Friday, January 01, 2010

அட! சொல்லவே இல்லை!!!

புதுவருசத்தைப் 'புக் ஃபேரில்' இருந்து ஆரம்பிக்கலாம். நம்ம பதிவர்கள் பதிப்பகம் வச்சுருக்காங்கன்னு அங்கே போனதும்தான் தெரிஞ்சது. அஞ்சு ரூபாய் நுழைவுச்சீட்டு. புதிய தலைமுறை,கண்களில் இருந்து தப்பவே முடியாதபடி அமர்க்களமா விளம்பரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.
கடைசியில் இருந்து ஆரம்பிச்சோம். விஸ்தாரமான இடம். பார்க்கிங் மோசமில்லை. தெருவிலிருந்து உள்ளே போகும் வழியெல்லாம் தோரண வாயில்கள் சிலபல. பாதையின் ரெண்டு பக்கத்திலும் பதிப்பகங்கள் அவுங்க புத்தகங்களை விளம்பரப்படுத்தி பேனர் வச்சுருக்காங்க. எல்லாமே ஒரே அளவுலே என்பதால் கண் உறுத்தாமல் இருந்துச்சு.
சில ஸ்டால்களைத் தவிர்த்து பல இடங்களில் குறைஞ்சது ரெண்டு பேராவது புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரிசையின் கடைசியில் ஒரு ஜூஸ் ஸ்டால். நல்லது! அதேபோல கூடாரத்தின் மறுகோடியில் குடிநீர் விற்பனை. இதெல்லாம் இல்லாமல் எக்கச்சக்கமா பபுள் ரீ ஃபில் கேன்கள் ஒரு பக்கம்.

பெரிய நிறுவனங்கள் ரெண்டு வாசலும் திறந்து வச்சுருக்கு. அப்படியே நுழைஞ்சு அடுத்த தெருவுக்குப் போயிறலாம்!!!
தெருவில் வரிசைக்கு நடுவில் இருக்கும் குறுக்குச் சந்துபோல் இங்கேயும் இடம் விட்டுருக்காங்க. நல்லாத்தான் இருக்கு குறுக்குத்தெரு.

மலையாள மனோரமா, விசாலாந்திரா ன்னு மலையாளம் தெலுகு ஸ்டால்கள். இன்னும் ஹிந்திக்கு ரெண்டும் சமஸ்கிரதப் புத்தகங்களுக்கும் ஒன்னும் கூட இருக்கு.

மக்கள் தொலைக்காட்சி, பொதிகையும் துண்டு போட்டு இடம் பிடிச்சு வந்துருக்கு. பொதிகையில் நல்ல கலெக்ஷன்ஸ் வச்சுருக்காங்க.

இன்னிக்குச் சும்மாப்பார்க்கணும். இன்னொருநாள் நிதானமா வந்து வாங்கணுமுன்னு தான் திட்டம் 'தீட்டி' இருந்தேன். ஆனால்.....கோபால் வேணுமுன்னா வாங்கிக்கோன்னு பர்ஸை வெளியில் அப்பப்ப எடுத்ததால் ஒன்னு ரெண்டுன்னு கொஞ்சம் வாங்கினேன்.
கிழக்கில் கூட்டம் அம்முது. எனக்கும் ஒரு 'அடியாள் '

காலச்சுவடில் 'ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள்'.


உணவுக்குன்னே ஒரு ஸ்டால். எனக்கென்னமோ...ஒரு சிலர் நினைவு வந்தது:-))) சாப்பிடாமல் பதிவு எல்லாம் எழுத முடியுமா? யோகா, சமையல் ஆன்மீகம்ன்னு எக்கச்சக்கம். கணினி சம்பந்தமா ஒரு ஏழெட்டு.

கார்ப்பரேட் சாமியார்களின் 'கடைகள்' அமோகப் பளபளப்பில்.

நாலைஞ்சு நிறுவனங்கள் வீதிக்கு ஒன்னா நாலைஞ்சு வீடுகள் வச்சுருக்கு!


இஸ்கானில் கண்ணன்லீலைகள் பாலர் படப்புத்தகம் கிடைச்சது. படங்கள் அருமை. சின்னப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லணுமுன்னு ஆசை. நியூஸி போனதும் பிள்ளைகளைத் தேடணும். ஒரே கண்டிஷன் 7 வயசுக்குள்ளே இருக்கணும். அப்பத்தான் ஏன்னு கேக்காது:-)))) போர்ட் புக் இருக்குமான்னு தேடினேன். கிடைக்கலை.
தெரிஞ்சமுகங்கள் ஒன்னும் கண்ணுக்குத் தெம்படலை. கடைசியில் வெறுத்துப்போனபோது ஞாநியைப் பார்த்தேன். நாலாம்தேதி புதுப்புத்தகம் ஒன்னு வருதாம். 'என் வாழ்க்கை என் கையில்'னு சொன்னார். ஆமாமாம்.

