Friday, January 24, 2020

கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிக்கலாமா? (பயணத்தொடர் 2020 பகுதி 5 )

சாப்பிட எங்கே போவதுன்னு கேள்வி வந்தப்ப, ' வர்றவழியில் ஒரு ரிஸார்ட் போர்டு பார்த்தேன். ரெஸ்ட்டாரண்ட் இருக்குன்னு போட்டுருந்தாங்க'ன்னேன்.  சரியா எந்த இடமுன்னு சொல்ல முடியலை என்னால்.  வந்த வழியாகவே திரும்பிப்போறோம், போறோம் போய்க்கிட்டே இருக்கோம்......   சில்க் பஸார் கட்டடம் கண்ணில் பட்டது....  இவ்ளவு தூரமில்லை என்றது மட்டும் நிச்சயம்.
 கூகுளாரிடம் கேட்டால்.....   காலையில் போன ஸ்ரீ க்ரிஷ்ணேஸ்வர் கோவிலாண்டை இருக்காம். ஓ..... அந்தக்கோவிலுக்குப் போகும்போதுதான் பார்த்துருக்கேன் போல....  அரை மணி நேரம் சும்மாச் சுத்திட்டோமே..... ' மறக்காமப்    புடவை பார்க்க' ஞாபகப்படுத்தினார் சாமின்னு வச்சுக்கலாம்.
எல்லோரா ஹெரிடேஜ் ரிஸார்ட்க்குப் போய்ச் சேர்ந்தோம்.  போர்டு பார்த்த இடத்துலே இருந்து  உள்பக்கம் திரும்பி ஒரு கிமீ தூரம் வரை போகவேண்டி இருந்தது.
ரெஸ்ட்டாரண்ட்,  கேட்டுக்குப் பக்கத்துலேயே  இருக்கு.
 அவுங்க லஞ்ச் டைம் பகல்  ரெண்டுவரைதானாம்.  இப்ப மணி ரெண்டரைன்னாலும், சமைச்சுத் தருவாங்களாம். 'நம்மவருக்கும்' , நதீமுக்கும் சப்பாத்தி, பருப்பு, ஒரு  வெஜ் கறி, எனக்கு ஒரு ஃப்ரெஞ்ச் ஃப்ரை.  பொரிச்சு தட்டு நிறைய வந்ததை நாலுபேர் ஷேர் பண்ணிக்கிட்டோம். நாலாவது யார்? அங்கே வந்த ஒரு செல்லம்தான். கைப்பிள்ளைக்காரி.....
உருளைக்கிழங்கை மோந்து பார்த்துட்டு, 'இதையா தின்றே'ன்னு ஒரு பார்வையை வீசிட்டுப் போயிருச்சு.   இப்பெல்லாம் பசங்க வெஜ் சாப்பிடறதை விட்டே விட்டுட்டாங்க...  நம்ம லோட்டஸ் எதிர்க்கட்டடத்தில்  இருக்கும் 'செல்வி'யும் பிஸ்கெட்டை மூக்காலத் தொட்டுக்கூடப் பார்க்கலை.....
மூணேகால் ஆகிருச்சு, நாம் சாப்பிட்டு முடிக்கும்போது.  மொஹல் ஸில்க் பஸார் போனோம்.  பைத்தானி புடவைகள்தான் ஃபேமஸாம். விலையைப் பார்த்துப் பைத்தியம் பிடிக்காமல் இருக்கணும்.  ரொம்பவே புளிக்குதே.....    நல்ல புடவைகள் அம்பதாயிரத்துலே இருந்து ஆரம்பிக்குது.  சொல்லி வச்சமாதிரி எல்லாப் புடவைகளுக்கும் ஒரே வகை பார்டர்கள். அதுதான் ட்ரெடிஷனல் டிஸைனாம். பைத்தானி என்றது  அங்கத்து ஒரு ஊர்தான். ரிக்வேத காலத்துக்கும்  இந்த பைத்தானிக்கும் ஒரே வயசாம்.  ஆமாம்... நம்ம காஞ்சிபுரம் புடவையும் ஊர்ப்புகழ்தானே?  எத்தனை வயசு இருக்கும் ?  மராத்தியர் ஆட்சிகாலத்தில் பேஷ்வாக்கள் ரொம்ப விரும்பி இவைகளை ஆதரித்தாங்களாம். ஓ.... அதான் அவுங்களுக்கு விலையைப் பத்தின கவலை இருந்துருக்காது.....

