Tuesday, July 20, 2010

ஜூனியரும் ஒரு நான்முகனும்

வாட் ஈஸ் யுவர் நேம் னு கேட்டதுக்கு டேனி ன்னு சொல்லிட்டுக் கூடவே எனக்குத் தமிழ் தெரியுமுன்னு சின்னது ஒரு போடு போட்டுச்சு!!!! 'சட்'னு குனிஞ்சு கீழே விழுந்த மூக்கை எடுத்து ஒட்டவச்சுக்கிட்டேன். பதிவர் சாந்தியின் ஜூனியர் இவர். வரவேற்பில் வந்துருக்காங்கன்ற தகவல் கிடைச்சதும் கீழே போய் அவுங்களை அறைக்குக் கூட்டிவரும்போது சின்னப்பேச்சுக்கான என் கேள்விக்கான பதில்.

ஜூனியர் புன்னகைதேசம்

குழந்தைகள் பள்ளிக்கூடம் போய் நட்புகளைப் பிடிக்கும்வரை தாய்தகப்பனோடு தாய்மொழியில்தான் நல்லாப் பேசுவாங்க. அதுக்குப்பிறகுதான் அது மெள்ள மெள்ளக் காணாமப்போயிருது. ஆனாலும் மனசின் ஒரு மூலையில் இருந்துக்கிட்டுத்தான் இருக்கும். பேசத்தெரியாவிட்டாலும் நாம் பேசுவது அத்தனையும் நல்லாவே புரியும்.வெளிநாட்டுக் குழந்தைகளாச்சேன்னு எல்லோரும் செய்யும் தவறைத்தான் நானும் செஞ்சுருந்தேன். என் மகளை இந்தியாவுக்குக் கூட்டிவந்துக்கிட்டு இருந்த சமயத்தில் 'ஊர்லே எல்லார்கிட்டேயும் தமிழில் பேசணுமுன்னு பயிற்சி கொடுத்து வச்சுருப்பேன். இங்கே வந்தால் எல்லோரும் அவளிடம் மட்டும் இங்கிலிபீஸுலே பேசுவாங்க. ஏன் தமிழில் பேசலைன்னு அவளுக்கும் ஒரே குழப்பமா இருக்கும்:(


'பதிவர்குல' வழக்கப்படி, வேற்று முகமில்லாமல் நீண்டநாள் நண்பர்களைச் சந்திச்சது போல இருந்துச்சு. திருநெல்வேலிக்காரவுஹ. ஊர்க்கதையெல்லாம் பேசினோம். பாளையங்கோட்டையில் ஒரு வருசம் படிச்ச உரிமையில் கோபாலுக்கு பயங்கர சந்தோஷம்! மறுநாள் என்ன ப்ரோக்ராம் எங்களுக்குன்னதுக்கு, கோபால் ஆஃபீஸ் போவார். நான் நேத்து விமானநிலையத்தில் புக் பண்ணிவச்ச ஒரு அரைநாள் டூரில் கோவில் சுத்தப் போறேன்னேன்.

தெரியாத ஊரில் 'அம்போ'ன்னு விட்டுட்டுப் போறோமேன்னு கோபாலுக்கு மன உளைச்சல். (தெரியாத ஊர்தான் எனக்கு வெல்லம்னு இவருக்குத் தெரியாமப்போச்சு பாருங்க) நேத்து விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்து கொஞ்சம் கரன்சியை மாத்திக்கிட்டு, கூட வந்தவரையும் கைடு பண்ணி அவர் தங்க வேண்டிய ஹொட்டேலுக்கு அவரை அனுப்பும் களேபரத்திலும் இதே நினைவு போல இருக்கு. பாவம். அங்கே இருந்த ஒரு ட்ராவல் கவுண்ட்டரில் ஊர் சுத்திப்பார்க்க விவரம் எடுக்கும்போது, அந்தப் பெண்மணி அரை நாள் டூர் ஒன்னு வெறும் 16 டாலர்கள்தான்னதும் உடனே பதிவு செஞ்சுட்டார். போகட்டுமுன்னு நானும் பேசாம 1 இருந்துட்டேன். மனசு 'சாந்தி'யா வேலைக்குப் போகட்டுமுன்னு:-)

