Friday, January 17, 2020

சிவன் கூப்பிட்டார் !! (பயணத்தொடர் 2020 பகுதி 2)

எல்லோரா குகைக்கோவில்களுக்குப் போய்க்கிட்டு இருக்கோம்.  நதீம் என்ற பெயருடையவர்தான் நமக்கான சாரதி.  நல்ல பண்புள்ள மனிதரா இருக்கார்.  மெல்லிய குரலில் பேசறார்.  கன்டோன்மெண்ட் ஏரியாவைக் கடந்து போறோம்.
கொஞ்சதூரத்தில் ஒரு குன்றின் உச்சியில் கோட்டை ஒன்னு  கண்ணில் பட்டது.  பார்த்தவுடன் எனக்கு 'திக்'னு இருந்தது உண்மை. 'நம்மவர்' ஒரு கோட்டை ப்ரேமி.  அவருக்காக ராஜஸ்தான் பயணத்தில் கோட்டை, கோட்டைன்னு  ஒன்னு விடாமப் பார்த்தே நொந்து போயிருக்கேன்.  இது  தௌலதாபாத் கோட்டையாம்.  இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லையாம். உள்ளே பழுதுபார்க்கும் வேலை நடக்குது போலன்னு நினைச்சேன்....    கார் போகும் பாதையெல்லாம் இல்லை. நடந்தே மேலேறிப் போகணும், அதுவும் 750  படிகள்  என்றது கூடுதல் தகவல்.

அப்பதான் 'நம்மவர்' சொன்னார்  'போனமுறை ஔரங்காபாத் வந்தப்ப, மேலே ஏறிப்போயிருக்கேன்'னு  ( அப்பாடா.....    தப்பிச்சேன்.... ) வீட்டுக்குப்போய் பழைய ஃபோட்டோ ஆல்பத்தைத் தேடிப் பார்க்கணும்.  ஏகப்பட்ட ஆல்பங்கள் கிடக்கு.  கடலில் மூழ்கி முத்தெடுக்கறாப்போலதான்....  டிஜிட்டல்  கெமெரா வந்து இப்ப வாழ்க்கையைக் கொஞ்சம் சுலபமா மாத்திருச்சு இல்லே :-)

பனிரெண்டாம் நூற்றாண்டில் யாதவ மன்னர்கள் கட்டிய இந்தக் கோட்டைக்கு தேவகிரின்னு பெயர். மொகலாயர்கள் நம்ம நாட்டுக்குள் வந்து ஆட்சியைப் பிடிச்சுக்கிட்டு இருந்த காலத்தில் முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில்,  இதன் பெயரை மாத்தி தௌலதாபாத்னு வச்சுருக்காங்க.  அப்புறம் இதே ஊரைத் தலைநகரா மாத்தினபிறகு, தண்ணீர் கஷ்டம் காரணம் சரி வரலைன்னு  விட்டுட்டுப் போனதெல்லாம் சரித்திரம்....  இப்போ பாழடைஞ்சுதான் இருக்காம். சரித்திர முக்கியத்வம் உள்ள இடங்களைப் பாராமரிக்க வேணாமோ?  ப்ச்... என்னமோ போங்க......

மலைப்பாதை முடிஞ்சு சமதளத்தில் போகும்போது  அங்கங்கே ஸில்க் பஸார்னு  தனித்தனிக் கட்டடங்கள்.  ஔரங்காபாத்  புடவைகளாம். வரும்போது கண்டுக்கணுமுன்னு மூளையில் முடிச்சுப் போட்டு வச்சேன் :-)
எல்லோராப் பகுதிக்கு ரொம்பப் பக்கத்துலேதான் ஸ்ரீ க்ரிஷ்னேஸ்வர் கோவில் இருக்கு. ஒரு ரெண்டரைக் கி மீவுக்கும் குறைவுதான். பனிரெண்டு ஜ்யோதிர்லிங்கக் கோவிலில் ஒன்னு.  முதலில் கோவிலுக்குப் போயிட்டுக் குகைக்குப் போலாமுன்னு சொன்னார் 'நம்மவர்'.  சரின்னு அங்கே போனோம்.






