Wednesday, May 19, 2021

மெய்யா இது பொய்யா......

எந்த வேளையில்  விமானத்தில் இருந்து வெளியே  கால் வைத்தேனோ......  துக்கிரி.....

ஆச்சு ஒரு வருஷமும் அஞ்சு மாசமும்.......  ஹூம்...... இந்தக் கொரோனாச் சனியன் எப்போ ஒழிவது, நாம் எப்போ பயணமுன்னு கிளம்புவது......
இதுவரை பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டாம இருப்பதன் காரணங்களில் ஒன்னுதான்.....  உள்ளூர் சமாச்சாரங்களுக்குப் போய் வர்றதெல்லாம்.....
எங்கேயும் பயணப்படமுடியாமல் கோவிட் கட்டிப்போட்டுருக்கு.  நம்மை மட்டுமா.... உலகத்தையேதான்னு ஒரு அல்ப நிம்மதி......

 கண்ணுக்குத் தெரியாத குட்டியூண்டு சைஸில் இருக்கும் கிருமி. இதுக்கு இருக்கும் பவர், ஆறறிவு மனுசனுக்கில்லையே.... பயந்து நடுங்கி செத்துக்கிட்டுல்லே இருக்கோம்.... ப்ச்.....

நம்மூரில் இருக்கும் மூணு புத்தர் கோவில்களில், ஒரு கோவில் நம்ம பேட்டையிலேயே இருக்கு. நாலே கிமீ தூரம்தான். வழக்கமாப் போகும் மெயின் ரோடிலேயே இருக்குன்றதால் போகும்போதும் வரும்போதும் கன்னத்துலே போட்டுக்கறது வழக்கமாப் போச்சு.

கோவிலுக்கான அடையாளம் ஏதும் இல்லாத ஒரு கட்டடம்.  இங்கே தரைத்தளத்துலே  ஒரு  ஹாலைக் கண்காட்சிக்காகவே நேர்ந்துவிட்டுருக்காங்க.  போனமுறை  சீனப் புதுவருஷக் கொண்டாட்டத்துக்குப் போய், அப்படியே அங்கே நடந்த ஓவியக் கண்காட்சியைப் பார்த்துட்டு வந்தோம். 

அப்பப் பார்க்காதவங்க, இப்பப் பார்க்கலாம் இங்கே :-)

http://thulasidhalam.blogspot.com/2021/02/blog-post.html


கோவிலின் மெயிலிங் லிஸ்ட்டில் நம்ம பெயர் இருப்பதால்  முக்கிய நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழும் விவரங்களும்  அனுப்பிக்கிட்டே இருக்காங்க. நேரங்காலம் அனுசரிச்சு  எல்லா நிகழ்ச்சிக்கும் போக முடியறதில்லை. ஆனால் முக்கியமானதுகளை விடமாட்டேன்.  ஊர்ப் பொதுவழக்கத்தின்படி எல்லா நிகழ்ச்சிகளையும் சனிக்கிழமைகளில் நேர்ந்து விடறோம் இல்லையா? 

இருக்கற ஒரு உடம்பை வச்சுக்கிட்டு எத்தனை நிகழ்ச்சிக்குத்தான் போகமுடியும் ? வெவ்வேற நேரம்  அமைஞ்சால் பாக்கியம்.  அன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு  நாள்.
ஒரு மாசத்துக்கு முந்தியே அழைப்பிதழ் வந்துருச்சு. புதுக்கண்காட்சி ஆரம்பம்.  சுமார் மூணரை மாசம் நடக்கப்போகுது ! 

ஒரு மணிக்கு திறப்பு விழா.  வெயில் வந்துருக்கேன்னு வீட்டுவேலைகளில் கவனம் செலுத்துனதால்  மத்த வேலைகளில் சுணக்கம். ரெண்டு மணி போலப் போய்ச் சேர்ந்தோம்.  அப்பதான் திறப்புவிழா நிகழ்ச்சிகள் முடிஞ்சுருக்கு. சைனீஸ் கொடியோடு இருந்த  வண்டியில் எம்பஸி ஆட்கள்  கிளம்பி வெளியில் வந்துக்கிட்டு  இருந்தாங்க.  அடுத்து இந்தியப் பிரதிநிதிகளாக நாம் :-)
ஹாலின்  முகப்பில் கண்காட்சியின் விவரம் ! 




