Tuesday, May 11, 2010

சதுர்முக் பஸாடி

சதுர்முக் பஸாடிக்குப் போகும் வழியில் இன்னொரு கோவில் (அனந்த சயனன்) மூடிக்கிடக்கு. ஒரு கல்குன்றின் மேலே இந்த பஸாடி இருக்கு.
சுட்டெரிக்கும் வெய்யிலில் மேலே ஏறணுமான்னு ஆயாசம் வந்ததென்னமோ நிஜம். ஆனால்..... போகட்டுமுன்னு விடமுடியுதா என்ன? நல்ல அகலமான படிகள். ரெண்டு பக்கமும் பாதுகாப்புக்கு ரெய்லிங் போட்டுருக்காங்க. மெள்ள மெள்ள ஏறினேன். படிகள் முடியும் இடத்தில் சின்னதா ரெண்டுபக்கமும் திண்ணைகள். மூச்சு வாங்கக் கொஞ்சநேரம் உக்கார்ந்துட்டு யதேச்சையாப் பார்வையைஓட்டி, நடந்துவந்த படிகளையும் உசரத்தையும் பார்த்து இன்னொரு பெருமூச்சு விட்டு நிமிர்ந்தால்................ மூச்சே நின்னு போச்சு. தூரமா ஒரு கோட்டைச் சுவர்க்குள்ளில் இருந்து எட்டிப் பார்க்கும் பாஹூபாலி!
இந்தக் கர்க்கலா ஏரியாவில் மட்டும் 18 பஸாடிகள் இருக்காமே! அதுலே ஒன்னு போல! விசாரிக்கணும். உள்ளே போனால் பெரிய திறந்தவெளிப் பிரகாரம். கடந்து நாலைஞ்சு படிகள் ஏறினால், கருஞ்சாந்து நிறத்தில் மின்னும் மூவர்! கருவறைன்னு தனியா வைக்காமல் மண்டபம் போல் கட்டியிருக்கும் கோவில். பக்கத்துக்கு மூணு பேரா நாலுபக்கமும் ஆளுயரச்சிலைகளா மும்மூணு தீர்த்தங்கரர்கள். ஒவ்வொரு மூவருக்கும் முன்னால் ப்ரமாண்டமான வாசல்நிலைகள். சதுரக்கோவிலா இருக்கு.


எந்தப்பக்கம் இருந்து உள்ளே வந்தாலும் ஒரு மூவரின் தரிசனம் கிடைச்சுரும். வலம்வரும்போது நாம் கடைசியாகத் தரிசிக்கும் மூவருக்கு முன்னே 24 தீர்த்தங்கரர்களும் சின்னச்சின்ன சிலைகளா கூட்டமா மூவரின் காலடியில் உக்காந்துருக்காங்க. ஆனால் நாம் வந்த வாசலைத்தவிர மற்ற மூணையும் அடைச்சே வச்சுருக்காங்க. வலம்வரும் உள்பிரகாரமெல்லாம் கருங்கல் தூண்கள் அங்கங்கே. இந்தக் கோவிலில் இப்படி உள்ளும்புறமுமா 108 தூண்கள் இருக்கு. சிலது வேலைப்பாடில்லாமல் சாதாரணமாவும், சிலது சிற்பங்களைக் கொண்டதாகவும் இருக்கு. முக்கியமா வெளிப்புறம் இருப்பவைகளில் ராமாயண, மகாபாரத நிகழ்ச்சிகள் செதுக்கப்பட்டுருக்கு.

இந்தக் கோவிலைக் கட்ட 30 வருசம் ஆச்சாம். இருக்காதா பின்னே? 1586 வருசம் கட்டப்பட்டது. இந்தப்பகுதியில்தான் திப்பு சுல்தான். ஆட்சியில், கும்பினிக்காரருக்கு எதிராகப் போர் நடந்தப்ப கோட்டை, அகழி எல்லாம் உண்டாக்கி கிழக்கிந்தியக் கம்பெனிக்கெதிரா போரிட்டாராம்.
தூண்களுக்கும் கூரைக்கும் இருக்கும்(?) சின்ன இடைவெளிகளில் புறாக்கள் குடும்பம் ஏராளம். என்னை எட்டிப் பார்க்கும் ஆர்வத்தில் சரியாகச் சிறகு முளைக்காத புறாக்குஞ்சு சட்னு மேலே இருந்து குதிச்சு எனக்கு வழிகாட்டி போல முன்னால் தத்தித்தத்தித் தளர்நடை போட்டுப் போனது. பாவம். திரும்ப கூட்டுக்கு எப்படிப்போகுமுன்னு தெரியலை:(
எதிரே இருக்கும் சிலையைப் பற்றி இங்கே இருந்த பண்டிட் தாத்தாவிடம் கேட்டோம். அம்மா உசரம் யாராலே ஏறமுடியும்? வயித்துலே இதமா பால் வார்த்தார் அவர். கார் மேலே போகும்படியா பாதை இருக்காம். கீழே பாதுகாவலுக்கு இருப்பவரிடம் சொன்னால் கார்ப் பாதைக்கான கேட்டைத் திறந்து விடுவாராம். இந்தக் கோவிலுக்கு ஒரு சின்னக் காணிக்கை கொடுத்தவுடன், வரவு வச்சுக்கிட்டு ரசீது கொடுத்தார். ஆங்கிலம் சரளமாப் பேசுறார். நமக்கும் எல்லா விவரமும் கேட்டுத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. கிளம்பும் சமயம் தட்சிணை கேட்டார். இந்த உடுபி யாத்திரையில் முதல் முறையா வாயைத்திறந்து தட்சிணை கொடுங்கோன்னு கேட்டவர் இவர் ஒருத்தர்தான்.

