Monday, October 17, 2016

உத்திரகோசமங்கை ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 92)

நெருங்கிய தோழி பரிந்துரைத்த கோவில் இது. 'போகும்போதே ரொம்ப லேட். கோவில் மூடற நேரம். தரிசனம் நல்லபடியாகக் கிடைச்சது. ரொம்ப அழகான கோவில்.  உங்களுக்குப் பிடிக்கும், பாருங்க' ன்னு சொன்னாங்க.  அந்தப் பக்கம் போகும்போது போகலாமுன்னு நினைச்சுருந்தேன்.

இந்த 108 கோவில்களில் போகாம விட்டுப்போனவைகளைப் பட்டியல் பார்த்து எழுதிக்கிட்டு இருந்தப்ப, திருப்புல்லாணி  போகலையேன்னு  அதைக் குறிச்சு வச்சுட்டு,  தமிழ்நாட்டு வரைபடம் எடுத்து வச்சுத் தேடிப்பார்த்துக்கிட்டு இருக்கும்போதுதான் ராமேஸ்வரமும் கண்ணில் பட்டது.  நான் பலவருசங்களுக்கு முன்னால் ஒருமுறை போயிருக்கேன். நம்மவர் போயிருக்காரான்னு  கேட்டால் 'விவரம் புரியாத சின்ன வயசில் அப்பாவோடு போயிருக்கேனாம்' என்றார்.  ஓக்கே....  இப்ப விவரம் புரிஞ்ச வயசில் போனால் ஆச்சு :-)  திட்டம் இப்படித்தான் உருவாச்சு.

திருப்புல்லாணியில் இருந்து வெறும் 11 கிமீ தூரம்தான்.  இருவது நிமிட்டில் வந்துட்டோம். பாதை கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு. நல்ல உயரமான ராஜகோபுரம் தூரத்தில் இருந்தே தெரிஞ்சதால் அதை நோக்கிப்போனார் சீனிவாசன்.  சில பல இடங்களுக்கு  அவரும் முதல்முறையாகத்தான் வர்றாராம்.

கல்பாவிய பெரிய முற்றம்!  கார் பார்க்கும் இதுதான். ரெண்டு ராஜகோபுரங்கள் ஒன்னு 7 நிலை, இன்னொன்னு 5 நிலை!  தனித்தனி வாசல். பெருசு ஐயாவுக்கு. சின்னது அம்மாவுக்கு!  தனித்தனிக் கோவில் என்றாலும் உள்ளே போனதும்  இங்கும் அங்குமாப் போய்க்கலாம்.

பெரிய ராஜகோபுரத்துக்கான வாசலுக்கு ரெண்டு பக்கமும் புள்ளையாருக்கும் முருகனுக்குமா ரெண்டு குட்டிச் சந்நிதிகள்!
கோபுரவாசலுக்கு நேர் எதிரா ஒரு மண்டபம். திருமாமணி மண்டபமோ?  அதுக்குள்ளே நிறைய  பள்ளிக்கூடப்புள்ளைகள் உக்கார்ந்துருந்தாங்க. ஸ்கூல் ட்ரிப்பாக இருக்கலாம்.  பள்ளிச்சீருடையில் இருந்தாங்க.

நாம் கோபுரவாசலைப் பார்த்து நின்னால் நமக்கு வலப்பக்கம் வரிசையா தீனிக்  கடைகளும்,  நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகளும்,  கூடவே டெய்லர் கடை, சலூன் கடையும்! ஒரு சிற்பக்கலைக்கூடம் கூட இருக்கு!
கோபுரவாசலைக் கடந்து உள்ளே போறோம். அருள்மிகு மங்களநாதர் சுவாமி திருக்கோயில் நம்மை அன்புடன் வரவேற்றது! வெளிப்ரகாரம். நிறைய மரங்களுடனும் நடுவிலே பாதையுமா!
அதோ ஒரு அம்பது  மீட்டர்  தூரத்தில் கோவிலின் உள்பிரகார கோபுரவாசல்.  அஞ்சுநிலை கோபுரம்.  இடப்பக்கம் அரசமரத்தடியில் புள்ளையாரும், இன்னும் சில நாகர்களுமா இருக்காங்க.

