Friday, July 10, 2020

நீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது.....(மினித்தொடர் பாகம் 5 நிறைவுப்பகுதி)

லாக்டௌன் சமயத்துலே, நம்ம குடும்ப நண்பர் ஒருவருக்கு உடல்நிலை ரொம்பவே சரி இல்லைன்னு  ஃபிஜியில் இருந்து  ஏர் ஆம்புலன்ஸில் கூட்டிவந்து ஆக்லாந்து ஆஸ்பத்ரியில்  சேர்த்துருந்தாங்க. ஃபிஜியில் கொரோனா கிடையாது.  நாங்க நியூஸி வருமுன் ஃபிஜித்தீவுகளில் ஆறு வருஷம் குப்பை கொட்டிக்கிட்டு இருந்தோம் என்பது உபரித்தகவல்.
அவருக்குக் கொடுத்த சிகிச்சையில்  பலனில்லாம  நண்பர் சாமிகிட்டே போயிட்டார். செய்தி வந்ததும் துடிச்சுப்போயிட்டோம்.  அவருக்கு ஒரே மகன். ஃபிஜியில் இருக்கார். பெரிய குடும்பம் .  பலரும் அங்கேதான்  இருக்காங்க. மற்ற நெருங்கிய உறவினர் சிலர் அண்டை நாடுகளில்.

மகன் உடனே  தனிவிமானத்தில் கிளம்பி வந்துட்டார்.  அன்றைக்குத்தான்  அந்த ரெண்டு பெண்மணிகள்  காரை ஓட்டிக்கிட்டுக் கிளம்பிப் போனநாள்.  'எப்படி விடப்போச்சுன்னு மக்கள் கொதிச்சுக்கிட்டு இருந்தோம்தானே.....   இந்த கலாட்டாவினால்  நோ இரக்கமு'ன்னு அறிவிச்சுட்டாங்க.  இப்ப மகன் வந்தும்  பதினாலுநாள் ஐஸொலேஷனில் இருக்கவேண்டியதாப் போயிருச்சு.  இத்தனைக்கும் ஃபிஜியில் கொரானாவே இல்லை என்றாலும் கூட..... அதான் 'நீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது'ன்னு ஆகிப்போச்சே....

சரி.ஆனது ஆச்சு. பதினாலுநாள் முடிஞ்சதும்  இங்கேயே சவ அடக்கம் செஞ்சுக்கலாமுன்னு குடும்பம் முடிவு பண்ணிருச்சு. எனக்கு மனசுலே ஒரு சங்கடம். சாமிக்கிட்டே போன பரத் பையாவுடனும்  அவர் மனைவியுடனும் ஆறு வருஷங்கள் தாயா பிள்ளையா பழகி இருக்கோம். இப்ப  ரெண்டு வாரம் ஒத்திப்போட்டு வச்சுருப்பதால், பையாவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. அவர்பாட்டுக்கு ஹாயா மார்ச்சுவரியிலே படுத்துருப்பார்.  மனைவிக்கு எப்படி இருக்கும் என்பதுதான்...... என் மனசைப்பிசையுது.

மரணம் என்பதை யாருமே தவிர்க்க முடியாதுதான். ஆனால்  மரணம் சம்பவிச்ச ஓரிருநாட்களில்  சவ அடக்கம் நடந்து போச்சுன்னா....  உற்றவர்களுக்கு   அளவில்லாத துக்கம் இருந்தாலுமே கொஞ்சம் கொஞ்சமா மனசு ஆறத்தொடங்கும் இல்லையா....  இன்னைக்கு அவுங்க.... நாளைக்கு நாம் என்றதுதானே....  இப்ப மகன் வந்துட்டாலும் ரெண்டுவாரம் கழிச்சுத்தான் எதுவுமே செய்ய முடியும் என்ற நிலை?   அனிதாபென்,  தூங்குவாங்களா? சாப்பிடுவாங்களா ?  மனுஷஜன்மத்துக்கு வயித்துப்பசி இல்லாம இருக்குமா ?  பெத்தவங்ககிட்டே சொல்லி அழக்கூட முடியாம அவுங்கெல்லாம் ஃபிஜியிலே இருக்காங்களே ?  இப்படியெல்லாம்  யோசனையில் எனக்கும் மனசு சரியே இல்லை.... 

