Monday, October 10, 2016

திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் திருக்கோவில் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 91)

இங்கே சுத்தி சுத்தி  எல்லாமே  ராமாயணம் சம்பந்தமுள்ள இடங்கள்தான்! இப்போ நாம் இங்கிருந்து சுமார் 62 கிமீதூரத்தில் இருக்கும் திருப்புல்லாணி போறோம். ராமேஸ்வரம் தனித்தீவாக இருப்பதால்   பாம்பன் பாலம் தாண்டித்தான் எல்லாப் போக்குவரத்தும்.  பாலம் வந்தவுடன், அங்கே ஒரு ஸ்டாப் போடாமப்போக முடியலை. ரயில் பாலம் இருக்கும் சைடு  மட்டும்தானே பார்த்தோம். இப்போ அடுத்த பக்கம் பார்க்க வேணாமா?


கண்ணுக்கெட்டிய தூரம் கடலோ கடல். படகுகள் ஏராளமா நிக்குது.  எல்லாம் மீன்பிடிப் படகுகள்தான்.  வால் போல நீண்டு இருக்கும் நிலப்பகுதி. நிறைய தென்னைகள்.  நடுநடுவிலே  வீடுகள். ரெண்டு பக்கமும்  கடல்.  பார்க்கவே அழகா அம்சமா இருக்கு!  'காணி நிலம் வேண்டும்'  என்று முண்டாசு  வந்து காதில்  ஓதினார்!

எல்லாமும்  ஓலைக்கூரை, தகரம் இப்படி  இருப்பவைதான்.  மாடிக்கட்டிடமா ஒன்னும் இல்லை.  அடிக்கும் காத்தில் ஆபத்து  வந்துரும், இல்லெ!

வழக்கம்போல் பாலத்திலே இந்தக் குறிப்பிட்ட இடத்தில் கூட்டம்தான். ஆனால்  அநேகமா எல்லோரும்  எதிர்ப்பக்கம் பாம்பன் ரயில் ப்ரிட்ஜ் பார்த்துக்கிட்டு இருக்காங்க.  கொஞ்ச தூரத்தில் கப்பலாட்டம் கண்ணுலே பட்டுச்சேன்னு கெமெராக் கண்ணை அங்கெ அனுப்பினால்....  அது கரையோரப் பகுதிக்கான காவல் படையினரின்  கண்காணிப்புக் கப்பல்.
கொஞ்சதூரம் போனதும்  இந்தாண்டை ஒரு ரயில்.  போகுதா இல்லை வருதான்னு தெரியலை.....  சாலை ஓரமா   பனங்கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி விற்கும் விற்பனை ஒரு பக்கம்.  ஓலைப்பொட்டியிலே வச்சுருக்காங்க.


கொச்சி தனுஷ்கோடி சாலையில் போய்க்கிட்டு இருக்கும் நாம்  இடது பக்கம் திருப்புல்லாணிக்குப்போகும் சாலையில்  போகும்போது,  கொஞ்ச தூரத்தில் ஒரு யானை  கண்ணுலே ஆப்டது. என்னன்னு தெரியலையேன்னு  ஒரு நிமிட் வண்டியை  நிறுத்திட்டு, கெமராக் கண்ணை அனுப்பி விசாரிச்சால்  அது  தமிழக அரசு நிர்மாணிச்ச  ஐந்திணை மரபணுப் பூங்கான்னு   தெரிஞ்சது. அச்சடிப்பிரம்பு என்று இந்த கிராமத்துக்குப் பெயராம்.

ராமநாதபுரம் வறண்ட பகுதி என்பதால் பாலை நிலத்துக்கான பூங்கா அமைச்சுருக்காங்களாம்.     பத்து ஏக்கர் நிலத்தில் கள்ளிச்செடிகள் வச்சுருக்காங்கன்னு அப்புறம் தெரிஞ்சது.  ஹைய்யோ....  காக்டெஸ்.... கள்ளி....  கோட்டை விட்டுட்டேனே....