'புன்னகை தேசம்' உரிமையாளர் சாந்திக்கு
விவரம் சொல்லிட்டு, அவுங்க ஆலோசனைப்படி ஒரு நாள் அவுங்களோடு ஊர் சுத்தலாமுன்னு முடிவாச்சு. எல்லோருமாச் சேர்ந்து சாப்பிடப்போகலாமுன்னா..... அவுங்க சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுத்தான் வந்தாங்களாம்:(

கீழே போய் அவுங்களை அனுப்பிட்டு நமக்குத் தின்ன ஏதாவது கிடைக்குமான்னு பார்க்க முன்னால் இருந்த சாலையைக் கடந்து போனால் தெரு முக்கிலே ..... பளிச் என்ற வெளிச்சத்தில் தகதகன்னு ஜொலிக்கும் எரவான்/எராவன் கோவில். நான்முகன் ப்ரம்மனுக்கானது.

ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு பாங்காக் சித்திரத்தொடர் போட்டுருந்தேன். அதுலேயும் இந்தக் கோவில் இருக்கு பாருங்க.

பக்தர்கள் கூட்டம் வந்துக்கிட்டே இருக்கு. பக்கத்துலே கோவில் வளாகத்துக்குள்ளேயே பூஜை சாமான்கள் விற்கும் கடை ஒன்னு. சாமந்திப்பூக்கள் ( சென்னையில் இதை துலுக்கச் சாமந்தின்னு சொல்றாங்க. ஒரு வேளை இதன் பூர்வீகம் துருக்கியாக இருக்கலாம். துருக்கச் சாமந்தி ......மருவி துலுக்க சாமந்தி ஆகி இருக்கு) ஊதுவத்திகள், வட இந்திய மிட்டாய்க்கடைகளில் இனிப்புகளின் மேலே வெள்ளி ரேக் இருக்கும் பாருங்க அதைப்போல தங்க ரேக் கொஞ்சூண்டு இன்னபிற பொருட்கள் (கற்பூரம் கிடையாது) வச்சு தட்டைக் கையிலேந்தி வந்து பிரம்மாவின் முன் நின்னு கண்மூடி வணங்கி, பலர் முழங்காலிட்டு ப்ரார்த்தனை செஞ்சு அந்தப் பூக்களை பிரம்மனைச்சுத்தி நாலு பக்கமும் வச்சுருக்கும் இடுப்புயரக் கம்பி வேலியிலும், ப்ரம்மனுக்கு முன்னால் இருக்கும் மேடை போன்ற அமைப்பிலும் பூச்சரங்கள், மாலைகள் எல்லாம் வைக்கிறாங்க. தங்க ரேக்கைப்பிரிச்சு வேலியில் இருக்கும் சின்னச் சிலைகளில் ஒட்டிவைக்கிறாங்க. முந்தியெல்லாம் நேரடியா ப்ரம்மன் மேலேயே ஒட்டுவாங்களாம். ஏற்கெனவே தங்கமா இருக்கும் அவர்மேல் திப்பி திப்பியா ஆகுதுன்னு இப்ப வேலி போட்டு வச்சுருக்காங்க. அதுக்காக? வாங்குன ரேக்க்கை வீசி எறிய முடியுதா? கிடைச்ச இடத்துலே ஒட்டித்தானே ஆகணும்? கம்பி வேலியைச்சுத்தி நாலு பக்கமும் குத்துவிளக்கு மாடலில் ஸ்டேண்ட் போட்டு கண்ணாடிக் கூட்டுக்குள்ளே எரியும் விளக்கில் ஊதுபத்திகளைக் கொளுத்திக்கிட்டு அங்கங்கே ஊதுவத்தி ஸ்டேண்டுகளா இருக்கும் அலங்காரச் ச(தொ)ட்டிகளில் 2 நட்டுவச்சுட்டுப் போறாங்க. தொடர்ந்து எரியும் ஊதுவத்திகளால் அங்கே லேசா ஒரு புகை மூட்டம் இருந்துக்கிட்டே இருக்கு. ஒரு பக்கம் மரக்கலர், தங்கக்கலர், வெள்ளைக்கலர்ன்னு பலநிறங்களில் துதிக்கையைத் தூக்கி வா வான்னு கூப்பிடும் யானைக் கூட்டம் வரிசை கட்டி நிக்குது.