எல்லா செய்திகளும் ஆக்லாந்துலே இருந்து ஃபிஜி போய் அங்கிருந்து நமக்கு வந்துக்கிட்டு இருக்கு.  ஒருவழியா  இருபத்தியொன்பதாம் தேதி மாலை, மகனை வீட்டுக்கு அனுப்புவாங்க. மறுநாள் ஃப்யூனரல்.  செய்தி கிடைச்சதும்  ஆக்லாந்து ஃப்ளைட் புக் பண்ணால்  ஏகப்பட்ட டிமாண்ட்.  காலை ஒன்னு, ராத்ரி ஒன்னுன்னு ரெண்டே ஃப்ளைட்தான் கொரோனா காலம் என்பதால்.  லக்டௌனில் உள்ளூர் போக்குவரத்துக்கும் தடா இருந்ததால் ஏர்லைன்ஸெல்லாம்  நஷ்டத்துலே தவிக்கிறதாகவும் தகவல். இதுலே சமூக இடைவெளி அனுசரிக்கணும் என்பதால்  குறைஞ்ச எண்ணிக்கையில் பயணிகளைக் கொண்டு போவாங்க.  இதன் காரணம், வழக்கமான டிக்கெட்  சார்ஜ்,  நாலு மடங்காகி இருக்கு.  பக்கத்துலே இருக்கும்  காலி இருக்கைகளுக்கும்   சேர்த்து நாம்தான் பணம் கொடுக்கணும்..... ப்ச்....

காலை ஏழுமணிக்கு ப்ளைட்.  ஒரு ஒன்னேகால்- ஒன்னரை, மணி நேரப்பயணம்.  ஏர்ப்போர்ட்டுலே இருந்து  நேரா  க்ரெமடோரியம் போயிட்டு, சவச்சடங்கு முடிஞ்சதும்  சாயங்காலம்  ஆறு மணி ஃப்ளைட்டுலே திரும்பி வர்றதா திட்டம்.

கொஞ்சநாளைக்கு முன்னால் மாஸ்க் போடமறுத்தவரைப் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கி விட்டுட்டாங்கன்னு சேதி பார்த்ததால்.... எதுக்கு வம்பு? மாஸ்க், கைக்குத் தடவிக்கக் குட்டி பாட்டிலில் ஸானிடைஸர்,  இத்யாதிகளுடன்  கிளம்பிப் போகச் சொன்னேன்.

இந்த மாஸ்க் பொறுத்தவரை, நம்ம வீட்டில் ஏற்கெனவே வாங்கி வச்சுருந்தாலும்.... இதுநாள்வரை பயன்படுத்தவே இல்லை. லாக்டௌன் நாட்களில் நாம்  எங்கேயும் சுத்தப்போகலை. சமூக இடைவெளி கடைப்பிடிப்பதாலும்,   வழியில் பார்க்கும் யாரோடும் சின்னப்பேச்சு கூடாதுன்னு கவனமாத் தள்ளிப் போனதாலும்  தேவையிருக்கலை. பொதுவா அதாவது கொரோனா காலத்துக்கு முந்தி இருந்தே .... எங்கூரில்  க்ளீன் ஏர்  என்பதால்  மாஸ்க் சமாச்சாரமே யாரும் நினைச்சுக்கூடப் பார்க்கலை. ஆனால் சீனர்கள் மட்டும் (அதிலும் எல்லோரும் இல்லை.....  )  மாஸ்க் போட்டுக்கிட்டுச் சுத்துவாங்க.  அவுங்க ஊர்ப்பழக்கம் அது என்பதால் இங்கேயும் தொடருது. ' பாரு.... நல்ல ஊரில் இருந்துக்கிட்டு,  மாஸ்க் போடறதை' ன்னு நினைச்சுப்பேன்.  புதுசா வந்தவங்களா இருக்கும். கொஞ்ச நாள் போனால்  கழட்டிருவாங்க.....

இப்ப இதே போல் மாஸ்க் (சீனர்கள் மட்டும் !) போட்டுக்கிட்டு, தெருக்கள், கடைகண்ணிகளில் சுத்தறது கண்ணில் படும்போது எரிச்சல் வந்தது உண்மை. ' பாரேன்..... ஊர் உலகமெல்லாம் வைரஸை பரப்பி விட்டுட்டு, தாங்கள் மட்டும் உயிர்பிழைச்சு வாழணும் என்ற எண்ணம் பிடிச்சதுகள்.... மொத்த உலகையும் பிடிச்சுக்கட்டும். நாமெல்லாம் செத்துத் தொலையலாம்.....'  மனசு அதுபாட்டுக்கு கோச்சுக்குது..... ப்ச்...