திருப்புல்லாணி,  அச்சடிப்பிரம்பு போகும் பாதையில் இருந்து   6 கிமீ  தூரம்தான். கோவில் காலை  7 முதல் 12.30 வரையும், மாலை 3.30 முதல் 8.30 வரையும் திறந்துருக்கும்.  நாம் போய்ச் சேர்ந்தபோது சரியா  3.50.
இன்னும் கூட்டம்   அவ்வளவா வரலை.   கோவில்  ராமநாதபுரம் அரசர்களால் நிர்வகிக்கப்படுதுன்னு  நினைக்கிறேன். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் என்ற குறிப்போடு  2003 இல் நடந்த கும்பாபிஷேகக் கல்வெட்டு   விவரம் பார்த்தேன்.முன்னால்  இருக்கும் மண்டபத்தின் தலையில் ப்ரிவ்யூ காமிச்சுருக்கார்  கிடந்தவர்!   அஞ்சு நிலையோடு ராஜகோபுரம் ப்ளிச்ன்னு இருக்கு.
கோபுரவாசலுக்குள் நுழையறோம். முகப்பு மண்டபத்தில் ரெண்டு பக்கமும் திண்ணைகளும்,  வரிசையா நிற்கும் சிற்பத்தூண்களும் நடுவில்  கோவில் உண்டி, பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடிக்கான சின்னூண்டு சந்நிதின்னு எல்லாம் பெருமாள் கோவில்களின் வழக்கம்போல்!

நம்மவர் பக்திப்பெருக்கில், வாசலில் இருக்கும்கடையில் இருந்து துளசி வாங்கிக்கிட்டார்.

என் கையில் துளசின்னு முரசறைந்து சொல்ல ஆசை போல :-)

துலாபாரம் கொடுப்பதும் உண்டு !

 வீட்டுக் கதையை சுவாரசியமாச் சொல்லும் ஒரு அம்மாவுக்கு ஆர்வமுள்ள மூணு ஆடியன்ஸ்!  மூணாவது ஆளை ரொம்ப நேரம் நிக்கவிடாமல் கிளப்பிட்டாங்க......
வெளிப்ரகாரம்  வலம் முதலில் . சந்நிதி விவரங்கள் இருக்கு.   மரத்தடி மேடையில் எக்கச்சக்க   நாகர்கள்!  மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்னு பெருமாள் சொல்லி இருக்கார் என்பதால் இங்கே  தலவிருக்ஷமும்  அரசமரம்தான்.  ரொம்பவே வயசான மரமாத்தான் தெரிஞ்சது! அரசும் வேம்புமா பின்னிக்கிடக்கு! எல்லா நாகர்களிலும் கிருஷ்ணனே!  தவழும் கிருஷ்ணன், காளிங்கன் மேல் ஆடும் கிருஷ்ணன்,   வெண்ணெய் உருண்டையைக் கையில் வைத்திருக்கும் கிருஷ்ணன் இப்படி....      மரத்தடி மேடைச்சுவரில் புல்லை அந்தாதிப் பாடல் ஒன்னு  பளிங்குக் கல்வெட்டில்.வெளிப்ரகாரத்தில் சுற்றி வரும்போதே  அங்கே ஆண்டாள் சந்நிதியும்   இருக்குன்னு உள்ளே போனோம். திருப்பாவை முழுசும் பளிங்கில் பொறிச்சு வச்சுருக்காங்க. தூமணி மாடம் ஆச்சு. அழகான ஆண்டாள்.  உற்சவரும் அழகு.  பெரிய குத்துவிளக்கு   சின்னதா  அமைதியா வெளிச்சம் தருது!


பத்தடியில் சொர்கவாசல்!   ராமர் பட்டாபிஷேகச் சித்திரம் அருமை!


அப்போ ஒருத்தரைத் தொடர்ந்து  மண்டபவாசல் போல   இருக்கும்  இடத்துக்கு ஒருகூட்டம் போனதும், நானும்  கூடவே போய் எட்டிப்பார்த்தேன். கோஷ்டத்தில் இருக்கும் நரசிம்மர். ரெண்டு பக்கமும் தேவியர்!
திரும்பிக் கோவிலுக்குள் போறோம். மண்டபத்தில் கருடவாகனம்!   அழகு! அடுத்தாப்லேயே இன்னும் சில கருட வாகனங்கள்!   கொஞ்சம் வெவ்வேற கால் மடிச்சு உக்கார்ந்துருக்காங்க!