இன்னொரு பக்கம் தாய் நடனப் பாரம்பரிய உடைகளும் அணிகளும் அணிஞ்ச எட்டு பெண்கள் வரிசைக்கு நாலா ரெண்டு வரிசையா நின்னு நடனம் ஆடறாங்க,. பக்கத்தில் ட்ஸைலஃபோன் மாதிரி இருக்கும் படகுபோன்ற அமைப்பில் இருக்கும் இசைக்கருவி 2 12914 மத்தளம், ஜால்ரான்னு நாலுபேர் வாசிக்க அதுக்கேற்ற ஆட்டம் . ஆடும் நடனமணிகளுக்கு முன் தடுக்குப்பாய் போல ஒரு சின்னத் துண்டு தரைவிரிப்பில் ஒருத்தரோ, இல்லை ரெண்டு பேரோ முழங்காலிட்டு உக்காந்து கைகூப்பி ப்ரம்மனைக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு மூணு நிமிசத்துலே நாட்டியம் இசை எல்லாம் நின்னதும் எழுந்து போறாங்க. புது ஆட்கள் வந்து உக்காந்ததும் நாட்டியம் தொடங்குது. சில சமயம் நாட்டியப் பெண்மணிகள் ஒரு பக்கமாக் காலை மடிச்சுப் போட்டு உக்காந்துக்கறாங்க. என்னதான் நடக்குதுன்னு புரியாமக் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தேன். இந்தப் பக்கம் கவுண்ட்டர் மாதிரி இருக்குமிடத்தில் எழுதிவச்ச விவரம் எல்லாம் சொல்லுது. குறைஞ்சபட்சம் ரெண்டு நடனம். 260 தாய்லாந்து பத் காசு அடைக்கணும். அந்த விரிப்பின் மீது போய் மண்டியிட்டு உக்காந்தோமுன்னா அவுங்க இசைக்கேற்ப ஆடுவாங்க. நாம் சாமியை வணங்கலாம். காசு கட்டக்கட்ட ஆடணும்! இது ஒரு வகையான வழிபாடு.




ஆஹா..... கடவுளுக்கு பதினாறு உபசாரங்கள் (ஷோடச உபசாரங்கள்) செய்வது பூஜை முறைகளில் சொல்லப்பட்டிருக்கு. மலர், தண்ணீர், வஸ்த்திரங்கள், தூபம், தீபம், நைவேத்தியம் னு இருக்கும் பதினாறில் இசையும் நடனமும் கூடச் சேர்த்தி.

தலை அலங்காரமா கும்மாச்சிக்ரீடம் ரொம்ப அழகா இருக்குல்லே? ஒரு கடையில் விற்பனைக்கு இருக்கு. ஆசைதான். வாங்கினால் வீட்டுலே ஆடிக்கிட்டே இருக்கணுமோ? அப்புறம் பதிவெழுத நேரம்? அதான் வாங்கலை.

