Wednesday, December 16, 2015

கடைக்குப்போய் காவி வாங்கிக்க முடியாதாமே!

ஒரே ஆச்சரியமாத்தான் போச்சு.....   அது எப்படி எனக்கே(!!) தெரியாம இப்படியெல்லாம்?  மண்டையைக் குடைஞ்சு யோசிச்சதும் பதில் கிடைச்சுருச்சு. நாங்க இங்கே வந்த புதுசுலே(1988) கடைகள் எல்லாம்  வாரத்துலே  அஞ்சரை நாள்தான். சனி பகல் 1 மணியில்  இருந்து  திங்கள்காலை 9 வரை மூடிருவாங்க.

அப்பெல்லாம்  வீட்டுலே வீக் எண்ட் வேலைன்னு ஒன்னும் அதிகமா இருக்காது.  வாடகை வீடுதான். குளிர் பழகாத உடல் என்பதால்  டிவிக்கு முன்னால்  உக்கார்ந்துருவோம்.  ஞாயிறுதான் காய்கறி வாங்கன்னு  பண்ணைகளுக்குப் போவோம். முக்கால் வாசி  'பிக் யுவர் ஓன்'. நாமே போய் பறிச்சுக்கிட்டு, அங்கிருக்கும் ஷெட்டில் இருப்பவர்களிடம் கொடுத்தால்  நிறுத்துப் பார்த்துக் காசு வாங்கிப்பாங்க.

ஒரு பத்து லிட்டர் பக்கெட் நிறைச்சு தக்காளி  மூணு டாலர், ஆப்பிள்  கிலோ அம்பது செண்ட்,  பச்சைப்பட்டாணி ஒரு பக்கெட் அஞ்சு டாலர், வெங்காயம்  ஒரு பக்கெட்  ரெண்டு டாலர் இப்படித்தான் விலைகள்.  முதல்முதல்லே ஆப்பிள் மரம் பார்த்ததும், அளவு தெரியாமல் வெவ்வேற வகை  மரங்களில்  இஷ்டத்துக்குப் பறிச்சு எடுத்து 20 கிலோ வாங்கும்படி ஆச்சு. அப்புறம் வீட்டுக்கு வந்துபோன ஃபிஜி நண்பர்களுக்கு ஆப்பிளை வாரிக்கொடுத்து கொடை வள்ளல் ஆனதெல்லாம் தனிக்கதை. 

 நாங்க நியூஸியில் கால் குத்தினதே ஒரு கோடையின் கடைசிப்  பகுதி.  கோடை முடிஞ்சதோடு பண்ணை சமாச்சாரமும் முடிஞ்சுரும்.  ஆனாலும்  பண்ணைகள் இருக்கும் பகுதியான மார்ஷ்லேண்ட் சாலையில்  ஒரு பெரிய காய்கறிக் கடையில் போய் காய்கள் வாங்கி வருவது மட்டும் தவறாமல் நடந்துச்சு.


காலப்போக்கில் வாரம் முச்சூடும் சூப்பர் மார்கெட்டுகளும், மற்ற கடைகண்ணிகளும் திறந்து வைச்சதும்,  இங்கே நம் வூட்டாண்டையே  சில காய்கறிகடைகள்   இருப்பதைக் கண்டுபிடிச்சதும்  மார்ஷ்லேண்டைக் கொஞ்சம் கொஞ்சமா மறந்தே போயிட்டோம்.


இப்படியே ஒரு பதினொரு வருசங்கள் கடந்து போனபின் ஓசைப்படாமல் எழும்பி இருக்கு ஒரு புத்தர் கோவில். சைலண்ட் புத்தா!!!!


வருசம் 1999!  தாய்லாந்து புத்த மடம் ஒன்னு  ஆர்வமா முன்கை எடுத்து இதைக் கட்டி இருக்காங்க. அதே மார்ஷ்லாண்ட் ரோடில்!  அதுவும் எனக்குத் தெரியலை பாருங்க. அதான் அங்கே அந்தப்பக்கம்  போறதையே விட்டுட்டோமே :-(


இப்போ ஒரு  நாலு வருசத்துக்கு முந்தி (2011) ஒருநாள்   மார்ஷ்லேண்ட் ரோடில் இருக்கும் கார்டன் சென்ட்டருக்குப் போறோம். நியூஸி வாழ்க்கையில் இருந்து கோபாலின் பணி நிமித்தம் இந்தியாவில் போய் ஒரு ரெண்டரை வருசம் 'குப்பை கொட்டிட்டு' திரும்ப வந்துந்த சமயம் அது. விட்டுட்டுப்போன செடிகள் எல்லாம் மண்டையைப் போட்டுருந்துச்சு.  மீண்டும் வீட்டுத் தோட்டத்தைத் தூக்கி நிறுத்தப் பாடுபட்ட நேரம்.