அம்புலிமாமா இளைச்சுக்கிடந்தார். யாரோ மும்பைப் பார்ட்டி நடத்துறாங்களாம் இப்போ. மராத்தி, ஹிந்தி, தெலுகு விற்பனை நல்லாவே இருக்காம். ஆனால்...தமிழ்தான்.....புள்ளைங்க அவ்வளவா.... சரி. விடுங்க. புதுவருசம், நல்ல நாளு. புலம்பலை இன்னொருநாள் வச்சுக்கலாமே
108 வருசம் கழிச்சுப் பொங்கலுக்குக் கங்கண கிரகணம் வருதாம். நம்ம கண்ணு கெட்டுறக்கூடாதே என்ற கவலையில் சீனாக்காரன் பத்தியமாச் செஞ்சு அனுப்புன கண்ணாடி. 20 ரூபா.

நாங்கள் போனபோது பகல் மணி மூணு. பரவாயில்லாமல் நல்ல கூட்டம்தான்.

மொத்தம் 466 ஸ்டால்களுக்கான இடங்கள். இதுலே ரெவ்வெண்டு வீட்டை பலர் எடுத்துருந்தாங்க.பெரிய குடும்பமுன்னா இடம் வேணும்தானே?
செக்யூரிட்டி! கண்காட்சி நடப்பைக் கேமெராவால் கவனிக்கிறாங்க.


வசதிகள் பரவாயில்லை. நாலைஞ்சு இடத்தில் க்ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி செஞ்சு வச்சுருந்தாங்க. பாக்கெட்டில் பணம் தீர்ந்து போச்சுன்னு சால்ஜாப்பு சொல்ல முடியாது:-)
சிவசங்கரிக்கருகில் யாருன்னு ஒரே குழப்பம்! விசாரிச்சேன். சுதா சேஷன். ஆடியோ புக். எம்பி3யாம். தன்னம்பிக்கை தருவாங்களாம்.


ஏற்பாடுகளைப் பார்த்தால் எல்லாம் பக்கவா அமைஞ்சுருக்கு. 33 வருச அனுபவங்கள். லைட்வெளிச்சம் நல்லாவே இருக்கு. அங்கங்கே மின்விசிறிகள் சுழன்றாலும் வேர்க்கும் அளவுக்குச் சூடாவே இருக்கு. ஃப்ரெஷ் காற்று உள்ளெ வர அவ்வளவா ஏற்பாடில்லை போல!
ஷுகர் செக்கப்

வெளியில் சிரிச்சுக்கிட்டே வாங்க சீனி இருக்கான்னு சொல்றோம்னு ஒரு இலவச சேவை. அதுக்கு எதிரில் ரத்தவங்கி. ஆம்புலன்ஸ் ஒன்னு நின்னது. அட்டகாசமா இருக்கு டிஸைன்.
மாலை நிகழ்ச்சிகளுக்கு மேடையும் எதிரில் இருக்கைவசதிகளும் நல்லாவே இருக்கு. இன்னிக்கு இறையன்பு நடத்தும் பட்டிமன்றமாம்.
கைமுறுக்கை அடுக்கிவச்ச அழகும். தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலும்


ரெண்டு வருசத்துக்கு முன்னே இருந்ததைவிட இப்ப நல்ல முன்னேற்றம் தெரியுது. எது? சுண்டலான்னு கேக்கப்பிடாது.ஆமாம். நாம இப்போ புத்தகத் திருவிழாவைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம்.


நம்ம புதுகைத் தென்றலும் பரிசிலும் போட்டுருக்கும் ஸ்டால்களைப் பார்த்தேன்.

அட! சொல்லவேயில்லை!!!!

