ஹைய்யோ.......... இது என்ன? வடை! அதுவும் மசால் வடை!! ஜானகிராமா....உமக்கு எப்படிப்பா நம்ம விஷயம் தெரிஞ்சது? இது.....பதிவர் உலகத்துக்கே தெரியும்போது...... சரிதான். நீங்களும் ஒரு பதிவர்ன்னு சேதி வந்துச்சே!நிறைய நாள் காய்ஞ்சுபோய்க் கிடந்ததுக்கு இங்கே உணவு அருமையா இருந்துச்சு. பருப்பு, ரஸம், கேஸரி சாப்பிட முடிஞ்சது. கோபாலின் பரிந்துரையில் சுடச்சுட இன்னொரு வடை என் தட்டுக்கு வந்துச்சு. ஒரு மணி நேர ஓய்வுக்குப் பிறகு ஆர்யாவில் கணக்கை முடிச்சுக்கிட்டுக் கிளம்பிட்டோம்.
ஆர்யாவில் இருந்த (திரு)வாசகம். நியாயம்தானே?
இங்கிருந்து ஒரு அஞ்சாறு கிலோமீட்டர் தூரத்தில் புதுசா ஒரு ஹவுஸிங் கம்பெனி வீடுகள் கட்டிக்கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ஒருசில வருசங்களுக்கு முன்னே, ஒருவேளை இந்தியா திரும்பிவந்தால் எங்காவது தண்ணீர்ப் பஞ்சம் இல்லாத நல்ல இடத்தில் இருந்துக்கலாமுன்னு வலையில் தேடிப் பிடிச்சுவச்சுருந்த இடம் இது. நம்ம பதிவர்களில் 'அந்தூர்க்காரவுக'கிட்டே விசாரிச்சதில் நல்ல கம்பெனின்னு தெரிஞ்சது. ஆனாலும் நேரில் பார்க்காம வீடு வாங்கிப்போட முடியுமா? வந்து பார்த்துட்டுச் சொல்றேன்னு மயில் அனுப்பினேன். 'நீ வர்ற காலத்துலே விலை ஏறிப்போயிரும். அப்போ என்ன விலையோ அதுக்குச் சம்மதிக்கணும்'. சரி. டீல் சரியாத்தான் இருக்கு.மாடல்வீடுகளில் ஒன்னு
இந்த இடத்தைப் பற்றி நம்ம உலகநாதன்கிட்டே கேட்டதுக்கு, 'கவலையே படாதீங்க. அவுங்க(ளும்) நமக்குத் தெரிஞ்சவங்கதான். போய்ப் பார்த்துட்டே போகலாமுன்னுட்டார். அங்கே போனால் இடம் சூப்பரா இருக்கு. முதல் ஸ்டேஜ் முடிஞ்சு ரெண்டாவது பகுதியில் வீடுகள் முளைச்சுக்கிட்டு இருக்கு.
ரெண்டு, மூணு படுக்கை அறைகளும் நாலு டிசைன்களும். எல்லாத்தையும் போய்ப் பார்த்தோம். ஆசையாத்தான் இருக்கு. கட்டிமுடிச்ச வீடுகள்
ஆனாலும் 'சட்'ன்னு முடிவு எடுக்கமுடியுதா? வீடுகட்டித்தரும் கம்பெனியைப் பொறுத்தவரை நல்ல பெயர் உள்ளதுதான். பெரிய நிறுவனம். இவுங்க அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு மருத்துவமனைகூட நடத்தறாங்க. (வயசான காலத்துலே 'சட்'னு போக (சிகிச்சைக்குத்தான்)மருத்துவ வசதிகள் இருக்கும் இடமான்னு முதலில் கவனிச்சுக்கணுமே). அதான் இப்பப் பார்த்தாச்சே...வாங்கிப்போட்டேனா? ஊஹூம்...... இன்னும் கொஞ்சம் யோசிக்கணும்(-:இந்தச் செடி/மரத்தைக் கண்ணாட்டம் கன்ஸர்வேட்டரியில் வச்சுருக்கேன் நியூஸியில். எண்ணி அஞ்சு இலை வந்துருக்கு. இங்கே பாருங்களேன் அதுபாட்டுக்குச் செழிப்பா ...... மரத்தின் பெயர் CYCA Palm
