Monday, October 24, 2016

ஏகாந்தமாக இருவர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 93)

பொழுது விடிஞ்சு எல்லாம் வழக்கம்போல். இன்றைக்கு இங்கே இருந்து கிளம்பறோம். மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கிட்டு, ஹொட்டேல் பில்லை செட்டில் செஞ்சுட்டு போகணும். இந்தப் பயணத்தில் இதுவரை தங்கிய  ஹொட்டேல்களில் வாடகை இங்கேதான் அதிகம். இவ்ளோ வாங்கிக்கிட்டு, அறையில்  வைஃபை இல்லாமப் பண்ணதுதான் எரிச்சல்.....

எட்டேமுக்காலுக்குக் கிளம்பி  நேரா முதலில் போனது  கலாம் ஐயாவின் சமாதிக்குத்தான். ஊர் முழுக்க  கலாம்  ஐயாவின் பெயர்களிலேதான்  கடைகளும், புதுப்புது வியாபாரங்களும்!  நாம் இருந்த ஹொட்டேலில் கூட  கலாம் ஆர்கேட் என்ற பெயரில்தான் கலைப் பொருட்கள் கடை.
நேத்து இந்த வழியா மூணு முறை போய் வந்தாலும்,  சமாதி இருக்குமிடம் கண்ணில் படலை. அப்புறம் ராத்திரி டின்னர் சமயம், குமாரிடம் கேட்டு இடம் தெரிஞ்சு வச்சுக்கிட்டோம்.  ரோடில் இருந்து கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு.  ஒரு போர்டாவது போட்டு வச்சுருக்கலாம்.
பேய்க் கரும்பு கிராமம் என்ற பெயராம் இந்த இடத்துக்கு. தெய்விக் ஹொட்டேலில் இருந்து 2.7 கிமீ தூரம்தான்.

தகரக்கொட்டகையின் கீழே சுத்திக் காவல்துறை போட்டு வச்சுருக்கும்  தடுப்புகளுக்கு நடுவில்  ஏகாந்தமா  மீளாத துயிலில் இருக்கார்  கலாம் ஐயா.  மனசுக்கு வலியா இருந்தது உண்மை. மின்விளக்கு ஒன்னு போட்டு வச்சுருக்காங்க. நல்ல மணல்பரப்பு. நினைவிடம் மண்டபம் கட்டப் போறாங்க.  காம்பவுண்டு சுவருக்கான வேலை  இப்பதான் ஆரம்பிச்சு இருக்கு.  அஞ்சு நிமிசம் கண்ணை மூடி  கலாம் ஐயாவை நினைச்சுப் பெருமாளிடம் பிரார்த்தனை செஞ்சுட்டுக் கிளம்பினேன்.


 ஒரு விளக்கு போட ஒன்பது லட்சரூபாய் செலவா?  அநியாயமா இல்லே? இதைச்சுத்தி என்னா விளம்பரம் பாருங்க.........   :-(   ப்ச் ....எதிர்சாரியிலே  ரோடின் அடுத்த பக்கம்  ஏகாந்தராமர் கோவில் இருக்கு.  சீதையைத் தேடி வந்தவர், இங்கே சீதையில்லாமல் தரிசனம் கொடுக்கறார்.  மண்டபங்களும் தூண்களுமா இருக்கு.   கொஞ்சம் பெரிய கோவில்தான். ஒரே பிரகாரத்தோடு இருக்கு.


1963 இல்  பழுதுபார்க்க ஆரம்பிச்சு  2010 லே  கும்பாபிஷேகம்  நடந்துருக்குன்னு  பளிங்குக் கல்வெட்டு சொல்லுது. ஆனால் கோவிலில் இன்னும் பராமரிப்பு வேலைகள் முடிஞ்சமாதிரி தெரியலை :-(
உள்ளே நுழைஞ்சதும் ப்ளாஸ்டிக் பக்கெட்டில் துளசி :-(

கோவில் பாத்திரங்கள் எல்லாம் படு சுத்தமாத் தேய்ச்சு வச்சுருந்தாங்க.  மகிழ்ச்சி.
இங்கே உள்ள கிணறு  அமிர்தவாபி தீர்த்தம்.  பார்த்தாலே புண்ணியமாம்!   பார்த்தாச்சு.


பாரதத்தில் ராமன் நடந்த பாதையைக் காமிக்கும் வரைபடம் ஒன்னு சுவரில்.
மாமரம் பூத்துக்குலுங்குது. தரையெல்லாம் புல்மண்டிக்கிடக்கு. இன்னும் நல்லா வச்சுக்கலாம்தான்............   ப்ச்
கோவிலைத் தொட்டடுத்து  'தூயகுழந்தை' ஆலயம்!  இந்த வளாகம் ரொம்பவே பெருசா இருக்கு!
இதோ...  பாம்பன் பாலம் வந்தாச்சு. ஒரு ஸ்டாப் போட்டுட்டுத்தான் போகணும். அதே பத்து மினிட் அனுமதிக்கப்பட்டது :-)  இன்னும் மக்கள் கூட்டம்  வந்து சேரலை. க்ளிக்ஸ் ஆனதும் கிளம்பிட்டோம்.