முதலில் தர்ப்ப சயன ராமரைப்போய் ஸேவித்தோம். ராமாயண காலத்துச் சம்பவம்தான்!  இலங்கைக்குப் போய் சீதையை மீட்டுக்கொண்டு வரவேணும். தனுஷ்கோடி முனைக்கு அந்தாண்டை பெரிய  சமுத்திரம். இதைத் தாண்டிப்போக பாலம் கட்டலாமுன்னு ஐடியா இருக்கு. மிதக்கும் கற்களை வச்சுத்தான் கட்டப்போறோம்.   தண்ணீரில் போட்டதும் அது பாட்டுக்கு மிதந்துக்கிட்டே போயிருச்சுன்னா கஷ்டம் இல்லையோ....  கடலரசன் தயவு  வைத்தால்  பாலம் கட்டிக்க  முடியும்.  அதனால் சமுத்திர ராஜனையே வேண்டிக்கலாம்னு  முடிவு செஞ்ச ராமன், தர்ப்பைப்புல்லைப் பரத்தி அதன் மேல் 'கிடந்து' தவம் செய்யறார்! அதுவும் ஆதிசேஷன் மேல் புல்லை பரத்தி வச்சுட்டு!  புல் அணையில் பள்ளி கொண்டதால் இந்தத் தலத்துக்குத் திருப்புல்லாணி  என்ற பெயர்வந்துருக்கு.
மனிதனா அவதாரம் எடுத்தப்ப ஆதிசேஷன் எப்படி சேஷனாவே வந்துச்சுன்னு கேக்கப்பிடாது கேட்டோ! ஆதிசேஷன்தான்   லக்ஷ்மணனாக  பிறந்தான் என்பதால் இந்த சந்நிதியில் லக்ஷ்மணன் இல்லையாக்கும்!

மூணுநாள் தவம் இருந்தும் சமுத்திர ராஜன் வந்து  அருள் செய்யலைன்னதும் கோபம் வந்துருது ராமனுக்கு. கொண்டுவா என் கோதண்டத்தை....  இன்றைக்கே  கடலரசனுக்கு நான் யாருன்னு காமிக்கிறேன்னு வில்லில் அம்பு பூட்டியதும், பயந்து போன கடலரசன், தன் மனைவியுடன் ஓடிவந்து  மன்னிப்பு கேட்டுக்கிட்டு  பாலம் கட்ட வழிவிட்டார்னு போகுது ராமாயணக்கதை.  விருந்தும் மருந்தும் மூணுநாள் என்ற கணக்குலே தவத்தையும் சேர்த்துக்கணும் போல!  மூணு நாள் மூணே நாள்  ....


இந்தக் கோவிலில்  சயனகோலம் காமிக்கும்  சந்நிதியைத் தவிர  மற்ற கோலங்களில்  பெருமாள் இருக்கும் சந்நிதிகளும் தனிக்கோவில் போல பெரிய அளவில் இருக்கு. ஆதி ஜெகந்நாதர், ஸ்ரீதேவி, பூதேவியருடன்  இருந்த கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்!  தவம் செய்ய வந்த ராமன் வழிபட்ட ஜெகத்துக்கே நாதன் ஆன  பெருமாள், என்பதால்   இவர் ஆதி ஜெகந்நாதர்.
நம்ம  திருமங்கை ஆழ்வார் இருவது பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். 108 திவ்யதேசக்கோவில்களில் இதுவும் உண்டு!

வில்லால் இலங்கை மலங்கச் சரம் துரத்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரும் என் தன்னை ஏசிலும், பேசிடினும்
புல்லாணி யெம் பெருமான் பொய் கேட்டிருந்தேனே.

