Monday, October 03, 2016

கலாம் ஐயா வீடும் துளசிபாபா மடமும் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 90)

ஊருக்குள்ளே நுழைஞ்சு வரும்போதே....  ரோடோரம் நின்னுக்கிட்டு இருந்தவரிடம், விவரம் விசாரிச்சுக்கிட்டு  மசூதி தெருவுக்குள் போனோம். இதோ இருக்கு House of Kalam  என்ற பெயர் போட்ட வீடு!  ரெண்டு  மாடிக் கட்டடம். மிஷன் ஆஃப் லைஃப் கேலரி என்ற பெயரில்  முதல் மாடியில் ஒரு காட்சியகம் வச்சுருக்காங்க. அனுமதி  இலவசம்தான்.   காலை 8 மணி முதல் மாலை 7 வரை பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கறாங்க.

கலாம் ஐயாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள், கிடைச்ச விருதுகள் இப்படி பார்வைக்கு வச்சுருக்காங்க.  இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை.

ஊழல் நிறைஞ்ச அரசியல் உலகத்தில் இவர் ஜனாதிபதியா எப்படித்தான் தாக்குப் பிடிச்சாரோன்னு கூட நினைச்சுக்குவேன்.
எவ்ளோ எளிமையான மனிதர்! இவரை நாடு சரியான முறையில் பயன்படுத்திக்கலை பாருங்க......... உண்மையான மக்கள் தலைவர்.
ரெண்டாவது மாடியில் ஒரு  நினைவுப்பொருட்கள், மற்றும் கலைப்பொருட்கள் விற்கும் ஆர்கேட்.  நானும் கொஞ்சம் புள்ளையார்கள் வாங்கினேன்.  சின்னதுதான். சுவர்களில் ப்ளூ டேக் போட்டு ஒட்டி வச்சுருக்கேன். அதை எப்படியாவது  எடுத்துப் பார்க்கணுமுன்னு  அப்பப்ப நம்ம ரஜ்ஜு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான்:-)

கீழே தரை  தளத்தில் ஐயாவின் அண்ணன் குடும்பம் வசிக்கிறாங்க.
அடுத்து நாம் போன இடம் துளசிபாபா மடம்!  துளசிபாபா இங்கே ஜீவசமாதி ஆகிட்டார். அவருடைய பாதம் என்று கால்தடம் உள்ள ஒரு கல்லை அந்த ஜீவசமாதியில் வச்சுருக்காங்க.

இதன் உள்ளே ஒரு ராமர் கோவில் இருக்கு.  தனுஷ்கோடி புயலில் அழிஞ்சு போன கோவிலில் இருந்து  கொண்டு வந்த ராமர், லக்ஷ்மணன், சீதை, ஆஞ்சி சிலைகளை இங்கே வச்சு பூஜிக்கிறாங்க.   இந்த சிலைகளுமே  புயல் அழிவு நடந்த இருபது வருசங்களுக்கு அப்புறம்தான் கிடைச்சிருக்கு.  அப்போ சந்நிதியில் ஏத்தி வச்ச விளக்கு இன்னும் அணையாமல்  அணையா விளக்காக வச்சுக் காப்பாத்திக்கிட்டு இருக்காங்க.