இன்னொரு சிறப்பு வகை ஹிம்ரூ புடவைகள். அரசகுடும்பத்தினருக்கானதாமே......   எல்லோரும் இந்நாட்டு மன்னர் இல்லையோ..... (பரம்பரை ராஜாக்களின் மான்யத்தில் மண்ணள்ளிப் போட்டபின் அவுங்களும் நம்ம நிலைக்கு வந்துட்டாங்க, கேட்டோ! ) இதுலே ரெண்டு புடவைகள் வாங்கியாச்.  ஒன்னு எனக்கும், இன்னொன்னு அண்ணிக்கும்.  அவுங்களும் பூனாவில் கால்நூற்றாண்டுக்கும்மேல் குப்பை கொட்டுனவுங்க என்பதால் இந்தப் புடவைகளைப்பற்றித் தெரிஞ்சுருக்கும்தானே!
இந்த  ஹிம்ரூ புடவைகளின் இன்னொரு சிறப்பு என்னன்னா....  உள்ளூர் பருத்தியைப் பயன்படுத்தி நெய்யறாங்க. அதுலே இருக்கும் பூக்கள், சித்திரங்கள் எல்லாம் அஜந்தாவில் இருக்கும் ஓவியங்களில் இருக்கும் பூ வகைகளாம். மொஹம்மது பின் துக்ளக், தலைநகரை, தில்லியில் இருந்து தௌலதாபாத்துக்கு மாத்தியப்போ, தில்லியில் இருந்து வந்த நெசவாளர்கள் குடும்பம்தான் இங்கேயே தங்கிட்டாங்கன்னும், இப்பவும் அவுங்க வம்சாவழியினர்தான்  இந்தப் புடவைகளை நெசவு  செய்றாங்கன்றதும் சுவாரசியமான தகவல்தான்.

ஷாப்பிங் முடிஞ்சதுன்னு ஔரங்காபாத் திரும்பிப்போறோம். வழியெல்லாம்  அங்கங்கே சாலையோரப் பழக்கடைகள்.  சீதாப்பழமும், கொய்யாப்பழமுமாத்தான் கிடக்கு. ரெண்டுமே நியூஸியில் கிடைக்காது...   வாங்கலாமா, வேணாமான்னு எங்களுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்திட்டு, 'கிராமத்துலே இருந்து ஃப்ரெஷா வந்துருக்கும்'  வாங்கலாமுன்னு தீர்ப்பு வரும்போது ஏகப்பட்டக் கடைகளை கடந்து  போயிருந்தோம்.


ஒரு கடையாண்டை நிறுத்தச் சொல்லி இறங்கியாச்.  ஸக்ரா பாய் ( Zakra Bai ) கடை ஓனர். சீதா பழமும், கொய்யாவுமா ஒவ்வொரு கிலோ. வெள்ளைக் கொய்யாதான். ஆனால் கலர் தடவி வச்சுருக்காங்க.... எல்லாம் ஒரு ஷோதான்... தம்பாகு மாதிரி ஒன்னு பல்லுலே தேய்ச்சுக்கறது  மஹாராஷ்ட்ரா கிராமப்பெண்களின் வழக்கம். மிஷ்ரின்னு சொல்வாங்கன்னு நினைவு....   இது வாயைக் கருப்பாக்கி வைக்கும்....   நம்ம ஸக்ரா பாய்க்கும்தான்..... க்ளிக்கிய படத்தை அவுங்களுக்குக் காமிச்சப்ப, 'நான் இவ்ளோ அழகாவா இருக்கேன்'னு வெக்கத்தோடு சொன்னதைப் பார்க்கணுமே!!!

வாங்கின பழங்களை  பாகம்  பிரிச்சு, நதீமின் குழந்தைக்குன்னு கொடுத்தோம்.  ரெண்டு வயசாகப் போகுதாம்.
கன்டோன்மெண்ட் பகுதி கடந்து ஊருக்குள் வர்றோம். எனக்குக் கொஞ்சம்  புடவை, ப்ளவுஸுக்கான  எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் வேணும்.  தொடப்பக்கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் வேண்டி இருக்குமோ இருக்காதோ.... இப்பெல்லாம்  புடவைகளுக்குக் குஞ்சம் வேண்டித்தான் இருக்கு. அப்படியே 'நகைக்கடை' விஸிட் போகணும்.