உற்சவமூர்த்தி  கல்யாண ஜெகந்நாதர்!   இவருக்கு கல்யாணவல்லி என்னும் உற்சவத்தாயார் உண்டு.
தனியாக  இருக்கும் தாயார் சந்நிதியில் பத்மாஸனித் தாயார்!
ராமன் சந்நிதிக்கு நுழையும் வாசலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய ஆஞ்சி சிலை தனி மண்டபத்தில் அருமையா அமைச்சுருக்கு!
அங்கிருந்து  இந்தப் பக்கம் வந்தால் பட்டாபிராமர் சந்நிதி!  எல்லோரும் இருக்காங்க.  நின்ற  கோலம்!
வெளியே இருக்கும் முன்மண்டபத்தின் முன்னால்  கோவில் கோபுர வாசலைப் பார்த்தாப்லே  பெரிய திருக்குளம்.  அஞ்சு ஏக்கர் விஸ்தீரணமாம்!  தளதளன்னு தண்ணீர், சுத்தமாகவும் இருக்கு. குளத்தின் கட்டை சுவரில் இங்கு குப்பை போடாதீர்னு எழுதி வச்சதைப் பார்த்ததும்தான், 'ஐயோ...  குப்பை போட மறந்துட்டோமே.... இதனால் என்ன பாவம் வந்துறப்போதோ'ன்னு பயந்த சனம் அங்கே குப்பையைப் போட்டு வச்சுருக்கு :-(சக்கரத் தீர்த்தம், கோவில் திருக்குளம்.  ஒரு காலத்தில் ராமனே  வந்து நீராடிய புஷ்கரணி. கொஞ்சம் கொஞ்சமாக்  கவனிப்பில்லாமல் கிடந்து கடைசியில் சின்னக்குட்டையா மாறி இருந்துருக்கு.   தேங்கி நிக்கும் தண்ணீர் ஒரே துர்நாத்தம். சகிச்சுக்கிட்டுத்தான் கோவிலுக்குப் போகுது சனம்.  பக்தர்களுக்கு, பெருமாள்கோவில் குளம்  இப்படி நாறிக்கிடக்கேன்னு கவலை. அவ்ளோதான்....

 மூக்கைப்பிடிச்சுக்கிட்டு சாமி கும்பிட்டு வர்றதுதான். வேற வழி?  இதுலே இந்தக் குட்டைத் தண்ணியை வச்சு ஜோசியம் வேற....  தண்ணி தெளிவா இருந்தால் நாட்டுக்கு நன்மை.  நிறம்மாறிக்கிடந்தால்  அந்த வருசத்து  விளைச்சல் குறைஞ்சுரும் இப்படி..........

1993 வரை இப்படிக்கிடந்த குட்டைக்கு நல்ல காலம் வந்தது, அப்போ  ராமநாதபுரம் மாவட்டத்துக்கு  வந்த கலெக்டர் க்ருஷ்ணன் அவர்களால். கோவிலுக்கு வந்தவர், குட்டையைப் பார்த்துட்டு, இதை சரிபண்ணி ஒரு தெப்பக்குளமா மாத்தலாமேன்னு அப்ப தமிழ்நாட்டு முதல் மந்திரியிடம்  கேட்டு அனுமதி  வாங்கிக்கிட்டு வேலையை ஆரம்பிச்சுருக்கார். கிணறு வெட்ட பூதம் கிளம்புச்சுன்னு சொல்றதைப்போல  மண்ணை அகற்றிச் சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பிச்சபோதுதான் படிகள் தெம்பட்டுக் கீழே இறங்கிப்போறதைக் கண்டு பிடிச்சாங்க.

சகதி, குப்பை, மண்ணு எல்லாத்தையும் வாரினதும் பார்த்தால் பிரமாண்டமான  தண்ணியில்லாக்  குளம் கண் எதிரில்.  ஊரே ஆச்சரியப்பட்டு நிக்குது!  ஊருலே  இருக்கும் வயசான  தாத்தா பாட்டிகளுக்குக் கூட  இவ்ளோ பெரிய குளம் இருந்த விவரம் கூட இல்லைன்னா பாருங்க.... எத்தனை நூற்றாண்டுகளுக்கு  முன்னே  நல்லா இருந்ததோ!!!!

இவ்ளோ பெரிய குளத்துக்குத் தண்ணீர் எப்படி ரொப்பறதுன்னு  அடுத்த கவலை ஆரம்பிச்சது.  அப்பதான் மழைநீர் அறுவடைத் திட்டம் ஒன்னு ஜோரா ஆரம்பிச்சு இருந்துருக்கும்போல...  அதையே இங்கே கடைப்பிடிச்சு வீணாப்போகும் மழைத்தண்ணியை இங்கே திருப்பி விட்டுருக்காங்க. அப்படியும் தண்ணி ரொம்பாமத்தான் இருந்துருக்கு.  ஊருக்குப் பக்கத்துலே இருக்கும் இன்னொரு ஊருணிக்குத் தண்ணியைத் திருப்பிவிட்டு, அங்கிருந்து  இந்தக் குளத்துக்கு  மோட்டர் வச்சு இறைச்சாப்லெ.

 இப்பப் பார்த்தா ....   ஊருணியும் சரி, புஷ்கரணியும் சரி தளதளன்னு தண்ணி நிரம்பிக்கிடக்கும் வற்றாத  நீர்நிலையாக, தமிழ்நாட்டு மழைநீர் சேகரிப்பு சமாச்சாரத்துலே முதலிடம் என்ற பெருமையையும்  ஒரு சேர அடைஞ்சுருக்கு!

