Wednesday, January 22, 2020

உலகை மறக்கலாம்...... (பயணத்தொடர் 2020 பகுதி 4)

வெளிப்புறச் சுவர்களிலேயே அதகளம் ஆரம்பிச்சுருது!  ஹிரண்யகசிபுவை, மடியில் போட்டு வயித்தை ஒரே கிழி !


எல்லாமே பெரிய பெரிய சிலைகள்.  வராஹம் நிக்கற ஸ்டைல் பாருங்க.... என்ன ஒரு கம்பீரம்....  உலகளந்தான் அளந்துக்கிட்டு இருக்கார். ஆமாம்.... இது சிவன் கோவில் இல்லையோ?  அந்தக் காலத்தில்  சிவா விஷ்ணு பேதம் இருந்துருக்காது..... சாமின்னா எல்லா சாமியும்தான்.....
எலக்ட்ரானிக் கேட்டும், ரெண்டு செக்யூரிட்டிகளும்.... கடந்து உள்ளே போறோம்.



தொந்திக்கணபதி, கஜலக்ஷ்மி, த்வாரபாலகர்கள்னு அமர்க்களமா இருக்கு!  எங்கே திரும்பினாலும் கற்சுவர் முழுக்கச் செதுக்கித்தள்ளி இருக்காங்க.  கருடவாஹனத்தில் பெருமாள் ! மஹிஷாசுரமர்த்தினி, சிவனும் உமையும்.... ஹைய்யோ..... எதைச் சொல்ல எதை விட?

யாருப்பா.....இது கரும்புவில்லோடு நிக்கறது?  நம்ம மன்மதன் இல்லையோ?


நடுவிலே மாடியும் கீழுமாப் போகும் கட்டடம்.  முற்றத்தின் ரெண்டு பக்கங்களிலும் நம்ம யானை! கல்தூண்கள்.  ஒரு கல்தூண் விஜய ஸ்தம்பம், இன்னொன்னு விளக்கு ஸ்தம்பம்.
மொதல்லே.... இப்படிக் கோவிலை டிஸைன் செஞ்சது யாராக இருக்கும்?  எப்படி இப்படி ஒரு ஐடியா வந்துருக்கும்? ஒரு மலையையே...  இப்படி  நடுப்பகுதி பாதிக்காம வெட்டி எடுக்க எப்படி முடிஞ்சது?   வெட்டிவச்ச துண்டத்தில்  மேலே கருவறை விமானத்தில் இருந்து ஆரம்பிச்சு, அப்படியே கீழே வரை செதுக்கிக்கிட்டே வர எப்படி முடிஞ்சது?

ராஷ்ட்ரகூட மன்னர்கள் ஆட்சி காலத்தில் மன்னர் தந்திதுர்கா அவர்களால் கட்ட ஆரம்பிச்சதை,  தலைமுறைகளுக்குப்பின் இருந்த மன்னர் முடிச்சு வைக்கும்போது  இருநூறு வருஷங்களும், பத்துத் தலைமுறை சிற்பவல்லுநர்கள் வம்சமும் கடந்தே போயிருக்குன்னா.......   ஹைய்யோ.....
மொத்த மலையும்  ஒரே கல்தானே.....  இப்படி ஒரே கல்லில் கருவறைகள், மண்டபங்கள், சந்நிதிகள்,  நடந்து போக வெராந்தாக்கள், மாடி  அமைப்பு, அதுக்கான படிக்கட்டுகள்,  ஸ்தம்பங்கள், முற்றத்துலே நிக்கும் யானைகள்,  மண்டபங்களின் மேலே நிற்கும் யானைகள்,  கஜபீடம் என்ற வகையில் யானைகளே தாங்கி நிற்கும் கருவறை, நாகதேவதைகள், யாளிகள், ஒரு இடம் பாக்கி விடாமக் கடவுளர்களின் சிற்பங்கள்....இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்........    இதெல்லாம் எப்படி சாதிக்க முடிஞ்சது?