கோவிலின் விவரங்கள் அனைத்தும் சொல்லும் தகவல் பலகைகள் தமிழ், இங்லீஷ், ஹிந்தி என்ற மூன்று மொழிகளில்.
நமக்கு எழுதறதுக்கு,  வேற விவரம் தேடிப்போக வேண்டிய அவசியமே வைக்கலை.  ஒரு சில எழுத்துப் பிழைகளை..........  மன்னிக்கலாமான்னு தெரியலை.  மங்களாம்பிகை 'உடணுறை'யோடு ஆரம்பிச்சு  மலித்த தலையோடு = மளித்த  தலையோடு,  வேதகாமங்களின் = வேதாகமங்களின்,  எந்நாட்பவருக்கும் = எந்நாட்டவருக்கும்.....   இன்னும் நிறைய இருக்கு.... கொஞ்சம் பார்த்து  செஞ்சுருக்கக்கூடாதா....   அதுவும் தமிழ்நாட்டுலே.....   ப்ச்...
 கோவிலுக்குள் போறோம்.  மகாமண்டபம் கொடிமரம் பலிபீடம் கடந்து மூலவர் கருவறை. போய் கும்பிட்டுக்கிட்டுக் கோவிலைச் சுத்தி வர்றோம். பிரதோஷம் இங்கே விசேஷம் !   மாணிக்கவாசகருக்கு  சிவபெருமானே குருவாக வந்து உபதேசம் செய்த தலம்.  பாடல் பெற்ற தலமும் கூட!

பிரகாரம்   பார்த்தால்....  கண்ணில் ரத்தம் வராத குறை :-(  இதைப்போல இவ்ளோ பெரிய கோவிலை  இந்தக் காலத்தில்  கட்டி எழுப்பமுடியுமா?  என்ன மாதிரி சிற்பங்களுள்ள  தூண்கள்! தரையெல்லாம் பழுதுபட்டுக் குண்டும் குழியுமா இருக்கு :-(


நாயன்மார்கள்  இருக்கும் மண்டபம், லிங்கங்களும் அம்மன்களும் நிற்கும் மண்டபம், சுப்ரமண்யர் வள்ளி தெய்வானை சந்நிதி, இன்னும் மற்ற  ப்ரகாரங்கள் எல்லாம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது கிடந்தபடி.....
கோவில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின்  கவனிப்பில் ......   இருக்கு என்றாலும்  ராஜ வம்சத்தினர் எல்லாம்  ஏழைகளாகிப் பல வருசங்கள் ஆச்சே  :-(
வடக்கே எல்லாம்  அரண்மனைகள் இப்போ ஸ்டார் ஹொட்டேல்களாக ஆகி சம்பாரிச்சுக் கொடுக்குது.  இங்கே  நாம் ஒரு அரண்மனையைக் கூட அரண்மனையா விட்டு வைக்கலையே........


வெளிப்ரகாரம் கொஞ்சம் சுமாராக இருக்குது.  மரகத நடராஜரின் சந்நிதி, தனிக்கோவில் போலவே இருக்கு. பலிபீடம், கொடிமரம், நந்தி வெளியில் ஒரு தகரக்கூரையின் கீழ் இருக்க, க்ரில் கேட்டைக் கடந்து உள்ளே போறோம். ஒரு மேடையில் அஞ்சரை அடி உயர நடராஜர் சிலை. கீழே ஒன்னரை அடி உசர பீடம். எல்லாமே ஒரே கல்!

