Monday, October 31, 2016

எல்லாம் சரியா இருக்கா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 94)

நம்ம ரஜ்ஜு இருக்கான் பாருங்க...... அவனிடம் ஒரு பழக்கம்.....   கொஞ்ச நாள்  கேட்டரி என்னும்  பூனைஸ் ஹாஸ்டல் போய் தங்க வேண்டி வந்து, லீவு முடிஞ்சதுன்னு  நாம் போய்  கூட்டிக்கிட்டு வருவோமில்லையா...  அப்ப வீட்டுக்குவந்து கூண்டைத்  திறந்து விட்டதும்  முதல்லே போய்  எல்லாம் அந்தந்த இடத்தில் சரியா இருக்கா? நாமில்லாதப்ப வேற யாராவது வந்துட்டுப் போயிருப்பாங்களோ? இது நம்ம வீடுதானா இப்படி எல்லாம் சந்தேகம் வச்சுக்கிட்டு ஒவ்வொரு மூலையா, ஒவ்வொரு அறையாப்போய் மோந்து பார்த்துட்டுப் புழக்கடைப்பக்கம் போகும் பூனைக்கதவு திறந்து  இருக்கு தானேன்னு செக் பண்ணிட்டு இதுநாள்வரை ஏதும் நடக்காத  மாதிரி, தலையைத் தூக்கிக்கிட்டு  சிங்கம் போல அங்கிட்டும் இங்கிட்டுமாப் போய் வருவான்.  ரஜ்ஜு மட்டுமில்லை, நம்ம வீட்டு மத்தச் செல்லங்களும் இப்படித்தான் என்றாலும்,  ரஜ்ஜு காலத்தில்தான்  பயணங்கள் அதிகமா  நடப்பதாலே,  அடிக்கடி  ஹாஸ்டல் லைஃப் அனுபவிக்கும்படி ஆகுது  அவனுக்கு.  இதையெல்லாம் கவனிச்சு கவனிச்சு  என் மனசில் இந்த பேட்டர்ன் ஒட்டிக்கிச்சு போல!


மூணே காலுக்குக் கிளம்பி ரங்கா ரங்கா கோபுரவாசலுக்குப்போய் இறங்கினோம். நம்ம ஹயக்ரீவாவில் இருந்து நேரா இடது பக்கம் பொடி நடையாப் போனால் பத்து நிமிட் ஆகலாம். வெறும் 850 மீட்டர்தான். வெயில் ஒரு பக்கம், கூட்டம் ஒரு பக்கம், நடக்க சரியான நடைபாதை கிடையாதுன்ற பலகாரணங்களால் வண்டியில் போக வேண்டி இருக்கு. இதுலே ஒரு வழிப்பாதைன்னு இங்கே அங்கே திரும்பி ஏறக்கொறைய பாதி கோவிலைச் சுத்திக்கிட்டு ரெங்கா கோபுரத்தாண்டை இறங்க எடுத்துக்கற நேரம் பதினொரு நிமிட்.

செக்யூரிட்டிச் செக் முடிஞ்சு  திருமாமணி மண்டபம் கடந்து விடுவிடுன்னு போய் ரெங்கவிலாஸ் மண்டபத்தின் இடதுபக்கம் கெமெரா டிக்கெட் வாங்குனதும்தான் நிதானம் வந்துச்சு நடையில் :-)


எல்லா சந்நிதியும் பத்திரமா இருக்கான்னு பார்த்துக்கணும். பெரிய சைஸிலிருக்கும் பெரிய திருவடிக்கு ஒரு கும்பிடு போட்ட கையோடு  முதலில் போய் நின்னது நம்ம அன்னமூர்த்திப் பெருமாள் சந்நிதியில்தான்.  தின்னும் ஒரு பிடி சோற்றுக்குப் பஞ்சம் வராமல் வைக்கவேணும் என்ற வேண்டு கோளுடன் ஒரு  க்ளிக்:-)  மடியில் துளசியோடு உக்கார்ந்துருக்கார் !

பெரியவரைப் பார்க்கலையான்னு கேட்ட கோபாலுக்கு இன்றைக்கு வேண்டாமுன்னு  சொல்லிக்கிட்டு இருக்கும்போதே  இவர் விடுவிடுன்னு போய்  அம்பது ரூ வரிசையில் போய் நின்னார். 'நாளைக்குப் பார்க்கலாமுன்னு நினைச்சேன்' என்று ஆரம்பிக்கும்போதே... "அது எப்படிமா......இவ்ளோ தூரம் வந்துட்டு, அவரை நாளைக்குப் பார்க்கலாமுன்னு சொல்றே...."