இங்கே கோவில் முற்றத்தில் ஒரு பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கார். ராமர் தனது பூஜைக்காக ஒரு சிவலிங்கம் வேணுமுன்னு கேட்டதும், 'இதோ கொண்டு வர்றேன்'னு  நம்ம ஆஞ்சி ஆகாயமார்க்கமா காசிக்குப்போறார்.  அங்கேதான் ஊர் முழுக்க சிவலிங்கங்கள்  இருக்கே!
வர லேட்டாச்சுன்னு  நல்ல நேரம் போயிடப் போகுதேன்ற தவிப்பு, கணவன் முகத்துலே !  உடனெ அங்கிருந்த கடல் மணலில்  ஒரு லிங்கம் பிடிச்சு வச்சுட்டாங்க மனைவி சீதை.  பூஜை  ஆரம்பிச்சு பாதி   நடக்கும் சமயம்  ஆஞ்சி கையில் லிங்கத்தோடு வந்து சேர்ந்தார். இங்கே பூஜை நடந்துக்கிட்டு இருக்கு.  ஆஞ்சிக்குக் கோபம் வந்துருச்சு.  ராமனிடம் போய்  எவ்ளோ கஷ்டப்பட்டு நான் காசிக்குப்போய் இந்த லிங்கத்தைக் கொண்டு வந்துருக்கேன். வர்றதுக்குள்ளே இப்படி  பூஜையை ஆரம்பிச்சு நடத்துனது எனக்குப் பிடிக்கலை. கொஞ்சம் பொறுமை வேணாமா உமக்குன்னு முணங்குனதும்,  'சரிப்பா ஆஞ்சி.   நோ ஒர்ரீஸ். அந்த லிங்கத்தை எடுத்துட்டு, நீ கொண்டு வந்த லிங்கத்தை அங்கே வச்சுரு.  மீதிப் பூஜையைச் செஞ்சுடலாம்' என்றதும், அலட்சியமா அந்த மணல் லிங்கத்தை  எடுக்கப்போக அது  பூமிக்குள் பிடிச்சுக்கிட்டு அசையலை. கிளப்பி எடுக்க என்ன செய்யலாமுன்னு யோசிச்ச ஆஞ்சி தன் வாலால் அந்த  மணல் லிங்கத்தைச் சுத்திப் பிடிச்சு அலேக்காத் தூக்கறார். லிங்கம் அசையலை. வால் அறுந்து  தூரப்போய் விழுந்தது. அப்படி விழுந்த இடத்தில்தான்  இந்த  பஞ்சமுக ஆஞ்சி சிலை இருக்குதாம்.  வால் விழுந்த இடம்.  அடடா...  அப்ப  வால் இல்லாத ஆஞ்சியா இவர்? கன்ஃபர்ம் செஞ்சுக்க முடியாமல் இடுப்பில்  வெள்ளை வஸ்த்திரத்துடன், ஒரு சிகப்பு வஸ்த்திரமும் சுத்திக்கிட்டு நிக்கறார்.

இங்கே ராமர் சந்நிதிக்குப் பக்கத்தில் ஒரு தொட்டியில் ரெண்டு மிதக்கும் கற்கள் போட்டு வச்சுருக்காங்க. யாரும் தொட அனுமதி இல்லை. இதுக்காக ஒரு  கம்பி வேலியும் இருக்கு! நாம்தான் ஏற்கெனவே  தனுஷ்கோடி போனப்பத் தொட்டெல்லாம் பார்த்ததால்  சுவாரசியப்படலை.  ஆனால் இந்த மிதக்கும் கற்களைப் பார்க்கன்னே மக்கள் கூட்டம் வந்துக்கிட்டு இருக்கு.

  இது ஒரு பைராகி மடம். தனியார் அமைப்பு.  இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை. தெருப்பார்த்த கோவில் வாசலுக்குள் சன்னியாசிகள் மட்டும் போகலாமாம். பக்கத்துலே இருக்கும் இன்னொரு வழியில் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு.

தேவதச்சன் விஸ்வகர்மாவுக்கு ஒரு மகன் இருந்தான். பெயர் நளன்.  ரொம்ப விளையாட்டு புத்தியுள்ள புள்ளை. மரத்துக்கு மரம் தாவறதும், கண்ணில்பட்ட கனிகளைப் பறித்துத் தின்னறதும், கையில் ஆப்ட்டதையெல்லாம் தூக்கி எறியறதுமா இருப்பான்.

ஒரு சமயம் முனிவர் ஒருவர், கடல்கரையில் உக்கார்ந்து  சாளகிராமத்தை வச்சு பூஜை செஞ்சுக்கிட்டு இருக்கார். அதைப் பார்த்த நளன், மெள்ள வந்து அந்த சாளகிராமத்தைக்  கல்லுன்னு நினைச்சுத் தண்ணியில் தூக்கிப் போட்டுட்டான்.  கோபம் கொண்ட முனிவர், இனி எதை நீ தண்ணீரில் போட்டாலும் மிதக்கட்டும் என்று சாபம் (!) கொடுத்துட்டார்.  அவன் தண்ணீரில் போட்ட கற்கள்தான்,   சுக்ரீவன் படையினர் பாலம் கட்டப் பயன்படுத்தினாங்கன்னும், அதனால்தான் தண்ணீரில் மூழ்காமல் பாலம் மிதந்ததுன்னும் இங்கே ஒரு கதை!
இந்தக் கற்கள்  ஃப்யூமிஸ் ஸ்டோன்  வகைபோல பொரபொரன்னு இருக்கு.  உள்ளே காற்றுக்குமிழிகள் அடைபட்டுருக்கலாமோ என்னவோ....
இந்த துளசிபாபா மடம், நாம் தங்கி இருக்கும் தெய்விக் ஹொட்டேலுக்கும்,  மேற்கு கோபுரவாசலுக்கும் நடுவில் இருக்கு. இந்தச் சாலையில் நாம் கோவிலை நோக்கிப் போகும்போது வலக்கைப் பக்கம் வருது.

