மெய்யாலுந்தாஞ் சொல்றேன்....மேட்டர் அதுவாக் கிடைச்சது. சென்னை வந்ததில் இருந்து ஏதோ காணாததைக் கண்டமாதிரிக் கோவில் கோவிலாப் போறதும் கலைநிகழ்ச்சிகளைப் பாக்கறதும், இடையில் கிடைக்கும் கொஞ்சூண்டு நேரத்தில் ஒன்னும்பாதியுமா ஆக்கிப்போட்டுட்டுப் பதிவு எழுதித் தமிழ்ச்சேவைப் பிழியறதுமாப் போய்க்கிட்டு இருக்கு.
இன்னிக்கு அண்ணன் வீட்டுக்குப் போகலாமுன்னுப் பேசிக்கிட்டு இருந்தோம். எல்லாரும் பகல்தூக்கத்துலே இருப்பாங்களாம்..... நாலுமணிபோலத் தொலைபேசிட்டுக் கிளம்பலாமுன்னு....
எல்லாருக்கும் பாத்ரூமில்தான் புது ஐடியாக்கள் வருமாம். நம்மூட்டு ஆர்க்கிமிடீஸ்....... குளிச்சுட்டுவந்த கையோடு கணேசன் மாமாவைப் பார்த்துட்டு வரலாமுன்னு சொன்னாரா..... ஆஹா...... அதே ஏரியாவில் இருக்கும் பிரபலங்களையும் ஒரு பார்வை பார்த்துட்டு வந்துறலாமே.....
பதிவுலகப் பிரபலத்துக்கு ஒரு 'கால்'. சமீபத்தில் நாலுவருசத்துக்கு முன்னால் போனது.. வழிவேற நினைவில் இல்லை. ரங்கா தியேட்டர் வந்தபிறகு சொல்லுங்கன்னார். சொன்னோம், போனோம் பார்த்தோம், பேசினோம், வந்தோம்.
எம்பத்திநாலு வயசான கணேசன் மாமாவைப் பார்த்தாச்சு. மாமி இன்னும் ஆக்டிவாதான் இருக்காங்க. சினிமாப் பார்க்கறது இப்போ அறவே இல்லையாம். ஒன்லி டிவி சீரியல்ஸ். மாலை ஆறுமுதல் ஸ்டார்ட்:-) அச்சச்சோ இன்னும் அஞ்சு நிமிசம்தான் இருக்கு. எஸ் ஆனோம்!
பார்க்கவேண்டிய முக்கிய புள்ளியைப் பார்க்கக் காரை விரட்டுனோம்.
ஆஞ்சநேயர் கோவில் எங்கேன்னு வழியில் வழி கேட்டதுக்கு, ஆட்டோக்காரர் சொன்னார் ரெண்டாவது லெஃப்ட் நாலாவது ரைட்டு. ஓக்கே...டன். எதிரில் ஒரு தெருமுனையில் 'லக்ஷ்மிநரசிம்ஹர் கோவிலுக்குப் போகும் வழி'ன்னு அறிவிப்பு. அடடே..... போனால் ஆச்சு. ச்சலோ.....
தெருமுடியும் இடத்தில் தேவிகருமாரியம்மன் கோவில் நியான் விளக்கில் பெயர் மினுக்கல். இடதுபக்கம் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் கோவில். வீடுபோல இருக்கே அசப்பில்! நாலைஞ்சு படி ஏறியதும் பெஞ்சுலே ஒரு சின்ன அண்டாவச்சுக்கிட்டுக் கோவில் பிரசாதம் விநியோகிக்க ஒருத்தர் தயாரா இருக்கார். கீழே ஒரு பெரிய ஹால். அங்கே ஒன்னுமில்லையேன்னு முழிச்சேன். 'அங்கே'ன்னு பார்வையை அவருக்கு எதிரே இருந்த மாடிப்படிக்கட்டை நோக்கிக் காமிச்சார். மாடியேறினோம்.
ஹைய்யோ.... என்னன்னு சொல்வேன்!
முதலில் ஸ்ரீசுதர்சனர் சந்நிதி. வலம்வரும்போது பின்பக்கச் சன்னலில் அவர் பின்பக்கம் நரசிம்மர்.(சிங்கை நினைவு வந்துச்சு) அடுத்துக் கொஞ்சம் பெருசா இன்னொரு சந்நிதி. கிட்டே போனதும்...............