கார்டன் சென்ட்டர் போகும் வழியில் சட்னு கண்ணில் பட்டது, ஒரு  போர்டு.  வாட்புத்தா சமாக்கீ. பார்த்த விநாடியே தெரிஞ்சது இது ஒரு தாய் சமாச்சாரமுன்னு. அப்போ ஒரு வருசத்துக்கு முன்னால்தான் பாங்காக் நகரில் ஏராளமான புத்தர் கோவில்களுக்குப் போய்வந்து நிறைய எழுதியிருந்தேன்.

 தசாவதாரத்தில் ஒரு அவதாரம் புத்தர்னு  கேள்விப்பட்ட சேதியில் எனக்கு உடன்பாடு இல்லைன்னாலும்.....   புத்தரிடம்  ஒரு  ஸிம்பிள் கவர்ச்சி  இருப்பதாக எனக்கு ஒரு தோணல். கவர்ச்சி அந்த சிலை வடிவுக்குத்தான்.  பட்டினி கிடந்த உருவம் எனக்குப் பிடிக்கலை.  கன்னமெல்லாம் கொழுகொழுன்னு  இருக்கும் புத்தாதான் என் ஃபேவரிட்.  நம்மூட்டு புத்தாஸ் அனைவரும்  இந்த வகைதான், பாப்பா உட்பட :-)ரெண்டுமாசத்துக்கு முன்னே கூட ஒரு கண்ணாடி புத்தா வாங்கியாந்தேன்.


உள்ளே போய் பார்க்கலாமுன்னு  போனோம். நீரோடையும் பாலமும், புத்தர் சிலைகளும், தோட்டமுமா .....    அடடா...  இதெல்லாம் எப்போ வந்துச்சுன்ற அதிசயம்தான். மெயின் கட்டிடமா இருக்கும்  கோவிலுக்குள் போய் கும்பிட்டு முடிச்சதும் வெளியே இருக்கும் அலங்காரப்பொருட்களை எல்லாம் ரசிச்சுக் க்ளிக் செஞ்சுக்கிட்டேன்.  வெளியே  தோட்டத்திலும்  யானைக்குடும்பம் வர்றதுக்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு குடும்பம் ஏற்கெனவே  வந்து நிக்கறதையும் தூரத்தில் இருந்து பார்த்ததுதான்.

ஆதிசேஷன் மேல் (ஏழு தலை) அமர்ந்த புத்தரும் அங்கே இருந்தார்.  கோவிலுக்குப் பின்பக்கம் இருக்கும்  ஹெட்ஜ் செடிகளை ரெண்டு பிக்குகள்  வெட்டி  சரிபண்ணி சுவர் எழுப்பிக்கிட்டு  இருந்தாங்க.    இன்னொருநாள் ஆற அமர வரணும் என்று நினைச்சதோட சரி. எதுக்கும்...........வேளை வரவேணாமா?


வேளை(யும்) வந்தது, ஒரு நாலு வருசம் கழிச்சு! 'காயப்போய்' பார்க்கப்போய் மார்ஷ்லேண்ட் சாலையில் வந்தோமுன்னு  ஒரு பதிவில் சொல்லி இருந்தேனே... அன்றைக்குத்தான் அந்த 'வேளை' !  நம்மோடு ஒரு நண்பரும் (ஊருக்குப் புச்சு) இருந்ததால் அவருக்கும் காமிக்கலாமுன்னு   புத்தர் கோவிலுக்குப் போனோம்.

எல்லா மதங்களிலும்  கிளைகள் முளைச்சு பிரிவுகள்  அதிகமா ஆவதைப்போலவே புத்த மதத்துலேயும்  ஹீனயானம், மஹாயானம், மத்யமகம், விக்ஞானவாதம், தேராவாதம், யோகாசாரம், வஜ்ரயானம் இப்படி பலதுமா அதது அதன்போக்கில் வளர்ந்துக்கிட்டு இருக்கு. அதுலே இந்தக் கோவில் தேராவாதம் பிரிவைச் சேர்ந்தது.