காரை எடுத்துப்போய் ஏர்ப்போர்ட்டில்  ஒன்டே பார்க்கிங்கில் போட்டுக்கிட்டால் நல்லது .  ரெண்டு வாரமா மழைவேற நசநசன்னு  ஸல்யம்.....  மேற்கூரை இருக்கும்  கவர்டு பார்க்கிங்கில்  போட்டுக்கிட்டால்  நனையாமப் போய் வரலாம். அப்படியே ஆச்சு.

'நம்மவர்' வெளியூர் போகும் சமயங்களில்  நான் ஸ்டேண்ட் பை யில் இருப்பேன்.  அப்பப்ப (ஃப்ளைட்  போகும்போது தவிர ) சேதி அனுப்பிக்கிட்டே இருப்பார்.   உள்ளூர் பயணம் என்பதால்  அரைமணி முன்னால் போனாலும் போதும். அதான் கையில் லக்கேஜ்கூட ஒன்னும் இல்லையே....

   'பயங்கரக்கூட்டம், யாரும் மாஸ்க் போட்டுக்கலை, செக்கின் ஆச்சு..... 'ன்னு  தகவல் வந்துக்கிட்டே  இருக்கு.  ஃப்ளைட் உள்ளே போனால்.... ஒரு இடைவெளியும் இல்லையாம்.  ஃபுல்னு சொல்றார்.  அதான் ஜூன் 8 முதல் லெவல் 1 வந்துட்டோமில்லையா... எல்லாம் வழக்கம்போல் நார்மல். பார்டர் மட்டும் திறக்கலை. அடப்பாவி.... நாலு மடங்கு டிக்கெட் விலை வச்சது அநியாயமில்லே ?

ஆக்லாந்து போனால் பாதி ஃபிஜியைப் பார்க்கலாம். அதிலும் அங்கே நம்ம ஊரில் இருந்து நியூஸியில் குடியேறிய மக்கள் நிறையப்பேர் இருக்காங்க.  அதுவும் நாங்க இருந்த டவுனில் எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும் :-) பிஸினெஸ் கம்யூனிட்டி மக்கள்தான்.  ராணுவப் புரட்சி (Coup ) நடந்தப்ப, இங்கே வந்து செட்டில் ஆனவர்கள்.

சடங்கில் கலந்துக்க வந்த மக்களில்  பலரும் தெரிஞ்சவங்க என்பதால்.....  ரொம்பவே  வருத்த உணர்ச்சியோடு நடந்ததாம்  எல்லாம். ஹிந்து முறைப்படி (குஜராத்திகள் ) எல்லாம் நடந்துருக்கு... கடைசியில்  எரியூட்டும் வரை அங்கேயே  இருந்து பார்த்துட்டுத்தான்  எல்லோரும் கிளம்பியிருக்காங்க.  பரவாயில்லையே.... அப்பவே எரியூட்டிட்டாங்க !

 இங்கே எங்க ஊரில் (க்றைஸ்ட்சர்ச்) இந்த  எரியூட்டும் சமாச்சாரம்  நிசப்தமா இருக்கும்  நடு இரவில் மட்டும்தான்.  க்ளீன் ஏர் ஸிட்டி என்பதால்  இப்படி ஒரு ஏற்பாடு.  சவச்சடங்கில் கடைசியில் கொள்ளி வைப்பவர்,  சடங்கின் முடிவில்  ஒரு மின்சார பட்டனை அமர்த்துவதோடு முடியும். நான் முதல்முதலில் இங்கே ஒரு சவச்சடங்கில் கலந்துக்கிட்டப்ப,  நிகழ்வு முடிஞ்சதும், வெளியே வந்து சிம்னியில் புகை வருதான்னு பார்த்தேன். ஒன்னையும் காணோம். அப்புறம் நம்ம ரமண் பைய்யாதான் சாஸ்த்திரத்துக்கு பட்டன்  அமர்த்துவதுதான். உண்மையான எரிப்பு ராத்ரியில்தான்னார். மறுநாள்  சாம்பல் கொடுப்பாங்க.

கனத்த மனதோடு கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு,  நரேன் காகா பொண்ணும் மாப்பிள்ளையும் இவரை ஏர்ப்போர்ட்டில் கொண்டு வந்து விட்டுட்டுப்போனாங்களாம். நான் இவுங்களையெல்லாம் பார்த்தே பனிரெண்டு வருஷமாச்சு.   இப்ப இறந்துபோனாரே  பரத் பைய்யா,  அவரோட மகனின் கல்யாணத்துக்குப் போனதுதான்.  நம்மவர் மட்டும் அப்பப்ப ஃபிஜி போய் வருவார். அந்தக் கம்பெனிக்கும் இவர்தான் தொழில்நுட்ப ஆலோசகர்.