கோவில் ஊழியர் வேலு அவர்கள் நமக்கு தரிசனம் செஞ்சு வச்சார்.
சந்தனக்காப்பில் இருக்கார் இந்த நடராஜர். வருசம் முழுசும் இப்படி இதே சந்தனக்காப்பில்தானாம்.  வருசத்துக்கு ஒரு நாள் இவரை எந்த காப்புமில்லாமல் தரிசிக்க  முடியுமாம்.  அது ஆருத்ரா தரிசனத்துக்கு முதல் நாள் மட்டும். மறுநாள் ஆருத்ரா தரிசன தினம் இவருக்கு 32 அபிஷேகம் உண்டு.  கடைசியாச்  செய்வது சந்தனாபிஷேகம்.  அதோடுதான் வருசம் முழுசும் காட்சி தருவார்.  அபூர்வமான மரகதக்கல்லில் செதுக்கிய  நடராஜர்  இவர்!
கூடுதல் ஒலி, ஒளி எல்லாம் இவருக்கு ஆகாதாம்.   மத்தளம் முழங்க  மரகதம் பொடிபடும் என்ற பழமொழி  இருக்காமே!  இதனால் எந்த அதிர்வும் இவரைத் தாக்காமல் சந்தனப்பூச்சில் வச்சுக்காப்பாத்தறாங்க.
இந்த  மரகதக் கல் கிடைச்சதுக்கு  ஒரு 'கதை'யும் உண்டு.  ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்று  ஒரு ஸ்டேஷன் பார்த்தோமே  நினைவிருக்கா?  அந்தப் பகுதியில் மரைக்காயர்  என்ற மீன் பரதவர்,  பாய்மரப்படகில் போய்மீன் பிடித்துவந்து  வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்திக்கிட்டு இருந்தார். ஒரு சமயம் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளிக் காற்று அடிச்சு அவருடைய  படகு நிலை குலைந்து எங்கியோ அடிச்சுக்கிட்டுப் போகுது.  அப்படியே  ரொம்பதூரம் போனபிறகு ஒரு பாசிபிடிச்ச பாறையின் மேல் மோதி நின்னதும், பாறை அப்படியே சரிஞ்சு படகிலே விழுந்துருக்கு.  ரெண்டு சின்ன பாறைகளும் ஒரு பெரிய பாறையுமா இருந்துருக்கு.  அதுவரை  அடிச்சுக்கிட்டு இருந்த புயலும் மழையும் சட்னு நின்னு போயிருக்கு.  அதிர்ச்சியில் இருந்து மீண்டதும், மரைக்காயர்,  மண்டபம் நோக்கித் திரும்பி வர்றதுக்காக பார்த்தால் அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் தெரியலை. ரொம்பக்கஷ்டப்பட்டுப் பலநாள் கடலில் திரிஞ்சலைஞ்சு ஒருவழியா மண்டபம் வந்து சேர்ந்துருக்கார்.

கடலுக்குப்போன இவர் திரும்பி வரலையேன்னு  பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்துக்கு அப்பதான் நிம்மதி ஆச்சு.  படகில் கொண்டு வந்த பாசி பிடிச்ச கற்களை வீட்டுப் படிக்கல்லா போட்டு வச்சுருக்காங்க. அதன் மேல்  வீட்டுக்குள் போக வர்ற ஆட்கள் நடந்து நடந்து, மேலே ஒட்டிப் பிடிச்சுருக்கும் பாசி கொஞ்சம் கொஞ்சமாப் போய், பளபளன்னு தெரிஞ்சுருக்கு.

அப்போ வீட்டுலே கொஞ்சம் வறுமையான காலக் கட்டம்.  மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாகத் தந்தால் வறுமை கொஞ்சம் போகும் என்ற எண்ணத்தால்  பாண்டிய மன்னரின் அரண்மனைக்குப்போய்  இந்தமாதிரி ஒரு பெரிய பச்சைக் கல் இருக்குன்னு சொன்னதும், அரண்மனை ஆட்கள் வந்து எடுத்துக்கிட்டுப்போய்  அரசரிடம் காட்டினாங்க.  கற்களைப் பற்றி விவரம் உள்ள ஒருவர்  வந்து  பார்த்துட்டு, இது விலை மதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல்னு சொன்னார்.

