Showing posts with label peruperu. Show all posts
Showing posts with label peruperu. Show all posts

Tuesday, July 15, 2008

மொய் மொய் moi moi

மொய் மொய்ய்ன்னு பிடுங்கி எடுக்கறேனா? இதுவும் பூமியில் இருந்து தோண்டி எடுத்தது தான். இதுக்கு மவொரி உருளைக்கிழங்குன்னு பெயர்.
அழுத்தமான பர்ப்பிள் நிறத்துலே பிடிக்கருணைக் கிழங்குபோல வங்க்கர பங்க்கரயா( கோணல் மாணல்) இருக்கு. சாதாரண உருளைக்கிழங்குலே இருக்கும் சக்தியைவிடப் பலமடங்கு antioxidant இருக்காம். நல்ல ஹெல்த் ஃபுட்ன்னு இதுக்கு ஒரு மகிமை.




230 வருசமா இங்கே பயிரிட்டு வர்றாங்களாம். எப்படி இங்கே வந்துச்சுன்றதே தெரியலை.




1642 டச்சுக்காரர் ஏபல் டாஸ்மென் வந்து எட்டிப் பார்த்துட்டுப் போயிட்டார். அதான் அவர் வந்த கப்பலை ஒரங்கட்டுமுன்பே மவொரிகள் போய் சண்டைபோட்டு நாலுபேரை மேலே அனுப்பிட்டாங்களே. சரியான 'கொலைகாரன் பேட்டை'(Murderer's Bay) ன்னுட்டு பயந்து ஜகா வாங்கிட்டார்.



ஃப்ரெஞ்சுக்காரர் de surville 1769 வருசமும் கேப்டன் குக் அவரது ரெண்டாவது பயணத்தில் 1773 வருசமும் இங்கே வந்தப்ப உருளைக்கிழங்கை நட்டாங்களாம். அது இப்ப நாம் பொதுவா பயன்படுத்தறோமே அந்த வகைகள். அதென்ன வர்றவங்க எல்லாம் உருளையை நட்டு வைக்கிறது? இப்படிக் கதை இருக்க இந்த விசேஷ உருளை எப்படி வந்துச்சுன்றதே இதுவரை எங்கேயும் பதியப்படலை.



இங்கே வெவ்வேறு மவொரி குழுக்கள் இருக்கும் பகுதிகளில் இதுக்கு வெவ்வேற பெயர் இருக்கு. Urenika Tutai Kuri , peruperu . பெயர் வித்தியாசம் இருந்தாலும் சரக்கு என்னவோ ஒன்னுதான்:-))))



மவொரிகள் சின்ன அளவில் அவங்களுக்குள்ளே மட்டுமே விளைவிச்சுக்கிட்டு இருந்தது இப்போப் பரவலா வெளி உலகைப் பார்க்க ஆரம்பிச்சுருக்கு.


ஒரு கடையில் இதை வச்சுருந்தாங்க. பக்கத்தில் ஒரு விளம்பரம்.
Maori Potato. High in antioxidant. புதுசா ஒன்னு வந்துறக்கூடாதே எனக்கு! கிலோ 10 டாலர். சாதாரண உருளைக்கிழங்கு 4 கிலோ நாலரைக்குப் போட்டுருக்கு. 20 கிலோ சாக்கு வாங்குனா எட்டு இல்லை ஒம்போது டாலருக்கு எடுக்கலாம். அவ்வளோ வாங்கி வச்சுக்கிட்டு யாரு தின்றது சொல்லுங்க!



மொய் மொய்யைச் சமைச்சுப் பார்க்கலாமுன்னு ஒரு அஞ்சாறு வாங்குனேன். நகத்துலே சுரண்டி எடுக்கக்கூட முடியாம ரொம்ப மெல்லிய தோலா இருக்கேன்னு அப்படியே வேகவச்சேன். பாத்திரத்தில் இருந்த தண்ணீர் ஒரு காப்பர் ஸல்பேட் நிறத்துக்கு மாறிச்சு.
வெந்ததைத் தோல் உரிச்சால் பர்ப்பிள் நிறமா அழகா ( ??!!) இருக்கு. எல்லாத்துக்கும் மசாலா சேர்க்குற மாதிரி இதுக்கும் போடவான்னு வந்த ஆசையை அடக்குனேன். முதல்முறை கொஞ்சம் கவனமா இருக்கலாம். நம் கைவண்ணம் காமிக்கறதெல்லாம் அப்புறமா இருக்கட்டுமே...

உப்பும் மிளகுத்தூளும் தூவித் தின்னு பார்க்கணும்.



பொதுவா நமக்கு நல்லாச் சமைக்க வந்தாலும் பரிமாறும்போது கூடுதல் அலங்காரம் செய்யாம அப்படியே ஒரு பாத்திரத்தில் எடுத்து பரிமாறிடறோம் இல்லையா? ஆள் பாதி அலங்காரம் பாதின்னு சும்மாவா சொல்லி இருக்கு. ஒன்னுக்கும் உதவாததையெல்லாம் கார்னிஷ்னு சொல்லி எப்படி எச்சில் ஊறவைக்குறாங்க பாருங்க அங்கங்கே. எனக்கு அலங்காரம் வராதுன்னு தெரிஞ்சும்(நான் ரொம்ப சிம்பிள் மனுசி) பர்ப்பிளுக்கு மேட்ச்சா ஒரு ஆரஞ்சு இருக்கட்டுமேன்னு காரட் ஒன்னை எடுத்து நறுக்கி நடுவிலே வச்சேன்.


ருசியும் நல்லாவே இருக்கு. ஆனா பர்ப்பிள் கலரைத் திங்க மனசில் கொஞ்சம் உறுதி ஏற்படுத்திக்கணும். கயலு வேற நீலமா இருந்தால் விஷம்'னு கவிதை பாடிக்கிட்டு இருக்காங்க:-))))