 கோவிலுக்குப் போகும் வழியிலேயே ஒரு மசூதி போல ஒன்னு  அந்தக் காலத்துலேக் கட்டி இருக்காங்க. ஒருவேளை சமாதியோ?  சின்னதுதான்.  அதைப் பொருட்படுத்தாம சனம் போய் வந்துக்கிட்டு இருக்கு. கோவில் பூஜைப்பொருட்கள், இன்னபிற விற்கும் கடைகள் ஏராளம்.  கோவிலுக்குள் செல்ஃபோன், கெமெரா அனுமதி இல்லை. வாசலுக்குப் பக்கத்தில் பாதுகாத்துக் கொடுக்கும் இடம் இருக்கு.  அங்கே கொடுத்துட்டு, எதுத்தாப்போல இருக்கும் காலணி பாதுகாக்கும் இடத்தில் காலணிகளை விட்டுட்டுப் போனோம். 

பெரிய முற்றம் கடந்து  ஒரு பக்கமா இருக்கும் கோவிலுக்குள் போறோம். நல்ல கூட்டம்.  கருவறைக்குள்ளே போகுமுன் ஆண்கள், மேல்சட்டையைக் கழட்டிடணும்.  வெற்று மார்பு காமிக்காமத் தோளில் சட்டையைப் போட்டுக்கலாம்.  தரையில் பதித்த சிவலிங்கத்துக்கு தாராபிஷேகம் இருந்தாலும்,  சனமும் பால், தன்ணீர்னு  கொண்டுபோய் அபிஷேகம் பண்ணறாங்க. அங்கேயே பக்கெட்டில் பால் வச்சுக்கிட்டுச் சில பண்டிட் உக்கார்ந்துருக்காங்க. 'அபிஷேகம் பண்ணனுமுன்னா இந்தப் பக்கம்'னு  சொல்லிக்கிட்டு அந்தாண்டை ஆட்களை அனுப்பிக்கிட்டு இருந்தார் ஒரு பண்டிட்.  அந்தப் பக்கம் போனால்தான் சிவனை வலம் வர முடியும்.  நாங்க இந்தப் பக்கம் இருந்தே குனிஞ்சு சிவலிங்கத்தைத் தொட்டுக் கும்பிட்டோம்.  சிவனுக்கருகில் கொஞ்சம் தக்ஷிணையை வச்சுட்டுத் திரும்புனபோது,  அங்கே உக்கார்ந்துருந்த பண்டிட்,  என்னைக் கூப்பிட்டு ஒரு வாழைப்பழமும், கொஞ்சம் வில்வமும், ஒரு சாமந்திப்பூவும் கொடுத்தார்.  பிரசாதம் கிடைச்சுருச்சு.  இது போதுமுன்னு  அந்தச் சின்னக் கருவறை விட்டு வெளியே வந்தோம். வாசல் ரொம்பவே உயரக்குறைவு. நல்லா குனிஞ்சுதான் வரணும்.

ராணி அஹல்யாபாய் ஹோல்கர், அந்நியர்கள் இடிச்சதைத் திரும்பக் கட்டி இருக்காங்க.  அட!  இவுங்கதானே சோம்நாத் கோவிலையும், காசி விஸ்வநாத் கோவிலையும் திரும்பக் கட்டுனவங்க, இல்லையோ.... ஜ்யோதிர்லிங்கக் கோவில்களில்  சுயம்புலிங்கங்கள்தான் என்றாலும்,  ஆதி கோவில்களை இடித்த முகலாயர்களின் ஆட்சி வீழ்ந்த காலக்கட்டங்களில் (பதினெட்டாம் நூற்றாண்டு ) கோவிலைத் திரும்பக் கட்டுனதாகத் தகவல்.   அன்னியர் ஆட்சியில் ஏராளமான பழைய கோவில்களை இடிச்சுட்டாங்கதானே :-( அப்போ ஏது  இந்த  மத நல்லிணக்கம் எல்லாம்? ஹூம்....


அஞ்சடுக்கு ஷிகாரா வகைக் கோபுரத்தோடு, இந்தக் கோவில்  இருக்கு. அழகான கோபுரம் !