குல்மண்டி(Gul Mandi ) என்ற இடம்தான் இங்கத்துக் கடைத்தெரு. பயங்கரக்கூட்டமும் ட்ராஃபிக்குமா இருக்கு!

நதீம் சொன்ன கடை என்னமோ மூடிக்கிடந்துச்சு. நாளைக்குத் திறப்பாங்களாம். அடுத்து நகைக்கடை.....    ஹிஹி.....   கடைவீதியில் சரியான பார்க்கிங் கிடைக்கலை. நாங்க  மட்டும்  வண்டியில் இருந்து இறங்கிக்கிட்டோம். போறவர்ற வண்டிகளைப் பார்த்தால் எனக்குப் பயமா இருக்கு. அந்தாண்டை எப்படிப் போகப்போறேன்?  'நம்மவர்' இதுக்குள் இந்தியச் சாலைப் போக்குவரத்து நெளிவு சுழிவுகளைக் கத்துக்கிட்டார் போல.... கையைப்பிடிச்சுத் தரதரன்னு இழுத்துப் போய் அந்தாண்டை விட்டுட்டார்.  பயந்து போய் 'என்ன இப்படி'ன்னு கேட்டால்.... 'சனம் எல்லாம் அப்படித்தான் போகுது'ன்றார்.
அந்தாண்டை நாம் போய் நின்ன இடமே ஒரு நகைக்கடை வாசல்தான்.  ஸோன் ரூபம்னு பெயர். சின்னப்பொண்களா நிறையப்பேர் வேலை செய்யறாங்க.  எல்லோரும் ரொம்பவே ஸ்நேகமாப் பேசறாங்க.  எனக்கு நத்து வேணும்.  மராத்திப்பெண்களின் பாரம்பரிய மூக்குத்தி :-)
அழகழகான டிஸைன்களில் கொட்டிக்கிடக்கு!  எதை எடுக்க?  ஒரு மூணு வாங்கினேன். எங்கூர் புள்ளையார் சதுர்த்திக்கு மறக்காமப் போட்டுக்கிட்டுப் போகணும் :-)

 உள்ளூர் பெண்களுக்கு கடைகள் பற்றிய விவரம் தெரியுமே, அவுங்ககிட்டே கேளுன்னார்  நம்மவர். குஞ்சம் லேஸ்ன்னு விற்கும் ஸ்பெஷல் கடை ஒன்னு பக்கத்துலே இருக்கு, நானே கூட்டிப்போறேன்னு சொல்றாங்க அந்தப்பொண்கள். ஹாஹா.... நெசமாவா?
கடை முதலாளியிடம்,  'உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம். அருமையான பெண்கள் வேலை செய்யறாங்க.  கஸ்டமரிடம் எப்படிப் பேச, நடந்துக்கன்னு தெரிஞ்சு வச்சுருக்கறவங்களால்  வியாபாரம் ரொம்ப நல்லா நடக்கும்'னு சொன்னது அவருக்கு(ம்) பிடிச்சுப்போச்சு.  கடைப்பையர் ஒருத்தரைக் கூப்பிட்டு எங்களை 'அந்தக்கடை'க்கு கூப்பிட்டுப்போய், திரும்பக் கூட்டிவரச் சொன்னார்.

பக்கத்துலேன்னு சொன்னது...... பக்கத்துலேயா இருக்கு?  பையர் கூடவே போறோம், போறோம் போய்க்கிட்டே இருக்கோம்.  குறுக்கு வழின்னு சொல்லிக்கிட்டே போறார் பையர் சாகர்.



வழியெல்லாம்  சாலையோரம் காய்கறிக் கடைகள், தள்ளுவண்டிகளில் பழக்கடைகள்.  இங்கேயும் அதே சீத்தாப்பழங்களும், கொய்யாப்பழங்களும்தான். எல்லாமே ரொம்பவே ஃப்ரெஷ்ஷா, பெருசு பெருசா இருக்கு!