Thursday, December 31, 2009

சிம்மராசியும் ஜீஸஸ் க்றைஸ்ட்டும், கன்னிமரியாளும் க்ருஷ்ண லீலையும்

'அங்கே' இருந்துருந்தா இந்த ஒரு மாசமா தினமொன்னு கிறிஸ்மஸ் பார்ட்டிகளுக்குப் போயிருப்பேன். வேணாமுன்னாலும் விடமுடியுதா? என்னமோ போன்னு ஒரு சிறு சலிப்போடு(?) புதுசா ஒரு பொடவையோ, இல்லை பஞ்சாபியோ(!! ஆரம்பகாலத்துலே பஞ்சாபிஸூட்ன்னுதான் பெயராக்கும்) போட்டுக்கிட்டுப் போவேன். வந்திருக்கவுங்க எல்லோரும், மெய்யாவோ பொய்யாவோ வந்து நம்ம உடையைப் பாராட்டிட்டுப் போவாங்க. இதைவிட்டா நமக்கு(ம்) சான்ஸ் ஏது பாராட்டு(??) மழையில் நனைய!

'இங்கே' எல்லாம் ஓசைப்படாமல் நடக்குது . கொறைஞ்சபட்சம் ஒரு சர்ச்சுக்குப் போய்வரணுமுன்னு நினைச்சது(ம்) மறந்தே போச்சு வேறொரு கொண்டாட்டத்துலே முழுகிட்டதால்.

ஒரு இசைநிகழ்ச்சிக்குப்போயிட்டு வரும்வழியில் கோபாலுக்கு ஒரே கழுத்துவலி (அவ்வளவாத் தலையைக்கூட ஆட்டலையே!!!! இன்னிக்கு அங்கே நானும் ரொம்பக் கொஞ்சமாத்தானே பேசினேன். ) உடம்பு சரியில்லைன்னா இவருக்கு ஏற்ற சிகிச்சை ஒன்னு இருக்கு. பாதி இல்லே முக்கால்வாசி வியாதிகள் இவருக்கு டாக்குட்டர் முகத்தைப் பார்த்ததும் போயிரும்.. மலர் ஹாஸ்பிடலுக்கான்னு கேட்டேன். வீட்டுப் பத்திரத்தை நியூஸியில் விட்டுட்டுவந்த கவலை எனக்கு! ம்ம்ம்ன்னு என்னவோ சொல்ல ஆரம்பிச்சவர், சாதாரண டாக்டர் கிடைச்சால் போதுன்னார். ( இவருக்காகவே நானும் எப்படியாவது டாக்குட்டர் ஆகிறனுமுன்னு முயற்சி செஞ்சு முதல் கட்டமா ஒரு ஸ்டெத் வாங்கி வச்சுருக்கேன். இனி எதாவது ஒரு பல்கலைக் கழகம் இங்கே டாக்குட்டர் தந்தா வாங்கிக்கிட்டுப் போகணும். மக்கா...என்ன விலை என்ன விவரமுன்னு தெரிஞ்சவுங்க சொல்லுங்க)

நம்ம டிரைவர்கிட்டே எங்கியாவது டாக்டர் பார்த்தா நிறுத்துங்கன்னு சொல்லி வாய் மூடலை ஒரு டாக்டர் போர்டு கிடைச்சுருச்சு. எதிரும்புதிருமாப் போட்டுருந்த ரெண்டு நீள பெஞ்சில் போய் உக்கார்ந்தோம். நாலுக்கு எட்டுன்னு ஒரு அறை. ஒரு மேசைமேல் துளி இடம் இல்லாம விதவிதமான ப்ளாஸ்டிக் டப்பாக்கள். எனக்கென்னமோ சட்னு பான்பராக் விற்பவர்தான் நினைவுக்கு வந்தார். காத்துருந்தவங்க அவுங்களே யாருக்குபின் யார்ன்னு வரிசைப்படுத்திக்கிட்டு உள்ளே ( நான் இருந்த இடத்திலிருந்து ரெண்டு எட்டு) போவதும், அங்கே இருந்த ப்ளாஸ்டிக் ஸ்டூலில் உக்காருவதுமா.... ஒரு ஊசி, நாலு வார்த்தை, காசு கைமாறுவது.

ரொம்ப வருசங்களுக்குமுன்னே நாங்க கேரளாவில் இருந்தப்போ, இவருக்கு மூக்கில் புண். (சிகரெட்டை ஞாபகமறதியா தீ இருக்கும் பக்கம் மூக்கருகில் வச்சுச் சுட்டுக்கிட்டாரோ? அப்பெல்லாம் புகைவலி பழக்கம் வேற.அதை ஒழிக்க நான் பட்டபாடு..... அப்புறம் கதைகள் 1500 இல் சொல்லலாம்) கடைவீதிக்குப் போகும்போது அங்கே இருந்த ஒரு மருந்துக்கடையில் போய் நின்னோம்.

"எந்தா?"