நாங்க ஃபிஜிக்குப் போனதே அந்த தொழிற்சாலையை நிறுவுவதுக்குத்தான்.  மெஷீன்கள் எல்லாம்  வந்து இறங்கி இருந்துச்சு.   அதையெல்லாம்  கமிஷன் செஞ்சு,   ப்ரொடக்‌ஷன் ஆரம்பிச்சு அப்படியே  தொழில் அபிவிருத்தியடைஞ்சு, ஆறு வருஷம் ஆனபிறகுதான் நாம் நியூஸிக்கு வந்தோம்.  அப்போ நடந்த ராணுவப்புரட்சியும்  ஒரு காரணம்.  அங்கிருந்தும் அடிக்கடி அவுங்கெல்லாம்  இங்கே நியூஸி ஃபேக்டரிக்கு வந்து போவாங்க.  அப்படியே நம்ம வீட்டுக்கும் விஸிட் உண்டு.  வீட்டுப்பெண்களைத்தான்  பார்த்து நாளாச்சு.....
இந்தக் கொரோனா ஒழியட்டும். ஒருமுறை ஃபிஜிக்குப் போய் வரணும்.
கண்ணுக்குக்குத் தெரியாத கிருமி இப்படி ஊர் உலகத்தை ஆட்டி வச்சுருச்சே...........


இங்கே நியூஸியில் கொரோனா நுழைஞ்சவுடனே.... சரியான நடவடிக்கைகள்  எடுத்து அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துட்டாங்க. இதில் எங்க பிரதமருக்கு  ரொம்ப நல்லபெயர் கிடைச்சு, அவுங்க புகழ் உலகெல்லாம் பரவி இருக்கு!  இப்படி ஒரு பெரிய காரியம் நடத்தறது இல்லாமல் சின்னச்சின்ன செய்கைகளால்  கூட மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். உண்மையில் இந்தச் சின்ன சமாச்சாரங்கள் தான்  சட்னு நினைவுக்கு வரும்:-)


லாக்டௌன் சமயம் எல்லா வியாபாரங்களும் மூடியாச்சுல்லே...   இதுலே ரெஸ்ட்டாரண்ட்ஸ்களும்தான்.  என்னதான் வீட்டுலே வகைவகையா சமைச்சாலும்....  சனத்துக்கு வெளியே போய் சாப்பிடணும்ற ஆசை ஒன்னு இருக்கே!  ஒருவிதத்தில் நல்லதுதான்.... வீட்டில் சமைக்கிறவங்களுக்கு ஒரு வேளை ஓய்வு தேவைதானே !

லெவல் மூணு வந்தவுடன்,  ரெஸ்ட்டாரண்டுகள் வியாபாரம் செய்ய அனுமதி கிடைச்சது.  உக்கார்ந்து சாப்பிட முடியாது. வீட்டுக்கு வாங்கிப்போய் சாப்பிட்டுக்கும் டேக் அவே மூலம்  மட்டும்தான்னு.  சனம் காரை எடுத்துக்கிட்டுப் பறந்து போய் வாங்கியாந்தாங்க.

அப்புறம் லெவல்  ரெண்டு வந்ததும்  உள்ளே போய் உக்கார்ந்து சாப்பிடலாம். ஆனால் சமூக இடைவெளி இருக்கணும். ஈஷிண்டு உக்காரப்டாது.....   என்பதால் ஸீட்டிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.  இந்தக் காலத்தில் ஒருநாள் பிரதமரும் அவுங்க பார்ட்னரும் இன்னும் அவுங்களைச் சார்ந்த சிலரும் ஒரு ரெஸ்ட்டாரண்டுக்குச் சாப்பிடப் போனாங்க. ஏற்கெனவே இடம் வேணுமுன்னு புக் பண்ணிக்கலை.

லிமிட்டட் ஸீட்ஸ் என்பதால் உள்ளே  நிறைஞ்சதும், மத்தவங்க வெளியே வரிசையில் காத்திருந்தாங்க.  உள்ளே இடம் காலியாக ஆக வரிசை மெள்ள உள்ளே போய்க்கிட்டு இருக்கு.  வரிசையில் பிரதமர் அண்ட் கம்பெனி நிக்கறாங்க. பணியாளர் ஒருவர்  வெளியே வந்து உள்ளே இடமில்லை,   மேஜை காலியாகும்வரை காத்திருக்கணுமுன்னு  சொல்லிட்டுப் போயிட்டார்.