இவ்வளவு அருமையான கல்லில்  ஒரு நடராஜர் சிலை செதுக்கணும் என்பது அரசரின் ஆசை.  இந்த வேலைக்கு உகந்த சிற்பியைப் பல இடங்களில் தேடிக் கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின்  அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் இரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைச்சது. அவரை அனுப்பி வைக்கும்படி பாண்டியன் ஓலை  அனுப்பினார்.  சிற்பியும் வந்து சேர்ந்தார்.

முதலில் சின்னப்பாறைத் துண்டுகள் ரெண்டு  இருந்ததே அதில் அழகான ஒரு பீடம் செஞ்சு கொடுத்துருக்கார். பாண்டிய மன்னர் ஒரு பீடத்தை பழனி முருகன் சிலைக்கு அடியிலும், இன்னொரு  பீடத்தை  மதுரை மீனாட்சியம்மன்  சிலையின் அடியிலும் வைக்கச் சொல்லி அப்படியே ஆச்சு!

 அதுக்குப்பிறகு அந்த பெரிய பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் செதுக்கி இருக்கார் சிற்பி.

மேற்படி கதை  எனக்கு எப்படிக்  கிடைச்சதுன்னா....   கோவில் வாசலில்  ஒருவர்  தலவரலாறு புத்தகம் விற்பனைக்கு வச்சுருந்தார். அருமையான அட்டைப்படத்தோடு பார்க்கவும் நல்லா இருந்துச்சு. விலை நூத்தம்பது ரூ.  யார் எழுதுனதுன்னு கேட்டப்பதான் தெரிஞ்சது, புத்தகத்தை விற்பவரே  இதோட  ஆசிரியர் எம் பி. தங்கவேலு சுவாமிகள் எம் ஏ. இவர் தாசில்தாரா இருந்து  ஓய்வு பெற்றவர். இந்த ஊருலெயே பொறந்து வளர்ந்தவராம். உள்ளூர்க்காரர் சொன்னா  சரியாக இருக்கும்தானேன்னு  வாங்கினோம்.

மண்டோதரி இங்கே வந்து வணங்கிதான் ராவணனைக் கணவனா அடைஞ்சாங்க, லெமூரியாக்கண்டம்  இருந்த காலத்துலேயே இங்கே கோவில் இருந்தது, சித்தோர் ராணி பத்மினி, தன்னுடைய எடைக்கு எடை தங்கம், வைரம், மரகதம் கொடுத்தால் அலாவுதீன் கில்ஜியின் அந்தப்புரத்திற்கு வருவதாக (ராஜ தந்திரம், கணவனை மீட்க) சொல்லி அனுப்பியதும், அதுக்காகத்தான் கோவில்களில் கொள்ளை அடித்த  தளபதி மாலிக்காபூருக்கு   நல்லவேளையா  மரகத நடராஜர்  சந்தனத்துக்குள் இருக்கும் விவரம் தெரியாதது,  மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்கநாதர்  இறந்த பின் அவருடைய மனைவி மீனாட்சி ஆட்சிக்கு  வந்து,  சிலகாலம்  ஆனபின்  அரசாங்கக்கணக்கு வழக்குகளைச்  சரிபார்க்க வந்த தாயுமானவர் மேல் ஒருதலைக்காதல் கொண்டதுன்னு பலதும் இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கார் தாசில்தார்.

சரியான தகவல்கள் தானா? தரவுகள் இருக்கான்னு சரித்திர வல்லுனர்கள்தான் சொல்லணும்.....