பிரமாண்டமான நரசிம்ஹமும் மடியில் லக்ஷ்மியும். கருகரு, பளபளன்னு அலங்காரமான அழகுச்சிலை. தங்கக் காதுகள். இடது தொடையில் பட்டுப் பொடவைகட்டிய லக்ஷ்மி. படுக்கறதுக்குத்தான் ஃபோம் பெட் மாதிரி ஆதிசேஷன்ன்னு பார்த்தால் இங்கே உக்காந்துக்கர சோஃபாவும் அதே அஞ்சுதலை ஆதி சேஷன். நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காதக் காட்சி. எங்கூர் போலவே கூட்டம்.....அதான் நாலே பேர்!
மூணாவதா இன்னொரு சந்நிதி. தன்வந்த்ரி. வலம்வந்து மூலவர் முன் இன்னொருக்கா நின்னோம். சொல்லமுடியாத அழகு. நெவர் எக்ஸ்பெக்டட்......
அவருக்கு நேர் எதிரே பெரிய ஜன்னல். என்னத்தைப் பார்த்துண்டு இருக்கார்? நானும் பார்வையைச் செலுத்தினேன். அழகான கோபுரம்!
ஓ...இது அடுத்ததா இருக்கும் மாரி! அங்கேயும் போகணும்.
இங்கே தரைமுழுசும் பளிச்ன்னு சுத்தம். மாடிஹால் முழுசும் மூணுசந்நிதிகளொடு அம்சமா இருக்கு. பட்டர்களும் நிதானமா ஆரத்தி காமிச்சுத் தீர்த்தம் சடாரி எல்லாம் பவ்யமாக் கொடுத்தார்கள். ஒரு பத்துவயசு பட்டரும் இருக்கார். படி இறங்கிவந்தால் பிரஸாதம் கிடைச்சது. புளியோதரையும் பானகமும். கீழ்த்தளத்தில் ஹாலில் பச்சைமாமலைபோல் மேனி உள்ளவனுக்குப் பச்சை நோட்டால் மாலை சாத்திக் கண்ணாடிப்பெட்டியில் நிக்கவச்சுருக்காங்க. பெருமாளும் தாயாருமாக் கல்வச்ச அலங்காரத்தில் இன்னொரு ஃப்ரேமுக்குள். தங்கமாளிகையில் சிலவருசங்களுக்கு முன்னால் இப்படி ஒன்னு பார்த்தேன். அப்போ வாங்கிக்க முடியலை. இப்போ? இப்பவும்தான் வாங்கிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். விலைவாசியெல்லாம் தாறுமாறாய் எகிறிக்கிடக்கே......
பெரிய சைஸ். கொண்டுபோறது கஷ்டம் = ச்சீச்சீ....இந்தப் பழம் புளிக்கும்.
பக்கத்துலே பத்தடியில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில். உள்ளே நுழைஞ்சால் அங்கேயும் பெருமாள்! தீர்த்தம் சடாரி ஆச்சு. பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். அச்சு அசலா திருப்பதி அலங்காரம். பச்சைக் கல்பதக்கம் மின்ன ஜொலிக்கிறான். நின்ன திருக்கோலம். உற்சவர்களும் கொள்ளை அழகு. அடுத்து இருந்த சந்நிதியில் புள்ளையார். வலம்வரும்போது கால்விரலில் இடிச்சுக்கிட்டேன். கண்ணு தெரியாத கஷ்டம். கருங்கல் சரியாப் பாவாமல் தூக்கியிருக்குமுன்னு கண்டேனா?
(கவனமெல்லாம் எங்கே? பதிவுலே என்ன எழுதலாமுன்னா? புள்ளையார் கோச்சுண்டாரோ? )
அடுத்துள்ள பெரிய சந்நிதியில் கருமாரியம்மன். பெரிய சிலைக்கு முன்னால் வெள்ளி முகமூடியுடன் 'தல' மட்டுமுள்ள தேவி. ஆஹா.... கோபாலுக்கு, வெறும் தலைக்குண்டான கதையைச் சொல்லச் சொல்லும் வாய்ப்புக் கிடைச்சது. எத்தனைமுறை கேட்டாலும் மறந்துருவார். 'திருதிரு'ன்னு முழிக்கும்போது 'திரு'ப்பித் 'திரு'ப்பிச் சொல்லிக்கிட்டே இருக்கணும். டீச்சர் வேலைக்கான முக்கியத்தகுதி பொறுமை.