இந்த ஒரு பதிநாலு வருசமா பெருமாளும்,   துர்மணம் போச்சேன்னு நிம்மதியா இருக்கார்!

குளத்துக்குப் படி இறங்கும் மண்டபத்தில் மழமன்னு இருக்கும் தூண்களோடு ஒரு மண்டபம் இருக்கு.  பளபளப்பான தூண்கள், பழைய செட்டி நாட்டு மாளிகைகளில் இருக்கு பாருங்க அந்த மாதிரி!  வெள்ளையடிக்கிறோமுன்னு  தூண்களில் சுண்ணாம்பைத் தெளிச்சு வச்சுருக்காங்க  வெள்ளையடிச்ச மக்கள். சீக்கிரம் சுத்தம் செஞ்சாத் தேவலை.  ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் உபயம்.  இந்த மண்டபத்தில்தான் அரிச்சந்திர புராணம் அரங்கேற்றம் ஆச்சாம். வீரை ஆசுகவிராயர் என்ற புலவர்,  இதை எழுதிப் பெருமாளுக்கு முன் பாடினாராம்.
தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தபின் ராமனும், லக்ஷ்மணனும், பரதசத்ருகனுமா நால்வர் பிறந்ததைக் குறிப்பிடற மாதிரி, இங்கே பிள்ளை வரம் வேண்டி  வரும் தம்பதியருக்குப் பிள்ளைகள்  பிறப்பதாக  ஒரு நம்பிக்கை. இதுக்காக தனிப்பட்ட பூஜை முறைகள் அனுஷ்டிச்சு, நாகர் சிலை ஒன்னு வச்சு உபவாசம் இருந்து  சேதுக்கரையிலும் சக்ரதீர்த்தத்திலும் நீராடி, அந்த நாகர் சிலையை  அரசமரமாக் காட்சிதரும் பெருமாளுக்குச் சமர்ப்பித்துடறாங்களாம்.  கோவிலில்  இருக்கும் எக்கச்சக்க நாகர் சிலைகளின் ரகசியம் கடைசியில் புரிஞ்சது! தசரதனுக்குக்  கிடைச்ச பாயஸத்தையும் விடலை. இங்கேயும் பாயஸ பிரஸாதம்தானாம் புள்ளை வரம் வேண்டி வர்றவங்களுக்கு!!!

கோவிலையும் குளத்தையும் பார்த்த மகிழ்ச்சியில் வெளியே  வர்றோம்.... டூரிஸ்ட் பஸ்கள் வரிசை கட்டி நிக்க பக்தர்கள்  கூட்டம் தபதபன்னு இறங்குது!

அவுங்க போய் சாமி கும்பிடட்டும். நாம் போய் சேதுக்கரையைப் பார்த்துட்டு வரலாம்.    அதிக தூரமொன்னுமில்லை. ஒரு நாலைஞ்சு கிமீதான்.  அங்கே போனால்....  ஒரு ஆஞ்சி கோவில் கடலைப் பார்த்தபடி! சேதுபந்தன ஜெயவீர  ஆஞ்சநேயர்!  தரிசனம் செஞ்சு  கருவறையை வலம் வந்து வெளிப்பிரகாரம் போனோம்.  ஒரு புள்ளையார் சந்நிதி இருந்தது.


எதிரில் இருக்கும் கடலில் தங்கள் பாவங்கள் போக நீராடி,  இன்னும் கொஞ்சம்   புதிய பாவம் சேர்த்துக்கும் வகையில் உடைகளை விட்டுட்டுப் போயிருக்காங்க பக்தர்ஸ்.  ஒருத்தர் அவைகளை சேகரிச்சுக்கிட்டு இருந்தார்.   இன்னொரு குடும்பம் கடல் தண்ணியாண்டை  நின்னுக்கிட்டு இருந்தாங்க.  நம்மைப்போல, சுற்றுலாப் பயணிகள் :-)
இங்கே பித்ரு தர்ப்பணம் செய்வது ரொம்ப விசேஷம் என்பதால் அமாவாசைகளில் அப்படி ஒருகூட்டம் சேருதாம். இந்தக் கடல் தீர்த்தம்,   ரத்னாகர தீர்த்தம் என்ற பெயரில் இருக்கு.