ஒரு கிமீதானேன்னு நாங்க ஹொட்டேலுக்கு வந்துட்டு கொஞ்சநேரம் ஓய்வெடுத்தபின் மதியம் ஒன்னேகாலுக்குக் கிளம்பி நேத்து ராத்திரி சாப்பிடப்போன அதே ஹொட்டேல் சபரீஷ்க்குப் போனோம்.

புதுமாப்பிள்ளை குமார்,  நம்மை ஏதோ சொந்தக்காரர்களைப்போல வாங்க வாங்கன்னு வாய் நிறைய வரவேற்று  சாப்பாடு போட்டு உபசரித்தார்.   தாலி, கீலி  இல்லாமல் வாழை இலை போட்ட சாப்பாடு.  சாப்பாடானதும் மேனேஜர் பாலசுந்தரம் பிள்ளை ஐயாவும் வந்து நம்மோடு கொஞ்சம் பேசினார்.  எல்லோரும் அன்பானவர்களா இருக்காங்க. நமக்கும் மகிழ்ச்சிதான்! மேலேயே  ராமஜெயம் என்ற  ஹொட்டேலும் இருக்காம். போய் பார்த்து வச்சுக்கணும். அடுத்த முறை வந்தால் இங்கேயே தங்கிக்கலாம் :-)

திரும்பக் கோவிலின் மேற்கு வாசலுக்குப்போய்  இறங்கிக்கிட்டு,  அஞ்சு நிமிசம் கழிச்சி என்னை வந்து பிக்கப் பண்ணுங்கன்னு  சொல்லிட்டுத் தடுப்பின் உள்ளே போனேன். கோபுரவாசலில்  பணி செய்யும்  செக்யூரிட்டிகளிடம் அனுமதி கேட்டுக்கிட்டு அங்கே இருந்த  கல்வெட்டை மட்டும் க்ளிக்கி முடிச்சு, திரும்ப வெளியில் வந்து  நம்ம வண்டியில் ஏறி ஹொட்டேலுக்குப் போயாச்.இன்னும் முக்கால்மணி நேரம் ஓய்வு.  அதுக்குப்பிறகு.........

  நாம் எதுக்காக இவ்ளோதூரம் வந்தோமோ.... அந்த இடத்துப்போய் வரலாம். ஓக்கே?

தொடரும்.......  :-)7 comments:

said...

ஹனுமார் ரூப் - அதாவது உருவம். but அதை ROOF ன்னு மாத்திட்டாங்க.ஹிஹிஹி

said...

தொடர்கிறேன்.. இடைல இப்போ பயணம் செய்வதனால் இடுகை வெளியீடு தாமதமாகிறது போல் தெரிகிறது. நிறைய இடங்களைப் பார்க்கிறீர்கள். (ராமேஸ்வரத்திலேயே). அந்த உணவு விடுதியில் சாப்பாடு எப்படி இருந்தது என்று சொல்லவில்லையே..

துளசிபாபா இடத்தில் கோபால்பாபாவையும் பார்க்க நேர்ந்தது. நல்ல முயற்சி.

said...

உங்கள் பயணத்தில் இன்று இரு இடங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

said...

Shree Durga Puja services

said...

துளசி பாபா - அறிவுப்புப் பலகை அருகே இருந்த இரு பாபாக்களையும் ரசித்தேன்! :)

said...

கதைகள் படிக்க துளசிதளம் வாருங்கள்......!

said...

ஆகா.. கலாமின் நினைவு இல்லத்துக்குப் போயிட்டு வந்திருக்கீங்க.

அந்த வாலில்லாத அனுமார் புதுச் சிலையாத் தெரியுதே. சமீபத்துலதான் வெச்சிருக்காங்க போல. அமைப்பும் வடக்கத்திய முகம் போல இருக்குது.

நம்ம மக்கள் குப்பைகளை எங்க போடனும் போடக்கூடாதுன்னு யோசிக்கிறதேயில்ல. அதுலயும் பிளாஸ்டிக் குப்பைகள். நாடு முழுக்கவே பிளாஸ்டிக் பைகளும் பாட்டில்களும் நிரம்பி வழியுது. கேரளால இந்த அளவுக்கு மோசமாகல.

கோயில்ல கடல்ல குளிச்சீங்களா? இருபத்திரண்டு தீர்த்தங்கள் இருக்காமே. அதுல குளிச்சீங்களா?