  அந்த ரெண்டு லேடீஸ் சம்பவத்துக்குப்பின்  (எட்டுமணி நேரம் காரோட்டிக்கிட்டுப் போனது ) வெளியே கூட்டிப்போய் வர்றது நிறுத்தப்பட்டது. ஹொட்டேல் வேலிக்குள்  தோட்டத்தைச் சுத்திக்குங்கன்னு சொன்னாங்க.


இப்படி வேலிக்குள் சுத்துன ஒரு அம்மிணி, ஒருநாள் வேலியைத் தாண்டிக்குதிச்சு, ஒரு ஒன்னரை மணிநேரம் ஊரெல்லாம் சுத்திப்பார்த்துட்டுத் திரும்ப ஹொட்டேலுக்கு வர்ற வழி தெரியாம, ஒரு போலிஸாண்டை ஹொட்டேல் பெயரைச் சொல்லி வழி கேட்டுருக்கு!  அப்ப கொரோனாவுக்கு நாலு ஹொட்டேல்ஸ்தான்.  காவல்துறைக்கு இந்த விவரம் எல்லாம் அத்துபடி இல்லையோ ?

அங்கே எதுக்குப் போகணுமுன்னு விசாரிச்சதும், நான் அங்கேதான் தங்கி இருக்கேன்னு அம்மிணி சொல்ல, எப்படிம்மா வெளியில் வந்தேன்னு கேக்க, நான் வேலி வழியா வந்தேன்னு .....   ஆஹா.... இது வேலிதாண்டிய வெள்ளாடுன்னு போலிஸ் பிடிச்சுக்கிட்டு போயிருச்சு. இப்ப அம்மிணி ஜெயில் வாசம்.

இப்ப கோவிட் பாதுகாப்பு பொறுப்பேத்துக்கிட்ட  அமைச்சர் (எங்கூரு எம் பி தான்! )  இப்படி சட்டத்தை மதிக்காமல் மீறும் ஆட்களுக்கு ஆறுமாசம் சிறை தண்டனையும், நாலாயிரம் டாலர் அபராதமும்னு சொல்லி இருக்காங்க.  அந்த ஆறுமாசம் சிறை கூட இங்கே கொண்டாட்டம்தான். தண்டனையா இது ?  இந்த ஊர் ஜெயில் லக்ஷணம் தெரியாதா என்ன ?  நக்ஷத்திர ஹொட்டேல் மாதிரிதான் இங்கத்து ஜெயிலும்..... என்னவோ போங்க....
மூணாம் நாள்,   டெஸ்ட் ஆரம்பிச்சதும்  ரெண்டு, மூணுன்னு நோயாளிகள் எண்ணிக்கை பெருக ஆரம்பிச்சது.  அதெல்லாம் பயப்படவே வேணாம். நாங்க  ரொம்பவே கவனமா இருக்கோமுன்னு  அரசு தரப்பில் தினமும் எங்களுக்கு ஆறுதல்....சொல்றாங்க.

 இன்றையக் கணக்கு.... நோயாளிகள் எண்ணிக்கை 22.

தொடரும்......... (-:


2 comments:

said...

ஒரு சிலரின் அலட்சியத்தால் மற்றவர்களுக்கும் பரவும் தொற்று. எல்லா இடங்களிலும் இந்த ஒரு சிலர் பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

இந்தியாவின் நிலை - அதுவும் இங்கே இருக்கும் ஜனத்தொகையைக் கருத்தில் கொண்டால் மிகவும் அபாயகரமாகவே இருக்கிறது.

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.

said...

இந்த வெள்ளாடுகளால் பெரிப தொல்லை.