 சனிக்கிழமை கூட்டம் அதிகம் இருக்குமேன்னால்.... அதிசயத்திலும் அதிசயமா  இந்த நேரம் அவ்வளவாக் கூட்டம் இல்லே!   முந்தியெல்லாம்  மூணு முதல் நாலு வரை சீனியர் சிட்டிஸன்களுக்கு  இந்த அம்பது ரூ வரிசையில் இலவச  அனுமதி  இருக்குன்னு வேற கேள்வி. அதையும் விசாரிக்கலாமுன்னு  டிக்கட் கவுண்ட்டரில் கேட்டால் அதை ரத்து பண்ணிட்டாங்களாம். அதுவுமில்லாம  அம்பது ரூ டிக்கெட்டே கிடையாதாம்.  முன்னாலே ரெண்டு சேர்த்துட்டால் ஆச்சுன்னு  தெரிஞ்சது. 250 ரூ டிக்கெட் மட்டும்தான்!

திருப்பாதம், திருமுகம் கட்டாயம்  தரிசிக்கணும் , அதே சமயம் கழுத்துலே இருக்கும் தங்கத்தைக் காப்பாத்திக்கணும் என்ற    நினைப்போடயே வரிசையில்  போய்ச் சேர்ந்தோம்.  கூட்டம் இல்லைன்னு நினைச்சது தப்பு. வந்த கூட்டம் முழுசும் அங்கே முன்மண்டபத்துக் கம்பித் தடுப்புகளுக்கிடையில்   அடைசலா நிக்குது.   'தள்ளும் முள்ளும் இல்லாமல் சாமி தரிசனம் ருசிக்காது'ன்னு அவுங்களே தள்ளிக்கிட்டும் இடிச்சுக்கிட்டும் இருந்தாங்க.  ஒரு வழியா நம்ம வரிசை நகர்ந்து  பெரும் ஆளை  'அடியும் முடியுமா' ஸேவிச்சுக்கிட்டு, யாகபேரர் இருக்காரான்னு எட்டிப் பார்த்தும் ஓரளவு திருப்தியுடன்  காயத்ரி மண்டபப்படிகளில் இறங்கினோம்.

அதென்னவோ கோவில்களில் இந்த கம்பித்தடுப்பு சமாச்சாரங்களை  இங்கேயும் அங்கேயுமா மாத்தி  மாத்தி வச்சு   ரூட்டை மாத்திக்கிட்டே இருக்காங்க.  முந்தி கீழே இறங்குனதும் விஷ்வக்ஸேனர் சந்நிதியைச் சுத்திட்டு,  விமான தரிசனம்  பார்க்கக்கிடைக்கும் திண்ணை மீது ஏறின  நினைவு.  இப்ப என்னன்னா.... கம்பித்தடுப்பு மூலவருக்குப்  பின்னே   இருக்கும் வடக்கு வாசலுக்குப்போகும் வழியில் கொண்டு விட்டுருச்சு. நமக்கு முன்னே போன சிறுவன், படிகள் மேலேறினதும் திரும்பி நின்னு சட்டைப்பையில் இருந்து  செல்ஃபோன் எடுத்து  மேலே அண்ணாந்து பார்த்து க்ளிக்கினான்.



என்னத்த க்ளிக்கிறான்னு அஸ்வாரசியமா திரும்பிப் பார்த்தால் ரங்க விமானம்!  நம்மகிட்டேதான் கெமெரா டிக்கெட் இருக்கேன்னு சட்னு  கைப்பையில் இருந்து கெமெராவை எடுத்து க்ளிக்கினேன்.  அப்படியே அந்த மூலையில் இருந்த சந்நிதியையும்.


அப்படியெ வடக்கில் போகும்வழியிலேயே போகும்போது,  ஒரு இடத்தில்  மேலே பார்ன்னார் கோபால்.

தங்கப்பல்லி ரெண்டு. புதுசா என்ன? பார்த்த  நினைவு இல்லையே.... இப்படி அப்படிப் போனதில் ஆயிரங்கால் மண்டபத்தின் இந்தப் பக்கத்தில் இருந்து திருமணி மண்டபத்தைப் பார்த்துட்டு எப்படி எப்படியோ போய் கடைசியில் அன்னமூர்த்தி சந்நிதிக்கே வந்து சேர்ந்துருந்தோம்!