நீரோடையில் மிதக்கும் தாமரைகளையும்,  வண்ணக்காகிதங்களால் ஆன சில மிதக்கும் அலங்காரங்களையும் எடுத்துப்போட்டுச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க சிலர். Loi Krathong Festival நடந்து முடிஞ்சதாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.   அடடா....  ஜஸ்ட் மிஸ்டு  :-(
என்னன்னு கேட்டதுக்கு  Kathina  விழா முடிஞ்சதுன்னு சொன்னாங்களே தவிர ஏன் எதுக்குன்னு சொல்லலை.   உள்ளூர் மக்கள் போல இருந்தாங்க. புத்தமதம் சேர்ந்த நண்பரின் விருந்தினராக இருக்க வாய்ப்பு உண்டு.  சடசடன்னு குப்பைப் பையிலே எல்லாத்தையும் போட ஆரம்பிச்சதும் எனக்கு திக் ன்னு இருந்துச்சு. கூடமாட உதவி செய்யன்னு போன கோபாலுக்கும் அப்படித்தான் ...... (எனக்கு ரொம்பபிடிச்ச விஷயம் நம்ம கோபாலின் உதவிக் கரங்கள்தான்! பொதுவெளியில் நமக்கென்னன்னு நிக்கமாட்டார் எப்பவும்!)
தாமரைகளையும்  குப்பைக் கணக்கில்  சேர்த்துட்டாங்க. நம்மவர் உடனே குப்பைப் பையைத் திறந்து தாமரைகளை மட்டும் வெளியே எடுத்துப் போட்டார்.   'இது ஒவ்வொன்னும் நாலு டாலர். எடுத்து வச்சு அடுத்த விசேஷத்துக்குப் பயன்படுத்தலாம். கெட்டுப்போற சமாச்சாரமா என்ன?' நானும் என் பங்குக்கு ஒரு சொற்பொழிவு ஆற்றினேன். அதுக்குள்ளே வேற வேலையாப் போயிட்டு வந்த பிக்கு ஒருவர் தாமரைகள் காப்பாற்றப்பட்ட சேதி தெரிஞ்சதும்  நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.


நிற்கும் புத்தர் சிலைக்கு ரெண்டு பக்கங்களிலும்  புதுசா அசுரர்/ காவலர் சிலைகள் வச்சுருக்காங்க இப்ப. பாங்காக் அரண்மனைகளிலும் கோவில்களிலும், ஸ்வர்ணபூமியிலும் (ஏர்ப்போர்ட்)பார்த்த  வகைகள். நம்முடன் வந்த நண்பர்  ஸ்ரீதர்தான் அன்றைக்கு என் மாடல் :-)

 என்ன விசேஷமுன்னு பிக்குவிடம் விசாரிச்சோம்.  Royal Kathina Ceremony கஷாயம் கொடுக்கும் விழா!  நம்மைப்போல  புதுத்துணி வேணுமுன்னா புத்தபிக்குகள் சட்னு கடைக்குப்போய் வாங்கிக்க முடியாது. வருசத்துக்கு ஒரு முறை காவி உடைகள் தருவாங்க(ளாம்.)  தலைமை மடத்தில்  அரசரே வந்து  இவுங்களுக்கான காவி உடைகளைக் கொடுத்து மரியாதை செஞ்சு ஆசி வாங்கிக்குவாராம்.  மற்ற  நாடுகளில் இருக்கும்  இந்த  தேராவாதத்தின் கிளை மடங்களில் இருக்கும் பிக்குகளுக்குத் தலைமை பிக்குவின் ஆசிகளோடு உடைகள் வழங்கப்படும் விழா இது.
முந்தி ஒரு கதை  வாசிச்ச நினைவு.  புத்தரின் பிரதம சீடரான ஆனந்தா, தனக்கு  ஒரு உடை வேணுமுன்னு புத்தராண்டை விண்ணப்பிக்கிறார். 'ஏன் என்ன ஆச்சு உன் பழைய உடை'ன்னு அவர் கேட்க, அது கிழிஞ்சு போச்சு. அதைப் போர்வையா பயன்படுத்தினேன். இன்னும் கிழிஞ்சு பழசானதும் அதை தலையணை உறை ஆக்கினேன்.  அதுவும் கிழிஞ்சபின் அதை  தரை துடைக்கும் துணியாக்கினேன்.  அது கந்தலானபிறகு கிழிசல்களை எடுத்துத் திரிச்சு விளக்குத்திரி ஆக்கினேன்னு சொல்வார். முழுக்கதையும் இப்போ நினைவில் இல்லை. ஏறக்கொறைய இப்படித்தான் போகும். ஒரு பொருளைக் கடைசி வரைப் பயன்படுத்திய சிக்கனம் பற்றிய கதை. 