மண்டபம் தாண்டுனதும் கடலோரக் காவல்படையினரின் ஸ்டேஷன் இருக்கு.

நேத்துப் பார்த்தது போல இன்றைக்கும் பனங்கருப்பட்டி, பனங்கல்கண்டு  விற்கும் வியாபாரிகளின் கடைகள்.  வெள்ளைச் சக்கரையை விட  பனைவெல்லம் நல்லதுன்னு சொல்றாங்க.

இன்றைக்கு  வேற  எங்கேயும் வேடிக்கை பார்க்காம, ராமேஸ்வரத்தில் இருந்து 240 கிமீ பயணம். நாலேகால் மணி நேரம் ஆகுமுன்னு கூகுளார் சொன்னார்.  உச்சிப்புளின்னு கூட ஒரு பெயர் பார்த்தேன்.

 கிளம்பி ஏறக்கொறைய ரெண்டு மணி நேரம் ஆகி இருக்கும் என்பதால்          எங்கெயாவது நிறுத்தி டீ குடிக்கலாமேன்னு சீனிவாசனிடம் சொன்னார் நம்மவர்.  இவருக்கு வேணாம் என்றாலும்  இந்த டிரைவர்களுக்கு டீ குடி பழக்கம் இருக்கே!  நல்லவேளையா நம்ம சீனிவாசனுக்கு மற்ற 'குடிப்பழக்கம்' இல்லை என்பதே எங்களுக்கு மனநிம்மதி.

புண்ணிய தலங்களில் தமிழக அரசு  தீர்த்தம் விக்காதுன்ற என்ற என் நம்பிக்கை பொய்த்துப் போனது ராமேஸ்வரத்தில். ஏகப்பட்ட தீர்த்தம் இருக்குமிடத்தில் நம்ம தீர்த்தமும் இருந்துட்டுப் போகட்டுமேன்னு தமிழக அரசுக்கு நினைப்பு :-(

ஒரு டீக்கடை கண்ணில் பட்டது.  பெண் தொழிலதிபர் இருக்காங்க. என்ன இடமுன்னு  கண்கள் தேடுனதில் C.K. மங்களம் னு  தெரிஞ்சது.  அட... நம்ம மங்களம் :-) இவுங்க ரெண்டு பேரும் போய்டீ குடிச்சுட்டு வந்தாங்க.  கொஞ்சதூரம் போனாட்டு, சின்னக்கீரைமங்கலம் என்ற பெயரோடு ஒரு பள்ளிக்கூடம்.  ஆஹா....   C.K. தான் சின்னக்கீரை :-)

ஷிர்க் ஒழிப்பு மகாநாடு திருச்சியில்  நடக்கப்போகுதுன்னு  நிறைய இடங்களில்  பார்த்தேன்.  இந்த ஷிர்க் யாரு? ஏன், எப்படி  ஒழிக்கப்போறாங்க? ஒரு வேளை புது அரசியல் கட்சியோ?
அன்றைக்கு மாலை தோழியோடு அலைபேசுனதில், இஸ்லாமில் இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு இந்தப் பெயர்னு தெரிய வந்தது.  எந்த மதமா இருந்தாலும் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டியதுதான், இல்லையா?

தேவகோட்டை வழியாகப்போய்க்கிட்டு இருக்கோம். தேவகோட்டை ரோடுன்னு ஒரு ரயில்வே ஸ்டேஷன் கூட இருக்கு!
திருமயம் வருது. கோட்டை தெரியுதான்னு பார்த்ததில் தூரக்கத் தெரிஞ்சது. ஊருக்குள் போகாமல்  இந்தப் பக்கமாப் போய் திருச்சி பைபாஸ் ரோடு வழியா  போறோம். எல்லா இடங்களில் டோல் சார்ஜ் நம்ம சீனிவாசனே கட்டிக்கிட்டுப்போகணுமுன்னு முன்னேற்பாடு.  கடைசியில்  கணக்கு தீர்க்க சுலபமா இருக்கு இப்படிச் செய்வது.
தூரத்தில் தெரிஞ்ச  மலைக்கோட்டை உச்சிப்புள்ளையார் கோவில், ஹப்பாடா வந்துட்டோம் என்ற ஆறுதலைக் கொடுத்தது.  நமக்கு நேரா ஸ்ரீரங்கம்தான் போகணும். அங்கேதான் இந்தமுறை ஹொட்டேல் புக் பண்ணி இருக்கு. ரெங்கனுக்குப் பக்கத்தில் இருக்கணுமுன்னு நச்சரிச்சு  இங்கே.  நம்மவருக்கு  அவ்வளவா விருப்பம் இல்லை.......   அதுக்குப் பார்த்தால்  திருச்சியில் அறை எடுத்துக்கிட்டு  ஸ்ரீரங்கம் வர்றதுக்குள்ளே..........  ப்ச்.....