உடைக்கட்டுப்பாடு, காலணியைக் கழற்றி வச்சுட்டு வா இப்படி எந்த ஒருவிதமான கண்டிஷன்களும் இல்லாம நாம் நாமாய்ப்போய் சாமியைக் கும்பிட்டுக்கலாம். கடவுள் நம்ம மனசை மட்டும் பார்க்கிறார் என்றதுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. வெளிவேஷம் அவருக்கு எதுக்கு? நாமெல்லாம் போறபோக்குலே கோவில் வாசலில் நின்னு முகவாயைக் கையால் தொட்டுட்டுப்போற மாதிரி இல்லாமல் நின்னு கைகூப்பி வணங்கிப் போறாங்க. எல்லா இடத்திலேயும் 'ஸவாட்திகா'ன்னு சொல்லி கைகூப்பி நம்மை (வரவேற்கும் விதமா ஹலோ சொல்வதுபோல) வணங்கும்போது இந்தப் பழக்கம் இல்லாத நமக்குச் சட்னு என்ன செய்யறதுன்னு புரியறதில்லை. அசட்டுத்தனமா 3 ஒரு பார்வை பார்த்துட்டு நமஸ்தே சொல்வேன்:-) (நம்ம ஸ்வாகதம் என்பதுதான் மருவி ஸவாட்தி ஆச்சோ என்னவோ?)


இந்தக் கோவில் இங்கே எப்படி, ஏன் வந்துச்சு? எல்லாம் வாஸ்து தான். 1955 வது வருசம் இங்கே சுற்றுலாத்துறை கட்டுனதுதான் எரவான் ஹொட்டேல். அஸ்திவாரம் போட்ட சமயம் ஆகிவந்ததில்லைன்னு ஒரு ஜோஸியர் சொன்னார். சொன்னது பாலத்து ஜோஸியரா இருந்துருந்தா....... யாரும் சட்டை செஞ்சுருப்பாங்களா? ஜோசியத்துலே ரொம்ப நிபுணரான ரியர் அட்மிரல் Luang Suwichanphaet சொல்லிட்டார், அடிக்கல் நட்ட நேரம் சரி இல்லை. வாஸ்து பிரகாரம் இந்த வளாகத்துலே பிரம்மனுக்குக் கோவில் கட்டணும் (படைச்சவனாச்சே!)

ஆஹா.... செஞ்சுருவோமுன்னு, நுண்கலைப் பிரிவில் இருந்த சிற்பக்கலை நிபுணரைக் கொண்டு ப்ளாஸ்டர் சிலை ஒன்னு செஞ்சு அதைத் தங்க ரேக்குகளால் மூடிப் பொன்னாக்கினாங்க. ஜோஸியர் சொன்ன மறுவருசமே நவம்பர் 9. 1956 வது வருசம் இங்கே சிலையைக் கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செஞ்சாங்க. இப்போ பிரம்மனுக்கு வயசு 54. வருசாவருசம் நவம்பர் 9க்கு பிறந்தநாள் விழான்னு பூஜைபுனஸ்காரங்கள் அமர்க்களமா இருக்குமாம். கோவில் வாசலில் ஒரு தகவல் பலகை இருக்கு.



நம்ம பக்கம்தான் பிரம்மன் பொய் சொல்லிட்டான்னு கோவிலே இல்லாமப் பண்ணிட்டாங்க. கூடத் துணை போன தாழம்பூவுக்கும் கோவிலில் அனுமதி இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் என்ற ஊரில் மட்டும் பிரம்மனுக்குத் தனிக்கோவில் இருக்காமே. போயிட்டு வந்து சொல்றேன்:-)

கோவில் வாசலில் லாட்டரிச்சீட்டு, டின்னில் அடைச்ச குளிர்பானங்கள் இளநீர், சின்னச்சின்னக் கூண்டுகளில் பறவைகள் எல்லாம் விக்கறாங்க. எல்லாமே வழிபாட்டுக்கானவைகள்தான். இளநீரைத் திறந்த்கு ஒரு ஸ்ட்ரா போட்டு அப்படியே சாமிக்கு முன்னால் வச்சுட்டுப்போறாங்க. கூண்டுப் பறவைகளை வாங்கி சாமிக்கு முன்னே காமிச்சுட்டு அப்படியே திறந்துவிட்டு விடுதலை கொடுப்பதும் ஒரு வழிபாடாம். (லாட்டரிச்சீட்டு விவரம்தான் என்னன்னு தெரியலை)
ஒரு நாலு வருசத்துக்கு முன்னே நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு ஆள் சுத்தியலும் கையுமா வந்து இந்த சாமிச்சிலையை அடிச்சு உடைச்சுருக்கார். அக்கம்பக்கம் இருந்த ஜனங்கெல்லாம் கோபம் வந்து அந்த ஆளை அடிச்சு நொறுக்கிக் கொன்னே போட்டுட்டாங்களாம். அப்புறம் ராவோட ராவா வேறொரு சிலை செஞ்சு அன்னிக்குப் பகல் 12 மணி ஆறதுக்குள்ளே கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செஞ்சாங்களாம் கோவில் அதிகாரிகள். இதே மாதிரி சிலை ஒன்னு செஞ்சு இப்போ அருங்காட்சியகத்துலே வச்சுருக்காங்களாம். (ரிஸர்வா இருக்கட்டுமுன்னா? ) வேறொரு நாளில் ஒரு இளநி வாங்கிக் குடிச்சுக்கிட்டே சேகரிச்ச கதைகள் இதெல்லாம்