இந்தக் கோவிலில் துளசி மாடம் காலி. அதன் முன் ஒரு தொட்டியில் நான். எதிரே ஒரு பெரிய செந்தாமரை. அதில் நவகிரகங்கள். ரொம்ப நல்லா இருக்கு. கருமாரிக்கு முன் பெரிய கோபுர வாசலும் கொடிமரமும். இங்கேயும் ஒரு பக்கம் கண்ணாடிப் பொட்டிக்குள் பத்து ரூபாய் மாலையுடன் சாமி.
நாம் கொஞ்சம் முன்னாலே வந்துட்டோம். நாலாவது ரைட்டைக் கோட்டை விட்டுருக்கோமாம். நரசிம்ஹன் கூப்புட்டார். இந்தமுறை மிகச்சரியா லெஃப்ட்& ரைட் போட்டு ஹனுமனை அடைந்தோம். கூட்டமான கூட்டம். ஆனால் பிரச்சனையில்லை. ஆஜானுபாகுவா அவர் நிக்கும் உசரத்துக்கு எங்கே இருந்தாலும் அவர்பார்வையில் நாம் பட்டுருவோம். பட்டா(ச்)சு. கோதண்டராமர் சந்நிதி. கட்டம்போட்டப் புடவையில் தாயார்கள். அடுத்தபக்கம் வேணுகோபாலன். சந்நிதிக்கு முன்னால் கூட்டம். எட்டிப்பார்க்காமல் போகமுடியுதா? துலாபாரம் வச்சுருக்கு! எப்போலே இருந்து இதெல்லாம்?
குழந்தை உக்காரமாட்டேங்கறான். அம்மாக் கழுத்தைப் பிடிச்சுத் தொங்கறான். விளையாட்டுச் சாமானைக் கையில் கொடுத்தாலாவது சித்த உக்காருவானோன்னு தண்ணிபாட்டில் கொடுத்தால் தண்ணி காமிக்கிறான். கடைசியில் காலத்துக்கேத்தமாதிரி, செல்லைக் கொடுத்ததும் 'கப்சுப்.' எல்லாம்தான் இப்போ ரிமோட்டுடன் பிறக்குதுங்களே:-)
சின்ன மூட்டையில் அரிசியாம் அடுத்த பக்கம். புளியோதரைப் பிரசாதம் கிடைச்சது. வாசலில் பிரசாதம் தின்னு முடிச்சத் தொன்னைகள் நிறைந்து வழியும் ரெண்டு ஆளுயரக் குப்பைத் தொட்டி. கோவிலிலே உண்டியலைக் காணோம். கையில் வச்சுருந்த காசை என்ன செய்யறது? வீணாக்குவானேன்னு பூ வாங்கிக்கிட்டேன்.
இவ்வளவுதூரம் வந்ததுக்கு இன்னொரு கோவிலையும் பார்த்துட்டுப் போகலாமுன்னு சொன்னேன். இந்த ஊர்லேதான் தடுக்கி விழுந்தா ஒரு கோவிலுக்கு முன்னாலேதான் விழுவோம். காஞ்சிக்குப் போட்டியாக் கிளம்பி இருக்கோ? ஒரே ஒரு கோவில் ப்ளீஸ்ன்னு ராஜராஜேஸ்வரி. ஒரு காலத்துலே மின்சார ரயிலில் போகும்போது பார்த்துருக்கேன். தூரமாத் தெரியும். போகலாமுன்னு நினைச்சுக்கிட்டே வருசங்கள் முப்பத்திஏழோ எட்டோ ஓடிப்போச்சு.
(இதுதான் அந்த ஆன்மீகப்பூமியில் முதல்முதலா வந்த கோயிலுன்னு நினைவு. அப்புறம் ஆஞ்சநேயர் வந்து ......மக்களைத் தன்வசம் பண்ணிக்கிட்டார்)
வாயிலே இருக்கு வழின்னு 'வி'சாரிச்சுக்கிட்டுப் போய்ச் சேர்ந்தப்ப....உள்ளெ பூஜை நடப்பதற்கு அறிகுறியா மேளச் சத்தம் அல்லோகலப்படுது. கம்பி கேட் எல்லாம் மூடிவச்சுருக்கு. முன்மண்டபத்துலே ஒரு பத்துப்பதினைஞ்சுபேர் உக்கார்ந்துருந்தாங்க. கண்முன்னால் தரையில் நிக்கும் ஒரு அறிவிப்புப் பலகை.
