Showing posts with label Goki. Show all posts
Showing posts with label Goki. Show all posts

Friday, April 09, 2010

போகுமிடம் வெகுதூரமில்லை

நல்லவேளையா அதிக தூரம் இல்லை. வெறும் 6 கிலோமீட்டர்கள்தான். கத்ரின்னு கேட்டதும் சாமி ஞாபகம் சட்ன்னு வர்றதில்லை. சாக்ஸஃபோன்தான் வருது. அடடா..... மனுஷன் என்னமா வாசிக்கிறார்ன்னு.... உள்ளூர் கோவிலிலேயும் நிறைய வாசிச்சு இருப்பார் இல்லே?

வாசலில் இறக்கி விட்ட ப்ரஷாந்திடம் போய் பார்க்கிங்லே இருக்கச் சொல்லிட்டு நிமிர்ந்து பார்த்தால்...... படிக்கட்டுகளுடன் சின்னதா ஒரு கோபுரம்.
என்னவோ பெயர்ப்பலகை. இப்பெல்லாம் கொஞ்சம்கூட கூச்சமே இல்லை படிக்கத் தெரியலையேன்னு. அதை ஹைதராபாத்லேயே விட்டுட்டேன்.

30 நாளில் கன்னடம் புத்தகம் ஃபிஜி அக்காவிடம் இருந்து ஓசி வாங்கி 27 வருசம்தான் ஆச்சு. எழுத்துக்களைத் தெரிஞ்சுக்கிட்டாப் போதும்னு...... உத்து உத்து ஜாங்கிரிகளைப் பார்த்ததும் ஆர்வம் போயே போச். ஒரு ஏழெட்டு வருசம் முந்தி, நெட்லே இருந்து ப்ரிண்ட் அவுட் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு தெலுகுதேசத் தோழியிடம் கத்துக்க ஆரம்பிச்சேன். அதுவும் போயிந்தி.
எங்க பாட்டி தலைதலையா அடிச்சுக்கிட்டாங்க..... தெலுங்கு படிக்கக் கத்துக்கோன்னு. தீனிக்கு தலக்கட்டு இஸ்தே இதி, தானிக்கு தலக்கட்டு இஸ்தே அதின்னு சுவாரசியமில்லாம ,எழுந்து போக சாக்குக் கிடைக்குமான்னு இருந்ததை நினைச்சு இப்போத் தலைதலையா நான் அடிச்சுக்க வேண்டியதாப் போச்சு. சரி. நம்ம கதைக்கு வருவோம்.....