இவர் சொன்னதுபோலவே ரெண்டு மூணு தெருவைக் கடந்து எதிர்ப்புறம் காட்சியளித்தக் குன்றின் அடிவாரத்துக்குப்போய்ச் சேர்ந்தோம். பொறுப்பாளரும் நம்ம வண்டியில் வந்து ஏறிக்கிட்டார். குன்றைச்சுற்றி கொஞ்சதூரம் போனதும் கார்ப்பாதைக்கான கேட் இருந்துச்சு. அதைத் திறந்து உள்ளே போனோம். நல்ல ரோடாத்தான் இருக்கு. மேலே போய்ச் சேர்ந்தால்.....மூணு ஜோடிகள் அங்கங்கே மர நிழலிலும், மதில் சுவர் நிழலிலுமா உக்காந்து 'கடலை' வறுத்துக்கிட்டு இருந்தாங்க. அடிக்கிற வெயிலுக்குச் சீக்கிரம் வறுபட்டுப் போகுதுபோல! கேட்டுத்தான் பூட்டி இருக்கே எப்படி வந்தாங்களாம்? அடிவாரத்துலே படிக்கட்டு ஒன்னும் இருக்காம். புதர் மூடிக்கிடக்கும் வழி. காதலியின் கடைக்கண் பார்வையிலே காற்றிலேறி விண்ணையும் சாட முடியும் என்றால் புதர்வழி எம்மட்டு?
கோவில் நுழைவு வாசலுக்கு முன்னால் ஒரு பெரிய மகாஸ்தம்பம். உச்சியில் ஏதோ ஒரு பெண் தேவதை. ஆனால் அது ப்ரம்மதேவராம்!
பூட்டி இருந்தக் கம்பிக் கதவு வழியே பார்த்தால் நெடுநெடுன்னு நிக்கிறார் கோமடீச்வரர். உள்ளே போனால் ரெண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். சிலுசிலுன்னு காத்து அருமை. பிரகாரம் சுற்றியும் பெரிய கோட்டை மதில் சுவர்கள். சிதிலமான இந்தச் சுவர்களைச் சமீபத்தில் திரும்பக் கட்டுனப்ப அதுலே இருந்து 18 தீர்த்தங்கரர்களின் சிலைகள் கிடைச்சதாம். இன்னும் ஆறு எங்கே இருக்குன்னு தெரியலை. ஆனால் கிடைச்சுரும் பாருங்கன்னார் குமார்

ஸ்ரவணபெளகுளாவில் அவர் பாதங்கள் தரையோடு இருப்பது மாதிரி இல்லாமல் பாஹூபாலி சின்னதா ஒரு மேடையில் நிக்கறார். 42 அடி உயரம்
1432 வது வருசம் ஃபிப்ரவரி மாசம் 13 ஆம்தேதி இவரை ப்ரதிஷ்டை செஞ்சுருக்காங்க. கீழே சிலையைச் செதுக்கி, குன்று உச்சிக்குக் கொண்டுவந்தாங்களாம். அப்போ போட்ட பாதைதானாம் இப்போ நாம் காரில் வந்தது. இங்கே அக்கம்பக்கங்களில்தான் தரமான கருங்கற்கள் கிடைக்குதாம். கர்னாடகாவில் இதுவரை இருக்கும் பாஹுபலி சிலைகள் எல்லாமே இங்கே செதுக்கிக் கொண்டுபோனவைகள்தானாம்.
கோட்டையின் வெளிப்புறம் ஒரு பக்கம் கிணறு ஒன்னு இருக்கு. வெறும் கருங்கல் மலையில் என்றுமே வற்றாத கிணறாம். பார்வையை எதிர்ப்புறம் செலுத்தினால், நாம் போய்வந்த சதுர்முக பஸாடி தெரியுது. இந்தக் கோட்டையைக் கட்டி முடிச்சு 150 வருசம் ஆனபிறகுதான் அந்த பஸாடியை அரசரின் பேரன் கட்டுனாராம். ஆனால் இது பளிச்சுன்னு இருக்கு. அது ரொம்பப் பழைய லுக்காக் கிடக்கு.
குமாரைத் திரும்பக் கொண்டுவந்து அடிவாரத்துலே இருக்கும் அலுவலகத்தில் விட்டுட்டு நாங்க கிளம்பினோம். பகல் சாப்பாடு எங்கேன்னு முடிவு செஞ்சுக்கலை.. அப்படியே ராத்தங்கலுக்கும் இடம் தேடணும். திடீர்னு காட்டுப்பக்கம் வண்டி திரும்புது. வண்டி மலைமேல் ஏறிப்போகணும். இதுக்கு அனுமதி வாங்கிக்கணுமுன்னு ப்ரஷாந்த் சொன்னார். பணம் ஒன்னும் கட்ட வேண்டாம். ஆனால் அனுமதிச்சீட்டு இல்லாமல் பயணிக்க முடியாது. இங்கே வாங்குன சீட்டை மலையின் அடுத்த பக்கத்தில் இறங்கும்போது அங்கே இருக்கும் செக் போஸ்டில் கொடுக்கணும்.

Monday, May 10, 2010

பஸாடிக்குப் போலாமா?