டோல் ரோடு முடிஞ்சு  போகும்போது  ஸ்ரீரங்கம் வழியைத் தவற விட்டுட்டார் சீனிவாசன்.  ஒரு பாலத்துமேலே போகவேண்டியது. ஆனால் இன்னும் அந்தப் பாலம் கட்டி முடியலையாமே..... திருச்சி மார்கெட் பகுதியில் போய் மாட்டிக்கிட்டோம். வண்டி நகரக்கூட இடமில்லாமக் கூட்டம்  அலை மோதுது. சிந்தாமணியை இப்பதான் பார்த்தேன் :-)  லூர்துமாதா கோவில் கோபுரம் பார்த்ததும் இங்கிருந்தே ஒரு கும்பிடு.
கால்மணி நேரம் அங்கெல்லாம் சுத்திப் பார்த்து முடிச்சுச் சரியான வழியில் போக ஆரம்பிச்சுக் காவிரி பாலம் தாண்டி, அம்மாமண்டபம் திரும்பினதும்  ரெங்கன் கோபுரம்!  வந்துட்டேண்டா.......
ஹொட்டேல் ஹயக்ரீவாவில் தங்கறோம்.   ஜஸ்ட் பேஸிக். ஆனால் நீட்டா இருக்கு அறை. கீழே கார் பார்க்கில் ஸ்ரீ பாலாஜி பவன்.  மொட்டை மாடியில் இருக்கும் ரெண்டு அறைகள்  ட்ரைவர்களுக்கு. எல்லாம்  சரி!

நம்ம அறையில் இருந்து  ஜன்னலில் ஒரு   கோணத்தில் பார்த்தால் ஹொட்டேல் வாசல் தெரியும். அவ்ளோதான்.  ஆனால்  நம்ம சீனிவாசன் தங்கும்  மொட்டைமாடியில் இருந்து பார்த்தால்  கோபுர தரிசனமாம்!

முதல் வேலை முதலில்னு கீழே போய் பகல் சாப்பாடு. இப்ப மணி ரெண்டேகால்.  ஒரு மணி நேர ஓய்வுக்குப்பின் கிளம்பலாம் ரெங்கனைப் பார்க்க :-)

தொடரும்..............  :-)


6 comments:

said...

கலாம் நினைவிடத்தைச் சுத்தி இப்போ காம்பவுண்ட் போட்டிருக்கு. நிறைய கூட்டம் நின்னு பாத்துட்டும் போகுது. நீங்க போனப்ப இருந்தத விட முன்னேற்றம் இருக்கு. இன்னும் முன்னேறும்னு நம்புவோம்.

இராமேசுவரத்துல வாடகை நிறையதான். அந்த அளவுக்குக் கூட்டம் வருது. அதுனால அவங்களும் அந்த வெலை வெக்கிறாங்க.

அரங்கத்திலேயே தங்கலா.. அட்டகாசம். இதுவரை திருவரங்கம் பலமுறை போயிருக்கேன். ஆனா தங்குனதில்ல. திருவானைக்காவிலும் தங்குனதில்ல. எங்கப்பன் முருகன் பழனில தங்க வெச்சான். காலைல எழுந்து திரைய விலக்குனா மலையும் மலைக்கோயிலும் கண் முன்னாடி. மலையடிவாரத்தில் தங்கல்.

said...

a good narration ji

said...

// புண்ணிய தலங்களில் தமிழக அரசு தீர்த்தம் விக்காதுன்ற என்ற என் நம்பிக்கை பொய்த்துப் போனது //

மக்கள் திரளும் இடமெல்லாம் மது தீர்த்தம் இருக்கும்.

said...

அப்துல் கலாம் மீளாத்துயில் கொள்ளும் இடம் கண்டோம். நெகிழ்சசியாக இருந்தது.

said...

வணக்கம் மேடம்
நானும் கூடவே வருவது போன்ற உணர்வு... தேவகோட்டை வழியாக போனீர்களே.... சிவன்கோவில், சிலம்பனி பிள்ளையார் கோவில் போயிருக்கலாம் மெயின் ரோட்டு வழிதான்....
நானிருந்தால் அழைத்துப் போயிருப்பேன் எனது வீட்டுக்கும் பரவாயில்லை அடுத்தமுறை பார்க்கலாம்.
புகைப்படங்கள் அனைத்தும் அழகு.

said...

பாம்பன் பாலம் என்ன ஒரு கம்பீரம்! தமிழ்நாடு முழுக்க காரிலா? ஸ்ரீநிவாசன் இருக்கும்போது கவலையே வேண்டாம்.

ஏகாந்த ராமர் கோவிலில் இருக்கும் வரைபடத்தை நேரில் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அந்த ராமர் எங்களைக் கூப்பிடுகிறாரா, பார்க்கலாம்.

நீங்கள் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்த இடத்திற்கு நேரில் எதிரில் இருக்கும் சைதன்யா அடுக்குமாடிக் குடியிருப்பில் தான் என் அக்காவின் வீடு. உங்களைப் பார்க்கும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.