பக்கத்துலே இருந்த பெண்ணிடம் கேட்டால். 'ஸ்ரீ க்ஷேத்ரம் கத்ரி' எழுதி இருக்காம். அட! இம்புட்டுதானா? படிகளை நோக்கி அடிகளை எடுத்து வச்சால், கோபாலைக் காணோம். இந்தப்பக்கம் இருக்கும் சரிவா மேலே போகும் வழியில் போய்க்கிட்டு இருக்கார். என்ன எழுதி இருக்குன்னு நான் பார்க்கும்போதே ஆள் 'எஸ்' ஆகிருவார். அங்கே நல்ல கூட்டமா ஜனங்கள் இங்கிட்டும் அங்கிட்டுமா போய்க்கிட்டு இருக்காங்க. செருப்புக்கூட்டம் தரையில். நாங்களும் செருப்பை விட்டுட்டு வளாகத்துலே நடந்தோம். சதுரமான கட்டிடமா ஓடு போட்டு இருக்கு நடுவிலே. மூடி இருக்கு வாசல். . இடப்பக்கமா ஒரு சந்நிதி. மஹாகணபதி. அடுத்துக் கொஞ்சம் உள்ளடங்கிய சந்நிதியில் பத்ரகாளி.
மெயின் கோவிலில் இருக்கும் மஞ்சுநாதரைப் பார்க்கலாமுன்னா கோவில் வாசல் எங்கே? வலமாவே போயிட்டு இருந்தப்ப ஒரு குன்றை வெட்டி அமைச்சமாதிரி உசரத்துலே ஏதோ சந்நிதி. ஆட்கள் நடமாட்டம் வேற இருக்கு. அந்தபகுதிபோய் வலம் திரும்புனா இடப்பக்கம் படிகள் உசரமா ஏறிப்போகுது. வலப்பக்கம் கோவில் வாசல். கன்ஃப்யூஷனில் சரியா ஒன்னும் பார்க்கலை. இங்கேதான் பஞ்சபாண்டவர் குகை ஒன்னு இருக்காம். பகல்நேரத்தில் வந்து நிதானமாப் பார்க்க வேண்டிய இடம். இப்படி ராத்திரியில் அவதி அவதின்னு ஓடறோம். மூலவரை மட்டும் சேவிச்சுக்கிட்டு, கோவில் தலவரலாறு ஒன்னு வாங்கிக்கிட்டுக் கிளம்ப வேண்டியதாப் போச்சு. நல்ல முறுக்கு மீசையோடு இருக்கார் சிவன். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு தினுசில் மீசை. தொங்கு, முறுக்கு, கட்டுன்னு.
கோகிக்கான கோவிலுக்குப் போக நேரம் இருக்கான்னு தெரியலையேன்னால் போயிடலாம் இப்பவேன்னு சந்து பொந்து மாதிரி இருந்த தெருக்களில் சடார் சடார்ன்னு புகுந்து 23 கிலோ மீட்டர் பயணம் செஞ்சு கோவில் தோரண வாசலில் விட்டப்ப மணி எட்டரைக்கு அஞ்சு நிமிசம் பாக்கி.
அச்சச்சோ..... இம்மாந்தூரம் வந்தும்..... அஞ்சாறு படிகள் இருக்குன்னு ஏறிப்போனா ரெண்டு பக்கமும் ரேம்ப் மாதிரி ஒன்னு போகுது. நமக்கு முன்னே ஒரு பத்துப்பேர் ஏறிக்கிட்டு இருக்காங்க. நல்லவேளை படிகள் இல்லைன்னு நினைச்சு விநாடி நேரமாகலை, போய்ச்சேர்ந்த நிலையில் ரெண்டுபக்கமும் அரண்மனை செட் போல படிகள். விறுவிறுன்னு ஏறிப்போறோம். எட்டரைக்குக் கோவில் மூடிருவாங்களாமே. கூட்டத்தைத் தாண்டி ஓட முடியலை. அடுத்த நிலைக்கு வந்ததும் எதிர்ப்பக்கமிருந்த படிகளில் ஏறிப்போறோம். அடுத்து அடுத்துன்னு நிலைகள் வந்துக்கிட்டே இருக்கு. எனக்குக் கடுமையா நெஞ்சுகிடந்து அடிக்குது.' பொட்'னு போயிருவேனோன்னு இருக்கு. போனா நல்லதுதான். எனக்கு முன்னால் ஒரு ஏழெட்டு படிகடந்து கோபால் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டே ஓட்டமும் நடையுமா ஏறிக்கிட்டு இருக்கார். நீங்க போங்கன்னு கைச்சாடையில் சொல்லிட்டு நின்னேன். 'கோகி, அம்மா உன்னைப்பார்க்க முடியாது போல. ஆனா அங்கெ நீ இருக்குமிடத்துக்கு வர்றேன் என் செல்லமே'ன்னு மனசுலே ஓடுது. காலெல்லாம் குழைஞ்சு ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாமக் கனக்குது.

ஒரு நிமிஷம்தான். (ஆனா ரொம்ப நேரம் நின்னாப்லெ இருந்துச்சு) சுதாரிச்சுக்கிட்டு மெள்ள நிதானமா ஏறினேன். படிகள் முடிஞ்ச இடம் ஒரு மொட்டை மாடி. கண் எதிரில் கொட்டாய் மாதிரி போட்டு அந்தப்பக்கம் கட்டிடம். நடுவில் வாசலோடு அகலமான கட்டடம். கீழே நிலத்தில் இருக்கமோன்னு பிரமிப்பு. வாசலைத் தாண்டுனால் அகலமான திண்ணைகள். ஜொலிக்கும் விளக்கு இருக்கும் கருவறையில் வெறும் பூக்களா இருக்கு. விட்டேனா பார்ன்னு நெஞ்சுக்குள்ளே, ஓங்கி ஓங்கி பேரிகை அடிக்குது. மூச்சு வாங்க..... அப்படியே திண்ணையைப் பிடிச்சுக்கிட்டு நின்னேன்.





உற்றுப்பார்த்தால் கண்ணைத் திறந்துக்கிட்டுக் கிருஷ்ணன் புன்முறுவலோடு(?) நிக்கறான். வழக்கம்போல் வெள்ளிதகடு வேய்ந்த நிலைவாசப்படிகளும் உட்புறச் சுவர்களும்.. கோவிலை வலம்வந்தாத் தான் தெரியுது அதோட பிரமாண்டம். ஹப்பா...... எத்தனை பெரிய மொட்டை மாடி!