மணிபால்..... ரொம்பப் பொருத்தமான பெயர்தான்! money is your pal :-)))) அஞ்சே கிலோ மீட்டர் தூரத்துலே வெளிநாட்டுக்கு வந்துட்டோமோ? எல்லாமே அழகா அம்சமா நீட்டா இருக்கும் ஊர். ஒரு காலத்துலே, எந்த காலேஜ்லேயும் இடம் கிடைக்கலைன்னா....கடைசிக் கட்டமா இங்கே வந்து 'பணம்' கட்டிப் படிக்கலாம். அதுவும் வெளிநாட்டு மாணவர்கள்தான் ஏராளமாக வருவாங்க. அப்போ நம்மூர் ஆளுங்க சொல்றது........ "ஐய்ய.... மணிபால் யூனியா? தரம் கொஞ்சம் மட்டம்தான்"

இப்போப் பாருங்க தமிழ்நாடு பூராவும் தெருவுக்கு நாலுன்னு ப்ரைவேட் காலேஜ் அண்ட் யூனி(?!!!!) ரொம்பி வழியுது! நம்மாளுங்க காசு பண்ணும் வித்தையைப் பூரணமாக் கத்துக்கிட்டாங்க! அகில இந்தியாவில் முதன்முதலா ஆரம்பிச்ச தனியார் பல்கலைக்கழகம் மணிப்பால் யூனிதான். போணி!!!!

ஒருமணி நேரப்பயணத்தில் வராங்கா என்ற கிராமத்துக்குள்ளே நுழைஞ்சோம். கர்க்கலா வட்டத்தைச் சேர்ந்த இடம். உடுபியில் இருந்து நாப்பது கிலோமீட்டரில் கருங்கல் இருக்கு!!!! இந்தப் பெயர்தான் இப்போ மருவி கர்க்கலான்னு ஆகிப்போச்சு. இந்த ஊருக்குப் பழமையான பெயர் பாண்டி நகரம்! அரசர் வீரபைரவா, நிறைய பஸாடிகள் கட்டி இருக்கார். இவருக்கு ராமநாதன், வீரபாண்டியன்னு ரெண்டு பிள்ளைகள். ராமநாதன் சிறுவயதிலேயே மரணம் அடைஞ்சுட்டார். அவர் நினைவா ராமசமுத்ரம் என்ற பெயரில் பஸாடிக்கு முன்னே ஒரு பெரிய குளம் வெட்டி இருக்கார் அரசர். அவருக்குப் பின் பட்டத்துக்கு வந்த வீரபாண்டியா, தன்னுடைய குருவான லலித்கீர்த்தி என்னும் சமணமதப் பூசாரியின் வேண்டுகோளின்படி, கருங்கல் மலையின் மேல் ஒரு பெரிய பாஹூபலி சிலையை வச்சுருக்கார். இது 1432 வது வருசம்.இது அடுத்த இடுகைக்கான மேட்டர்) இவருக்குப் பிறகு அரியணை ஏறிய அபினவ பாண்டியா, ஸ்ரீ நேமிநாத் தீர்த்தங்கரருக்கு ஒரு பஸாடி கட்டி இருக்கார். அங்கேதான் இப்போ நாம் போறோம்.
வராங்கா கோவில் வளாகம் பெரிய நிலமாக்கிடக்கு. ஒரு பத்துப் பதினைஞ்சு க்ரிக்கெட் ஸ்டேடியம் கட்டலாம். ஒரு பக்கத்துலே சின்னதா வீடு மாதிரி அமைப்பு. நாம் போனதும், பக்கத்து கட்டிடத்துலே இருந்த அர்ச்சகர் சாவி கொண்டு வந்து கோவிலைத் திறந்தார்.
இந்த ' பஸாடி' என்ற பெயர் எனக்கென்னவோ.... கேட்டதும் சட்னு பிடிச்சுப்போச்சு. பஸாடி பஸாடின்னு சொல்லிப் பார்த்தால் ஏதோ ஒரு துள்ளல் மனசுலே. இதுக்கு அர்த்தம் என்னன்னு புரியாமச் சொல்லிக்கிட்டே இருந்து ஒரு சமணக்கோவில் அர்ச்சகரிடம் கேட்டப்போ அவர் சொன்னார்.... இந்து மதத்துலே கோவில்கள்ன்னு சொல்றீங்க இல்லையா ? சமணக்கோவில்களுக்கு பஸாடின்னு பெயர். பஸாடி = டெம்பிள். தட்ஸ் ஆல்:-)))

(சமண சந்நியாசிகள் வந்து தங்க இந்தக் கோவில்களிலெல்லாம் அருமையான வசதிகள் இருப்பதால் வசதி என்றதுதான் பஸாடின்னு மருவி இருக்குமோ? அதான் கன்னடத்துலே 'வ' வுக்கு 'ப' தானே சொல்றாங்க.)
உடுபியில் ஸ்ரீ அனந்தேஸ்வரன் கோவிலைப் பார்த்து வாயைப் பிளந்தேனே.... இங்கே..... ஹைய்யோஓஓஓஒ! முழுக்க முழுக்கக் கருங்கல் பாலங்களையே வச்சுக் கட்டி இருக்காங்க. மெஷீன் இல்லாத காலக்கட்டத்தில் ஒரே தடிமனில் பிசுறே இல்லாம எப்படி வெட்டி இருப்பாங்க? கருங்கல்லில் உளி பட்டதும் தெறிச்சுருக்குமே சில்லுகள்! எத்தனை பேருக்குக் கண்ணு போச்சோ...... மனக்குரங்கு ஆட ஆரம்பிச்சுட்டது...இனி புலம்பலை நிறுத்த முடியாது.....பாவம் நம்ம கோபால்:( முன் படிகளிலே ரெண்டு பக்கமும் நம்மாட்'கல்' தந்தங்கள் கூடத் தேய்ஞ்சு கரைஞ்சு போய் நிக்கறாங்க. உள்ளே அஞ்சடி உயரத்தில் மூலவர் நேமிநாத் ஸ்வாமி, சந்த்ரநாத் ஸ்வாமி, பத்மாவதி தேவி இப்படித் தனித்தனியா சந்நிதிகள். இருட்டுக் கருவறையில் ஒரு நிமிசம் தீபம் காமிச்சதோட சரி. கருவறை முகப்புச்சுவர்களில் விஷ்ணு, ஹனுமன் இப்படி செதுக்கி இருக்கு. த்வாரபாலகர்களும் உண்டு. ரொம்ப நுணுக்கமாச் செதுக்கி வச்ச தொங்கும் மணி சூப்பர். அதைச்சுற்றி ஒரே மாதிரியான எம்ப்ராய்டரி டிஸைன்கள்!