ஆரம்பமும் இங்கே முடிச்சதும் இங்கேன்னு labyrinth மாதிரி  இது மாயச்சுழல்! இவ்ளோ நேரமும் ஆடாமல் அசையாமல் அதே போஸில் உக்கார்ந்துருந்தார் நம்ம அன்னமூர்த்திப்பெருமாள்!




கொடிமரம் பலிபீடம் கடந்து  கம்பத்தடி ஆஞ்சியையும் வணங்கிட்டு,  பெரிய திருவடிக்கும் வணக்கம் சொன்ன கையொடு வெளியே வந்தோம்.  துலாபாரமண்டபம், திருக்கொட்டாரம், செங்கமலவல்லித்தாயார் சந்நிதி  கடந்து போனால்   பழுதுபட்டுக்கிடந்த களஞ்சியங்களை சீரமைச்சுக்கிட்டு இருக்காங்க.  நல்லவேளையா இவைகளுக்கு வேளை வந்துருக்கு!
தன்வந்த்ரி, வாசுதேவப்பெருமாள் சந்நிதிகளிலும் கும்பிடு போட்டுட்டு நேரா சொர்கவாசல்தான்.  கம்பர் மண்டபத்து வழியாத் தாயார் சந்நிதி.  இந்த அஞ்சு குழி மூணு வாசலை எப்பவும் மறந்து போறோமேன்னு அதைத் தேடுனதில்  எதிரில் இருக்கும் லக்ஷ்மிநாராயணர் சந்நிதிக்கு முன்னால் இருக்குன்னு  விவரம் கிடைச்சு அங்கே போனால் இருக்கு. இது எப்படி இருக்கும் என்று இதுவரை பார்த்ததே இல்லையா...   அதனால் தாயார் சந்நிதி மண்டபத்தில் கீழே இருக்கும்  சின்னக்குழிகளைக் கூட விட்டு வைக்கலை :-) உண்மையில் இது குழியே கிடையாது . கற்கள் இணைக்கப்பட்டுருக்கும்   இடமுன்னு நினைக்கிறேன்!


சரியான இடத்துக்குப் போனதும்  ஏற்கெனவே டேமேஜ் ஆன முதுகுக்கு பங்கம் வராமல் அஞ்சு குழியையும், ஒரு வாசலையும் பார்த்துக்கிட்டோம் :-) மூணு வாசலைத் தேடினால் உடம்பு முறுக்கிக்கும் அபாயம் உண்டு !

அடுத்து தாயார் சந்நிதி.  மண்டபத்தில் செம்பகம்  இல்லை. உள்ளே போய் சட்னு ஒரு கும்பிடு. ராமானுஜர் சந்நிதிப்  பக்கம்   எட்டிப்பார்த்துட்டு எல்லாம் இருக்குமிடத்தில் தான் இருக்கு என்ற நிம்மதியுடன்  வெளியே வந்தாச்சு.
வாசலில் இருவர் எனக்காக !  எப்படி? ஆண்டாள் கேம்புக்குப் போயிருப்பாளே.....




தனியாரின் பொக்கிஷம்!  எனக்காக வெளியில் :-)

ரொம்ப நல்ல சகுனம்!   முரளி கடையில்  ஒரு காஃபியை  எஞ்சினுக்கு ஊத்திட்டு அறைக்குத் திரும்பியவுடன் இன்னொரு புறப்பாடு !  பதிவர் சந்திப்பு  :-)

தொடரும்...........  :-)


5 comments:

said...

'நாளும் கிழமையுமா, பெரிய கோவில் தரிசனம். நிறைய, நிறைவான படங்கள். சமயத்துல தரிசனம் கிடைக்க சிலர் தூண்டுதலாக இருப்பார்கள். கோபால் சார் புண்ணியத்துல உங்களுக்கு மூலவரின் தரிசனம் கிடைத்தது. அஞ்சு குழி மூணு வாசல்-தாத்பர்யம் என்ன?

said...

திருவரங்கத்துக்கு இத்தன வாட்டி போயிருக்கேன். இந்த அஞ்சு குழி மூனு வாசல் பாத்ததே இல்லையே. அதுக்குப் பின்னாடி இருக்கும் விவரங்கள் என்ன?

அந்தக் களஞ்சியங்கள் திருமங்கையாழ்வார் கட்டியதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். எவ்வளவு உண்மைன்னு தெரியல. மூனு வருடங்களுக்கு முன்னாடி போனப்போ பாழடைஞ்சு இருந்துச்சு. இப்ப எடுத்துக் கட்டுறத இந்தவாட்டி போனப்போ பாத்தேன்.

said...