நமக்கு ஏற்கெனவே பரிச்சமாயிருந்த Mei  சந்தோஷமா வரவேற்றாங்க.  அடுத்து ஒரு இளைஞரிடம் நம்மை ஒப்படைச்சாங்க.  சுத்திக்காமிக்கப்போகும் வழிகாட்டி !  அவர் செஞ்ச முதல் வேலை, ஒரு பூதக்கண்ணாடியை நம்மாண்டை கொடுத்ததுதான் :-) 
'ஙே' ன்னு ஒரு விநாடி முழிச்சநான் சுதாரிச்சுக்கிட்டேன்.  ஒரு அழகான பெயின்டிங் !  மலையும் நதியும், மரமுமாய்.......    அதை பூதக்கண்ணாடி வச்சுப் பார்க்கச் சொன்னார் வழிகாட்டி.  ஹைய்யோ....... 
இது பெயின்டிங் இல்லைப்பா...........   எம்ப்ராய்டெரி !  பூத் தையல் !  இதுலே விசேஷம் என்னன்னா.....   பின்னணியில் இருக்கும் வானம் உட்படத் தைய்யலோ தையல்தான்! அதுவும் மிஷின் ஏதும் இல்லாமல் வெறுங்கையால் போட்டது ! இவ்வளோ நுணுக்கமாப் போடும் ஊசி எவ்வளோ மெல்லிஸா இருக்கணும்? சட்னு கைவிரலுக்குள் நுழைஞ்சுறாது ? 

விரிஞ்சுபோய் அப்படியே நின்ன கண்களை நகர்த்திக்கிட்டே ஒவ்வொரு  படமா (!) ஹாஹா.....    படம் மாதிரிதான்  ஃப்ரேம் போட்டு வச்சுருக்காங்க.  Needle Painting ! 
ரோஜாக்கூட்டம்..... இப்பதான் நமக்கு டெக்னிக் புரிஞ்சுருச்சே.....  பூக்களும் பின்னணியுமா இண்டு இடுக்கு விடாமப் பட்டு நூல் இழைஞ்சுருக்கு! 
மன்னிக்கணும், விரிவாக விவரிக்கத் தெரியலை.....   நேரில் 'ஸீயிங் இஸ் பிலீவிங் ' வகை.   



கலைஞர் Hong Ying Yao அவர்களுக்கு இப்போ வயசு 51. ஆனால் அவுங்க பூத்தையல் போட ஆரம்பிச்சது எட்டாவது வயசில் !  அப்போ 43 வருஷ அனுபவம்.   அவுங்க கடந்து வந்த பாதையையும், திறமைகளை வளர்த்துக்கக் கற்ற விவரமும், கைவேலையில் சாதிச்சவைகளையும்,  கிடைத்த அங்கீகாரங்களும், பட்டங்களும்....  படிக்கப்படிக்க மூச்சு நின்னுடும் போல இருந்துச்சு எனக்கு! 
நீங்களும்  மூச்சடைச்சு நிக்கணுமுன்னா இங்கே :-)

http://www.suembroidery.com/embroidery_blog/article/12-09/suzhou_hand_embroidery_artist_yao_hongying.html










சுமார் 30  பூத்தையல் ஓவியங்கள் காட்சிக்கு வச்சுருக்காங்க. எல்லாமே  நம்ம Hong Ying Yao  போட்டவைகள்தான் பூக்களும், அருவியுமா அட்டகாசம்.   எனக்கு அந்த 'மயில் ' ரொம்பவே பிடிச்சுருந்தது. அப்ப அந்த மீன்களோ ?  ஹைய்யோ.... அது ரொம்பரொம்பப் பிடிச்சுருந்தது.  ஓக்கே.... அந்த சாமி ? ஓ..... அந்த சாமியா..... அதுவும் அருமை !   







போங்க...... ஏறக்குறைய எல்லாமே பிடிச்சுருந்ததே !
ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே.....  டபுள் சைட் எம்ப்ராய்டரி என்னும் அற்புதம்  வேற இருக்கு ! கண்ணாடித்தாள் மாதிரி இருக்கும் ஸில்க் துணியில் வேலைப்பாடு.  இந்த மயில் பாருங்க.....  எந்தப் பக்கம் திருப்பிப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கே! பின்பக்கத்துலே  நூலில் வரும் முடிச்சுகளையேக் காணோம்.  ராங்ஸைடு, ரைட்ஸைடால்லே இருக்கு !