கருவறை முகப்பு
கோவிலுக்கு வெளியே ரெண்டு ஆள் நடக்கும் வகையில் சுத்திவர கல்மேடை வெளிப்பிரகாரம் சுத்தி வரலாம். முழுக்க முழுக்கக் கருங்கல். எப்படி ஒன்னோடு ஒன்னு பொருத்தி இருப்பாங்க? வெளியே மகாஸ்தம்பம் ஒன்னு நிக்குது. கோவிலுக்கு முன்னால் கொஞ்சம் நாலு படி இறங்கும் அளவுலே பெரிய நிலப்பகுதி. திருவிழா நடந்தால் ஜேஜேன்னு இருக்கும்!
இந்த நிலப்பகுதியின் அடுத்த ஓரத்துலே வலது பக்கம் இன்னொரு கோவில் இருக்கு 'அங்கே போகலாம் வாங்க'ன்னு அர்ச்சகர் கூட்டிப்போனார்.
கையில் எண்ணெய்த் தூக்குடன் அவர் விறுவிறுன்னு நடந்துபோயிட்டார். நாம் வண்டியில்தான் போகவேண்டி இருந்துச்சு. அட! அசல் செட்டிநாட்டு வீட்டுக்குள் நுழைஞ்சுட்டோம். வாசல் நிலையில் இருந்து அச்சு அசல் செட்டிநாடு வீடுதான். கஜலக்ஷ்மி இருக்காள்.

மேல் நிலையில் அஞ்சுதலை சேஷன் குடைபிடிக்க ஒரு தீர்த்தங்கரர். உள்ளே போனால் சுத்திவரத் தாழ்வாரம். முற்றம் மூணு படி வச்சுத் தாழ்வா இருக்கு. வாசலுக்கு நேரா முற்றத்தின் அந்தப் பக்கம் இருக்கும் கதவின் பூட்டைத் திறந்தார். உள்ளே செம இருட்டு. கண்ணை நல்லா விரிச்சு இருட்டை விழுங்கலாமுன்னா..... ஊஹூம். பளிச்ன்னு ஒரு மெல்லிய திரி போட்ட தீபத்தை ஏத்துனதும் சின்னதும் பெருசுமா ஏழெட்டுத் தீர்த்தங்கரர்களின் 2 சிலைகள். எல்லோரும் சம்மணம் போட்டு உக்கார்ந்த போஸில் இருக்காங்க. மேலாக இருந்த ஒரு சிலைக்குப் பின்னே விளக்கைக் கொண்டு போனார். ஹப்பா................... அந்தச் சின்ன ஒளி எப்படி ஊடுருவி அந்த இடமே பளிச்ன்னு ப்ரகாசமா ஆச்சுன்னு என்னாலே நம்பவே முடியலை. சந்த்ரகாந்த் ஸ்வாமி. மூன்ஸ்டோனில் செய்யப்பட்ட சிலை. விலைமதிப்பே இல்லாதது. அந்த சின்ன அறையில் 'தேமே'ன்னு நிக்குது!
வீட்டின் அழகைக் கெடுப்பதுபோல் அங்கிருந்த' டிஷ் ஆண்டெனா'தான் கண்னைக் கொஞ்சம் உறுத்துச்சு. ஆனால்.....காலம் மாறுதுல்லே?
கோவிலுக்கு வலப்பக்கம் அட்டகாசமான பெரிய குளம். குளமுன்னு சொல்றதே தப்பு. கடல்ன்னு சொல்லலாம். தளதளன்னு தண்ணீர் ததும்பி நிக்குது. அதுலே நடுவிலே இன்னொரு கோவில். கேரா பஸாடி. இதெல்லாம் 1000 வருசப் பழசுன்னு சொன்னாங்க.

இங்கிருந்து 24 கி.மீ தொலைவில் கர்க்கலா. வந்து சேர முக்காமணியாச்சு. ஊருக்குள்ளெ நுழைஞ்சதுமே கண்ணில் பட்டவர் நம்ம வெங்கடரமணர்:-) மேற்குத் திருப்பதின்னு புகழ்பெற்ற ஊர். 'pபாடுதிருப்பதி'ன்னு சொல்றாங்க. (பாடு(கன்னடா) = மேற்கு) அவருக்கு நேர் எதிரா நேயுடுவுக்கு ஒரு தனிக்கோவில். ரெண்டு கோவிலுக்கும் நடுவிலே குறுக்காலே போகுது ரோடு. வெங்கட்டு சின்ன உருவம். நேயர் ப்ரமாண்டமா பதினைஞ்சடி உசரத்தில்!!! எதிரும்புதிருமாப்போய் சேவிச்சோம்.
நேயடு வாசலில் இருந்து வெங்கடரமணரை சேவிக்கலாம். அங்கே இருந்து இவரையும். யஹா(ங்) ஸே வஹா(ங்)