'ம்ஹூக்குலே ஹுண்ணு"

ஏறிட்டுப் பார்த்தக் கடைக்காரர், ரெண்டு மாத்திரைகளைக் கொடுத்து

" இந்தா இது கழிச்சோ. ....ரண்டு ருபெ"

இந்தச் சம்பவம் இப்போ ரெண்டுபேருக்கும் ஒரே சமயத்தில் நினைவுக்கு வந்து.. புன்முறுவல். ஓசைப்படாமல் அவர் 'ம்ஹூக்குலே ஹுண்ணு' ஜாடையில் சொல்ல நான் 'ரண்டு ருபெ' :-))))

(சும்மாவா சொன்னான் சீயக்காப்பொடி!! (இதுவும் 1500 இல் பார்க்கலாம்)

எங்கள் முறை வந்ததும் மேசையின் அருகில் நின்னு பார்த்தேன். என் கவலையெல்லாம் சிரிஞ்சி பற்றித்தான். மேசையின் அடுத்த ஓரத்தில் சின்னக் குன்றாய் பயன்படுத்திய சிரிஞ்சிகள். நோய் விசாரணை ஆச்சு. ஹெட் கோல்ட் இருப்பதால் வந்த வலி(யாம். இதைத்தானே ரெண்டுநாளா நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்) ஊசி போட்டுக்குங்கன்னு புதுசா ஒரு சிரிஞ்சி எடுத்தார். அப்பாடா..... கூடவே 3, 2 ன்னு ரெண்டுவகை மாத்திரைகள். முப்பது ரூபாய்கள். (உடனே மகளுக்கு விவரம் சொல்லணுமுன்னு துடிப்பா இருந்தேன். டெலிபதி:கெஸ் வாட்? வாட்? டாட் இஸ் ஸிக். ஓ நோ... பீன் டு தெ டாக்.? எஸ். டூ யூ நோ ஹௌமச் ஹீ சார்ஜ்ட்? நோ ஐடியா.... அ டாலர். வாவ்)


வெளியே வந்து காரை நோக்கிப்போகையில் அங்கே, தெருமுனையில் நேடிவிட்டி ஸீன் வச்சுருந்தாங்க. நின்னு படம் எடுத்தேன். இந்த மீனை எடுங்க ன்னு சிலர் வந்து நின்னாங்க. எல்லோரும் ஆட்டோக்காரர்கள். டொம்னிக், லூர்த்ராஜ், சாரதி, பாஸ்கர், செல்வம், சரவணண், சதீஷ், வின்செண்ட்ன்னு இந்த ஆட்டோ ஸ்டாண்டுக்காரர்கள். எல்லோருமா சேர்ந்து பணம் போட்டு இந்த அலங்காரம் செஞ்சு வச்சுருக்காங்க.. மூவாயிரம் செலவாச்சாம். இப்படிக் கொண்டாடுவதைப் போனவருசம் ஆரம்பிச்சாங்களாம். இதோ..இது ரெண்டாம் வருசம். மைலாப்பூர் டைம்ஸில் இந்த விவரம் வந்துருக்குன்னு அங்கே அந்த பேப்பர் கட்டிங்கை நோட்டீஸ் போர்டில் ஒட்டிவச்சுருக்காங்க. இந்த ஆட்டோஸ்டேண்டுக்குப் பெயர் இருக்கான்னு கேட்டேன். இருக்காம். 'சிம்மராசி சரத்குமார் ஆட்டோ ஸ்டேண்ட்..' ரொம்ப ஆர்வமா அந்த மீன்தொட்டியை விவரிச்சுக்கிட்டு இருந்தாங்க. கிறிஸ்மஸுக்கும் மீனுக்கும் தொடர்பு என்னன்னு ஆராயணும். ஒருவேளை வானத்தில் விண்மீன் தோன்றியது என்பதை.......

கோபாலுக்கு நோய் முக்கால்வாசி குணமாகி முகம் தெளிஞ்சுருச்சு. அதான் டாக்குட்டரைப் பார்த்தாச்சே!
கிளம்புமுன் ஒரே ஒரு 'கருத்து'ச் சொன்னேன். "அப்ப ஆட்டோக்காரங்களில் நல்லவங்க(ளும்) இருக்காங்க"

"என்ன மேடம் இப்படிச் சொல்லீட்டீங்க?"

"இல்லையா பின்னே. உங்களுக்குன்னு ஒரு 'பேட் ரெப்யூட்டேஷன்' இருக்கேப்பா."
"அப்படி இல்லை மேடம். ஏர்ப்போர்ட், செண்ட்ரல் இந்த ரெண்டு இடத்துலே இருக்கறவங்கதான் தகராறு செய்வாங்க. அதாலேதான் மொத்தப்பேருக்கும்......"