கவனிக்கவும்
உள்ளே தரிசனத்துக்குச் செல்லுமுன் நோட்டீஸைப் படித்துவிட்டுச் செல்லவும்.
எங்கே நோட்டிஸ்? எந்த நோட்டீஸ்? சுத்துமுத்தும் பார்த்தேன், எங்கியாவது நோட்டீஸ் வச்சுருக்காங்களோன்னு. ஊஹூம்......
வாசலில் படிக்கட்டு அருகிலே ரெண்டுபக்கமும் சின்னதாக் குட்டியா ரெண்டு சந்நிதிகள். ஒன்னு பைரவர். இன்னொன்னு...? சரியாக் கவனிக்கலை..அங்கே ஒரு சின்ன ஜன்னல் வழியா அபிஷேகப் பொருட்கள் விற்பனை நடக்குது. நோட்டீஸ் எங்கேன்னு கேட்டால்..... முதலில் உள்ளேன்னார். அங்கே யாராவது விநியோகம் செய்வாங்களான்னதுக்கு தலையை ஆமாம் என்றதுபோலவும் இல்லை என்றதுபோலவும் ஆட்டுனார். நான் அறிவிப்புப் பலகையைக் காமிச்சு 'முதல்லே படிச்சுட்டுப் போன்னு சொல்லுதே. எதைப் படிக்கனும்'னு கேட்டுட்டுத் திரும்பினேன். இங்கே வாம்மா ன்னு கூப்பிட்டு அந்த கவுண்ட்டருக்கு மேலேயும், (நாங்க நின்னுக்கிட்டு இருந்த இடத்தில்) தூணுக்கு மேலேயும் இருக்கே அதான் நோட்டீஸ்ன்னார்.
பரிகார தலம். ஒவ்வொருத்தரும் தனித்தனியா அபிஷேகம் செய்யும் குங்குமம் வாங்கணும். ஒரு குங்குமப் பாக்கெட்டில் ஒருத்தருக்குத்தான் அர்ச்சனை. (ஒரே குடும்பமா இருந்தாலும் தனித்தனியா ஒவ்வொரு பேருக்கும் ஒன்னுன்னு வாங்கிக்கணுமாம். நோ கூட்டு (குடும்பம் )
இன்னொரு சின்ன போர்டில் இப்படி.!
அர்ச்சகர்களிடமும் பணியாளர்களிடமும் விவரம் ஒன்னும் கேக்கக்கூடாது.
போச்சுடா....
ஸ்வாமிப் பாதத்தில் புடவை, நகைகளை வச்சு ஆசீர்வதிச்சு வாங்கிக்கணுமுன்னா அடுத்தமாடியில் இருக்கும் ஸ்வாமிஜியைப் பார்க்கணுமாம். இதுக்கும் ஒரு நோட்டீஸ்:-)
இன்னொரு பெரிய போர்டில் சுவாமிஜி பூஜை செய்யும் நேரம் 8.30 முதல் 9.30. அபிஷேகப் பொருட்கள் கையில் இருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி. மற்றவர்கள் கொடிமரத்தின் அருகே நின்று தரிசிக்கவேண்டும்.
திடீர்னு மேளச்சத்தம் நின்னுச்சு. மண்டபத்தில் நாங்க இருந்த இடத்தில் எதிர்ப்பக்கம் ஒரு சந்நிதி சட்னு திறந்து அரைநிமிஷ நேரத்தில் சரேல்ன்னு மூடப்பட்டது. உள்ளே புள்ளையார். அதுக்கு அஞ்சாறுஅடி தூரத்தில் இன்னொரு சந்நிதி பட்னு திறந்து கால்நிமிஷ ஆரத்தி எடுத்தார்கள். அதுக்குமேலே கட்டி இருந்த மணியை டங்க் டங்க்ன்னு இழுத்து அடிச்சுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். துர்கான்னு எழுதி இருந்துச்சு .ஓ துர்கையான்னு கண்ணை அங்கே செலுத்துமுன் மேஜிக் ஷோவில் மனுஷனைப் பெட்டியில்போட்டு மறையவைக்க ஒரு கறுப்புத் திரை போடுவாங்க பாருங்க அதேபோல் சரசரன்னு ஒரு கறுப்புத்திரையை இழுத்து மூடிட்டாங்க. மணியை மட்டும் விடாம அடிச்சுக்கிட்டே இருக்காங்க. எனக்கோத் தலை இடி ஆரம்பமாச்சு.