மூலவர் ஸ்ரீனிவாசன் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டவராம். ஒரிஜனல் மூலவரைக் கள்வர்கள்கிட்டே இருந்து காப்பாத்தக் கிணத்துலே போட்டுட்டாங்களாம், மூல்கி என்ற ஊரில். அது உள்ளூர் ஒருவர் கையில் அகப்பட்டு அவரும் மூல்கியிலேயே ப்ரதிஷ்டை செஞ்சுட்டாராம். சாமியைத் திருப்பிக்கேக்கப் போனப்போ (வழக்கம்போல்) கனவுலே வந்து நான் இங்கியே இருக்கப்போறேன். நீ போய் திருப்பதியில் நான் சொன்னேன்னு சொல்லி வேற ஒன்னு வாங்கிக்கோ'ன்னுட்டார். அதுதான் இது! வருசம் 1450. பெருமாளைத் தேடிக்கிட்டு நம்ம நேயுடு 1539லே வந்தார். வீர மாருதின்னு இவருக்குப் பெயர். திப்பு சுல்தான் இவரோட பக்தராம். இவருக்கு அவர் செஞ்சு போட்ட வெள்ளி நெக்லேஸ் கழுத்துலே இன்னமும் இருக்கு

Friday, May 07, 2010

சாவி கொடுக்க இப்படி ஒரு திருவிழா!!!!

ஸ்ரீ மாத்வர், தன்னுடைய சிஷ்யப்பிள்ளைகளில் எட்டுப்பேரை தனித்தனியாக மடங்கள் அமைச்சுக் கொள்கைகளையும் பக்தியையும் பரப்பச் சொன்னார். இந்த எட்டு மடாதிபதிகளும் உடுபி கிருஷ்ணனை முறைப்போட்டுக் கவனிச்சுக்கணுமுன்னும் சொல்லி வச்சுருந்தார். அப்போவெல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒரு மடம் பொறுப்பெடுத்துப் பூஜைகளைச் செய்யணும் மற்ற தேவைகளையும் பார்த்துக்கணும். எதாவது ஆக்கப்பூர்வமாச் செய்யலாமுன்னா ரெண்டு மாசம்தான் என்றது ரொம்பச் சின்னது என்றதால் நம்ம வாதிராஜர் இந்த ரெண்டு மாசத்தை, ரெண்டு வருசமா மாத்தி அமைச்சார். இதுக்கு பர்யாயா (paryaya) சேவை என்ற பெயரும் கொடுத்தார்.

இந்தக் கணக்கில் ரெண்டுவருசப் பொறுப்பு முடிஞ்சதுன்னா அடுத்த 14 வருசத்துக்கு மற்ற ஏழு மடாதிபதிகளும் எட்டுத்திக்கும் சென்று த்வைதம், பக்தி எல்லாத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்து தர்மங்களை வளர்க்கணும். உடுபியைப் பொறுத்தவரை இந்த கிருஷ்ணனுக்குப் பொறுப்பேத்துக்கும் விஷயம் பெரிய திருவிழா. ஊரே அப்படி திமிலோகப்படுமாம்.


ஆங்கிலவருசக்கணக்கின்படி ரெட்டைப்படை வருசம் வரும்போது ஜனவரி 17 & 18க்கு இந்த பர்யாயா விழா நடக்குது. இந்தியா முழுவதிலும் இருந்து விருந்தினர்கள் வந்துருவாங்களாம்.

நிறைய சாஸ்த்திர சம்ப்ரதாயங்கள் இந்த விழாவில் இருக்கு. சரியா 13 மாசத்துக்கு முன்னேயே தொடங்கிருது ஏற்பாடுகள். நவகிரஹங்களைப் பூஜித்துவிட்டு, அனந்தேஸ்வரன் கோவிலுக்கும் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரர் கோவிலுக்கும் போய் வழிபட்டு, துளசிச்செடிகளையும் வாழைக்கன்னுகளையும் எடுத்துக்கிட்டுப்போய், ஏற்கெனவே தெரிஞ்செடுத்த இடத்தில் 'bபேலே முஹூர்த்' என்ற வாழைக்கன்னுகளை நட்டுவளர்க்கும் விழா.

இதுக்குப்பிறகு ரெண்டு மாசத்துலே 'அக்கி முஹூர்த்'ன்னு திருவிழாவுக்கு வேண்டிய அரிசியை கிடங்கில் கொண்டு சேர்க்கும் விழா. ஒரு முறம் அரிசியை தங்கப்பல்லக்கில் வச்சுக் கடையில் இருந்து ஸ்டோர் ரூமுக்கு ஊர்வலமாக் கொண்டு போவாங்க.

இன்னும் நாலு மாசம் ஆனதும் 'கட்டிகே முஹூர்த்'ன்னு திருவிழாவுக்குச் சமையல் செய்யத் தேவையான விறகுக்கட்டைகளைச் சேகரித்து தேர்போல அவைகளை அடுக்கும் விழா. 25 அடி உயரமுள்ள கம்பத்தைத் தேருக்கு நடுவில் கட்டிவச்சு, அதில் ஒரு மனித உருவப்பொம்மையும் வச்சுட்டு அதைச்சுற்றி விறகுக்கட்டைகளை அடுக்குவாங்க.. இந்த சீஸன்லே மழை காலமாம். வேலையில்லாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தமாதிரியும் ஆச்சு.