இந்த வகைப் பூத்தையல் என்னும் கலை சுமார் 2500 வருஷங்களுக்கு முற்பட்டதாம்.  நிறைய ஸ்டூடியோக்கள் ஆரம்பிச்சு இதை ஒரு நல்ல, பெரிய வியாபாரமாகவும் ஆக்கி இருக்காங்க. நமக்கு  வேணுமுன்னா.......  ஒரு படத்தை அனுப்பி வச்சாலும் அதை நீடில் ஓவியமா வரைஞ்சு (!) அனுப்பிருவாங்க.
பெரிய குழுவாக இருந்து பிரமாண்டமான அளவில்  செய்யறாங்க. நல்ல டீம் ஒர்க் ! ஏற்கெனவே அவுங்க தயாரிச்சு வச்சவைகளை விற்பனைக்கும் வச்சுருக்காங்க.  என்ன ஒன்னு..........   கையைக் கடிக்கும் விலைதான். கலை ஆர்வம் மட்டுமிருந்தால் போதாதே......    காசும்  வேணும்தானே ?
ஆசையா இருந்தால் இங்கே எட்டிப் பாருங்களேன் ! இந்த சிறுத்தை எப்படி இருக்கு ? வெறும் 5367 $ தானாம் !
ஆமாம்....  கீழே... இது படமா இல்லை..... பூத்தையலா ?
இன்னொருக்காப்போய் ஆற அமர பார்க்கணுமுன்னு... மூளையில் முடிச்சு !
இப்பதான் நினைவுக்கு வருது......   ஃபிஜித் தீவுகளுக்கு இடமாற்றமா  இந்தியாவில் இருந்து கிளம்பி ஹாங்காங் வந்தப்ப , ஊர் சுத்திப்பார்க்கும்போது ஒரு பூத்தையல் ஓவியத்தை வாங்கினேன்.  என்னவோ சீனத்தில் எழுதி இருந்தது.  என்னன்னு விற்பனையாளரைக் கேட்டப்ப,  குட்லக் னு  எழுதி இருக்குன்னு சொன்னாங்க.  முன்பின் தெரியாத கண்காணாத் தேசத்துக்குத் தைரியமாக் கிளம்பி வந்துருக்கோம். லக் தேவைப்படும்தானே ?  
அதை ஒரு ஃப்ரேம் போட்டு மாட்டி இருந்தோம். நியூஸியில் பழைய வீட்டை விட்டுப் புது வீட்டுக்கு மாறி வந்தப்ப  ஒரு அறையில் மாட்டி வச்சுருந்தோம்.  அப்புறம்  இந்தியாவில் ரெண்டரை வருஷம் குப்பை கொட்டிட்டு  இங்கே திரும்பி வந்தப்பறம் பார்த்த நினைவு இல்லை.....  எங்கே போய் ஒளிஞ்சுக்கிச்சு தெரியலையே. 

தினம் தேடலுக்கு ஒதுக்கும் ஒருமணி நேரத்தில் இனி அதை(யும்) தேடணும் :-)

முடுக்கி விட்டுருக்கேன், தேடலை.....





குறிப்பு :  சில படங்களை, Su Embroidery Studio    

  வலைப்பக்கத்தில் இருந்து எடுத்துப்போட்டுருக்கேன். அவர்களுக்கு  என் மனம் நிறைந்த நன்றி !


Wednesday, April 28, 2021

கூத்துப் பார்க்கப் போலாமா ?