டேவிட் காப்பர்ஃபீல்ட் இங்கே எங்கெ வந்தார்?
அதுக்குள்ளே வலதுபக்கம் ஒரு வரிசையில் மக்கள்ஸ் நின்னுட்டாங்க. கோவிலில் இடதுபக்கம் போய்த்தானே வலம் வருவோம். இங்கே என்னடா இப்படி......
வரிசையில் முன்னால் இருந்தவரிடம் எப்போ வரிசை நகருமுன்னு கேட்டேன். சாமி சாப்புடுதாம். ஆஹா......அந்த நிமிசம்வரை இது பதிவுக்கான மேட்டர்ன்னு நான் நினைக்கவே இல்லை. ஜஸ்ட் ஃப்ரெண்ட்லி விசிட்ன்னு கேமெராகூட எடுத்துக்காமப் போயிருந்தேன் (-:
இந்த மேஜிக் ஷோ நடக்கும் மண்டபத்தில் சுவரில் ஒரு கண்ணாடிச் சட்டம் போட்ட நோட்டிஸ் போர்டு. கோவிலில் விற்பனைக்கு இருக்கும் புத்தகங்கள். நடுவில் ஒரு பித்தளையால் ஆன அம்பாள் சிலை. எல்லாம் விற்பனைக்கு.
இதுக்குமேலே ஒரு பெரிய ஃபோட்டோ. ராஜகோபால். நிறுவனர், ராஜராஜேஸ்வரி ஆஸ்ரமம். இவர்தான் சுவாமிஜியாம்.
பதினைஞ்சு நிமிசக் காத்திருப்பு. கோபால் தோளில், ஷர்ட் துண்டு. ஆம்பளைங்கெல்லாம் மேல்சட்டையை எடுத்துறணுமாம். வரிசை நகர்ந்து முன்னால் போய் இடப்பக்கம் திரும்புனதும் குடலைப் பிடுங்குவதுபோல ஒரு துர்நாற்றம். அங்கே ஒரு கிணறு மூடிவச்சுருக்கு. பக்கத்திலே பாவம்....தன்வந்திரி சந்நிதி. இதுக்கு அவர் எதாவது மருந்து கண்டுபிடிச்சுத் தந்தாத் தேவலை. வாயையும் மூக்கையும் சேர்த்து இழுத்துப் பூட்டிக்கிட்டு ஒரு அவஸ்தையோடு அந்த இடத்தைக் கடந்தால் இடதுபுறம் ஒரு கொடிமரம். அதுக்கு முன்னால் மாடிப்படிகள், பித்தளைக் கவசத்தோடு. படிகளை ரெண்டாய்ப் பிரிச்சு நடுவில் ஒருகம்பித்தடுப்பு. முதல் படியில் ஒரு பெட்டி. உண்டியலோ? இல்லை. அதுக்குமேல் இப்படி எழுதி இருக்கு.
வெளியில் வாங்குன குங்குமம் குடும்பத்துக்குக் கேடு
குங்குமப் பாக்கெட்டை பிறிக்காமல் போடவும்
படிகளின் ரெண்டு பக்கச் சுவர்களில் நாம் பார்க்கும் உயரத்தில் ஒவ்வொருபடிக்கும் சின்னதா ஒரு கண்ணாடிச் சன்னல் மாடம் போல் அமைச்சு ஒவ்வொரு தேவி விக்கிரகமா இருக்கு. அதுக்குக்கீழே ஒரு ஸ்லோகம் விளக்கம்ன்னு எழுதிவச்சுருக்கு. கோவில் பணியாளர்களைத்தானே விவரம் கேக்கப்பிடாது. பக்தர்களைக் கேட்கலாமோன்னோ? கேட்டேன். இந்தப் பக்கம் இருக்கும் அதேதான் எதிர்ப்பக்கமுமாம். உத்துப் பார்த்தேன். ஆமாம். பிரதமையில் ஆரம்பிச்சு ஒவ்வொரு திதிக்கும் ஒன்னு. ஏறும்பகுதியில் சுக்லபக்ஷமும் இறங்கும் பகுதியில் க்ருஷ்ணபக்ஷமுமாக இருக்கு. பௌர்ணமிவரை ஏறி அமாவாசையில் இருந்து இறங்கணுமா?