அப்புறம் திருவிழாவுக்கு ஒரு மாசம் இருக்கும்போது bபட்டே முஹூர்த்ன்னு தேவையான நெல்மணிகளைச் சேகரித்து வைக்கும் விழா. ஒரு முறம் நெல்மணிகளைக் ஸ்ரீ க்ருஷ்ண மடத்தில் இருந்தெடுத்துத் தங்கப்பல்லக்கில் ஊர்வலமா எடுத்துக்கிட்டுப்போய் bபடகுமாளிகெ என்ற குடோன்லே வைப்பாங்க. இப்படி வகைவகையான ஏற்பாடுகள் குறிப்பிட்ட முஹூர்த்தத்தில் நடக்கும். இது எல்லாம் முறையாக நடந்தது என்று குறிப்பிடும் விதத்தில் பட்டே முஹூர்த் நாளில் கட்டைகள் அடுக்குன தேருக்கு ஒரு கிண்ணக்கூரை போல விறகுக்கட்டைகளை செங்குத்தா நிறுத்தி டோம் அமைச்சுவைப்பாங்க.

திருவிழாவுக்கான சமையல் பாத்திரங்கள் கொடிகள் கோஷங்கள் அடங்கிய பதாகைகள் எல்லாம் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாலிருந்தே ஏற்பாடாகும். மாத்வர் தெரிஞ்செடுத்த எட்டு மடங்களுக்கும் ஆராதனை மூர்த்தியா விஷ்ணு அண்ட் கண்ணனின் பல்வேறு லீலைகளைக் குறிப்பிடும் சிலைகளே இருக்கு.

பாலிமர் மடத்துக்கு ஸ்ரீ ராமர், அடமர் மடத்துக்கு காளிங்கமர்தன க்ருஷ்ணன்( சங்கு சக்கரம் தாங்கி, நடராஜர் போல வலதுகாலைத் தூக்கி, காளிங்கன்மேல் நிற்கும் போஸ்) கிருஷ்ணபுரா மடத்துக்கும் காளிங்கமர்தனம்தான். ஆனால் போஸ் வேற! சிறுவன் கண்ணன் காளிங்கன் தலைமேல் நின்று நடனம் ஆடுவது போல்! சோதே மடத்துக்கு ஸ்ரீ பூவராஹன், புட்டிகே மடத்துக்கு ஸ்ரீ விட்டலன், சிரூர் மடத்துக்கும் ஸ்ரீ விட்டலந்தான். வெவ்வேறு போஸ். ஸ்ரீ கணியூர் மடத்துக்கு நரசிம்ஹர்,. பெஜாவர் மடத்துக்கு மறுபடி ஸ்ரீ விட்டலன். இடுப்பிலே ரெண்டுகைகளையும் வச்சுக்கிட்டு ' இப்ப என்னாங்கறே?' என்னும் போஸ்:-)

புதுசா இன்சார்ஜ் எடுத்துக்கப்போகும் மடாதிபதி, திருவிழாவுக்கு ரெண்டு மாசம் இருக்கும்போது அவருடைய யாத்திரைகளுக்குக் கிளம்பிப்போய் அவைகளை முடிச்சுக்கிட்டு விழாவுக்குச் சரியா ஒரு வாரம் இருக்கும்போது திரும்பிவந்துருவார். எல்லா மடத்திலிருந்தும் பதாகைகளைக் கொண்டுபோய் அவரை வரவேற்பார்கள். அவர்களோடு ஊர்வலமாத் தேரடி வீதிக்கு வந்து .ஸ்ரீ அனதேஸ்வரரையும் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரரையும் வணங்கி அதன் பின் ஸ்ரீ க்ருஷ்ணமடத்துக்கு வந்து 'கள்வனை' தரிசனம் பண்ணி அதன் பின் அவரோட மடத்துக்குப் போவார். இந்த விசேஷத்துக்குன்னே அவரோட மடத்தை விசேஷமா அலங்காரம் பண்ணி இருப்பாங்க(ளாம்).

ஏதோ கல்யாண வீட்டு விஷயம் மாதிரிதான் இருக்கு. மண்டபங்களில் நடக்கும் கல்யாணமானாலும், கல்யாணவீடுன்னு காமிக்க வாசலில் வாழைமரம் நட்டுப் பந்தல் போட்டு அலங்கரிக்கிறோமுல்லே! பொண்ணுக்கும் பையனுக்கும் சொந்தக்காரர்கள் வீட்டுலே விருந்துக்கு கூப்புட்டுப்போறதுபோல, மற்ற மடங்களின் தலைவர்கள் எல்லாம் இவரை ஒரோரு நாளைக்கு அழைச்சு மரியாதை செய்து விருந்து கொடுப்பாங்க.
இவரும் பதில் மரியாதையா அந்தந்த மடத்தில் இருக்கும் ஆராதனை மூர்த்திகளை வணங்கி நட்பையும் நல்லுறவையும் மேலும் செழிப்பாக்குவார். பொருளும் மனமும் நிறைந்த செல்வந்தர்கள் அவுங்கவுங்களுக்கு விருப்பமான சமாச்சாரங்களை( அரிசி மூட்டைகள், பணம், காய்கறிகள்ன்னு) ஊர்வலமாக் கொண்டுப்போய் இவருக்குக் காணிக்கையாக் கொடுத்துட்டு வருவாங்க.

சரியா ஜனவரி 16 ( திருவிழாவுக்கு முந்தைய தினம்) புதுசாப் பொறுப்பு எடுக்கப்போறவர், பதாகைகள், அலங்காரங்களோடு மற்ற மடங்களுக்குப் போய் விழாவுக்கு வந்து நடத்திக்கொடுக்கணுமுன்னு வேண்டிக்கிட்டு அழைச்சுட்டு வருவார். அன்னிக்கு ராத்திரி ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் முக்கிய ப்ராணருக்கும் ( பயந்துறாதீங்க. நம்ம அனுமன்தான்) விசேஷ பூஜைகள் நடத்தி, மறுநாள் சமையலுக்கான காய்கறிகளை நறுக்கத் தொடங்குவாங்க. பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு விருந்து சமைக்கணுமே. இப்போ வேலை ஆரம்பிச்சால்தானே நேரத்தோடு விருந்து போட முடியும்! இந்த சேவைக்கு எட்டுமடங்களில் இருந்தும் ஆட்கள் வந்து ஒன்னாச்சேர்ந்து செய்வாங்க.

