Wednesday, April 09, 2025

மக்கள் சேவையில் முக்தாமணி ஜி ! ( 2025 இந்தியப்பயணம் பகுதி 5 )



நல்ல விஸ்தாரமான  முன்பக்கத்தோடு (நீரூற்று எல்லாம் இருக்கு !)கொஞ்சம் உள்ளே தள்ளிதான்  கொஞ்சம் உயரத்தில் ஹொட்டேல் கட்டி இருக்காங்க. ஒரு பத்துப்படியேறி மேலே போகணும். படிகளைப் பார்த்து கொஞ்சம் யோசனை வந்ததுதான், ஆனால் பக்கவாட்டில்  சின்னதா ஒரு லிஃப்ட் வசதி இருக்கு.  முன் வாசலுக்கு நேரா மேம்பாலம் போகுது.  அந்தப் பாலத்தின் வழியாத்தான் நாம் வந்திறங்கினோம்.  அயோத்யா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலை !       
இது என்னடா.... ஐரான்னு பெயர்னு விசாரிச்சதில், இது பூலோகத்துக்கான சமஸ்க்ரதப் பெயர், கலைவாணி சரஸ்வதியின் அறிவு, ஞானம், கலை, சங்கீதம் எல்லாத்தையும்  போற்றும்   சொல்னு சொன்னாங்க. சரின்னு கேட்டுக்கிட்டேன். 
\
அறை நல்ல வசதியாகத்தான் இருக்கு. நாலு நக்ஷத்திரத்துக்குள்ளவை.  நமக்கு உதவியாளரா வந்தவர் ராகவ் என்பவர். பொதுவான சில விசாரிப்புகளுடன், மறுநாளைக்கு எங்கெல்லாம் போகறீங்க. வண்டி ஏற்பாடாச்சான்னார்.   




 



இல்லை. ஹொட்டேல் ட்ராவல் டெஸ்க்லே டாக்ஸிக்குச் சொல்லணும் என்றதும், பொதுவா  உள்ளூர்லே சுத்திப்பார்க்க டாக்ஸி வேலைக்காகாது. ஆட்டோ ரிக்‌ஷாதான் நல்லதுன்னார்.  தெரிஞ்ச ஆட்டோக்கார் இருக்கார். அவர் ஃபோன் நம்பர்னு ஒன்னு தந்தவரிடம், ஆட்டோக்காரர் பெயர் என்னன்னு கேட்டேன்.  'மாமா' ன்னு பதில் வந்தது.
 
கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு,  அறையிலேயே  டீ போட்டுக் குடிச்சோம்.  வைஃபை இருந்ததால் கொஞ்சம் வலை மேயலும் ஒரு குட்டித் தூக்கமும் ஆச்சு.  

எனக்கு ஃபேஸ்புக் மூலம்  அயோத்யாவிலிருந்து ஒரு ஆன்மிக நட்பு கிடைச்சுருக்கு.  தினசரி பூஜைபுனஸ்காரச் செய்திகளை  அனுப்புவார். ஏதோ ஆஸ்ரமம் நடத்தறார்னு மேலோட்டமாத் தெரியும்.  நான் வேற 'அயோத்யா அயோத்யா'ன்னு ஸ்மரணை பண்ணிக்கிட்டே இருந்தேனா.....  அயோத்யாவாசின்னதும் சட்னு பிடிச்சுப்போச்சு. முக்தாமணி சாஸ்த்ரின்னு பெயர்.

போன இந்தியப்பயணத்தில் (கேன்ஸல் ஆச்சே.... அது ) அயோத்யா போறோமுன்னதும் ரொம்பவே உற்சாகமா, அயோத்யாவுக்கு வர்றேன்னு தகவல் சொல்லி இருந்தேன்.  ப்ச்.... அப்புறம்தான் அது இல்லாமப்போச்சே..... ஹூம்.....

இந்தமுறை அயோத்யாவுக்கு வரும் எண்ணம் இருக்குன்னு சேதி அனுப்பி இருந்தேனா.... எப்போ வர்றீங்க ? எங்க கூடத் தங்குங்கன்னு பதில் அனுப்பி இருந்தார். ரொம்ப நன்றி.  வரும்போது சொல்றேன்னு சொல்லியிருந்தேன். 
இந்தியா வந்ததும்..... (நம்ம பேஸ்புக் பக்கத்தில் பார்த்திருப்பாரில்ல ! ) எப்ப அயோத்யான்னு கேட்டுக்கிட்டே இருந்தார். நம்ம நிலமைதான்  சட்னு சொல்லிக்கறமாதிரி இல்லையே.....  வந்து இறங்கினதும் உங்களைத் தொடர்பு கொள்வோமுன்னு சொன்னேன்.

இன்றைக்கு அங்கே போய் இறங்கிட்டோமில்லையா.....  சாஸ்த்ரி ஜிக்குத் தகவல் அனுப்பினேன்.  'எப்போ உங்களைப் பார்ப்பது ? இன்றைக்கு வேற ஒரு திட்டமும் இல்லைன்னா.....  விஸிட்  வர்றீங்களா ?  வண்டியை அனுப்பறேன்'னு  சொன்னார்.