பக்தர் என்னிடம் பேசிக்கிட்டே கையில் இருந்த குங்குமப் பாக்கெட்டைப் பெட்டியில் அப்படியே பிறிக்காமல் போட்டார்! அதையெல்லாம் எடுத்து ராத்திரி ஸ்வாமிஜி அவுங்க பெயரில் பூஜை செய்வாராம்.
எனக்கென்னமோ டென்பின் பௌலிங் செண்டர் நினைவு. நாம் வீசும் குண்டுப்பந்துகள் எல்லாம் திரும்பவும் நாம் நிக்கும் இடத்துக்கு வந்துருதுல்லே? சின்னதா ஒரு கன்வேயர் பெல்ட் இருக்குமோ பெட்டிக்கும் அபிஷேகப்பொருள் விற்பனைக் கவுண்ட்டருக்கும்? சீச்சீ இருக்காது. என்னதான் 'டெக்னாலஜி ஈஸ் கான் ஃபார் டூ மச்'ன்னு சொன்னாலும்.........
மனசே...அடங்கு .ப்ளீஸ் ப்ளீஸ்
ஆசாமி உள்ளுர் பக்தரா? ரெகுலர் விஸிட்டரா? கோவில் எப்போ கட்டுனது? போன்றவைகளுக்குப் பதில் சொன்னார். ஆமாம். ஆமாம். 38 வருசம்.
இவருக்கே முப்பது வயசுகூட இருக்காது. 28 இருக்கலாம்(கேக்கலை) போகட்டும்...நூறு ரூபாய் எனக்கு லாபம். தலபுராணம் விற்பனைக்கு இருக்கு.
வரிசை நகர்ந்து ஸ்ரீராஜராஜேஸ்வரியைப் பார்த்தோம்.லோகமாதா நிச்சிந்தையா உட்கார்ந்துருக்காள். இடது கையில் கரும்போ? பக்தர் இல்லைன்னார். கணுக்கணுவாத் தெரியுதேன்னேன்.
நமஸ்கரிச்சுட்டு சந்நிதியை வலம்வரமுடியாமல் கம்பித்தடுப்பு. நமக்கு வலதாய் ஒரு ஹால் அதுலே ஒரு அறை. அங்கே அறையின் ஓரமாச் சில விக்கிரங்களைவச்சு ரெண்டுபேர் (காவி உடுத்துனவர்கள்) மந்திரம் சொல்லிப் பூஜை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. மண்டபத்தில் சிலர் கண்களை மூடி நிஷ்டை(??)யில்.
எட்டிப்பார்த்துட்டு அமாவாசையில் இருந்து ஆரம்பிச்சுப் படி இறங்கிப் பிரதமை முடிச்சுக் கொடிமரத்தின் அருகில் நின்னேன். அங்கே இருந்து மேலே தேவியைப் பார்க்கக் கண்ணை ஓட்டினால்......சுத்தம். மறைந்திருந்து நம்மைப் பார்க்கிறாளாக இருக்கும். காலை நீட்டி அந்தப் பக்கம் இருக்கும் வாசல்வழியா வெளியே வந்தோம்.
பதிவர் ஒருவர் இந்தக் கோவிலைப்பற்றி முந்தி ஒருசமயம் எழுதுனது நினைவுக்கு வந்தது.
க்ளோபலாப் போகணுமுன்னு அவள் முடிவு செஞ்சுட்டா...யாராலே நிறுத்த முடியும்? லோகமாதா....... என்னை(யும்) எழுதவச்சுட்டியே.........நல்லா இரும்மா...நல்லா இரு.
படம்: அடையார் அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலில் நவராத்திரி விழாவில் விஷ்ணுதுர்கைக்கு தினம் ஒரு அலங்காரம் செஞ்சாங்க. தசரா தினம் ஸ்பெஷல் ஸ்ரீராஜராஜேஸ்வரி. அந்தப் படத்தை இணைச்சுருக்கேன். அப்படியே அந்தக் கோவில் கொலுப்படங்களும் உங்களுக்காக.