காலக்கட்டம் ஏழாம் நூற்றாண்டுன்னு நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் சொல்றாங்கன்னா... அப்போ ஏது இப்ப இருக்கும்  கட்டட வேலைக்கான கனரக  மெஷீன்ஸ்?
இது மனிதர்கள் கட்டிய கோவில் இல்லை......   தேவர்களே மண்ணில் இறங்கி, இந்த தெய்வங்களுக்காகக் கட்டிய கோவில்னு சொல்றது உண்மையாத்தான் இருக்குமோ?
நட்ட நடுவில் கோவிலும், சுத்திவரப் பிரகாரமுமா இருக்கு! நல்ல உயரத்தில் செதுக்கி இருக்காங்க. கிட்டத்தட்ட ரெண்டாள் உயர மேடை ! செதுக்கிக்கிட்டே வரும்போது தப்பித்தவறி ஏதானும் பிழை ஆச்சுன்னா, கதை கந்தல் இல்லையோ? இப்படி ஒரு பெர்ஃபெக்‌ஷன் எப்படிப்பா? எப்படி?  வேற  எந்த எண்ணமும் மனசுலே இல்லாம  'கருமமே கண், கை'ன்னு இருந்துருந்தால்தானே  இப்படி  ஒன்னு முடிஞ்சுருக்கும்..... ?
பிரகாரத்தை வலம் வரும்போது, நமக்கிடதுபக்கம் இருக்கும் மலையிலேயே திண்ணை அமைப்பு போல அகலமாவும்,   தூண்கள் வரிசைகளாவும் குகைமண்டபங்கள் மூணு பக்கங்களிலும்..... இதுலே மாடி வேற !   ஹைய்யோ..... யாரோட சிந்தனையில் உதிச்சது?
காலப்போக்கினாலோ, இல்லை அந்நியர்களின் கைவரிசையாலோ, விஷமிகளின் வேண்டாத வேலையாலோ  நிறைய சிற்பங்கள் உடைஞ்ச நிலையில்தான் இருக்கு. மேலும் பழுதாக்காமல் இருக்க சுத்திவரக் கம்பித்தடுப்பு போட்டு வச்சது நல்லதுதான்.   இல்லைன்னா...   நம்ம சனம் மட்டும் சும்மாவா  இருக்கும்?

(நம்ம பக்கம் கோவில்களில் பார்க்கறோமே......   முடிஞ்சவரை பழுதாக்கி, கிறுக்கி வச்சால்தானே அவுங்க  மனசே ஆறுது.... )

மாடிப்படிகளுக்கான அமைப்பின் வெளியே சுவரில் ஒருபக்கம் முழுசும் ராமாயணம். இன்னொரு பக்கம் முழுசும்  மஹாபாரதம் !  ஹைய்யோ  ஹைய்யோ....

ராவணன், சீதையை விமானத்தில் வச்சுக் கடத்திக்கிட்டுப் போறான், ராவணன் சபையில் அவனுக்குச் சரியாசனமா வாலால் மேடை கட்டி அதன் உச்சியில் உக்கார்ந்துருக்கும் ஆஞ்சி..... , யுத்தக் காட்சிகள்....   பார்க்கப்பார்க்கக் கண்ணும் மனசும் நிறைஞ்சே போயிருது.