ரெண்டு நாளா நடக்கப்போகும் திருவிழாவில் முதல்நாள் அன்னிக்கு பொறுப்பு ஏத்துக்க வரும் அதிபரும், விடைபெற்றுப்போகத் தயாரா நிற்கும் அதிபரும் அவுங்கவுங்க மடத்துலே இருந்து, சீர்வரிசை போல அந்த ஒரு நாளைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பா அனுப்பி வைப்பாங்க.

பொழுது விடியும்போது 'புது இன் சார்ஜ்' தண்டதீர்த்தத்தில் நீராடி, நித்திய அனுஷ்டானங்களைச் செஞ்சு முடிச்சுட்டு ஜோடுகட்டே என்ற இடத்தில் (தாலுகா ஆஃபீஸ் பக்கம்) காத்திருப்பார். (இந்த தண்ட தீர்த்தமும் ஸ்ரீ மாத்வரால் வெட்டப்பட்ட குளமாம். உடுபியில் இருந்து ஆறெழு மைல் தூரத்தில் இருக்கு. இந்தக் குளத்தில் இருந்து தன்னுடைய குருவின் வயலுக்கு நீர் பாய்ச்ச, ஸ்ரீ மாத்வர் அவர் கையில் உள்ள உள்ள தடியால் கோடு போட்டு ஒரு வாய்க்காலை வெட்டினார். அதனால் இதுக்கு தண்ட தீர்த்தமுன்னு பெயர்) அதே சமயம் மற்ற ஆறு மடங்களின் அதிபர்களும் அவுங்கவுங்க பல்லக்கில் வந்து விடைபெறப்போகும் அதிபருக்குக் காத்திருப்பாங்க(ளாம்)


இங்கிருந்துதான் பேரணி ஆரம்பிக்கும். முதலில் தங்கப்பல்லக்கில் புது இன்சார்ஜின் ஆராதனா மூர்த்தி ஜாம்ஜாமுன்னு அலங்கரிக்கப்பட்டு எல்லாருக்கும் சேவை சாதிச்சுக்கிட்டுப் போக, கூடவே பின்னால் வருவார் புது இன்சார்ஜ்.. இவருக்குப்பின்னால் மற்ற மடாதிபதிகள் சீனியாரிட்டி வரிசைப்படி பின் தொடர்ந்து போவாங்க.

ஊர்வலத்தில் புராண, இதிகாசக் காட்சிகள் உள்ள அலங்கார வண்டிகள் ஊர்ந்து போகும். எள் போட்டால் எண்ணெயாத்தான் ஆகும் என்றமாதிரி ஜனத்திரள் அப்படியே அம்முமாம். தேரடி வீதிக்கு வந்தவுடன், பல்லக்கில் இருந்து இறங்கும் மடாதிபதிகள், தெரு முழுசும் விரிக்கப்பட்டுள்ள புதுத் துணிகளின் மேல் நடந்து நாலுவீதிகளையும் வலம்வந்து ஸ்ரீ கிருஷ்ணமடத்துக் கோபுரத்தினடியில் உள்ள கனகதாஸா ஜன்னலின் வழியாக க்ருஷ்ணனைத் தரிசனம் செய்வாங்க.

புது இன்சார்ஜ், ஸ்ரீ அனந்தேஸ்வரரையும் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரரையும் சேவிச்சு நவகிரஹ தானம்(?) செஞ்சுட்டு மற்ற மடாதிபதிகளுடன் சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணமடத்து வாசலுக்குப் போவார். அங்கே விடைபெறப்போகும் மடாதிபதி, இவர்களை எதிர்கொண்டழைச்சு, இன்சார்ஜ் எடுக்கப்போறவரைக் கைபிடிச்சு, ஸ்ரீ மாத்வஸரோவருக்குக் கூட்டிட்டுப்போவார். அங்கே கைகால் எல்லாம் கழுவி சுத்தம் செஞ்சபிறகு ஸ்ரீகிருஷ்ணமடத்துக்குள்ளே போவாங்க. கண்ணனுக்கு எதிரில் இருக்கும் நேயுடு சந்நிதியில் பூஜைகள் செஞ்சுட்டு, வலப்புறம் திண்ணைமேல் இருக்கும் ஸ்ரீ மாத்வர் அறையில் இருக்கும் ஆஸனத்தில் (மாத்வரின் சிம்மாஸனம்) கொஞ்சநேரம் அமர்ந்திருப்பார்.

இதுக்குள்ளே மற்ற மடாதிபதிகள் படகுமாளிகே ( ஸ்டோர் ரூம்)வுக்குப் போய் இவுங்களுக்காக விசேஷமா அரிசிப்பொரியால் அமைச்சுருக்கும் ஆஸனத்தில் இருப்பாங்க. சந்தனம், பன்னீர், பூமாலைகள் எல்லாம் போட்டு மரியாதைகள் நடக்கும். இதெல்லாம் ஆனதும் ராஜாங்கணம் என்னும் பெரிய ஹாலுக்கு ( இங்கேதான் ஹனுமன் ஜெயந்திக்கு விருந்து நடந்துச்சு. பதிவில் படம் போட்டிருந்தேன்) எல்லாரும் வருவாங்க. விழாவுக்கு அதிகாரபூர்வமா அழைக்கப்பட்ட முக்கிய விருந்தினர்கள் எல்லோரும் இங்கேதான் உக்காரவைக்கப்பட்டிருப்பாங்க.