Monday, October 05, 2009
லோகமாதா...எழுதவச்சுட்டியே.............
Posted by துளசி கோபால் at 10/05/2009 04:19:00 AM
Labels: அனுபவம், நங்கநல்லூர், ஸ்ரீராஜராஜேஸ்வரி
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
//கோவிலிலே உண்டியலைக் காணோம்//
அதிசயமாயிருக்கு. ஒருவேளை நன்கொடை வாங்குவாங்களோ!!
//பதிவுலகப் பிரபலத்துக்கு ஒரு 'கால்'. //
அவரை பாத்துட்டீங்கல்ல... வெரி குட்..
ஒன்றரை மாசம் முன்னாடின்னா இன்னொரு பிரபலத்தையும் பாத்திருக்கலாம்... ஹிஹி... அது நாந்தான்...
நல்ல பதிவு டீச்சர், நான் அம்மன் கோவிலுக்கு மட்டும் போகவில்லை, மறுமுறை வாய்ப்புக் கிடைத்தால் அங்கு செல்கின்றேன். தாங்கள் கூறுவதைப் பார்த்தால் நல்ல வியாபாரத் தலம் போல் உள்ளது. இந்த மாதிரி கண்டிசன் போடுற இடம் எல்லாம் எனக்கு பிடிக்காது. நமக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்கள் எதுக்கு. நல்ல ஆன்மிகப் பெரியோர்களாக இருந்தால் ஸேவிக்கலாம். கோபால் சாரை விசாரித்தாக கூறவும்.
//வரிசையில் முன்னால் இருந்தவரிடம் எப்போ வரிசை நகருமுன்னு கேட்டேன். சாமி சாப்புடுதாம். ஆஹா......அந்த நிமிசம்வரை இது பதிவுக்கான மேட்டர்ன்னு நான் நினைக்கவே இல்லை. ஜஸ்ட் ஃப்ரெண்ட்லி விசிட்ன்னு கேமெராகூட எடுத்துக்காமப் போயிருந்தேன் (-://
தேவையா தேவையான்னு கருங்கல் தூண் எதிலும் முட்டிக் கொள்ளவில்லையே !
:)
அந்தக் கோயில் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்ப நீங்க சொன்னதைப் பற்றிப் படிக்கும் போது பகுத்தறிவாளர்களின் பார்வை கோயிலுக்கு படனும் போல் தெரிகிறது.
:))
உங்கள் அனுபவத்தை / கோவில் விசிட் ....படிக்கும் பொழுது கொஞ்சம் பொறாமையா இருந்தாலும், உங்கள் வர்ணனை அருமை - கொஞ்சம் குறும்பு ( யாரையும் புண் படுத்தாத ) ... வழக்கம் போல படங்கள் அருமை... நடத்துங்க
//பிறிக்காமல்//
வேண்டும் என்றேவா? :)
அன்புடன் மாணவன்
சிங்கை நாதன்
அம்மாவைப் பார்க்கணும்னால் ராஜராஜேஸ்வரியைப் பார்த்தால் போதும்னு பழைய நாளைக் கட்டுரை ....பரணிதரன் சார் எழுதினதுன்னு நினைக்கிறேன்.
இப்ப மாறிவிட்டதோ.
சரி நீங்க சொல்கிற மாதிரி அவள் நம்மைப் பார்த்து ரக்ஷிக்கட்டும். அனுமன் எளியவன் இனியவன். பார்த்துக் கொண்டே இருக்கலாம். நானும் நங்கை நல்லூருக்குப் போய் ஐந்து வருடங்கள் அகிவிட்டன,.
போகணுமின்னு நினைச்சிருந்தேன்....நீங்க சொல்வதைப் பார்த்தால் யோசிக்கணும் போல இருக்கே!
நல்ல பதிவு !!படங்கள் அழகாயிருக்கு. கொலு எப்படி முறையாக செய்வது,எந்தப் படியில் எந்த பொம்மைகள் வைப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் எழுதுங்கள் அக்கா!!
Arumaiyana nadai.
Aamam enge irukirathu intha irandu kovilgalum?