வெயிலிலும் மழையிலும் யாகம் செய்து எலும்புக்கூடாக உடல் மெலிந்து     லெட்சுமிபுரம் என்ற இடத்தில் காய்ந்த சருகுகளுக்கிடையில்  மயங்கிக்கிடந்த தாயுமானவரை,  இறந்துட்டார் என்று நினைத்து அப்போது ராமநாதபுரத்தை ஆண்ட சிவகுமார் முத்து   விஜய ரகுநாத சேதுபதி மன்னரின் காவலாளிகள் அந்த சருகுகளுக்கு தீ மூட்டி விட்டதாகவும்,  தீ நல்லாப் பிடிச்சு எரியும்போது,   அதுவரை நிஷ்டையில் இருந்த தாயுமானவர் உடலில் சூடு உணர்வால்  கண் திறந்து பார்த்துட்டு அப்படியே திறந்த கண்களோடு 'இறை ஜோதி' யில் கலந்தார் என்றும் கூட இருக்கு. அப்போ அவருக்கு 40 வயசாம்.  காலக்கட்டம் கிபி 1742.

மரகதக் கல் நடராஜரைப் பற்றிச் சொல்லவந்து   எங்கெங்கேயோ போயிட்டேன்  .... போகட்டும்.  ஆதி சிதம்பரமுன்னு ஒரு போர்டு.  முதலில் இங்கே தனி அறையில் ஈஸ்வரிக்கு நடனக்கோலம் காமிச்சு, நடன விதிகளைச் சொல்லிக்கொடுத்துட்டுத்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில்  ஆடினாராம் ஈசன்.

சிதம்பரம் கோவிலுக்கு முற்பட்ட நடராஜர் இவர்.  ரெண்டு சிலைகளையும்  செதுக்கியவர் சண்முகவடிவேலர் என்னும் சிற்பி. ரெண்டு சிலைகளிலும்  பாம்பணிகளோ, புலித்தோலோ கிடையாது. ராஜ கோலம்.  இந்த ரெண்டு இடங்களிலுமே   நடராஜருக்கு வலப்பக்கம்  பெருமாள் இருக்கார் என்றாலும், எதோ காரணத்தால்  இங்கே பெருமாள் சந்நிதி மூடியே கிடக்கு :-(
அங்கங்கே சந்தனக் காப்பில் உள்ள  சந்தனம் காய்ஞ்சு  உதிர்ந்து  அரை இருட்டில் கருப்பாத் தெரிஞ்சார் நடராஜர்.
இவரை வணங்கிட்டு, அடுத்த  பகுதியில் இருக்கும் சகஸ்ரலிங்கத்தை தரிசிக்கக் கூட்டிப் போனார் வேலு.  சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இலந்தை மரத்துக்குக்கீழே  சுயம்புவாத் தோன்றிய ஈசனாம்  உள்ளே இருக்கும் மூலவர் மங்களநாதர்.   இந்த மரம்   வளர்ந்து ஒரு சந்நிதியின் மேல் கவிழ்ந்தாப்லெ இருக்கு.  இதன் உள்ளே   அருள்மிகு சகஸ்ரலிங்கம் இருக்கார்.  இலந்தை மரம்தான் இங்கே தலவிருட்சமும் கூட.

கோவில் திருக்குளம்  பெருசாகவும் சுத்தமாவும் இருக்கு!  பார்த்து  இறங்கணும். படி வழுக்குமாம்!

பிறகு நேராப் போனது மங்களாம்பிகை அம்மன் சந்நிதிக்குத்தான். தனிக்கோவில் போல பிரகாரங்களுடன்  மண்டபங்களுடன் இருப்பது அருமை! அங்கேயும்  கும்பிட்டுக்கிட்டு  வெளியே வந்தோம்.
கோவில்  வெளியே கடைகளில் பஜ்ஜி பார்க்கவே  அருமையா இருக்குன்னு சீனிவாசன் வந்து சொன்னார். அவர் எப்பவும்  விடுவிடுன்னு போய் மூலவரைக் கும்பிட்டதும் வேகமா ஒரு வலம் வந்துட்டு வெளியே காராண்டை போயிருவார். அப்ப அங்கே நடப்பதையெல்லாம் கண்டுக்கிட்டு சுவாரசிய சமாச்சாரங்களை என்னிடம் சொல்வார்:-)   இப்ப... பஜ்ஜி!