எங்கே இருந்து வந்துருக்கீங்கன்னார். வசிப்பது நியூஸியில் இதே ஊர் என்றாலும், 'ஒரிஜினலி  வீ ஆர் ஃப்ரம் த லேண்ட் ஆஃப் புத்தா'ன்னு சொன்னேன். ' ஓ.. அங்கே எந்த ஊர்' ன்னதுக்கு சென்னைன்னதும்,  'ஐ  நோ த ப்ளேஸ்.  ஓப்பன் டென்னிஸ் நடந்துச்சே அதுதானே'ன்னார்!  (நடந்துச்சா என்ன? ஸ்போர்ட்ஸ்  இன்ட்ரெஸ்ட் இருக்கு போல!)  பற்றற....   ஆசையே....  துன்பத்திற்குக்  காரணம். ஆசை அறுமின்....  கணக்கில் வராதுதானே?


பொதுவா புத்த பிக்குகள்  வெவ்வேறு நாடுகளில் இருக்கும் மடங்களுக்கு மாறி மாறிப்போய்  ஒரு சில ஆண்டுகள்  தங்கி பயிற்சியுடன், சேவை செஞ்சுக்கிட்டு இருப்பதுதான் வழக்கமாம்.


இந்த கோவில் எல்லோருக்கும் பொதுவானது. வருசம் முழுசும்  24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்றார்.  கோவில் வெப் சைட்டில் பேரை பதிஞ்சுக்கிட்டால்  விழா, விசேஷம் இப்படி விவரங்கள் எல்லாம்  கிடைக்கும். தியான வகுப்புகள் நடக்குது. எல்லாம் இலவசம்தான். வாங்கன்னார்.

 சரின்னு தலையாட்டி நன்றி சொல்லிட்டு கோவில் கட்டிடத்துக்குப் போனோம். இங்கேயும் வாசலில் புதுசா ரெண்டு த்வாரபாலகர் சிலைகள்.

     (பேசாம அன்றும் இன்றும் னு படங்கள் போட்டுடணும்! சின்ன அளவில் உள்ளவை அன்று 2011.  கொஞ்சம் பெரிய அளவுப் படங்கள்  இன்று 2015)  பெரிய ஹால் . ஹாலின்  நேரெதிர் மேடையில் அலங்காரங்களுடன் புத்தர் பத்மாசனத்தில் உக்கார்ந்துருக்கார்.  மடிச்சு வச்ச ரெண்டு முழங்கால்களுக்கு இடையில் இருக்கும் மடியின் அகலம் 16 அங்குலம்.  1999 வது வருசம் இவரை இங்கே கொண்டுவந்து பிரதிஷ்டை செஞ்சவர் தலைமை மடத்தில் மூத்தவர்கள் சபையின் அங்கமாம்.
புத்த பிக்கு ஒருவர் உள்ளே இருந்தார். நம்மை  வரவேற்று விசாரிச்சார்.  தாய்லாந்து மடத்தில் இருந்து  வந்து ஒரு வாரம் ஆச்சு.  அடுத்தவாரம் கிளம்பி  இன்னொரு நாட்டுக்குப் போறாராம்.  இன்ஸ்பெக்ஷன் செய்ய வந்துருக்காரோ என்னவோ? ரொம்ப அன்பாகப் பேசறார்.  நானும்  நம்ம புத்தர்கோவில் அனுபவங்களையெல்லாம்  சொன்னேன்.  சாரநாத், பாங்காக், பாலி, கம்போடியான்னு நமக்கும் சொல்ல விஷயங்களிருக்கே:-)))
 இன்னும் சிலர்  உள்ளே போட்டுருக்கும் சோஃபாவில் உக்கார்ந்து என்னமோ கணக்கு பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இன்றைய விழாவின் கமிட்டி மெம்பர்களாக இருக்கலாம். எல்லோர் முகங்களிலும் சொல்லி வச்சாப்போல ஒரு புன்னகை. நமக்குமிது ஒட்டிக்கிச்சு:-)

பெரிய பண்ணை நிலமா இருக்கு.  அங்கங்கே  காய்கறிகள் பயிர் செஞ்சுருக்காங்க. மடத்தின் செலவுக்குப்போக, உள்ளூர் தாய் ரெஸ்ட்டாரண்டுகளுக்கும்  விற்பனை ஆகுதாம். இன்றைய விழாகூட தாய் உணவகங்கள் ஸ்பான்ஸார் செஞ்சதுதானாம். ரொம்ப நல்ல சமாச்சாரம்.