இந்த ஆட்டோக்களைப் பற்றிய ஒரு விஷயம் ஹிந்துவில் காணக்கிடைச்சது. சென்னையில் மட்டும் 48,350 ஆட்டோகள் ஓடுதாம். ஆட்டோகளின் எண்ணிக்கையைக் கண்ட்ரோல் செய்யறதுக்கு பர்மிட் முறை வந்துருக்கு வயசு 23 முதல் 45 வரைக்குள்ளே இருக்கணும். கொறைஞ்சது எட்டாங்கிளாஸ் படிச்சுருக்கணும். 375 ரூபாய் கட்டணம் கட்டணும் பர்மிட் விண்ணப்பத்துக்கு. இவை அரசாங்கம் நியமிச்ச விதிகள்.
இப்போ 20 வருசமா. பர்மிட் வந்ததும் அதோட அக்காவும் கூடவே வந்து சேர்ந்துக்கிடணுமில்லை. ஊஊஊஊழல். இந்த முன்னூத்தி எழுபத்தியஞ்சு வீங்கிப்போய் இப்போ மார்கெட் ரேட், 85000தானாம்! வண்டி வாங்கும் காசு தனி. சொந்தமா வண்டியும் பர்மிட்டும் சேர்த்து வாங்க்கணுமுன்னா செலவு கொஞ்சமே கொஞ்சம்தான். வெறும் ரெண்டேகால் லட்சம்!!!

சாதாரண ஆட்டோ ஒட்டிகளுக்கு இவ்வளோ ஐவேஜ் ஏது? வட்டிக்கு விடும் ஆட்கள் வேறெத்துக்கு இருக்காங்க? 12 சதமானம் கூட்டு வட்டி. மாசத்தவணை அஞ்சு இல்லை ஆறாயிரம் வரை ஆகுமாம். இதுக்குமே தினம் 200 எடுத்து வைக்கணும். பெட்ரோல் செலவு வேற இருக்கு. சங்கிலியைப் புடிச்சுக்கிட்டேப் போய்க் கடைசியில் பார்த்தால் காசு தின்னும் மக்கள் ....... ஃபைனான்சியர்களும் பர்மிட் வச்சுருக்கும் ஆட்டோ ஓனர்களும். இந்த ஓனர்களில் பலர் *** துறையைச் சேர்ந்த அரசு ஊழியர்(??)கள். இதைப் பத்தி இன்னும் கொஞ்சம்விவரம் இருக்கு. வேறொருநாள் பார்ப்போம்.
எப்படியோ மத நல்லிணக்கம் இருக்குன்னு மகிழ்ச்சியோடு ரெண்டு நாளுக்கு முன்னே அன்னை வேளாங்கண்ணி கோவிலுக்குப் போனால்....அங்கே இவுங்களை மிஞ்சும்வகையில் இன்னொரு விஷயம் பார்த்தேன். கோவிலின் வலதுபக்கம் தனி மண்டபத்தில் மாதா, அந்தப் பால்க்காரச் சிறுவனுக்குக் காட்சி கொடுத்த சிற்பம் வச்சுருக்காங்க. அங்கே இருக்கும் இரண்டு மாதா சிலைகளுக்கு மக்கள் நேர்ந்துக்கிட்டு புடவை சாத்தறாங்க. புதுப்புடவைகளை மாற்றி மாற்றிக் கட்டிக்கிட்டே இருக்காங்க. அவ்வளோ வந்து குவியுது. குழந்தை வரம் வேண்டி தொட்டில் வாங்கி அங்கே கம்பியில் தொங்கவிடுவதும் ஒரு பிரார்த்தனையா இருக்கு. தொட்டில்களில் குழந்தைக் கண்ணன் இருக்கான். கோபால் சுட்டிக் காமிச்சவுடன், நோ ச்சான்ஸ்ன்னு சொல்லிக்கிட்டே எக்கிப் பார்த்தால் நெற்றியிலே திருமண்ணோடுத் தவழும் க்ருஷ்ணாப் பாப்பா.



அதே இடத்தில் கீழ் வரிசையில் ஒரு சங்கிலியில் பூட்டுகளாத் தொங்கவிட்டுருக்காங்க. இது என்னவகை பிரார்த்தனைன்னு தெரியலை. மெழுகுவத்தி ஏற்றும் இடத்தில் நம்ம ஆள் இருக்கார்.