போய்ப் பார்த்தோம். சுடச்சுட மிளகாய் பஜ்ஜி எண்ணெயில் வெந்துக்கிட்டு இருக்கு.  உ.வடை,  வெ.பஜ்ஜி, வா.பஜ்ஜி, சமோஸா எல்லாம் க்ளிக் க்ளிக் க்ளிக் :-)


கேமெராக்கண்ணால் சாப்பிட்டேன்.  சீனிவாசனுக்கு  வேண்டியதை சாப்பிடச் சொல்லிட்டு, ஆளுக்கு ஒரு டீ.

கிளம்பி நேரா ராமேஸ்வரம்தான் போறோம்.  ரொம்ப இருட்டுமுன் போய்ச்  சேர்ந்துடணும்.
அறைக்கு வந்தபின் தான் தோணுச்சு  பாம்பன் ரயில் பாலம்  விளக்கில் எப்படி இருக்குமுன்னு பார்க்காமப் போயிட்டோமேன்னு.....   :-(
ஏழேகாலுக்கு அறைக்கு வந்தபின், கீழே லாபியில் முக்கால் மணி நேரம், மொத்த ஹொட்டேல் விருந்தினருடன்   வைஃபை மேளாவில்  கூடவே இருந்துட்டு(!) கிளம்பி சபரீஷுக்குப்போய் ராச்சாப்பாடு.

எனக்கு பரோட்டா,  நம்மவருக்கு  ஊத்தப்பம். சீனிவாசனும் அவருக்கு வேண்டியதை சாப்பிட்டார்.  சூடா பால் சாப்பிடுங்கன்னு உபசரிப்பு நம்ம குமாரிடம் இருந்து.  ஆய்க்கோட்டே.... எனிக்கு விரோதம் ஒன்னுமில்லா.....

இந்த வருசப் பிறந்தநாள் நிறைவா  இருந்தது ரொம்பவே மகிழ்ச்சி.

நல்லா ஒரு தூக்கம்  போடணும். சரியா :-)

தொடரும்...........  :-)


9 comments:

விஸ்வநாத் said...

எல்லாச் சிவன் கோவில்களும் பாழடைஞ்சி தானே இருக்கும், டீச்சர். ஆட்சி செய்பவர்களோட ஆதரவு இல்லேன்னா ஆண்டவனையு யாராலும் காப்பாத்த முடியாது.

நெல்லைத் தமிழன் said...

'நல்ல தரிசனம். அதுவும் தேடி எடுத்து மரகதக்கல் நடராஜர் படம் வேறு போட்டிருக்கிறீர்கள். வெளியில் கல் பாவினவர்கள், தூண்கள் இருக்கும் பிராகாரத்தில் கல் பாவியிருக்கவேண்டாமா?

எப்போது பணம், வேலை என்று ஊர் ஜனங்கள் ஊரைவிட்டுச் செல்ல ஆரம்பித்தார்களோ, அப்போதே அந்த அந்த ஊர்க்கோவில்களுக்கு பராமரிப்பு குறைந்துபோயிற்று.

எங்கள் ஊர் சின்னக் கோயிலென்றாலும், ஏதேனும் பிரச்சனை என்றால், கோவில் பிராகாரத்தில்தான் ஊர்க்கூட்டம் நடக்கும். ஊர் மக்கள் எல்லோருக்கும் கோவிலின்மீது அக்கறை இருந்தது. மக்கள் இடம் பெயர்ந்ததும், கவனிப்பு குறைந்துதான்விட்டது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மற்றொரு அருமையான கோயில் உங்களின் தயவால். நன்றி.