எந்த மதத்தைச் சேர்ந்த  மடங்களா இருந்தாலும், அங்கே போய் சோம்பேறியா உக்காரமுடியாது. வேலைகள் எக்கச்சக்கம் இருக்கும். சந்நியாஸியாப் போய் நிம்மதியா மடத்துலே உக்கார்ந்துருவேன்னு  சொல்றாங்க பாருங்க....  அது  சேவை செய்வதால் கிடைக்கும் மனநிம்மதிதான்.  உடலுக்கு ஓய்வு கிடையாது என்பதே நிஜம்.


 தோட்டவேலை செஞ்சுக்கிட்டு இருந்த  பிக்கு பயிற்சியாளரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  பங்ளா தேசமாம். இப்போ ஏழு வருசமாச்சாம். பயிற்சியில் இருக்கார். இன்னும்  ஒரு ஏழு வருசம் பயிற்சி பாக்கி இருக்காம். ரெண்டு மூணு வருசத்துக்கு ஒருமுறை இடமாற்றம் உண்டுன்னார். பெயர் சத்யப்ரியா. நல்ல பெயர்ன்னு  பாராட்டிட்டு, அந்தப்பெயரில் எங்க ஊரில் ஒரு நடிகை இருக்காங்கன்னு (அபத்தமா) சொன்னேன்:-)
கோவிலுக்குப் பின்புறம் வெளித்தோட்ட அலங்காரங்கள்  எல்லாம்  போனமுறை பார்த்ததைப்போல அப்படியே இருக்கு. இங்கே ஒரு அழகான தனிச்சந்நிதியில் இருக்கும் சாமி யாருன்னு தெரியலை. அடுத்தமுறை போகும்போது (?) விசாரிக்கணும்.  உள்ளே குழலூதும் புத்தரும், சிதார் வாசிக்கும் புத்தரும்  மேடைப் படிக்கட்டில் இருக்காங்க. அழகோ அழகு!


இனிமே ஒரு  ஆறு மாசத்துக்கு ஒருமுறையாவது போய் வரணும். பார்க்க அழகா இருக்கே!


7 comments:

said...

புத்தர் கோவில், நீங்க, கோபால்,அந்த்கப் பிள்ளை ஸ்ரீதர் எல்லாம் சிரித்த முகத்தோட இருப்பது
அழகா இருக்கு. மா

said...

அழகான படங்கலுடன் அருமையான பதிவுமா!

இது ஒவ்வொன்னும் நாலு டாலர். எடுத்து வச்சு அடுத்த விசேஷத்துக்குப் பயன்படுத்தலாம். கெட்டுப்போற சமாச்சாரமா என்ன?' நானும் என் பங்குக்கு ஒரு சொற்பொழிவு ஆற்றினேன்
இது தான் ரெம்ப பிடித்த விடயமே! யார் செய்தாலும் அது தப்புன்னு சட்டுன்னு சுட்டிக்காட்டும் உங்களுக்கு நான் பெரிய ஒ போட்டுட்டேன்.

ஆப்பிள் மரத்தில் பழம் பறிக்க போய் சுவாராஷ்யமாய் இருபது கிலோ பறித்தது போல் நான் சுவிஸ் வந்த புதிதில் ஸ்ரோபரி தோட்டம் போய் பறித்து கூடையில் போடுவதுக்கு பதில் என் வாய்க்குள் போட்ட பழம் பத்துகிலோ தேறும். கூடையில் போட்டு நிறுத்தால் தான் காசு. வாய்க்குள் போனால் ஓசி தான்னு கூட அப்ப தெரியாது. ஏதோ முதல் முதலாய் தோட்டம் கண்ட வேகம். 16 வயதுக்கேயுரிய துடிப்பு எல்லாம் சேர்த்து சடசடவென பறித்து வாய்க்குள் போட்டுகிட்டிருந்ததை பார்த்து என்னை கூட்டிகிட்டு போன சுவிஸ் கார பிரெண்டு சிரிச்சிட்டிருந்தா. அது ஏன் என எனக்கு இப்பத்தான் புரியிது. ஹாஹா.

அப்புறம் நானும் வலைப்பூ தொடங்கிட்டேன்ல.
முடியும் போது வந்து காப்பி டீ குடிச்சிட்டு போங்கமா!

said...