படியேறி மாடிக்குப்போறோம்.  மாடிப்படிக்கான வழிகள் உட்பட  ரெண்டு பக்கமும் ஒரே மாதிரிதான் !  (Symmetrical )
மேலே பெரிய வாசலுக்குள் போனா.... ஏராளமான தூண்களோடு  ரொம்பப்பெரிய மண்டபம்.  மண்டபத்துக்கு அந்தாண்டை கைலாசநாதர் லிங்க வடிவில்!  நாம் போய் தொட்டுக்கும்பிடலாம்!  கும்பிட்டோம்.
மண்டபத்தின் வழியாக கருவறையை வலம் வரலாம். கோஷ்டத்திலும் கணக்கில்லாத சிற்பங்களே! இதைத் தவிர  நாம் வலம் வரும் போது, நமக்கிடப்பக்கம் தனித்தனிச் சந்நிதிகள் வேற வரிசை கட்டி.....
லக்ஷ்மியோடு என்ன ஆட்டம் பார்த்தீங்களா, சிரிச்ச முகமுள்ள சிங்கத்துக்கு!
வலம் முடிஞ்சு  அந்தப் பக்கம் வாசல் வழியாத் திரும்ப மண்டபத்துக்குள் வந்து,  இங்கே நின்னபடியே ஈசனை இன்னொருக்கா வணங்கிட்டு,  கருவறை மண்டபத்தை விட்டு வெளியே வர்றோம்.   வெளிமண்டபத்துக்கு எதிரில் நீண்டு போகும் ஓப்பன் காரிடார் போல....

அங்கிருந்து ஒரு ஏழெட்டுப்படி இறங்கி நடக்கணும். இன்னொரு மண்டபத்துக்குள்ளே நுழைவோம். மண்டபத்தில் கருவறைவாசலுக்கு நேர் எதிரா  நந்தி உக்கார்ந்துருக்கார். பொதுவாக  கம்பீரமாத் தலை உயர்த்தி ஈசனைப் பார்க்கும் நந்தியைத்தானே  இதுவரைக் கோவில்களில் நாம் பார்த்துருக்கோம்.  இங்கே ஒருபக்கமாத் தலையைச் சாய்த்து வச்சுக் கீழ்ப்பார்வை பார்க்கும் நந்தி. எதாவது தப்பு செய்யும் குழந்தைகளைக் கையும் களவுமா நாம் புடிச்சுட்டாக் கீழ்ப்பார்வை பார்க்குமே அப்படி!  ஏண்டா நந்தி.... என்ன செஞ்சு இப்படி சாமியாண்டை மாட்டிக்கிட்டே?  :-)
நந்திக்கு இடம் வலமுன்னு ரெண்டு பக்கமும் ஜன்னல்கள் ! நந்திக்குப் பின்னால் இருக்கும் வாசலுக்குள் போனால் இன்னும் சில படிகள் இறங்கி நேரா நடந்து கோவிலின் முகப்புக்கு மேல் இருக்கும்  மாடத்தின்(பால்கனி) வழியா முன்புறத் தோட்டத்தைப் பார்க்கலாம்.

இந்த மண்டபத்துக்கு மூணுபக்கமும் வாசல்!   இடம் வலமுன்னு ரெண்டு பக்கமும் இருக்கும் வாசலுக்குள் போனால் நாலு படி இறங்கி நடந்து போய்  கருவறை விமானம், கீழே பிரகாரம் எல்லாம் பார்க்கலாம்.
கருவறை முன்மண்டபத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் வர்ற மாதிரி கட்டி இருக்காங்க.

நாம் இன்னும் மேல்தளத்துலேயே நடந்து, அக்கம்பக்கம் பார்த்துக்கிட்டுருக்கோம். மனசில்லா மனசோடுதான் கீழே இறங்கி வரும்படி ஆச்சு. மண்டபங்கள் கடந்துபோய் ஏறி வந்த அதே வழியில்  கீழே போய்ச் சேர்ந்தோம். இந்த பதிநாலு நூற்றாண்டுகளில்  கோடி கோடி மக்கள் ஏறி, நடந்து தேய்ஞ்சு போன படிகள், இல்லே?