KILLERGEE Devakottai said...

வணக்கம் மேடம்.
திருப்புல்லாணியில் இருந்து நிமிடத்தில் உத்திரகோசமங்கை வந்து விட்டதாக சொல்லி இருக்கின்றீர்கள் அப்படியானால் கீழக்கரை, மாயாகுளம், ஏர்வாடி, இதம்பாடல் வழியாகத்தான் உத்திரகோசமங்கை போயிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

இங்கு இரண்டு கோபுரங்கள் இருக்கும் இதில் குட்டையான கோயில் பல மாமாங்கமாக இடிந்த நிலையில் இருந்தது அதை தாங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் காரணம் சமீபத்தில் அதையும் முழுமையான கோபுரமாக ஆக்கி விட்டார்கள் நானே கடந்த மாதம் போகும் பொழுதுதான் (பேரூந்தில் இருந்து கொண்டுதான்) பார்த்தேன்

இந்த குட்டையான கோபுரத்திற்கு ஒரு வரலாறு உண்டு அதாவது ''தேரை விழுந்த கோயில்'' இந்தக் கோயிலைக்கட்டும் பொழுது பலமுறை இடிந்து விழுந்து இருக்கின்றது காரணம் அறியாமல் மன்னர் சோசியரை அழைத்து கேட்டபோது வாசல் நிலையில் தேரை வசிக்கின்றது என்ற விபரத்தை சொல்ல பிறகு அந்தக்கோபுத்தை அப்படியே விட்டு, விட்டு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டினார்கள் நாளடைவில் இந்த இடிந்த கோபுரமும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து விட்டது காரணம் அதன் வரலாறு.

இதை மையமாக வைத்து திரு. ஜியெம்பி ஐயா அவர்கள் சென்ற பொழுது நான் இடிந்த கோபுரம் கண்டீர்களா ? எனக்கேட்டேன் அதற்கு அவர் நான் பார்க்கவில்லை என்றார் அதன் காரணம் நான் சமீபத்தில் போகும் பொழுது அறிந்தேன் அதுவே இப்பொழுது முழுமையான கோபுரமாகி இருக்கின்றது.

மேலும் இங்குள்ள மரகதக்கல், ஆருத்ரா தரிசனம் சிறப்பு இங்குள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோயில் பெயரைத்தான் இராமநாதபுரம் ராஜா தனது மகனுக்கு மங்களநாததுரை பெயர் சூட்டினார்.

இவ்வளவு விபரம் எனக்கு தெரிய காரணம் இராமநாதபுரம் மகாராஜா உத்திரகோசமங்கை பக்கதில் இருக்கும் இதம்பாடல் கிராமத்தின் மிராசுதாராக இருந்த எனது ஐயாவின் நண்பர் அவரது மகன் மங்களநாததுரை எனது அப்பாவுக்கு நண்பர் எனது அப்பா இராமநாதபுரம் மார்டீன் ஹாஸ்பிட்டலில் இருந்த பொழுது திரு. மங்களநாததுரை அவர்கள் வந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறப்பாக கவனிக்கப்பட்டார் பிறகு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் அதற்குப்பிறகு பிரிவுகள் காரணமாக எங்கள் குடும்ப உறவு வளரவில்லை.

இதம்பாடல் கிராமத்தில் இராமநாதபுரம் ராஜாவின் அரண்மனை இடிந்த நிலையில் பாழடைந்து கிடக்கின்றது, நீங்கள் போகும் பொழுது பார்த்து இருப்பீர்கள் எங்கள் குடும்ப கோயிலும் மெயின் ரோட்டின் மேலேயே இருக்கின்றது எதிர்புறம் ஊரணி இருக்கும் கோயில் பெயர் ஸ்ரீ தென்கரை மஹாராஜா கோயில்.