தோழியின் நாட்டியப்பள்ளியின் வருஷாந்திரக் கொண்டாட்டம் முடிஞ்சதும் கிளம்பி அடிச்சுப்புடிச்சு  ஓடி  ஷேர்லி ஹாலுக்குப் போனப்ப மணி எட்டரை. இங்கே நிகழ்ச்சி ஏழரைக்குத் தொடங்குது. ஏற்பாட்டாளரிடம், கொஞ்சம் தாமதமாகத்தான் வரப்போறோமுன்னு ஏற்கெனவே சொல்லி இருந்தோம்.
நம்ம ஊரில் ஒரு மாரியம்மன் கோவில் கட்டறதுக்கான ஏற்பாட்டில், பூமிப்பூஜையில் கலந்துக்கிட்ட விவரம் இங்கே சொல்லி இருந்தேன் பாருங்க..... அந்தக் கோவில் கட்டட நிதிக்கான நிகழ்ச்சிதான் இது. அதனால் தவறவிடும் எண்ணமில்லை.
உள்ளே போகும் போதே..... நம்மிடம் நுழைவுக் கட்டணம் வாங்க மறுத்தாங்க.   காரணம்.... ? ஏற்கெனவே கோவில்   கட்டட நிதிக்கு ஒரு தொகை கொடுத்துருந்தோம். பரவாயில்லை.... கோவிலுக்குப் போகும் காசை ஏன் வேண்டாமுன்னு  சொல்றீங்கன்னு கேட்டு வம்படியாக் கொடுத்துட்டு  ஹாலுக்குள் நுழைஞ்சோம். 

மேடையில்  தெருக்கூத்துக்கான  பாடல் கோஷ்டி திரைக்குப்பின் இருந்து பாடிக்கிட்டு இருக்காங்க.  கூத்து நிகழ்ச்சியைக் கூடவே இருந்து நடத்திக்கொண்டுபோகும் கட்டியக்காரன் (  விதூஷகன் /  ஜோக்கர்) நடை போட்டுக்கிட்டு இருக்கார் ! 
நல்லவேளையா இப்பத்தான் முக்கிய ஐட்டம் ஆரம்பிக்குது. ஏழரைன்னு சொன்னாலும்,  வரவேற்பு, சாமி விளக்கேத்தித் தேங்காய் உடைச்சு, தீப ஆரத்தி காமிச்சுட்டுக் கோவில் கமிட்டித்தலைவர், பிரமுகர் பேச்சு, மாலை மரியாதை, தெருக்கூத்து ஆரம்பிக்குமுன் சூடம் ஏத்தி கும்பிட்டுக்கறதுன்னு எல்லாம் நடந்து முடிய எட்டரை ஆகி இருக்கு  !

இன்றைக்கு நம்ம தெருக்கூத்தில்  வீரபாகு கதையைச் சொல்லப்போறோம்.  இது விஷ்ணுபுராணத்தில் இருக்கும் கதைன்னு கூத்து இயக்குநர், மைக்கில் சம்பவத்தை விவரிக்க,  எனக்குத் தூக்கிவாரிப்போட்டது......
வீரபாகு, தன்னைப்பெற்றவர்கள் யாருன்னு தெரியாமல்  மனக்கவலையில் இருக்கார். அப்போ இன்னொரு 'தம்பி' சமாச்சாரம்  கிடைக்குது.  
வீரபாகு தனக்கொரு தம்பி இருப்பதைத் தெரிந்துகொண்டு தம்பியைத்தேடி அலைகிறார்.  தம்பியும் தனக்கொரு உடம்பொறந்தான்  இருப்பதாகத் தெரிந்தவுடன், அண்ணனைத் தேடித் திரியறார். ஒரு கட்டத்தில் ரெண்டுபேரும் சந்திக்கறாங்க. 
ஆஹா.... என்னைப்போல் ஒருவன் !  ஒரே மாதிரி (ஏறக்கொறைய) உடை நடை பாவனை !   அண்ணா..... தம்பின்னு கட்டிப்புடிச்சு  குதிச்சு குதிச்சு நடந்து ஆடி.....   ன்னு அந்தக் கணத்தை அனுபவிக்கறாங்க. ஆமாம்.... இதுலே யாரு அண்ணன்? யாரு தம்பி ?   கண்டுபிடிக்க அவுங்களுக்கும் சரி, நமக்கும் சரி ஒரு கஷ்டமும் இல்லை உருவத்தில் அண்ணன் கொஞ்சம் பெரிய சைஸ், தம்பி கொஞ்சம் சின்ன சைஸ்! ஹாஹா....