இங்கேயும் நேட்டிவிட்டி ஸீன்ஸ் ரெண்டு இடத்துலே இருக்கு. அந்த பெரிய வளாகத்துலே இயேசுவின் சரிதை முழுசும் பத்துப்பனிரெண்டு ஸீன்களாக் காட்சியாகக் கண்ணாடிக்கூண்டுலே இருக்கு. அதையெல்லாம் அன்னிக்குத்தான் பார்த்தேன்.



எல்லாமே ஒன்னு. அப்படித்தான் இருக்கணும். இருக்கு.

இதுதான் கடைசிப் பதிவு இந்த வருசத்துக்கு.

அனைவருக்கும் ஆங்கிலப் (??) புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Wednesday, December 30, 2009

11க்கும் 12க்கும் இடையில்

"ராத்திரியெல்லாம் தூங்காம இருப்போம்"

"ஓ...ஸ்லீப் ஓவரா? நாங்களும் தூங்கவே மாட்டோம்."

"கண் முழிக்கறதுக்காகவே சினிமாவெல்லாம் போயிருக்கோம்."

"நாங்களும்தான் நாலைஞ்சு டிவிடி வாங்கிவந்து போட்டுப் பாப்போம்."

"சாமிப் படமா இருக்கணுமுன்னு கண்டிஷன் இருக்கு."

"எங்களுக்கு ரொம்ப ஸ்கேரியா இருக்கணும்."

"தூக்கம் வராம இருக்க தாயம், பல்லாங்குழி, பரமபதம் எல்லாம் விளையாடுவோம்."

"நாங்களும்தான் டைஸ் வச்சு மோனோப்லி, ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ் விளையாடுவோம்."

"ஹாஹா... அந்த ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்தான் பரமபதம். அப்பாடி இது ஒன்னாவது, ஒண்ணா இருக்கே!"

"ஆனா ...மறுநாள் வீட்டுக்கு வந்துட்டு நீங்கெல்லாம் நல்லாத் தூங்குவீங்கல்லே...நாங்க அப்படியில்லை. மறுநாளும் பகலில் தூங்கவே கூடாது. நல்ல அருமையான சாப்பாடெல்லாம் செய்வாங்க. ஒரு பிடி பிடிச்சுட்டு அப்படியே கண் இழுத்துக்கிட்டுப் போகும்போது தூங்குனா பலன் இல்லையாம். அதுக்காக பிக்னிக் போறமாதிரி பக்கத்தூர் கோவிலுக்குப் போய் வருவோம். அதுவும் நடந்து போவோம். அப்பெல்லாம் ஆட்டோ, டாக்சி எல்லாம் இல்லை. பஸ் பிடிச்சுப் போகணும். பாட்டி சொல்வாங்க போறப்ப ஜாலியாப் பேசிக்கிட்டே நடந்து போகலாம். திரும்பி வரும்போது பஸ் எடுக்கலாமுன்னு. அன்னிக்கு சாயந்திரம் விளக்கு வச்சபிறகு சாமி கும்பிட்டுட்டு எதையாவது லைட்டாத் தின்னுட்டு வீ ஸ்லீப் லைக் லாக்(g)ஸ்."

வைகுண்ட ஏகாதசியைப் பத்தி ஒரு சமயம் மகளோடு பேசுனதெல்லாம் நினைவுக்கு வந்துச்சு.

இந்த சொர்க்கவாசல் சொர்க்கவாசல்ன்னு சொல்ற சமாச்சாரத்தை இதுவரை வாழ்நாளில் ஒருமுறைகூட வைகுண்ட ஏகாதசிக்குப் பார்த்ததே இல்லை. அதுவே மனசுலே ஒரு குறையா இருந்துச்சு. இந்த முறை இந்தியாவில் அதுவும் சென்னையில் இருக்கோம். நம்ம(??)கோவிலிலேயே பார்த்துடலாமுன்னு பக்காவா ப்ளான் வச்சுருந்தேன். சாமிக்குப் பிடிக்கலை. காய்ச்சல், இருமல்ன்னு வந்து கொஞ்சம் படுத்தல். போயிட்டுப்போகுது. டிவியிலே லைவா காமிப்பாங்களாமே. மூணுமணிக்கு எழுந்து பார்க்கணும்.