கோவிலில் நல்ல கூட்டம்.  பள்ளிக்கூடப்பிள்ளைகள்  'கல்விச்சுற்றுலா' வந்துருக்காங்க. ஓரளவு விவரம் உள்ள வளர்ந்த பிள்ளைகளைக் கூட்டிவந்தது சரி.  ரெண்டாங்ளாஸ், மூணாங்ளாஸ் பிள்ளைகளையும் பார்த்தேன். எந்த சிற்பங்களையும் ஏறெடுத்தும் பார்க்காமல்  அவுங்களே தங்களுக்குள் விளையாடிக்கிட்டு வரிசையில் நடந்துக்கிட்டு இருந்தாங்க....

 சாயங்காலம் அஞ்சரை வரை திறந்து வைக்கிறாங்களாம். பிரதோஷம், விசேஷநாள் இப்படி வரும்போது, உள்ளூர் மக்கள் வந்து பூஜை செஞ்சுட்டுப் போறாங்களாம். இன்னிக்குக்கூட சோமவாரம் என்பதால் பாட்டிலில் தண்ணீர், கொஞ்சம் சாமந்திப்பூவோடு  சிவன் காட்சி கொடுக்கறார். மத்தபடி  சுற்றுலாப்பயணிகள்தான் மொய்ச்சுக்கிட்டு இருக்காங்க.

காலையில் ஆறரைக்குத் திறந்து, மாலை அஞ்சரைக்கு  மெயின்கேட்டை மூடிடறாங்க.  வாரவிடுமுறை செவ்வாய்க்கிழமை.
 மணி ரெண்டாகப்போகுது.....   நம்மவர் வயித்துலே மணியும் அடிக்குது.  ட்ரைவர் வேற சாப்பிடாமல் காத்துக்கிட்டு இருப்பார். கைலாஷின் வெளிவாசலுக்கு வந்து கொஞ்சம் க்ளிக்ஸ் முடிச்சுக்கிட்டு ஒரு அரைக்கிலோ மீட்டர் நடந்து மெயின் கேட்டுக்கு வந்தோம். நதீமை செல்லில் கூப்பிட்டுச் சொன்னதும் அவர் வந்துட்டார்.

இன்னும் கொஞ்சநேரம் 'நல்லாப் பார்த்துருக்கலாமோ'ன்ற எண்ணம் ஒரு பக்கமும்,   'உண்மையான உலக அதிசயம் ' பார்க்கக் கிடைச்சதின் திருப்தி ஒரு பக்கமுமா என்னை (வழக்கம்போல்) அலைக்கழிக்க 'கைலாசம்' விட்டுக் கிளம்பியாச்சு....

தொடரும்.......   :-)

PIN குறிப்பு: இந்தக் கோவிலின் பட ஆல்பம் அடுத்த பதிவாக இருக்கு. நேரமும் விருப்பமும் இருந்தால் என்னோடு சுத்திப் பார்க்கலாம், வாங்க !!

8 comments:

said...

அருமை சிறப்பு
நன்றி

said...

விபரமாக வர்ணித்துள்ளீர்கள் படங்களும் சிறப்பு.

said...

ஒரு நாள் போதுமா? இத்தனைச் சிற்பங்களைப் பார்க்க! நிச்சயம் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. எத்தனை கலை நயம்!

உங்கள் வழி நானும் பார்த்து ரசித்தேன். நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

ரசித்தமைக்கு நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இந்தியாவில் உள்ள கலையம்சங்களை ரசிக்க ஒரு ஜென்மம் கூடப் போதாதுதான்!

கிடைச்சவரை சரின்னு இருக்க வேண்டியதுதான், இல்லையோ?

said...

வார்த்தைகள் இல்லா பிரமிப்பு மா எனக்கு..

எத்தனை எத்தனை சிலைகள்...அதுவும் குடைந்து எடுத்து... ஆஹா...ஆஹா...

கண்டிப்பாக நேரில் சென்று ரசிக்க வேண்டும்..

said...

உங்களின் மொழி நடை மூலமாக நானும் சுற்றிப்பார்த்து திருப்தி அடைந்தேன். nandri karunakaran