இதுக்குள்ளே உள்ளே இருந்த இன்னொரு குடும்பம் பிரதமரை அடையாளம் கண்டுக்கிட்டு, நம்ம இடத்தை அவுங்களுக்குக் கொடுத்துடலாமுன்னு எழுந்தப்ப,  கடை மேனேஜருக்கு பிரதமர் வெளியே லைனில் காத்திருப்பது தெரிஞ்சதும்,  தனியா இருக்கைகளைப் போட்டு அவுங்களை உள்ளே அனுமதிச்சுட்டார்.

மீடியாக்கள் எதுக்கு இருக்கு ? இவ்ளோ எளிமையான பிரதமர் னு .....  ஓக்கே... நம்மில் ஒருவர்னு எல்லோருக்கும் தோணாதா ? தோணுச்சு.

ஏற்கெனவே போனவருஷம், இங்கே ஒரு  அஸ்ட்ராலியன் வந்து, கிறைஸ்ட்சர்ச் (எங்க ஊர் )மசூதியின் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்து படபடன்னு  தொழுகையில் இருந்த மக்களைச் சுட்டுட்டான்.  இங்கிருந்து கிளம்பி இதே ஊரில்  இருக்கும் இன்னொரு மசூதிக்கும் போய் அங்கேயும் சுட்டுருக்கான். மொத்தம் 51 பேர் அல்லாவாண்டை போயாச்சு.

 அந்த சம்பவத்தில் எங்க பிரதமர், ரொம்ப நல்லா செயல்பட்டாங்கன்னு அவுங்க புகழ் உலகெங்கும் பரவுச்சு. முக்கியமா இஸ்லாமிய நாடுகளில் இவுங்களுக்கு ரொம்ப நல்ல பேரு.  இஸ்லாமியர்களுக்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹிஜாப் கூடப் போட்டுக்கிட்டு இருந்தாங்க.

இப்ப இந்த கொரோனா.... மறைமுகமா இவுங்க புகழை இன்னும் ஏத்திவிட்டு இருக்கு!

இன்னும் ரெண்டே மாசத்தில் இங்கே நியூஸியில் பொதுத்தேர்தல் வருது. தேதிகூட செப்டம்பர் 18ன்னு அறிவிச்சுட்டாங்க.

அதூக்குள்ளே கொரோனாவை நாட்டைவிட்டே துரத்தும்  வேலையும் முடிவுக்கு வந்துரும்.  பிரதமரின்  லேபர் கட்சி போனமுறை மாதிரி  இன்னொரு கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி  அமைச்சதுபோல் இல்லாம  இந்தமுறை முழு மெஜாரிட்டியில் ஜெயிக்கும் அறிகுறி தெரியுது.  ஆனாலும்  தேர்தலுக்குக் கூட்டு சேர்ந்துருக்காங்கதான்...

பார்க்கலாம்..... கொரோனாவுக்கும், ஆட்சிக்கும் என்ன ஆகப்போகுதுன்னு....

மினித்தொடர் இத்துடன் நிறைவு.


PINகுறிப்பு:  இன்றைக்கு ஒரு ஆள்,  வேலியை வெட்டிட்டு, வெளியில் போகும்போது புடிச்சுட்டாங்க.  வயசு அம்பதாம். ஆன வயசுக்கு அறிவு வளரலையே......  முழுவிவரம்   இன்னும் வரலை. வந்தாட்டு சொல்றேன்.....




5 comments:

said...

//வயசு அம்பதாம். ஆன வயசுக்கு அறிவு வளரலையே//
அம்பதிலும் ஆசை வரும்னு தானே பாடியிருக்காங்க, அறிவு வரும்னு பாடலையே;

said...

தெரிந்தவரின் இழப்பு - வருத்தம் தரக்கூடியது.

ஐம்பதிலும் ஆசை வரும்! :)))

தொடரட்டும் பதிவுகள்.

said...

கொரோனா சமயத்தில் இறப்பு அல்லது உடல் நிலை சரியில்லாமை என்பதே இன்னும் அதிகமான தண்டனையாக அமைந்துவிடுகிறது.

இங்கயும் கொரோனா பாதிப்பு ரொம்ப இல்லைனா ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு குறையுமே என்று எதிர்கட்சி ரொம்பவே கவலைப்படுது.

said...

நியூ ஜியில் கொரோனா இல்லை என்று கேள்விபட்டது சரியா

said...

சிறப்பு. எழுத்து நடை அருமையாக இருக்கிறது. பதிவை ரசித்தேன்.
நமது வலைத்திரட்டி: வலை ஓலை