 இலங்கைப்பாலம் கட்டறதுக்கு இங்கிருந்துதான் அணை கட்டுனாங்கன்னு சொல்றாங்க. சேது என்றால் அணை என்றுதான் பொருள் என்று விளக்கம் இருக்கு.

பேசாம....   ராமர் தன் தந்தைக்கு இங்கே தர்ப்பணம் செய்தார்னு சொல்லி இருக்கலாமோ?  இப்ப நமக்குக் கிடைக்கும்  வரைபடங்களை வச்சுப் பார்த்தால்....  தனுஷ்கோடிக்கும் சேதுக்கரைக்கும் இடையில்  ரொம்பவே தூரம் இருக்கே.....

தொடரும்..............  :-)


12 comments:

said...

// மூணாவது ஆளை ரொம்ப நேரம் நிக்கவிடாமல் கிளப்பிட்டாங்க......//
TBC காதுல ஒரு செய்தி போய்ட்டா உலகத்துக்கே தெரிஞ்சிருமே ன்னு அவங்களுக்கும் தெரியுமோ என்னவோ ?

TBC - Thulasi Broadcasting Corporation.

said...

நாங்களும் ராமேஸ்வரத்திலிருந்துதான் அதே வழியில் திருப்புல்லாணி சென்றோம் அது எப்படி எங்கள் கண்களில் படாத விஷயங்கள் உங்கள் காமிராவில் இருக்கிறது

said...

உங்கள் மூலம் எங்களுக்கும் திருப்புல்லாணி பயண அனுபவம்....

சென்று வர வேண்டும்... பார்க்கலாம் எப்போது முடிகிறது என.

said...

பாம்பன் பாலமும் அழகு. அங்கிருந்து காணும் காட்சிகளும் அழகு. அதான் பாருங்க.. வண்டிய நிறுத்தி மக்கள் எட்டிப் பாக்குறத. அங்க வெள்ளரிக்கா, முறுக்குன்னு தீனிக்கடைகள் போட்டா நல்லா யாவாரம் ஆகும்.


ஐந்திணை மரபணுப்பூங்கா நல்ல திட்டமா இருக்கே. போய்ப் பாக்கனும் ஒருவாட்டி.

திருப்புல்லாணி போனதில்ல. கேள்விப்பட்ட பேரா இருக்கு.

said...

வணக்கம் மேடம் கீழக்கரைதான் எனது அம்மா ஊர் ஆகவே திருப்புல்லாணி பலமுறை சென்றாலும் இவைகளை பார்த்ததில்லை என்னும் போது குற்ற உணர்வே மேலிடுகிறது

இங்குதான் எனது அப்பா-அம்மாவுக்கு திருமணம் நடந்து இருக்கின்றது.

said...

வாங்க விஸ்வநாத்.

கிளப்பிவிட்டவர் நம்மவர். எப்பவும் காலில் சுடுகஞ்சி :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பயணத்தின்போது வண்டியின் ஜன்னலில் கண்களை ஒட்டி வச்சுருவேனே :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோவில் குளத்துக்குப் போக இன்னும் வயசுருக்கே!

said...

வாங்க ஜிரா.

ஐயோ.... நல்லாச் சொன்னீங்க..... மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு அரை மணி நின்னு வேடிக்கை பார்ப்பாங்களா..... அதுக்குள்ளே வாய் அரைச்சுக்கிட்டே இருக்கணுமா? யாவாரம் ஆகட்டுமுன்னு கடை போட்டு இன்னும் அந்தப்பாலத்தையும் விட்டுவைக்காமல் அழுக்கும் புழுக்குமா பண்ணிறணுமாக்கும்?

said...

வாங்க கில்லர்ஜி.

எல்லாத்துக்கும் வேளை வரணுங்கறது எவ்ளோ உண்மை பாருங்க ! அடுத்த விடுமுறைக்கு வர்றபோது ஒருக்காப் போயிட்டு வாங்க.

said...

பனங்கல்கண்டு விலை ரொம்பவே அதிகம் போல பணங்கல்கண்டு ஆயிருச்சே! ரீச்சரா லட்சணமா இதை எல்லாம் சரி பண்ணறது இல்லையா.. என்ன ரீச்சரோ என்ன கிளாஸோ... நான் ஒருத்தன் மட்டும் இல்லைன்னா...

said...

திருப்புல்லாணி அழைத்துச்சென்றமைக்கு நன்றி.