இப்போ அண்ணனும் தம்பியுமாச் சேர்ந்து 'தாய்தகப்பன் யாருன்னு தெரியலையே.... அநாதைகளா ஆகிட்டோமே'ன்னு சின்னதா ஒப்பாரி வச்சு அழுதுட்டு, தேடும் வேலையில் இறங்க...... நாரத மஹரிஷி அங்கே வர்றார்.   அவரை வணங்கி, 'எங்க நிலையைப் பார்த்தீங்களா ?  எங்க தாய்தகப்பனைத் தேடிக்கிட்டு இருக்கோம். நீர்தான் மூவுலகமும் சுத்திவர்றவராச்சே.....   எங்களுக்கு உதவணுமுன்னு கெஞ்சிக் கேக்கறாங்க.


'எனக்கு அவ்வளவா விவரம் தெரியாது..... நீங்க  மாதா  பார்வதியைக் கும்பிட்டு, நோம்பு இருங்க. நல்லதே நடக்குமு'ன்னு சொல்லிட்டு, 'நாராயணா நாராயணா'ன்னு கிளம்பிப்போனார்.

 விரதம் இருந்து பார்வதி தேவியை  மனசில் இருத்திக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க அண்ணனும் தம்பியும் !  அன்ன ஆஹாரமில்லை........... ப்ச்..... 
மனம் நெகிழ்ந்து போன மாதா பார்வதி தரிசனம் தர்றாங்க.   லோகமாதா இல்லையோ ? 
தாயன்பு எப்படி இருக்குமுன்னு இவுங்களுக்கும் இப்போதான் தெரியுது.   அண்ணந்தம்பியின் கவலையைக் கேட்ட தேவி, 'நீங்க ரெண்டு பேரும் சிவனை நினைத்து தவம் செய்யணும். அப்போ அவரே  உங்களுக்குத் தரிசனம் தந்து உங்க அவதார ரகசியத்தை விளக்குவார்'னு சொல்லிப்போனாங்க.




திரும்பவும் தவம் ஆரம்பிச்சது  மேடையில். இங்கே என் பக்கத்தில் இருந்த 'நம்மவர்' குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சார்.  'இப்பவே ரொம்ப நேரமாச்சு.  கிளம்பு வீட்டுக்குப் போகலாம்.....'

நானும் பார்க்கிறேன்.... இங்கே நியூஸி வந்த பிறகு  ஏழெட்டுமுறை தெருக்கூத்துப் பார்க்கப்போயிருந்தாலும், ஒருமுறை கூட கடைசி வரை இருந்து பார்த்ததே இல்லை.......... ப்ச்.....

ஆங்.....  சொல்ல விட்டுப்போச்சே.....   இந்த நிகழ்ச்சியில் எல்லோருக்கும் ஃப்ரீ டின்னர் வேற உண்டு. உள்ளே நுழையும்போதே... நம்ம டிக்கெட் கூடவே டின்னர் டிக்கெட்டும் தந்துருவாங்க. எப்பவும் ஒரே மாதிரி  ஒரு செட் மெனுதான் இருக்கும் இப்பவும் அதே அதே !  ஃபிஜி ஸ்டைல் வெஜ் பிரியாணி, ச்சனா அண்ட் ஆலூ சேர்த்த கறி,  டொமாட்டோ சட்னி. கூடவே ஒரு 500 மில்லி .......   ஜூஸ் பாட்டில்.  
அப்புறம் கூத்து பார்த்துக்கிட்டே கொறிக்க,  வறுத்த வேர்க்கடலை, பஜ்ஜியா,  பொடேட்டோ ஃபிங்கர் சிப்ஸ்,  வறுத்த மஸாலாப் பட்டாணி அது இதுன்னு தீனிவகைகள். இதெல்லாம் தனியா காசு கொடுத்து வாங்கிக்கணும்.  எல்லாம் ஒரு டாலர், ரெண்டு டாலர்தான். எல்லாமே  கோவில் நிதிக்கான ஏற்பாடுகள்தானே......  வாங்காம  இருக்க முடியுமோ ? ஹிஹி....

மேடையில் கூத்து நடந்துக்கிட்டு இருக்கும்போதே.... கீழே சனம்  டின்னர் கொண்டுவந்து சாப்பிட்றதும், தீனி வாங்கிக் கொறிக்கறதுமா  இருக்கு. நாமும் ஜோதியில் கலந்தோம்.