ன் //என்ன ஆச்சு உன் பழைய உடை'ன்னு அவர் கேட்க, அது கிழிஞ்சு போச்சு. அதைப் போர்வையா பயன்படுத்தினேன். இன்னும் கிழிஞ்சு பழசானதும் அதை தலையணை உறை ஆக்கினேன். அதுவும் கிழிஞ்சபின் அதை தரை துடைக்கும் துணியாக்கினேன். அது கந்தலானபிறகு கிழிசல்களை எடுத்துத் திரிச்சு விளக்குத்திரி ஆக்கினேன்னு சொல்வார். முழுக்கதையும் இப்போ நினைவில் இல்லை. ஏறக்கொறைய இப்படித்தான் போகும். ஒரு பொருளைக் கடைசி வரைப் பயன்படுத்திய சிக்கனம் பற்றிய கதை. //இது சிக்கனம் பற்றிய கதை என்று சொல்லிவிட இயலுமோ ?

கொஞ்ச நாட்களுக்கு முன், ஊமைக்கனவுகள் என்னும் புனைப்பெயரில் எழுதும் வலை நண்பர் சமண மத அடிப்படை நிலைப்பாடுகள் குறித்து எழுதியவற்றில்,

அந்த மதத்தின் ஒரு கோட்பாடாக, அல்லது விளக்கமாக,

எந்த ஒரு பொருளும் முழுமையாக அழிவது என்பது இல்லை.
அதன் உரு மாறுகிறது.அதன் உணரப்படும் நிலை மாறுகிறது. என்று.

நீங்கள் சொல்லியிருக்கும் , புதுத் துணி, ஒரு நாள் கந்தல் ஆன உடன், தலை உரை ஆவதும், அதுவும் அற்றுப்போய் திரி ஆவதும் ஆகும் போல்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், எதைப் பார்க்கிறோமோ அது முற்றிலும் மாறுவதே இல்லை.

அந்தந்த கால கட்டத்தில் அது தனக்கென கொடுக்கப்படும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு செயல்படுகிறது.

நான் குழந்தையாகத் தான் பிறந்தேன். சிறுவனானேன் திருமனக்குப் பிறகு தந்தையானேன். இப்போது தாத்தா ஆனேன். என் உருக்கொண்ட என் பேரனைப் பார்த்து வியக்கிறேன். இதில் அடங்கிய அத்வைத தத்துவமும் நீங்கள் சொல்வதை உள்ளடக்கியதே.

சுப்பு தாத்தா.

said...

கஷாயம் கொடுக்குற நாள்னு படிச்சதும்.. சளி இருமலுக்குக் கொடுக்குற கஷாயமும் நோயெதிர்ப்புக் கொடுக்குற நிலவேம்புக்கஷாயமும் மொதல்ல நினைவுக்கு வந்தது. அப்புறம் பாத்தா காவித்துணி.

என்ன.. அது உடம்புக்கு நல்லது. இது மனசுக்கு நல்லது.

சாமியார் ஆக ஏழு ஏழு பதினாலு வருடப் படிப்பா? நம்மூர்தான் இதுலயும் பெஸ்ட். ”ஏறுக்குமாறாக இருப்பாளே ஆம் ஆகில் கூறாமல் சன்னியாசம் கொள்”னு எளிமையான வழி. இடுப்பில் ஒரு முழம் துணி. கையில் ஒரு திருவோடு. அந்தத் திருவோடும் சுமையா இருந்துச்சாம் பட்டினத்தாருக்கு. திருவோடும் பக்கத்துல நாயுமா இருந்த பத்ரகிரியாரைப் பார்த்து சம்சாரின்னு சொன்னாராம். ஒடனே தெளிஞ்சிருச்சு பத்ரகிரியாருக்கு. நமக்குதான் எதுவுமே தெளிய மாட்டேங்குது.

அதெல்லாம் சரி டீச்சர். நீங்க அப்போ காய்கறி வாங்குன மார்ஷ்லாண்ட் இப்பவும் இருக்கா?

said...

புத்தர் மடம் அழகு ....உங்க சுவையான வர்ணனை மிகவும் அருமை ...

said...

அழகிய இடமாக இருக்கிறது... படங்கள் அனைத்தும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர்.

said...

வாங்க நண்பர்களே!

நேர நெருக்கடி காரணம் தாமதமா பதில் சொல்லும்படி ஆச்சு :-(


மன்னிச்சூ.....


படங்களையும் மடங்களையும் ரசித்து எழுதிய உங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றீஸ்.