மூணடிக்க ரெண்டு நிமிசம் இருக்கும்போது கோபால் வந்து எழுப்புனார். அவருக்கு இருமல் கூடுதல். தூங்கவே இல்லையாம். நான் எழுந்து சாமிரூம் லைட்டைப் போட்டுக் கும்பிட்டுக்கிட்டு, அங்கிருந்து கண்ணை மூடிக்கிட்டே டிவி இருக்கும் ஹாலுக்குப் போனேன்,விஷுக்கணி பார்க்கும் நினைவில். கண்ணைத் திறந்தால்.... சிம்புவும் ஜோதிகாவும் ஆடிக்கிட்டு இருக்காங்க. ஜெயா போடாம எதுக்குக் கண்ட கண்றாவிகளைப் பார்க்க வைக்கிறீங்கன்னு ஒரு பாய்ச்சல். . அது ஜெயாதானாம். இன்னும் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கலையாம். பாவம் கோபால். த்சு த்சு.

சிம்ரன், பிரசாந்த் , அப்புறம் இன்னொரு ஜோடின்னு ஆடி முடிச்சு ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் திரைக்கு வந்துச்சு. குரல் கொடுக்கறவர்வேற விசித்திரமாப் பேசறார். ஸ்ரீஈஈஈஈஈஈ ரங்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், கோஓஓஓஓஓஓஓவிலில் இருந்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

நம்மாழ்வார்ன்னு எங்கியோ கேக்குது. கண் அப்படியே இழுத்துக்கிட்டுப்போய் நான்...........சோஃபாவில் உக்காந்து தூங்கியிருக்கேன். கண் விழிச்சால் கழுத்துவலியான வலி. டிவியிலே என்னவோ மசமசன்ன்னு ஓடுது....சாமி போல! இனி தாங்காது....... படுக்கையில் வந்து விழுந்தேன்.


ஒரே தன்னிரக்கமா இருக்கு. அட ராமா! இப்படிக் கிடைச்ச வாய்ப்பையெல்லாம் கோட்டைவிட்டுட்டேனே. இனி எப்ப வைகுண்ட ஏகாதசிக்கு இங்கே வரப்போறோம்? இன்னிக்கு முழுக்கக் கோவிலில் 'அந்த' சொர்க்கவாசல் திறந்துருக்குமாம். கோவிலிலும் நடை அடைப்பு இல்லையாம். மூணுமணிக்கே புறப்பட்டுக் கோவிலுக்குப்போனால்.....(இது பகல் மூணு) அந்தப் பேட்டையே உருமாறிக்கிடக்கு. சவுக்கு மரக் கட்டைகளைவச்சுப் புதுசு புதுசா வரிசையில் வர ஒரு ஏற்பாடு. வாகனப் போக்குவரத்து இல்லை. கூட்டம் நெரியுது. கோவில் வாசல் மட்டும் காலி. கேட்டுக்குள் நுழையப்போகும்போது.....

''அம்பது ரூபாய் டிக்கெட்டு"

குரல்கேட்டுத் திரும்பினால், இன்னிக்குச் சாமி பார்க்க அம்பது ரூபாய் வரிசை இங்கேயாம். 'தினம் பார்க்கும் சாமியை எதுக்கு அம்பது ரூபாய் கொடுத்துப் பார்க்கணும்?' னு கோபாலைப் பார்த்தால் ஆமாம்னு தலையாட்டறார்.(எதுக்கு ஆமாம்?) இலவச சேவைப் பக்கம் போகலாமுன்னா கோவிலைச் சுத்தி மூணு தெருவுக்கு நீளமான வரிசை. "ஏங்க இன்னிக்குக் கட்டாயம் சாமி பார்க்கணுமா? தினம்தினம் நான்போய்ப் பார்க்கிறேனில்லை. இன்னிக்கு வேணுமுன்னா அவனே வந்து பார்க்கட்டும்"

இதுக்கும் ஒரு 'ஆமாம்' தலையாட்டல்! கோவிலையொட்டி இருக்கும் ஹாலில் மார்கழி இசைநிகழ்ச்சி நடக்குது அதைக் கேட்டுட்டுப் போகலாமுன்னு அங்கே நுழைஞ்சால், இன்னிக்கு நாள் முழுக்க பிரஸாதம் விநியோகமாம். பீன்ஸ், கேரட் பதிச்ச சாம்பார்சாதம் தொன்னையில் வச்சுக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. ஜனங்க வாங்கித் தின்ன கையோடு தொன்னையை அங்கங்கே வீசிப்போட்டுட்டு போக சின்னமலைக் குவியல்கள். எதுலேயும் பட்டுக்காமல் நீந்தி ஹாலுக்குள்ளே போனால் ஒரு குழுவா யூனிஃபார்ம் போட்டமாதிரி ஒரே மாதிரிப் புடவைகளில் திருப்பாவை பாடிக்கிட்டு இருக்காங்க மேடையில். 'புள்ளும் சிலம்பினகாண்'

கிடைச்ச நாற்காலிகளை இழுத்துப்போட்டு உக்கார்ந்தா, கோபால் என் தோளைத்தட்டி அங்கே பாருன்னு ஜாடை காமிக்கிறார். என்ன ஆடுதுன்னு அசட்டையாத் திரும்பினா.............பெரிய கருடன் தோள்மேல் பெருமாள்!!!!(இந்தக் கோவிலில் சின்னதும் பெருசுமா ரெண்டு கருடவாகனம் உண்டு)
ஹாலில் இருந்து கோவிலுக்குப் போகும் வாசலில் வந்து நின்னுக்கிட்டு இருக்கார்.