எத்தனைமுறை சேவித்தாலும் அலுக்காத கோவில் என்றால் ஸ்ரீரங்கம் தான். செங்கமலவல்லித் தாயார் சந்நிதி என் பாட்டியின் பிறந்தவீட்டு சொத்து. ஒவ்வொருமுறையும் அங்கிருக்கும் களஞ்சியங்களின் நிலை மனதை வருத்தும். இப்போது அவை செப்பனிடப்பட்டு வருவது தெரிந்து சந்தோஷமாக இருக்கிறது. ஸ்ரீரங்கம் போகவேண்டும் - எப்போது என்று தெரியவில்லை.


எந்த ஊரைப்பற்றி உங்கள் பதிவில் படித்தாலும் உடனே புறப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. உங்கள் எழுத்துக்களின் வலிமை இது.

ஐந்து குழி மூன்று வாசல் என்பதற்கு நான் அறிந்த விவரம்: தாயார் படிதாண்டா பத்தினி. பெருமாள் மட்டும் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி உத்சவத்தின் போது தாயார் சந்நிதிக்கு எழுந்தருளுவார். அந்த சமயத்தில் பெருமாள் வருகிறாரா என்று தாயார் இங்கு நின்று கையை ஊன்றி கொண்டு பார்த்ததாக ஐதீகம்.

தாயார் சந்நிதிக்கு இந்த வழியாகத்தானே போகவேண்டும். பார்த்ததில்லை என்று ஜிரா சொல்லுகிறாரே. எப்படி என்று புரியவில்லையே!

said...

ஸ்ரீரங்கம் கோவில் தாயார்சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்றுவாசல் பற்றிய விளக்கம்
பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை ஆவலுடன் பார்கிறாள் என கூறுவது வழக்கம்.

ஆனால் இந்த இடத்தின் தாத்பர்யம் வேறு:

1. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்துபார்த்திருக்கச் சாத்தியமில்லை.

2. பெருமாள் இவ்வழியில் தாயார் சன்னதிக்கு வருவது வழக்கம் இல்லை. ஒருநாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வார். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருச்சுற்று (5ஆவது ப்ராகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வார்.

இந்த ஐந்து குழி அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகும். மூன்று வாசல்
தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும்.
தத்வத்ரயம் என்பது சித், அசித், ஈஸ்வர தத்துவம். அர்த்தபஞ்சகம் என்பது

(1) அடையப்படும் பிரம்மம்
(2) அடையும் ஜீவன்
(3) அடையும் வழி
(4)அடைவதால் ஏற்படும் பயன்
(5) அடைவதற்கு உள்ள தடைகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

இந்த ஐந்து குழிகளில் ஐந்துவிரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பார்த்தால் பரமபதவாசல் தெரியும்.
ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால் அந்த
ஜீவாத்மாவுக்குப் பரமபதம் நிச்சயம் என்பதுதான் இதன்பொருள்......

ஓம் நமோ நாராயணா

said...

ஸ்ரீரெங்கநாதர் கலகலப்பானவர். அவருக்கு உறையூரில் ஒரு நாச்சியாரிடம் தொடுப்பு உண்டு. இதன் காரணமாக தயாரிக்கும் ரெங்கநாதருக்கும் கலகம் ஏற்படுவதுண்டு. உறையூருக்கு போய்விட்டு வந்து தாயாரிடம் பொய் சொல்லுவார். அவரிடம் அடிக்கடி சண்டை போட்டாலும் தாயாருக்கு அவர் மீதுள்ள அன்பு மாறாது. வெளியே போனவர் இன்னும் வரலையேன்னு தாயார் குனிந்து " அஞ்சு விரல் மூணு வாசல்" வழியே பார்க்க, திடீரென்று வந்த ரெங்கன், தாயாரிடம்" யாரை இப்படி கள்ளத்தனமாக பார்க்கிறாய் என்று கேட்க, கோபித்துக்கொண்டு தனி சன்னதியில. போய் அமர்ந்து கொள்கிறாள் இதுவே தாயார் சன்னதி. இந்த நாடகத்தை ஸ்ரீரங்கம் பட்டர்கள் கோவிலில் நடத்தி காண்பிப்பார்கள். கதைப்படி, ரெங்கநாதருக்கு ஆறு மனைவிகள் உண்டு.