போறவழியில் இன்னொரு கோவில் இருக்கு. அதையும் பார்க்கலாமுன்னு உலகநாதன் சொன்னார். நாங்குநேரி வானமாமலைன்னதும் எனக்கு ஜீயர் நினைவு வந்துச்சு. ரொம்ப தூரத்துலே இருந்தே கோயில் கோபுரம் லேசாத் தெரிஞ்சது. சாலையைவிட்டு ஊருக்குள் வண்டி போகும்போதும் மற்ற கட்டிடங்களுக்கு நடுவில் கோபுரம் கொஞ்சமாத் தரிசனம். கோயில் பின்புறத்தாலே போய்க்கிட்டு இருக்கோம். ஒரே வட இந்தியக் கூட்டம். ஒரு பக்கம் பெரிய பாத்திரங்களில் சமையல் ஜரூரா நடக்குது. பஸ் நிறையப் பயணிகள். கோயிலுக்கு முன்புறம் பெரிய மண்டபம். வண்டியிலிருந்து இறங்கி மண்டபத்துலே கால் வச்சதும் அங்கிருந்த காவல்காரர் ஓடிவந்து, கோபாலிடம், 'கமீஸ் நிகாலோ'ன்னு கத்தறார். கேரளாக் கோயிலா என்ன? சட்டை போட்டுக்கப்படாதாமே(-:
ஜீயர் இருக்காரான்னு கேட்டதுக்கு, டூர் போயிருக்கார்னு பதில் வந்துச்சு. ரொம்ப அழகான தூண் சிற்பங்கள். மூலவர் வானமாமலை என்ற தோத்தாத்ரி. தாயார் ஸ்ரீவரமங்கை. இந்தக் கோயிலில் உள்ள மூர்த்தி 'இருந்த கோலம். வெண்சாமரம் வீச அசல் தேவலோக மங்கையர் ஊர்வசியும் திலோத்தமையும். பொதுவா நாம் ரம்பா, ஊர்வசி மேனகாவோட நிறுத்திக்கறோமே. திலோத்தமையைச் சட்னு நினைச்சுக்கறதில்லையேன்னு......காரணம் புரிஞ்சுபோச்சு. இந்தப் பெயரில் ஒரு நடிகை(யும்) இல்லை:-))) (வத்தலகுண்டுக் காலத்தில் என் பள்ளித்தோழன் ஒருத்தன் பெயர் தத்தாத்ரி. தத்தாத்ரியும் தோத்தாத்ரியும் ஒன்னுதானோ? ஆன்மீகச் செம்மல்கள் பதில் சொல்லுங்கப்பா)
சுப்ரபாதம் சொல்லும்போது , 'மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே' ன்னு வருது பாருங்க, இந்த மது & கைடபனை 'அழிச்சதும்' இங்கத்துத் தலபுராணக் கதையில் வருது. அவுங்க என்ன பண்ணாங்க? பிரம்மா உக்கார்ந்துருக்கும் தாமரைப்பூவின் தண்டைப் பிடிச்சு ஆட்டி விளையாடி அவரைக் கீழே விழவைக்கப் பார்த்தாங்களாம். பயந்துபோன பிரம்மாவுக்கு அபயமுன்னு அரக்கர்களான மது, கைடபனைப் போட்டுத் தள்ளிட்டார் விஷ்ணு. அரக்கர்களின் ரத்தம் சிதறி பூமி முழுசும் ஒரே நாத்தமா நாறிப்போச்சு. பூமாதேவிக்கு மூச்சுவிட முடியலை. சக்ராயுதத்தை ஏவி பூமி முழுசும் அமிர்தம் மழையாகப் பொழியச்செய்து க்ளீனிங் வேலை நடந்துருக்கு.
சுயம்புவாக ஸ்வாமி தோன்றிய எட்டு இடங்களில் இது எட்டாவது. மற்றது என்னென்ன? எப்படியும் உங்களுக்குச் சந்தேகம் வரத்தான் போகுது. அதையும் தீர்த்தால் ஆச்சு. அவை பத்ரிகாஸ்ரமம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், திருமலை, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம் என்பவை. இந்தக் கோயிலும் அந்த நூற்றியெட்டில் ஒன்னுதான்.கோவில் திருக்குளம் இருக்குமிடத்தில் நான்கு ஏரிகள் முந்தி இங்கே இருந்ததால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் போல.