அப்ப சைடு ஷோவா... ஒரு குட்டிச்செல்லம் மேடைப்பாட்டுக்கு ஏத்தாப்லே கீழே நின்னு ஆட்டம் காமிக்குது.  வான்னு கை அசைச்சேன். ஓடி வந்து மடியில் இடம் பிடிச்சது. ச்சும்மாச் சொல்லக்கூடாது.... செம க்யூட் ! 

கொஞ்ச நேரத்தில் குழந்தை இறங்கிப்போனதும்  மேடையைக் கவனிச்சால்....  தவம்  முடியும் நேரம், ஷிவ்ஜி  வரப்போறார்னு கூத்து டைரக்டர் சொல்லிக்கிட்டு இருக்கார்.

கிளம்பலாமான்னு  கேட்ட 'நம்மவரிடம்'  சிவன் என்ட்ரி ஆகட்டும். பார்த்துட்டுப் போகலாமுன்னு சொல்லி வச்சேன். 

இடைக்கிடையே மேடையில் கோவில் நிதிக்காகச் சின்னதும் பெருசுமா அன்பளிப்பு தர்றவங்க பெயர்களை அறிவிச்சதும், நாங்களும் விடாமக் கைதட்டி ஆரவாரம் செஞ்சுக்கிட்டு இருந்தோம்.
டமருகம் ஒலிக்க.......  இதோ சிவன் தோன்றினார் ! 

சிவனைப் பார்த்தாச்சுல்லே....  போகலாமுன்னு இவர் எழுந்ததும், வேற வழி இல்லாம நானும் கூடவே கிளம்பவேண்டியதாப் போச்சு.......  
மணி இப்பவே பதினொன்னு....   அநேகமா இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் போல....  வழ்க்கம்போல் முடிவு தெரியலையேன்னு புலம்பிக்கிட்டே வீடு வந்து சேர்ந்தாச்.
நூத்தி நாப்பத்திரெண்டு வருஷங்களுக்கு முன்னால்  தென்னிந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில், கிராமத்தில் நடக்கும் தெருக்கூத்து எப்படி இருந்திருக்குமுன்னு  இப்ப அங்கே போனால் தெரியுமா?  எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுருக்காது ?  ஆனால்....

நீங்க ஃபிஜிக்கு வந்தீங்கன்னா.... அப்போ எப்படின்னு இப்போ(வும்) தெரிஞ்சுக்கலாம்.  காலம் உறைஞ்சு போச்சுன்னு சொல்வாங்க பாருங்க..... அதே தான்....... 

1879 இல்  கரும்புத்தோட்டத்தில் வேலை செய்யவைக்கறதுக்காக, வெள்ளைக்காரன் பிடிச்சுக்கிட்டு வந்த மக்களுக்குக் காலம் உறைஞ்சுதான் போச்சு. இப்போ மாதிரி இன்டர்நெட்டும், ஃபேஸ்புக்கும், இன்ஸ்ட்டாக்ராமும், வாட்ஸ்ஸப்புமா  அப்போ  ? 

சரியான கல்வியறிவு இல்லாமல் இருந்த கிராமத்து மக்கள், வேலை நேரம் போக, தாங்கள் விட்டுவந்த ஊரையும் வீட்டையும் கோவிலையும்  வேறெப்படி நினைவில் வச்சுக்க முடியும், சொல்லுங்க ? 

சுமார் ஏழு தலைமுறை கடந்தும், பாட்டன் சொல்லித்தந்த கலையையும், கடவுளையும் மறக்காமல், அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து நடத்திக்கிட்டுப் போறதில் , இந்தக் காலக்கட்ட இளைஞர்களும்  ஏராளமாக் கலந்துக்கிட்டு சிறப்பாக நிகழ்ச்சிகளைக் கொடுக்கறது  மனசுக்கு மகிழ்ச்சியான விஷயமா எனக்கு இருக்கு !  உங்களுக்கும் அப்படித்தானே ? 

ஆமாம்..... வீரபாகு கதை என்ன ? விஷ்ணுபுராணத்துலே வராறா என்ன ? 

PINகுறிப்பு :  ரொம்ப  நாட்களா  துளசிதளம் செயல்படாம இருந்ததுக்கு மன்னிக்கணும். எழுத எவ்வளவோ இருந்தாலும்,  மனசு முடங்கிப்போனதுக்குக் காரணம்......  அந்த பாழாப்போன கொரோனாதான்.... ப்ச்....