நம்மவரிடம் போய் வரலாமான்னதும் சரின்னுட்டார்.  ஆறு மணிக்கு வண்டி வரும். வந்தது. நாங்களும் தயாரா இருந்தோம். ஒரு ஏழரைக்கிமீ தூரம்தான் என்றாலும்  கிட்டத்தட்ட முக்கால்மணி நேரமாயிருச்சு. பகவத் க்ருபா  ஸேவா ஆஷ்ரம்னு பெயர் போட்ட கட்டடம்.   இருட்டிப்போனதால் படம் எடுக்கலை.
மேலே படம்: வலையில் இருந்து. 

ரெண்டு சிறுவர்கள் நம்மை வரவேற்று உள்ளே  கூட்டிப்போனாங்க.  சாஸ்த்ரி ஜி, மேடையில் ராமாயணப் பிரசங்கம் செஞ்சுக்கிட்டு இருந்தார்.  தலையசைத்துக் கைகூப்பினார். நாமும் வணக்கம் சொல்லிட்டு இருக்கைகளில் போய் உக்கார்ந்து ராமாயணச் சொற்பொழிவைக்கேட்டோம். 
 பெரிய மாடத்தில் இருந்த ராமர் & கோ  சிலைகளுக்கு எல்லோரும் வரிசையில் நின்னு ஆரத்தி எடுத்தோம். எங்களுக்கு ஒன்னும் வித்யாசமாகவே இல்லை. நம்ம ஊரில் ஃபிஜி சநாதன Dதரம் சபாவுக்கு, ராமாயண வாசிப்புக்குப் போவேமே.... அதே ஸ்டைல்தான். 
ப்ரஸாதம் ஆனதும்,  சாஸ்த்ரி ஜி, நம்மை மாடிக்குக் கூப்பிட்டுப்போனார்.  படிகளைப் பார்த்து 'திடுக்' ஆச்சு என்றாலும், மனசுக்குள் ராமா ராமான்னு சொல்லிக்கிட்டே ரெய்லிங் பிடிச்சு ஒரு வழியா மாடிக்குப் போயிட்டேன்.  அங்கே ஒரு பெரிய அறை ! குசலப்ரசன்னம் எல்லாம் ஆச்சு. நம்ம லோட்டஸாண்டை இருக்கும் சுஸ்வாதில் இருந்து வாங்கிப்போன சில இனிப்பு & காரம் வகைகளைக் கொடுத்தோம். 
நமக்கு நாமம் போட்டுவிட்டாங்க சிஷ்யப்பசங்க. கீழே இறங்கிப்போய் மற்ற பக்தர்களுடனும் சாஸ்த்ரி ஜி யின்  மனைவியுடனும் கொஞ்ச நேரம் பேசிட்டு,  சாப்பிடச் சொன்னதும், இன்னொரு சமயம் வர்றோமுன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம்.  திரும்ப வரும்போது அரைமணி நேரம்தான் ஆச்சு. இவருக்கு உலகம் பூராவும் பக்தர்கள் நட்பு இருக்கு. நாம் போனபோது கனடா பக்தர்கள் வந்துருந்தாங்க.   
\
அயோத்யாவில் இருக்கும்வரை, என்ன உதவி வேணுமுன்னாலும் தயங்காமல் கேட்கச் சொல்லி சேதி அனுப்பிக்கிட்டே இருந்தார்.  சாஸ்த்ரி ஜி யின் உதவும் மனசுக்கும், நம்மிடம் காண்பித்த அன்புக்கும் இங்கே மீண்டும் ஒருமுறை நம்ம நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்!


ஐரா திரும்பியதும்,  ஹொட்டேல் ரெஸ்ட்டாரண்டில் போய் டின்னரை முடிச்சுக்கிட்டோம். 

நாளைக்குக் காலையில் 'மாமா'வுக்கு ஃபோன் போடணும்.

தொடரும்........... :-)


4 comments:

ஸ்ரீராம். said...

சிறப்பு.  நான் 2019 ல் அயோத்யா சென்று வந்தேன்.  ராம்லல்லாவை தரிசிக்க இறைவன் அருளாலே மறுபடி சென்று வர ஆசை இருக்கு,  

'மாமா' தமிழ்நாட்டுக்காரராய் இருப்பாரோ....!

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீராம்,

நாங்கள் ராம்லல்லாவை 2014 ஜனவரியில் தரிசித்தோம். அப்போ முதல் கோவில் வருமா வருமா என்று ஏங்கியதுண்டு. அவனருளால் இப்போது தரிசனம் கிடைத்தது !

ப்ளொக்ஸ்பாட்டுக்கு என்னமோ ஆகிருச்சு. ஒழுங்காப் படங்களை போட்டுட்டு பப்ளிஷ் செஞ்சதும் அளவும் இடமும் தாறுமாறாகிக்கிடக்கு... ப்ச்....

ஸ்ரீராம். said...

ஓரமாக நின்றுள்ள படங்களை சென்டர் செய்து ஸ்பேஸ் எடிட் செய்ங்க...

2019 ல் நாங்களும் அவரை தரிசித்தோம்.  கூடவே ராம் மந்திர் கட்ட வந்து குவிந்திருந்த தூண்கள், செங்கற்களையும்...  

துளசி கோபால் said...

@ ஸ்ரீராம்,

எல்லாம் செஞ்சு பார்த்துட்டேன். அசரலையே.......