கம்பி வேலி கூட இதுக்கப்புறம் போட்டதா இருக்குமோ? ராத்திரி 11 மணிக்கு கோவில் கம்பிகேட்டைச் சாத்திடறாங்க. ஆனாலும் போறவாற ஜனம் நின்னு கும்பிட்டுக்கிட்டுத்தான் போகுது. .

உணவுக்கடைகள் இருக்கும் ஆர்கேட் மூடி இருக்கேன்னு இந்தப் பக்கம் வந்தால் ஒரு இந்தியன் ரெஸ்ட்டாரண்ட் கிடைச்சது. Bபாவர்ச்சி. அங்கே போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வந்தோம். (உலகமெங்கிலும் ஒரே மெனு. போதுமடா சாமி)

தொடரும்..................

20 comments:

said...

//இளநீரைத் திறந்த்கு ஒரு ஸ்ட்ரா போட்டு அப்படியே சாமிக்கு முன்னால் வச்சுட்டுப்போறாங்க. கூண்டுப் பறவைகளை வாங்கி சாமிக்கு முன்னே காமிச்சுட்டு அப்படியே திறந்துவிட்டு விடுதலை கொடுப்பதும் ஒரு வழிபாடாம். (லாட்டரிச்சீட்டு விவரம்தான் என்னன்னு தெரியலை)//

அதையெல்லாம் செஞ்சிட்டு லாட்ரி சீட்டு வாங்கினால் அதிருஷ்டம் அடிக்கும்னு நம்பிக்கையாக இருக்கும்னு நினைக்கிறேன்

said...

//கோவில் வாசலில் லாட்டரிச்சீட்டு, டின்னில் அடைச்ச குளிர்பானங்கள் இளநீர், சின்னச்சின்னக் கூண்டுகளில் பறவைகள் எல்லாம் விக்கறாங்க. எல்லாமே வழிபாட்டுக்கானவைகள்தான்//

என்னது சாமிக்கே லாட்டரிச்சீட்டா ? ஆன்லைன் லாட்டரி எல்லாம் வந்துருச்சே அதெல்லாம் எப்படி வைப்பாங்க ?

said...

ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் என்ற ஊரில் மட்டும் பிரம்மனுக்குத் தனிக்கோவில் இருக்காமே. போயிட்டு வந்து சொல்றேன்:-)//

அடுத்த லிஸ்ட்ல இருக்கா ? :)

said...

யப்பா..நானும் வந்தாச்சி..;))

said...

மிக சிறப்பாக எழுதியிருக்கீங்க அம்மா..

நீங்கள் வாங்கி வந்த சண்டிகார் இனிப்பு வகைகள் மிக அருமை...

உங்கள் பேச்சு போலவே...

டேனியிடம் காண்பித்தேன் இந்த பதிவை... வாசித்து காண்பிக்க சொன்னார்..( கொஞ்சம் உடான்ஸா நீங்க புகழ்ந்ததா சொன்னதும் முகத்தில் சிரிப்பும் பெருமையும்..)


உங்களிருவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

பல்லாண்டுகள் நலமோடு வாழணும்..