சொன்னதைக் கேட்டுட்டு அவனே வந்துட்டான்! இன்னிக்குப் பார்த்துக் கேமெரா கொண்டுபோகலை. சொர்க்கத்துக்கு எதுக்குன்னு விட்டுட்டு வந்துருக்கேன்(-: கோபாலின் செல்லில் ரெண்டு படம் எடுத்தாச்சு.(அதை கணினியில் ஏத்தமுடியலைன்றது இன்னொரு சோகம். உங்களுக்குக் கொடுத்துவைக்கலை!)

அகிலாமாமி சில குறிப்பிட்ட மக்களுக்கு ஏதோ சீட்டுக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. அடுத்து அவுங்க திருப்புகழ் குழு பாடப்போகுதாம்., இன்னும் அஞ்சு நிமிசத்தில். எல்லாருக்கும் ஒவ்வொருமணிநேரம் ஸ்லாட். முருகா முருகான்னு ஆரம்பிச்சது பாட்டு. மார்கழியைத் தூக்கி மருமானுக்குக் கொடுத்துட்டான். போகட்டும். கிளம்பி வரும்போது நம்வீட்டு 'முருகபக்தர்' 'அறுபடைவீட்டுக்குப் போகலாம்'ன்னார். வைகுண்டத்துக்கு சிவலோகத்திலே சைடு கேட் இருக்குமுன்னு சரின்னேன். இங்கே அவ்வளவாக் கூட்டமில்லை. (இந்தக் கோவிலைப் பத்தி இன்னொருநாள் விஸ்தரிக்கலாம்)

துவாதசி வந்தாச்சு. அதே கோவில் அதே பெருமாள், அதே போஸில் அதே போல். முந்தியநாளின் அமர்க்களம் ஒன்னும் இல்லாமல் வெறிச்சுன்னு இருக்கு!

"'என்னடா இப்படிப் பண்ணிட்டே நேத்து? பயங்கர டிமாண்டா ஒரு நாளுக்கு?"

" யாருக்குத் தெரியும்? நான் தேமேன்னு கிடக்கேன். ஜனங்க பண்ணும் கூத்து! எனக்கோ எல்லா நாளும் ஒன்னுதான்."

"கடைசியிலே அந்த சொர்க்கவாசலைத் தொறந்துவச்சப்பக் கண்ணுலே காமிக்கலை பாரு?"

" எதுக்கு இப்படி ஆதங்கப்படறே? இது எதுக்கு? கதவுக்கு அந்தாண்டை சின்ன சந்து வழின்னா இருக்கு. உனக்கு உண்மையான சொர்க்கவாசலைன்னா காமிக்கணும். 'அங்கே' வரும்போது கேரண்ட்டி"

வழக்கம்போல் வலம்வந்தால் உற்சவர் சந்நிதிக்கு முன்னால் நேற்றிருந்தவர் அதே கோலத்தில். அடடா..... ஒருவேளை பதிவுலகத்துக்குக் கொடுத்து வச்சுருக்கோ? படம் எடுக்கலாமான்னு கோவில் (சின்ன)பட்டரிடம் 'கேட்டால் தெரியலை. ஆஃபீஸில் கேளுங்கோ.' ஓடிப்போய் கேட்டேன். 'பெருமாள், ஃபோட்டோ, கருடவாகனத்தில்........'

தாராளமா எடுத்துக்குங்கோ!!!!

ஆஹா... பதிவுலகம் 'கொடுத்துத்தான் வச்சுருக்கு!'


மேலே: வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல். திருவீதி உலா. பெரிய கருடர்

கீழே: சின்ன கருடர். கோவிலில் 2009 அக்டோபரில் நடந்த கருடசேவை
பார்க்க ஒன்னுபோலவே இருக்கா? அதான் இல்லை! நல்லப் பாருங்க. ஆறு வித்தியாசம் கண்டுபிடிங்களேன்:-)