அருமையா வந்திருக்கு பதிவு.
நங்கநல்லூரில் இருந்த போது வீட்டுக்கு மிக அருகில் ராஜராஜேஸ்வரி. கொள்ளை அழகு. அந்த ஞாபகம் வந்தது
நங்க நல்லூர் விசிட் அருமை.
நடுவே உங்கள் தலைவரை இழுக்காவிட்டால் பதிவு முற்றுப்பெறாதா? :-))
வாங்க சின்ன அம்மிணி.
அதெல்லாம் வேற வழியில்.......:-)
வாங்க ச்சின்னப் பையன்.
அடடா.....நல்ல ச்சான்ஸைக் கோட்டை விட்டுட்டேனோ?
எந்தக் கோவிலில் இருந்தீங்க?:-)))))
வாங்க பித்தன்.
வாக்குப் பித்தரா ஆகிட்டீங்க போல!!!
எனக்குமே இடைச்சேவை பிடிக்காது.
எல்லாமே டைரக்ட் காண்டாக்ட்தான்:-)
கோபால் பின்னூட்டம் படிச்சுருவார்!
வாங்க கோவியாரே.
பேண்டேஜ் மருந்து ஒன்னும் அப்போக் கைவசம் இல்லை. இத்தனைக்கும் தூணுக்கு அருகில்தான் நின்னுருந்தோம்:-))))
வருமானம் கேரண்டீன்னு இருக்கும் பிஸினஸில் ஆன்மீகம் முன்னே நிக்குது(-:
என்னமோ போங்க(-:
வாங்க அது ஒரு கனாக் காலம்.
(இந்து)கோவில் இல்லா ஊரில் 22 வருசமா இருக்கறேனேன்னு இப்பப் பரிகாரம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்:-)))))
வாங்க சிங்கைநாதன்.
உங்களை இங்கேயெல்லாம் பார்க்கிறது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு. உடம்புத் தேறிவரணும்.
வேணுமுன்னுதான் பிறிக்காமல் 'வலியுறுத்தி'ச் சொல்லி இருக்காங்க.:-)
வாங்க வல்லி.
பரணிதரன் அவர்கள் கட்டுரைகளையெல்லாம் படிச்ச நினைவே இல்லை. புத்தகமா வெளிவந்திருக்குமுன்னு நினைக்கிறேன்.
உங்ககிட்டே இருந்தால் 'ஆன் கம்பெனி' சர்வீஸில் எடுக்கணும்:-)))
வாங்க மதுரையம்பதி.
கட்டாயம் போயிட்டு வாங்க ஒருமுறை.
குங்கும உண்டியலில் நாலு வரிகள் எழுதி இருந்துச்சு. ரெண்டு வரிகளை மறந்துட்டேன். போய்வந்து அவை என்னன்னு சொல்லுங்க!!!
வாங்க மேனகா.
அச்சச்சோ.... இடும்பிகிட்டே வழி கேட்டால் எப்படி?
நம்மவீட்டுலே எல்லா வருசமும் ஒரே தீம் & எல்லாப் படிக்கட்டுகளிலும் யானையாரும் பூனையாருமாத்தான்.
கொலுப் படிகள்ன்னு கூகுளிக்கவும். படிப்படியா விஷயம் கொட்டிக்கிடக்கு
வாங்க விஜி.
விடியவிடிய நங்கநல்லூர் ராமாயணம் கேட்டுட்டுக் கோயில் எங்கே இருக்கா?
ஆஆஆஆஆஆ
வாங்க புதுகைத் தென்றல்.
ராஜராஜேஸ்வரி இப்பவும் கொள்ளை அழகுதான்.
ஆனா........பரிவட்டாரங்கள்தான்...(-:
வாங்க குமார்.
ஈருடல் ஓருயிர்.
விட்டுற முடியுமா? :-))))))
துளசியப் பஓல கண்ணும் காதும் ஷார்ப்ப்பா இருக்கனூம்பா - ராஜராஜேஸ்வரி கோவிலப் பத்தி இடுகை - துவைச்சு அலசி காயப்போட்டாங்களே - பலே பலே
நல்வாழ்த்துகள் துளசி
வாங்க சீனா.
நான்பாட்டுக்குத் தேமேன்னு இருந்தாலும் விடறாங்களா பாருங்களேன்:-)))))
Post a Comment