இங்கத்துத் தாயார்பெயரான ஸ்ரீவரமங்கை என்றும் இந்த ஊருக்கு ஒரு பெயர் உண்டு. ஏரிகளும் காடுமா வனம் இருந்ததால் இங்கே தோன்றியவர் வனமாமலையா இருந்து இப்ப வானமாமலை ஆகிட்டார்ன்னு நினைக்கிறேன். வானமுன்னு சொன்னாலும் பொருத்தம்தான். இவர் வானத்தையே தன் காலால் அளந்தவரல்லவா? ( பெயர்க் காரணத்தைத் துருவித்துருவிப் பார்க்கற புத்தியை விட்டுத் தொலைக்கணும் இனிமேல்)
இந்தக் கோயிலில் எண்ணெய்க்கிணறு இருக்கு பார்க்கறீங்களான்னு கோயில் ஊழியர் ஒருத்தர் கேட்டார். ஆஹா....பார்த்தால் ஆச்சு. அதுக்குத் தனியா ஆளுக்கு அஞ்சுரூபாய்க் கட்டணம். காசைக் கொடுத்துச் சீட்டு வாங்கிக்கிட்டு வலதுமூலை நந்தவனத்துப்பக்கம் இருந்த படிகளில் ஏறிப்போனோம். இடுக்கமாத்தான் இருந்துச்சு. அங்கே பெரிய கிணறு மாதிரி
இருக்கும் ஒன்னும் அதில் பாதிவரும் அளவுக்கு இன்னொண்ணும் இருக்கு. கறுப்பான திரவம்போல் குமிழ்களோடு எண்ணெய். தோல் சம்பந்தமான வியாதிகள் தீர்க்கும் அருமருந்தாம். பாட்டிலில் எடுத்துத் தருவாங்களாம். (அதுக்கும் எதாவது கட்டணம் இருக்கும்) வேணுமான்னார். கண்ணால் பார்த்ததே போதுமுன்னு சொன்னேன். தினம் மூலவருக்கு இங்கே நல்லெண்ணெய் திருமஞ்சனம் உண்டாம்.(சுயம்பு என்பதால் நீரபிஷேகம் இல்லை) அந்த எண்ணெய்தான் இந்தக் கிணத்துலே சேகரம் ஆகுதாம். விசேஷ நாட்களில் கூடுதல் எண்ணெய் அபிஷேகம் ஆகுமாம். தினமும் எண்ணெயா? பேஷ் பேஷ் அதுதான் பெருமாள் நிகுநிகுன்னு இருக்கார். ( சீயக்காப்பொடி தேய்ச்சுக்கிட்ட காலமெல்லாம் போய் இப்ப ஷாம்பூ மட்டுமே ஆனதில் இருந்து எண்ணெய்த் தேச்சுக் குளிக்கும் வழக்கம்தான் நமக்கு போயே போச்சே)வானமாமலை ஜீயர் மடத்தின் நிர்வாகத்தில் இந்தக் கோயில் இருக்குன்னு சொன்னாங்க. தரிசனம் முடிஞ்சு வெளிவரும்போது ஒரு சின்னப் பையன் (ஆறேழு வயசு இருக்கும்) முழங்கால்வரை தொங்கும் தொளதொளச் சட்டையோடுக் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சுத்திக்கிட்டு இருந்தான். "ஏண்டா அம்பி உன்னைச் சட்டையைக் கழட்டச் சொல்லலியா?" அவன் திருதிருன்னு முழிக்க.... 'கழட்டிட்டா அவ்ளோதான்'னு கோபால் சொல்றார். (பின்னம்பக்கம் ஓப்பன் சிஸமே)
பள்ளிக்கூடத்துப் பசங்க
கோயிலுக்கு நேர் எதிரே இருக்கும் அக்கிரஹாரம் வழியாப் பள்ளிக்கூடம்விட்டுப் பசங்க வந்துக்கிட்டு இருந்தாங்க. பள்ளிக்கூடச் சீருடை சல்வார் கமீஸ். ஆனாக் குட்டிப்பசங்களும் துப்பட்டாவை மடிச்சுப் பின் குத்திக்கிட்டு....... அதென்ன நியமமோ........ ஒரு கைப்பம்புக் குழாய் இருந்துச்சு. எவ்வளோ நாளாச்சு இதையெல்லாம் பார்த்து! ஒரு பையன் சைக்கிளில் கொண்டுவந்த ரெண்டு ப்ளாஸ்டிக் குடத்துக்குத் தண்ணி அடிச்சு ரொப்பிக்கிட்டு இருந்தான். இவர் போய் அவனுக்குத் தண்ணீர் அடிச்சுக் கொடுத்தார். பழசை மறந்துறக்கூடாது பாருங்க:-)))) (நான் வீடியோ புடிச்சுவச்சுக்கிட்டேன்)கிடைச்சக் குழாயடியை விடாம ஒரு அம்மா, புடவையைத் தொவைச்சுக் காயவச்சுருந்தாங்க. கோவிலில் இருந்து கிளம்பி வரும்வழியில் சமையல் முடிஞ்சு எல்லாரும் தெருவோரத்திலேயே பந்தி போட்டுச் சாப்பிட உக்காந்தாச்சுத் தட்டை வச்சுக்கிட்டு. உண்மையான 'தலயாத்திரை' என்றது இதுதான். நம்பளை மாதிரி நோகாம நோம்பு கும்பிடுறது.......இல்லை.
தொடரும்.....:-)
Showing posts with label நாங்குநேரி. Show all posts
Showing posts with label நாங்குநேரி. Show all posts
Tuesday, May 05, 2009
ஏரிகளும் மலையும் ............. (2009 பயணம் : பகுதி 20)
Posted by
துளசி கோபால்
at
5/05/2009 01:31:00 PM
22
comments
Labels: அனுபவம், நாங்குநேரி
Subscribe to:
Posts (Atom)