 ஒரு   ஆஞ்சி கோவில் தாண்டிப்போறோம். உள்ளே போய் கும்பிட்டுக்கலாமுன்னு நினைக்கும்போது,   கடைப்பையர் அவர்பாட்டுக்கு  முன்னாலே போய்க்கிட்டு இருக்கார். தினப்படி பார்க்கும் இடங்கள்தானே...  நமக்கு அப்படியா?  ஆனால் அவரை இந்தக் கூட்டத்தில் தவறவிட்டுட்டால்..... எப்படித் தேடறதுன்னு....  போற போக்கில் ஆஞ்சிக்கு ஒரு கும்பிடு போட்டேன்.
சப்னா எம்போரியம்  வந்துட்டோம்.    இங்கேயும் நல்ல கூட்டம். புடவை முந்தானைக்கு வைக்கும் பட்டுக் குஞ்சலங்கள் வாங்கிக்கணும். நார்த் இண்டியாவில் நல்லதாக் கிடைக்குமுன்னு பார்த்தால், ஹிந்தி சினிமாவில் வர்றாப்ல  ரொம்பவே க்ராண்டான ஐட்டம்ஸ்தான் இருக்கு.  சரிதான்....தொடப்பக் கட்டைக்கு...........  நிஜமாவே  பட்டுக்குஞ்சலம்... ?

கொஞ்சம்  சுமாரா இருந்தவைகளையும் கல்பதித்த மோடிஃப்களையும் வாங்கிக்கிட்டுத் திரும்பி சாகரின் வழிகாட்டுதலில் சோன்ரூபம் கடையாண்டை வந்துட்டோம்.
நம்ம  வண்டி எதிர்வாடையில் காத்திருந்தது.
மறுநாளைக்கும் நமக்கு ஊர் சுத்திப் பார்க்க வண்டி  வேணும். நதீம் நாளைக்கு ஒரு குடும்ப நிகழ்ச்சிக்குப் போகணுமாம்.  சொந்தக்காரர் கல்யாணம்.  பகல் ரெண்டு வரைன்னா அவரே வர்றேன்னார். அரைநாளில் முடியுமா என்ன?  அப்ப வேற வண்டியை அனுப்பறேன்னார்.   ஔரங்காபாதில் முக்கியமாப் பார்க்க வேண்டிய இடங்களை ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்தார். (கையெழுத்து  ரொம்ப நல்லா இருக்கு!) அந்த ட்ரைவர்கிட்டே மேற்படி இடங்கள் சொன்னால் கூட்டிப்போவாராம்.
அம்பாஸடர் அஜந்தா வந்து சேர்ந்தப்ப மணி ஆறு. இனி எங்கேயும் போறதா இல்லை.  ரொம்ப நடந்தாச்சு.
நத்து நல்லா இருக்கான்னு பார்க்கணும், இல்லையோ? சின்ன மூக்குக்குக் கம்பிதான் ரொம்ப நீளம். சென்னையில் நம்ம சீனிவாசஆசாரியிடம்  கொடுத்து  வளைச்சு விடணும்.
ராத்ரிக்கு டின்னர் ரூம்சர்வீஸில்தான். புதினா பரோட்டாவும் தயிரும் !
 பின்பக்கத்தோட்டத்தில்  கல்யாணம் நடக்குது. புரோஹிதர் மைக்கில் மந்திரங்களைச் சொல்லிக்கிட்டு இருந்தார். ராத்ரி பதினொரு மணி இப்போ. வெளிச்சத்தங்கள் அடங்கிய நிலையில்  சொல்லும் மந்திரங்கள் ஸ்பஷ்டமாக் கேட்டது. கல்யாணப் பொண்ணும் புள்ளையும் நல்லா இருக்கட்டும்!

தொடரும்........  :-)

7 comments:

said...

மிக அருமை, நன்றி.

said...

ஆகா! நத்து. கடைதெருக்கள் சுற்றி வந்தோம்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் கடைவீதி முழுசும்.......... நமக்குத்தான் நேரமில்லை....

said...

கடைத்தெருவில் உலா! மகிழ்ச்சி.

வெளியூர்கள் போகும்போது நான் பெரும்பாலும் ஏதும் வாங்குவதில்லை! நாம் வாங்குவது சரியாக இருக்குமோ இருக்காதோ என்ற எண்ணம் வந்து விடுவதால்! :)

தொடரட்டும் பயணம். நானும் தொடர்கிறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தனியே போகும்போது (ஆண்கள் ) ஏதும் வாங்காமல் வர்றது ரொம்பச் சரி. தேவையில்லாமல் பல பொருட்கள் நம் வீட்டில் சேர்ந்தது இப்படித்தான் :-)

தொடர்வதற்கு நன்றி !

said...

இனிய ஊர் சுற்றல்😄😄😄..