உத்திரகோசமங்கை கோயிலில்தான் எனது சகோதரிக்கு 1985-ல் திருமணம் நடந்தது.

குறிப்பு - என்னடா இவன் கடந்த பதிவில் திருப்புல்லாணியில் அப்பா-அம்மாவுக்கு திருமணம் நடந்தது என்றான், இந்தப்பதிவில் தனது சகோதரிக்கு திருமணம் நடந்தது என்கிறானே அடுத்த பதிவில் என்ன சொல்லப் போகிறானோ ? என்று நினைக்காதீர்கள்.

எனக்குத்தான் பயமாக இருக்கின்றது அடுத்து பதிவு பக்கத்து ஊர் கோயில் ஏதாவது சொல்லி எங்கள் வீட்டு திருமணம் நடந்திருக்குமோ... என்று.

புகைப்படங்கள் அனைத்தும் தரிசித்தேன் நன்றி
வாழ்க நலம் - கில்லர்ஜி

இலவசக்கொத்தனார் said...

கேப்பி பர்த்டே ரீச்சர்! (பதிவை முழுசாப் படிக்கறேன் என்பதற்குச் சான்று!)

G.Ragavan said...

உத்தரகோசமங்கை கேள்விப்பட்டதோட சரி. அந்த வழியா போயிருக்கேன். ஆனா கோயிலுக்குப் போனதில்ல. கோயில் இப்பிடியாகப் பாழாகிக் கெடக்கே. :(

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்கொளத்தைச் சுத்தியிருந்த மண்டபத்தையெல்லாம் இடிச்சுட்டு புதுசா தூணெல்லாம் வெச்சு கொடுமை செஞ்சிருக்காங்க. எவ்வளவு அலட்சியம். நானும் டுவிட்டர்ல இருக்கும் பெரிய அரசியல்வாதிகளுக்கும் சொன்னேன். ஒருத்தரும் கண்டுக்கல. அதுல இந்துக்களுக்காகக் கட்சி நடத்துறவங்களும் அடக்கம். :(

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமான கோவில். ஆனால் பாழடைந்த நிலையில் இருப்பதைப் பார்க்கும்போது மனதில் வலி.... இப்படி எத்தனை கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்க, புதிது புதிதாகக் கோவில் கட்டுகிறோம்... :(

Ranjani Narayanan said...

எத்தனை பெரீய்ய்ய்ய கோவில்! கவனிப்பாரில்லாமல் விட்டுவிட்டார்களே என்று மனது அடித்துக் கொள்ளுகிறது.பல கோவில்களின் நிலை இதுதான் இப்போது. மரகத நடராஜர் மிகவும் அழகு.
தலவரலாறுகளில் பல இட்டுக்கட்டிய கதைகளாக இருக்கும். பொதுவாகச் சொல்லுகிறேன்.
உத்தரகோசமங்கை என்ற பெயரும், மங்களாம்பிகை என்ற பெயரும் அழகாக இருக்கின்றன.

கோவில் கரும்பலகையில் இருக்கும் எழுத்துப் பிழைகள் சங்கடமாக இருக்கின்றன. ஒரு கோவிலில் நைவேத்தியம் என்பதை நெய்வைத்தியம் என்று எழுதியிருந்தார்கள். ஜோக் என்று படித்துவிட்டு வந்துவிட வேண்டியதுதான். கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ளலாம் கோவில் நிர்வாகத்தினர்.

திருப்புல்லாணியிலிருந்து பாம்பன் பாலம் தெரியுமா? திருப்புல்லாணி தாண்டி இதுவரை போனதில்லை.

தூக்கம் போட்டுட்டு வாங்கோ. நானும் மற்ற பதிவுகளைப் படிக்கப் போகிறேன்.

sury siva said...



superb description of the dilapidated temple.

When the Goddess decides,
the temple will come back to its forlorn glory.

subbu thatha.