 சின்னக்கோவில்தான்.  கருவறைக்கு முன்பக்கம் உயரம் குறைவான பெரிய பெரிய தூண்கள் நிறைஞ்ச மண்டபம். கருவறையைப் பார்த்தபடி மண்டபத்தின் ஒருபக்கம் நந்தி.  நந்திக்கும் அபிஷேகம் நடந்துக்கிட்டு இருந்தது. மக்கள் அவுங்கவுங்க பாலோ, நீரோ  கொண்டுவந்து அபிஷேகம் பண்ணிட்டுப் போறாங்க.  தூண்களில் சிற்பவேலைகள் நல்லாவே இருக்கு.  கெமெரா அனுமதி இல்லையேன்னு மனசு தவிச்சது உண்மை.



மேலே : கூகுளார் அருளிச் செய்த படங்கள்   போட்டுருக்கேன். நன்றி.

எதிர்பாராமலேயே இதுவரை அஞ்சு ஜ்யோதிர்லிங்கம் தரிசனம் நமக்குக் கிடைச்சது, ஏதோ விட்டகுறை தொட்டகுறையோ என்னவோ ! 

மஹாராஷ்ட்ர மாநிலத்தில் மட்டும் அஞ்சு ஜ்யோதிர்லிங்கங்கள் !   ரொம்பவே புண்ணியம் செஞ்ச பூமி!

வெளியே வந்ததும், காலணிகளை எடுத்து மாட்டிக்கிட்டு, கெமெராவைத் திரும்ப வாங்கியதும்  சிலபல க்ளிக்ஸ்.  குறைஞ்சபட்சம் வளாகத்துக்குள் மட்டும் அனுமதி கொடுக்கலாம். ப்ச்.....



கைப்பை விற்கும் கடையில் மகளுக்கு ஒன்னு வாங்கினோம். ஆச்சு ஷாப்பிங் :-)

காராண்டை வரும்போது, பக்கத்தில்  விளையாடிக்கிட்டு இருந்த பிஞ்சு முகம் பார்த்துட்டு, 'அம்மா எங்கே'ன்னு கேட்டதுக்கு அதோன்னு எதிர்சாரியைக் காமிச்சது.  டீ குடிச்சுக்கிட்டு இருக்காங்க அம்மா.  பழம் கொடுக்கட்டான்னு  கேட்டுட்டுப் பிரஸாதப் பழத்தைக் குழந்தைக்குக் கொடுத்தேன். ஆவலாய் உரிச்சுத் தின்னது குழந்தை !  சிவன் சந்தோஷிச்சு இருப்பார்!

 அங்கிருந்து கிளம்பி எல்லோரா   முகப்புக்கு வந்தோம்.   கார் பார்க்கிலிருந்து உள்ளே கொஞ்ச தூரம் நடக்கணும். நதீமின்  செல்நம்பரை வாங்கிக்கிட்டு உள்ளே போனோம்.

தொடரும்....... :-)


11 comments:

said...

என்ன ஒரு அழகிய கோவில், கோபுரம்...

said...

கோபால் சார் உங்களை விட்டுட்டு தனியா ஜாலியா போய் சுத்திப்பார்த்த ஜோதிர்லிங்கம்.

அருமை நன்றி

said...

அரிய தகவல் சிவன்கோவில்களும் உங்கள் பட்டியலில் இருக்கிறதே

said...

அழகான கோவில். கோபுரம் ரொம்பவே கவர்கிறது.

பராமரிப்பு - ஒன்றும் சொல்வதற்கில்லை! :(

தொடர்கிறேன்.

said...

அழகிய கோவில். கவரும் வேலைப்பாடு.

said...

வாங்க ஸ்ரீராம்,

உண்மையிலேயே ரொம்ப அழகு !

said...

வாங்க விஸ்வநாத்,

ஹாஹா.... ஜாலியாத்தான் இருந்துருக்கும். ஆனால் இங்கே திரும்பி வந்தவுடன் முகத்தை சோகமா வச்சுக்குவார் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

சிவன் என்ன எனக்கு விரோதியா? சந்தர்ப்பம் கிடைச்சால், நழுவவிடாமல் போகத்தான் வேணும், இல்லையா?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,,

எப்போ நம்ம சனமும், அரசும் அருமை பெருமைகளை உணரப்போதோ? :-(

said...

வாங்க மாதேவி,

வருகைக்கு நன்றிப்பா !

said...

ராணி அஹல்யாபாய் ஹோல்கர், அந்நியர்கள் இடிச்சதைத் திரும்பக் கட்டி இருக்காங்க...

அறிய வேண்டிய தகவல் மா...


அஞ்சடுக்கு கோபுரம் மிக அழகு...