எல்லோருக்கும் மாலைகள் மரியாதைகள். வரவேற்பு, பேச்சுகள் எல்லாம் ஆனபிறகு புது நிர்வாகத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் யார் யார் என்ற விவரம் எல்லாம் சொல்லி, அவுங்களை அறிமுகப்படுத்துவாங்க. 'பட்டேகாணிக்கே' புதியவருக்கு அன்பளிப்புகள் எல்லாம் (மொய்?) ஆனபிறகு, ஸ்ரீ க்ருஷ்ணனின் சந்நிதிக்குப்போய் அந்த 'நவத்வார ஜன்னல்' வழியா நமஸ்கரிச்சு, மறுபடி ஸ்ரீ மாத்வர் அறைக்குப்போய்ச் சேருவாங்க.
விடைபெறுபவர், புதிய இன் சார்ஜுக்கு க்ருஷ்ணனின் சந்நிதி ( கர்ப்ப கிரஹம்/ கர்ப்பே gகுடி) சாவியையும் அக்ஷ்யபாத்திரத்தையும்( சிம்பாலிக்கா எல்லோருக்கும் சோறு போடச் சொல்றது போல) ஒப்படைப்பார். பழையவர் வேலை இத்தோடு முடிஞ்சது. மற்ற மடாதிபதிகள் எல்லோரும் ஊர்வலமா இவரோடு , இவர் சார்ந்த மடத்துக்குப்போய் அவரை விட்டுட்டு விடை பெற்றுக்குவாங்க. (ஹ்ஹா................. மூச்சு வாங்குது எழுதும்போதே!) ஸ்ரீ வாதிராஜர்தான் இந்த முறைகளையெல்லாம் சொல்லி ஏற்பாடு செஞ்சுட்டுப் போயிருக்கார். அதை நியமம் தவறாமல் இன்றுவரை பின்பற்றி வர்றாங்க.

நல்லவேளை எல்லா மடம் இங்களுந்த நாலுவீதிகளிலேயே இருப்பதால் ரொம்ப இங்கே அங்கேன்னு அலையவேணாம்!

ஸ்ரீ க்ருஷ்ணனின் சந்நிதியில் தினசரி வழக்கம்போல் இனி எல்லாம் நடக்க ஆரம்பிச்சுரும். அன்னிக்கு இரவு ஸ்ரீ மாத்வஸரோவரில் தெப்போற்சவம் நடக்கும். மறுநாளும் புதியவர் பங்கேற்கும் பல்வேறு பூஜைகள், சந்திப்புகள் எல்லாம் நடக்கும். இனி அவருடைய ஆட்சிதான் ரெண்டு வருசத்துக்கு. ரெண்டு வருசமுன்னு சொன்னாலும் 11 மாசம் முடியும்போதேதான் அடுத்த ஏற்பாடுகள் ஆரம்பமாகிருதே! கோவிலை நல்லமுறையில் நடத்தி, பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் கவனிச்சு யாருக்கும் ஒரு குறையும் வராமல் ஆட்சி செய்ய வேண்டியது இனி இவர் பொறுப்பு.
இந்த வருசம் (2010) புதுசா இந்தப் பதவிக்கு வந்தவர் ஸ்ரீர் சிரூர் மடத்து அதிபதி ஸ்ரீ லக்ஷ்மிவரா தீர்த்தர் 46 வயசானவர். 1964 இல் ஜனனம். ஏழு வயசில் (1971) சந்நியாஸம். ரொம்பச் சின்ன வயசிலேயே மடாதிபதியா ஆகும் வாய்ப்பு வந்துருச்சு. ஸ்ரீ சிரூர் மடத்தின் முப்பதாவது அதிபதி 1978 முதல் 1980 வரை இவர் பர்யாயா ஸ்வாமியாக, க்ருஷ்ணனுக்கு இன் சார்ஜா இருந்துருக்கார். அப்ப இவருக்கு வெறும் 14 வயசுதான்! தன் ஆட்சியில் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மஹாமண்டபத்தைப் புதுப்பித்துப் ப்ரமாண்டமாக் கட்டியவர் இவர். கலை, கலாச்சாரம் பண்பாடு, இலக்கியம் இப்படி எல்லா நல்ல விஷயங்களிலும் ரொம்ப ஈடுபாடு உடையவர். காலத்துக்கேத்தமாதிரி நவீன முறைகளைக் கடைப்பிடிக்கத் தயங்காதவராம். 32000, பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு பகலுணவு கிடைக்கும்படி ஏர்பாடு பண்ணி இருக்கார். ஸ்ரீ கிருஷ்ண சரிதம் என்ற பெயரில் ஒரு சிற்ப மாளிகை உண்டாக்கி, அதை உடுபி ஸ்ரீ கிருஷ்ணனுக்கு காணிக்கையாத் தந்துருக்கார். இவர் பர்யாயா ஸ்வாமிகளா இருப்பது மூணாம் முறை. இந்த முறை (2010-2012) வேறு என்னென்ன புதுமைகள் வரப்போகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கணும்.
நன்றி: உடுபி ஸ்ரீ க்ருஷ்ணமடத்தில் இருந்து வாங்கிய புத்தகத்தில் (official guide)இருந்து வாசித்தவைகளை இங்கே எனக்குத் தெரிந்தவரையில், நான் புரிந்துகொண்டவகையில் மொழி பெயர்த்து இருக்கேன். எதாவது தவறான தகவல் இருப்பின் அது என்னுடைய குற்றமே.