ராத்திரி நடை அடைக்குமுன் செய்யும் அர்த்தஜாம பூஜை ஆரம்பமாச்சு. பட்டர் உள்ளே போய் கதவைச் சாத்திக்கிட்டார். ஹனுமன், கருடன், சங்கு சக்கரம், தாமரைன்னுஅழகான செதுக்குச் சிற்பவேலைப்பாடுள்ள சின்னக் கதவு. இங்கெல்லாம் வாசல் கதவு உயரக்குறைவா இருக்கு. கட்டாயமா உடம்பை அரை உடம்பா மடிச்சுக் குனிஞ்சுதான் போகணும். பூஜைமணி ஒலிக்கக் கதவைத் திறந்ததும் அடுக்கு தீப ஆரத்தி. ஜிலுஜிலுன்னு நிக்கறான். பட்டர் உட்கார்ந்த நிலையில் ஆரத்தி எடுக்கறார். நின்னால் தலை முட்டும் அபாயம் இருக்கே! அப்புறம் வேற ரெண்டுவகை தீப ஆரத்தி முடிஞ்சது. அதைக் கொண்டுவந்து வெளியில் ஒரு பக்கமா வச்சுட்டார். நாமே கண்ணில் தொட்டு ஒத்திக்கணும்.

திண்ணையின் ஒரு ஓரத்தில் பிரசாதங்களை வச்சுக்கிட்டு உட்கார்ந்ததும் ஜனங்கள் சொல்லிவச்சதுபோல வரிசையில் நின்னு வாங்கிக்கிட்டாங்க. எங்களிடம் (மட்டும்) எந்த ஊர்ன்னு விசாரிச்சார். சென்னைன்னதும் தனியா ஒரு பாத்திரத்தில் பாக்கெட் போட்டு வச்சுருந்த பிரசாதம், சந்தனம்,பூ எல்லாம் ஒரு தட்டில் வச்சு எனக்குக் கொடுத்தார். (கன்னடக்காரன் அடிக்கிறான்ப்பா ன்னு கேட்டது நினைவுக்கு வந்துச்சு)
வெளியில் தீபஸ்தம்பம் முன்னே ஒருத்தர், வெளிவரும் பக்தர்களுக்கு பிரசாதத்தை அள்ளி அள்ளிக் கைகளில் நிரப்பிக்கிட்டு இருந்தார். கிருஷ்ணனின் ஃபேவரிட் ஆன அவல், பொரி, தேங்காய், சக்கரை, தேன் கலந்து வச்சது. தின்னு முடிச்சதும் கை கழுவிக்கப் படிகளுக்குப் பக்கத்தில் ரெண்டு சைடிலும் வாஷ் பேஸின் வச்சுருக்காங்க. கோவில் மேனேஜரிடம் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். கோவில் பற்றிய விவரங்கள் அடங்கிய ப்ரோஷர் ஒன்னு கொடுத்தார். எல்லாம் கன்னடத்தில். ஆனால் படங்கள் இருக்கேன்னு வாங்கிக்கிட்டேன். எப்படியும் எழுத்துக்கூட்டிப் படிச்சுட்டு ஒரு ஏழெட்டுவருசத்தில் உங்களுக்கும் சொல்லணும்:-)

கோவிலுக்கு வயசு மூணு. ஒன்னரை ஏக்கர் நிலத்துலே பரந்துவிரிஞ்சு இருக்கு. அஞ்சு நிலைகள் உள்ள இதைக் கட்ட வெறும் ஒன்னேகால் வருசம்தான் ஆச்சாம். மொத்தம் 108 படிகள் ( ஆஹா.... அதான் என்னை உண்டு இல்லைன்னு ஆக்கியிருக்கு) நம்ம கோகி வெப்ஸைட் வச்சுருக்கார்.

இறங்கும்போது ரொம்ப நிதானமா வந்தேன். ஒவ்வொரு தளத்திலும் ப்ரமாண்டமான ஹால்கள் இருக்கு. வீட்டு விசேஷங்களுக்கு வாடகைக்கு எடுத்துக்கலாம். மறுநாள் நடக்கப்போகும் ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு அந்தக் குடும்பத்தினர் காய்கறிகளைக் கொண்டுவந்து வச்சுக்கிட்டு இருந்தாங்க.
இந்த கலாட்டாவில் படம் எடுக்க மறந்துட்டுக் கீழே வந்ததும் ஒரு படம் க்ளிக்கினேன். மணி ஒம்போதரை. அறைக்கு வந்து மேங்களூர் ஸ்பெஷல் சாப்பாடு வரவழைச்சோம். போளி, நீர் தோசை, கடுபு, சன்னாஸ்,அப்புறம் இட்லி மாதிரி ஒன்னு, பெயர் தெரியாத ஒன்னு (ஓலையை வட்டமாச் சுத்தி அதுக்கு நடுவில் மாவு ஊத்தி நீராவியில் வேகவச்சுருக்காங்க) இப்படிப் புதுசு புதுசா பெயர்கள்.