Anonymous said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.
ஒரே மெனுதான். பட்டர் சிக்கன், தால் மக்கானின்னு :)

said...

துளசி, பாங்காக்கே தங்க மயமா இருக்கும் போல இருக்கே. வெகு அழகு. கூண்டுப்பறைவகள் விடுதலை சிறப்பு.
அங்க சாப்பாடும் சாலடும் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்களே.
திறந்த இளநீரை வச்சிட்டுப் போனா அப்புறம் சாப்பிட யாராவது வருவாங்களா.
ஜூனியர் புன்னகைதேசம் நல்லா வளர்ந்துட்டான்:)

said...

பிரம்மன் கோவில்.
யானை உருவங்கள், நடனம் கண்டு மகிழ்ந்தோம்.

said...

வித்தியாசாமான வழிபாட்டு முறை...அடடா இந்த மாதிரி இங்க இல்லாம இருக்கே.

அப்படியே டீச்சர் உலக வரைபடத்தில எந்த ஊரு இனியும் பாக்காம இருக்கீங்க?

said...

நடனப்பெண்களின் உடையும்,நீங்கள் சொல்லும் கும்மாச்சியும் அழகாக உள்ளது டீச்சர்.அந்த யானைகளும் ஏதாவது வேண்டுதலுக்காக அங்கே வைக்கப்பட்டுள்ளதோ டீச்சர்.

said...

வாங்க கோவியாரே.

பேசாம சாமியாரிணியா ஒரு காவி ட்ரெஸ் போட்டுக்கிட்டு அங்கே உக்கார்ந்துக்கலாமான்னு இருந்துச்சு.

இதமா இளநீர் குடிச்சுக்கலாம். அதான் படைக்குறாங்களே!!!!!

சாமிக்கு லாட்டரியில் பங்கு(ம்) இருக்கலாம்.

said...

வாங்க கார்த்திக்.

ஒரு லேப் டாப் வாங்கி சாமிக்குப் படைச்சுட்டா பிரச்சினை தீர்ந்தது:-)))))

said...

வாங்க கயலு.

லிஸ்ட் ஒரு அக்ஷயபாத்திரம் மாதிரில் அள்ள அள்ளக் குறையாது:-)))))

said...

வாங்க கோபி.

இனிமே நோ கடைசி பெஞ்சு.:-))))

said...

வாங்க புன்னகைதேசம்.

டேனிக்கு இது ஒரு இண்ட்ரோதான். அப்புறம் வருவார்:_)))))

உங்க உபசரிப்புக்கு நாந்தான் நன்றி சொல்லணும். சொல்லிக்கறேன்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

உண்மையாவே இப்பெல்லாம் இண்டியன் ரெஸ்டாரண்ட் போரடிச்சுப்போச்சுப்பா. பேசாம அந்த டால் பாத் நம்ம வீட்டுலே செஞ்சுக்கலாம்.

said...

வாங்க வல்லி.

இளநீரை ஒருவேளை ஆடும் அம்மிணிகளுக்குக் கொடுக்கறாங்களோ என்னவோ!!!!!

காஃபி வொர்ல்ட் என்ற கடையில் காஃபி நல்லா இருக்கு.

நம்மூர்லே ஏர்ப்போர்ட்க்குன்னு பத்து மடங்கு விலை இருக்குல்லே அப்படி இல்லாம இது வெளியில் 70 ஏர்ப்போர்ட்லே 80 . பரவாயில்லைதானே?

said...

வாங்க மாதேவி.

அழகு மட்டுமில்லை. நான் பார்த்தவரை சுத்தமாவும் இருக்குப்பா.

said...

வாங்க சிந்து.

நீங்க வேற!!! ஏராளமான இடங்கள் பாக்கி இருக்கு இங்கே உள்நாட்டிலேயே:(

said...

வாங்க சுமதி.

பூஜைப்பொருட்கள் கடையில் ஏராளமா யானைகள் இருக்கு. நீங்க சொல்வதுபோல் வழிபாடாக இருக்குமோ என்னவோ!!!!!